சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 4, 2020

இல்லுமினாட்டி 52



த்து லட்சத்தை எப்படித் தரப் போகிறாய்?” என்று ராஜேஷ் கேட்டதற்கு மனோகர் வழியை யோசித்தான்.

ராஜேஷ் சொன்னான். “உனக்குத் தெரிந்த ஆள் மூலமாக ரொக்கமாகக் கொடுப்பதானாலும் கொடுக்கலாம். அவர்கள் தருகிற அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதானாலும் செய்யலாம். அதற்கு நீ போனில் பேச நான் ஏற்பாடு செய்கிறேன் கவலைப்படாதே....”

மனோகருக்குச் சொன்ன வேலையைச் செய்ய அடியாட்கள் வெளியே இருக்கிறார்கள். செக்கில் அவன் கையெழுத்துப் போட்டு அவர்கள் கையில் கொடுத்தனுப்பலாம் என்ற போதும் அவர்களை இதில் ஈடுபடுத்த அவன் விரும்பவில்லை. ”அப்படி நம்புகிற அளவுக்கு யாரும் இல்லை.” என்று வருத்தத்துடன் மனோகர் சொன்னான்.

ராஜேஷ் அவனை இரக்கத்துடன் பார்த்து விட்டு யோசித்தான். பின் சொன்னான். “சரி நான் ஒரு லாப்டாப் கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். நெட் பேங்கிங் மூலமாக நீயே அவர்கள் அக்கவுண்டிற்குப் பணத்தை அனுப்பி வை. அது தான் நல்லது...”

அப்படி அனுப்பி வைப்பதிலும் மனோகருக்கு முழுத் திருப்தி இல்லை என்றாலும் அதையும் விட்டால் வேறு வழி தெரியவில்லை. இருந்தாலும் அவனுக்கு மெல்லக் கேட்டுப்பார்க்கத் தோன்றியது. “நான் வெளியே தப்பித்துப் போன பிறகு அவர்களுக்குக் கொடுத்தால் என்ன?”

ராஜேஷுக்குக் கோபம் வந்து விட்டது. “அப்படி நான் போய் கேட்டால் என்னைச் செருப்பால் அடிப்பார்கள். எனக்குத் தேவையா? நீ தப்பித்துப் போகிறதை மறந்து விடு....”

மனோகர் அவனைச் சமாதானப்படுத்தினான். “கோவிக்காதே. லாப்டாப் இருந்தால் மட்டும் போதாது. என் செல்போனும் வேண்டி வரும். பணம் அனுப்புவதை உறுதிசெய்ய  OTP செல்போனில் தான் வரும். அதையும் சேர்த்துக் கேட்க வேண்டுமே என்று தான் அப்படிச் சொன்னேன்

ராஜேஷ் சொன்னான். “இத்தனை செய்கிறார்கள். உன் செல்போனை அரை மணி நேரத்துக்கு எடுத்துத் தர மாட்டார்களா? அதைப்பற்றிக் கவலைப்படாதே. அதற்கும் ஏற்பாடு செய்கிறேன்

மறுநாளும் மதிய சாப்பாட்டு வேளையில் ராஜேஷ் காணாமல் போனான். மனோகர் சாப்பிட்டு முடித்த பிறகு தான் அவன் உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருப்பதை மனோகர் பார்த்தான். தட்டில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து மனோகர் பக்கத்தில் அமர்ந்தவன் அவன் காதில் முணுமுணுத்தான். “லாப்டாப் நம் சிறையறையில் இருக்கிறது. அக்கவுண்ட் விவரங்களும் ஒரு பேப்பரில் இருக்கிறது

மனோகர் பரபரப்புடன் சிறையறைக்கு வந்து பார்த்த போது அங்கே லாப்டாப் சுவரோரமாக வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு தாளில் முத்துசாமி என்ற பெயரும் அக்கவுண்ட் விவரங்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த்த் தாளுக்கு மேலே மனோகரின் அலைபேசி வைக்கப்பட்டிருந்தது. மனோகர் செல்போனை எடுத்துப் பார்த்தான். பொதுவாக கைதிகளிடமிருந்து வாங்கிப் பாதுகாப்பில் வைக்கும் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து தான் வைத்திருப்பார்கள். ஆனால் மனோகர் அலைபேசியைக் கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்து தான் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார்கள். அவனுக்கு வந்த அழைப்புகளை ஒரு வாரம் கண்காணித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த அழைப்புகளைப் பார்த்தான். எதுவுமே முக்கியமானதோ, காட்டிக் கொடுக்கிற மாதிரியோ இல்லை. அதனால் தான் அலுத்துப் போய் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. 

சற்று நிம்மதி அடைந்த மனோகருக்கு அந்த லாப்டாப் எந்த அளவு பாதுகாப்பானது என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதால் அதை எடுத்து மறைவாக வைத்துக் கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தான். அவனுக்கு இருக்கும் ஐந்து அக்கவுண்ட்களில் மிகவும் குறைவாகப் பணம் வைத்திருக்கும் அக்கவுண்டில் ரூ35,26,180/- இருந்தது. அதிலிருந்து பத்துலட்சம் அந்த முத்துசாமியின் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தான். ஒருவேளை அந்த லாப்டாப்பில் பாஸ்வர்டை ரகசியமாய் சேமித்து வைக்கும் சாஃப்ட்வேர் கூட இருக்கலாம். யார் கண்டது? அப்படி இருந்து அவர்கள் மீதமிருக்கும் இருபத்தி ஐந்து லட்சத்தைத் திருடிக் கொண்டாலும் அவனுக்கு மற்ற அக்கவுண்ட்களில் இருக்கும் பணத்தோடு ஒப்பிடும் போது அது பேரிழப்பு அல்ல.

ராஜேஷ் சத்தமாகப் பாடிக் கொண்டு வரும் சத்தம் கேட்டது. பிரச்னைக்குரிய காவலர் யாரோ வருகிறார் போலிருக்கிறது. புரிந்து கொண்டு மனோகர் அந்த லாப்டாப்பையும், அலைபேசியையும் சுவர் ஓரமாக ஒளித்து வைத்து உட்கார்ந்தான். ஒரு காவல் அதிகாரி அவர்கள் சிறையறை முன்னால் வந்து நின்று உள்ளே நோட்டமிட்டார். பின்னாலேயே வந்த ராஜேஷ் உள்ளே வந்தவுடன் கதவை மூடிப் பூட்டிக் கொண்டு போனார்.

ராஜேஷ் தாழ்ந்த குரலில் கேட்டான். “வேலை முடிந்ததா?”

மனோகர் “முடிந்தது” என்று சொல்லி விட்டுக் கேட்டான். “இனி எப்போது என்னைத் தப்பிக்க வைப்பார்கள்?”

ராஜேஷ் சொன்னான். “பணம் போய்ச் சேர்ந்தவுடன் தான் சொல்வார்கள். நாளைக்குக் கேட்டுச் சொல்கிறேன்”

அரை மணி நேரம் கழித்து மெலிதாக விசில் சத்தம் கேட்டது. ராஜேஷ் லாப்டாப்பையும், அலைபேசியையும் எடுத்து சிறைக்கம்பிகள் வழியாக வெளியே சுவரோரமாக வைத்தான்.

யாரோ வேகமாக வந்து அதை எடுத்துக் கொண்டு போகும் காலடி ஓசை மட்டும் கேட்டது.


ர்னெஸ்டோவுக்கு அக்‌ஷயிடன் க்ரிஷ் பேசிய பேச்சின் ஒலிப்பதிவு உடனடியாக வந்து சேர்ந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நாற்பது அடி தள்ளி அமர்ந்திருந்த பாதுகாவலர்களிடமிருந்த ஒட்டுக் கேட்கும் கருவி மிக நவீன தொழில்நுட்பத்தினால் உருவானது. பாதுகாவலர்கள் இடையிடையே மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாலும் தள்ளி இருந்த அக்‌ஷய் க்ரிஷ் பேச்சைப் பிரத்தியேகமாகப் பிரித்து துல்லியமான பதிவாக அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். முழுப் பேச்சையும் கேட்டு முடித்த பின் அவர் கண்களை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்தார்.

அமானுஷ்யனுக்கு எட்டுப் பாதுகாவலர்கள் போயிருப்பது தெரியாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். அவனுடைய ஃபைலைப் படித்த போதே அவனுடைய பார்வைக் கூர்மை அவருக்குப் புரிந்திருந்தது. அந்தக் கூர்மையும் மற்ற திறமைகளும் இல்லாதிருந்தால் இல்லுமினாட்டி அவன் உதவியை நாடியே இருக்காது. ஆனால் அவன் உடனடியாக சம்மதிக்காதது, அப்படிச் சம்மதிக்கிற மாதிரி க்ரிஷ் அழுத்தமாகப் பேசியிருக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. அமானுஷ்யனைப் போன்ற ஒருவனின் பார்வையில் அவனைக் கவரக்கூடிய சிறப்பு அம்சமே க்ரிஷின் நேர்மை தான். இனம் இனத்தோடு சேரும் என்ற விதியை எர்னெஸ்டோ உறுதியாக நம்பினார். அதனால் தான் அவனையே அனுப்பியுமிருந்தார். அந்த வகையில் க்ரிஷின் பேச்சு உணர்ச்சி பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் இருந்ததென்னவோ உண்மை தான். ஆனால் அமானுஷ்யன் மறுத்தவுடன் க்ரிஷ் கூடுதல் அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஒரு இல்லுமினாட்டியின் வேகமும், அழுத்தமும் க்ரிஷின் பேச்சில் விடுபட்டு இருப்பதாக அவர் நினைத்தார்.

அப்படி நினைத்த போதே அவன் இல்லுமினாட்டியானதே அவரால் தான் என்பதும், அவன் அறிவுஜீவியே ஒழிய இது போன்ற விவகார ஞானத்தில் அவன் அனுபவம் குறைவு என்பதும் நினைவுக்கு வந்து அவர் மனம் மென்மையாகியது. இன்னொரு உண்மையும் அவருக்குப் புரிந்திருந்தது. க்ரிஷ் ஒரு இல்லுமினாட்டியாகப் பேசியிருந்தால் அமானுஷ்யன் யோசித்துச் சொல்ல இரண்டு நாட்கள் கூட எடுத்திருக்க மாட்டான். உடனடியாக மறுத்தே அனுப்பி இருப்பான். பிறகு அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் இல்லுமினாட்டி எத்தனையோ பிரச்னைகள் உண்டாக்க முடியும் என்றாலும் அவன் மனதை மாற்றி அவர்கள் பக்கம் இழுத்திருக்க முடியாது. அவனை ஒரு எதிரியாக்கிக் கொள்வது படுமுட்டாள்தனம் என்பதில் இருவேறு கருத்துகள் அவரிடம் இருக்கவில்லை. அவன் யோசிக்கின்ற நேரத்தில் எந்த விதமான எதிர்மறை அபிப்பிராயங்களும் அவன் மனதில் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே அவர் இல்லுமினாட்டியின் அதிகாரவழி உபாயங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை...

க்ரிஷ் அவருக்குப் போன் செய்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.  அவர்கள் பேசியதை அவர் முன்பே கேட்டிருப்பதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. அவன் தங்களுக்குள் பேசிக் கொண்டதை இம்மி அளவும் மாற்றாமல் அவரிடம் சொன்னான்.

கடைசியில் அவர் மெல்லக் கேட்டார். “அவன் சம்மதிப்பான் என்று தோன்றுகிறதா?”

“அவரைச் சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது தலைவரே” என்று க்ரிஷ் சொன்ன போது அவர் அசந்து போனார். இது வரை பேசி சம்மதிக்க வைக்க முடியாதது இனி முடியும் என்று எந்த நம்பிக்கையில் இவன் சொல்கிறான்.? அவர் கேட்டார். “எதை வைத்து நீ நம்புகிறாய்?”

க்ரிஷ் சொன்னான். “நிகோலா டெஸ்லா!”

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. மனோகர் உண்மையில் தப்பித்து தான் செல்கிறானா? இல்லை செந்தில்நாதன் விரித்த வலையில் வசமாக மாட்டிக் கொண்டானா?

    எர்னஸ்டோ சிந்தனை ஓட்டத்திலே நன்றாக தெரிகிறது.... அவர் மனிதர்களின் குணங்களையும்... சூழல்களில் தன்மையும் எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறார்? என்று

    ReplyDelete
  2. மிகவும் அருமை.
    ஆனால் இந்த பதிவு சிறு பதிவாக போய்விட்டது.......

    ReplyDelete