சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, April 3, 2020

கொரோனாவும் கடந்து போகும்!




கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ் பற்றி வேண்டிய அளவு கேள்விப்பட்டு விட்டோம். அந்த வைரஸ் உலகில் பல லட்சக்கணக்கான மக்களைப் பாதித்தும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தும் விட்டது. அது ஏற்கெனவே பரவி விட்டிருப்பதன் விளைவுகளை இனி சில நாட்களில் உச்சத்தில் நாம் உணர வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த நோயின் தன்மை பற்றியும், நாம் அலட்சியப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் நானும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன். ஏனென்றால் இது அலட்சியப்படுத்த வேண்டிய விஷயமல்ல.

ஆனால் டிவி சேனல்களைப் போட்டால் அங்கு கொரோனா கொடூரம், பத்திரிக்கைகளைப் பிரித்தால் கொரோனா புள்ளிவிவரங்கள், வாட்சப் திறந்தால் கொரோனா கொடுமை, தீர்வுகளாகப் பாட்டி வைத்தியம் உள்ளிட்ட பல வைத்தியங்கள் என்று எல்லா ஊடகங்களும் கொரோனாவைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை, பேசுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொரோனா மேனியாவை உச்சத்தில் கொண்டு போய் விட்டிருப்பது கொரோனாவைக் காட்டிலும் கொடுமையாக இருக்கிறது.

பிரச்சினையின் தீவிரம் சாமானியனுக்குப் புரிய வேண்டும் என்பதிலும் அவன் தற்காத்துக் கொண்டு சமூகத்தையும் காக்க உதவ வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்தில்லை. ஆனால் சகட்டுமேனிக்குப் பயமுறுத்துவதும், திகிலூட்டுவதும், அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதும் இந்தப்  பிரச்சினையைத் தீர்த்து வைக்காமல் கூட்டவே செய்யும்.

பிரச்சினைக்காலங்களில் தீர்வு நோக்கியே மனிதனின் கவனம் இருக்க வேண்டுமேயொழிய பிரச்சினையின் தீவிரம் நோக்கிய பீதி, புலம்பல், கவலை ஆகியவை மேலோங்கி விடக்கூடாது. தற்காப்பு நடவடிக்கைகளும், அறிவுபூர்வமான அணுகுமுறைகளும், தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இருக்க வேண்டுமேயொழிய எத்தனை பேர் எங்கெல்லாம் செத்தார்கள், எப்படி பரவிக் கொண்டிருக்கிறது என்று அடிக்கடி சாவு நிகழ்வுகளை நாம் அப்டேட் செய்து கொண்டிருக்கக்கூடாது.

ஆழ்மனசக்தி குறித்த இரண்டு ஆராய்ச்சி நூல்களை எழுதியிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன். நோய்க்கிருமி ஒருவனைக் கொல்லுமா, பாதிக்காமல் நீங்குமா என்பதை நிர்ணயிப்பது மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான். நோய்க்கிருமியை விட நோய் எதிர்ப்பு சக்திகள் வலிமை கூடி இருந்தால் நோய்க்கிருமி தாக்கினதே கூடத் தெரியாமல், பாதிப்பே இல்லாமல் தப்பி விட முடியும்.  அந்த நோய் எதிர்ப்பு சக்திகளை உச்சத்தில் வைத்திருக்க வேண்டியதே ஒவ்வொரு மனிதனின் அதிமுக்கிய கடமை.

சதா நோயின் தீவிரங்களைப் படிப்பதும், பேசுவதும், பார்ப்பதும் நோய்க்கிருமி குறித்த பிரம்மாணடமான உணர்வை ஏற்படுத்தி நம்மைப் பலவீனப்படுத்தி விடும் என்பதே ஆழ்மனசக்திகளைப் பொறுத்த வரை மகத்தான உண்மை. நம்மிடம் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஆழ்மன அளவில் இந்த நோய் குறித்த தொடர் கவனம் குறைக்க ஆரம்பித்து விடும். நாமே நம் மனதில் ப்ரோகிராம்கள் எழுதிக்கொண்டு அந்த ப்ரோகிராம்களை மெய்யாக்கி விடும் அபாயம் இது போன்ற சமயங்களில் ஏற்பட்டு விடும். எந்த நோய் பற்றியும் தீவிரமாக ஆராயப்போனால் எந்தக் கொடிய நோய் பற்றிய அறிகுறிகளைப் படித்தாலும் சில அறிகுறிகள் நமக்கும் இருப்பதாகவே எவருக்கும் தோன்றும். இப்படி நோய் தாக்கி பாதிக்கப்படுவதை விட நோய் பயத்தினால் பாதிக்கப்படுபவர்கள் அநேகம் பேர்.

இந்தக் கொரோனோ பாதிக்கப்பட்டவர்களில் கூட மிகக்குறைவான சதவீதம் பேர் தான் மரணமடைகிறார்கள். மீதியிருக்கும் பெரும்பாலான மக்கள் மீண்டு தேறிவிடுகிறார்கள். உண்மை நிலைமையைச் சொல்கிறோம் என்று பரப்புரை செய்பவர்கள் இந்த உண்மையை மறந்தும் வலியுறுத்திப் பேசிவிடாமல் இருப்பது என்ன தர்மமோ தெரியவில்லை.   

மீடியாக்கள் எல்லாத் துயரங்களிலும் காசு பார்ப்பவர்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு பதற வைக்கும் செய்திகளை ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு தருவார்கள். அது அவர்கள் பிழைப்பு. ஆனால் அறிவுள்ள மனிதர்கள் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பின்னர் அடிக்கடி அதிலேயே கவனம் செலுத்துவது தவறு. அந்தப் பயமே ஆழமானால் நம் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடும். இந்த முக்கிய நேரத்தில் அப்படியாகிவிட நாம் அனுமதிக்கக்கூடாது.  

உலகம் எத்தனையோ இயற்கை அச்சுறுத்தல்களைச் சந்தித்திருக்கிறது. இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் அது மீண்டே வந்திருக்கிறது. நம் உடலும் அப்படித்தான். எத்தனையோ நோய்க்கிருமிகளை தினந்தோறும் சந்தித்து வருகிறது. பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு கொண்டே வருகிறது. எதற்கும் பயம் தீர்வாகாது. கவலையும் தீர்வாகாது. கவனமாக இருப்போம். பொறுப்புடன் நடந்து கொள்வோம். அதற்கு மேல் நாம் செய்வதற்கொன்றும் இல்லை. கொரோனாவும் கடந்து போகும்! இது சத்தியம்!

என்.கணேசன்

7 comments:

  1. பயனுள்ள பகிர்வு. தொலைகாட்சியில் வரும் செய்திகள் நம்மை பயமுறுத்தி பலவீனம் அடையச் செய்கிறது.

    ReplyDelete
  2. Timely article with great message. Thank you sir.

    ReplyDelete
  3. Saramsam of bhagavatgita. Nee ethuvaga ninaikirayo athuvagavae aavaai. Poiyai nangu thadavai azhuthi chonnal unmai agividumpola. Ezhuthalar athnai muriyadika.. To boost self realization through self confidence.. V kalyan

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கிறியள்
    அருமையான பதிவு

    ReplyDelete
  5. இது முற்றிலும் உண்மைதான்...ஐயா...

    சில நாட்களுக்கு முன் அடிக்கடி குளிர்ந்த நீர் குடித்துக் கொண்டு இருந்தேன்... அப்போது தொண்டை வறட்சி.., வறட்டு இருமல் எல்லாம் இருந்தது... அப்புறம் போகக் போக கொரனா அறிகுறி ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்தது...

    ஆழ்மன சக்திகள் பற்றிய நூல் படித்திருந்த நான்... இந்த அறிகுறிகள் எவ்வாறு வருகின்றன..? என்பதை புரிந்து கொள்ள முடிந்தது....

    தற்போது கொரனா சம்பந்தமான செய்திகளை தெரிந்து கொள்ள... தினமும் ஐந்து நிமிடம் மட்டுமே செலவிடுகிறேன்...

    ReplyDelete