சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 13, 2020

சத்ரபதி 120


சிவாஜி மதுராவிலேயே அன்று தங்கினான். அவனுக்கு உதவ வந்த மூன்று சகோதரர்களும் சிவாஜிக்கு கிருஷ்ணாஜி விஸ்வநாத் என்ற அந்தணரை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தினார்கள். கிருஷ்ணாஜி விஸ்வநாத் பாரதத்தின் இமயத்திலிருந்து கன்னியாகுமரி வரை அடிக்கடி யாத்திரை சென்று வந்தவர். பல குழுக்களுடன் யாத்திரை சென்றிருந்த அவர் வழித்தடங்கள் மட்டுமல்லாமல் வழியில் உள்ள தங்குமிடங்களையும், அங்குள்ள ஆட்களையும் மிக நன்றாக அறிந்தவர். அவருடன் பயணிப்பது சிவாஜியையும் யாத்திரிகராகவே அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் என்றும் அவன் மீது அனாவசிய சந்தேகங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் அவர்கள் நம்பினார்கள். அறிமுகமான சிறிது நேரத்திலேயே கிருஷ்ணாஜி விஸ்வநாத்தின் நல்ல மனமும், அறிவின் கூர்மையும் சிவாஜிக்கு மிகவும் பிடித்து விட்டன. இந்த மனிதர் தங்களுக்கு மிகவும் பயன்படுவார் என்று கணக்கிட்டான்.

அவனுடைய கணக்கு சரியென்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சி மறுநாள் மாலையிலேயே யமுனைக் கரையில் நடந்தேறியது. சிவாஜி ஒருபுறம் யமுனையில் குளித்து விட்டுக் கண்ணனை வணங்கி வர எண்ணியிருந்தான். அப்படி அவன் குளித்துக் கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் சாம்பாஜி ஆரவாரம் செய்தபடி யமுனையில் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஔரங்கசீப் சாம்பாஜியை வைத்து தான் சிவாஜியைக் கண்டுபிடிப்பது எளிது என்று தன் வீரர்களுக்கும் ஒற்றர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தான். மாயாவியான சிவாஜி தன் தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும், ஆனால் அவன் தன் மகன் உயரத்தையும் இளமையையும் மாற்றிக் காண்பித்து விட முடியாது என்று சுட்டிக் காட்டி இருந்தான். மேலும் சாம்பாஜி சிவாஜி அளவுக்கு நடிக்கப் பழகி இருக்கவும் வாய்ப்பில்லை என்பது அவனுடைய அனுமானமாக இருந்தது. அதனால் சாம்பாஜியுடன் இருப்பதை வைத்து சிவாஜியைக் கண்டுபிடித்து விட முடியும் என்று மும்முரமாக முகலாய வீரர்கள் தங்கள் தேடுதலைத் துவங்கி இருந்தார்கள்.

சாம்பாஜி மொட்டையடித்து தலையில் சிறு குடுமியை விட்டு அந்தணச் சிறுவனாகவே தோற்றத்தில் மாறியிருந்த போதிலும் ராஜவம்சத்து தோரணையை முழுமையாக அவன் இழந்து விட்டிருக்கவில்லை. யமுனையில் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை ஒரு முகலாய வீரன் சந்தேகத்துடன் பார்த்தபடி நெருங்கினான்.

தூரத்திலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்த சிவாஜி திடுக்கிட்டான். முகலாய வீரன் சாம்பாஜியை அடையாளம் கண்டு பிடித்து விடுவானேயானால் கண்டிப்பாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால் சிவாஜிக்கும் சாம்பாஜிக்கும் இடைப்பட்ட தூரத்தில் நீராடிக் கொண்டிருந்த கிருஷ்ணாஜி விஸ்வநாத் சமயோசிதமாக சாம்பாஜியை வேகமாக நெருங்கினார்.

முகலாய வீரன் சாம்பாஜியிடம் எதுவும் கேட்பதற்கு முன் கடுமையான குரலில் சாம்பாஜியிடம் அவர் சொன்னார். “மகனே எத்தனை முறை உன்னை அழைப்பது? அன்னையார் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். விளையாடுவதற்கு ஒரு அளவில்லையா. கிளம்பு சீக்கிரம்”

சாம்பாஜி அவரையும்  அந்த முகலாய வீரனையும் ஒரே நேரத்தில் கவனித்தான். ஆபத்தை மெல்ல உணர்ந்த அவன் உற்சாகம் ஒரே கணத்தில் வடிந்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட அவன் தலையைத் தாழ்த்திக் கொண்டு ”மன்னிக்க வேண்டும் தந்தையே” என்றான்.

முகலாய வீரன் கிருஷ்ணாஜி விஸ்வநாத்தைக் கூர்ந்து பார்த்தான். இந்த ஒடிசலான மனிதர் சிவாஜியாக இருக்க வாய்ப்பே இல்லை. அந்தச் சிறுவனும் அவரைப் பார்த்து பயந்தவனாக ‘மன்னிக்க வேண்டும் தந்தையே’ என்றதால் அவன் அவர் மகனாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போதும் முகலாய வீரன் அருகிலிருக்கும் மனிதர்களில் யாராவது சிவாஜியாக இருக்க வாய்ப்பிருக்கிறதா என்று எச்சரிக்கை உணர்வுடன் பார்த்தான். கிழவர்களும், சிறு பிள்ளைகளுமே அதிகமாக அருகாமையில் இருந்தார்கள். அங்கு இருந்த மற்றவர்களும் உடல்வாகைப் பொருத்த வரையில் சிவாஜியாக இருக்க வழியில்லை. முகலாய வீரன் ஓரளவு சந்தேகம் தீர்ந்தவனாகத் திரும்பிப் போனான்.

கிருஷ்ணாஜி விஸ்வநாத் சாம்பாஜியின் கையைப் பிடித்துக் கொண்டு தனது இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அந்த முகலாய வீரன் திடீரென்றுத் திரும்பிப் பார்த்த போது அவர்கள் இருவரும் தந்தை மகன் போலவே சென்று கொண்டிருந்தார்கள். இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்தவனாக அந்த வீரன் குதிரையேறிச் சென்றான்.

சிவாஜி தான் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் மற்றவர்களுக்கு நடுவிலேயே சிறிது நேரம் தங்கி விட்டு முகலாய வீரர்கள் அப்பகுதியில் இருந்து சென்ற பின், இருட்டவும் ஆரம்பித்த பின் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

சாம்பாஜி உடனிருப்பதை வைத்து சிவாஜியைக் கண்டுபிடிக்குமாறு தன் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பது ஔரங்கசீப்பாகத் தானிருக்க வேண்டும் என்று சிவாஜி அனுமானித்தான். ஔரங்கசீப்பின் அறிவுக்கூர்மையை சிவாஜி தன் மனதினுள் பாராட்டத் தவறவில்லை. அறிவிருப்பதில் ஆறில் ஒரு பங்கு கூட அன்பும், பெருந்தன்மையும் ஔரங்கசீப்பிடம் இல்லாமல் போனது முகலாயர்களின் துரதிர்ஷ்டமே என்றும் அவனுக்குத் தோன்றியது….

கிருஷ்ணாஜி விஸ்வநாத்தின் வீட்டில் அவரும் அவர் தாயாரும் அவர் சகோதரரும் மட்டுமே வசித்து வந்தார்கள். சிவாஜிக்காக அவர்கள் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். சிவாஜி உள்ளே நுழைந்த பின் கிருஷ்ணாஜி விஸ்வநாத் நிம்மதிப் பெருமூச்சு விட்டவராகச் சொன்னார். “தங்களைக் காணும் இக்கணம் வரை எங்களுக்கு நிம்மதி இருக்கவில்லை அரசே”

சிவாஜி ஆத்மார்த்தமாய்ச் சொன்னான். “தங்களுடைய சமயோசிதம் என்னையும் என் மகனையும் காப்பாற்றி விட்டது ஐயா. தங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் தகுந்த வார்த்தைகள் இல்லை”

கிருஷ்ணாஜி விஸ்வநாத் சொன்னார். “தங்களைப் போன்ற உதாரண புருஷர் ஒருவருக்குச் சிறிய வகையிலாவது உதவ முடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன் அரசே. பெரிய வார்த்தைகளைச் சொல்லி என்னைத் தயவு செய்து சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்….”

சிவாஜி சொன்னான். “உங்கள் உதவி எனக்கு இன்னும் நிறைய தேவைப்படுகிறது ஐயா…”

கிருஷ்ணாஜி விஸ்வநாத் கூறினார். “உத்தரவிடுங்கள் அரசே. நானும் என் குடும்பமும் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்”

சிவாஜி சொன்னான். “சாம்பாஜியும் நானும் சேர்ந்து பயணிப்பது ஆபத்து என்பதை இன்றைய மாலை நிகழ்வு மூலம் அன்னை பவானி நமக்கு உணர்த்தி இருக்கிறாள். அதனால் நான் என் மகனை இங்கு விட்டுச் செல்லத் தீர்மானித்திருக்கிறேன். நான் மட்டுமே செல்வதும் உசிதமல்ல என்றும் தோன்றுவதால் தாங்கள் எனக்கு வழித்துணையாக வந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நேரடியாக என் நாட்டுக்குச் செல்ல முடியாது. கண்டிப்பாக அந்த நேர்வழியில் முகலாயர்களின் கண்காணிப்பு கடுமையாக இருக்கும். அதனால் யாத்திரீகர்கள் பொதுவாகச் செல்லும் பயண வழியே பாதுகாப்பானதாக எனக்குத் தோன்றுகிறது. நாளைக் காலையே நம் பயணத்தை ஆரம்பித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்”

கிருஷ்ணாஜி விஸ்வநாத் சிறிதும் யோசிக்காமல் “அப்படியே ஆகட்டும் அரசே” என்றார்.

ஆனால் சாம்பாஜியின் முகம் சுருங்கி விட்டது. அவனுக்குத் தந்தையை விட்டு இருக்க மனமில்லை. அரண்மனையின் வசதிகள் இல்லாத அந்தச் சிறிய வீடும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மகன் மனதை அவன் முகபாவனையிலிருந்தே படிக்க முடிந்த சிவாஜி பெருமூச்சு விட்டான். சொகுசான வாழ்க்கை பல நேரங்களில் வாழ்வின் கசப்பான நிதர்சன உண்மைகளைத் திரையிட்டு மறைத்து விடுகிறது. திரை விலகும் போது கசப்பின் தீவிரம் கடுமையாக உறைக்கின்றது. என்ன செய்வது!

அன்றிரவு உறங்குகையில் மகனிடம் சிவாஜி சொன்னான். ”சாம்பாஜி ஏன் முகவாட்டமாக இருக்கின்றாய்?”.

சாம்பாஜி தயக்கத்துடன் தாழ்ந்த குரலில் சொன்னான். “எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை தந்தையே”

“ஏன்?” என்று சிவாஜி கேட்ட போது சாம்பாஜி எதுவும் சொல்லவில்லை. அவன் படுத்துக் கொண்டிருந்த கோரைப்பாயின் கடினமான அழுத்தம் கூட அவனைக் கஷ்டப்படுத்தியது. அதைச் சொன்னால் தந்தை கோபித்துக் கொள்ளக்கூடும் என்று மௌனமாக இருந்தான்.

மகன் மௌனத்தையும் படிக்க முடிந்த சிவாஜி கேட்டான். “மகனே. நாம் முகலாயர்களிடம் சிறைப்பட்டிருந்த மாளிகையில் சகல வசதிகளும் இருந்தனவே. திரும்பவும் அங்கேயே போய் விடலாமா?”

சாம்பாஜி உடனே பதிலளித்தான். “வேண்டாம்”

சிவாஜி சொன்னான். “மகனே எத்தனை வசதிக்குறைவுகள் இருந்தாலும்  சுதந்திரமே  சுகமானது. எத்தனை வசதிகள் இருந்தாலும் சிறைப்படுவதே கொடுமையானது. இறைவன் அருள் இருக்கின்ற ஒருவனுக்கு எல்லா அசௌகரியங்களும், பிரச்னைகளும், தற்காலிகமானவை தான். அவை கடந்து போகிறவரை பொறுத்துக் கொண்டு போகும் பக்குவத்தை நாம் எப்போதும் பெற்றிருக்க வேண்டும்…”

தந்தையின் அறிவுரையைக் கேட்டுச் சிறிது சமாதானம் அடைந்த சாம்பாஜி மெல்லக் கேட்டான். “நீங்கள் நாளை போனால் நான் எப்போது அங்கே வருவது?” 

“கூடிய விரைவில்….”

சாம்பாஜி ஒன்றும் சொல்லவில்லை. கூடிய விரைவில் என்ற சொல்லுக்கு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் என்ற தெளிவான காலக்கணக்கு இல்லையே! மகனின் மௌனம் சிவாஜிக்குக் கனத்தது. மகனை அரவணைத்துக் கொண்டு சொன்னான். “மகனே நீ முகம் வாடி இப்படி இருக்கக்கூடாது.  உன் முகவாட்டம் நான் செல்லும் வழியில் எல்லாம் நினைவு வந்து என்னை வருத்தப்பட வைக்கும். நாடாள்பவர்கள் தொட்டாற்சிணுங்கியாகவும், மனோபலம் இல்லாதவர்களாகவும் இருக்கக்கூடாது. எனக்குப் பின் நாடாளப் போகிறவன் நீ. தைரியமாகவும் உற்சாகமாகவும் என்னை அனுப்பி வைக்க வேண்டும்.…..”

தந்தையின் அந்த வார்த்தைகள் சாம்பாஜியை உடனே மாற்றி உறுதியாகப் பேச வைத்தன. “என் சிறுபிள்ளைத்தனத்தை மன்னியுங்கள் தந்தையே.  என்னைப் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் சென்று வாருங்கள்….”

சிவாஜி மகனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

தந்தையின் முத்தத்தில் நெகிழ்ந்து போன சாம்பாஜி கடைசியில் ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்தான். “உங்கள் இறைவனிடம் என்னையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போங்கள்”


சிவாஜி மென்மையாகச் சொன்னான். “பெற்றோரின் பிரார்த்தனையில் பிள்ளைகள் எப்போதும் இருப்பார்கள் மகனே. ஏனென்றால் பிள்ளைகளின் நலனை ஒட்டியே பெற்றோரின் மன நிம்மதி அமைகிறது. ஆனால் நீயும் இறைவனை உன் இறைவனாக உணர வேண்டும். இறைவனை மனமாரப் பிரார்த்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு என்னிடம் ஏன் வேண்டிக்கொள்ளச் சொல்கிறாய்?’

சாம்பாஜி சொன்னான். “இறைவன் எல்லோரையும் விட உங்களிடம் அதிகப் பிரியமாகவும். ஆதரவாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது தந்தையே” 

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. We really see the events in front of us. Hats off to your writing Sir.

    ReplyDelete
  2. “இறைவன் எல்லோரையும் விட உங்களிடம் அதிகப் பிரியமாகவும். ஆதரவாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது தந்தையே” இவ்வரிகள் மனதை கலங்கவும் உலகை உணரவும் வைத்தது - நன்றிகள்

    ReplyDelete
  3. கிருஷ்ணாஜி விஸ்வநாத் அவர்கள் சமாயோசிதமாக செயல்பட்ட விதம் அருமை....
    சாம்பாஜிக்கு சிவாஜி கூறும் அறிவுரைகள் அனைத்தும் அருமை....

    ReplyDelete
  4. உரையாடல் ஒவ்வொன்றும் கைதேர்ந்த சிற்பியின் கச்சிதமான படைப்புகள் போல துலங்குகின்றன ஐயா ...

    ReplyDelete
  5. சொகுசான வாழ்க்கை பல நேரங்களில் வாழ்வின் கசப்பான நிதர்சன உண்மைகளைத் திரையிட்டு மறைத்து விடுகிறது. திரை விலகும் போது கசப்பின் தீவிரம் கடுமையாக உறைக்கின்றது. என்ன செய்வது!.....
    மேற்குறிப்பிட்ட தங்களின் வரிகள் அருமை. சொகுசான வாழ்க்கை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. அஃது குறைந்து விட்டாலோ அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. அதை எதிர்த்து போராட வைக்கிறது. இதிலிருந்து எவ்வளவு விரைவில் மீளுகிறோம் என்பதுதான் ஒருவர் அவர் வாழ்க்கையில் பெறும் வெற்றி. இல்லையா!

    ReplyDelete
  6. வாழ்க்கையின் கடினமான தருணங்கள் இறைவன் நல்லவர்களுக்கு தற்காலிகமான சோதனையாக கொடுத்துக்கொண்டுதான் இருப்பான் ஆனால் அது நிரந்தரம் அல்ல என்பதை தந்தை மகன் உரையாடல் மூலம் அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.

    ReplyDelete