சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 20, 2020

சத்ரபதி 121



சிவாஜி மறுநாள் காலையே கிருஷ்ணாஜி விஸ்வநாத்துடன் அங்கிருந்து கிளம்பினான். சாம்பாஜி தந்தையை ஓரளவு திடமாகியிருந்த மனதுடன் வழி அனுப்பி வைத்தான். மகனை அங்கு விட்டுச் செல்வதில் சிவாஜியின் மனம் சற்று கலங்கத்தான் செய்தது. ஆனால் இருவருக்கும் பிரிந்து பயணிப்பதே பாதுகாப்பு என்பதால் வேறு வழியில்லை….

“எந்த வழியாகச் செல்லலாம் அரசே” கிருஷ்ணாஜி விஸ்வநாத் கேட்டார்.

“சுற்றி வளைத்துச் செல்வதாக இருந்தாலும் ஆன்மீக யாத்திரிகர்களின் வழியே நல்லது என்று தோன்றுகிறது. நம் தோற்றத்திற்கும் பயணத்திற்கும் இடையே முரண்பாடு யாருக்கும் தெரியக்கூடாது”

பைராகிகளின் வேடத்தில் கிளம்பிய அவர்கள் வாரணாசி, அலகாபாத், கயா என்று யாத்திரிகர்களின் வழியில் சென்றார்கள். பின்பு தான் தென் திசை நோக்கித் திரும்பினார்கள். வரும் வழிகள் கூட புனிதத் தலங்கள் வழியாகவே இருந்தன. அந்தப் பயணத்தில் சிவாஜியின் பல பரிமாணங்களை கிருஷ்ணாஜி உணர்ந்தார். பயணிக்கும் போது சிவாஜி தன்னைச் சுற்றி உள்ள சூழலையும், மனிதர்களையும் முழுவதுமாகக் கூர்ந்து கவனிக்க முடிந்தவனாக இருந்தான். அவன் கவனத்திலிருந்து யாரும், எதுவும் தப்பவில்லை. அதே சிவாஜி புனிதத் தலங்களில் இறைவனைத் தரிசித்து வழிபடும் நேரத்தில் பரிபூரண பக்தனாக இருந்தான். வணங்கும் போது பல நேரங்களில் பக்திப் பரவசத்தில் அவன் கண்களில் நீர் பெருகுவதை அவர் கவனித்தார். அவனுக்கும் இறைவனுக்கும் இடையே ஏதோ கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறதோ என்று கூட அவருக்குத் தோன்றியதுண்டு. ஒரு அரசன் இப்படிப்பட்ட பக்தனாகவும் இருப்பது அவரை வியக்க வைத்தது.

பயணத்தில் சில இடங்களில் நதிகளை நீந்திக் கடக்க வேண்டி இருந்தது. அவர்கள் தங்க வேண்டியிருந்த இடங்கள் பல நேரங்களில் வசதிக்குறைவாகவே இருந்தன. சில இடங்களில் தங்க கூரையுள்ள இடங்கள் கிடைக்கவில்லை. வெட்ட வெளிகளில் மரத்தடிகளில் படுக்க வேண்டியிருந்தது. மழை பெய்த சமயங்களில் ஈரமில்லாத தரைகள் கூடக் கிடைக்கவில்லை. ஒரு சாதாரண வசதி படைத்த மனிதனே சகித்துக் கொண்டு தங்க முடியாத இடங்களில் எல்லாம் அரசனான சிவாஜி எந்த முகச்சுளிப்பும் இன்றித் தங்கினான். ஆழ்ந்த உறக்கம் உறங்கினான்.

வழி நெடுக ஔரங்கசீப்பின் ஒற்றர்களும், வீரர்களும் கண்காணித்துக் கொண்டும் இருந்தார்கள். சந்தேகப்பட்டவர்களை நிறுத்திக் கேள்விகள் கேட்டார்கள். அந்த நேரங்களில் எல்லாம் கிருஷ்ணாஜி விஸ்வநாத் தான் பதற்றம் அடைந்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கப் பாடுபட்டாரேயொழிய சிவாஜி சின்னப் பதற்றத்தைக் கூட காண்பிக்கவில்லை. அவர்கள் தேடும் ஆளுக்கும் அவனுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை என்பது போல சிவாஜி வேடிக்கை பார்த்தான். அதுவும் கிருஷ்ணாஜி விஸ்வநாத்தைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. எப்படி முடிகிறது இவருக்கு என்று பல நேரங்களில் அவர் சலிக்காமல் தனக்குள் கேட்டுக் கொண்டார்.

பயணத்தில் வழியில் இருந்த கிராமங்களில் தங்கும் போது மக்கள் தங்கள் கஷ்ட நஷ்டங்களை விவரிப்பதுண்டு. கிருஷ்ணாஜி விஸ்வநாத்துக்கே சில சமயங்களில் அவற்றைக் கேட்பதில் சலிப்பு தட்டியது. ஆனால் ஒரு இடத்திலும் சிவாஜி அவற்றைக் கேட்டுச் சலிப்படைந்ததில்லை. அவர்கள் சொன்ன கஷ்டக்கதைகளில் அவனும் கண்கலங்கினான். அவர்கள் நிலைமைக்கு வருந்தினான். நல்லது நடக்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் சொன்னான்.

அரசன் குடிமக்களின் கஷ்டங்களைக் கேட்கும் கடமையைச் செய்கிறான் என்று நினைப்பதற்கும் வழியில்லை. காரணம் அவர்கள் இன்னமும் பயணம் செய்து கொண்டிருப்பது முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தான். அடுத்த நாட்டுக் குடிமக்கள் கஷ்டங்களில் கூட மனதாரப் பங்கெடுக்கும் அந்தத் தன்மை கிருஷ்ணாஜி விஸ்வநாத்தைப் பிரமிக்க வைத்தது.

அவர் அதை மட்டும் ஏன் என்று சிவாஜியிடம் ஒரு நாள் அவர்கள் இருவர் மட்டும் தனிமையில் இருந்த சந்தர்ப்பத்தில் வாய் விட்டே கேட்டார். சிவாஜி தன் ஆசிரியர் தாதாஜி கொண்டதேவ் பற்றிச் சொன்னான். குடிமக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதில் அவருக்கு இருந்த அதீத அக்கறை பற்றிச் சொன்னான். அவர் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொன்ன விஷயம் குடிமக்கள் நலன் தான் என்பதைச் சொன்னான். “என்றேனும் ஒரு நாள் இப்பகுதிகள் எல்லாம் என் ஆட்சிக்குள் வரலாம் கிருஷ்ணாஜி. அப்படி ஒரு நாள் வந்தால் நான் இவர்கள் சொன்னதை நினைவு வைத்திருப்பேன். கண்டிப்பாக இவர்கள் வாழ்க்கையைச் சுலபமாக்குவேன்.”

தன் ஆசிரியரைப் பற்றிச் சொன்ன போது அவன் உணர்ச்சி வசப்பட்டு முகம் மிக மென்மையானதை கிருஷ்ணாஜி விஸ்வநாத் கவனித்தார். அவன் குரு பக்தியையும், அந்த ஆசிரியர் சொன்னதை இன்றளவும் மறக்காமல் ஏழை மக்களுக்காக இரங்கும் தன்மையையும் கண்டு அவர் வியந்து போனார். இப்படிப்பட்ட ஒரு மாமனிதனுடன் தனித்துப் பயணிக்கும் பாக்கியம் கிடைத்ததற்காக அவர் மனம் இறைவனுக்கு நன்றி தெரிவித்தது.


ரங்கசீப் சிவாஜி குறித்துத் தகவல் கிடைக்காமல் நாட்கள் நகர்ந்ததில் ஆழ்ந்த அதிருப்தியை உணர்ந்தான். சிவாஜி அதிசாமர்த்தியசாலி தான் என்றாலும் அவன் ராஜ்ஜியத்தை நோக்கிக் கண்டிப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கும் அவனை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள அவன் மனம் மறுத்தது.  பெருமளவில் பரிசுகள் அறிவித்தும் அவனைக் காட்டிக் கொடுத்துப் பரிசுகள் பெற யாரும் முன்வராதது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. எல்லோரும் அவனுடன் கூட்டு சேர்ந்து விட்டார்களா என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. அந்த மாயாவி என்ன மாயா ஜாலம் செய்து இன்னும் தலைமறைவாகவே இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து முடியாமல் சரியாக உறங்க முடியாமல் தவித்தான்.

அவன் தக்காணத்தில் ஜெய்சிங்குக்கு சிவாஜி தப்பித்தது குறித்துத் தகவல் தெரிவித்து சிவாஜியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி பணயக்கைதியாக  அவன் படைத்தளபதி நேதாஜி பால்கரைக் கைது செய்து முகலாயத் தலைநகருக்கு அனுப்பக் கட்டளையிட்டிருந்தான். அதன்படி நேதாஜி பால்கர் ஜெய்சிங்கால் கைது செய்யப்பட்டு கடுங்காவலுடன் முகலாயத் தலைநகருக்கு அனுப்பப்பட்டிருந்தான். அப்படி நேதாஜி பால்கர் வந்து கொண்டிருக்கும் செய்தியும் அவன் கோபத்தைத் தணித்து விடவில்லை.

அவன் மன உளைச்சலை அதிகப்படுத்தும்படியாக செயிஷ்டகானும் கடிதம் எழுதியிருந்தான்.

“கண்ணில் அகப்பட்டவுடன் கொன்று விட்டிருக்க வேண்டிய அந்த வனக்குரங்கை சிறைப்படுத்துகிறேன் என்று சொல்லி அரச வாழ்க்கையை அவனை அங்கு மாளிகையிலும் அனுபவிக்க வைத்து விட்டு, அவனைத் தப்பிக்கவும் விட்ட செய்தியைக் கேட்டு நான் உறக்கத்தைத் தொலைத்து விட்டேன் மருமகனே. விரல்களை இழந்த என் கரம் என்னைப் பார்த்து நகைக்கிறது. இரத்தம் கொதிக்கிறது.…..”

ஔரங்கசீப் அதற்கு மேல் படிக்கவில்லை. இது போன்ற புலம்பல்களையும், ஆதங்கங்களையும் படித்துத் தன் இரத்தக் கொதிப்பையும் வளர்த்து விட அவன் விரும்பவில்லை. சிவாஜி குறித்து ஏதாவது நல்ல செய்தி வராதா என்று காத்திருந்தான்.


சிவாஜியும் கிருஷ்ணாஜி விஸ்வநாத்தும் ஒரு கோயிலில் இறை வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் வளாகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வேறு பல யாத்திரீக பக்தர்களும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பேச்சு தெற்கில் உள்ள கோயில்களைப் பற்றியும் அங்கு போவதற்கான வழிகளைப் பற்றியுமாய்த் திரும்பியது. எல்லாம் அவன் பல முறை சென்று வழிபட்ட கோயில்கள், பல முறை பயணித்த இடங்கள் என்பதால்  சிவாஜி அவர்களுக்கு உதவும் பொருட்டு அந்த வழிகளை மிக விளக்கமாக  விவரித்தான். அந்த இடங்களையும், அந்த வழிகளையும் விவரித்த விதத்தைக் கூர்ந்து கவனித்த ஒரு அந்தணர் வியப்புடன் வெளிப்படையாகச் சொன்னார். “ஐயா தாங்கள் விவரிக்கும் விதம் ஒரு பைராகி விவரிக்கும் விதமாக இல்லை. அங்கேயே பிறந்து வளர்ந்தவர் விவரிப்பது போல் இருக்கிறது….”

சிவாஜி துணுக்குற்றான். அந்த நேரத்தில் கோயிலுக்கு வெளியே முகலாய வீரர்கள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு பக்தர் “ஏன் வீரர்களின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாக இருக்கிறது?” என்று கேட்டார்.

சிவாஜியிடம் பேசிய அந்தணர் நாட்டு நடப்பு குறித்து அதிகம் அறிந்தவரும், ஈடுபாட்டுடன் கவனிக்கக் கூடியவருமாகத் தெரிந்தார். அவர் அந்த பக்தரிடம் சொன்னார். “தென்னாட்டு அரசன் சிவாஜி தலைநகரில் சிறையிலிருந்து தப்பித்து விட்டான் அல்லவா? அவனை எல்லா இடங்களிலும் மும்முரமாகத் தேடுகிறார்கள்… பிடித்துத் தருபவர்களுக்கு நிறைய பரிசுகளும் அறிவித்திருக்கிறார்கள்”

அந்த அந்தணர் பேசிய இந்த இரண்டு விஷயங்களை அவரே இணைத்துப் பார்த்தாரானால் ஆபத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை உடனடியாக சிவாஜி உணர்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்



2 comments:

  1. சிவாஜி மற்றும் கிருஷ்ணாஜி இருவரின் பயண அனுபவங்கள் அருமை... அடுத்து திருப்பம் எந்த மாதிரியானது என்று கணிக்க முடியவில்லை...

    ReplyDelete
  2. Excellent writing sir. We feel as if we are travelling with them.

    ReplyDelete