சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 23, 2020

இல்லுமினாட்டி 46


க்ஷயிடம் க்ரிஷ் சொன்னான். “நீங்கள் விஸ்வத்தின் சக்திகளின் அளவைப் பார்த்து விட்டு அவனுக்கு இணையானவர் நீங்கள் அல்ல என்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் நீங்களும் சாதாரணமானவர் அல்ல என்று பலர் சொல்கிறார்கள். உங்களை அமானுஷ்யன் என்ற பெயரால் மட்டுமே அவர்கள் அழைக்கும் அளவில் தான் நீங்களும் உயர்ந்திருக்கிறீர்கள்...”

அக்ஷய்க்கு அவனுடைய மறுப்பை க்ரிஷ் உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் பேசுவது தர்மசங்கடத்தைத் தந்தது. அவன் வருத்தம் கலந்த மெலிதான புன்னகையுடன் சொன்னான். “என்னை அப்படிக் கூப்பிடுபவர்கள் யாரும் விஸ்வத்தை அறியாதவர்கள். அவர்கள் அவனைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தால் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் கல்வியில் அவன் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரி என்று சொல்வார்கள்.”

க்ரிஷ் சொன்னான். “இருக்கலாம். ஆனால் அவனிடம் மிகப்பெரிய பலவீனம் இருக்கிறது. அது அதர்மம். அது தற்காலிகமாய் ஜெயிக்கலாம். ஆனால் கடைசியில் அவனை அழித்தே தீரும். அதில் சந்தேகமேயில்லை

உண்மை. ஆனால் அதர்மம் அழிவதற்கு முன்னால் நிறைய நல்லதையும் அழித்து விடுவதுண்டு என்பதே கசப்பான உண்மை. என் வாழ்க்கையில் அதை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். அப்படி நான் நேசித்த மனிதர்களை இழந்தும் இருக்கிறேன். தர்மம் கடைசியில் ஜெயித்தாலும் இடையில் இழந்த நல்ல விஷயங்களை மீட்டுக் கொடுப்பதில்லை, க்ரிஷ்

நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் வருவதற்கு ஒரு காலம் இருக்கிறது. அது நம்மை விட்டுப் போவதற்கும் ஒரு காலம் இருக்கிறது. அது அது அததன் காலத்தில் நடக்கிறது. அதனால் வரும் சுக துக்கங்கள் நம்மைப் பாதிப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் தர்மம் அதர்மத்திற்கும் நாம் முடிச்சுப் போடுவது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.”

அக்ஷய் அவன் வாதத்திறமையை ரசித்தான். க்ரிஷ் சொன்னதில் இருந்த உண்மையையும் அவன் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் இப்போதைய வாழ்க்கையின் அமைதியை அவன் இழக்க விரும்பவில்லை.  அவன் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

அவனுடைய மௌனத்தைப் படிக்க முடிந்தவனாக க்ரிஷ் தொடர்ந்து சொன்னான். ”நல்லவர்களான நாம் அமைதியையே விரும்புகிறோம். அதைப் பாதிக்கிற எதிலும் ஈடுபடுவதை நாம் விரும்புவதில்லை. ஆனால் தீமையை வளர விட்டால் நாம் என்றும் அமைதியுடன் வாழ முடியாது. தீமையை ஆதரிப்பது தான் ஆபத்து என்பதில்லை. எதிர்க்காமல் விலகி நிற்பதும் வளர்ப்பது போல் ஆபத்து தான். தனி மனிதர்களுக்கோ, அந்த இயக்கத்திற்கோ மட்டும் அந்த ஆபத்து என்பதில்லை. அந்த ஆபத்து மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவத்தான் செய்யும். அன்பான குடும்பத்துடன் அமைதியாக வாழ ஆசைப்படுவதாகச் சொன்னீர்கள். அந்த ஆசையே எனக்கும் இருக்கிறது. ஆனால் நாம் இன்று போராடி தீமையை அழிக்கா விட்டால் நாளைய நன்மையையும், அமைதியையும் கண்டிப்பாக இழந்து விடுவோம். நம் சந்ததியும் நிம்மதியாய் வாழ முடியாது. இதெல்லாம் உங்களுக்கு என்னை விட நன்றாகத் தெரியும். உங்கள் கடந்த காலத்தில் அந்தப் புரிதலோடு தான் தீய சக்திகளுடன் நிறைய போராடி இருக்கிறீர்கள். ஜெயித்தும் இருக்கிறீர்கள்”  

அக்‌ஷய் சொன்னான். “உண்மை. அன்று அந்தப் போராட்டத்திற்கு அர்த்தம் இருந்தது. என் அவசியமும் இருந்தது. ஆனால் விஸ்வத்தை எதிர்த்துப் போராட அந்தச் சக்தி வாய்ந்த இயக்கமே தாராளமாகப் போதும். அந்த இயக்கத்தை விட நான் எந்த விதத்திலும் பலசாலி அல்ல. பட்டாளங்களால் பாதுகாக்க முடிந்த மனிதர்களுக்குத் தனி மனித உதவி தேவையில்லை என்று தான் சொல்கிறேன்...”    

க்ரிஷ் அவன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டு விட்டுச் சொன்னான். அந்த இயக்கம் இந்தக் காலக்கட்டத்தில் அழிவின் விளிம்புக்கு வரும் என்று ஆரகிள் சொல்லியிருப்பதை அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி விஸ்வத்தின் சாகசங்களும் இருக்கின்றன. வேற்றுக்கிரகவாசி சொன்னதும் ஒத்துப் போகிறது. பாதுகாப்புப் பட்டாளத்தால் அந்த இயக்கத் தலைவரைக் கண்டிப்பாகக் காப்பாற்ற முடியும் - எப்போதுமே அந்தப் பட்டாளத்தின் மத்தியில் அவர் இருக்க முடியுமானால். நடைமுறையில் அது அவருக்கு முடிகிற காரியம் அல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள். விஸ்வம் பழைய சக்தி பெற்று வந்தால் அவன் நினைத்ததை செய்து முடிக்க அவனுக்குச் சில வினாடிகள் போதும். அவன் இயங்க முடிந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க உங்களைத் தவிர வேறு யாரும் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை.  அதனால் தான் என்னை உங்களிடம் அனுப்பி அனுப்பியிருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுவதனால் இருக்கும் ஆபத்துகளை அவர்கள் அலட்சியம் செய்யவில்லை. அந்த இயக்கம் உங்கள் குடும்பத்திற்கு முழுப் பாதுகாப்பு தருவதாக உத்திரவாதம் தருவதாக வாக்களிக்கிறது. அவர்களுடைய பாதுகாவல் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதற்கு நானும் உத்திரவாதம் தருகிறேன். இப்போது நானே அந்த இயக்கத்தின் நான்கு பாதுகாப்பு வீரர்கள் பாதுகாவலில் தான் இங்கே வந்திருக்கிறேன். இது அரசு பாதுகாப்பை விட இரு மடங்கு அதிக பாதுகாப்பு என்பதை நான் உணர்கிறேன்...

அக்‌ஷய் தன் புன்னகையைக் கஷ்டப்பட்டு மறைத்தான். ’வாதங்களிலும், பல துறைகளிலும் அபார அறிவுத் திறமை இருக்கும் இந்த இளைஞன் சில விஷயங்களில் நிறையவே வெகுளியாகவும் இருக்கிறான். எட்டுப் பேரைப் பாதுகாவலுக்கு அனுப்பி இருப்பதை இல்லுமினாட்டி இயக்கம் இவனுக்கே தெரிவிக்கவில்லை. பாதியாகத் தான் சொல்லி அனுப்பி இருக்கிறது. இவனும் இப்போது வரை உண்மையை உணரவில்லை...”

க்ரிஷ் கேட்டான். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

அக்‌ஷய் திகைத்தான். அவன் சிரிப்பை வெளியே காண்பிக்கவில்லை என்பது நிச்சயம். ஆனாலும் மாஸ்டரின் மாணவன் உள்ளுணர்வால் உணர்ந்து விட்டிருக்கிறான். கவனிக்கும் விஷயங்களில் இவன் நுண்ணுணர்வு அபாரமாகவே இருக்கிறது. கவனிக்காத விஷயங்களில் தான் இவன் வெகுளியாக இருக்கிறான்...  

அக்‌ஷய் அவனுடன் சற்று நெருக்கத்தை உணர ஆரம்பித்ததால் உண்மையையே சொன்னான். “உன்னுடன் பாதுகாவலர் எட்டுப் பேர் வந்திருக்கிறார்கள். ஆனால் நீ நான்கு பேர் என்று சொல்கிறாயே அது தான் வேடிக்கையாக இருந்தது. ஆனால் எனக்குத் தோன்றியதை நான் வெளியே காட்டவில்லை. அப்படி இருந்தும் நீ கண்டுபிடித்து விட்டாய்”

க்ரிஷுக்குத் தன் பாதுகாவலுக்கு வந்த ஆட்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாதது அவமானமாகத் தெரியவில்லை. இல்லுமினாட்டி அவனிடமே பொய் சொல்லியிருப்பது கோபத்தையும் ஏற்படுத்தவில்லை. அக்‌ஷய் சிரிப்பை மறைத்தும், தான் சரியாகக் கண்டுபிடித்து விட்டது பெருமையாகவும் இருக்கவில்லை. அவனுக்கு அவனுடன் வந்த பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அக்‌ஷய் சரியாகக் கண்டுபிடித்தது தான் ஆச்சரியமாக இருந்தது. க்ரிஷ் சொன்னான். ”உங்களை அமானுஷ்யன் என்று சொல்வது சரியாகத் தான் இருக்கிறது. உங்கள் கவனம் எல்லாம் அந்தப் பிள்ளைகள் மேலேயே இருந்தது போலத்தான் இருந்தது. அப்படி இருந்தும் கண்டுபிடித்து விட்டீர்கள்.”

க்ரிஷ் உணராத அவமானமும், கோபமும், பெருமிதமும் அக்‌ஷயின் கவனத்திலிருந்து தப்பவில்லை. அவன் மனதில் க்ரிஷ் பல மடங்கு உயர்ந்து போனான்.

க்ரிஷ் அக்‌ஷயிடம் கேட்டான். “நீங்கள் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் என்று நான் அந்த இயக்கத்தினரிடம் சொல்லட்டும்”

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு யோசிக்க இரண்டு நாள் அவகாசம் வேண்டும், க்ரிஷ்”

ஒரேயடியாக மறுத்து விடாமல் அவன் யோசிக்க அவகாசம் கேட்டதே க்ரிஷுக்கு நல்ல விஷயமாகத் தோன்றியது. சரியென்றான்...


சிந்து அந்த ஐவர் பற்றிய விரிவான விவரங்களைப் படித்து முடித்த போது நள்ளிரவாகி இருந்தது. அந்த ஐவரையும் அவள் மிகநெருங்கிப் பழகி அறிந்தவள் போல் இப்போது உணர்ந்தாள். அந்த அளவு அவர்களை அவள் மனதில் கச்சிதமான சித்திரங்களாக விஸ்வம் எழுப்பி இருந்தான். அந்த ஐந்து பேரில் அவள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆட்களாக இரண்டு பேரை அபாயக்குறி போட்டு விஸ்வம் எச்சரித்திருந்தான். ஒன்று க்ரிஷ். இரண்டாவது ஹரிணி. க்ரிஷ் குறித்த விவரங்களின் இறுதியில் “மிக எளிமையாகவும், நல்லவனாகவும் தோன்றினாலும் அபாயமானவன்” என்று விஸ்வம் எழுதியிருந்தான். ஹரிணி குறித்த விவரங்களின் இறுதியில் “துணிச்சல்காரி.   புத்திசாலி. இவளிடம் எச்சரிக்கை தேவை” என்று எழுதி இருந்தான்.

ஆரம்பத்தில் அவள் செய்ய வேண்டிய வேலைகளை விஸ்வம் தெளிவாகச் சொல்லி இருந்தாலும் முடிவில் என்ன செய்ய வேண்டும் என்று அவளிடம் சொல்லி இருக்கவில்லை. அதைப் பிற்பாடு தேவையான நேரத்தில் சொல்வதாகத் தெரிவித்திருந்தான். இந்த ஐந்து பேருமே விஸ்வத்தின் எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை. ஐவரில் யார் விஸ்வத்தின் எதிரி என்று சிந்துவுக்குக் கணிக்க முடியவில்லை. பத்மாவதியைத் தவிர யார் வேண்டுமானாலும் விஸ்வத்தின் எதிரியாக இருக்கலாம் என்று தோன்றியது.

அவள் உள்மனம் ஏனோ இந்த வேலை வேண்டாம் என்று எச்சரித்தது. இது வரை இப்படி அவளுக்குத் தோன்றியதில்லை. அவள் அந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியபடி அடுத்து அது சம்பந்தமாக அவள் செய்ய வேண்டியவற்றை நிதானமாகப் பட்டியல் போட ஆரம்பித்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. உலகில் ஒவ்வொன்றும் வருவதற்க்கும், நம்மை விட்டுப் போவதற்கும் ஒரு காலம் இருக்கிறது"‌‌‌‌...
    "தீமை தடுக்காமல் இருப்பதன் ஆபத்து எப்படி பட்டது?"

    போன்றவற்றை பற்றிய கிரிஷின் விளக்கம் அருமை....

    ReplyDelete
  2. Fantastic dialogues. What a writing! Hats off sir.

    ReplyDelete
  3. Amazing dialogues.. Great

    ReplyDelete
  4. ”நல்லவர்களான நாம் அமைதியையே விரும்புகிறோம். அதைப் பாதிக்கிற எதிலும் ஈடுபடுவதை நாம் விரும்புவதில்லை. ஆனால் தீமையை வளர விட்டால் நாம் என்றும் அமைதியுடன் வாழ முடியாது. தீமையை ஆதரிப்பது தான் ஆபத்து என்பதில்லை. எதிர்க்காமல் விலகி நிற்பதும் வளர்ப்பது போல் ஆபத்து தான்.__
    இந்த காலகட்டத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு சாமான்ய மனிதனும் கவனத்தில் கொள்ள வேண்டிய வாசகங்கள் ...

    ReplyDelete
  5. இன்றய கோரோனா காலகட்டத்தில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் அதை எடுத்துறைப்பதாகவெ உள்ளது. நம் நிலை கையறுநிலையாக,செய்ஙதறியாமல் தவறுகளைதட்டிகேட்கமுடியமல் உள்ளது

    ReplyDelete