அந்த மாளிகையை விட்டுப் பணியாளுடன் வெளியே வந்த ஹீராஜி ஆக்ராவை
விட்டுக் கிளம்பும் முன் சிவாஜியின் ஆணைப்படி ராம்சிங்கைச் சென்று சந்தித்தான். சிவாஜியைச்
சிறைப்படுத்தியதைத் தடுக்க முடியாத வருத்தத்தில் நீண்ட நாட்களாக ராம்சிங் சிவாஜியைச்
சென்று பார்க்கவில்லை. சக்கரவர்த்தியை எதிர்க்கவும் முடியாமல், சிவாஜியைக் காப்பாற்றும்
வழியையும் அறியாமல் இருந்த ராம்சிங் அவ்வப்போது ஆட்கள் மூலமாக மட்டுமே சிவாஜியின் நலத்தை
விசாரித்தபடி இருந்தான். சிவாஜியின் கடுமையான வயிற்று வலி பற்றிக் கேள்விப்பட்ட போது
கூட அவன் போலத்கானிடம் தான் விசாரித்தான்.
இரண்டு நாட்கள் முன்பு போலத்கான் சிவாஜி நலமடைந்தான் என்று தெரிவித்ததில் ராம்சிங்
பெரும் நிம்மதி அடைந்திருந்தான்.
ஹீராஜியின்
வரவு ராம்சிங்கை துணுக்குறச் செய்தது. சிவாஜிக்கு ஏதேனும் புதிதாகப் பிரச்னைகள் இருக்குமோ,
மீண்டும் நோய்வாய்ப்பட்டிருப்பானோ, வேறேதும் அசம்பாவிதம் நேர்ந்திருக்குமோ என்றெல்லாம்
அவன் சந்தேகப்பட்டான். இல்லாவிட்டால் சிவாஜி ஆளனுப்பி இருக்க மாட்டான் என்று அவனுக்குத்
தோன்றியது.
“வாருங்கள்
ஹீராஜி. அரசர் நலம் தானே?” என்று சந்தேகத்துடனும் கவலையுடனும் அவன் கேட்டான்.
ஹீராஜி
புன்னகையுடன் சொன்னான். “அவர் நம்பும் இறைவன் அருளால் அவர் நலமாகவே இருப்பார் என்று
நம்புகிறேன் இளவலே”
அந்தப்
பதில் ராம்சிங்கைக் குழப்பியது. “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் மாளிகையிலிருந்து
தானே வருகிறீர்கள்?”
“ஆம்
இளவலே. மாளிகையிலிருந்து தான் வருகிறேன். ஆனால் அரசர் மாளிகையில் இல்லை”
ராம்சிங்
பதறிப்போனான். சக்கரவர்த்தி மாளிகையிலிருந்தும் சிவாஜியை அப்புறப்படுத்தி விட்டாரோ
என்று பயந்தவனாக, பதற்றம் குறையாமல் கேட்டான்.
“பின் எங்கே இருக்கிறார் அரசர்? தயவு செய்து விரிவாகச் சொல்லுங்கள்”
ஹீராஜி
சிவாஜி தப்பித்த கதையைச் சொன்னான். ராம்சிங்கின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அளக்க
முடியாததாக இருந்தது. கண்கள் லேசாகக் கலங்கச் சொன்னான். “என்னால் அரசருக்கு உதவ முடியா
விட்டாலும் இறைவன் அவருக்கு உதவியிருக்கிறானே அது போதும். இறைவனின் கருணையே கருணை”
ராம்சிங்கின்
மனநிலையை மிகச்சரியாக யூகிக்க முடிந்திருந்ததால் தான் சிவாஜி ஹீராஜியிடம் ராம்சிங்கைச்
சந்தித்துத் தெரிவித்து விட்டுச் செல்வது தான் முறையாக இருக்கும் என்று சொல்லி இருந்தான்.
ராம்சிங்கின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. மெல்லக் கவலையுடன் சொன்னான். “சக்கரவர்த்திக்குத்
தகவல் தெரியும் போது சும்மா இருக்க மாட்டார். சாம்ராஜ்ஜியம் எங்கும் தேடுதல் வேட்டை
சீக்கிரமே ஆரம்பித்து விடும்…..”
ஹீராஜி
சொன்னான். “இதுவரை அவரைக் காப்பாற்றிய இறைவன் இனியும் காப்பார் என்று நம்புவோம் இளவலே.
நானும் இங்கிருந்து சீக்கிரமே கிளம்ப அனுமதியுங்கள். அதிக காலம் இந்த நகரத்தில் இருப்பது
எனக்கும் ஆபத்து”
ராம்சிங்
சொன்னான். “உடனே கிளம்புங்கள் ஹீராஜி. இங்கே உங்களை அனுப்பித் தகவல் தெரிவித்ததிலேயே
அரசரின் பெருந்தன்மை தெரிகிறது. அவரைச் சந்தித்தால் அவருக்கு உதவ முடியாத துர்ப்பாக்கியத்திற்கு
நான் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவியுங்கள். முடிந்தால் என்னை
மன்னிக்கச் சொல்லுங்கள்”
மாளிகையின் காவலர்கள் வழக்கப்படி மதிய நேரத்தில் ஒருமுறை உள்ளே
சென்று பார்த்த போது சிவாஜியின் அறையில் யாரும் இல்லை. கட்டில் காலியாக இருந்தது. மாளிகையினுள்
வேறெங்காவது சிவாஜி இருக்கிறானா என்ற சந்தேகத்தில் சென்று தேடியவர்கள் மாளிகையில் சிவாஜி
மட்டுமல்லாமல் யாருமே இல்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்தத் தகவலை போலத்கானிடம்
சென்று தெரிவித்த போது அவன் தலையில் பேரிடி விழுந்தது போல் உணர்ந்தான். வியர்த்து விறுவிறுத்து
பதறிப் போய் ஓடி வந்து அவனும் மாளிகை எங்கும் தேடினான். காவலர்கள் சொன்னது போல் சிவாஜியும்
இல்லை அவன் ஆட்களும் இல்லை.
சக்கரவர்த்தியிடம்
ஓடோடிப் போய்த் தகவலைச் சொன்ன போது போலத்கான் அச்சத்தின் உச்சத்தில் இருந்தான். கிடைக்கின்ற
தண்டனை என்னவாக இருக்கும் என்ற எண்ணமே இமயமாக அவன் மனதை அழுத்தியது.
ஔரங்கசீப்
கண்களைச் சுருக்கிக் கொண்டு போலத்கானைப் பார்த்தான். அவன் முதல் சந்தேகம் போலத்கான்
மீதே இருந்தது. இவனே அவன் தப்பிக்க வழி செய்திருப்பானோ என்ற சந்தேகத்துடன் பார்த்தான்.
போலத்கானுக்கு ஔரங்கசீப்பின் சந்தேகம் புரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. புரிந்தவுடன்
நடுநடுங்கிப் போனான் அவன். அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.
ஔரங்கசீப்
கேட்டான். “அவன் எப்போது தப்பித்தான்?”
போலத்கான்
அழாதகுறையாகச் சொன்னான். “தெரியவில்லை சக்கரவர்த்தி. தெரிந்திருந்தால் என் உயிரைப்
பணயம் வைத்தாவது தடுத்திருப்பேனே”
ஔரங்கசீப்
வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “கடைசியாக எப்போது அவனைப் பார்த்தாய்?”
போலத்கான்
சொன்னான். “காலையில் அவர் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் சக்கரவர்த்தி.”
ஔரங்கசீப்
கேட்டான். “அதன் பின் அவன் எப்படித் தப்பித்தான்?”
போலத்கான்
சொன்னான். “அது தான் விளங்கவில்லை சக்கரவர்த்தி. காவலர்கள் அனைவரையும் விசாரித்து விட்டேன்.
காவலில் எந்தத் தளர்வும் இருக்கவில்லை”
ஔரங்கசீப்
கேட்டான். “அப்படியானால் சிவாஜி காற்றில் கரைந்திருப்பானோ?”
சக்கரவர்த்தியின்
ஏளனமும் போலத்கானுக்கு சில கணங்கள் கழித்தே பிடிபட்டது. சிவாஜியைப் பலரும் மாயாவி என்றழைப்பதால்
எந்த மாய வித்தையை அவன் பயன்படுத்தி இருப்பானோ தெரியவில்லை என்று உள்ளுக்குள் புலம்பினாலும்
மௌனமாகச் சக்கரவர்த்தியைப் பார்த்தபடி பரிதாபமாக நின்றான்.
ஔரங்கசீப்
கேட்டான். “காலையில் சிவாஜி படுத்திருந்ததைப் பார்த்தேன் என்றாயே. அவன் முகத்தைப் பார்த்தாயா,
இல்லை படுக்கையில் யாரோ படுத்திருந்ததைப் பார்த்தாயா?”
“படுத்திருந்தது
சிவாஜி தான் சக்கரவர்த்தி. அவரது முகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் அவர் கையிலிருந்த
முத்திரை மோதிரத்தை நன்றாகப் பார்த்தேன்”
“என்னுடைய
முத்திரை மோதிரத்தை உன் விரலுக்குப் போட்டால் நீ சக்கரவர்த்தியாகி விடுவாயா போலத்கான்?”
ஔரங்கசீப்பின்
கேள்விக்குப் பிறகு தான் காலையில் பார்த்தது சிவாஜியாக இல்லாமலும் இருந்திருக்கலாம்
என்ற சந்தேகம் மெல்ல போலத்கானுக்கு வந்தது. அவன் திகைப்புடன் சக்கரவர்த்தியைப் பார்த்தான்.
ஔரங்கசீப்
கேட்டான். “சிவாஜியின் முகத்தை நீ கடைசியாகப் பார்த்தது எப்போது?”
“நேற்று
மதியம் சக்கரவர்த்தி. அவர் மதியம் வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்….”
ஔரங்கசீப்
சொன்னான். “அங்கிருந்து ஆரம்பித்துச் சொல். என்ன நடந்தது?”
போலத்கான்
எல்லாவற்றையும் சொன்னான். அவன் முகத்தில் பதித்த விழிகளை ஔரங்கசீப் ஒரு கணம் கூட விலக்கவில்லை.
முழுவதும் கேட்டுக் கொண்ட பிறகு ஔரங்கசீப் “நேற்று மதியம் காவல் இருந்த உன் காவலர்களில்
சிறிதாவது அறிவிருப்பவன் எவனாவது ஒருவனை உடனே இங்கே வரவழை.” என்று கடுமையாகச் சொன்னான்.
போலத்கான்
முதல் அடுக்குக் காவலில் இருந்த ஒருவனை உடனே வரவழைத்தான். அவனிடம் நேற்று மதியத்திலிருந்து
நடந்ததை எல்லாம் முழுவதும் கேட்டறிந்த ஔரங்கசீப் உடனே கேட்டான். “அந்த ஐந்து கூடைகளைப்
பரிசோதித்து தான் அனுப்பினோம் என்று சொன்னாயே. ஒவ்வொரு கூடையையும் பரிசோதித்தீர்களா,
இல்லை ஏதோ ஒன்றை மட்டும் பரிசோதித்தீர்களா? பரிசோதித்ததும் எப்படிச் செய்தீர்கள்?”
அந்தக்
காவலன் விவரித்தான். ஔரங்கசீப் போலத்கானையும் அந்தக் காவலனையும் கடும் சினத்தோடு பார்த்துச்
சொன்னான். “முட்டாள்களே சிவாஜி அந்தக் கூடைகளில் முதலும் கடைசியும் தவிர்த்து நடுவில்
இருந்தவற்றில் தான் ஒளிந்து கொண்டு தப்பித்திருக்கிறான். நேற்று மாலையே அவன் தப்பித்துப்
போய் விட்டான்….”
ஔரங்கசீப்பை
அவர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
ஔரங்கசீப் உடனடியாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்துப்
பேசினான்.
“நேற்று
மாலையில் சிவாஜி தப்பித்துச் சென்றுவிட்டான். எத்தனை தான் அவன் வேகமாகப் போனாலும் நம்
சாம்ராஜ்ஜியத்தைக் கடக்க அவனுக்குச் சில மாதங்களாவது கண்டிப்பாகத் தேவைப்படும். நம்
ராஜ்ஜியத்திலேயே பயணம் செய்து கொண்டிருப்பவனைப் பிடிக்க நாம் பெரிதாகச் சிரமப்பட வேண்டியதில்லை.
ஒருசிலர் கண்களிலிருந்து சிவாஜி தப்ப முடியும். ஆனால் எல்லார் கண்ணிலும் இருந்து அவன்
நிச்சயம் தப்ப முடியாது. அவனைப் பிடித்து நம்மிடம்
ஒப்படைப்பவர்களுக்கு அவர்கள் கனவிலும் நினைத்திராத அளவு தங்கமும், வெள்ளியும், செல்வமும்,
பூமியும் வெகுமதியாக அளிக்கப்படும் என்று உடனே அறிவியுங்கள். இந்தச் செய்தி நம் ராஜ்ஜியத்தின்
மூலை முடுக்கெல்லாம் சென்று எட்ட வேண்டும்.”
(தொடரும்)
என்.கணேசன்