சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, March 20, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?





டிசம்பர் 2019ல் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் (COVID-19) இன்று மற்ற உலக நாடுகளுக்கெல்லாம் பரவி உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு இன்னும் அதிகாரபூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலைமையில் ஊடகங்களில் பலரும் பலவிதமான பயமுறுத்தல்களையும், வைத்தியங்களையும் பரப்பி குழப்பங்களையும், பீதியையும் மக்களிடையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு வந்தவண்ணம் இருக்கும் ஏராளமான தகவல்களில் எத்தனை உண்மை, எத்தனை பொய், எத்தனை அவசியம், எத்தனை அனாவசியம் என்று நமக்குக் குழப்பமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சொல்லும் தகவல்களில் மிக முக்கியமான, அடிப்படையாய் அறிய வேண்டிய தகவல்களை மட்டும் எளிமையாகவும் சுருக்கமாகவும் உள்ளது உள்ளபடி பார்ப்போம்.


அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், களைப்பு, வறட்டு இருமல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், தொண்டை வலி, பேதி ஆகியவை. இவை ஆரம்பமாகி அதிகரித்துக் கொண்டே செல்வது தான் கொரோனாவின் தனித்தன்மையாக இருக்கிறது. உடலுக்குள் நுழைந்த பின் இரண்டு வாரங்கள் வரை இருக்கும் இந்த வைரஸ் பொதுவாக ஐந்து நாட்களுக்கு மேல் தான் அதிகமாய் பாதிக்க ஆரம்பிக்கிறது.


குணமாகுமா?

பாதிக்கப்படுபவர்களில் ஐந்து அல்லது ஆறு பேரில் ஒருவர் தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலவரம் தற்போது இருக்கிறது. மிக வயதானவர்கள், நோயெதிர்ப்புசக்தி குறைவானவர்கள், முன்பே பல நோய் பிரச்சினைகளின் காரணமாகப் பலவீனமாக இருப்பவர்கள் தான் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. மற்றவர்கள், அதாவது சுமார் 80 சதவீதம் பேர், இரண்டு வாரங்கள் கழித்து மெள்ள குணமடைய ஆரம்பிக்கிறார்கள்.

ஆண்டிபயாடிக் மருந்துகள் இந்த வைரஸிலிருந்து பாதுகாக்காது என்கிறார்கள். பலர் சொல்லும் இயற்கை மருத்துவமும் முழுவதுமாக உடனடியாகக் குணப்படுத்தும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.


பரவுவது எப்படி?

முக்கியமாகவும், அதிகமாகவும் பரவுவது பாதிக்கப்பட்டவர்களின் இருமல் மற்றும் தும்மலாலும் தான். அந்தச் சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தெறிக்கும் நீர்த்திவலைகள் அடுத்தவர் கையில் படநேர்ந்து, அவர்கள் கையால் வாய், மூக்கு, கண்களைத் தொட்டு அந்த வகையில் அவர்கள் உடலுக்குள்ளும் அந்த வைரஸ் பிரவேசிக்கிறது. பின் பாதிக்கிறது. மற்ற வகையில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள்.


பாதுகாத்துக் கொள்வது எப்படி?     

இந்த வைரஸ் நம் உடலுக்குள் நுழைய முடிவது நம் கைகள் மூலமாகத் தான் என்பதால் கைகளை அடிக்கடி நன்றாகச் சோப்பு போட்டுக் கழுவிக் கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் வைரஸ்களை அழிக்க முடிந்தவை என்பதால் அவற்றைக் கைகளில் தடவியும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கைகளைக் கழுவாமல் வாய், மூக்கு, கண்களுக்குக் கொண்டு செல்லக்கூடாது.

இருமும் அல்லது தும்மும் மனிதர்களிடமிருந்து குறைந்தபட்சமாக நான்கடிகளாவது தள்ளி நிற்பது நல்லது. ஐந்தாறு அடிகள் தள்ளி நிற்பது நல்ல பாதுகாப்பு.

கைகுலுக்குவதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாகக் கைகூப்பி வணக்கம் தெரிவியுங்கள்.

இந்த வைரஸின் தாக்கம் தணியும் வரை பலர் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது உத்தமம்.

எந்தெந்தப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து அந்த இடங்களுக்குச் செல்வதையும் முடிந்த வரை தவிருங்கள்.



மாஸ்க்குகள் அவசியமா?


இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, பாதிக்கப்படுபவர்களுடன் நெருங்கியிருக்க வேண்டிய சூழலில் இருந்தாலோ (மருத்துவர்கள், நர்ஸ்கள், உடனிருக்கும் உறவினர்கள்) மாஸ்க்குகள் அணிவது அவசியம். அது நோய்க்கிருமிகளை மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உதவும். மற்றவர்கள் அணிய வேண்டிய அவசியமில்லை.


இப்படிப் பரவாது

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காற்றில் பரவாது. அவர்கள் இருந்த இடத்திற்குச் சிறிது நேரம் கழித்துச் செல்வதாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருள்களை உலர்ந்த நிலையில் பிறகு நாமும் பயன்படுத்துவதாலோ இந்த வைரஸ் தொற்றிக் கொள்ள வழியில்லை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றாலும் கூட, பாதுகாப்பாகத் தொலைவில் இருக்கும் வரை பயப்பட வேண்டியதில்லை.

பயம் எதற்கு?

கொரோனா வைரஸ் பரவும் வேகம் தான் இப்போது அனைவரையும் பயப்பட வைக்கிறது. பாதிக்கப்படும் நபர்களில் இருபது சதவீதம் ஆட்கள் இறக்கவும் கூடும், மீதி ஆட்கள் மூலம் இந்த வைரஸ் அதிவேகமாகப் பரவவும் கூடும் என்கிற நிலைமை நம் நாட்டைப் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்துவது இயல்பே. எனவே நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அடுத்தவர்களுக்குப் பரப்பாமல் இருக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.


வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ் பாதிப்பின் தன்மைகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். பின் நம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதோடு நம் மூலமாக அடுத்தவர்களுக்குப் பரவாதபடி நாம் தனிமையில் இருக்க வேண்டும். தவிர்க்க முடியாமல் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தாலும் எட்டி இருந்து எந்த வகையிலும் மற்றவர் பாதிக்கப்படாதபடி பார்த்துக் கொள்வது முக்கியம்.


முக்கியமாக இருமும் போதோ தும்மும் போதோ நீர்த்திவலைகள் தெறிக்காதபடி கைக்குட்டையால் மறைத்துக் கொள்வது மிக அவசியம்


பயணம் போவதோ, ஆட்கூட்டத்தில் சேர்வதோ கூடவே கூடாது. மிக நெருக்கமாக இருக்கையில் மற்றவர்களூக்கும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்படுபவர்கள் வெகுசிலராக இருக்கும் வரை தான் அரசாங்கமும் தனிமைப்படுத்தி குணப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கில் ஆகி விட்டால் அதற்கான வசதியும், இடமும் இங்கு கிடையாது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே பரவாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.


சமூக விலகல் ஏன் முக்கியம்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபட்டவர்களுக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்க சுமார் ஐந்து நாட்கள் வரை ஆகலாம். ஆனால் தெரிய ஆரம்பிப்பதற்குள் ஒவ்வொருவரும் எத்தனையோ பேருக்குப் பரப்பிவிட வாய்ப்பிருக்கிறது. அந்த ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிய ஆரம்பிப்பதற்குள் மற்றவர்களுக்குப் பரப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒருவரால் சில நாட்களில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் நலமாய் இருப்பதாய் நினைப்பவர்களும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை வெளியே செல்வதைத் தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே இருந்து கொள்வது அவர்களுக்கும் பாதுகாப்பு, சமூகத்திற்கும் பாதுகாப்பு. 



இந்த வகையில் நாம் அனைவரும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் அதிகமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை. குறைந்த அளவில் பாதிக்கப்படுபவர்களும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று குணம் பெற்று விட முடியும்.

என்.கணேசன்


7 comments:

  1. வரதராஜன்March 20, 2020 at 9:25 PM

    தேவையானதை மட்டும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதிகமாகச் சொல்லிக் குழப்பாமல் பயமுறுத்தாமல், அலட்சியப்படுத்தவும் கூடாதென்று சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
  2. உலக நாடுகள் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தில் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இன்றையநிலை இந்திய நாட்டிலே பரவிக்கொண்டு வருகிறது அந்த வகையில் மிகத் தெளிவான முறையில் ஒரு பாமரனும் சிந்திக்க கூடிய வகையில் மிகப்பெரிய ஒரு அறிவுரை வழங்கி இருக்கிறீர்கள் உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி, ஜே எம் பாஷா

    ReplyDelete
  3. Precise and very useful information. Thanks sir.

    ReplyDelete
  4. ஒவ்வொருவரும் அறிய வேண்டியதை ரத்தினச்சுருக்கமாகச் சொல்லியிருக்கும் விதம் அருமை. நன்றி ஐயா
    ரத்தினவேலு

    ReplyDelete
  5. உண்மையில் அருமையான பதிவு வரவேற்கிறேன் நன்றி

    ReplyDelete
  6. https://news.yahoo.com/study-american-journal-gastroenterology-reveals-164000171.html

    *KEY MESSAGE* ;
    One may not have respiratory symptoms, such as, fever, cough, shortness of breath and breathing difficulties, during the onset of Corona virus infection.

    Many patients in Wuhan, China; infected with corona virus had symptoms, such as;
    Anorexia
    Diarrhoea,
    Vomiting.
    Abdominal stomach pain;
    before developing Respiratory symptoms.

    Hence, the moral of the story is:

    Seek Medical Attention, if you have ONLY digestive symptoms and politely inform the doctor about this article, published in the prestigious medical journal, viz.
    American Journal of Gastroenterology.

    Please do not ignore,
    if your family member complains about digestive symptoms.

    It could be related to Corona virus infection.

    Good Luck !

    ReplyDelete
  7. இன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரையும் அரசாங்கம் வீட்டில் இருக்கும் படி கேட்டுக் கொண்டது....
    அதை சிலர் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்வதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது....

    நாம் அனைவரும் இந்த கிருமிக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு மனிதநேயம் காப்போம்...

    ReplyDelete