சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 5, 2020

இல்லுமினாட்டி 39



விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான். “இந்த இடம் இல்லுமினாட்டியின் கோயிலாக ஒரு காலத்தில் இருந்தது என்கிறாய். சர்ச் ஆகி இப்போது சில காலமாய் வழிபாடு நடத்தப்படாமல் இருக்கிறது என்கிறாய். ஜெர்மனிக்குள் இல்லுமினாட்டி ஆட்கள் நம்மைத் தேடுவதாக இருந்தால் இந்த மாதிரியான இடங்களுக்குத் தானே முதலில் வருவார்கள்?. பின் எப்படி  ஒளிந்து கொள்ள இதை விட நல்லப் பாதுகாப்பான இடம் கிடைக்காது என்கிறாய்?”

ஜிப்ஸி சொன்னான். “உண்மை தான். ஆனால் அவர்கள் இங்கே வந்து பார்த்தாலும் நாம் அவர்களுக்குப் பார்க்கக் கிடைக்க மாட்டோம்...”

எப்படிச் சொல்கிறாய்?’ என்பது போல விஸ்வம் பார்த்தான். ஜிப்ஸி அவனிடம் சொன்னான். “இங்கே ஒரு ரகசியப் பாதாள அறை இருக்கிறது. அது இல்லுமினாட்டிக்கே தெரியாது....”

இதென்ன புதுக்கதைஎன்று விஸ்வம் நினைத்தான். எல்லாவற்றையும் ஒரேயடியாகச் சொல்லாமல் தவணை முறையில் ஜிப்ஸி சொல்வது அவனுக்கு எரிச்சலைத் தந்தது. அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போல் ஜிப்ஸி சொன்னான். “நீ ஏன்  கோபப்படுகிறாய்? கோபம் சக்தி விரயம் அல்லவா? ஒவ்வொரு சக்தியையும் சேமித்து வைக்க வேண்டிய நிலைமையில் இருக்கும் நீ பொறுமை இழக்கலாமா?”

விஸ்வம் சில வினாடிகள் கண்களை மூடித் திறந்து புன்னகைத்தான். “நீ சொல்வது உண்மை. உடல் பலவீனமாக இருக்கும் போது மனமும் பலவீனம் ஆகி பொறுமையும் போய் விடுகிறது. பொறுமை இழந்து சக்திகளை விரயம் செய்ய முடிந்த அளவுக்கு நான் மேலான நிலைமையில் இல்லை. இனி எச்சரிக்கையாக இருக்கிறேன். சரி நீ சொல். இல்லுமினாட்டியின் கோயிலில் இல்லுமினாட்டிக்கே தெரியாத ஒரு ரகசியப் பாதாள அறை இருப்பது எப்படி?”

ஏன் கோபப்படுகிறாய்?’ என்று கேட்டால் கூடுதலாய் கோபப்படும் சாதாரண மனிதனாய் இல்லாமல் சொன்னதை விஸ்வம் ஏற்றுக் கொண்ட விதத்தை மெச்சுவது போல் பார்த்த ஜிப்ஸி தொடர்ந்தான். ”நான் முன்பு இது ஃப்ரீமேசனின் கோயிலாக இருந்தது, அவர்கள் ரகசியச் சடங்குகள் இங்கே அதிகம் நடந்தது  என்று சொன்னேனில்லையா. அவர்களில் உயர்வான நிலையை எட்டியவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்தார்கள். அவர்கள் சில அதிரகசியச் சடங்குகளில் ஈடுபட்டார்கள். அதை மற்ற சாதாரண உறுப்பினர்களுக்குத் தெரியும்படி செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனால் அந்தக் கோயிலைப் புனரமைத்த போது அதிரகசியச் சடங்குகள் செய்வதற்கென்று அவர்கள் ஒரு ரகசியப் பாதாள அறையைச் சேர்த்துக் கட்டினார்கள். அந்தச் சடங்குகள் பெரும்பாலும் நள்ளிரவிலிருந்து அதிகாலைக்குள் இந்த ரகசியப் பாதாள அறையில் நடந்தன. அந்தச் சடங்குகள் பெரும்பாலும் நள்ளிரவிலிருந்து அதிகாலைக்குள் இந்த ரகசியப் பாதாள அறையில் நடந்தன. ஃப்ரீமேசனும் இல்லுமினாட்டியும் இணைந்த பிறகு ஒரு முறை கூட இந்த ரகசியப் பாதாள அறை பயன்படுத்தப்படவில்லை. சர்ச் ஆக இது மாறிய பிறகும் ரகசியப் பாதாள அறை யாருக்கும் தெரிய வாய்ப்பு வரவில்லை. இல்லுமினாட்டி தங்களுடைய கோயில்களை எல்லாம் ஏதாவது வழியில் தங்களுக்கு வேண்டியபடி நூலகமாகவோ, அருங்காட்சியகமாகவோ, ஏதாவது அலுவலகமாகவோ மாற்றி வைத்து இப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சர்ச் ஆகி விட்ட இந்த இல்லுமினாட்டிக் கோயிலைத் திரும்பத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்களும் முயற்சி எடுக்கவில்லை...”

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ என்று ஜிப்ஸியை விஸ்வம் கேட்க நினைத்தாலும் கேட்காமல் விட்டு விட்டான். ஜிப்ஸி வெளிப்படையாகப் பதில் சொல்வான் என்று அவனுக்குத் தோன்றவில்லை.

ஜிப்ஸிவா. பாதாள அறையைப் பார்ப்போம்என்று சொல்லி விட்டு மேடைப்பகுதிக்குப் போக விஸ்வம் அவனைப் பின் தொடர்ந்தான். ஜிப்ஸி உடைந்த ஏசு கிறிஸ்து சிலைக்குப் பின் இருக்கும் லாஸ்ட் சப்பர்ஓவியத்தின் கீழே வலதுபுற மூலையில் தடவினான். சிறிய துளை தெரிந்தது. அதனுள் விரலை விட்டு சற்று சிரமப்பட்டு ஒரு பித்தளைச் சாவியை வெளியே எடுத்தான், பின் மேடைப்பகுதியின் வலது புற மூலையில் தரை விரிப்பை மேலே தூக்கினான். அதன் கீழே தரையில் இரண்டடிக்கு இரண்டடி இருக்கும் ஒரு சதுர மரப்பலகை இருந்தது. அங்கிருந்த ஒரு துணியால் அந்த மரப்பலகையில் இருக்கும் தூசியைத் துடைத்தான். மரப்பலகையின் ஓரத்தில் ஒரு சாவித் துவாரம் தெரிந்தது. அந்தச் சாவியை அந்த துவாரத்தில் நுழைத்துத் திருப்பிய பின் இழுத்தான். மரப்பலகை கையோடு வந்தது. கீழே படிகள் தெரிந்தன.

இருவரும் அதன் வழியாக இறங்கினார்கள். பழைய உடலில் இருந்திருந்தால் விஸ்வம் விளக்கு இல்லாமலேயே தன் சூட்சுமப்பார்வையாலேயே பாதாள அறையை அலசி ஆராய்ந்திருப்பான். இப்போது அவனுக்கு டார்ச் லைட் தேவைப்பட்டது. ஜிப்ஸி அவன் கையில் டார்ச் லைட்டைத் தந்தான்.

டார்ச் லைட் விளக்கொளியில் தூசி மண்டிய பாதாள அறை கும்மிருட்டில் இருந்து மீண்டது. சுமார் முப்பது அடி நீளமும், இருபத்தியோரு அடி அகலமும் கொண்ட பாதாள அறையின் சுவர்களிலும் ஓவியங்கள், சின்னங்கள், குறியீடுகள், எழுத்துக்கள் எல்லாம் இருந்தன. ஒரு உயரமான மரக்கட்டில்  ஓரத்தில் இருந்தது.   

ஜிப்ஸி அவனிடம் சொன்னான். “நீ பார்த்து விட்டு மேலே வா. நான் மேலே இருக்கிறேன்

விஸ்வம் தலையசைத்தான். ஜிப்ஸி போய் விட்டான். விஸ்வம் முதலில் சுவர்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தான். ஒரு சுவரில் பிரமிடு நெற்றிக்கண் பெரியதாக வரையப்பட்டிருந்தது. பிரமிடுக்குள் தெரிந்த அந்தக் கண்ணில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஈர்ப்பை விஸ்வம் உணர்ந்தான். இந்தப் பிரமிடு நெற்றிக் கண்ணின் சக்தி வீச்சில் அவன் முன்பு ஏமாந்திருக்கிறான் என்பதால் அவன் அதை மன உறுதியுடன் பார்த்தபடி சிறிது நேரம் நின்றான். அந்த பிரமிடு நெற்றிக்கண் சுவருக்கு நேர் எதிரில் உள்ள சுவரில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. மற்ற இருபக்கத்துச் சுவரிலும் ஓவியங்களும் சின்னங்களும் வரையப்பட்டிருந்தன. ஒரு சுவரில் ஃப்ரீமேசன் முறைப்படி ஒரு இளைஞன்  தீட்சை பெறும் ஓவியம் இருந்தது. தீட்சை பெறப்போகும் இளைஞனின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. அதற்கான சடங்குகளுக்கான மண்டலம் கீழே வரையப்பட்டிருந்தது. எதிரில் குருவைப் போன்ற மனிதன் ஒருவன் அமர்ந்திருந்தான். வேறுசிலர் நின்றிருந்தார்கள். மற்ற சின்னங்களும், ரகசியக் குறியீடுகளும் சுவர்களில் வரையப்பட்டிருந்தன. எல்லாம் மனித சக்திக்கு மீறிய சக்திகளைக் குறிப்பதாகவே இருந்தது. எத்தனையோ சக்திகளை வசப்படுத்தி வாழ்ந்திருந்த விஸ்வத்திற்கு அதில் பெரிய ஈடுபாடு தோன்றவில்லை.

பிரமிடு நெற்றிக்கண் வரையப்பட்டிருந்த சுவருக்கு எதிர்ச் சுவருக்கு விஸ்வம் வந்தான். என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்த்தான். ஜெர்மானிய தத்துவ ஞானி கதே அந்தக் கோயிலில் இருந்து எழுதியதாக விஸ்வம் சொன்ன  "Masonic Lodge" கவிதை அந்தச் சுவரில் எழுதப்பட்டிருந்தது.

விஸ்வம் என்றுமே கவிதைகளை ரசித்ததில்லை. கவிதைகளின் மென்மை அவனை எப்போதுமே அசைத்ததில்லை. ஆனாலும் ஏதாவது ரகசியத் தகவல்கள் கதே எழுதிய இந்தக் கவிதையில் இருக்கக்கூடும் என்று தோன்றியதால் அந்தக் கவிதையைப் படிக்க ஆரம்பித்தான்

Masonic Lodge
The Masons's ways are A Type of Existence
And his persistence Is as the days are
Of men in this world. The future hides it

Gladness and Sorrow, We press still thorow,
Naught that abides in it Daunting us - onward.
And Solemn before us Veiled, the dark portal,

Goal of all mortal; Stars are silent o'er us
Graves under us silent. While earnest thou gazest
Comes boding of terror, Comes phantasm and error

Perplexes the bravest With doubt and misgiving.
But heard are the voices - Heard are the Sages,
The Worlds and the Ages; "Choose well; your choice is

"Brief and yet endless; "Here eyes do regard you
"In eternity's stillness; "Here is all fullness,
"Ye have to reward you, "Work, and despair not."

கடைசி ஐந்து வரிகள் அவனுக்காகவே எழுதப்பட்டிருப்பது போல் ஒரு உணர்வு அவனுக்குள் எழுந்தது. டார்ச் லைட்டை அணைத்து விட்டு அந்த இருட்டில் கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். பின் மறுபடி கண்களை அவன் திறந்த போது டார்ச் லைட் இல்லாமலேயே அந்தச் சுவரின் மேல் அந்தக் கவிதை படிக்குமளவுக்கு மங்கலான ஒளி விழுந்து கொண்டிருந்தது. விஸ்வம் திகைத்தான். எங்கிருந்து வருகிறது இந்த ஒளி? திரும்பிப் பார்த்தான். பிரமிடு நெற்றிக்கண்ணிலிருந்து தான் அந்த ஒளி வந்து கொண்டிருந்தது. சில வினாடிகள் நீடித்த ஒளி பின் மங்கி மறைந்து மறுபடியும் இருள் சூழ்ந்தது

(தொடரும்)



என்.கணேசன்


9 comments:

  1. Mysterious experience. Whether viswam change?

    ReplyDelete
  2. இன்றைய பதிவு மிகவும் அருமை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது.

    ReplyDelete
  3. ஃப்ரீமேசனும் இல்லுமினாட்டியும் இணைந்த பிறகு ஒரு முறை கூட இந்த ரகசியப் பாதாள அறை பயன்படுத்தப்படவில்லை.

    This sentence repeated twice.

    ReplyDelete
  4. Interesting...... எல்லா சக்திகளும் விஸ்வத்திற்கே கிடைக்கிறது........

    ReplyDelete
  5. இந்த பகுதி திகலாக உள்ளது ஐயா அருமை....
    அந்த ஆங்கில கவிதை பாதி புரிகிறது...பாதி புரியவில்லை.... தமிழாக்கம் கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும்...



    ஃப்ரீமேசன் கோயிலாக இருந்த போது ஏற்படுத்தப்பட்ட பாதள அறை.... இல்லுமினாட்டி-யுடன் இணைந்த போது பயன்படுத்தப்படவில்லை.... அப்படி இருக்கும் போது எப்படி இல்லுமினாட்டியின் நெற்றிக்கண் சின்னம் பாதாள அறையில் எப்படி வரையப்பட்டிருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரீமேசனின் சின்னமே பின் இல்லுமினாட்டியின் சின்னமாக மாறியிருக்கிறது.

      Delete
    2. ஓஹோ... அதை நான் கவனிக்கவில்லை ஐயா...

      Delete
  6. தாங்களின் இருவேறு உலகம் இரண்டு முறை முழுமையாக படித்து முடித்துவிட்டேன். ஏனோ ஆனாலும் சலிக்கவில்லை... மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் நாவலாக இருக்கிறது...இல்லுமினாட்டி படித்து முடித்தாலும் மீண்டும் படிக்க வருகிறேன்... தாங்களின் எழுத்துகளில், விரல்களில், சிந்தனைகளில் மந்திரம் உள்ளது .. உங்களின் எழுத்துகளில் அனைவரையும் வசியபடுத்தும் திறமை இருக்கிறது...

    ReplyDelete