சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, March 11, 2020

ஒன்றைப் பலதாக்கும் அபூர்வ சக்தி!



ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் நூல் பிரபலமாகி ஆன்மிகப் புதிய பரிமாணங்களை விளக்கும் பல கட்டுரைகளும் வெளிவர ஆரம்பித்த பின் அமெரிக்காவில் அவர் முன்பு செய்து காட்டிய அற்புதங்களைப் பலரும் நினைவுகூர ஆரம்பித்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நினைவு கூர்ந்தது ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் ஒன்றைப் பலதாக்கும் அபூர்வ சக்தி. அந்த நிகழ்வுகளில் சில கட்டுரைகளிலும், நூல்களிலும் வெளியாக ஆரம்பித்தன.

சல்லிவன் என்ற அமெரிக்க அரசியல் நிபுணர் லண்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் வழியில் நியூயார்க் நகரில் இருந்த பளாவட்ஸ்கீ அம்மையாரைச் சந்தித்தார். அப்போது அவர் நேரில் பார்த்த இரண்டு அற்புதங்களை ஒரு பத்திரிக்கையில் எழுதினார். அவற்றைப் பார்ப்போம்.

ஒரு நாள் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மரவேலைப்பாட்டு மணிகளுடன் கூடிய மாலை ஒன்றை ஒரு தாம்பாளத்தில் வைத்திருந்தார். அந்த மணிகள் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவை மணம் வீசுபவையாகவும் இருந்தன. சல்லிவன் முன்னிலையில் வேறொரு கனவான் அந்த மாலையை எடுத்துப் பார்த்து ரசித்து மறுபடி தாம்பாளத்திலேயே வைத்து விட்டு இந்த மணிகள் மிக அழகாக இருக்கின்றன. ஒரே ஒரு மணியை எனக்குக் கொடுங்களேன்என்றார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார்அந்த மாலையிலிருந்து மணிகளை அகற்ற எனக்குப் பிடிக்கவில்லைஎன்று சொல்லி விட்டு அந்தத் தாம்பாளத்தில் அந்த மாலையைத் தடவ ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவரது கையடியிலிருந்து அந்தத் தாம்பாளத்தில் தனித்தனி மணிகள் உருவாக ஆரம்பித்தன.   சல்லிவன் திகைப்புடன் அந்த அற்புதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அந்த மணிகள் தாம்பாளத்தை நிரப்பும் அளவு ஆனவுடன் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தத் தாம்பாளத்திலிருந்து மாலையைக் கையில் எடுத்து விட்டு அந்தத் தாம்பாளத்தை அந்தக் கனவான் கையில் கொடுத்தார். அந்தத் தாம்பாளத்தில் நிறைய மணிகள் இருந்தன. ”எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொல்ல அந்தக் கனவான் பிரமிப்புடன் கைநிறைய அந்த மணிகளை எடுத்துக் கொண்டார். மணிகள் உருவானதையும், அந்த மாலையிலிருந்து எந்த மணியும் உதிர்ந்திருக்காமல் அது முழுமையாகவே இருந்ததையும் பார்த்த சல்லிவனுக்குப் பேராச்சரியம் தாங்கவில்லை.

அதற்குச் சில காலம் முன்பு வேறொரு நண்பர் சீனாவில் கிடைக்கும் வேலைப்பாடுடன் கூடிய பட்டுக் கைக்குட்டைகளைப் பற்றி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்னார். அவற்றின் அமைப்பை விவரித்து விட்டுஅவ்வளவு அழகும் நேர்த்தியும் கொண்ட கைக்குட்டைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிடைப்பதில்லைஎன்று குறைப்பட்டுக் கொண்டார். அவர் சொல்லும் போது கவனமாகக் கேட்டுக் கொண்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அப்போதே அந்தரத்திலிருந்து ஒரு கைக்குட்டையைத் தருவித்து அவரிடம் கொடுத்துநீங்கள் சொல்லும் கைக்குட்டை இது போன்றதா பாருங்கள்என்றார். அதைக் கையில் வாங்கிப் பார்த்த அந்த நண்பர் அடைந்த வியப்புக்கு அளவில்லை. “நான் சொன்னது இந்த ரகக் கைக்குட்டைகளைத் தான்என்றார். அப்போது அவர்களுடன் இருந்த கர்னல் ஓல்காட் அந்தக் கைக்குட்டையை வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

சல்லிவன் அந்த மணிகள் உற்பத்தியைப் பற்றிப் பேசி கர்னல் ஓல்காட்டிடம் ஆச்சரியப்பட்ட போது கர்னல் ஓல்காட் தான் முன்பு பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தக் கைக்குட்டையை எடுத்து சல்லிவனிடம் காட்டினார். அந்தக் கைக்குட்டையையும், அற்புதச் செயலையும் வியந்த சல்லிவன் அந்தக் கைக்குட்டையைத் தனக்குத் தரும்படி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் வேண்டிக் கொண்டார். உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார்எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறிவிட்டார்.

உடனே கர்னல் ஓல்காட்நான் எடுத்துப் பத்திரமாக வைத்திருந்த பொருளை என் அனுமதியில்லாமல் அவருக்குத் தந்தது நியாயமல்லஎன்று விளையாட்டாய் சொன்னார்.

உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சல்லிவனிடம் அந்தக் கைக்குட்டையை வாங்கி அவர்களுக்கு முதுகைக் காட்டி ஒரு கணம் நின்று விட்டு பின் திரும்பினார். அந்தக் கைக்குட்டையுடன் அதே போன்ற இன்னொரு கைக்குட்டையும் அவர் கையில் இருந்தது. இருவரிடமும் ஒவ்வொரு கைக்குட்டையை அவர் தந்தார். இருவரும் ஆச்சரியத்துடன் வாங்கி அதைச் சரி பார்த்துக் கொண்டார்கள். இரண்டும் வித்தியாசம் காணமுடியாதபடி ஒரே போல் இருந்தன.

அன்று மாலை மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாகக் குளிர்காற்று வீசிக் கொண்டிருந்ததால் கழுத்தில் சுற்றிக் கொள்ள ஏதாவது துணி தரும்படி கர்னல் ஓல்காட்டை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்டார். அந்தக் கைக்குட்டையையே கர்னல் ஓல்காட் அவருக்குத் தந்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார். அப்போது அந்தக் கைக்குட்டையின் நுனிகள் சரியாக இணைக்கப்படவில்லை என்பதைக் கண்ட கர்னல் ஓல்காட் ஒரு பின்னூசியைக் கொடுத்து கைக்குட்டையை இணைத்துக் கொள்ளச் சொன்னார். உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார்உங்களுடன் ஒரே தொந்திரவு. நீங்களே உங்கள் கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள்என்று சொல்லி அந்தக் கைக்குட்டையை அப்போதே கழற்றி கர்னல் ஓல்காட் மீது வீசினார். அந்தக் கைக்குட்டையைக் கழற்றி வீசிய பிறகும் அவர் கழுத்தில் அதே போல் இன்னொரு கைக்குட்டை இருந்தது தான் அன்றைய அற்புதத்தின் உச்சக் கட்டமாக இருந்தது. 

சல்லிவன் குறிப்பிட்ட இந்த இரண்டு சம்பவங்களும் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தன. ஆனால் இது போன்ற சம்பவங்கள் பலவற்றை கர்னல் ஓல்காட், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடன் இருந்த காலத்தில் கண்டிருக்கிறார். ஒரு முறை ஸ்டெயிண்டன் மோசஸ் என்ற ஒரு அறிஞர் விவாதத்திற்குரிய ஐந்து பக்கக் கடிதம் ஒன்றை ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு அனுப்பியிருந்தார். அந்தத் தாள்களில் பல்கலைக்கழகக் கல்லூரி, இலண்டன் என்று அச்சிட்டிருந்தது. இடது புற மூலையில் ஒரு சின்னமும் பதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தாள்களைப் படித்து விட்டு அவற்றை ஒரு பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறினார்.

அது ஜெராக்ஸ் மெஷின் கண்டிபிடிக்கப்படாத காலம். ஜெராக்ஸ் மெஷின் 1938 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது விற்பனைக்கு வந்ததோ 1959 ஆம் ஆண்டு தான். ஆனால் இந்தச் சம்பவம் நடந்ததோ 1877 ஆம் ஆண்டு இறுதியில்.  அதனால் இன்றைய விஞ்ஞான முறையில் பிரதி எடுக்க வழியில்லை. கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைத் திகைப்புடன் பார்த்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தத் தாள்கள் அளவில் ஐந்து வெற்றுத் தாள்களை எடுத்துக் கொடுக்கச் சொன்னார். அப்படியே ஐந்து வெற்றுத் தாள்களை கர்னல் ஓல்காட் எடுத்துக் கொடுத்தார்.   ஸ்டெயிண்டன் மோசஸ் அனுப்பிய ஐந்து தாள் கடிதத்துடன் அந்த வெற்றுத் தாள்களையும் மேசை டிராயரின் உள்ளே வைத்து மூடி விட்டு வரும்படி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் சொன்னார். கர்னல் ஓல்காட் அப்படியே செய்தார். பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தக் கடிதம் குறித்த தன் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து அந்தத் தாள்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார்.

கர்னல் ஓல்காட் பரபரப்புடன் மேசை டிராயரைத் திறந்து அந்தத் தாள்களை எடுத்துப் பார்த்தார். அந்த ஐந்து தாள்களும் ஏறத்தாழ அச்சு அசலாக அப்படியே கர்னல் ஓல்காட் வைத்திருந்த தாள்களில் பதிவாகி இருந்தன. பிற்காலத்தில் ஆற அமர்ந்து அந்தத் தாள்களைப் பரிசோதிக்கையில் மிக நுட்பமான சிறிய வித்தியாசங்கள் இருப்பதை கர்னல் ஓல்காட் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவை மேற்போக்காய் பார்க்கையில் தெரிய முடிந்த வித்தியாசங்கள் அல்ல. 

இதில் எந்த சம்பவமும் முன்கூட்டியே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தயார்ப்படுத்தி இருக்க முடிந்த சம்பவம் அல்ல. இந்த உண்மையும், இந்த அற்புதங்கள் மற்றவர்கள் கண்முன்பே நடந்திருக்கின்றன என்ற உண்மையும் நம் வியப்பை அதிகப்படுத்துகின்றன அல்லவா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி தினத்தந்தி: 18.6.2019    

                                                                

No comments:

Post a Comment