சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 29, 2019

சத்ரபதி 83


ரண்மனையில் இருக்கும் காலங்களில் படை வீரர்களிடமிருந்து விலகியே இருக்கும் அரசனுக்கு போர்க்காலங்கள் அவர்களுடன் மிக நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பை வழங்குகின்றன. அலி ஆதில்ஷா அந்த வாய்ப்பை சிவாஜிக்கு எதிராகத் தானே தலைமை தாங்கிச் சென்ற இந்தப் போர்க்காலத்தில் பெற்றான். மேலும் இந்தப் படையெடுப்பில் ஆரம்பத்திலேயே கிடைத்த வெற்றிகள் அவனையும் அவன் படைவீரர்களையும் உற்சாகப்படுத்தி விட்டிருந்தன. கிருஷ்ணா நதிக்கரையில் சிமுல்கி நகரத்தில் தங்கியிருந்த போது பெருமழைக்காலம் ஆனதால் அவனுக்கு பொழுது போகவும் வழியிருக்கவில்லை. அதனால் அவன் தன் படைவீரர்களுடனும், சிறுபடைத்தலைவர்களுடனும் நெருங்கிப் பழகினான். அவர்களுடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசினான். பீஜாப்பூர் அரண்மனையில் குறிப்பிட்ட சில ஆலோசகர்களிடம் மட்டுமே பேசி, சில ஆணித்தரமான அபிப்பிராயங்களில் இருந்த அவனுக்குப் பலதரப்புத் தகவல்களைப் பெற முடிந்தது. அலி ஆதில்ஷாவின் முக்கியப் படைத்தலைவர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் அரசனிடம் சில உண்மைகளைச் சொல்வதில் இருந்த தயக்கங்கள் அந்தப் படைவீரர்களுக்கு இருக்கவில்லை. அரசன் கேட்க விரும்புவதையே சொல்லும் அவசியமோ, உள்நோக்கங்களோ இல்லாததால் படைவீரர்களும், சிறுபடைத்தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்களையும், தாங்கள் கண்டவற்றையும் ஒளிவுமறைவில்லாமல் அரசனிடம் தெரிவித்தனர். அந்தத் தகவல்கள் அவன் இது வரை வைத்திருந்த அபிப்பிராயங்களை நிறையவே மாற்றி விட்டன. அப்படி மாறிய அபிப்பிராயங்களில் இரண்டு மனிதர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் மிக முக்கியமாக இருந்தன. அந்த இருவரில் முதலாமவன் சிவாஜி. இரண்டாமவன் சிதி ஜோஹர்.

அலி ஆதில்ஷாவிடம் பேசிய படைவீரர்கள் பலரும் சிவாஜியை போர்க்களத்தில் நேரில் கண்டவர்கள். சில மாவல் வீரர்கள் சிவாஜியை இளமைக்காலத்தில் இருந்து அறிந்தவர்கள். அவர்கள் சிவாஜியைப் பற்றிச் சொன்னதெல்லாம் உயர்வாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தன. சிவாஜியின் பலம் அவன் படையின் எண்ணிக்கையில் இல்லை; மாறாக நிலவரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அவனுடைய அசாத்திய அறிவுக் கூர்மையிலும், எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்  யுக்திகளிலும் இருப்பதை அலி ஆதில்ஷா புரிந்து கொண்டான். போர்க்களத்தில் அவன் சாதாரண தனிமனிதனாகத் தெரிவதில்லை என்றும், தளர்ச்சியே இல்லாத ஒரு சக்திப் பிரவாகமாக இயங்கினான் என்றும் அவர்கள் சொன்னார்கள். சாதகமான சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அவன் பாதகமான சூழ்நிலைகளையும் ஏதாவது செய்து சாதகமாக மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் படைத்தவன் என்றும் சொன்னார்கள். அவனுடைய வீரர்களும், நண்பர்களும் அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதைக் காண முடிந்ததாகச் சொன்னார்கள். ஒரு சூழ்ச்சிக்காரன் பீஜாப்பூரை எதிர்த்து நின்று அதிர்ஷ்டத்தின் துணையோடு பல பகுதிகளைக் கைப்பற்றியும் வருகிறான் என்ற அளவிலேயே நினைத்திருந்த அலி ஆதில்ஷா சிவாஜியின் பல பரிமாணங்களையும் உணர்ந்து தன் அபிப்பிராயத்தைத் திருத்திக் கொண்டான். சிவாஜி நினைத்ததையும் விட ஆபத்தானவன்…

அதே போல, சிதி ஜோஹர் குறித்தும் படைவீரர்கள் சொன்னது அவன் சிவாஜியோடு சேர்ந்து கொண்டு துரோகம் செய்யவில்லை என்பதைத் தெளிவாக சுல்தானுக்கு உணர்த்தியது. திட்டமிட்டு உற்சாகமாக சிதி ஜோஹர் செயல்பட்டதும், பன்ஹாலா கோட்டையை முற்றுகை இட்ட போது கண்காணிப்பைத் தளர்த்தாமல் இயற்கை சீற்றங்களைப் பொருட்படுத்தாது முன்னால் நின்று போரிட்டதும் அவர்கள் மூலம் தெரிய வந்த போது சிதி ஜோஹரை வஞ்சகனாக எண்ணியது தவறு என்று அலி ஆதில்ஷா உணர்ந்தான். சிதி ஜோஹர் நல்லவன் தான்….

பெருமழைக்காலம் முடிய ஆரம்பிக்கும் வேளையில் கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்திருப்பதாக அலி ஆதில்ஷாவுக்குச் செய்தி வந்து சேர்ந்தது. சாதாரணமான சூழ்நிலைகளில் இது ஷாஹாஜியே சரிப்படுத்தி விட முடிந்த கிளர்ச்சிகளே. ஆனால் ஷாஹாஜி தன் மகன் சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் நிறையவே தளர்ந்து போயிருந்தார். பழைய வேகமும் ஆரோக்கியமும் அவரிடம் இருக்கவில்லை. அவர் கடைசி மகன் வெங்கோஜி தான் அப்பகுதி நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போதைய கிளர்ச்சிகள் அந்த நிர்வாகப் பகுதியின் எல்லையைத் தாண்டி தொலைவில் இருந்தன. ஷாஹாஜி அளவுக்கு வெங்கோஜி வெற்றிகரமாக அந்தத் தொலைதூரக் கிளர்ச்சிகளை அடக்க முடியும் என்று அலி ஆதில்ஷாவுக்குத் தோன்றவில்லை.

அதனால் அலி ஆதில்ஷா கர்நாடகக் கிளர்ச்சிகளை அடக்க சிதி ஜோஹரை அனுப்ப ஆணையிட்டான். சமீபத்தில்  அவனைப் பற்றி அறிந்த உண்மைகள் அலி ஆதில்ஷாவுக்கு சிதி ஜோஹர் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிதி ஜோஹர் இப்போது பழைய விசுவாசத்தில் இருக்கவில்லை. மிக விசுவாசமாக நடந்து கொண்டிருந்த அவனைத் துரோகியாக அலி ஆதில்ஷா குற்றம் சாட்டியதில் ஆத்திரம் அடைந்திருந்த அவன் அலி ஆதில்ஷாவுக்கு எதிரியாகவே மாறிவிட்டிருந்தான்.  சுல்தானுக்குப் பாடம் புகட்ட இது நல்லதொரு வாய்ப்பு என்று எண்ணிய அவன் பீஜாப்பூர் படையோடு கிளர்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்று அவர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களை இரகசியமாக ஊக்குவிக்க ஆரம்பித்தான். அதில் அலி ஆதில்ஷா இன்னொரு கசப்பான பாடத்தைக் கற்றான். ’நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருந்து விடுவதில்லை. கோபத்தால் ஆட்கொள்ளப்படும் போது அவர்களில் பலர் மட்டரகமாகவும் மாறி விடுவதுண்டு…..’

இனி சிவாஜியைக் கவனிப்பதா, இல்லை கர்நாடகக் கிளர்ச்சியாளர்களைக் கவனிப்பதா என்று முடிவெடுக்க முடியாமல் அலி ஆதில்ஷா யோசித்துக் கொண்டிருக்கையில் காவல் வீரன் வந்து சொன்னான். “அரசே தங்களைக் காண வாடி மன்னரிடமிருந்து ஒரு வீரர் வந்திருக்கிறார்”

“உள்ளே அனுப்பு” என்ற ஆதில்ஷா மனதில் வாடி மன்னன் லக்காம் சாவந்த் என்ன தகவல் அனுப்பியிருப்பான் என்ற சிந்தனை மேலோங்கி நின்றது.

உள்ளே வந்த வாடி வீரன் அலி ஆதில்ஷாவை தரை வரை தாழ்ந்து வணங்கினான். அவன் வணங்கி நிமிர்ந்த போது அலி ஆதில்ஷா அவனைக் கூர்ந்து பார்த்து விட்டு வியப்புடன் கேட்டான். “என்ன வாடி மன்னரே. நீங்களே தூதனின் வேடத்தில் வந்திருக்கிறீர்கள்?”

வாடி மன்னன் லக்காம் சாவந்த் “ஆபத்தான காலங்களில் மிக ஜாக்கிரதையாகவும், ரகசியமாகவும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது அரசே. யாரையும் நம்ப முடியாத நிலை. அது மட்டுமல்ல. பாதுகாப்பாக எங்கேயும் தங்க முடியாத நிலையும் கூட. உங்களிடம் அவசரமாய் பேச வேண்டியிருந்தது. ஆனால் நான் வருவது தெரிந்தாலும் ஆபத்து சூழக்கூடும் என்பதால் தங்களைச் சந்திக்க மாறு வேடத்தில் வர வேண்டியதாகப் போயிற்று”

அலி ஆதில்ஷா எதிரே இருந்த ஆசனத்தில் அமரக் கைகாட்டி விட்டு குழப்பத்துடன் கேட்டான். “புதிர் போடாமல் பேசுங்கள் வாடி மன்னரே. யாரைப் பார்த்து நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள்?”

லக்காம் சாவந்த் சொன்னான். “அரசே அகண்ட பாரதத்தில் இப்போது அனைவரையும் பயமுறுத்தும் சக்தி இருவருக்குத் தான் இருக்கிறது. முதலாமவர் முகலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப். இறையருளால் அவர் தொலைவில் இருக்கிறார் என்பதால் இப்போது என்னைப் பயமுறுத்துபவர் அவரல்ல. இன்னொருவர் தான்”

“யார் அந்த இன்னொருவர்?” அலி ஆதில்ஷா குழப்பம் தீராமல் கேட்டான்.
“சிவாஜி” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு லக்காம் சாவந்த் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

ஔரங்கசீப்புக்கு இணையாக சிவாஜி உயர்த்தி பேசப்படுவதில் மனம் கசந்த அலி ஆதில்ஷா எதுவும் சொல்லாமல் கேள்விக்குறியோடு லக்காம் சாவந்தைப் பார்த்தான்.

லக்காம் சாவந்த் சொன்னான். “சிவாஜியின் நண்பன் பாஜி பசல்கர் எங்கள் படையுடன் போரிட்டு இறந்து போனதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்”

அலி ஆதில்ஷா அறிவேன் என்ற வகையில் தலையசைத்தான்.

லக்காம் சாவந்த் சொன்னான். “உங்களுக்கு எறிகுண்டுகள் வினியோகம் செய்த கிழக்கிந்தியக் கம்பெனி தொழிற்சாலை சூறையாடப்பட்டதும் அந்த அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டதும் கூட நீங்கள் அறிந்திருப்பீர்கள்”

அலி ஆதில்ஷா அதற்கும் தலையசைத்தான். லக்காம் சாவந்த் தொடர்ந்து கேட்டான். “உங்களுக்கு ஆதரவளித்த காரணத்திற்காகவும், பாஜி பசல்கரின் மரணத்திற்காகவும் என்னைக் கொன்று விட சிவாஜி துடித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்பதையும் அறிவீர்களா அரசே”

அலி ஆதில்ஷா அதை அறியவில்லை என்ற வகையில் தலையசைத்தான்.

லக்காம் சாவந்த் விரக்தியுடன் சொன்னான். “அவன் கொல்லத்துடிப்பது என்னை என்பதால் நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை அரசே. ஆனால் அவரவர் உயிரில் அவரவர் அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது”

அலி ஆதில்ஷா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவனாகச் சொன்னான். “வாடி மன்னரே. ஒரு அரசனுக்கு பயம் சோபை தருவதில்லை. சிவாஜி உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் எதிரி தான். அவனுக்கு எதிராகப் போராடி பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், சமீபத்தில் சில வெற்றிகளையும் கண்டவன் நான். அவனை ஒழித்துக்கட்டாமல் நான் ஓயப் போவதில்லை. பீஜாப்பூருக்குத் திரும்பி விடாமல் நான் இங்கு தங்கி இருப்பதே அந்த நோக்கத்திற்காகத் தான்….”

லாக்கம் சாவந்த் சொன்னான். “அரசே. உங்கள் நோக்கம் வெற்றி பெறட்டும். ஆனால் அதில் கால தாமதம் வேண்டாம். உடலில் விஷம் ஏறிக் கொண்டிருக்கையில் அதை முறிக்க உடனடி முயற்சிகள் எடுக்கா விட்டால் அது ஒருவனின் உயிரைப் பறித்து விடும். சிவாஜி அப்படி பரந்து விரிந்து கொண்டிருக்கும் விஷம் என்பதைத் தயவு செய்து நினைவில் வையுங்கள்…”

அலி ஆதில்ஷா கேட்டான். “இந்த அறிவுரை சொல்ல மட்டுமே நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை. வந்த காரணத்தைச் சொல்லுங்கள் வாடி மன்னரே”

லாக்கம் சாவந்த் சொன்னான். “சிவாஜியை மண்ணைக் கவ்வ வைக்கும் ஒரு அருமையான திட்டத்தோடு நான் வந்திருக்கிறேன் அரசே”


அலி ஆதில்ஷா நிமிர்ந்து உட்கார்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. சிவாஜி மற்றும் அலி ஆதில்ஷா இருவரும் இங்கு மோதிக் கொண்டிருக்க... அங்கே அவர்கள் இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டனர்...
    சிவாஜியை மண்ணை கவ்வ வைக்கும் திட்டம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  2. லாக்கம் சாவந்தும் அலி ஆதில்ஷாவும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டு கொள்ளப் போகின்றார்கள்

    ReplyDelete