சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 18, 2019

இல்லுமினாட்டி 5

ந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஜான் ஸ்மித்தின் மனதில் பலதரப்பட்ட எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலைமோதியபடி இருந்தன. விஞ்ஞானத்தில் வியப்புகளுக்கும், விதிவிலக்குகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. அவை தான் அடுத்த கண்டுபிடிப்புகளுக்கான விதைகள். அதன் மூலம் தான் அடுத்தநிலை ஆராய்ச்சிகள் ஆரம்பமாகின்றன; கூடுதல் உண்மைகளை விஞ்ஞானம் கண்டறிகிறது. அந்த வகையில் ஒரு அதிசயம் தான் எக்ஸ் என்று தற்காலிகமாக அழைக்கப்படும் போதை மனிதன் உயிர்பிழைத்ததில் நடந்திருக்கிறது என்று நம்ப அவர் ஆசைப்பட்டார். ஆனால் நடந்திருந்த இரண்டு விஷயங்கள் அப்படி நம்ப விடாமல் அவரைத் தடுத்தன. முதலாவது போதை மனிதன் உயிர் பிழைக்க ஆரம்பித்த நேரம். இரண்டாவது அந்தக் கிதார் இசை. இசைத்தது யாரென்று தெரியாவிட்டாலும் அது இறந்தவர்களின் ஆவியை வரவழைக்க வூடுவில் இசைக்கப்படும் வகையைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது நெருடலாக இருந்தது. அந்த இரண்டையும் அவரால் தற்செயல் என்று ஒதுக்க முடியவில்லை. தலைமை மருத்துவரிடம் அந்த எக்ஸ் சீக்கிரமே எங்காவது மறுபடியும் விழுந்து கிடப்பான் என்று தோன்றுகிறது என்று அவர் கூறியிருந்தாலும் அப்படி நடக்க வழியில்லை என்று உள்ளுணர்வு ஏனோ தெரிவித்தது….

இந்தக் குழப்பத்தில் இருந்து மீள முடிவு செய்த ஜான் ஸ்மித் வழியில் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அலைபேசியில் ஒரு எண்ணை அழைத்தார். போதை மனிதன் எக்ஸ் பற்றித் தெரிவித்து விட்டு அவனைப் பற்றிய முழு விவரங்களும், அவன் தற்போது எங்கிருக்கிறான் என்ற தகவலும் உடனடியாக வேண்டுமென்றார். ஏன் எதற்கு என்பது போன்ற கேள்விகள் எதுவும் மறுபக்கத்தில் கேட்கப்படவில்லை. “சரி” என்ற ஒற்றைச் சொல்லோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மறுபடியும் காரைக் கிளப்பி வீடு நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த போது அவர் மனம் நேற்றைய நிகழ்வுகளிலும், எக்ஸ் மீதுமே தங்கியிருந்தது. எல்லாமே யாருமே எதிர்பாராத நிகழ்வுகள், திருப்பங்கள்! எக்ஸ் அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியா, இல்லை, அவை எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு தற்செயலா? அவர் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் நிதானமாக மனதில் வரிசைப்படுத்தினார்.

இல்லுமினாட்டியின் அசாதாரணக்கூட்டம் ஒன்று ம்யூனிக் நகரத்தில் மிக ரகசியமாக நேற்று பிற்பகல் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு அசாதாரண மனிதன் மாலை நேரத்தில் அமானுஷ்யமான முறையில் இறந்து போனான். அந்த ரகசியக்கூட்டம் நடந்த கட்டிடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அதே நேரத்தில் ஒரு போதை மனிதன் இறந்து கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு கிதார் இசை கேட்க ஆரம்பிக்கிறது.   அந்த இசை இறந்தவர்களின் ஆவியை ஒரு உடலில் வரவழைக்க வூடூ சடங்கில் பயன்படுத்தும் இசை வகையாக இருக்கிறது. இறந்து கொண்டிருந்த போதை மனிதன் திடீரென்று சக்தி பெற்று உயிர் பிழைக்க ஆரம்பிக்கிறான். பின் அவன் மர்மமான முறையில் அங்கிருந்து வெளியேறியும் விடுகிறான். இல்லுமினாட்டி கூட்டத்தில் இறந்தவன் அசாதாரண மனிதனாக இருந்திரா விட்டால், அந்தக் கிதார் இசை வூடூ இசையாக இருந்திரா விட்டால், அந்தப் போதை மனிதன் மருத்துவமனையிலிருந்து ரகசியமாக வெளியேறியிருக்கா விட்டால் இதற்குப் பெரிய முக்கியத்துவம் தந்திருக்க வேண்டியதில்லை…

வீடு போய்ச் சேர்ந்தவுடன் முதல் வேலையாக அவர் சட்டை பட்டனில் ரகசியமாக இணைத்திருந்த அதிநுட்பக் காமிராவைக் கவனமாகக் கழற்றி எடுத்து அதன் மூலமாக மருத்துவமனையில் அவர் எடுத்திருந்த புகைப்படங்களை அவருடைய லாப்டாப்பில் ஏற்றினார். திரும்பவும் அந்த ரிப்போர்ட்களை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தார். எக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் எடுக்கப்பட்ட ரிப்போர்ட்களும், அவன் உயிர்பிழைத்தவுடன் எடுக்கப்பட்ட ரிப்போர்ட்களும், ஒரே மனிதனுடையது, சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டவை என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது என்று அவருக்கு இப்போதும் தோன்றியது. அவர் சந்தேகப்படுவது போல் நடக்க விஞ்ஞானப்படி வழி இல்லை. ஆனால் நடந்திருக்கும் விஷயங்களும், ரிப்போர்ட்களும் கூட விஞ்ஞானம் பதில் கூற முடியாதபடி அல்லவா இருக்கின்றன.

நினைப்பது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும் வூடூ சடங்கு ஏதாவது ரகசியமாக நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஜான் ஸ்மித் மனதில் எழுந்தது. அவர் இணையத்தில் வூடூ திகில் நடனச்சடங்குகள் பற்றிப் படிக்க ஆரம்பித்தார். பெரும்பாலானவை மாயா ஜாலக்கதைகள் போல இருந்தன. ஆனாலும் படிக்க ஆரம்பித்தார். அந்தச் சடங்குகள், அவற்றின் பின்புலமாக இருந்த நம்பிக்கைகள் எல்லாம் சுவாரசியமாக இருந்தன. அந்த இசைப்பிரியர் சொன்னது போல தற்காலிகமாக ஒரு ஆவியை ஒருவரது உடலில் வரவழைப்பதும், அதன் ஆசிகளையும், பதில்களையும் பெற்ற பின் அனுப்பி வைப்பதுமான சடங்குகளாக அவை இருந்தன. ஆனால் அந்த ஆவி ஒரு உடலில் தங்கியிருப்பது அதிகபட்சமாகச் சில மணி நேரங்கள் தான். அதற்கு மேல் அந்த ஆவிகள் தங்குவதில்லை, வூடூ சடங்கை நடத்துபவர்கள் அப்படி ஆவிகள் தங்க அனுமதிப்பதில்லை. ஆவிகளை ஒரு உடலில் வரவழைப்பதும் அனுப்பி வைப்பதும் இசை கலந்த பாட்டு சடங்குகளிலாகவே நடக்கின்றன. நீண்ட நேரம் அலசியதில் இறந்து கொண்டிருக்கும் உடலில் ஒரு ஆவியை வரவழைப்பது போன்ற சம்பவத்தையோ, வரவழைத்து விட்டு திருப்பி அனுப்பி வைக்காத சம்பவத்தையோ ஒன்று கூட அவரால் காண முடியவில்லை….

ஒரு விஞ்ஞானியான ஜான் ஸ்மித்துக்கு ஆர்வத்துடன் ஆழமாகப் படிக்கும் விஷயங்களின் சூட்சுமங்கள் எப்போதும் பிடிபடாமல் போனதில்லை. உலகப்புகழ் பெற்ற அந்த மூளை விஞ்ஞானி நீண்ட யோசனைக்குப் பின் எக்ஸ் விஷயத்தில் நடந்திருப்பதற்கும், வூடூவுக்கும் அந்தக் குறிப்பிட்ட இசை தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கே வந்தார். அதற்கான காரணங்களும் அவரால் கவனிக்கப்பட்டிருந்தன. வூடூ திகில் நடனச் சடங்குகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே நடப்பவை. அந்த இடங்கள் புனிதப்படுத்தப்பட்டு, மந்திரிக்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்ட பின்பு தான் சடங்குகள் நடக்கும். அப்படி வரவழைக்கப்பட்ட ஆவிகள் சடங்குகளின் முடிவில் கண்டிப்பாக விடைபெறுகின்றன. யார் மீது அந்த ஆவி இறங்குகிறதோ அவன் தன் பழைய நிலைக்குத் திரும்புகிறான்….

அவர் அலைபேசி அவருடைய சிந்தனை ஓட்டத்தைக் கலைத்தது.  அழைத்தது சில மணி நேரத்திற்கு முன் அவர் எக்ஸ் குறித்து அறியத் தொடர்பு கொண்டிருந்த போலீஸ் உயரதிகாரி தான். அவர் சொன்னார். “அந்தப் போதை மனிதன் பெயர் டேனியல். வயது 28. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்தவன். ஐ.டி இன்ஜீனியரிங் கிராஜூவேட். பெர்லினில் பெரிய கம்பெனியில் வேலை கிடைத்து ஐந்து வருடத்துக்கு முன் ஜெர்மனி வந்தவன். வந்த ஆறு மாதத்தில் உடன் வேலை பார்த்த குஜராத்தி பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அவர்களுக்கு மூன்று வயதுப் பெண் குழந்தை இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன் வேலையை விட்டு விட்டான். அப்போது தான் போதைக்கு அடிமையாகி இருக்கிறான். போன வருடம் மனைவி அவனை விவாகரத்து செய்து விட்டாள். அவளும் குழந்தையும் பெர்லினில் தான் இப்போதும் இருக்கிறார்கள். அவன் ஃப்ராங்பர்ட்டில் இரண்டு போதை நண்பர்களுடன் தங்கியிருக்கிறான். அவனுக்கு நிரந்தர வேலை எதுவுமில்லை. ஃப்ராங்பர்ட்டில் இருந்து மூன்று நாளுக்கு முன்னால் கிளம்பி இருக்கிறான். அவன் நண்பர்களுக்கு அவன் எங்கே போனான் என்று தெரியவில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை…”     

கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஜான் ஸ்மித் அந்த உயரதிகாரி மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சில வினாடிகள் நிறுத்தியதால் கிடைத்திருக்கும் தகவல்கள் அவ்வளவு தான் என்பதை உணர்ந்தார். அவர் மெல்லக் கேட்டார். “அவனை ம்யூனிக்கில் வேறு யாராவது பார்த்திருக்கிறார்களா என்று விசாரித்தீர்களா?”

“முந்தாநாள் ம்யூனிக்கில் அவனைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். அவன் போதையில் தள்ளாடியபடி வீதிகளில் சென்றதைக் கவனித்திருக்கிறார்கள். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்து அவன் வெளியே வந்த பிறகு அவனை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை…. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேஷன், ஏர்போர்ட் முதல்கொண்டு எல்லா இடங்களிலும் அவனுடைய போட்டோ காண்பித்து விசாரித்து விட்டோம். யாரும் அவனைப் பார்த்ததாகச் சொல்லவில்லை. அங்கிருக்கும் காமிராப்பதிவுகளை நாங்களும் பார்த்து விட்டோம்…. அங்கெல்லாம் அவன் போகவில்லை.”

ஜான் ஸ்மித் கேட்டார். “அதெப்படி வெளியே வந்த ஒருவன் யாரும் பார்க்காமல் மாயமாய் மறைய முடியும்?”

அந்தப் போலீஸ் உயரதிகாரி சொன்னார். “அவன் வெளியே வந்த போது யாராவது அவனுக்காக ஒரு வாகனத்தில் காத்திருந்தார்களானால், அவன் அந்த வாகனத்தில் ஏறி போயிருந்தானானால் அவனை வேறு யாரும் பார்த்திருக்க வழியில்லை….”

ஜான் ஸ்மித் பிரச்சினை பெரிதாவதை மெல்ல உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

15 comments:

  1. செம ட்விஸ்ட்.....

    யார் அழைத்து சென்றது ...

    யார் அந்த எக்ஸ்....

    ReplyDelete
  2. Super twist. Very interesting.

    ReplyDelete
  3. சுஜாதாJuly 18, 2019 at 7:20 PM

    எக்ஸுக்காக வெளியே யாராவது காத்திருந்தார்களா? என்ன சார் இப்படி சஸ்பென்ஸ் வைத்து வாரா வாரம் காக்க வைக்கிறீர்கள்?

    ReplyDelete
  4. மற்ற நாவல்களை விட இதை விரைவாக நூலாக வெளியிடுங்கள்.அதிலும் அமானுஷ்யன் அக்‌ஷயை மீண்டும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
    -சரவணகுமார்

    ReplyDelete
    Replies
    1. Pls dont tense any good writers. It will spoil their valuable creativity.

      Delete
  5. கார்த்திக்ராஜாJuly 18, 2019 at 8:09 PM

    விஸ்வம் is Back. Interesting.

    ReplyDelete
  6. விஸ்வம் மீண்டும் வந்துவிட்டான்.. ஆனால் அவனுக்கு எதிராக கிரிஷ்,மாஸ்டர்,ஏலியன்,அக்ஷய் என்று ஒரு பெரிய படையே இருக்கிறது... எப்படி சமாளிக்க போகிறான்.. யாரோடு இணையப் போகிறான்????

    ReplyDelete
  7. அருமையான பதிவு

    ReplyDelete
  8. வணக்கம்
    தொடருங்கள் படிப்பதற்கு காத்திருகேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. படிக்க படிக்க சுவாரஸ்யம்

    ReplyDelete
  10. Expecting for the entry of Akshay

    ReplyDelete
  11. Very interesting. Waiting for the next update

    ReplyDelete
  12. Veey nice and interesting.....
    Meendum viswama?

    ReplyDelete