சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 24, 2019

சத்ரபதி 78


சிவாஜி ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். வரப் போகும் பீஜாப்பூரின் பெரும்படையை எதிர்கொள்ள அவனிடம் தற்போது சிறுபடை மட்டுமே இருந்தது. ஆளும் பகுதிகள் விரிவடைய விரிவடைய எல்லா இடங்களிலும் படை இருப்பு தேவைப்படுவதால் ஓரிடத்தில் குவித்து விட முடியாத நிலையில் அவன் இருந்தான். அப்சல்கானை பிரதாப்கட் கோட்டைப் பகுதிக்கு வரவழைக்க முடிந்ததால், மலைக்காட்டுப்பகுதிகள் பீஜாப்பூர் படைக்குப் பழக்கமில்லாததால் வெற்றி சுலபமானது. ஆனால் இப்போதைய பன்ஹாலா கோட்டைப் பகுதியில் அந்த வசதிகள் இல்லை.....

நேதாஜி பால்கர் வந்து சொன்னான். “அரசே.. பீஜாப்பூர் படை ஒன்றரை நாளில் இங்கு வந்து சேர்ந்துவிடலாம் என்று தெரிகிறது. என்ன செய்யலாம்?”

சிவாஜி தன் திட்டத்தைச் சொன்னான். முதல் முறையாக அவன் திட்டம் வெற்றி பெறப் போவதில்லை என்பதை அவன் அப்போது அறியவில்லை. இந்த முறை ரஸ்டம் ஜமான் அருகில் வரும் வரைக் காத்திருந்து, பின் தீவிரமாகத் தாக்கி அவனை ஓடச் செய்தது போல் சிதி ஜோஹரைத் தாக்கி விரட்ட சிவாஜி முனையவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. சிதி ஜோஹரின் படை ரஸ்டம் ஜமானின் படையைப் போல் மும்மடங்கு பெரிதாக இருந்தது. இரண்டாவதாக சிதி ஜோஹர் ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற கிரேனேடுகள் என்றழைக்கப்படும் எறிகுண்டுகளையும் நிறையக் கொண்டு வந்திருந்தான். இந்த எறிகுண்டுகள் சிவாஜியின் படைக்குப் புதியவை. கூடவே வழக்கம் போல பீரங்கிகளும் பீஜாப்பூர் படையோடு வந்திருந்தன.  மிகவும் கவனமாக சிதி ஜோஹர் பன்ஹாலா கோட்டையை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

நேதாஜி பால்கர் சிறு படையுடன் முன்பே பன்ஹாலா கோட்டையை விட்டு வெளியேறி இருந்தான். அவன் மறைவிடத்தில் இருந்து கொண்டே தன்னைத் தாண்டி, கோட்டையை நோக்கிச் செல்லும் பீஜாப்பூர்ப் பெரும்படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அப்சல்கானுடன் வந்த படையை விட இந்தப் படை பெரியது…. பன்ஹாலா கோட்டைக்குள் இருக்கும் படையும், இப்போது அவனுடன் இருக்கும் சிறுபடையும் சேர்ந்து போராடினால் கூட இவர்களை வெல்வது மிகவும் கஷ்டம் என்ற யதார்த்த நிலை அவனுக்குப் புரிந்தது….

சிதி ஜோஹர் படை பன்ஹாலா கோட்டையை நெருங்கி விட்டது. சிதி ஜோஹர் தன் படையினரிடம் அமைதியாகவும், ஆணித்தரமாகவும் சொன்னான். “சிவாஜி இந்தக் கோட்டையில் தான் இருக்கிறான். நம் தாக்குதலில் அவன் இந்தக் கோட்டையில் நிறைய காலம் தங்க முடியாது. தாக்குப்பிடிக்க முடியாத அவனோ, அவன் ஆட்களோ இந்தக் கோட்டையை விட்டு உயிரோடு தப்பிச் சென்று விடக்கூடாது. அதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப் போவதில்லை”

பன்ஹாலா கோட்டையை முற்றுகையிட்ட சிதி ஜோஹர் எறிகுண்டுகளை வீசியும், இடையிடையே பீரங்கிக் குண்டுகளாலும் கோட்டையைத் தாக்க ஆரம்பித்தான். பன்ஹாலா கோட்டை மிக வலிமையானது. அதைக் கைப்பற்றிய பின்னால் சிவாஜி மேலும் அந்தக் கோட்டையை வலிமைப்படுத்தியிருந்தான். அதனால் அந்தத் தாக்குதலில் பன்ஹாலா கோட்டை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை என்ற போதும் எறிகுண்டுகள் சிவாஜியின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாக அங்கங்கே சேதத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. கோட்டைக்குள்ளே மறைந்திருந்து அவர்களும் பீஜாப்பூர் படையைத் தாக்கினார்கள். இரவு நேரங்களில் நேதாஜி பால்கர் தன் சிறுபடையுடன் வந்து திடீர்த் தாக்குதல்களை நடத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைய ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் பின்னால் இருந்த ஃபசல்கானின் படை நேதாஜி பால்கரின் படையைத் துரத்திக் கொண்டு சென்றது. ஆனால் சிதி ஜோஹர் ஒரு எல்லையைத் தாண்டித் துரத்திக் கொண்டு போக வேண்டாமென்று தடுத்தான். அப்படிப் பின் தொடர்ந்து போய் குறைந்த எண்ணிக்கையாகி அவர்களுடன் போராடுவது அவர்களது பெரும்படையைச் சிறிது சிறிதாக இழக்கும் வழி என்றும் அதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் எச்சரித்துத் தடுத்து நிறுத்தினான். மாறாக ஃபசல்கானின் படையின் பிற்பகுதியினரை நேதாஜி பால்கரின் படைக்காகத் திரும்பி நின்று தாக்கத் தயார் நிலையில் நிறுத்தினான்.

“இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி எப்போதும் போகாதீர்கள். அவர்கள் வர என்னேரமும் காத்திருங்கள். இங்கிருந்தே வருபவர்களைத் தாக்குங்கள். அவர்கள் மீது எறிகுண்டுகள் எறியுங்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் வரும் போதும் அவர்கள் பக்கம் பலத்த உயிர்ச்சேதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்….”

இரவு நேரங்களில் ஒரு பிரிவுப்படையினர் முழு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டார்கள். பன்ஹாலா கோட்டையில் இருந்து ஒருவனும் வெளியே செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவோ அவர்கள் அனுமதிக்கவில்லை. சிவாஜி இந்தக் காவல் படையின் கண்காணிப்பு நாளா வட்டத்தில் தளரும் என்று எதிர்பார்த்தான். ஆனால் ஆரம்பத்தில் இருந்த அதே உத்வேகம் தொடர்ந்து இருக்கும்படி சிதி ஜோஹர் பார்த்துக் கொண்டான். நேதாஜி பால்கரும் அவன் படை தாக்க வரும் போதெல்லாம் அவர்கள் வரும் திசையையே நோக்கிக் காத்திருந்து தாக்கத் தயாராக இருந்து திருப்பித் தாக்கும் பீஜாப்பூர்ப்படையை அந்த எல்லையிலிருந்து தாண்ட வைக்க முடியாமல் திணறினான். வரும் போதெல்லாம் அவன் தன் படைவீரர்களை இழந்து கொண்டே போகும் நிலைமை ஏற்பட்டது.

சிவாஜி பெரிதும் எதிர்பார்த்த பருவ மழை பெய்ய ஆரம்பித்தது. இயற்கையின் சீற்றத்தில் பீஜாப்பூர் படை தளர்ந்து போகும், வேறு வழி இல்லாமல் திரும்பிப் போகும் என்று சிவாஜி எதிர்பார்த்தது நடக்கவில்லை. சிதி ஜோஹர் மழைக்காலத்திலும் அனைவருக்கும் முன்னால் நின்று நனைந்து கொண்டே போரிட்டான், காவல் நின்றான், வீரர்களை உற்சாகப்படுத்தினான். படைவீரர்கள் தங்கள் தலைவனே உறுதியாகவும், முன் மாதிரியாகவும் தங்களுடன் சேர்ந்து முன்னிலையில் நிற்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்தார்கள்.

கோட்டைக்குள் மறைந்திருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜியால் சிதி ஜோஹரை மெச்சாமல் இருக்க முடியவில்லை. திறமையும், புத்திசாலித்தனமான அணுகுமுறையும் எங்கிருந்தாலும் அதை ரசிக்க முடிந்த பிறவித் தலைவனான அவனுக்கு சிதி ஜோஹரைப் பார்க்கையில் இதுவல்லவா ஆளுமை என்று தோன்றியது. முதல் நாள் இருந்த கண்காணிப்பையே இந்தப் பெருமழையிலும் கூட இரவு நேரத்தில் கூடத் தளராமல் சிதி ஜோஹர் பார்த்துக் கொண்டதையும் அவன் வியந்தான்.

காலம் நகர்ந்தது. முற்றுகை தொடர்ந்தது. போர்த் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் இருந்தது. கோட்டை எறிகுண்டுகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும் சில இடங்களில் பலவீனமடைய ஆரம்பித்தது.  பன்ஹாலா கோட்டையில் இருந்து வெளியே தப்பித்துச் செல்ல சிவாஜி அனுப்பிய சில வீரர்கள் உடனடியாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். வெளியிலிருந்து எந்தச் செய்தியும் உள்ளே வர வழியில்லை, வெளியே இருப்பவர்களுக்குத் தகவல் அனுப்பவும் வழியில்லை,  பீஜாப்பூர் படையின் உற்சாகமோ, வலிமையோ குன்றவில்லை என்ற நிலைமை தொடர்வதைக் கண்ட சிவாஜி இது ஆபத்தான நிலைமை என்பதை உணர ஆரம்பித்தான். ஒரு தலைவன் ஓரிடத்தில் தனிமைப்படுத்தப்படுவதும், அவனிடமிருந்து ஆணைகள் பெறவோ, ஆலோசனைகள் பெறவோ வழியில்லாமல் அவனது ஆளுமைக்கு உட்பட்ட மற்ற பகுதியினர் நீண்ட காலம் இருப்பது அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்தி விடும் என்று உணர்ந்திருந்த சிவாஜி இந்த நிலைமையை நீடிக்க விடக்கூடாது என்று முடிவு செய்தான்.

மறுநாளே பன்ஹாலா கோட்டையிலிருது வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு  சிவாஜியின் தூதன் ஒருவன் வெளியே வந்தான். சிதி ஜோஹரிடம் வந்து அந்தத் தூதன் சிவாஜியின் மடலைத் தந்தான்.

சிதி ஜோஹர் ஆர்வத்துடன் மடலைப் படித்தான்.

”பீஜாப்பூர் படைத்தலைவருக்கு சிவாஜியின் வணக்கங்கள்.

பன்ஹாலா கோட்டையை நான் முன்பிருந்ததை விட வலிமைப்படுத்தி இருக்கிறேன். உங்கள் முற்றுகையை இனியும் பல மாதங்கள் தாங்கும் அளவு தேவையான அனைத்தையும் தங்கள் படையெடுப்பை முன்பே அறிந்து நான் சேர்த்தும் வைத்திருக்கிறேன்.

தாங்களும் விடாமுயற்சியோடு மழையிலும், வெயிலிலும் தாக்குப்பிடித்து நிற்பதை ஒரு தலைவன் என்ற முறையில் நான் பாராட்டுகிறேன். ஆனால் மழையிலும் வெயிலிலும் நின்று இப்போதே சலித்திருக்கும் வீரர்கள் இனி எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்ற கேள்வி தங்கள் மனதிலும் எழுந்திருக்கும். ஏனென்றால் எத்தனை நாட்கள் இப்படி இங்கே அடைந்தே கிடப்பது என்ற கேள்வி என் மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. மனைவி, பிள்ளை, தாய் குடும்பம் என்ற யோசனைகள் அதிகமாக என் மனதில் எழ ஆரம்பித்திருக்கின்றன. உங்கள் மனதிலும், உங்கள் படைத்தலைவர்கள் மனதிலும், வீரர்கள் மனதிலும் கூட அந்த எண்ணங்களும், மாதக்கணக்கில் நீண்டிருக்கும் இந்த முற்றுகையில் சலிப்பு தோன்ற ஆரம்பித்திருக்கும் என்று எண்ணுகிறேன்.  அதில் தவறில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள்.

வீரம் என்பது சிந்திக்க மறுப்பது என்றாகி விடலாகாதல்லவா? அதனால் இரு பக்கமும் மாதக்கணக்கில் தாக்குப்பிடித்துச் சலித்திருக்கும் இந்தத் தருணத்தில் இந்த பன்ஹாலா கோட்டையைத் தங்களிடம் ஒப்படைத்து விட நான் உத்தேசித்து இருக்கிறேன். இது குறித்து தாங்கள் விரிவாகப் பேச அழைத்தால் பேச்சு வார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறேன்.

இப்படிக்கு
சிவாஜி”

சிதி ஜோஹர் ஃபசல்கானுடனும், மற்ற படைத்தலைவர்களுடனும் கலந்தாலோசித்தான். மற்ற படைத்தலைவர்களில் அதிகமான ஆட்கள் “கோட்டையை அவன் ஒப்படைக்கத் தயாராக இருந்தால் பேசிப்பார்ப்பதில் தவறில்லை” என்றார்கள்.

ஃபசல்கான் சொன்னான். “இப்படித்தான் என் தந்தையிடமும் சொல்லிப் பேச்சு வார்த்தைக்கு சிவாஜி அழைத்தான். நம்பிப் போன அவரைக் கொன்றான். அவனை நம்ப முடியாது”

சிதி ஜோஹர் யோசித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

1 comment:

  1. சிதி ஜோஹர் உண்மையிலே சிவாஜிக்கு சரியான வீரன் தான்... படையை நடத்திய விதம் அருமை...

    ReplyDelete