சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 10, 2019

சத்ரபதி 76


ப்சல்கானின் மரணம் குறித்தும், பீஜாப்பூர் பெரும்படையின் தோல்வியைக் குறித்தும் தகவல் அறிந்த பின் ஜீஜாபாயை விட அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டவராக ஷாஹாஜி இருந்தார். மகன் சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் அவர் அடைந்த துக்கம் அளவிட முடியாதது. மூன்று மகன்கள் அவருக்கிருந்த போதும் மூத்த மகனை அவர் நேசித்தது போல மற்ற மகன்களை அவர் நேசித்ததில்லை. சிவாஜி எல்லா விதங்களிலும் சாம்பாஜியை விடச் சிறந்தவனாக இருந்த போதும், வெங்கோஜி அவருடைய செல்ல இளைய மகனாக இருந்த போதும் கூட சாம்பாஜியின் இடத்தை அவர் மனதில் பிடித்ததில்லை. எல்லா நேரங்களிலும் அவருடனே இருக்க ஆசைப்பட்டு அவருடனேயே இருந்த அந்த மூத்த அன்பு மகன் சூழ்ச்சியால் மரணம் அடைந்த போது அவரின் இதயத்தின் ஒரு பகுதியும் அவனுடனே சேர்ந்து மரித்தது போல் உணர்ந்தவர் அவர். மனைவியிடம் கூட விட்டுக் கொடுக்காமல் தன்னுடனே அழைத்து வந்த அந்த அன்பு மகனை மரணத்திடம் விட்டுக் கொடுக்க நேர்ந்ததை அவரால் சகிக்க முடிந்திருக்கவில்லை. நாள் பல கழிந்த போதிலும் ஒவ்வொரு நாளும் அவன் நினைவும், அவன் மரணமடைந்த விதமும் ஆறாத ரணமாய் அவர் இதயத்தை வேதனைப்படுத்தி வந்தது.

அந்த ஆழமான வேதனைக்கு மாமருந்தாய் இருந்தது அப்சல்கானின் மரணச் செய்தி. அந்தச் செய்தியை விரிவாகவும், சம்பவங்களின் போக்கை மிக நுணுக்கமாகவும் கேட்டறிந்த ஷாஹாஜி பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சாம்பாஜி வாழ்ந்த நாள் வரையில் ஒருநாளும் தம்பி தன்னை விட உயர்வாக இருப்பதற்குப் பொறாமை பட்டதில்லை. அதில் ஆனந்தமே அவன் அடைந்திருக்கிறான். இப்போது அவன் மரணத்திற்குக் காரணமானவனை அவன் தம்பி பழிவாங்கியதில் அவன் ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்று உறுதியாக அந்தத் தந்தை நம்பினார். நிறைந்த மனத்துடன் அவர், செய்தி கொண்டு வந்த வீரனிடம் சொன்னார். “இதை விட மிகநல்ல செய்தியை சமீப காலங்களில் நான் கேட்க நேர்ந்ததில்லை. இந்தத் தந்தையின் மனம் நீண்ட காலத்திற்குப் பின் நிறைந்திருக்கிறது என்று என் மகனிடம் சொல் வீரனே. அவனுடைய அண்ணனும் ஆத்ம சாந்தி அடைந்து மேலுலகில் இருந்தே அவனை ஆசிர்வதிப்பான் என்று நான் நம்புவதாகவும் தெரிவி. அவனுடைய மூதாதையர்களின் ஆசியும், எங்களுடைய ஆசிகளுடன் அவனுக்கு என்றென்றைக்கும் துணையிருக்கும் என்று சொல்”


ப்சல்கானின் மரணச் செய்தியில் ஜீஜாபாயும் ஷாஹாஜியும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் என்றால் ஆதில்ஷாவும், அவன் தாயும் பெருந்துக்கம் அடைந்தனர். கேள்விப்பட்டதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. மூன்று நாட்கள் தர்பார் கூட்டப்படவில்லை. அந்த நாட்களில் ராஜமாதா உணவு உட்கொள்ளவில்லை. சுல்தான் அலிஆதில்ஷாவும் மனமுடைந்து போயிருந்தான். அப்சல்கானை ராஜ உபசாரத்துடன் வழியனுப்பி வைத்த பீஜாப்பூர் பெரும் சோகத்தில் மூழ்கியது. மக்கள் என்னேரமும் சிவாஜி பீஜாப்பூர் மீது படையெடுத்து வரக்கூடும் என்று பேசிக் கொண்டது சுல்தான் காதிலும் விழுந்து அவனை அது நிறையவே அவமானப்படுத்தியது. முகலாயப் பேரரசு படையெடுத்து வரக்கூடும் என்று பயப்பட்டால் அது இயல்பு. முன்னமொரு முறை அப்படி அவன் தந்தை காலத்தில் முகலாயப்படை பீஜாப்பூரில் நுழைந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஔரங்கசீப் தலைமையில் முகலாயப்படை எல்லை வரை வந்து பயமுறுத்தி இருக்கிறது. ஆனால் அதெல்லாம் வலியவனிடம் மெலிந்தவன் அச்சப்படுவது போல இயல்பானதே. ஆனால் சிவாஜி படையெடுத்து வருவான் என்று மக்கள் பயப்பட ஆரம்பிப்பது சுல்தானுக்கு மிகவும் கேவலமான பின்னடைவு என்றே தோன்றியது. பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்த ஒருவன் பீஜாப்பூர் ராஜ்ஜியத்தையே பயமுறுத்துமளவு விஸ்வரூபம் எடுத்திருப்பதை சகிக்க முடியாத அவன் சிவாஜியை அழிக்க அடுத்து என்ன வழி என்று சிந்திக்க ஆரம்பித்தான்.


ந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படா விட்டாலும் கூட ஔரங்கசீப்பும் நடந்து முடிந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்தான். பீஜாப்பூர் சுல்தான், சிவாஜி இருவரில் எவர் வென்றாலும் அது ஒருவிதத்தில் தனக்கு லாபமே என்றும், மிஞ்சியவரை எதிர்காலத்தில் சமாளித்தால் போதும் என்றும் கணக்குப் போட்டிருந்த ஔரங்கசீப் தன் கணக்கில் பிழையை மெல்ல உணர்ந்தான்.

ஔரங்கசீப்பிடம் பல குறைகள் இருந்தாலும் அந்தக் குறைகளில் அறிவின் குறைவு ஒன்றாக இருக்கவில்லை. மனிதர்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் எடை போடுவதில் மகா சமர்த்தன் அவன். இந்த முகலாயச் சாம்ராஜ்ஜியம் அவன் வசப்பட்டதே அந்தத் திறனாலும், விரைவாகவும், சரியாகவும் செயல்படத்தயங்காத தன்மையாலும் தான். நடந்ததை எல்லாம் கூர்ந்து பார்க்கும் போது சிவாஜி என்கிற தனிமனிதன் பீஜாப்பூர் என்ற ராஜ்ஜியத்தை விட அபாயகரமானவன் என்று ஔரங்கசீப்பின் பேரறிவு எச்சரித்தது.

சிவாஜி அரசனின் மகன் அல்ல. ராஜ்ஜிய அதிகாரத்துடன் பிறந்தவனும் அல்ல. கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக ஆரம்பித்தவன் அவன். இன்று மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறான். அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் அல்ல என்பதையும், சூழ்நிலைகளும் அவனுக்குச் சாதகமாக இருக்கவில்லை என்பதையும்  ஔரங்கசீப் உணர்ந்தே இருந்தான். சிவாஜிக்கு அசாதாரண அறிவும், தைரியமும் மட்டுமல்லாமல் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் தனித்திறமையும் இருந்ததே அவன் அடைந்து வரும் வெற்றிகளுக்குக் காரணம் என்பதை ஔரங்கசீப் உணர்ந்தான்.

சிவாஜியை அறிந்த மனிதர்களிடம் ஔரங்கசீப் பேசிப் பார்த்தான். எல்லோரும் சிவாஜியை உயர்வாகவே பேசினார்கள். நடந்து முடிந்த பிரதாப்கட் போரில் சிவாஜி நடந்து கொண்டதை எல்லாம் துல்லியமாகக் கேட்டறிந்து கொண்ட போது ஔரங்கசீப்பால் சிவாஜியின் அதிபுத்திசாலித்தனத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சரணடைந்தவர்களைத் துன்புறுத்தாமல், அடிமைகளாக்கிக் கொள்ளாமல்  மரியாதையுடன் வழியனுப்பியதில் நல்லெண்ணத்தை விட புத்திசாலித்தனத்தையே ஔரங்கசீப் பிரதானமாகப் பார்த்தான். உணவு அளித்து, காயங்களுக்குச் சிகிச்சையும் அளித்து, அவமானப்படுத்தாமல் வழி அனுப்பி வைத்தவர்களில் நிறைய பேர் பிறகு சிவாஜியின் படையிலேயே சேர்ந்து கொண்டதை அதற்கு உதாரணமாக ஔரங்கசீப் பார்த்தான். அப்படி சிவாஜியுடன் இணையாமல் பீஜாப்பூர் போன வீரர்களும், சுந்தர்ராவ் காட்கே போன்ற படைத்தலைவர்களும் இனியொரு முறை சிவாஜியுடன் போர் புரிய நேர்ந்தால் எந்த அளவு மூர்க்கமாக சிவாஜியை எதிர்த்துப் போரிட முடியும் என்று யோசித்த போது ஔரங்கசீப்பின் கணக்கில் சிவாஜியின் நல்ல மனதை விடச் சாணக்கியத் தனமே மேலோங்கித் தெரிந்தது.

அப்சல்கானிடம் வீரமும், சூழ்ச்சியும் இருந்த அளவுக்கு அறிவில்லை என்பது ஔரங்கசீப்பின் கணிப்பாக இருந்தது. அறிவு சரியாக இருந்திருந்தால் பிரதாப்கட் கோட்டை வரை பீஜாப்பூர் படையை நகர்த்திக் கொண்டு போயிருக்க மாட்டான். எதிரியை எடைபோடுவதில் அப்சல்கான் பெரும்பிழை செய்தது தான் அவன் உயிரையும் பறித்து, பீஜாப்பூருக்கு  தோல்வியையும் அளித்திருக்கிறது என்று ஔரங்கசீப் நினைத்தான். யோசித்துப் பார்த்ததில் முகலாயர்களிடமே கூட சிவாஜி தந்திரமாகத் தான் நடந்து கொண்டிருப்பது புரிந்தது. ஷாஜஹானிடம் தந்தைக்கு உயிர்ப்பிச்சை வாங்கிய சிவாஜி காரியம் முடிந்ததும் முன்பு வாக்களித்தபடி அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்ளவில்லையே. அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் நல்ல உறவில் இருக்கும் போதே ஜுன்னார் அகமதுநகரைக் கொள்ளை அடித்துக் கொண்டும் போயிருக்கிறானே…..

படைவலிமை குறைவாக இருந்தாலும் சிவாஜியே பீஜாப்பூர் சுல்தானை விட ஆபத்தானவன், உண்மையான தலைவலியாக மாற முடிந்தவன் என்பதை ஔரங்கசீப் மெல்ல உணர்ந்தான். அவனிடம் சிவாஜியைப் பற்றிப் பேசியவர்கள் சிவாஜியின் நண்பர்களும், படைத்தலைவர்களும், வீரர்களும் அவனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்ததைச் சொன்னார்கள். அவர்களில் பலரும் சிவாஜிக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் என்று கேள்விப்பட்ட போது ஔரங்கசீப் ஒரு கணம் பொறாமைப்பட்டான்.

மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக இருந்த போதும் ஔரங்கசீப் அப்படி அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாரக இருப்பவர்கள் என்று யாரையும் உறுதியாகச் சுட்டிக்காட்ட முடியாத நிலைமையில் இருப்பதை யோசித்துப் பார்த்தான். நிறைய பயம், வெறுப்பு இரண்டையும் மட்டுமே அவன் மனிதர்களிடம் இதுவரை சம்பாதித்திருக்கிறான். அவன் தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் யாருமே அவனை நேசிப்பவர்கள் அல்ல. சில காலம் முன்பு தான் ஔரங்கசீப் மூத்த சகோதரன் தாரா ஷுகோவை சிரத்சேதம் செய்து சகோதரி ரோஷனாரா கேட்டுக்கொண்டபடி அண்ணனின் தலையை சிறையிலிருந்த தந்தைக்கு அனுப்பி வைத்தான். மூத்த மகன் தலையைப் பார்த்து மூர்ச்சையான ஷாஜஹான் சில நாட்கள் சாப்பிடவில்லை.

அப்சல்கானின் தலையைத் தாயிற்கு அனுப்பி வைத்த சிவாஜி குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் ஒரு மாவீரனாய் காட்சி அளிக்கையில் ஔரங்கசீப் கொடூரனாகவே இன்று பார்க்கப்படுகிறான். ஏன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம் என்று தெரியாமலேயே ஔரங்கசீப் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. இன்று சகோதரி ரோஷனாரா மட்டும் அவனை மிக நேசிக்கிறாள் என்ற போதும் அவள் அன்பு, வெல்லக்கூடியவன் எவன் என்று அறிந்து அவனை நேசித்து, அவன் பின் நிற்கும் புத்திசாலித்தனமாகவே அவனுக்குத் தோன்றியது. அவன் அடிக்கடி உணரும் தனிமையை அந்தச் சமயத்தில் உணர்ந்த ஔரங்கசீப் மனதைக் கஷ்டப்பட்டு திசை திருப்பினான்.

அலி ஆதில்ஷா இனி சும்மா இருக்க மாட்டான், அப்படிச் சும்மா இருக்க முடியாது என்று ஔரங்கசீப் அறிவான். எதாவது செய்து அலி ஆதில்ஷா சிவாஜியை ஒடுக்கினால் நல்லது என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். ஒருவேளை அது நடக்கா விட்டால் சிவாஜியைக் கட்டுப்படுத்தி வைப்பது தான் தனக்கு நல்லது என்று தீர்மானித்த அவனது கவனம் சிவாஜிக்கும் அலி ஆதில்ஷாவுக்கும் இடையே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்றறியும் ஆவலில் தங்க ஆரம்பித்தது.


(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. ஒரே சம்பத்தினை ஒவ்வொருவரும் எந்த கோணத்தில் பார்க்கிறார்கள்...? என்ன புரிந்து கொண்டார்கள்...??
    என்பதை கூறிய விதம் அருமை...
    அருமை....

    ReplyDelete
  2. We could feel with the historical characters and this makes chatrapathi more enjoyable.

    ReplyDelete