சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 17, 2019

சத்ரபதி 77


ரங்கசீப் எதிர்பார்த்தபடியே சும்மா இருந்து விட முடியாத அலி ஆதில்ஷா சிவாஜியை அடக்க வழியைத் தேடிக் கொண்டிருந்த போது சிவாஜி நான்கு சிறிய கோட்டைகளையும், பெரிய வலிமையான கோட்டைகளான பன்ஹாலா கோட்டையையும், கேல்னா கோட்டையையும் சிவாஜி கைப்பற்றி முடித்திருந்தான். மொத்தமாக ஆறு கோட்டைகளை இழந்த செய்தி கிடைத்தவுடன் அலி ஆதில்ஷா  நிம்மதியையும் தூக்கத்தையும் இழந்தான். கடைசியில் ரஸ்டம் ஜமான் என்ற அனுபவம் வாய்ந்த தளபதியை சிவாஜியை வெல்ல அனுப்பி வைத்தான். ரஸ்டம் ஜமான் பன்ஹலா கோட்டையின் அருகே வரும் வரை அமைதி காத்த சிவாஜி ரஸ்டம் ஜமான் படையுடன் நெருங்கியதும் தீவிரமாகத் தாக்கித் துரத்தியடித்தான். பீஜாப்பூர் நகர எல்லை வரை ரஸ்டம் ஜமானைப் பின் தொடர்ந்து வந்து வரும் வழியில் கிடைத்த செல்வத்தை எல்லாம் சிவாஜி எடுத்துக் கொண்டு போனது அலி ஆதில்ஷாவுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல வேதனைக்குள்ளாக்கியது.

அடுத்தது யாரை அனுப்ப என்று அவன் யோசித்த போது அப்சல்கானின் மூத்த மகன் ஃபசல்கான் சிவாஜியைப் பழிவாங்கத் துடிப்பதாகச் சொன்னான். ஆனால் அவனும் பீஜாப்பூர் படைக்குத் தனியாகத் தலைமை தாங்கிப் போக விரும்பவில்லை. சிவாஜியைச் சமாளிக்கத் தன் ஒருவன் தலைமை மட்டும் போதாது என்று அவன் நினைத்தான். அனுபவம் வாய்ந்த மாவீரர்களுடன் சேர்ந்து இருமுனை அல்லது மும்முனைத் தாக்குதல் நடத்தினால் தான் சிவாஜியை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று அவன் சொன்னான்.

அலி ஆதில்ஷா தன் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினான். அலி ஆதில்ஷாவின் மூத்த ஆலோசகர் ஒருவர் ஃபசல்கான் சொல்வது சரியே என்று தெரிவித்தார். “அரசே. அரைகுறை முயற்சிகள் தோல்வியிலேயே முடியும். அடிக்கடி தோல்வியுறுவது படையின் மனோபலத்தைச் சிதைத்து விடும். அதனால் ஃபசல்கான் சொன்னபடியே இரண்டு மூன்று அணிகளாகப் பல பக்கங்களிலிருந்தும் தாக்குதல் நடத்துவதே புத்திசாலித்தனம்”

அலி ஆதில்ஷா கேட்டான். “ஃபசல்கான் அல்லாமல் வேறு யாரை இதில் சேர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“சிவாஜியைச் சமாளிக்க வீரமும், பலமும் மட்டுமே போதுமானதல்ல என்பதை அப்சல்கானை அனுப்பிய அனுபவத்திலேயே நாம் அறிந்து கொண்டோம். சிவாஜியைச் சமாளிக்க அவனைப் போலவே அதிசாமர்த்தியமும், மனவலிமை படைத்தவனும் தான் நம் படைக்குத் தலைமை தாங்கத் தேவை. அதையெல்லாம் பார்க்கையில் சிதி ஜோஹர் என் நினைவுக்கு வருகிறான்…..”

சிதி ஜோஹர் பெயரைக் கேட்டதும் அலி ஆதில்ஷாவின் நெற்றி சுருங்கியது. சிதி ஜோஹர் பீஜாப்பூர் ராஜ்ஜியத்திற்குட்பட்ட கர்னூல் பகுதியின் தலைவன். சில காலமாக அவன் ஒத்துழைப்பு போதவில்லை என்று அலி ஆதில்ஷா எண்ணி அவனுடன் பிணக்கம் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட குறுநில மன்னனைப் போல் சிதி ஜோஹர் இயங்க ஆரம்பித்திருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.

மூத்த ஆலோசகர் ஆதில்ஷாவிடம் சொன்னார். ”மன்னா. அறிவும், ஆற்றலும் கொண்டவன் எப்போதும் அனுசரணையும் கொண்டவனாக இருப்பதில்லை. இப்போதைக்கு சிவாஜி என்ற நம் மிகப்பெரிய எதிரியைச் சமாளிக்க சிதி ஜோஹர் போன்றவனே சரியானவன். நீங்கள் அவனை அழைத்து இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் அவனும் தன் ஆற்றலை நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வான். இங்கிருக்கும் மற்றவர்கள் சிவாஜியை எதிர்க்கப் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு அந்தத் திறனும் இல்லை என்பதே உண்மை.”

அலி ஆதில்ஷா சிறிது தயங்கி விட்டுப் பிறகு சம்மதித்தான். சிவாஜியை யாராவது அடக்கினால் சரி என்ற மனநிலையே அவனிடம் அப்போது இருந்தது.


கேல்னா கோட்டையைக் கைப்பற்றிய பிறகு அதற்கு விஷால்கட் என்று சிவாஜி பெயரிட்டிருந்தான். விசாலமான கோட்டை என்ற பொருளில் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.  சமீபத்தில் அவன் கைப்பற்றிய பன்ஹாலா மற்றும் விஷால்கட் கோட்டைகளில் தான் சிவாஜி மாறி மாறித் தங்கி வருகிறான். அந்தக் கோட்டைகளில் இருந்தபடி பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் பல பகுதிகளை அவனால் கைப்பற்ற முடியும். அந்த அளவு வசதியான இடத்தில் தான் சில மைல்கள் தொலைவிலேயே அந்தக் கோட்டைகள் இரண்டும் அமைந்திருந்தன. பன்ஹாலா கோட்டையில் அவன் தங்கியிருக்கும் போது தான் சிதி ஜோஹர், ஃபசல்கான் இருவர் தலைமைகளில் இரண்டு அணிகள் படையெடுத்து வருவதாக சிவாஜிக்குத் தகவல் வந்தது.

தகவல் கொண்டு வந்த ஒற்றன் சொன்னான். “இந்த முறை படைபலமும் பெரிதாக இருக்கிறது மன்னா”

சிவாஜி அப்சல்கான் கிளம்பிய செய்தி கேட்டு அதிர்ந்த அளவு இந்தச் செய்தி கேட்டு அதிரவில்லை. ஆனால் ஒற்றன் அவனை எச்சரித்தான். “சிதி ஜோஹர் மாவீரன் மட்டுமல்ல அரசே. எடுத்த காரியத்தை முடிக்காமல் விடாத பிடிவாதமும், விடாமுயற்சியும் கொண்டவன்.”

சிவாஜி யோசனையுடன் அந்த ஒற்றனைப் பார்த்தான். சிதி ஜோஹர் மாவீரன் என்பதைத் தவிர அவனைப் பற்றி சிவாஜி அதிகம் அறிந்திருக்கவில்லை. அவன் ஒற்றர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வரும் அறிவுரை “பாதகமான அம்சங்களை என்னிடம் தெரிவிக்கத் தயங்காதீர்கள்” என்பது தான். சாதகமான அம்சங்களை ஒரு தலைவன் அறிந்திருப்பதை விடப் பாதகமான அம்சங்களை ஒரு தலைவன் அறிந்திருப்பது மிக முக்கியம் என்று சிவாஜி நினைத்தான். தோல்விக்கான விதைகளைக் கண்டுபிடிப்பதும், வளர்வதற்கு முன்பே அழிப்பதும் அத்தியாவசியம் என்று நினைப்பவன் அவன். சிதி ஜோஹர் பற்றி ஒற்றன் தெரிவித்த அந்தக் கருத்தை அவன் அலட்சியப்படுத்தவில்லை. ஆனாலும் போதுமான அளவு முக்கியத்துவம் தரவும் தவறினான்….


சிதி ஜோஹர் உற்சாகமாகத் தான் பீஜாப்பூரை விட்டுக் கிளம்பி இருந்தான். தற்போதைய சுல்தான் அலி ஆதில்ஷாவுடனான அவன் உறவு சுமுகமாக இல்லை என்றாலும் அலி ஆதில்ஷா அவனை அழைத்து இந்தப் பொறுப்பைக் கொடுத்து இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மிக உயர்ந்த பதவியையும், சில கோட்டைகளையும், பொன்னும், மணியும், செல்வமும் தந்து கௌரவிப்பதாக உறுதியும் அளித்தது அவனை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது. குறுகிய நிலப்பகுதியில் ஆண்டு கொண்டிருந்தவனை ராஜ்ஜியத்தின் கதாநாயகனாக உயர்த்தி விட்ட அலி ஆதில்ஷா மீது அவனுக்கு முன்னம் இருந்த பிணக்கு தீர்ந்தது. சிவாஜியைப் பிடித்து வரவோ, சாகடிக்கவோ முடியா விட்டால் குறைந்த பட்சம் பன்ஹாலா கோட்டையையாவது மீட்டுக் கொடுக்கும்படி அலி ஆதில்ஷா சிதி ஜோஹரிடம் கேட்டுக் கொள்ள சிதி ஜோஹர் சம்மதித்தான்.

சிதி ஜோஹர் புத்திசாலி. மாவீரன். கடும் உழைப்பாளி. நல்ல தலைவன். அவன் எப்போதும் களத்தில் இருந்து பணியாற்ற சலிக்காதவன். இந்த முயற்சியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று எண்ணியவன் கிளம்புவதற்கு முன்பே ஃபசல்கானிடம் சிவாஜியைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டான்.

“உங்கள் திட்டம் என்ன தலைவரே?” என்று ஃபசல்கான் கேட்டான்.

“பல்ஹானா கோட்டையை நாம் முற்றுகையிடப் போகிறோம். அங்கு தான் சிவாஜி தற்போது இருப்பதாக ஒற்றர்கள் மூலம் செய்தி கிடைத்திருக்கிறது. முன்னால் என் படைப்பிரிவு போகட்டும். பின்னால் உன் படைப்பிரிவு இருக்கட்டும். என்ன ஆனாலும் சரி. நாம் சிவாஜியைத் தப்ப விடக்கூடாது.” சிதி ஜோஹர் சொன்னான்.

ஃபசல்கான் கேட்டான். “ஒருவேளை சிவாஜி அங்கில்லா விட்டால்? அவன் விஷால்கட் கோட்டையிலும் சில சமயங்களில் தங்குவதாக எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது”

சிதி ஜோஹர் சொன்னான். “என் ஒற்றன் சிவாஜி பன்ஹாலா கோட்டையில் தான் தற்போது தங்கியிருப்பதாகத் தெரிவித்தான். ஒருவேளை சிவாஜி பன்ஹாலா கோட்டையிலிருந்து விஷால்கட்டிற்கு நாம் போவதற்குள் இடம் பெயர்ந்தாலும் ஒற்றர்கள் மூலம் செய்தி கிடைக்கும். அப்படி நேர்ந்தால் பின் அதற்குத் தகுந்தாற்போல் நம் திட்டத்தை மாற்றிக் கொள்வோம்.”


ஃபசல்கான் தலையசைத்தான். அவன் சில நாட்களாகப் பழகும் சிதி ஜோஹரிடம் அவன் கண்ட சிறந்த பண்பு சிதி ஜோஹரிடம் எந்த நேரத்திலும் என்ன செய்வது என்ற தெளிவு உறுதியாக இருந்தது தான். முடிவெடுக்கும் வரை நிறைய யோசிக்கும் அவன் முடிவெடுத்த பின் மாறாமல் ஒரே நிலையில் செயல்பட முடிந்தவனாகவே இருந்தான். ஃபசல்கானுக்கு இவன் ஜெயிப்பான் என்று தோன்றியது. தந்தையைக் கொன்ற சிவாஜியைப் பழிவாங்க இவன் கண்டிப்பாக உதவுவான் என்று நம்பிக்கை பிறந்தது.


(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Interesting. Eager to know how Sivaji tackles sidhi johar.

    ReplyDelete
  2. சிவாஜியை இந்தமுறை தோற்கடித்து விடுவார்களோ ...?
    அனைத்து குறிப்புகளையும் பார்த்தால்...அப்படியே தோன்றுகிறது...

    ReplyDelete