மாஸ்டர் பத்மாவதி பக்தியுடன்
பரிமாறியதை ரசித்து சாப்பிட்டார். சாப்பிடும்
போது மணீஷ் மரணம் உட்பட
பல விஷயங்களை அவர்கள் பேசினார்கள். பேச்சோடு
பேச்சாக இனி இமயமலைக்கே நிரந்தரமாய்
சென்று விடும் தன் முடிவையும்
மாஸ்டர் தெரிவித்தார். க்ரிஷிடம்
முகம் வெளிக்காட்டாத வாட்டத்தை உதய் உணர்ந்தான். மற்றவர்களும் வருத்தப்பட்டார்கள். கமலக்கண்ணன் க்ரிஷ், ஹரிணி இருவரையும் காட்டிக் கேட்டார். “இவங்க கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க இல்லையா?”
முகம் வெளிக்காட்டாத வாட்டத்தை உதய் உணர்ந்தான். மற்றவர்களும் வருத்தப்பட்டார்கள். கமலக்கண்ணன் க்ரிஷ், ஹரிணி இருவரையும் காட்டிக் கேட்டார். “இவங்க கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க இல்லையா?”
“என் ஆசிர்வாதம் வரும்”
என்று சுருக்கமாய் மாஸ்டர் சொன்னார்.
சாப்பிட்ட பிறகு தனியாக ஹரிணி
மாஸ்டரிடம் பேசினாள். மாஸ்டர் ஒரேயடியாக க்ரிஷை
விட்டுப் போவது அவளுக்குக் கவலையைத்
தந்தது. இப்போது க்ரிஷ் மனதையும்
நேரத்தையும் முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிற பிரச்னையை க்ரிஷ் தனியே சந்திக்க
முடியுமா என்று கவலையோடு அவள்
கேட்டாள். அவனால் முடியும் என்று
அவர் உறுதியாகச் சொன்னார்.
“மாஸ்டர் திரும்பத் திரும்ப
கேட்கறேன்னு நீங்க தப்பா நினைக்கக்கூடாது.
சில நேரங்கள்ல க்ரிஷோட தியானம், தனிமையில்
யோசனை எல்லாம் என்னைப் பயமுறுத்துது.
நான் அவனோட ஈடுபாடுல, கடமைகள்ல
குறுகிட விரும்பல. ஆனா அதே சமயத்துல
அவனை அதுல ஒரேயடியா இழந்துடவும்
விரும்பலை….. மணிக்கணக்குல, நாள்கணக்குலன்னு இப்ப எல்லாம் அவன்
மூழ்கிப் போயிடறப்ப ரொம்ப பயமா இருக்கு
மாஸ்டர்….. எனக்குன்னு அவன் வாழ்க்கைல ஒரு
இடம் இருக்குமில்லையா…. அவனை நான் இழந்துட
மாட்டேனில்ல?” கேட்கும் போது அவள் கண்களில்
ஈரம் தெரிந்தது. எத்தனை தான் புரிதலுடன்
அவனுக்குத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருந்தாலும் சில
நேரங்களில் அவள் மனம் இப்படிப் பயமுறுத்தத் தான் செய்தது.
மாஸ்டர் அன்போடு சொன்னார்.
“என்கிட்ட அபூர்வ சக்திகளைப் படிக்க
வர்றப்ப கூட அதுக்குக் காதல்
தடையா இருக்குமான்னு க்ரிஷ் கேட்டான் ஹரிணி.
ஒருவேளை நான் தடையாயிருக்கும்னு சொல்லியிருந்தா
அவன் அந்த சக்திகளே வேண்டாம்னு
விலகற மனநிலையில் இருந்தான். அந்த அளவுக்கு உன்னை உயிருக்குயிரா அவன்
நேசிக்கிறான். அவன் மனசுல உன் இடத்தை வேற யாரும்,
வேற எதுவும் எடுத்துக்க முடியாது
பயப்படாதே. இப்ப அவன் நேரத்தை
அதிமுக்கியமான விஷயங்கள் எடுத்துகிட்டிருக்குங்கறது உண்மை தான். அது
அவன் உதற முடியாத கடமைங்கறத
ஞாபகம் வச்சுக்கோ. உதாரணத்துக்கு உன் அம்மாவுக்கோ, அவன்
அம்மாவுக்கோ உடம்பு முடியாம சீரியஸா
இருக்குன்னு வச்சுக்கோ. எல்லாத்தையும் விட அதிகமா ஆஸ்பத்திரில
நீ நேரம் செலவழிச்சா அவன்
அதை நீ அவனுக்குக் காட்டற
அலட்சியமா நினைக்க மாட்டான். அதே
மாதிரி அவன் ஆஸ்பத்திரில அதிக
நேரம் செலவழிச்சா அது உன்னை அலட்சியப்
படுத்தற மாதிரின்னு நீ நினைக்க மாட்டாய்.
இல்லையா. இது அது மாதிரி
தான்னு நெனச்சுக்கோ. அதை விடக் கோடி
மடங்கு முக்கியமான ஒரு கடமைல அவன்
தனியா போராடிகிட்டு இருக்கான். அது முடிஞ்சவுடனே அவன்
உன் க்ரிஷா கண்டிப்பா திரும்புவான்.”
மாஸ்டர் வார்த்தைகளில் அவள்
மனம் தைரியப்பட்டது. கண்கலங்க அவள் தலையசைத்தாள். சிறிது
நேரம் அங்கிருந்து விட்டு மாஸ்டர் எல்லோரிடமும்
விடைபெற்றார். பத்மாவதி கடைசியாக அவரிடம் ஒருமுறை மனமுருக
வேண்டினாள். “உதய்க்கு ஒரு நல்ல பொண்ணு
மனைவியா வரணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க சுவாமி” புன்னகையுடன் உதய்க்கு
அப்படியே ஆசி வழங்கி விட்டு க்ரிஷிடம்
விடைபெறும் போது மட்டும் அவருக்கும்
கண்கலங்கியது. அவனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த
முடியாமல் தடுமாறினான்….. அவர் போய் விட்டார்.
மாணிக்கம் தன் மகனின்
அறையில் அமர்ந்திருந்தார். அவர் கையில் மகன்
கடைசியாக எழுதிய “என்னை மன்னித்து
விடுங்கள் அப்பா” கடிதம் இருந்தது.
ஒரு அன்பு மகன் தந்தையிடம்
ஒரேயடியாக விடைபெற்றுக் கொள்ளும் விதமா இது என்று
அவர் மனம் கதறியது. அவன்
அறை நிறைய அடுக்கி வைத்திருந்த
மெடல்களும், கேடயங்களும் பார்க்கும் போது மனம் ரணமானது.
எப்படி வெற்றி பெற்றுக் கொண்டு
முன்னேறி வந்தவன் ஒரு பெண்
தனக்கில்லை என்றானவுடன் பின்னடைந்ததை அவரால் புரிந்து கொள்ள
முடியவில்லை. அப்படிப் பின்னடைய ஆரம்பித்தவனை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மேலும் அழுத்திக் கொன்று
விட்டன….. அவருக்கு எல்லாமாய் அவன் ஒருவன் தான்
இருந்தான். அவனும் இப்போது போய்
விட்டான். இப்போது மிஞ்சி இருப்பதெல்லாம்
வெறுமையே…
சங்கரமணி தன் இரண்டாம் மகளின்
குழந்தைகளை மணீஷுக்கு மாற்றாக இருக்க வைக்க
முயன்று தோற்றுப் போனார். மாணிக்கம் அவர்களிடம்
முகம் பார்த்தும் பேசவில்லை. இரண்டு நாள் இருந்து
பார்த்து விட்டு அவர்கள் போய்
விட்டார்கள். எதற்கும் அசையாத, அமைதியிழக்காத மன
உறுதி படைத்தவனாக மருமகனை எப்போதும் நினைத்துப்
பெருமைப்படும் சங்கரமணி மருமகன் நடைப்பிணமான விதத்தை
கவலையோடு கவனித்தார். இப்போது மணீஷின் அறையில்
மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் மாணிக்கத்தை எப்படி பழைய மாணிக்கமாக
மாற்றுவது என்று கவலையோடு யோசித்தபடி
உள்ளே நுழைந்தார்.
“மாணிக்கம் சீஃப் செக்ரட்டரி போன்
செஞ்சார். கையெழுத்து போட வேண்டிய முக்கியமான
ஃபைல்கள் நிறைய இருக்காம்…..”
“ம்”
“பாரு, மணீஷ் எனக்கும்
பேரன் தான். அவன் போனது
எனக்கும் பாதி உசுரு போன மாதிரி
தான். பழுத்த கிழம் நான்
குத்துக்கல்லா இன்னும் இருக்கேன். வாழ
வேண்டிய வயசுல அவன் போனது
எனக்கும் தாங்க முடியல தான்.
ஆனா எவ்வளவு அதிகாரம் இருந்தாலும்
எமன் கிட்ட டீல் போடற
வசதி யாருக்கும் இல்லையே”
மாணிக்கம் மௌனமாகவே அமர்ந்திருந்தார். சங்கரமணி சொன்னார். “இப்பவே கமலக்கண்ணன் கை
ஓங்கியிருக்கு. நீ இதுல இருந்து
மீள மாட்டேன்னு நம்ம எம் எல்
ஏக்களே பேச ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப நாம
சுதாரிக்கலைன்னா கமலக்கண்ணன், உதய் கை ஓங்கிடும்.”
“பரவாயில்ல.
நானே ராஜினாமா செய்யணும்னு தான் முடிவு செய்திருக்கேன்”
மாணிக்கத்தின்
வார்த்தைகள் அவரைக் கத்தியாக வெட்டின. “என்னடா,
பிள்ளை செத்ததுல உனக்கு புத்தி பேதலிச்சுப்
போச்சா? நாம எந்த நிலைமைல
இருக்கோம் தெரியுமா உனக்கு?”
“யாருக்காக எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேனோ அவனே போயிட்டான். இனி
இதுக்கு மேல ஆகறதுக்கு என்ன
இருக்கு மாமா?”
“என்னடா சொல்றே?” சங்கரமணி
குரல் நடுங்கக் கேட்டார்.
“போதும் மாமா…. எல்லாமே
போதும்” மிக
உறுதியாகச் சொன்னார் மாணிக்கம்.
வாஷிங்டனில் நவீன்சந்திர ஷா விஸ்வத்தை அவன்
தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து சந்தித்தான். அறையின் மேசையில் விஸ்வம் வைத்திருந்த
முக்கோணத்திற்குள் நெற்றிக்கண் சில நிமிடங்களிலேயே அவன் பார்வையில் விழுந்தது. “இது
எங்கே வாங்கினாய்?”
“வாங்கினதல்ல. கிடைச்சது” என்று சாதாரணமாக
விஸ்வம் சொன்னான்.
அதைக் கையில் எடுத்துப் பார்த்தபடியே நவீன்சந்திர
ஷா கேட்டான். “எங்கே கிடைச்சது?”
“இமயமலையில….” என்று அதொன்றும் பெரிய விஷயமல்ல
என்பது போல் விஸ்வம் சொன்னான்.
“எப்படிக் கிடைச்சது? விவரமாய் சொல்லேன்”
“இந்த
ஒருவாரமாய் எனக்கு இமயமலைல ஒரு குகைக்குள்ளே இந்தச் சின்னம் மின்னுகிற மாதிரி கனவு
தினமும் வருது. அந்த மலைப்பகுதியோ ரொம்ப தத்ரூபமாய் மனசுல பதிஞ்சுது. எனக்குத் தெரிஞ்ச
ஒருத்தர் இமயமலைக்கு அடிக்கடிப் போறவர். அவர் கிட்ட மனசுல பதிஞ்ச வர்ணனைகளைச் சொல்லி
அப்படி ஒரு இடம் இருக்கான்னு கேட்டேன். அவர் இருக்குன்னு ஆச்சரியத்தோட சொன்னார். உடனே
கிளம்பிட்டேன்…” என்று ஆரம்பித்த விஸ்வம் மற்ற விவரங்களை உண்மையாகவே சொன்னான். அந்தத் தவசி அவன் கம்பளியைப் பிடித்துக் கொண்டதையும், அவன் சக்தியை உருவுவது போல உணர்ந்ததையும் மட்டும் சொல்லாமல் தவிர்த்தவன் கடைசியில் அந்தத் தவசியே சிவன் நெற்றியில் இருந்து அந்தச் சின்னத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு உயிர் விட்டார் என்று முடித்தான்.
நவீன்சந்திர ஷா திகைப்புடன் எல்லாவற்றையும்
கேட்டு விட்டுச் சொன்னான். “நூறு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு இல்லுமினாட்டி ஜெர்மனில
இருந்து இமயமலைக்குத் தவம் செய்யப் போனதா பலரும் சொல்லி இருக்காங்க. அவர் திரும்பி
வராததால் அவர் அங்கேயே சமாதி அடைஞ்சிருக்கலாம்னு பேசிகிட்டாங்க. இப்ப நீ சொல்றதைப்
பார்த்தா அவர் அந்த இல்லுமினாட்டியாகத் தான்
இருக்கணும்…..”
விஸ்வத்துக்கு இந்தத் தகவல் கூடுதல் அதிர்ஷ்டத்
தகவலாகத் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் வெகுளியாய் சொன்னான். “அந்தச் சிலையில்
இருக்கும் வரை இது சிவனின் நெற்றிக் கண் மாதிரி தான் இருந்துச்சு. நீ சொன்னதுக்கப்பறம்
தான் இது இல்லுமினாட்டியின் சின்னமும் தானேன்னு புரியுது. இது என் கைல கிடைச்சதுக்கு
என்ன அர்த்தம்னு தான் தெரியல.”
நவீன்சந்திர ஷா உடனே பரபரப்புடனும் உற்சாகத்துடனும்
சொன்னான். “நீ தான் இல்லுமினாட்டியின் தேர்ந்தெடுக்கவன். அது தான் ஆரம்பத்துலயும் உன்
கனவுல தெரிவிச்சிருக்கு. இப்பவும் இந்தச் சின்னம் உன் கனவுல வந்து அந்த இல்லுமினாட்டி
தவசி மூலமாவே உன் கைல கிடைச்சிருக்கு…. விஸ்வம் உனக்காகத் தான் இல்லுமினாட்டி காத்திருக்கு”
தான் கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகளை நவீன்சந்திர ஷா வாயாலேயே சொல்ல வைத்த திருப்தியுடன் விஸ்வம் முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டினான். இனி இந்தத் தகவல் எல்லா இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும் போய்ச் சேரும்படி இவன் பார்த்துக் கொள்வான்…..
மறுபடி அந்தச் சின்னம் ஒளிர்ந்து மங்கிய
போது நவீன்சந்திர ஷா கண்கள் விரிந்தன. விஸ்வம் தன்னையும் மீறிப் புன்னகைத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்