சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 11, 2019

சத்ரபதி 63


ரங்கசீப் முகத்தில் புன்முறுவலைக் காண்பது மிக அரிது. பேசவோ, செயல்படவோ செய்யாத நேரங்களில் எப்போதுமே அவன் யோசனையில் ஆழ்ந்திருப்பான். அந்த சிந்தனைகளின் போது கூட அவனை மறந்து புன்னகை  அவன் முகத்தை எட்டிப் பார்த்து விடாது. அப்படிப்பட்டவன் முகத்தில் சிவாஜியின் மடல் அபூர்வமாகச் சிறு புன்னகையை வரவழைத்தது.

’பீஜாப்பூருக்கு எதிராக வெல்லத் தன் படையையும் உதவிக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று சிவாஜி சொல்கிறானே. இவன் உதவி செய்து தான் வெல்ல வேண்டிய நிலையில் முகலாயப்படை இருக்கிறதா என்ன? ஆனாலும் தன் விசுவாசத்தைக் காட்டி எழுதியிருக்கும் இந்த மராட்டிய இளைஞன் கெட்டிக்காரன் தான்….. இவனை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும்…..”

யோசித்து ஒரு பதிலை சிவாஜிக்கு ஔரங்கசீப் அனுப்பி வைத்த போது அவன் சகோதரி ரோஷனாராவிடம் இருந்து ஒரு மடல் வந்து சேர்ந்தது. ஔரங்கசீப்பின் முகத்தில் கவலை ரேகைகள் படர ஆரம்பித்தன…..

முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்கும் அவரது அன்பு மனைவி மும்தாஜ் மஹலுக்கும் ஏழு குழந்தைகள். மூத்தவள் ஜஹானாரா, பின் மகன்கள் தாரா ஷிகோவ், ஷா ஷூஜா, பின் மகள் ரோஷனாரா, பின் மகன்கள் ஔரங்கசீப், முராத் பக்‌ஷ், கடைசியாக மகள் கவ்ஹாரா பேகம். கடைசி மகளின் பிரசவத்தின் போது தான் மும்தாஜ் மஹல் மரணமடைந்தாள். மூத்த மகளானதால் தாயின் இடத்தில் இருந்து தம்பிகள் தங்கைகளை ஜஹானாரா அனைவரையும் வளர்த்தாள். முகலாயச் சக்கரவர்த்தி தன் மூத்த மகளை மிகவும் நேசித்தார். மும்தாஜ் மஹல் இறந்த பின் அவருடைய மனைவிகள் மூவர் உயிரோடிருந்த போதும் பட்டத்தரசி என்பதற்கு இணையான பாதுஷா பேகம் பதவி ஜஹானாராவுக்கே அவர் தந்தார்.

அதற்கு அடுத்தபடியாக அவர் அன்பை சம்பாதித்திருந்தது மூத்த மகன் தாரா ஷிகோவ். மற்றவர்கள் எல்லோரும் பெயரளவில் மட்டுமே அவரது அன்பிற்குப் பாத்திரமாக இருந்தார்கள். ஜஹானாராவை தங்கை ரோஷனாரா மட்டுமே போட்டியாகப் பார்த்தாள். மற்றவர்கள் அவளாலேயே வளர்க்கப்பட்டவர்கள் என்பதால் தாயாகவே பார்த்தார்கள். ஆனால் மகன்களுக்குள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குப் போட்டியாகவே இருந்தார்கள். ஏனென்றால் மூத்த மகன் தான் அரசன் என்கிற வழிமுறை அவர்களிடையே இல்லை. ஷாஜஹானே அவருடைய தந்தையின் மூன்றாம் மகனாக இருந்தவர். அதனால் யார் பலசாலியோ அவர்களே சக்கரவர்த்தியாகும் நிலை இருந்ததால் சக்கரவர்த்திக்கு வயதாகிக் கொண்டு வரும் காலத்தில் அனைவரும் அடுத்த சக்கரவர்த்தியாகும் முனைப்பிலேயே இருந்தார்கள். அதில் ஔரங்கசீப் மற்றவர்களை விட அதிகமாகவே தீவிரம் காட்டினான்.

ஜஹானாரா எல்லோரிடமும் பாசம் காட்டினாள் என்றாலும் மூத்த தம்பி தாரா ஷிகோ சக்கரவர்த்தியாக வேண்டுமென அதிகம் ஆதரவு காட்டினாள். ரோஷனாரா  ஔரங்கசீப் சக்கரவர்த்தியாக வேண்டுமென்று ஆதரவு காட்டினாள். நான்கு மகன்களில் குணாதிசயங்களில் நல்லவன் என்றால் அது தாரா ஷிகோவ் தான். ஆனால் அறிவிலும், தலைமைப் பண்பிலும், வலிமையிலும் ஔரங்கசீப்  அனைவரைக் காட்டிலும் முன்னிலை வகித்தான்.

பிள்ளைகள் தலைநகரில் இருந்தால் ஆட்சியைப் பிடிக்கச் சதி செய்வார்கள் என்று நினைத்திருந்த ஷாஜஹான் நான்கு பேரையும் தொலைவில் நாலா பக்கங்களிலும் கவர்னர்களாக நியமித்திருந்தார். பிள்ளைகள் நால்வரும் நான்கு மூலைகளில் இருந்தாலும் அவர்கள் கவனம் எல்லாம் தந்தை மீதும் அரியணை மீதும் தான் இருந்தது.  தலைநகரில் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அவசியம் அனைவருக்கும் இருந்தது. ஔரங்கசீப்புக்கு அவனுக்கு ஆதரவாக இருந்த ரோஷனாரா மூலம் அவ்வப்போது தலைநகர்த் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

இப்போது ரோஷனாரா எழுதியிருந்தாள். ”…. அரண்மனையில் எல்லாமே மூடுமந்திரமாகவே இருக்கின்றன. தர்பாருக்கு இப்போதும் வந்து கொண்டிருந்தாலும் தந்தை உடல்நிலையில் தளர்ச்சி தெரிகிறது. அவரைப் பரிசோதனை செய்து விட்டு ராஜ வைத்தியர் அக்காவிடம் நிறைய நேரம் பேசி விட்டுப் போனார். நான் அக்காவிடம் சென்று என்ன விஷயம் என்று விசாரித்தேன். பாதுஷா பேகம் அவ்வளவு சீக்கிரம் ரகசியங்களை வெளியிடுபவள் அல்ல என்பது உனக்குத் தெரியும். அவள் “தந்தை உடல்நலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தளர்ச்சி வயதின் பிரச்னை என்கிறார் வைத்தியர். என்னென்ன உணவு தர வேண்டும் என்று நான் கேட்டதற்கு வைத்தியர் விரிவாகச் சொன்னார்” என்றாள். பாதுஷா பேகம் சொல்வது எந்த அளவு உண்மை என்பது அவளுக்கும் அல்லாவுக்கும் தான் வெளிச்சம்…”

ஔரங்கசீப் தலைநகரில் இருக்கும் உண்மை நிலவரத்தைச் சகோதரியின் கடிதம் மூலம் அனுமானிக்க முயன்றான். இப்போதும் ஷாஜஹான் தர்பாருக்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதால் உடனடி அபாயம் இல்லை. ஆனால் தளர்ச்சியாகத் தென்படுகிறார், ராஜ வைத்தியர் பரிசோதித்து விட்டு நிறைய நேரம் ஜஹானாராவிடம் பேசுகிறார் என்றால் ஒன்றுமே இல்லாமல் இருக்கவும் வழியில்லை. எதற்கும் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருப்பது நல்லது தான்.

ஔரங்கசீப் உடனே ரோஷனாராவுக்குக் கடிதம் எழுதினான். “பேரன்புக்குரிய சகோதரி. கூடுதலாக சக்கரவர்த்தியின் உடல்நிலை குறித்து எந்தத் தகவல் இருந்தாலும் காலதாமதம் செய்யாமல் எனக்கு உடனடியாகத் தெரிவிப்பாயாக! சகோதரர்கள் யார் அங்கு வந்தாலும் கூட அதையும் உடனே தெரிவிக்க மறந்து விடாதே…..”  


சிவாஜி தனக்கு ஔரங்கசீப் அனுப்பிய மடலைப் படித்தான். ஔரங்கசீப் பீஜாப்பூரை வெல்ல முகலாயப் படைக்கு யார் உதவியும் தேவை இல்லை என்றும் பீஜாப்பூர் அவன் கையில் கனிந்து விழ இப்போதே தயாராக இருப்பதாகவும் எழுதியிருந்தான். சிவாஜியை ஒரு முறை நேரில் சந்திக்க விருப்பமாக உள்ளதாகவும், விரைவில் சந்திக்கலாம் என்றும் எழுதியிருந்ததோடு “நீ முகலாயப் பேரரசோடு உன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறாய் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. எப்போது முறையாக எங்கள் அரசவைக்கு வந்து உனக்குக் காத்திருக்கும் பதவியைப் பெற்றுக் கொள்ளப் போகிறாய்?” என்றும் கேட்டு எழுதியிருந்தான்.

சிவாஜி ஔரங்கசீப் மற்ற சகோதரனை விட வித்தியாசப்பட்டு நிற்பதை இந்தக் கடிதத்திலிருந்தே நன்றாக உணர்ந்தான். எதையும் பாதி பாதியாய் அங்கங்கே அப்படியே நிறுத்தி விடாமல் அடுத்தது என்ன என்பதில் ஔரங்கசீப் குறியாக இருப்பது அவன் அறிவுபூர்வமான அணுகுமுறையை நன்றாகவே வெளிப்படுத்தியது. விரைவில் சந்திக்கலாம் என்றதும், எங்கள் அரசவைக்கு வந்து எப்போது பதவி பெறுகிறாய் என்று திட்டவட்டமாகக்  கேட்டதும் இந்த ஆளிடம் வார்த்தை ஜாலங்கள் நீண்ட நாட்களுக்குச் செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்தது.

இந்தப் புத்திசாலி இளவரசனைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்வதில் சிவாஜி ஆர்வம் காட்டினான். இவன் தக்காணப்பீடபூமியில் உள்ள வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்த அவன் ஒற்றர்களை அழைத்து ஔரங்கசீப் குறித்து அவர்கள் அறிந்தது அத்தனையும் சொல்லச் சொன்னான். சின்னச் சின்ன விஷயங்களையும் முக்கியமில்லை என்று சொல்லாமல் தவிர்த்து விட வேண்டாம் என்றும் தெரிவித்தான். அவர்கள் பலரும் சேர்ந்து சொன்னதன் தொகுப்பு இது தான்.

“ஔரங்கசீப் சிரிக்க மாட்டான். அவன் தந்தையைப் போல கட்டிடப் பிரியன் அல்ல. இசையிலும் அவனுக்கு ஈடுபாடு கிடையாது….. ஞாபகசக்தி மிக அதிகம்…… ஒரு முக்கிய வேலையை ஒருவனுக்குக் கொடுத்தால் அவன் அந்த வேலையைச் செய்து முடிக்கும் வரை கண்காணித்துக் கொண்டே இருப்பான். சந்தேகப் பேர்வழி….. உடன்பிறந்தவர்களிலும் ரோஷனாரா என்ற சகோதரியைத் தவிர வேறு யாருடனும் அவன் நெருக்கமாக இல்லை….. மிக எளிமையானவன்… ஆடம்பரமோ, செல்வத்தின் கர்வமோ கிடையாது. சொல்லப் போனால் சொந்தச் செலவுகளில் அவன் கஞ்சன்….. இறைபக்தி அதிகம்….. குரான் மனப்பாடமாகத் தெரியும்….. ஒருநாளுக்கு ஐந்து முறை தொழுவதிலும், ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதிலும் அவன் இது வரை தவறியதில்லை. மது அருந்த மாட்டான்…… காரியம் ஆக வேண்டுமானால் யாருடனும் எந்த அளவிலும் நெருக்கமாக அவனுக்கு முடியும்…. மற்ற சமயங்களில் விலகித் தனிமையிலேயே இருப்பான். மனிதர்களை எடை போடுவதில் அவன் அதிசமர்த்தன்….. தனிப்பட்ட முறையில் ஏமாற்றியவர்களை அவன் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டான்…. மிகவும் சுயநலமானவன்… எப்போதும் தன் காரியத்திலேயே கண்ணாயிருப்பான்…… மிகச் சிறந்த போர் வீரன்.  தைரியசாலி…. சிறிதும் பயமில்லாதவன்….. எதையும் மிக யோசித்து தான் செய்வான்… அவன் செய்யும் எந்தச் செயலிலும் அலட்சியம் கிடையாது….. ”

கேள்விப்பட்டதெல்லாம் சிவாஜிக்கு சக்தி வாய்ந்த எதிரியை அடையாளம் காண்பித்தது. இப்போதைய அவன் நிலை பற்றி எந்தப் புதிய தகவல் கேட்டாலும் உடனடியாகத் தெரிவிக்கும் படி அவன் ஒற்றர்களைக் கேட்டுக் கொண்டான்.

காலம் மெல்ல நகர்ந்தது. சாய்பாய் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். சிவாஜியின் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அந்தக் குழந்தையின் வரவு இருந்தது. அதற்கு அவன் அண்ணனின் பெயரையே வைத்தான். சாம்பாஜி! இன்னொரு சாம்பாஜியைக் கையில் தூக்கிய போது ஜீஜாபாய் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.

சில நாட்களில் ஔரங்கசீப் குறித்து ஒற்றர்கள் புதிய தகவல் ஒன்றைச் சொன்னார்கள். இப்போது அவுரங்கசீப்புக்கு அவன் சகோதரி ரோஷனாரா இரண்டு நாளுக்கு ஒரு முறை செய்தி அனுப்புகிறாள் என்றும் ஔரங்கசீப் மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு அந்தத் தகவல்கள் குறித்தே ஆலோசனைகளில் மூழ்கியிருப்பதாகத் தெரிகிறது என்றும் சொன்னார்கள்.


சிவாஜிக்கு இந்தச் சூழல் அடுத்த நடவடிக்கை எடுக்க ஏற்ற சூழலாகத் தெரிந்தது. உடனே ஒரு அதிரடிக் காரியத்தில் இறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Aurangazeb character is picturized well. Going interesting.

    ReplyDelete
  2. ஷாஜகான் மகன்களை மூலைக்கு ஒரு புறம் கவர்னராக நியமித்தார்... அருமையான யோசனை‌...
    தொடர் விருவிருப்பாக சென்றது....
    அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பான்...சிவாஜி...

    ReplyDelete
  3. அண்ணன் பெயரேதான் மகனுக்கு. மகன் சாம்பாஜி ஒரு துஷ்டப் பிள்ளையாமே ?

    ReplyDelete