சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 4, 2019

சத்ரபதி – 62


ஷாஹாஜி வந்து சந்தித்த போது வேண்டுகோள் விடுத்த முகமது ஆதில்ஷா பின் நீண்டகாலம் உயிர் வாழவில்லை. ஒன்றரை மாதங்கள் கழித்து அவர் காலமானார். அவர் மகன் அலி ஆதில்ஷா பீஜாப்பூரின் அரியணை ஏறினான். 19 வயதே நிரம்பிய அலி ஆதில்ஷா வீரத்திலும், அறிவிலும், அனுபவத்திலும் தந்தையைக் காட்டிலும் பல படிகள் கீழே இருந்தான். அவன் தாயும், மாமன் முறையாக வேண்டிய அப்சல்கானுமே ஆரம்பத்தில் அவன் பெயரில் ஆட்சி நடத்த ஆரம்பித்தார்கள்.

அலி ஆதில்ஷாவின் துரதிர்ஷ்டமாக அந்தச் சமயத்தில் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்கசீப் முகலாயப் பேரரசின் தக்காணப் பகுதியின் கவர்னராகப் பொறுப்பேற்றான். வந்தவுடனேயே முதல் வேலையாக கோல்கொண்டா பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்த பெருஞ்செல்வத்தையும் தனதாக்கிக் கொண்ட ஔரங்கசீப் தன் அடுத்த பார்வையை பீஜாப்பூர் பகுதிக்குத் திருப்பினான்.

ஔரங்கசீப்புக்கு முந்தைய பீஜாப்பூர் சுல்தான் முகமது ஆதில்ஷா மீது முன்பிருந்தே அதிருப்தி இருந்தது. காரணம் அவனுடைய மூத்த சகோதரன்  தாரா ஷிகோவுடன் ஆதில்ஷா நெருங்கிய நட்புடன் இருந்தது தான். தனக்கு எதிரானவர்களுடன் நெருங்கியிருப்பவர்களையெல்லாம் எதிரிகளாகவே எண்ணும் மனோபாவம் படைத்த ஔரங்கசீப் ஆதில்ஷாவையும் அப்படி எதிரிகள் பட்டியலில் வைத்திருந்தான். அது அவரது மரணத்திற்குப் பின்னும் மாறவில்லை. ஆனால் முந்தைய போரின் முடிவில் பேரரசர் ஷாஜஹானுடன் முகமது ஆதில்ஷா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி தர வேண்டியதை எல்லாம் தந்திருந்தார். ஷாஜஹான் ஷாஹாஜியை விடுவிக்கச் சொன்ன போதும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அதன்படியே விடுவித்திருந்தார். அதனால் பீஜாப்பூர் சுல்தான் மீது இப்போது படையெடுக்க ஔரங்கசீப்புக்கு வலிமையான காரணங்கள் இருக்கவில்லை.

சண்டைக்குச் சரியான காரணங்கள் கிடைக்காத போது சரியில்லாத காரணங்களையாவது உற்பத்தி செய்து கொள்வது அரசியலில் முடியாத காரியம் அல்ல. அந்த வகையில் ஔரங்கசீப் ஒரு புதிய காரணம் கண்டுபிடித்தான். இப்போதைய சுல்தான் அலி ஆதில்ஷா முந்தைய சுல்தானின் மகன் தான் என்பதில் சில சந்தேகங்கள் இருப்பதால் முகலாயப் பேரரசரின் அனுமதியின்றி பீஜாப்பூர் சுல்தானாக அரியணையில் ஆட்சியைத் தொடரக்கூடாது என்று சொல்லி ஷாஜஹானுக்கும் ஒரு மடல் எழுதி அலி ஆதில் ஷாவுக்கும் மடல் எழுதி, பேரரசர் அனுமதி கிடைத்தவுடனேயே பீஜாப்பூர் மீது போர் தொடுக்கப் போவதாக அறிவித்தான்.

முகலாயர்களின் பெரும்படையை எதிர்கொள்ள எந்த வகையிலும் சக்தி இல்லாத அலி ஆதில்ஷா ’என்ன வேண்டுமானாலும் தருகிறேன். ஏற்றுக் கொண்டு என்னை ஆட்சி செய்ய அனுமதியுங்கள்’ என்று ஔரங்கசீப்புக்கு மடல் அனுப்பினான். ஆனால் பீஜாப்பூர் ராஜ்ஜியத்தையே அபகரிக்க எண்ணி இருந்த ஔரங்கசீப் அதற்கெல்லாம் மசியவில்லை.


கோல்கொண்டா, பீஜாப்பூர் நிலவரத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சிவாஜி ஔரங்கசீப்பிடம் தானும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டான். பீஜாப்பூரையும் முடித்து விட்டால் அடுத்ததாக ஔரங்கசீப் மேலும் தெற்கே செல்வானா, இல்லை சிவாஜி பக்கம் திரும்புவானா என்று தெரியவில்லை.

ஔரங்கசீப் பற்றி அவன் கேள்விப்பட்டதெல்லாம் சாதாரணமானதாக இருக்கவில்லை. மிகச் சிறந்த வீரன், கூர்மையான அறிவு படைத்தவன், படைகளை நடத்திச் செல்வதிலும், வியூகங்கள் வகுப்பதிலும், திட்டமிடுவதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் வியக்கத்தக்க திறமை வாய்ந்தவன், ஆடம்பரமில்லாதவன், சந்தேகப்பிராணி……

”என்ன இவ்வளவு ஆழமாக யோசிக்கிறீர்கள். அடுத்து எந்தக் கோட்டையைப் பிடிக்கலாம் என்றா?”

மனைவி சாய்பாயின் குரல் கேட்டு சிவாஜி திரும்பினான். அவள் இப்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாள். இந்த முறை. கண்டிப்பாக அது ஆண்குழந்தையாக இருக்கும் என்று ஜீஜாபாய் பெரிதும் நம்பும் ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.  அந்த மகிழ்ச்சியில் அவன் திளைத்துக் கொண்டிருந்த போது தான் அந்த முகலாய இளவரசன் எச்சரிக்கை மணியை அடிக்கிறான்…..

மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டே சிவாஜி சொன்னான்.  ”பிடித்த கோட்டைகளை எல்லாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பயப்படுகிறேன். முகலாய இளவரசன் ஒருவன் பெரும்படையுடன் பீஜாப்பூர் எல்லையில் இருக்கிறான். அதை வென்று விட்டால் அவன் அடுத்ததாக நம் பக்கம் கூட வரக்கூடும்….”

“இவ்வளவு நாள் சும்மா இருந்தவர் ஏன் இப்படித் திடீர் என்று…?” சாய்பாய் சந்தேகத்துடன் கேட்டாள்.

“இவ்வளவு நாள் சும்மா இருந்த இளவரசன் முராத் ஷாஜஹானின் நான்காம் மகன். அவன் போய் அவனுக்குப் பதிலாய் அவன் அண்ணன் ஔரங்கசீப் வந்திருக்கிறான். இந்த ஆள் சும்மா இருக்க முடியாத ஆள் போல் தான் தெரிகிறது”

சாய்பாய் கேட்டாள். “உங்களைப் போலா?”

சிவாஜி மனைவியைக் குறும்பாகப் பார்த்தான். “நீ எந்த அர்த்தத்தில் சொல்கிறாய்?”

அவனுடைய இரண்டு மனைவியரில் சாய்பாயை அவன் மிக நேசித்தான். மிக நல்ல பெண். சில நேரங்களில் வெகுளிப் பெண். சில நேரங்களில் புத்திசாலி. எல்லா நேரங்களிலும் அன்பானவள். அவனுடன் தனியாக இருக்கும் நேரங்களில் ஏதாவது சொல்லிச் சீண்டிக் கொண்டேயிருப்பாள். அவனும் அதை ரசிப்பான்…

அவள் அவனுக்குப் பதில் சொல்ல வாய் திறந்த போது ஜீஜாபாய் அவளை அழைப்பது கேட்டது. “அத்தை அழைக்கிறார்கள்…..” என்று சொல்லி கைகளை விடுவித்துக் கொண்டு ஓடி விட்டாள். ஓடும் போது அவளிடம் “ஓடாதே” என்று எச்சரிக்கத் தோன்றியது. அவள் அவன் பிள்ளையைச் சுமந்து கொண்டிருக்கிறாள்…..

மறுபடி அவன் மனம் ஔரங்கசீப் பக்கம் திரும்ப வைக்கும்படியான செய்தி அந்த நேரத்தில் அவனை வந்தடைந்தது. ஔரங்கசீப் பீஜாப்பூரின் எல்லையில் உள்ள கல்யாணி, பீதர் கோட்டைகளைக் கைப்பற்றி விட்டான். சிவாஜி நீண்ட ஆலோசனைக்குப் பின் ஔரங்கசீப்புக்கு ஒரு மடல் எழுதினான். ஆரம்பத்தில் ஔரங்கசீப்பை வானளாவப் புகழ்ந்து விட்டு எழுதினான். “…. பீஜாப்பூரை எதிர்த்து நீங்கள் புரியும் போரில் என்னாலான எந்த உதவியும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். இந்த விஷயத்தில் என் படையை நீங்கள் உங்கள் படையாகவே உறுதியாக எண்ணிக் கொள்ளலாம். சில காலம் முன்பே நான் தங்கள் அரசின் பக்கம் என்னை இணைத்துக் கொண்டு பேரரசரிடம் தெரிவித்தும் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கும் சிவாஜி”

அவன் மடலை அனுப்பி விட்டு அதுபற்றி தன் நண்பர்களிடம் தெரிவித்த போது நண்பனான யேசாஜி கங்க் சந்தேகத்துடன் கேட்டான். “ஒருவேளை அவன் பெரியதொரு படையை அனுப்பச் சொன்னால் என்ன செய்வாய்?”

சிவாஜி சிரித்துக் கொண்டே சொன்னான். “அவன் கேட்க மாட்டான். அவனிடம் முதலிலேயே வலிமையான படை இருக்கிறது. அவன் இப்போது கோல்கொண்டா வீரர்களையும் கூடத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அதனால் அவனுக்கு இப்போது என் உதவி தேவையில்லை….”

இன்னொரு நண்பனான தானாஜி மலுசரே சிரித்துக் கொண்டே சொன்னான். “சிவாஜி சொல்ல வருவதெல்லாம் இது தான். நான் உங்கள் சேவகன். கூப்பிட்டால் உடனடியாக வந்து உதவி செய்யத் தயார். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என் கோட்டைகள் மேல் தயவு செய்து உங்களுடைய படையைத் திருப்பி விடாதீர்கள்….”

சிவாஜியும் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். மற்றொரு நண்பனான பாஜி பசல்கர் கேட்டான். “நான் கேட்கிறேன் என்று நீ தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நீ அவர்களுடைய ஆதிக்கத்தை மனதார எதிர்க்கிறாய். அப்படி இருக்கையில் அவர்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் வாழ்த்தியும், புகழ்ந்தும் நடித்துக் கொண்டிருப்பது உனக்குக் கஷ்டமாக இல்லையா?...”

சிவாஜி வருத்தம் கலந்த புன்னகையுடன் சொன்னான். “அரசியலில் நடிப்பும், முகஸ்துதியும், தந்திரமும், வஞ்சகமும் தவிர்க்க முடியாத அங்கங்களாகி விட்டன பாஜி. அவை இல்லாமல் யாரும் அரசியல் களத்தில் தாக்குப்பிடிக்க முடியாது. முகலாயர்களுடன் நான் சரிசமமான வலிமையில் இல்லை. அவர்களைச் சொல்வானேன். அவர்களிடம் பயந்து பதுங்கிக் கொண்டிருக்கும் பீஜாப்பூரின் வலிமையில் கூட நான் சரிசமமாக இல்லை. அப்படி இருக்கையில் வீரம் என்ற பெயரில் இருக்கும் படை எல்லாம் திரட்டிக் கொண்டு போய் நான் நேரடியாகவும், வெளிப்படையாகவும் போராடினால் தோல்வியையும் மரணத்தையும் தவிர வேறு எதுவும் மிஞ்சாது. வீரம் என்பது முட்டாள்தனம் அல்ல. அதனால் தான் தந்திரமாக அவர்களைக் கையாள வேண்டியிருக்கிறது. கண்டிப்பாக அவர்களுடன் நேரடியாக நான் போராட வேண்டி வரும். ஆனால் என்னை நான் முழுமையாகப் பலப்படுத்திக் கொண்ட பிறகு தான் அது சாத்தியம்.  அது வரை இது இப்படியே தொடரும்….”


ஆனால் தான் எழுதியதற்கு ஔரங்கசீப்பிடமிருந்து என்ன பதில் வரும் என்பதை அவனால் எளிதாக யூகிக்க முடியவில்லை. ஏனென்றால் ஔரங்கசீப் எளிதில் யூகிக்க முடிந்த ஆள் அல்ல!


(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Aurangazeb's wickedness is shown in the way he handled Bijapur. I am very eager to know how Sivaji handles Aurangazeb in this stage.

    ReplyDelete
  2. ஓரங்கசீப் தற்போது கைபற்றியிருக்கும் கோட்டை சிவாஜி முதலில் பற்றிய கோட்டையாயிற்றே...?

    அரசியலில் எவ்வளவு மாற்றங்கள்?
    எதுவுமே சில காலத்திற்க்கு மேல் நிரந்தரமாக இருப்பதில்லை...

    ஔரங்கசிப் அடுத்து என்ன செய்வான்? என சிவாஜியைப் போல என்னாலும் கணிக்க முடியவில்லை....

    ReplyDelete