சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 21, 2019

இருவேறு உலகம் – 128


விஸ்வம் காலண்டரைப் பார்த்தான். இல்லுமினாட்டியின் தலைவர் அடுத்த வாரம் பதவி விலகப் போகிறார். உடனடியாகப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நவீன்சந்திர ஷா தெரிவித்திருந்தான். அந்தத் தேதியைச் சுற்றி விஸ்வம் ஒரு முக்கோணம் வரைந்திருந்தான். அவன் வாழ்க்கையின் மிக முக்கிய நாளாக அது இருக்கப் போகிறது. அவன் ஜிப்ஸியைப் பார்த்த நாள் போல வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் நாள்…. களத்திற்குப் போகும் முன்பே அவனைப் பற்றிய பிம்பம் இல்லுமினாட்டி உறுப்பினர்களிடையே பிரம்மாண்டமாய் எழுந்திருக்க வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவன் கச்சிதமாகச் செய்யப் போகிறான்…. போன் செய்து நவீன்சந்திர ஷாவிடம் பேசினான். நவீன்சந்திர ஷா இப்போது வாஷிங்டனில் இருப்பதாகச் சொன்னான். 

”அப்படியா. நானும் வாஷிங்டனுக்குத் தான் வந்து கொண்டிருக்கிறேன். அங்கே எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது.” என்று விஸ்வம் சொன்னான். வாஷிங்டனுக்குப் பதிலாக நவீன்சந்திர ஷா எத்தியோப்பியாவில் இருந்திருந்தால் அங்கு முக்கியமான வேலை இருப்பதாகவும், அங்கு வந்து கொண்டிருப்பதாகவும் விஸ்வம் சொல்லி இருப்பான். நவீன்சந்திர ஷா சந்தோஷப்பட்டான். “நல்லது, வா. நான் நாளை மறுநாள் ஃப்ரியாகத் தான் இருப்பேன். நீ எத்தனை நாள் இங்கிருப்பாய்”


“இரண்டு நாள்.” என்றான் விஸ்வம். நவீன்சந்திர ஷாவிடம் பேசிய பிறகு அவனுக்கு வேறு வேலையில்லை. ”அங்கு வந்தவுடன் போன் செய்கிறேன்” என்று போனை வைத்த விஸ்வம் இமாலயக் குகையில் கிடைத்த அந்த நெற்றிக் கண்ணை எடுத்துக் கொண்டான். இது தான் அவனை இல்லுமினாட்டியின் தலைவனாக மாற்றப் போகிறது…. அது அவனைப் பார்த்து மீண்டும் ஒரு முறை மிளிர்ந்து மங்கியது. அந்த அதிர்ஷ்ட சின்னத்தைப் பார்த்து மெலிதாக விஸ்வம் புன்னகைத்தான்.

அவனோடு அந்த நெற்றிக்கண் முக்கோணமும் வாஷிங்டன் பயணித்தது…



மாஸ்டரை வரவேற்க க்ரிஷின் குடும்பம் உற்சாகமாகக் காத்திருந்தது. பத்மாவதி நெற்றி நிறையத் திருநீறும், பெரிய குங்குமப் பொட்டும் வைத்துக் காத்திருந்தாள். அவளைப் பொருத்த வரை மாஸ்டர் ஒரு மகான். அவர் வருவதும் தெய்வம் வருவதும் ஒன்று தான். உதய் தாயின் பக்திக் கோலத்தைப் பார்த்து வெளியே போய் வேப்பிலை பறித்துக் கொண்டு வந்து தாய் கையில் திணித்தான். “இதுவும் வெச்சுக்கோம்மா. பொருத்தமாவும் எடுப்பாகவும் இருக்கும்” என்று சொல்லி அவளிடம் அந்த வேப்பிலையாலேயே அடியும் வாங்கினான். “ஒரு நாள் உனக்கு சாப்பாட்டுல பேதி மாத்திரை கலந்து வைக்கிறேன் பார் தடியா. அப்பத் தான் உன் கொழுப்பெல்லாம் இறங்கும்” என்று மகனை அவள் பயமுறுத்தினாள்.


மாஸ்டர் காரில் வந்திறங்கியதால் கூடுதல் திட்டுகளில் இருந்து உதய் தப்பித்தான். மாஸ்டர் முன்பை விட அதிகக் கனிவாகவும் தேஜஸுடனும் இருப்பதாக க்ரிஷ் உட்பட அனைவருமே உணர்ந்தார்கள். முதலில் காலில் விழுந்து வணங்கிய பத்மாவதி அவர் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். 


எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு மாஸ்டர் க்ரிஷுடன் அவன் அறைக்குப் போனார். அவரை உட்காரச் சொல்லி விட்டு எதிரில் அமர்ந்தபடியே க்ரிஷ் சொன்னான். “மாஸ்டர் உங்க கிட்ட பெரிய மாற்றம் தெரியுது…”


மாஸ்டர் புன்னகைத்தார். அவனிடமும் கூட அவர் பெரிய மாற்றத்தைத் தான் கண்டார். ஒரு பெரிய பளுவைச் சுமந்து கொண்டிருப்பவனாக அவன் தெரியவில்லை. விஸ்வம் என்ற சக்தி வாய்ந்த எதிரியைக் கையாள வேண்டியிருக்கும் கவலை அழுத்தப்பட்டவனாகத் தெரியவில்லை. அமைதியும், அன்பும், நம்பிக்கையுமே அவன் முகத்தில் பிரதானமாகத் தெரிந்தன. மனதுக்குள் அவன் மனநிலையைச் சிலாகித்தார்.


மாஸ்டர் தன் இமயமலை யாத்திரை பற்றியும் அங்கு நடந்த அற்புதங்கள் பற்றியும் விவரமாக க்ரிஷிடம் சொன்னார். “….சொல்லப் போனா இதுல நமக்கு சாதகமா எதுவும் நடந்த மாதிரி தெரியல. நான் போறதுக்கு முன்னாலேயே விஸ்வம் போய்ட்டான். காசி காளி கோயில்லயும் அவன் என்னை முந்திகிட்டான். இங்கயும் என்னை முந்திகிட்டான். அந்தச் சிவன் சிற்பத்துல நெத்தில இருந்த கண்ணை எடுத்துகிட்டும் போயிட்டான். சிவன் நெற்றியிலிருந்து எடுத்துட்டா அது இல்லுமினாட்டி சின்னம் மாதிரியும் தெரியுது. அந்த நெற்றிக்கண் சக்தி வாய்ந்ததாய் இருக்கணும். அதைத் தெரிஞ்சுகிட்டு அது இல்லுமினாட்டி சின்னமாகவும் இருக்கறதால அவன் எடுத்துட்டுப் போயிருக்கணும்…. அந்தத் தவசி அந்தக் குகைல இருந்த உத்தேசம் என்ன, அவர் இறப்பு இயல்பானதான்னெல்லாம் தெரியல…”

க்ரிஷ் கேட்டான். “அவர் மரணம் இயல்பில்லாமல் இருந்திருந்தா உங்களால அதை உணர முடிஞ்சிருக்குமே மாஸ்டர்….”

”உண்மை தான். அங்க வன்முறையோட அலைகள் சுத்தமாவே இருக்கல. எல்லாத்தையும் துறந்த அந்தத் தவசி கைல விஸ்வத்தோட கம்பளித்துணி இருந்ததுக்கு பிரத்தியேகக் காரணம் ஏதாவது இருக்கான்னும் தெரியல….. ஆனா அந்தக் கருப்புப் பறவை இன்னொரு நெற்றிக்கண் கல்லைக் கொண்டு வந்ததும், அது அந்தச் சிற்பத்துக்குக் கச்சிதமா பொருந்தினதும் காரணம் புரியாட்டாலும் பெரிய அற்புதம் தான். பிறகு எனக்கு அங்கே கிடைச்ச தியான அனுபவம் வார்த்தைக்கெட்டாதது க்ரிஷ். வாழ்க்கைல ஒவ்வொரு யோகியும் தேடிட்டு போற கடைசி அனுபவம் அதுவா தான் இருக்கும்னு நினைக்கிறேன். நானும், அந்தக் குகையும், அந்த சிவனும், எல்லாமே ஜட உலகுல மறைஞ்சு போய் அலை உலகில் சங்கமமான மாதிரி ஒரு உணர்வு. அந்தக் கணத்துல நான் எதை ஆசைப்பட்டாலும் அது நடந்திருக்கும்னு நான் உறுதியா நம்பறேன் க்ரிஷ். அப்படியொரு பிரம்மாண்டமான கணம் அது. ஆனா அந்த நேரத்துல எதையும் ஆசைப்படத் தோணல. என் குருவைக் கொன்ன விஸ்வத்தைப் பழி வாங்கற எண்ணம் கூட எனக்கு ஏனோ தோணல. மன்னிச்சேன், மறந்தேன்னு எல்லாம் சொல்ல முடியாது. அதுல அர்த்தம் இல்லைன்னு ஏனோ தோணுச்சு…… அந்தக் கணத்தோட புனிதத்தைக் குறைச்சுக்க வேண்டாம்னு தோணுச்சு….”


க்ரிஷ் கண்களை மூடிக் கொண்டு அவர் சொன்ன நிலையைக் கற்பனை செய்து பார்த்தான். ஏதோ புரிகிறது போல் இருந்தது. மெல்ல எழுந்து போய் நிக்கோலா டெஸ்லாவின் புத்தகம் ஒன்றில் அவன் அடிக்கோடிட்ட ஒரு வாக்கியத்தை மாஸ்டரிடம் காட்டினான். 


“My brain is only a receiver, in the Universe there is a core from which we obtain knowledge, strength and inspiration. I have not penetrated into the secrets of this core, but I know that it exists."


(எனது மூளை ஒரு உள்வாங்கி மட்டுமே. அது பிரபஞ்சத்தின் ஆழமான மையத்தில் இருந்து அறிவையும், சக்தியையும், உத்வேகத்தையும் பெற்றுக் கொள்கிறது. எல்லாம்வல்ல அந்த சக்தி வாய்ந்த மையத்தின் ரகசியங்களுக்குள் நான் ஊடுருவியதில்லை என்றாலும் அப்படி ஒரு சக்தி மையம் இருக்கிறது என்பதை நான் அறிவேன்)

”மாஸ்டர் நிக்கோலா டெஸ்லா சொன்ன சக்தி மையத்தை நீங்க தொட்டுப் பார்த்துட்டு வந்திருக்கீங்க போல இருக்கு…” க்ரிஷ் பிரமிப்புடன் சொன்னான்.


”இருக்கலாம்” என்று கனிந்த புன்னகையுடன் சொல்லி விட்டு மாஸ்டர் அவனிடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இனி அங்கேயே போய் விடும் தன் தீர்மானத்தை அவனிடம் மெல்லத் தெரிவித்தார். 


க்ரிஷ் முகம் வாடியது. “என்னை விட்டுட்டு போறீங்களா மாஸ்டர்?”

மாஸ்டர் பேரன்புடன் அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அவன் கண்களைப் பார்த்துக் கனிவுடன் சொன்னார். “என் குருவின் ஆசிகள் என் கூட இருக்கற மாதிரி என் ஆசிகள் எப்பவுமே உன் கூட இருக்கும் க்ரிஷ். நான் ஆரம்பத்துல இருந்து உனக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்களோட சாராம்சம் கூட எல்லாம்வல்ல அந்த பிரபஞ்ச சக்தி மையத்தைத் தொடர்பு கொள்றதும் அதுல இருந்து தேவையானதைப் பெறும் வித்தை தான்….. தேவையே இல்லாத நிலையை அடையறது தான் ஞானத்தோட உச்சம். நான் அந்த உச்சத்தை ஒரு தடவை தொட்டுப் பார்த்துட்டு வந்துட்டேன். இப்ப மத்ததெல்லாம் அரைகுறையாவும், அர்த்தமில்லாமலும் எனக்குப் படுது. அதனால நான் போறேன். என்னடா இந்த மாதிரி ஒரு கட்டத்துல எனக்கு உதவாம தனியா விட்டுட்டு போறாரே இவர்னு நினைக்காதே. உனக்கு மேலான சக்திகளோட ஆசிர்வாதம் இருக்கு. எத்தனையோ கோடி ஜனங்கள் இருக்கறப்ப உன்னை மட்டும் உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் தேர்ந்தெடுத்தான்னா அது காரணம் இல்லாமல் இருக்காது. உனக்கு யாரெல்லாம் உதவ இருக்காங்கன்னு கணக்குப் பார்த்தும் இருக்காது. உன்னை மட்டுமே நம்பி, உன்னால முடியும்னு நம்பி தான் அவன் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கான். நீ ஆத்மார்த்தமா முயற்சி செய்யறப்ப, உனக்குத் தேவையானது நியாயமானதாவும் இருக்கற வரைக்கும், கண்டிப்பா உனக்குக் கிடைக்காமல் போகாது... உனக்கு ஏற்கெனவே சில நேரங்கள்ல உயர்வான அலைவரிசைகள் கிடைச்சிருக்கு. விஸ்வத்தை காளி கோயில் பக்கம் பார்க்க முடிஞ்சது, ராஜதுரையோட மரணத்தை உணர்ந்தது எல்லாம் அப்படித்தான்……” 


”அதுல முழுமையா கத்துக்க நீங்க சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்ச படிப்பை பாதியிலயே விட்டுட்டுப் போறீங்க....” க்ரிஷ் வருத்தத்துடன் சொன்னான்.”


“இது வரை சொல்லிக்கொடுத்ததுல நீ தேர்ச்சியடைஞ்சுட்டா அடுத்த பாடம் தானா உன்னைத் தேடி வரும். இது சங்கிலி மாதிரி. முதல் ஒன்னைக் உறுதியாப் பிடிச்சுகிட்டா இழுக்க இழுக்க மத்தது தானா வரும்..... க்ரிஷ் நான் சின்னதுல இருந்து தேடின ஒரு இலக்குக்கு வழி கிடைச்சுருக்கு. அதை நோக்கிப் போகிற என்னை நீ சந்தோஷமா அனுப்பி வைக்கணும்… ”


க்ரிஷ் கண்கலங்க அவரையே பார்த்தான். கண்கலங்கக்கூடாது என்று பார்வையாலேயே அவனுக்குக் கட்டளையிட்டார். 


(தொடரும்)


என்.கணேசன்  

5 comments:

  1. Surprised to see the update in morning itself. Very touching and meaningful update.

    ReplyDelete
  2. You are reducing the characters one by one :(
    Peace to master!

    ReplyDelete
  3. nikola tesla quotes are awesome ..

    ReplyDelete
  4. மாஸ்டரின் தியான அனுபவம் அற்புதம்...அதுமட்டுமில்லாமல், கிரிஷ்க்கு அவர் வழங்கும் உபதேசமும் அருமை....

    கிரிஷ் என்ன மாதிரியான திட்டம் வச்சுருக்கானு தெரியல... விஸ்வேஸ்வரய்யாவை பார்த்தால் என்ன புரிந்து கொள்வான்னு தெரியலையே...

    ReplyDelete
  5. Nikola tesla yenna bookla universe patri kurippittu irukkarnu sonna uthaviya irukkum sir

    ReplyDelete