என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, March 14, 2019

இருவேறு உலகம் – 127

ணீஷின் மரணத்தில் ஹரிணி அதிகமாகவே பாதிக்கப்பட்டாள். அவன் கடைசியாகப் பேசியது அவளிடத்தில் தான், மனசு சரியில்லை என்று சொல்லியிருக்கிறான், அந்த நேரத்தில் சரியாகக் கையாண்டிருந்தால் அவன் இறந்திருக்க மாட்டானோ என்ற குற்றவுணர்ச்சி அவளை அதிகமாகவே வதைத்தது. க்ரிஷ் தன்னுடைய தியானம், சிந்தனை, ஆராய்ச்சி, படிப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அவளுக்கு ஆறுதல் சொன்னான். இறப்பது என்று தீர்மானித்த பிறகு கடைசியில் ஒருமுறை அவளிடம் பேசி விட மணீஷ் எண்ணியிருப்பானே ஒழிய, அவள் எப்படிக் கையாண்டிருந்தாலும் அவன் மரணத்தை அவள் தவிர்த்திருக்க முடியாது என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னான்.


“ஏண்டா அவன் சாகணும்? அவனுக்கு என்னடா குறை?” ஹரிணி தாங்க முடியாமல் கேட்டாள்.


க்ரிஷ் பதில் சொல்லவில்லை. அவன் மணீஷைப் பற்றிய எந்த உண்மையையும் அவளிடம் சொல்லவில்லை. அவள் மனதில் அவனைப் பற்றி மிக நல்லபடியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாள், அவனும் அவளிடம் மட்டும் அன்பாகவே இருந்திருக்கிறான். அதனால் அவள் மனதில் இருந்த அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை க்ரிஷ் உடைக்க விரும்பவில்லை. இருவரும் மணீஷுடன் சேர்ந்திருந்த அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவளை நிறைய பேச விட்டு புரிதலோடு க்ரிஷ் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் மனபாரம் குறையும் வரை அவளுடன் தன் நேரத்தைக் கழித்த அவன் பின் தன் பழைய தனிமைக்குத் திரும்பினான். 


அவனுடைய பயிற்சிகளும், தியானமும், ஆழ்ந்த சிந்தனைகளும் அவனை அமைதிப்படுத்தின, சோர்ந்து விடாமல் தடுத்தன என்பதெல்லாம் உண்மையே ஆனாலும் இப்போதைய பிரச்னைக்குத் தீர்வு எதையும் அவை காட்டி விடவில்லை. ஆரம்பத்தில் இருந்த குழப்பமே இப்போதும் இருந்தது. 


விஸ்வத்தைப் பற்றிய எந்தக் கூடுதல் உபயோகமான தகவலும் அவர்களுக்குக் கிடைத்து விடவில்லை. ஹரிணியைக் கடத்திய மனோகரை இருட்டறையில் தான் இப்போதும் வைத்திருந்தார்கள். மாஸ்டர் மறந்தும் கூட அவனிடம் போய் பேசுவதோ, வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதோ வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். மனோகர் அறியும் எதையும் விஸ்வமும் அறிய முடியும் என்று சொல்லியிருந்தார். இல்லாவிட்டாலும் அவன் மூலம் விஸ்வத்தை அறியும் வாய்ப்பு குறைவு, அப்படி கவனக்குறைவாய் விஸ்வம் இருக்க மாட்டான் என்ற புரிதலும் இருந்ததால் அவர்கள் ஆபத்தில் இறங்கத் துணியவில்லை……


க்ரிஷ் இதுவரை விஸ்வம் பற்றிச் சேகரித்த தகவல்களை எல்லாம் வைத்து அவனைப் பற்றிய ஒரு கிட்டத்தட்ட முழுமையான மதிப்பீட்டை எட்டி இருந்தான். விஸ்வம் தேடிய விஷயங்கள், ஈடுபாடு காட்டிய விஷயங்கள், செய்த காரியங்கள் எல்லாம் ஆழ்ந்த புரிதலை க்ரிஷ் மனதில் ஏற்படுத்தியிருந்தன. விஸ்வம் அதிகாரத்தை விரும்புகிறான். ஆள விரும்புகிறான். சாதாரணமாக அல்ல. அதில் உச்சத்தில் இருக்க விரும்புகிறான். அதைச் சாதிக்க அவன் தீவிரவாத இயக்கங்களில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தப் போகிறான், அல்லது இல்லுமினாட்டியில் ஏதோ ஒரு வகையில் நுழையப் போகிறான். அல்லது இரண்டையுமே ஒரே நேரத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறான்.


இதைத்தடுத்து நிறுத்துவது எப்படி என்று தான் புரியவில்லை. ஆள் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்றே தெரியாத போது அவன் செய்கைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதைத் தான் அவன் பல விதங்களில் அவன் யோசித்துக் கொண்டிருந்தான். கடைசியில் மீண்டும் நிக்கோலா டெஸ்லாவிடமே அடைக்கலம் அடைந்தான். நிக்கோலா டெஸ்லாவின் எழுத்துக்களில் மூழ்கினான். எத்தனையோ எழுத்துக்களில் அவன் நிக்கோலா டெஸ்லாவிடம் தன்னையே கண்டான். நிக்கோலா டெஸ்லா ஓரிடத்தில் சொல்லியிருந்தார். ”ஒரு கிரகம் இன்னொரு கிரகத்துடன் பேசுவதைக் கேட்கும் முதல் ஆளாக நான் இருக்கிறேனோ என்ற உணர்வு எனக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது” அவனும் அந்த வேற்றுக்கிரகவாசியிடம் பேசிய முதல் மனிதனாக அல்லவா இருக்கிறான். வேறு மனிதர்களுடனும் ஏலியன்கள் தொடர்பு கொண்டிருக்கின்றன என்று எத்தனையோ பதிவுகள் இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசியிடம் பேசிய முதல் ஆள் அவனல்லவா? அவன் சொன்ன விஷயங்களும் சாதாரணமானவை அல்லவே? அவன் நிக்கோலா டெஸ்லாவைப் படித்துக் கொண்டிருக்கும் போதல்லவா முதல் முதலில் அவனை வேற்றுக்கிரகவாசி தொடர்பு கொண்டான். நிக்கோலா டெஸ்லா இப்போதும் வழிகாட்டலாம். இல்லா விட்டாலும் நிக்கோலா டெஸ்லாவைப் படிக்கையில் பழைய ராசிப்படி ஏதாவது தொடர்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த எண்ணத்துடன் அவன் நிக்கோலா டெஸ்லாவின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு வந்த போது தான் விஸ்வேஸ்வரய்யாவின் போன் கால் வந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் அவனுடன் பேச விரும்புவதாகச் சொன்ன போது அவனுக்கு உடனே சம்மதிக்கத் தோன்றியது. அவர் அவனைப் பார்த்துப் பேச விரும்பியது அவனிடம் இருந்து தகவல்கள் பெறுவதற்காகவே இருக்க வேண்டும் என்று அவன் ஊகித்தான். ஏனென்றால் மாஸ்டர் இஸ்ரோவின் புகைப்படங்களில் அவனும் அந்தக் கருப்புப் பறவையும் பதிவாகி இருப்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தார். ஆனாலும் அவரிடம் இருந்தும் அவனுக்கு ஏதாவது கிடைக்கக்கூடும் என்று உள்ளுனர்வு சொன்னது. காரணம் அவருடைய போன்கால் வந்த நேரம்! சம்மதம் தெரிவித்த அவனிடம் அவர் நாளை மறுநாள் வருவதாகச் சொல்லி நன்றி தெரிவித்தார். 


அவரிடம் போனில் பேசி பத்து நிமிடங்களில் மாஸ்டரின் போன்கால் வந்தது. அவர் குரல் மிக மென்மையாக இருந்ததாக அவனுக்குப் பட்டது. அவர் நாளை வருவதாகச் சொன்னார். வீட்டுக்கே வருவதாகத் தெரிவித்த அவர் ”உன் அம்மாவின் சமையலைச் சாப்பிட வருகிறேன் என்று சொல்” என்றும் தெரிவித்தார். அவனிடம் சொல்லவும் நிறைய இருப்பதாக மாஸ்டர் சொன்னார். இதுவும் ஒரு சுப சகுனமாகவே அவனுக்குத் தோன்றியது. அவர் சொல்லப் போவதிலும் ஏதாவது மிகமுக்கியமான ஒன்று கிடைக்கலாம்….


இனி என்ன செய்வது என்று மூளையைக் கசக்கிக் கொண்டு இருந்த நேரத்தில், நிக்கோலா டெஸ்லாவின் எழுத்துக்களோடு இணையும் போது ஏதாவது கிடைக்கலாம் என்று அவன் நினைத்துப் படித்த சமயத்தில், வந்த இந்த இரண்டு போன்கால்கள் இவர்களிடம் இருந்து அவன் அடுத்த அடி வைக்கத் தேவையான ஏதோ கிடைக்கப் போகிறது என்று மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த. உள்ளே அவன் அந்தராத்மா ஆமென்றது. போதும் இனி நாளை வரை அவன் எதையும் யோசிக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியே வந்தான். இனி இன்று முழுவதும் அவன் ஹரிணியுடனும் குடும்பத்துடனும் மட்டுமே இருக்கப் போகிறான்….. நாளைய கதை நாளைக்கு….


மாஸ்டர் நாளை சாப்பிட வருகிறார் என்று க்ரிஷ் சொன்னவுடனேயே பத்மாவதி பரபரப்படைந்தாள். சொல்லி விட்டு அவன் மறுபடி அறைக்குள் போய் விடாதது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. உதய் ஹரிணியிடம் சொன்னான். “ஹரிணி எதுக்கும் அவனைக் கிள்ளிப் பார். ஆள் க்ரிஷ் தானே?”


ஹரிணி உடனே க்ரிஷை அழுத்தமாகக் கிள்ளி “ஆமாண்ணா. இது நம்ம க்ரிஷ் தான்” என்றாள். ”பாவி, கிள்ளச் சொன்னா சதையையே பெயர்த்து எடுக்கற மாதிரியா கிள்றது” என்று க்ரிஷ் அவள் கிள்ளிய இடத்தைத் தடவ உதய் தம்பி காதில் முணுமுணுத்தான். “சரி சரி விடுடா. அப்பறமா தனியா அவ அதுக்குப் பரிகாரம் பண்ணிடுவா”


க்ரிஷ் அண்ணனை முறைத்தான். ஹரிணி கேட்டாள். “என்ன அண்ணனும் தம்பியும் ரகசியம் பேசறீங்க?”


பத்மாவதி சொன்னாள். “நீங்க ரெண்டு பேரும் இருக்கறதால சும்மா இப்படி பேசிட்டு மட்டும் இருக்கானுக. இல்லாட்டி ஓடிப்பிடிச்சு சண்டை போடுவானுக”


உதய் மறுபடி தம்பி காதில் முணுமுணுத்தான். “நாலு பேர் முன்னாடி மானத்தை வாங்கறதே கிழவிக்கு வாடிக்கையாப் போச்சு”


க்ரிஷ் தாயைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான். 


பத்மாவதி சந்தேகத்துடன் க்ரிஷைக் கேட்டாள். “என்னைப் பத்தி என்னடா சொல்றான் அவன்?”


அப்போது ஆரம்பித்த கலகலப்பு நாள் முழுவதும் தொடர்ந்தது. கிரிஜா அந்த அன்பான குடும்பத்தின் ஆனந்தத்தில் ஆச்சரியமானாள். இதல்லவா குடும்பம்!
ணீஷின் மரணச் செய்தி விஸ்வத்துக்குக் கிடைத்தது. அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. இனி மாணிக்கத்தின் மீதுள்ள பிடி இந்த மரணத்தினால் தளர ஆரம்பிக்கும் என்பது புரிந்தது. மனோகர் இருக்கும் இடத்தையும் இது வரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனை அவர்கள் இருட்டிலேயே வைத்திருந்தார்கள். அவன் பார்வைக்கு இது வரை அறிந்தவர்கள் யாரும் படவுமில்லை. அதனால் அந்த இணைப்பு வழியாக முக்கியமான எதையும் அறியவும் வழியில்லை. இது கண்டிப்பாக மாஸ்டரின் அறிவுறுத்தலாக இருக்க வேண்டும். அவர் தான் இந்தச் சக்தி அலைகளின் சூட்சுமம் அறிந்தவர்….. பரவாயில்லை, இல்லுமினாட்டியின் தலைவனாகப் போகிறவனுக்கு இந்தச் சின்னச் சின்ன பின்னடைவுகள் பெரிதல்ல. நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் முன்னால் இருந்த அந்த நெற்றிக்கண் ஒரு முறை மங்கலாய் ஒளிர்ந்து மங்கியது. 


அதுவும் ஆமென்று சொல்கிறது என்று விஸ்வம் சந்தோஷப்பட்டான்.


(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

  1. Krish family is superbly pictursized.

    ReplyDelete
  2. நிக்கோலா டெஸ்லாவின் எழுத்துக்களில் முழ்கும்போது தகவல் கிடைக்கும் இடம்....சூப்பர்.... கிர்ஷ்க்கு மாஸ்டர் மற்றும் விஸ்வேஸ்ரய்யாவிடம்ருந்து என்ன தகவல் கிடைக்கும்...என்ன மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடப் போகிறான்?

    ReplyDelete