அந்த நெற்றிக்கண் கல் மாஸ்டர் கையில் மென்மையான அதிர்வலைகளை
ஏற்படுத்தின. மாஸ்டர் அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு அந்த குகைக்குள் மீண்டும் நுழைந்தார்.
அந்தச் சிற்பத்தின் நெற்றியில் பொருத்திப் பார்த்தார். கச்சிதமாகப் பொருந்தியது. இங்கு
முதலில் இருந்த கல் தானோ? விஸ்வத்திடமிருந்து இந்தக் கல்லை அந்தப் பறவை எடுத்துக் கொண்டு
வந்து விட்டதோ? அந்தப் பறவைக்கும் இந்தத் தவசிக்கும், இந்தச் சிற்பத்துக்கும் என்ன
சம்பந்தம்? இத்தனை துல்லியமாக இங்கேயே கொண்டு வந்து வைத்து விட்டுப் போயிருக்கிறதே!
இந்தக் கல்லில் ஏதோ சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை உணர்ந்து தான் விஸ்வம் இதைக்
கொண்டு போயிருக்கிறான். ஆனால் இந்தக் கல் விஸ்வம் கொண்டு போன கல்லாய் இருக்க வாய்ப்புகள்
குறைவு. விஸ்வத்தின் அலைவரிசைகள் இந்தக் கல்லில் சிறிது தங்கியிருந்தாலும் அவர் உணர்ந்திருப்பார்….
மேலும் விஸ்வம் கையில் கிடைத்ததை எந்த விதத்திலும் நழுவ விடுபவன் அல்ல. இந்தச் சிவனின் நெற்றி வெறுமையாக இருப்பதை சகிக்காத
ஏதோ ஒரு சக்தி தான் அந்தப் பறவையின் வடிவில் திரும்ப இங்கு கொண்டு வந்து இன்னொரு கல்லைச்
சேர்த்திருக்கிறது. ஏதோ ஒரு அளவில் இல்லாமல் கச்சிதமாக சிற்பத்துக்குப் பொருந்தும்படியாக
இந்தக் கல் இருப்பதால் சிற்பம் செதுக்கிய போதே அந்தக் கல்லுடன் அதே போல இன்னொரு கல்லையும்
செதுக்கியிருந்தால் மட்டுமே இது சாத்தியம்….. யோசிக்கும் போதே தலை சுற்றியது….. எல்லாம்
மாயாஜாலமாகத் தெரிந்தது.
எது
எப்படியோ அவர் இந்த நெற்றிக்கண் கல்லை எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. இதன் சக்தி
மூலம் ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்றிருந்தால் இதைக் கையில் கொண்டு போனால் தான்
நடக்கும் என்று நினைப்பது பேதமையாகப் பட்டது. இறைவனின் சக்திக்கு தூரங்கள் ஒரு பிரச்னைகள்
இல்லை. ஏதோ ஒரு பொருளில் மட்டுமே தங்கிப் பயன்படும் என்று நம்புவது மூட நம்பிக்கை.
இதற்கென்று ஒரு சக்தி இருந்தால் இது இந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்கும் எதையும்
நடத்தும். மேலான சக்திகள் மனிதனைப் போல் பிழை செய்வதில்லை. எதையும் செய்யத் தவற விடுவதுமில்லை……
நினைக்கையிலேயே மனம் நம்பிக்கை பெற்றது.. மறுபடி வணங்கி அங்கே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
அந்தத் தவசியின் தவத்தினாலோ என்னவோ சீக்கிரமே ஆழமான தியானம் சாத்தியமானது. ஏகாந்தத்தில்
அந்தச் சிவனின் முன்னிலையில் அவரும் யோகநிலையில் லயித்து சில மணி நேரங்கள் அசைவற்று
அமர்ந்திருந்தார். மனம் எண்ணங்கள் இல்லாமல்
வெறுமையாகி பிரம்மம் ஆகியது. அந்த ஒரு கணத்தில் எதை நினைத்தாலும் அது நடந்து விடும்
என்பதை அந்தராத்மாவில் உணர்ந்தார். ஆனால் எதையும் நினைக்கத் தோன்றவில்லை. அப்படி நினைத்து
அந்தப் பூரண நிறைவில் ஒரு சிறு பகுதியையும் அவர் இழக்க விரும்பவில்லை. அவர், அந்தக்குகை,
அந்த சிவன் எல்லாமே ஒரு அலைவரிசையில் கலந்து மனம் காணாமலேயே போயிற்று.
ஒரு
பெருங்காற்று வீசிய போது அவர் மனம் விழித்தது. அந்தக் குகையும் சிவனும் அவரும் இப்போதுள்ள
இடங்களுக்குத் திரும்ப வந்து அமைந்தது போன்றதொரு உணர்வு. அந்தக் கணத்தில் அவர் முடிவு
செய்தார். இனியுள்ள காலத்தை அவர் இங்கேயே கழிப்பார். ஒரே ஒரு முறை வெளியேறி க்ரிஷையும்
அவரது இயக்க முக்கியஸ்தர்களையும் பார்த்து விட்டு வரவேண்டும். எல்லாவற்றையும் ஒப்படைத்து
விட்டு மீண்டும் வந்து இங்கே ஐக்கியமாக வேண்டும். விஸ்வம் விஷயத்தில் ஆக வேண்டியதை
க்ரிஷ் பார்த்துக் கொள்வான். ஒரு முறை விஸ்வம் இனி என்ன செய்வது என்று ஒன்றும் தெரியாதவன்
போலக் கேட்ட போது “ஆபரேஷன் க்ரிஷ்” என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. இது அவனுடைய
களம். அவனைத் தான் அந்த வேற்றுக்கிரகவாசியும் தேர்ந்தெடுக்கிறான். அறிவிலும் சக்திகளிலும் பல மடங்கு உயர்ந்த அந்த வேற்றுக்கிரகவாசி
உலகில் தேடி ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால் அவனால் முடியும் என்ற புரிதலில்
தான் இருக்க முடியும். இனி அது ஆபரேஷன் க்ரிஷாகவே முழுமையாக இருக்கட்டும். அது சம்பந்தமாகக்
களத்தில் இனி எந்தக் காயையும் அவர் நகர்த்தப் போவதில்லை. எது நடக்க வேண்டும் என்பது
இறைவனின் சித்தமாக இருக்கிறதோ அது நடந்து விட்டுப் போகட்டும்……
மாஸ்டர்
மெல்ல எழுந்தார். கைகூப்பி ஈசனை வணங்கி விட்டு வெளியே வந்தவர் ஒரு புதிய மனிதராக மாறியிருந்தார்….
ம்யூனிக் நகரின் அரண்மனை போன்ற பங்களாவில் பிதோவனின் இசையில்
இரண்டு மணி நேரம் ஆழ்ந்திருந்து விட்டு தன் நாளை ஆரம்பித்த எர்னெஸ்டோ அன்று செய்ய வேண்டிய
வேலைகளை ஒரு டைரியில் நேற்றே குறித்திருந்தார். அதில் முதல் குறிப்பாக இந்தியா – ஏலியன்
– க்ரிஷ் – தகவல்கள் என்று இருந்தது.
அவர்
ஒரு எண்ணிற்குப் போன் செய்தார். “அந்தப் பையன் க்ரிஷ் ஏலியன் சந்திப்பைப் பற்றி யாரிடமாவது பேசியிருக்கானா”
“குடும்பத்தார்
கிட்ட கூடச் சொல்லலைன்னு தெரியுது. அந்த மாஸ்டர் கிட்ட சொல்லியிருக்கலாம்னு தோணுது….”
“இஸ்ரோ
அதைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்யலையா?”
“வீட்டாள்க
கிட்டயே சொல்லாததால அவன் மத்தவங்க கிட்டயும் வாயைத் திறக்க மாட்டான்னு நினைக்கிறாங்க….
அந்த டைரக்டர் அவன் மந்திரி மகன்கிறதால தயங்கறார்”
“நீயே
நேர்ல போய் பேசிப் பாரேன்….. இந்த உலகத்துல முக்கியமா ஒன்னு நடந்து அது இல்லுமினாட்டிக்கு
முழுசா தெரியலைன்னா அது அவமானம் இல்லையா”
“சரி”
என்று சொல்லி விஸ்வேஸ்வரய்யா வைத்து விட்டார். அவர் இந்திய செயற்கைக் கோள் மற்றும்
வான் இயல் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு ஆலோசகர். மத்திய மந்திரிகளுக்கு நிகரான அதிகாரத்தை
இந்திய அரசு அவருக்குத் தந்திருக்கிறது. பேரறிவாளி. இல்லுமினாட்டியின் உறுப்பினர்.
இப்போது இஸ்ரோ இறங்கியிருக்கும் இந்த ஆராய்ச்சிக்குப் பரிந்துரை செய்தவர் அவர் தான்.
இது சம்பந்தமான எல்லா ரிப்போர்ட்களும் அவரிடம் தான் முதலில் தரப்படுகின்றன. அவருக்கு
வயது 67. அவருக்கு இந்த விஷயத்தில் இல்லுமினாட்டியின் தலைவரின் தனி ஈடுபாடு ஆச்சரியமாய்
இருந்தது. ஏதோ கூடுதலாக இதில் இருக்கிறது. இல்லாவிட்டால் கிழவர் நேரடியாக இதுபற்றி
விசாரிக்கச் சொல்ல மாட்டார். அதுவும் பதவி விலகப் போகும் சமயத்தில் அவர் தனிக்கவனம்
இதில் வருகிறது என்றால் கண்டிப்பாக மிக முக்கியமானதாக அவர் நினைப்பது ஏதோ இதில் இருக்கிறது….
இல்லுமினாட்டியில்
சேர்ந்த நாள் முதலே அவர் எர்னெஸ்டோவைக் கவனித்து வருகிறார். எர்னெஸ்டோ ரகசியம் காப்பதில்
கில்லாடி. அவர் என்ன நினைக்கிறார் என்பதை எப்போதும் யாரும் ஊகிக்க முடிந்ததில்லை. பார்க்க மிக ஓய்வாக இருப்பது போலவும் எதையும் கண்டு
கொள்ளாதது போலவும் தெரியும் என்றாலும் அது பொய்யான தோற்றம் தான். அலட்டிக் கொள்ளாத
அந்த மனிதர் சத்தமில்லாமல் செயல்படும் போது தான் அந்த அமைதிக்குப் பின்னிருக்கும் கூர்மையும்
வேகமும் எதிராளிக்குத் தெரிய வரும். பெரும்பாலும் அவர் கவனம் செல்லும் இடத்துக்கும்
மனிதனுக்கும் ஆபத்து உண்டு என்று அர்த்தம். எதற்கோ முடிவு கட்ட நினைக்கிறார் என்று
அர்த்தம். இப்போது க்ரிஷ் மீது கவனம் செலுத்துகிறார்…….
விஸ்வேஸ்வரய்யா
க்ரிஷைச் சந்திப்பதை அலுவலக ரீதியாக வைத்துக் கொள்வதா, தனிப்பட்ட முறையில் என்றாக்கிக்
கொள்வதா என்று யோசித்தார். கடைசியில் க்ரிஷைச் சந்தித்து விட்டு வந்த பின் அவன் சொல்வதை
வைத்துத் தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தார். உடனே க்ரிஷுக்குப் போன் செய்து தன்னை
இந்திய செயற்கைக்கோள் மற்றும் வானியல் ஆராய்ச்சிகளின் சிறப்பு ஆலோசகராகவே அறிமுகப்படுத்திக்
கொண்டு அவனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
மாணிக்கத்தின்
போன் அலறியது. யாரென்று பார்த்தார். அழைக்கும்
எண்ணைப் பார்த்ததும் அவர் முகம் வெளிறியது. அவர் முகம் போன போக்கை வைத்தே சங்கரமணி
அழைப்பது அந்தக் கடன்காரன் தான் என்பதைப் புரிந்து கொண்டார். அவருக்கும் வயிற்றைக்
கலக்கியது. என்ன சொல்லப் போகிறானோ?
மாணிக்கம் அமைதியைக் குரல் அளவிலாவது வரவழைத்துக் கொள்ள பெருமுயற்சி
செய்தார். “ஹலோ”
”என்ன மாணிக்கம் என் ஆள் எங்கேன்னு எதாவது தகவல் தெரிஞ்சுதா?”
“இல்லை சார்….. ஆனா நான் எல்லா வகைலயும் முயற்சி செய்துகிட்டுத்
தான் இருக்கேன்.”
அமைதியாக, ஆனால் ரத்தத்தைச் சில்லிட வைப்பது போல், கேட்டது
விஸ்வத்தின் குரல். “பிடிபட்ட அவன் வாயில இருந்து எல்லா விஷயத்தையும் அவங்க வரவழைச்சா
எனக்கு எந்தப் பாதிப்புமே இல்லை. ஏன்னா என்னைப் பத்தி அவனுக்குத் தெரிஞ்சதும் குறைவு.
அதை வச்சு என்னை அவங்க கண்டுபிடிக்கறது நடக்கவே நடக்காத காரியம். ஆனா அவனுக்கு உங்களைப்
பத்தி எல்லாமே தெரியும். அதை அவன் கக்கினா உன் அரசியல் வாழ்வு மட்டுமல்ல மொத்த வாழ்க்கையுமே
அஸ்தமனமாயிடும். ஞாபகம் வச்சுக்கோ….”
மாணிக்கத்தின் நாக்கு வரண்டது…. “தெரியும் சார்”
அவன் போனை வைத்து விட்டான். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற
நிலைமையின் தீவிரத்தை மாணிக்கம் நன்றாகவே உணர்ந்தார்.
(தொடரும்)
என்.கணேசன்