சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 25, 2019

சத்ரபதி – 61

ங்கள் மாளிகைக்குள்ளேயே தாங்கள் கொல்லப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை எதிர்பார்த்திராத சந்திராராவ் மோரும், அவன் தம்பியும் இறந்து விழுந்ததும் அமைதியாக சம்பாஜி காவ்ஜியும், ரகுநாத் பல்லாளும் அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியே வந்தார்கள். தூரத்தில் ஒரு சேவகன் இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். எங்கோ ஒரு அறையில் பெண்கள் பேசிக் கொண்டிருந்தது மெலிதாகக் கேட்டது.

இருவரும் பேசியபடியே வெளியே வந்தார்கள். மாளிகைக்கு வெளியே காவல் இருந்த வீரர்கள் காதில் அவர்கள் பேசிக் கொண்டே வந்தது காதில் விழுந்தது.

“மன்னர் என்ன சொல்லியும் மறுத்து விடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. …சம்பந்தம் முடியாது என்று ஆனபிறகு இங்கே தங்கி இவர்கள் விருந்தோம்பலைத் தொடர்ந்து பெறுவதில் அர்த்தமில்லை…..”

“அது கௌரவமும் அல்ல. அதனால் இப்போதே கிளம்புவது தான் நல்லது. இந்த மன்னர் பீஜாப்பூர் சுல்தானை விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் இந்த சம்பந்தத்திற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார் என்று நினைக்கிறேன்…..”

“இருக்கலாம். ஆனால் சிவாஜியிடம் இதை நாம் எப்படிச் சொல்வது? அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?”

“சொல்லித் தானாக வேண்டும். என்ன செய்வது?”

இருவரும் வெளியே வந்து விட்டார்கள். ஜாவ்லி காவல் வீரர்கள் காதுபடவே ரகுநாத் பல்லாள் தங்கள் வீரர்களிடம் சத்தமாகச் சொன்னான். “கிளம்புங்கள் வீரர்களே….”

ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் தங்கள் குதிரைகளில் ஏறிக்கொள்ள அவர்களுடைய வீரர்களும் வேகமாகக் கிளம்பினார்கள். அந்தச் சமயத்தில் உள்ளே மாளிகையிலிருந்து பெரும் கூக்குரல் கேட்டது. “அவர்களைப் பிடியுங்கள்….. விட்டு விடாதீர்கள்”

அந்தக் கூக்குரலில் உஷாராகி மாளிகைக்கு வெளியே இருந்த சில வீரர்கள் சிவாஜியின் ஆட்கள் செல்வதைத் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் சிவாஜி தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்த சிறப்பு வீரர்களோடு சேர்ந்து ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் தீவிரமாகவும் வேகமாகவும் போராடி மற்ற வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்வதற்குள் அங்கிருந்து தப்பித்து விட்டார்கள். முழுநிலவின் ஒளியில் இரவு நேரப் பயணத்தில் அவர்களுக்குப் பிரச்சினை இருக்கவில்லை. தயார் நிலையில் இருந்திராத ஜாவ்லி வீரர்கள் அவர்களை நிறைய தூரம் பின் தொடர முடியவில்லை.

எல்லைக்கு அருகே இருந்த அடர்ந்த காடுகளில் சிவாஜி முன்பே வந்துக் காத்திருந்தான்.    திட்டமிடும் போது சிவாஜி பேச்சுத் திறமை மிக்க ரகுநாத் பல்லாளையும், கத்தியை மிக லாவகமாகவும், வேகமாகவும் பயன்படுத்தும் திறமையுள்ள சம்பாஜி காவ்ஜியையும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்திருந்தான். அங்குள்ள காவல் சக்தி வாய்ந்ததல்ல என்பதையும், மாளிகையின் உள்ளே வீரர்கள் குறைவு, சேவகர்கள் தான் அதிகம் என்பதையும் சொல்லியிருந்தான். ”மாளிகையின் உள்ளே யாரும் அவர்களைத் தாக்க முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதனால் வரும் ஆட்கள் மீது சந்தேகம் இருந்தால் ஒழிய அவர்கள் வீரர்களை மாளிகைக்குள் இருத்திக் கொள்வதில்லை. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருங்கள். அது வரை பேசிக் கொண்டிருங்கள். பேசும் போது குழப்புங்கள். ஆசை காட்டுங்கள். எதையாவது செய்து பேச்சை வளர்த்திக் கொண்டே இருங்கள்…… சந்திராராவ் மோருடன் பெரும்பாலும் ஒரு தம்பியும், ஒரு மகனும் தான் இருப்பார்கள். சில நேரங்களில் ஒருவர் கூட, குறைய இருக்கலாம். பேச்சின் போது உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் குடியிலும் வம்புப் பேச்சிலும் பிரியமானவர்கள். உங்கள் சண்டையை ரசிப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கிக் கொன்று விட்டு வந்து விடுங்கள்….. அது இரவு நேரமாக இருந்தால் உங்களுக்குத் தப்புவதும் சுலபமாக இருக்கும். ஏனென்றால் இரவு நேரங்களில் வேலையாட்களின் நடமாட்டமும் மாளிகைக்குள் அதிகம் இராது. உங்கள் வேலை ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் முடிய வேண்டும்…..”

செல்லும் போது அவர்களைத் தங்க வைத்துக் கொள்ள சந்திராராவ் மோர் விரும்பா விட்டால் எதாவது ஆசை வார்த்தைகள் அல்லது குழப்பும் வார்த்தைகள் சொல்லி எதிர்பார்ப்பை வளர்த்து ஓரிரண்டு நாட்களாவது தங்கி விட வேண்டும் என்று எண்ணி வந்தவர்களை சந்திராராவ் மோர் தானாகவே தங்க வைத்ததும், சென்ற நாள் இரவே பேச அழைத்ததும் அவர்கள் வேலையைச் சுலபமாக்கியிருந்தன.

அடர்ந்த காட்டுக்குள் பெரும் படையுடன் தங்கி இருந்த சிவாஜி, ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் அவன் நினைத்ததை விட வேகமாய் வேலையை முடித்துக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைந்தான். காலதாமதம் செய்யாமல் உடனே ஜாவ்லியை நோக்கி அவனுடைய பெரும்படை புறப்பட்டது.

சிவாஜி போட்ட கணக்கின்படியே ஜாவ்லியில் போருக்குத் தயார் நிலையில் யாரும் இருக்கவில்லை. வஞ்சகமாக சிவாஜியின் ஆட்கள் மன்னனையும், மன்னனின் சகோதரனையும் கொன்று விட்டுத் தப்பித்து விட்டார்கள் என்ற செய்தியை ஜீரணிக்கவே அவர்களுக்கு சிறிது சமயம் தேவைப்பட்டது. இனி என்ன செய்வது, கொலைகாரர்களைப் பிடிப்பது எப்படி, அடுத்த மன்னன் யார், என்று அமைச்சர்களும், அரச குடும்பமும் யோசித்து அலசிக் கொண்டிருக்கையில் சிவாஜி படையுடன் புகுந்தான்.  ஜாவ்லி அரச குடும்பத்தினர்கள் வீரர்களே என்பதால் சிறப்பாகவே போரிட்டார்கள் என்றாலும் அரசனில்லாத குறை  போரில் நன்றாகவே வெளிப்பட்டது. ஜாவ்லி வீரர்களும் அரசனே இறந்து விட்ட நிலையில் இந்தப் போர் வீண் தான், தோற்பது நிச்சயம் என்று உணர்ந்திருந்தது போல் இருந்தது. ஒருவேளை ஜாவ்லி சிவாஜியின் கைக்குப் போனால் தங்களுக்கு உயர்வே என்றும், வீரர்களை சிவாஜி மிக நன்றாகவும் திருப்தியுடனும் வைத்துக் கொள்வான் என்றும் வீரர்கள் நம்பினார்கள். அந்த அளவுக்கு சிவாஜி புகழ் அங்கும் பரவி இருந்தது. மன்னனும் இறந்து விட்ட படியால் சீக்கிரமே போர் முடிந்து சிவாஜியுடனேயே சேர்ந்து விடும் எண்ணம் பல வீரர்களுக்கு இருந்தது. இந்தக் காரணங்களால் போர் விரைவிலேயே முடிவுக்கு வந்து சிவாஜியின் ஆளுமைக்கு ஜாவ்லி பிரதேசமும் வந்து சேர்ந்தது. மராட்டியப் பகுதியின் சகாயாத்ரி மலைத்தொடரை ஒட்டிய பிரதேசம் ஒட்டு மொத்தமாய் இப்போது சிவாஜி வசமாகி விட்டது…..

 
ஷாஹாஜி பீஜாப்பூர் சுல்தானைப் பார்த்துச் செல்ல பீஜாப்பூர் வந்திருந்தார். சுல்தான் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்றும் அவரைக் காண விரும்புகிறார் என்றும் தகவல் வந்த பிறகு அவர் சிறிதும் தாமதிக்காமல் கிளம்பி வந்திருந்தார்.

முகமது ஆதில்ஷா மிகவும் மெலிந்து போயிருந்தார். முதுமையின் முத்திரை அவர் மீது நன்றாகவே பதிந்திருந்தது.

“எப்படி இருக்கிறீர்கள் அரசே?” ஷாஹாஜி கவலையுடன் கேட்டார்.

ஆதில்ஷா அவரது கவலையில் மனம் நெகிழ்ந்து போனார். மரணம் நெருங்கும் காலத்தில் உண்மையான அக்கறை பார்க்க அபூர்வமாகவே கிடைக்கிறது….. பலவீனமான குரலில் ஆதில்ஷா சொன்னார். “அல்லா என்னை அழைத்துக் கொள்ள தீர்மானித்து விட்டபடியே தோன்றுகிறது ஷாஹாஜி. நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்……”

“அப்படிச் சொல்லாதீர்கள் அரசே,” ஷாஹாஜி வருத்தத்துடன் சொன்னார்.

”நெருப்பு என்பதால் வாய் வெந்து விடாது. மரணத்தை நினைப்பதாலோ, சொல்வதாலோ மரணமும் நெருங்கி விடாது ஷாஹாஜி. உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பலவீனத்தை உணர்கிறேன். அதனால் சொன்னேன்”

ஆதில்ஷா சொன்னது உண்மையே. மரணம் சொல்லியோ, அழைத்தோ வருவதில்லை. அவருடைய அன்பு மகன் சாம்பாஜிக்கு எப்படி மரணம் வந்தது? மகன் நினைவு மனதில் இப்போதும் பெரும் வேதனையை ஷாஹாஜி மனதில் உருவாக்கியது. அவர் எண்ண ஓட்டத்தை ஆதில்ஷா உணர்ந்தது போல் அவருடைய கையை ஆறுதலாகப் பிடித்தார்.

பலரும் கொல்லத் தயாராக இருந்து பல முயற்சிகள் செய்தும் ஷாஹாஜியின் இரண்டாம் மகன் சிவாஜியைக் கொல்ல முடியாததும், அத்தனை எதிரிகளைச் சம்பாதிக்காத போதும் ஒரே ஒரு முயற்சியில் ஷாஹாஜியின் மூத்த மகன் சாம்பாஜி கொல்லப்பட்டதும் விதியின் விசித்திர விளையாட்டாக ஆதில்ஷாவுக்குப் பட்டது. சமீபத்தில் ஜாவ்லியையும் சிவாஜி கைப்பற்றி விட்டான். விதி இப்போது அவன் வளைத்தபடி வளைந்து கொடுப்பதாகவே அவருக்குத் தோன்றியது……

ஆதில்ஷாவின் ஆறுதலான கைப்பிடியில் ஷாஹாஜியும் நெகிழ்ந்தார். ஆதில்ஷா ஒரு காலத்தில் அவருக்கு மரண தண்டனை விதித்த மனிதர் என்றாலும் முன்பும் பின்பும் மற்ற சமயங்களில் நட்புடனும், பெருந்தன்மையுடனும் தன்னிடம் நடந்து கொண்ட மனிதர் என்பதை ஷாஹாஜியால் மறக்க முடியவில்லை.

“தங்களிடம் கடைசியாக ஒரு வேண்டுகோளை விடுக்கத் தான் அழைத்தேன் ஷாஹாஜி…” ஆதில்ஷா சொன்னார்.

“வேண்டுகோள் என்று சொல்லாதீர்கள் மன்னா. ஆணையிடுங்கள். செய்கிறேன்….”

அந்த வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்த ஆதில்ஷா அவருடைய கையை இறுக்கப் பிடித்துக் கொண்டார். “என் காலத்திற்குப் பிறகு நீங்கள் என் மகனைக் கைவிட்டு விடக்கூடாது ஷாஹாஜி. உங்கள் இளைய மகன் சிவாஜி வெற்றி மீது வெற்றி கண்டு வருகிறான். பேரரசர் ஷாஜஹான் கூட அவனுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார் என்ற தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன. அதனால் அவனுடன் நீங்கள் சேர்ந்தால் அதைத் தவறு என்று நினைக்க முடியாது. ஆனால் ஒரு நண்பனாக நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் இந்த அரசின் பக்கமே கடைசி வரை இருக்க வேண்டும் என்பது என் ஆசை.”

ஷாஹாஜி சொன்னார். “என் மகன் என் உதவியில்லாமலேயே எத்தனையோ சாதித்து விட்டான் அரசே. இவ்வளவு காலம் தேவைப்படாத என் உதவி அவனுக்கு இனியும் தேவைப்படாது. அவனும் இதுவரை என் உதவியைக் கேட்டதில்லை.  இனியும் அவன் கேட்பான் என்று தோன்றவில்லை. அவன் பிறப்பிலிருந்தே எங்களைப் பிரித்து வைத்த விதி இனி சேர்த்து வைக்கும் அறிகுறியும் இல்லை. அதனால் நான் வாக்குத் தருகிறேன் மன்னா….. கண்டிப்பாக நான் கடைசி வரை உங்கள் அரசின் பக்கமே இருப்பேன்….”


ஆதில்ஷா உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். “நன்றி நண்பரே நன்றி”


(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Son and father in different camps now. What will happen? I am very curious now.

    ReplyDelete
  2. அருமையான திட்டம் போட்டு ஜாவ்லியை கைப்பற்றி விட்டனர்.... சிவாஜி பீஜாப்பூரையும் தன்வசப்படுத்தி விடுவானோ...!!!

    ReplyDelete