சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 18, 2019

சத்ரபதி 60


ந்திராராவ் மோருக்கு அந்த முட்டாளை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. திமிரைக் காட்டினால் உடனேயே வாளால் வெட்டிச் சாய்க்கலாம். ஆனால் அறியாமையைக் காட்டினால் என்ன தான் செய்வது? அவன் தம்பியைப் பார்த்தான்.

தம்பி ரகுநாத் பல்லாளிடம் சொன்னான். “நீ புரிந்து கொள்வது அதிகமாய் விட்டதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. அதிசாமர்த்தியம் யாருக்கும் நல்லதல்ல”

“ஐயா! நான் தவறாகக் கேட்டிருந்தால் தயவு செய்து மன்னித்தருளுங்கள். இனி ஜாவ்லி உங்கள் முப்பாட்டனுக்குத் தானமாகக் கிடைத்தது பற்றி நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன்…. இரு பக்கத்து முப்பாட்டன்களையும் விட்டு விட்டுப் பேசுவோம். எங்கள் சிவாஜி உங்களுக்கு எந்த விதத்தில் சமமானவர் இல்லை என்று கருதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”

‘மறுபடியுமா!’ என்று சலித்த தம்பி அண்ணனைப் பார்த்தான். சந்திராராவ் மோர் அந்த முட்டாளிடம் பேசி மன அமைதியை இழக்க வேண்டுமா என்று யோசித்தாலும் அந்த மரமண்டைக்கு இப்போதைய யதார்த்த நிலையைப் புரிய வைத்தே ஆக வேண்டும், இல்லா விட்டால் சிவாஜியை விட நம்மைக் குறைவாக அவன் நினைத்துக் கொண்டது மாறாது என்று நினைத்தபடி சொன்னான். “நான் பிறந்ததில் இருந்தே அரசன். அன்றும் ஜாவ்லியின் அரசன். இன்றும் ஜாவ்லியின் அரசன். ஆனால் சிவாஜி? அவன் பிறந்த போது அவன் விலாசம் என்ன? யோசித்துப் பார். இப்போது எங்கள் இருவருக்கிடையே இருக்கும் ஏற்ற தாழ்வுகள் புரிகிறதல்லவா?....”

ரகுநாத் பல்லாள் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்து விட்டு, “புரிகிறது மன்னா” என்று சொன்னான்.

“என்ன புரிகிறது சொல்” என்றான் சந்திராராவ் மோர். அவனுக்கு அந்த வித்தியாசங்களை சிவாஜியின் ஆள் வாயால் கேட்டு மகிழ விருப்பமாக இருந்தது.

”நீங்கள் பிறக்கும் போது ஜாவ்லியின் அரசன். இன்றும் ஜாவ்லியின் அரசன். சிவாஜி பிறக்கும் போது அனாமதேயம். இன்றோ உங்களை விட மூன்று மடங்கு பூமிக்கு அரசன். உங்கள் ஆட்சி அன்றும் இன்றும் ஒரே பூமியில் விரிவடையாமல் இருக்கிறது. சிவாஜியின் ஆட்சியோ நாளுக்கு நாள்  விரிவடைந்து கொண்டே இருக்கிறது…. நீங்கள் ஜாவ்லியில் ஆட்சி செய்ய வருடாவருடம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் சிவாஜி யாருக்கும் எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை….”

சந்திராராவ் மோர் இரத்தம் கொதித்தது. அந்த மூடன் கண்ட வித்தியாசங்கள் அவன் இது வரை கண்டிராதவை. காணவும் விரும்பாதவை. அந்த மூடன் புரிகிறது என்று சொன்னவுடனேயே விட்டு விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. சினத்தோடு கேட்டான். ”எனக்கு அதிகமாக இருந்து அவனுக்குக் குறைவாக இருப்பது எதுவும் உன் அறிவுக்கு எட்டவில்லையா?”

“எட்டுகிறது மன்னா. அதைச் சொல்லத் தேவையில்லை என்று விட்டு விட்டேன்”

“பரவாயில்லை சொல் மூடனே. நான் அதைக் கேட்கப் பிரியப்படுகிறேன்.”

ரகுநாத் பல்லாள் ஆழ்ந்த ஞானத்தோடு உணர்ந்தவன் போல் சொன்னாள். “உங்களுக்கு வயது அதிகம். சிவாஜிக்கு வயது குறைவு…. உங்களுக்குப் ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவருக்கு இனிமேல் தான் பிறக்க வேண்டும்.”

சந்திராராவ் மோரின் தம்பி குடி போதையில் தன் கட்டுப்பாட்டையும் மீறிச் சிரித்து விட சந்திராராவ் மோர் கடுங்கோபத்தில் தன் வாள் மீது கையை வைக்க சம்பாஜி காவ்ஜியும் கோபம் கொண்டவனாய் தன் சகாவைக் கடிந்து கொண்டான்.

“மன்னர் உன்னை மூடன் என்று அழைத்ததில் தவறேயில்லை. அவர் என்ன கேட்டார்? நீ என்ன சொல்கிறாய்?”

தன் பக்கமாக சம்பாஜி காவ்ஜி பேச ஆரம்பித்ததும் வாள் மேல் வைத்த கையை விலக்கிக் கொண்ட சந்திராராவ் வந்திருப்பவர்களில் ஒருவனாவது விவரமுள்ளவனாக இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டான். சில சில்லறை விஷயங்களில் நமக்காக நாமே வாதாடுவது சற்று கௌரவக் குறைவாகவே தோன்றுவதால் அடுத்தவர் வாதாடுவது மதிப்பைக் கூட்டும் என்று நிம்மதி அடைந்தான்.

ரகுநாத் பல்லாள் தன் சகா பக்கம் திரும்பினான். “இந்த மன்னரிடம் அதிகம் இருந்து நம் மன்னர் சிவாஜியிடம் அதிகமில்லாததைச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன்…..”

“நீ சொன்னது அவரைக் கோபமூட்டும் விதத்தில் இருப்பதை நீ உணரவில்லையா மூடனே”

“அவர் கேட்டதற்கு நான் பதில் சொல்லா விட்டால் அது அவரை அவமதிப்பது போல் ஆகுமா ஆகாதா? பதில் சொல்லாமல் விட்டால் அது அவரைக் கோபமூட்டாதா முட்டாளே” ரகுநாத் பல்லாளும் கோபத்தோடு கேட்டான்.

”நம் மன்னர் இந்தச் சம்பந்தத்தை எப்படியாவது முடித்து விட்டு வரும்படி அல்லவா நம்மிடம் சொல்லி அனுப்பினார்? நீ பேசுவது அவரைக் கோபமூட்டுவது போல் அல்லவா இருக்கிறது?”

“அவரைக் கோபமூட்டுவது உண்மை. நானல்ல. என்னை ஏன் குற்றம் சொல்கிறாய்?”

“ஒரு சம்பந்தம் உறுதி செய்யப்பட வேண்டுமானால் இனிமையாகப் பேச வேண்டும். பிடித்தமானவைகளையே பேச வேண்டும். அதை விட்டு விட்டு உண்மையைப் பேசுவதாகச் சொல்லி அவருக்கு எதிரானதையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் இந்தச் சம்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படுமா?”

”சரி. உண்மை கோபமூட்டுவதால் அதற்கு எதிரானதையே சொல்கிறேன். மன்னா. நீங்கள் இளைஞர். சிவாஜி முதியவர். உங்களுக்குப் பிள்ளைகள் இனி தான் பிறக்க வேண்டும். சிவாஜிக்குப் பல பிள்ளைகள். சரி தானா”

சந்திராராவ் மோரை விட சம்பாஜி காவ்ஜி கோபத்தின் உச்சத்திற்குப் போய் ரகுநாத் பல்லாள் மீது பாய்ந்து அவன் கழுத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டே சொன்னான். “மூடனே நீ வாயை மூடிக் கொண்டு இரு; அது போதும்…..”

“வாயை மூடிக் கொண்டிருந்தால் சம்பந்தம் எப்படி நடக்கும்? முட்டாளே நீ அதைச் சொல் முதலில்” என்றபடியே ரகுநாத் பல்லாளும் சம்பாஜி காவ்ஜியின் கழுத்தைப் பிடித்துக் கொண்டான்.

தங்கள் முன் இருவரும் சண்டையிடுவதைத் தடுக்க சந்திராராவ் மோரின் தம்பி எழப் போனான். சந்திராராவ் மோர் தடுத்து அமர வைத்துக் காதில் முணுமுணுத்தான். “விடு. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகட்டும். நாம் இவர்களைப் பொழுது போக்குக்காகத் தானே கூப்பிட்டனுப்பினோம். இப்போது தான் பொழுது போக்கு களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. வேடிக்கை பார்.”

தம்பி அதுவும் சரிதான் என்று நினைத்தவனாக அமர்ந்தான். இருவரும் மது அருந்தியபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

சம்பாஜி காவ்ஜி சொன்னான். “தவறாகப் பேசுவதை விட மௌனம் உத்தமம். அதனால் எத்தனையோ காரியம் நடக்கும்”

ரகுநாத் பல்லாள் சொன்னான். “அந்தக் காரியம் நல்லதாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமா? முக்கியமாய் இந்தச் சம்பந்தம் உறுதிப்படுமா? அதைச் சொல் முட்டாளே”

சம்பாஜி காவ்ஜி கத்தி எடுத்துக் கொண்டு ரகுநாத் பல்லாளின் கழுத்தில் வைத்துச் சொன்னான். “உன்னை ஒழித்தால் அதிலேயே மகிழ்ச்சியடைந்து மன்னர் தன் மகளை சிவாஜிக்குக் கொடுப்பார்”

ரகுநாத் பல்லாளும் தன் கத்தியை எடுத்துக் கொண்டான். “என்னை ஒழிக்கும் வரை என் கை பூப்பறித்துக் கொண்டிருக்குமா?”

சம்பந்தம் பேச வந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கத் தயாரானது சந்திராராவ் மோருக்கு வேடிக்கையாக இருந்தது. சிவாஜியை விடப் பெரிய முட்டாள்களாக அவன் அனுப்பிய ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். நடுநிசியாகி இருந்ததால் மாளிகையில் மற்றவர்கள் அனைவரும் உறங்கி விட்டிருந்தார்கள். இவர்களும் இத்தனை களேபரத்திலும் குரலை மட்டும் அடக்கியே வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் கோபம் பேச்சிலும், முகத்திலும் தெரிந்ததே ஒழிய சத்தம் அறையை விட்டுத் தாண்டவில்லை. குடி போதையில் இருந்த இருவரும் இந்த சூட்சுமத்தைக் கவனிக்காமல் சுவாரசியமாகக் குடித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.

சம்பாஜி காவ்ஜி ”இப்போதும் தவறை உணர மாட்டேன் என்கிறாயே மூடனே. உன்னுடன் பேசுவதும் எனக்கு வெறுப்பாக இருக்கிறது.” என்று சொல்லி விட்டு விலகி எழுந்து நின்றான்.

ரகுநாத் பல்லாள் தானும் எழுந்து நின்றான். “என்னுடைய தவறை நான் உணர்கிறேன். உன்னோடு வந்தது தான் என் தவறு. இங்கு உண்மை பேசியது இன்னொரு தவறு”

“மன்னர் சிவாஜி உன்னை இங்கு அனுப்பியதே தவறு என்பது என் கருத்து. பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவாய் என்று தெரிந்திருந்தால் உன்னை அனுப்பி இருக்க மாட்டார்.”

“சரி முட்டாளே! நீ பேசாமல் காரியம் சாதித்து விடு பார்ப்போம். நான் உன்னுடன் போராடவில்லை. ஆனால் சாதிக்கா விட்டால் உன்னை நான் சும்மா விட மாட்டேன்” என்று சொன்ன ரகுநாத் பல்லாள் தன் கத்தியை மறுபடி உறையில் போட்டுக் கொண்டான்.

சண்டை வெட்டு குத்தில் முடியாததில் சந்திராராவ் மோருக்குச் சிறுவருத்தம். சரி இந்த முட்டாள் பேசாமல் எப்படிச் சாதிக்கிறான் என்று பார்ப்போம் என்று நினைத்தவனாய் அடுத்த வேடிக்கைக் காட்சிக்குத் தயாரானான்.


“இதோ சாதிக்கிறேன் பார்” என்று சொன்ன சம்பாஜி காவ்ஜி  சற்றும் எதிர்பாராத விதமாய் சந்திராராவ் மோர் மீது பாய்ந்தான். சம்பாஜி காவ்ஜியின் ஒரு கை  சந்திராராவ் மோரின் வாயை உறுதியாகப் பொத்தியது. மறு கையிலிருந்த கத்தி அவன் கழுத்தை மின்னல் வேகத்தில் அறுத்தது.. குடிபோதையில் இருந்த தம்பி என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் ரகுநாத் பல்லாள் பாய்ந்து தம்பி வாயை ஒரு கையால் பொத்தி மறு கையால் உடும்பாக உடலை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அண்ணனை ஒழித்துக் கட்டிய கத்தியாலேயே தம்பியின் கழுத்தையும் சம்பாஜி காவ்ஜி வேகமாக அறுத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Xelnt திருப்பம் - நிழலாய் இருந்து பார்ப்பது போல் இருந்தது - அருமையான கதை

    ReplyDelete
  2. Superb sir. Excellent narration.

    ReplyDelete
  3. அருமையான நாவல். நான் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். சிவாஜிக்காக ஔரங்கசீப்பின் தர்பாரில் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கும் இடம் வந்து விட்டேன். எனக்கும் அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆவல் தான். சரித்திர நாவலிலும் சரித்திரம் படைத்து விட்டீர்கள் கணேசன் சார்.

    ReplyDelete
  4. மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது.

    ReplyDelete
  5. அட... நகைச்சுவையாக சென்று கொண்டிருந்து.. தீடீரென கொலையில் முடிந்து விட்டதே...!!! இது சற்று எதிர்பாராத திருப்பம் தான்... அடுத்து என்ன???

    ReplyDelete
  6. சம்பாஜி காவ்ஜி சரியான கழுத்தறுப்பு பேர்வழி

    ReplyDelete