சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 19, 2018

சத்ரபதி 47



சோதனைக் காலங்களில் தனிமை கொடுமையானது. அந்தத் தனிமை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் விதியால் விதிக்கப்பட்டதாக இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகவே நகரும். அதை ஷாஹாஜி சிறையிலிருக்கையில் நன்றாகவே உணர்ந்தார். பீஜாப்பூரில் அவர் நண்பர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் சுல்தானின் கோபத்திற்குப் பயந்து ஒருவர் கூட ஷாஹாஜியைப் பார்க்க வரவில்லை. அவர் அதைத் தவறாக நினைக்கவில்லை. அவர் அவர்கள் நிலைமையில் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். எல்லோருக்கும் அவரவர் குடும்பங்கள் இருக்கின்றன. அவரவர் நலனில் அக்கறை காட்டாதவர்கள் கூட குடும்பங்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது. சுல்தானின் கோபத்தைச் சம்பாதித்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் நண்பர்கள் குடும்பத்துடன் நலமாக தூரமாகவே இருக்கட்டும் என்று ஷாஹாஜி நினைத்தார்.

அவருக்கு இந்த நிலைமை வந்திருப்பது சிவாஜியால் தான் என்றாலும் அவர் சிவாஜி மேலும் தவறு காணவில்லை. அவனுடைய வேகம் சற்று அதிரடியாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தாலும் கூட அதன் பின் ஆழ்ந்த திட்டம் இருந்தது. வேகமாகச் செயல்பட்டாலும் எடுத்து வைத்த அடிகளில் தவறில்லை. அந்த வயதில் அந்த அறிவும், துணிச்சலும் அபாரம் தான்.. அவன் வயதில் அவருக்கு இப்படிக் கணக்குப் போட்டு செயல்படத் தெரிந்ததில்லை….. எனவே சிவாஜி இந்த நிலைமையில் அவரைக் கொண்டு வந்து விட்டும் கூட,மகனை மானசீகமாக அவர் சிலாகித்துப் பெருமையே அடைந்தார். ஜீஜாபாய் சொன்னது போல் அவனால் கனவு காண முடிந்தது மட்டுமல்லாமல் அதை நனவாக்கும் முயற்சிகளையும் கவனமாகவும் துணிச்சலாக எடுக்க முடிகிறது.  அவரை ஆதில்ஷா கைது செய்யக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்…… பாவம்! அது ஒன்று தான் அவன் கணக்கில் நேர்ந்த பிழை! அவர் விஷயத்தில் விதி இன்னும் சலித்து விடவில்லை என்று தோன்றியது. திரும்பத் திரும்ப அவர் வாழ்க்கையிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் விதியின் விளையாட்டுக் களத்தில் அவர் மகன் சிவாஜியும் சேர்ந்திருக்கிறான். அவருக்கு விதியை வெல்ல முடிந்ததில்லை. ஆனால் அவர் மகன் சிவாஜிக்கு அதை வெல்ல முடிந்தாலும் முடியலாம் என்று அந்தத் தந்தைக்குத் தோன்றியது.

அவருடைய உண்மையான கவலை பெங்களூரில் உள்ள இரண்டாவது குடும்பம் குறித்ததாகவே இருந்தது. வெங்கோஜி இன்னமும் சிறுவன் தான். இரண்டாம் மனைவி துகாபாய் ஜீஜாபாயைப் போல் விவரமானவளோ, தைரியமானவளோ அல்ல. சாம்பாஜி அவளையும் வெங்கோஜியையும் பேதமில்லாமல் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவருடைய இடத்தை அவனால் பூர்த்தி செய்துவிட முடியாது…..


டுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதில்ஷா நீண்ட ஆழ்ந்த ஆலோசனை நடத்தினார். தந்தையின் கைது சிவாஜியை எப்படி இயங்க வைக்கும் என்பதை அவரால் சரியாக யூகிக்க முடியவில்லை. உடனே பீஜாப்பூர் வந்து சிவாஜி சரணடைவான் என்று எதிர்பார்க்க முடியா விட்டாலும் கைப்பற்றிய கோட்டைகளைத் திரும்பத் தந்து சமாதானத்திற்கு முயற்சி செய்வான் என்று எதிர்பார்த்தார். அப்படி ஒப்படைத்தால் அத்துடன் திருப்தி அடைந்து ஷாஹாஜியை விடுவித்து விடலாமா அல்லது அவருக்குப் பதிலாக சிவாஜியைக் கைது செய்து அவரை விடுவிக்கலாமா என்றெல்லாம் யோசித்தார். அவர் தன் ஆலோசகர்களிடம் சிவாஜியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கேட்ட போது பலவிதமான கருத்துக்கள் வந்தன.

“தந்தைக்காக சிவாஜி கண்டிப்பாக பீஜாப்பூர் வருவான். மன்னிப்பு கேட்பான்”

“சிவாஜி கண்டிப்பாக வர மாட்டான். கைப்பற்றிய கோட்டைகளை மட்டும் திருப்பித் தந்து கடிதம் மூலம் மன்னிப்பு கேட்பான்”

“சிவாஜி வரவும் மாட்டான். மன்னிப்பும் கேட்க மாட்டான். அவனுக்கும் ஷாஹாஜிக்கும் இடையே நல்ல இணக்கம் இல்லை. அதனால் தந்தைக்கு என்ன ஆனாலும் கண்டு கொள்ள மாட்டான்…..”

“நேரடியாக சிவாஜியைத் தாக்கினால் ஒழிய சிவாஜியைப் பணிய வைக்க வேறுவழி இல்லை….”

“சிவாஜி திடீர் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது. தந்தையை அவன் விடுவித்துக் கொண்டு போய் விடலாம். எனவே சிறைக்காவலைப் பல மடங்கு பெருக்கி வைப்பது நல்லது”

ஷாஹாஜி மீதும், சிவாஜி மீதும் தீராத வஞ்சம் வைத்திருந்தவன் சொன்னான். “ஷாஹாஜி உயிருக்கு ஆபத்து இல்லை என்கிற நிலை இருக்கிற வரை சிவாஜி அசைய மாட்டான். ஷாஹாஜியைத் தூக்கில் போடுவதாகவோ, சிரத்சேதம் செய்வதாகவோ அறிவியுங்கள். சிவாஜி வேறு வழியில்லாமல் வரலாம்….”

ஆதில்ஷாவுக்குத் தலைசுற்றியது. இத்தனையும் நடக்கக்கூடிய சமாச்சாரங்களே. சிவாஜியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை  என்பதால் இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய அவருக்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. நீண்ட நேரம் ஆலோசித்தார். சில வருடங்களுக்கு முன்பு சில நாட்கள் பழகிய சிவாஜியைத் திரும்பவும் மனதில் கொண்டு வந்தார். அவருக்கு அவனைக் குறித்து நினைவிருந்ததை எல்லாம் மறுபடியும் மனத்திரைக்குக் கொண்டு வந்து கூடுதல் கவனத்துடன் அலசினார். பின் தற்போதைய நிகழ்வுகளை எல்லாம் நினைத்துப் பார்த்தார். அந்த சிவாஜியிலிருந்து இப்போதைய சிவாஜி வரை ஏற்பட்டிருந்த பரிணாம வளர்ச்சி அவரைப் பிரமிக்க வைத்தது. ஆனால் அத்தனைக்குமான வேர் அன்றைக்கே அவனிடம் உயிர்ப்புடன் இருந்ததாகத் தோன்றியது. அன்றைக்கே தீவிரமான எண்ணங்கள், ஆழ்ந்த சிந்தனைகள், வயதுக்கு மீறிய கூர்மையான அறிவு எல்லாம் இருந்தன.  அவன் குணாதிசயங்களில் பாசக்குறைவு இருக்கவில்லை. தந்தை மீது அவன் மிகுந்த அன்பு வைத்திருந்தவனாகவே தெரிந்தான். தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்காதவனாக இருந்தாலும் தந்தை மீது பாசமில்லாதவனாக இருக்கவில்லை. இப்போதும் அப்படி மாறி விட்டிருக்க வழியில்லை. சிறையில் தந்தையை அடைத்தது வேண்டுமானால் அவனை அசைக்காமல் இருக்கலாம். ஆனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் அலட்சியமாக இருந்து விடும் கல்நெஞ்சக்காரனாக மட்டும் அவன் இருக்க வழியே இல்லை.

ஷாஹாஜியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க சிரத்சேதமும், தூக்கில் இடுவதும் அதிகபட்சக் குரூரமாகவும், அவரைப் போன்ற ஒருவரை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் தோன்றியது. ஆனால் அவரைச் சிறையிலேயே வைத்திருந்தாலோ சிவாஜி பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் கூடும். அதனால் ஷாஹாஜிக்கு மரண தண்டனை விதிப்பது சிவாஜியை உடனடியாக வரவழைப்பதற்கு மிக முக்கியம்…… யோசித்து ஆதில்ஷா ஒரு முடிவுக்கு வந்தார்.


ரசவைக்கு அழைத்துச் செல்ல வீரர்கள் வந்த போது ஆதில்ஷா ஒரு முடிவை எட்டி விட்டார் என்பது ஷாஹாஜிக்குப் புரிந்தது. தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அவர் கவலைப்பட்டு ஆகப் போவது எதுவுமில்லை…. அமைதியாக அரசவைக்குச் சென்ற அவரை அந்த நிலையில் பார்க்க பலருக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் ராஜ மரியாதையுடன் அந்தஸ்துடன் அமர்ந்திருந்த அதே அரசவையில் இப்போது ஒரு கைதியாக நுழைந்ததைப் பார்க்கச் சகிக்காமல் அவருடைய நண்பர்கள் தலைகுனிந்து கொண்டார்கள். ஷாஹாஜியின் வாழ்க்கையில் விதி விளையாடுவது இது முதல் தடவையல்ல என்பதால் அவர் வேகமாக பாதிப்பிலிருந்து மீண்டு இப்போது அமைதி அடைந்திருந்தார்.

ஆதில்ஷா தன் தீர்ப்பைச் சொன்னார். “ஷாஹாஜி உங்கள் மகன் இந்த ராஜ்ஜியத்திற்குத் துரோகம் செய்திருக்கிறான். இராஜ்ஜியத்திற்குச் சேர வேண்டிய நிதியை கொள்ளையடித்திருக்கிறான். இராஜ்ஜியத்திற்குச் சொந்தமான கோட்டைகளைக் கையகப்படுத்தியிருக்கிறான். ராஜத்துரோகத்திற்கு மரண தண்டனை தான் கால காலமாக வழங்கப்படும் தண்டனை.  ஆனால் தங்கள் மீது எமக்கு முன்பிலிருந்தே இருந்த அன்பின் காரணமாகவும், இந்தக் கையாடலில் தங்கள் பங்கு எதுவுமில்லை என்று தாங்கள் கூறுவதன் காரணமாகவும் தங்கள் மீது யாம் கருணை காட்டத் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கு நடந்த தவறுகள் திருத்தப்பட வேண்டும். கல்யாண் நிதியையும், கைப்பற்றிய கோட்டைகளையும் தங்கள் மகன் சிவாஜி எமக்குத் திருப்பித் தந்து தன் செயலுக்கு நேரடியாக இங்கு வந்து மன்னிப்புக் கோரும் பட்சத்தில் உங்களை விடுவிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் அப்படி உங்கள் மகன் சிவாஜி செய்யத் தவறும் பட்சத்தில் உங்களை உயிரோடு சமாதி செய்யத் தீர்ப்பு வழங்குகிறோம். உங்களைச் சுற்றி நாற்புறமும் சுவர்கள் எழுப்பி சிறு துளையை மட்டும் விட்டு வைக்கக் கட்டளையிடுகிறேன். பத்து நாட்களில் உங்கள் மகன் இங்கு வந்து தவறுகளைத் திருத்திக் கொள்ளாத பட்சத்தில் அந்தத் துளையும் மூடிவிடப்படும் என்பதையும் அறிவிக்கிறேன். இனி உங்கள் உயிர் உங்கள் மகன் கையில். நீங்கள் உயிர்பிழைக்க வேண்டுமா அல்லது கல்யாண் நிதியும், கோட்டைகளும் வேண்டுமா என்று அவன் தீர்மானிக்கட்டும்!”  

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. ஐயோ சிவாஜி எப்படி சமாளிக்கப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இனி ஒரு வாரம் பொறுக்க வேண்டுமா? என்ன சார் இப்படிப் பண்றீங்க?

    ReplyDelete
  2. Thrilling and interesting. Situation of that period and political moves of the powerful people were beautifully picturized in this novel.

    ReplyDelete
  3. ஷாஹாஜியின் வாழக்கையில் விதி விளையாடுவதை பார்க்கையில்... வருத்தமாக உள்ளது...
    இதை சிவாஜி எப்படி சமாளிக்கப் போகிறான்...?

    ReplyDelete