சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 22, 2018

இருவேறு உலகம் – 111


மாஸ்டரைச் சந்திக்க தாடி, மீசையுடன் இருந்த சீக்கியன் ஒருவன் வந்து சிறிது நேரம் பேசி விட்டுப் போனான் என்ற தகவல் விஸ்வத்துக்குக் கிடைத்தது. அது யார் என்று தெரிந்து கொள்ள அவன் அதிக ஆர்வம் காட்டவில்லை. போலீஸ் அல்லது வக்கீல் அல்லது ஏதாவது துப்பறியும் நிபுணராக அந்த இளைஞன் இருக்கலாம் என்று விஸ்வம் நினைத்தான். இழந்த பணத்தை மீட்க என்ன செய்யலாம் அல்லது சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று இயக்கத்தின் தலைவர் என்கிற நிலையில். மாஸ்டர் ஆலோசித்திருக்கக் கூடும். அது யாராக இருந்தாலும் அவனுக்குக் கவலையில்லை. யாரும் அவனை ஒன்றும் செய்து விடப் போவதில்லை. மீண்டும் யோகசக்திகளைப் பெருக்க ஆரம்பித்து கொஞ்சம் பயமுறுத்திய மாஸ்டர் இப்போது கவலையில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயலும் அளவுக்குப் பலவீனமானது விஸ்வத்துக்குத் திருப்தி அளித்தது. இதிலிருந்து மீண்டு மாஸ்டர் பழைய தெம்பிற்கு வருவதற்குள் அவன் திட்டம் நிறைவேறி இருக்கும். க்ரிஷ் என்ற கேள்விக்குறியும் அவனைப் பெரிதாய் ஒன்றும் செய்து விட முடியாதபடி ஹரிணி என்ற துருப்புச்சீட்டு அவன் கையில் இருக்கிறது.

ஹரிணியின் ஒத்துழைப்பு அவனுக்குத் திருப்தியைத் தந்தது. அவள் அந்த குடோனில் பொருள்கள் வைக்க ஆட்கள் போன போது ஏதாவது கத்தி ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்கிற சிறிய சந்தேகம் அவனுக்கு இருந்தது. அதனால் அதற்குத் தயாராக அவனது ஆள் ஒருவன் மயக்க மருந்துடன் சத்தமில்லாமல் வேகமாகப் படியேறி அவள் அறை வாசலில் நின்றிருந்தான். ஆனால் அதற்கு வேலை இல்லாமல் அவள் அமைதி காத்தது அவளைக் காப்பாற்றியது. ஏதாவது பிரச்னை செய்தால் சித்திரவதை செய்வோம் என்று மனோகர் பயமுறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் எப்படியாவது மாஸ்டரும், க்ரிஷும் சேர்ந்து காப்பாற்றி விடுவார்கள் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையாகவும் இருக்கலாம். எது காரணமானாலும் சரி இப்போதைக்குத் தலைவலி இல்லை.

மிக முக்கியமான ஒரு கட்டம், அவன் வாழ்வின் அதிமுக்கியத் திருப்புமுனை, நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவனுடைய எதிரிகளாக இருக்க முடிந்த இருவரும் அடங்கியே இருக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது திருப்தியைத் தந்தது. அவனுடைய சக்திகளை அவர்களைச் சமாளிக்க அவன் விரயம் செய்ய வேண்டியதில்லை. அவனுடைய சகல சக்திகளும் இந்த முக்கியக் கட்டத்தில் தேவைப்படுகிறது.... அவன் நிச்சயித்திருந்த பயணமான ஜெர்மனியின் ம்யூனிக் நகருக்குப் போகும் டிக்கெட் உறுதியாகி விட்ட தகவல் அவனுக்கு அந்த சமயத்தில் வந்து சேர்ந்தது நல்ல சகுனமாகவே பட்டது. அவனொரு விதி செய்வான்….!


க்ரிஷ் அன்று மாலையே கிளம்பினான். வணங்கி எழுந்த அவனை மாஸ்டர் அன்பாக அணைத்துக் கொண்டு சொன்னார். “நீ வந்ததுல எனக்கு என்னோட முக்கால்வாசி மன பாரம் இறங்கிடுச்சு க்ரிஷ். மீதி இருக்கிறதை நான் என்னோட நடவடிக்கைகளால தான் சரி செய்ய முடியும். ஆனா அதைச் செய்வேன்கிற நம்பிக்கை என் குரு அருளால கிடைச்சிருக்கு. நான் கொஞ்ச நாள் இங்கயே தனியாய் இருந்து என் சக்திகளை எல்லாம் கூர்மைப்படுத்த வேண்டி இருக்கு. ரொம்பவும் முக்கியமான ஏதாவது தகவல் இருந்தா மட்டும் போன் பண்ணு. நீ முதல்ல அனுப்பற தகவல் ஹரிணியைக் கண்டுபிடிச்சு காப்பாத்திட்டதா இருக்கணும்னு ஆசைப்படறேன். நீயும் ஜாக்கிரதையா இரு. முக்கியமாய் மேலான அலைவரிசைகள்ல இருக்கப் பார். நானும் அதைத் தான் செய்யப் போறேன்…..”

இங்கு வந்தவுடன் பார்த்த மாஸ்டருக்கும் இப்போது தெரிந்த மாஸ்டருக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது. தெளிவாய், பழைய கம்பீரத்துடன் வழியனுப்பிய மாஸ்டரிடம் இருந்து  லேசான மனதுடன் க்ரிஷ் விடை பெற்றான்.

வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஹரிணி வீட்டுக்குப் போனான். அழுது சிவந்த கண்களுடன் நடைப்பிணமாய் காட்சி அளித்த கிரிஜாவிடம் தானும், ஹரிணியும் முன்பு செய்து கொண்ட தகவல் தொடர்பு பரிசோதனைகளைப் பற்றியும், இப்போதும் அதைத் தொடர்வது பற்றியும் சொன்னான். அவள் திகைப்புடன் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டாள். இந்தப் பையன் செய்யாத பரிசோதனைகள் ஏதாவது இருக்க முடியுமா என்று அந்தக் கவலையின் நடுவிலும் அவள் ஆச்சரியப்பட்டாள். முதலில் வந்த தகவல் பற்றியும் சொன்ன அவன் இப்போது அனுப்பிய தகவலையும் சொன்னான். “ஹரிணி உங்க ஞாபகமாகவே இருக்கிறா போல இருக்கு. உங்கள நல்லா பார்த்துக்கச் சொன்னா. தைரியமாய் இருக்கச் சொன்னா”

அவன் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று அனாவசியமாக எதையாவது சொல்லும் ரகம் அல்ல என்பதை அவள் அறிவாள். ஹரிணி காணாமல் போனது வரை அவன் ஹரிணிக்காகக் கூட அவளிடம் கூடுதலாக உபசார வார்த்தைகள் பேசியவன் அல்ல. அதனாலேயே அவளுக்கு அவன் மீது ஒரு அதிருப்தி இருந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்டவன் இப்போது சொல்வது உண்மையாகவே இருக்க வேண்டும். ஹரிணியிடம் அவள் நியாயமில்லாமல் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்த போதும், அவள் அம்மா மேல் பாசமாகவே இருக்கிறாள்….. நினைக்க நினைக்க மனம் வெடித்த கிரிஜா அடுத்த கணம் அவன் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு மனம் விட்டு அழுதாள்.

”கவலைப்படாதீங்க ஆண்ட்டி. ஹரிணி சீக்கிரம் வந்துடுவாள்….” என்று அவளைச் சமாதானப்படுத்தி விட்டு மேலும் இருபது நிமிடங்கள் அவளுடன் இருந்து தைரியம் சொல்லி பிறகு கிளம்பிய க்ரிஷ் அடுத்ததாக செந்தில்நாதனைச் சந்தித்தான். கீழே போவது போல் சொல்கிற தகவல் என்னவாக இருக்கும் என்று கேட்டான். முதல் மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு அவளை இடம் மாறி விட்டிருப்பார்களோ என்று கேட்டான்.

“இடம் மாற்றியிருக்க வாய்ப்பு இருக்குன்னாலும் காரணம் இல்லாம புத்திசாலிகள் அப்படி அடிக்கடி இடம் மாற்ற மாட்டாங்களே க்ரிஷ்” என்றார் செந்தில்நாதன்.

ஒரு தாளை எடுத்து அதில் Going Downstairs என்று எழுதிக் கொண்ட செந்தில்நாதன் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அதையே மனதில் சொல்லியும் பார்த்துக் கொண்டார். Going Down…… Go Down….. Godown. கடைசி வார்த்தை மனதில் தங்கியது.

“க்ரிஷ் அது ஏன் குடோனோ இருக்கக்கூடாது?” என்று கேட்டார். அந்த வார்த்தையை எப்படி அவர் அடைந்தார் என்று சொன்னபோது க்ரிஷும் பரபரப்புடன் சொன்னான். “இருக்கலாம் சார்”

செந்தில்நாதன் சொன்னார். “அவளை அடைச்சு வெச்சிருக்கறது உள்ளூராகவே இருக்கணும்னு இல்லை. வெளியூராகக்கூட இருக்கலாம். ஆனாலும் அவசரத்துக்கு உள்ளூர் தான் கடத்தல்காரங்களுக்கு அதிக வசதி. உள்ளூர்ல முதல்மாடி இருக்கற குடோன்களை ரகசியமா கணக்கெடுத்தே பார்க்கலாமே”

அவருக்கு மிகவும் நம்பிக்கையான திறமையிருக்கும் வேறு இரண்டு போலீஸ்காரர்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார். மூவரும் சேர்ந்து சென்னையில் முதல் மாடி இருக்கும் குடோன்களின் தகவல்களை சேகரித்தார்கள். முப்பத்தியிரண்டு இருந்தன. அந்த முப்பத்தியிரண்டில் மசூதியின் தொழுகைச் சத்தம் தெளிவாகக் கேட்கும் அளவு மசூதியின் அருகில் இருக்கும் குடோன்களைக் கணக்கெடுத்தார்கள். அவை ஏழு இருந்தன. ஏழில் நான்கு மிக அதிகப் போக்குவரத்து இருக்கும் பகுதியில் இருந்தன. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் மீதமுள்ள மூன்றை ரகசியக் கண்காணிப்புக்கு அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.


னிருத் அந்த ஆறாவது அக்கவுண்ட்டைக் கண்டுபிடிப்பதில் குறியாய் இருந்தான். அறிவாளியும், சமூக நலனில் மிகுந்த அக்கறையும் உள்ளவனுமான அவனுக்கு அந்த ரகசிய ஆன்மீக இயக்கத்தின் ஒரு உறுப்பினர் என்பதில் மிகுந்த பெருமை உண்டு. அந்த இயக்கத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்தது இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று அவன் நினைத்தான். அத்தனை உறுப்பினர்கள் முன்னும் மாஸ்டர் அவமானப்பட்டு நின்று நெஞ்சுருகப் பேசினதில் அளவில்லாத பச்சாதாபம் கொண்டவர்களில் அவனும் ஒருவன். அப்படிப்பட்டவனுக்கு அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது மிகப்பெரிய கௌரவம் என்றும் அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பது அவனுடைய தர்மம் என்றும் அவன் மனமார நம்பினான். அதனால் கர்மமே கண்ணாக கால நேரம் பார்க்காமல் அதிலேயே ஈடுபட்டிருந்த அவன் தன் திறமைக்கு அது மிகப்பெரிய சவாலாகவும் இருப்பதாக உணர்ந்தான். ஆனால் எல்லாச் சவால்களுமே அறிவும், விடாமுயற்சியும் இருப்பவர்களுக்கு கடைசியாக பணிந்து போவது போல் இந்தச் சவாலையும் கடைசியில் அவன் வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் ரகசிய சங்கேதப் பெயர் கொண்ட அந்தக் கணக்கு உண்மையில் யாருடையது என்று மேலும் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம் அவனைத் தலைசுற்ற வைத்தது.

(தொடரும்)

என்.கணேசன்


7 comments:

  1. A real classic thriller

    ReplyDelete
  2. 111 vaaram mudinjirchu, aanalum innum first varam iruntha adhe paraparappu, adutha vaaram Viyalakkilamaiyoda edhirparpu kurayama irukku.... salutes Ganeshan sir...
    Thanks.

    ReplyDelete
  3. I guess the ac must be in the name of Girish?

    ReplyDelete
  4. supper,.. vanakkam Ganeshan Sir..

    ReplyDelete
  5. ஹரிணி விசயத்துல மயக்க மருந்தோட ஆள் வச்சி ...ஊஷாரா இருந்த மர்ம மனிதன்....
    அனிரூத் விசயத்துல கவனக் குறைவா இருந்துட்டானே.....!!!
    செந்தில்நாதன் குடோனை கண்டறிவதும்..சூப்பர்..

    ReplyDelete
  6. Sir, totally how many episodes there? I am reading on regular basis from paraman ragasiyam onwards. I became your fran since then

    ReplyDelete