காலச்சக்கரம் மெல்லச் சுழன்றது. துகாராம் சில மாதங்களில்
இறைவனடி சேர்ந்து விட்டார். ஆன்மீகத் தேடலை சிவாஜி தக்க
வைத்துக் கொண்டே இல்லற வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் சிவாஜி இயல்பு நிலைக்குத்
திரும்பினான். இப்போதும் துகாராமின் பாடல்களை அவன் விரும்பிக் கேட்டான். ஆன்மீக அறிஞர்களை
அழைத்துப் பேசுவதில் ஈடுபாடு காட்டினான். இராமதாசர் என்ற துறவியிடம் சென்று மணிக்கணக்கில்
ஆன்மீகம் பேசினான். ஆரம்பத்தில் அவன் திரும்பி வர நேரமானால் ஜீஜாபாயும், அவன் மனைவிகளும்
பதற்றத்தை உணர்ந்ததுண்டு. ஆனால் எத்தனை நேரம் கழிந்தாலும் திரும்பி வந்தான். நிர்வாகத்திலும்,
குடும்ப வாழ்க்கையிலும் குறைவற்ற அக்கறையைக் காட்டினான். சிவாஜியின் மனைவி சாய்பாய் அடுத்தடுத்து மூன்று
பெண்களைப் பெற்றெடுத்தாள். குழந்தைகளுக்கு சக்குபாய், ராணுபாய், அம்பிகாபாய் என்ற பெயர்களிட்டார்கள்.
சிவாஜி தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி சில நேரங்களைப் போக்கினான்.
ஜீஜாபாய்க்கு மகனின் மாற்றம் பெருத்த நிம்மதியைத் தந்தது. சிவாஜிக்குப் பிறந்த குழந்தைகள் மூன்றுமே பெண்களாய் இருந்ததில் மட்டும் அவளுக்குச் சிறுவருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால் முந்தைய காலத்தைப் போல் இப்போதைய காலம் ஆபத்தில்லாமலும், சுபிட்சமாகவும் இருந்ததால் பெரியதொரு ஏமாற்றத்தை அவள் உணரவில்லை.
ஒரு
நாள் அவளுடைய தாய் மால்சாபாயின் மரணச்செய்தி
வந்து சேர்ந்தது. தாயின் நினைவுகளில் இதயத்தில் அவள் பெரும் வலியை உணர்ந்தாள். தனியாக
நிறைய நேரம் அழுதாள். சிவாஜி தூர இருந்து பார்த்துக் கொண்டே இருந்து விட்டு அருகில்
வந்து கேட்டான். ”தாயே சிந்துகேத் சென்று வருகிறீர்களா?”
கண்களைத்
துடைத்துக் கொண்டு ஜீஜாபாய் சொன்னாள். “யாரிடம் போய் துக்கம் விசாரிக்க? நியாயமாக உன்
தாத்தாவும், மாமாவும் இறந்த போது நான் போய் என் தாய்க்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.
அப்போதே போகாதவள் இப்போது அவரும் இறந்த பின் போவதில் அர்த்தமில்லை சிவாஜி….”
சிவாஜி
கேட்டான். “அப்போது நீங்கள் போயிருந்தீர்களானால் தந்தை உங்களைத் தவறாக நினைத்திருப்பாரா
தாயே”
ஜீஜாபாய்
சொன்னாள். “அவர் தவறாக நினைத்துக் கொள்வார் என்று நான் போகாமல் இருக்கவில்லை சிவாஜி.
நானே என் கணவரை மதிக்காத என் தாய்வீட்டுக்குப் போகக்கூடாது என்று இருந்து விட்டேன்.”
சிவாஜி
மெல்லக் கேட்டான். “ஆனாலும் அவர்கள் உங்களுக்காக நிறைய செய்திருக்கிறார்கள் அல்லவா
தாயே”
ஜீஜாபாய்
குற்றவுணர்ச்சியும், பச்சாதாபமும் கலந்த துக்கத்தில் சொன்னாள். “உண்மை தான் மகனே! ஆனால்
என் தாயும் தூர இருந்தே தான் அதைச் செய்திருக்கிறார்கள். நானும் தூர இருந்தே அழுது
தீர்க்கிறேன்.”
ஷாஹாஜியின் வாழ்க்கை விடுதலைக்குப் பின் நான்கு ஆண்டுகள் பீஜாப்பூரிலேயே
கழிந்தது. சாம்பாஜியும், துகாபாயும் வெங்கோஜியும் அவரை அவ்வப்போது வந்து பார்த்துச்
சென்றார்கள். அவர்கள் வந்து போன பின் அவர் மனம் சிவாஜியை நினைக்கும். அவனையும் ஒரு
முறை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று அவர் மனம் ஆசைப்படும். ஆனால் அவன் அங்கு வருவது
ஆபத்து என்பதால், அவரும் சென்று பார்க்க முடியாது என்பதால், விரக்தியுடன் அந்த ஆசையை
அவர் மறக்க நினைப்பார்.
அவர்
இல்லாததால் கர்னாடகத்தில் அங்கங்கே புரட்சிகள், கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. அவருக்குச்
சரியான மாற்றை அங்கே ஆதில்ஷாவால் அனுப்ப முடிந்திருக்கவில்லை என்பதாலேயே அப்படி நடப்பதை
உணர்ந்த ஆதில்ஷா வேறு வழியில்லாமல் ஷாஹாஜியை மறுபடியும் கர்னாடகத்துக்கு அனுப்பி வைக்க
முடிவு செய்தார்.
அந்த
முடிவில் இரண்டு முக்கியமான ஆட்கள் அதிருப்தியை உணர்ந்தார்கள். ஒருவன் பாஜி கோர்ப்படே.
அவன் வஞ்சித்து சிறைப்படுத்தி பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்த ஷாஹாஜி மறுபடி பழைய
அதிகார பீடத்திற்கே திரும்பி வருவார் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆதில்ஷாவின் முடிவைக் கேள்விப்பட்டவுடன் அவன் தன் உயிருக்குப் பயந்தான். ஷாஹாஜியைப்
போன்ற வீரர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதைச் சுலபமாக மறந்து விடக்கூடியவர்கள் அல்ல என்பதை
அவன் அறிவான். பக்கத்திலேயே வந்து விடப் போகிற ஷாஹாஜி அவனைக் கண்டிப்பாகப் பழிவாங்குவார்
என்ற பயத்தில் அவன் பீஜாப்பூருக்கு ஓடோடி வந்தான்.
ஆதில்ஷாவைச்
சந்தித்தவுடன் அவர் காலில் தடாலென்று விழுந்தான். “அரசே என் உயிருக்கு உத்தரவாதம் கொடுங்கள்”
ஆதில்ஷாவுக்குச்
சிறிது நேரம் எதுவும் புரியவில்லை. “என்ன ஆயிற்று? உன்னை யார் அச்சுறுத்துகிறார்கள்?
முதலில் அதைச் சொல்” என்றார்.
பாஜி
கோர்படே சொன்னான். “அச்சுறுத்துபவர்கள் பெரும்பாலும் காரியத்தில் இறங்குவதில்லை அரசே.
அச்சுறுத்தாமல் அமைதியாக இருப்பவர்களிடமே ஒருவன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி வருகிறது”
ஆதில்ஷா
புரியாமல் எரிச்சலடைந்து சொன்னார். “புதிர் போடாமல் ஆளைச் சொல் பாஜி கோர்படே. நீ யாரைப்
பார்த்து பயப்படுகிறாய்? ஏன் பயப்படுகிறாய்?”
“ஷாஹாஜி
அவர்களைப் பார்த்துத் தான் பயப்படுகிறேன் அரசே. நீங்கள் சொல்லித் தான் அவரைக் கைது
செய்து கொண்டு வந்தேன். அவர் மேல் எனக்கு எந்தத் தனிப்பட்ட பகைமையும் இல்லை என்பது
உங்களுக்கே தெரியும். அவரைப் போன்ற ஆட்கள் எப்போதும் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை மறக்க
மாட்டார்கள். அவரை மீண்டும் என் அருகிலேயே வசதியாக நீங்களும் அனுப்பி வைக்கவிருப்பதாக
அறிந்ததால் தான் பயப்படுகிறேன் அரசே”
ஆதில்ஷா
சொன்னார். “உன் பயமும், கவலையும் தேவையே இல்லை பாஜி கோர்படே”
பாஜி
கோர்படே ஜுரத்தில் பேசுவது போல விரக்தியுடன் பேசினான். “ஆமாம். இறந்த பின் ஒருவனுக்குப்
பயமும் கவலையும் இருக்கவே போவதில்லை”
ஆதில்ஷாவுக்கு
வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றினாலும் அதை அடக்கிக் கொண்டு சொன்னார். “ஷாஹாஜியிடமிருந்து
உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.”
சொன்னதோடு
நிற்காமல் அவர் ஷாஹாஜியை அவன் இருக்கையிலேயே வரவழைத்து அவரிடம் சொன்னார். “ஷாஹாஜி.
உங்களை நான் கர்னாடகத்துக்குத் திரும்ப அனுப்பவிருக்கும்
சூழ்நிலையில் ஒரே ஒரு சத்தியம் செய்து தரவேண்டுகிறேன். சத்தியம் செய்து தருவீர்களா?”
பாஜி
கோர்படேயைப் பார்த்தவுடன் ஷாஹாஜி அடிமனதிலிருந்து ஆத்திரத்தை உணர்ந்தாலும் அதை வெளியே
காட்டிக் கொள்ளாமல் சொன்னார். “மன்னா. நீங்கள் கேட்டு இதுவரையில் நான் எதை மறுத்திருக்கிறேன்.
சொல்லுங்கள் நான் என்ன சத்தியம் செய்து தர வேண்டும்?
“பாஜி
கோர்படே என் ஆணைக்கிணங்கவே உங்களைக் கைது செய்து இங்கு கொண்டு வந்தான். அதனால் அவனை
நீங்கள் எதிரியாக எண்ணி அவனுக்கு எந்தத் தீங்கையும் எப்போதும் செய்யக்கூடாது. சத்தியம்
செய்து கொடுங்கள்”
சிறிதும்
யோசிக்காமல் ஷாஹாஜி சத்தியம் செய்து தந்தார். “உங்கள் விருப்பப்படியே நான் சத்தியம்
செய்து தருகிறேன் அரசே. நான் எந்த நாளும் பாஜி கோர்படேக்குத் தீங்கிழைக்க மாட்டேன்….”
பாஜி
கோர்படே பெரும் நிம்மதியையும், ஆதில்ஷா நெகிழ்ச்சியையும் உணர்ந்தார்கள். ஆதில்ஷா ஷாஹாஜியிடம்
சொன்னார். “கசப்பான பழையவற்றை மறந்து விடுங்கள் ஷாஹாஜி. இனி இருவரும் நட்புடன் இருங்கள்.
அதுவே நான் வேண்டுவது.”
நட்பின்
அறிகுறியாக ஷாஹாஜியும் பாஜி கோர்படேயும் அணைத்துக் கொண்டார்கள். அணைத்துக் கொண்ட போது
அவன் தோளில் ஷாஹாஜியின் முகம் இருந்ததால் அவர் கண்களில் தெரிந்த மின்னல் வெட்டை பாஜி
கோர்படே கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அவன் நிம்மதியைத் தொலைத்திருப்பான்.
ஷாஹாஜி பழைய அதிகாரத்துடன் கர்னாடகத்துக்கு அனுப்பப்படுவதை
விரும்பாத இன்னொருவன் அப்சல்கான். ஆதில்ஷாவின் மனைவியின் தூரத்து சகோதர உறவினன். அவரது
படைத்தலைவர்களில் சக்தி வாய்ந்தவன். ஆறடிக்கும் மேல் உயரமும், யானை பலமும் கொண்டவன்.
ஆதில்ஷா ஆரம்பத்தில் இருந்தே ஷாஹாஜிக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக அவன் எண்ணி வந்தவன்.
சிவாஜி பீஜாப்பூர் வந்த சமயங்களில் அவன் பீஜாப்பூரில் இருக்கவில்லை என்றாலும் நடந்ததை
எல்லாம் கேள்விப்பட்டு சிவாஜி என்ற சிறுவனுக்காக ஆதில்ஷா தேவையற்ற சமரசங்கள் செய்து
கொண்டதாகக் கருதியவன் அவன். சராசரி உயரமும், தந்திரங்களும் நிறைந்த சிவாஜி என்னும்
பொடியன் பின்னர் படிப்படியாகத் தன் அதிகாரத்தை விஸ்தீரணம் செய்த விதம் கண்டு பொருமியவன்
அவன். கடைசியில் ஆதில்ஷா தீவிர நடவடிக்கை எடுத்து ஷாஹாஜியைச் சிறைப்படுத்திய போது மகிழ்ந்தவன்.
இப்போது பழையபடி அவர் அதிகாரத்திற்குத் திரும்பியதை அவனால் ரசிக்க முடியவில்லை.
அத்துடன்
அவனுக்கு மிக வேண்டப்பட்டவர்கள் கர்னாடகத்தில் ஷாஹாஜி கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளைத்
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவன் ஊக்குவித்துக் கொண்டு இருந்தான். வெண்ணைய்
திரண்டு வரும் போது தாழி உடையப் போவது போல் ஷாஹாஜி இப்போது அங்கே போவது அவன் நோக்கத்திற்கு
எதிராகவும் இருந்தது. முக்கியமாக கனககிரி என்ற கோட்டையை அவனுக்கு மிக வேண்டப்பட்ட முஸ்தபா
கான் கிட்டத்தட்ட தன் வசப்படுத்திக் கொண்டிருந்தான். ஷாஹாஜி அங்கு போய் விட்டால் அவனை
அனுமதிக்க மாட்டார்…. அப்சல்கான் அவசர அவசரமாக கர்னாடகத்தில் புரட்சியில் ஈடுபட்டுள்ள
தன் ஆட்களுக்கு உடனடியாக ஷாஹாஜி அங்கே வரவிருப்பதைத் தெரிவித்து எச்சரிக்கை செய்ய ஆட்களை
அனுப்பி வைத்தான்.
(தொடரும்)