சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, December 5, 2018

உடலோடு ஆத்மாவை இணைக்கும் முக்குணங்கள்!


கீதை காட்டும் பாதை – 55
  
பகவத்கீதையின் பதினான்காம் அத்தியாயத்திற்குள் நாம் நுழைகிறோம். குணத்ரய விபாக யோகம் என்றழைக்கப்படும் இந்த அத்தியாயம் ஒருவகையில் சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி அல்லது சென்ற அத்தியாய விளக்கத்தின் இன்னொரு கோணம் என்றும் சொல்லலாம்.

ஜடப்பொருளும், உயிர்ப்பொருளும் இணைந்து உருவாவதே நாம் உட்பட அனைத்து உயிர்களும் என்பதை சென்ற அத்தியாயமான க்‌ஷேத்திர க்ஷேத்திரக்ஞ விபாக யோகத்தில் பார்த்தோம். மனிதனைப் பொருத்தவரை அந்த இரண்டையும் இணைப்பது மூன்று விதமான குணங்களே என்று சொல்லும் ஸ்ரீகிருஷ்ணர் அது எப்படி என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்க ஆரம்பிக்கிறார்

எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் எல்லா முனிவர்களும், இந்த சம்சாரத்திலிருந்து விடுபட்டு உயர்ந்த பரமாத்மாவை அடைந்திருக்கிறார்களோ, ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும், மிகச்சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன்.

இந்த ஞானத்தை அறிந்து பின்பற்றி என்னை அடைந்துள்ளவர்கள் சிருஷ்டி காலத்தில் மீண்டும் பிறப்பதுமில்லை. பிரளய காலத்தில் பாதிக்கப்படுவதுமில்லை.

பரத புத்திரனே! என்னுடைய க்‌ஷேத்திரம் மகத்தான பிரகிருதி. அதில் நான் உயிரினங்களின் கருவை விதைக்கின்றேன். அதனால் எல்லா உயிரினங்களும் உண்டாகின்றன. தனித்தனி தோற்றங்கள் கொண்ட சகல ஜீவராசிகளுக்கும் மஹா பிரகிருதியே தாய். நான் விதையளிக்கும் தந்தை.

தோள்வலிமை மிக்கவனே! சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற முக்குணங்களும் பிரகிருதியிலிருந்து தோன்றியவை. அவை அழிவில்லாத ஆத்மாவை இவ்வுடலில் உறுதியாகப் பிணைத்து விடுகின்றன.

அவற்றில் சத்துவ குணமானது தூய்மையானது. ஒளி படைத்தது. அது சுகத்தின் சேர்க்கையாலும், ஞானத்தின் சேர்க்கையாலும் ஆத்மாவுடன் பிணைக்கின்றது.

ஆசையினாலும் பற்றுதலாலும் ஏற்படும் விருப்பமே ரஜோ குணம். அது கர்மங்களில் பற்றுதலை உண்டாக்குவதன் மூலம் ஆத்மாவைப் பிணைக்கின்றது.

பரதபுத்திரனே! உடற்பற்றுடைய எல்லா உயிர்களையும் மயக்கக்கூடிய தமோ குணமோ அறியாமையிலிருந்து உண்டாகிறது. அது அஜாக்கிரதை, சோம்பல், தூக்கம் ஆகியவற்றால் ஆத்மாவைப் பிணைக்கின்றது.

சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுத்துகிறது. ரஜோ குணம் கர்மங்களில் ஈடுபடுத்துகிறது. தமோ குணம் ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் ஈடுபடுத்துகிறது.

ஆதி அந்தமும், சுக துக்கங்களும் இல்லாத ஆத்மா ஒரு உடலில் இணைக்கப்படும் போது இணைக்கும் பசையாக மூன்று குணங்கள் இருக்கின்றன. குணங்கள் இல்லாத ஆத்மா இந்த மூன்று குணங்களால் இந்த உலக வாழ்க்கையில் பல விதங்களில் பந்தாடப்படுகின்றது. மாயை மனிதர்களை ஆட்சி புரிவது இந்தக் குணங்களை வைத்துத் தான்.

இந்த முக்குணங்களை சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற வரிசையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியிருந்த போதும் படிப்படியாகப் புரிந்து கொள்ள நாம் எதிர் வரிசையிலேயே செல்வோம்.

தமோ குணம் அலட்சியம், சோம்பல், தூக்கம் முதலான குணங்களைக் கொண்டது. இது இக்கலிகாலத்தில் அதிகமாகக் கோலோச்சுவதை நம்மால் பார்க்க முடிகிறது. மந்த குணம் இது. உழைத்துச் செய்வதையும் விரும்பாது; கவனித்துச் செய்வதையும் விரும்பாது. இந்தத் தமோ குணம் மேலோங்கி இருக்கும் ஆட்கள் எதைச் செய்வதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படிச் செய்தே ஆக வேண்டிய கட்டத்திலும் அலட்சியத்துடனும், சலிப்புடனும் ஏனோ தானோவென்று செய்வார்கள். உடலை நகர்த்துவது இவர்களுக்கு பரம அசௌகரியம். இந்த மந்த குணத்தால் அவர்கள் படும் பாடு ஏராளமாக இருந்தாலும் அவர்களால் மாற்றிக் கொள்ள முடியாது.

அடுத்தது ரஜோ குணம். இது தமோ குணத்திற்கு நேர் எதிரானது. அதற்கு அடுத்தபடியாக மனிதனை ஆட்டுவிப்பது. ஆசையாலும், பற்றாலும் உந்தப்பட்டு ஏதாவது செய்து கொண்டே இருப்பது இதன் தன்மை. அது வேண்டும், இது வேண்டும், அதைப் பெற வேண்டும், இதைப் பெற வேண்டும் என்று பாடுபடுவது ரஜோ குணம். இந்த சும்மா இருக்க முடியாத தன்மை நிரந்தர அதிருப்தியை நிறைக்க மனிதனைப் பாடுபடுத்தும். ஓட்டைக் குடத்தை நிறைக்கப் பாடுபடுவது போல பொருள், பணம், பதவி, புகழ் என்று மனிதனை ஓட வைப்பது இந்த ரஜோ குணம். எதுவும் இவர்களை நிரந்தரமாகத் திருப்திப்படுத்தாது. சிலர் சும்மா இருக்க முடியாமல் கால்களையாவது ஆட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது ரஜோ குணத்தின் உந்துதலே. இந்த ஓட்டத்தால் அமைதியையும், ஆரோக்கியத்தையும் இழக்கின்ற போதும் மனிதனை நிறுத்த விடாத குணம் இந்த ரஜோ குணம்.

இந்த இரண்டு குணங்களுக்கும் எதிர்மாறான உயர்ந்த குணம் சத்துவ குணம். நல்ல விஷயங்களில் ஆர்வம், ஞான மார்க்கத்தில் நாட்டம், சுகமாய் இருக்க விரும்பும் விருப்பம் இதெல்லாம் சத்துவ குணத்தின் தன்மை. உயர்ந்த ரசனைகள், அதில் ஈடுபடும் விருப்பம், ஞானத்தில் ஈடுபாடு, நல்ல விஷயங்களைச் சொல்வதிலும் கேட்பதிலும் நாட்டம் இதெல்லாம் சத்துவ குணத்தின் அடையாளங்கள். மூன்று குணங்களில் இதுவே தூய்மையானது. உயர்ந்த மனிதர்களிடம் காணப்படுவது.

உலகில் மனிதர்கள் இந்த மூன்று குணங்களாலேயே ஆளப்படுகிறார்கள் என்றாலும் எல்லோரும் எல்லாச் சமயங்களிலும் ஒரே குணத்தினால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதில்லை என்பது தான் உண்மை நிலவரம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

பரதபுத்திரனே! சில சமயங்களில் ரஜோ குணம், தமோ குணம் இரண்டையும் அடக்கி சத்துவ குணம் மேலோங்கி இருக்கும். சில சமயங்களில் சத்துவ குணம், தமோ குணம் இரண்டையும் அடக்கி ரஜோ குணம் மேலோங்கியிருக்கும். சில சமயங்களில் சத்துவ குணம், ரஜோ குணம் இரண்டையும் அடக்கி தமோ குணம் மேலோங்கி இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு குணத்தினால் ஆட்டிவைக்கப்படுகிறான். அது உலக மாயையின் வேடிக்கை விளையாட்டு. ஒரு சமயத்தில் மனமுவந்து கீதையைப் பாராயணம் செய்து கொண்டிருக்கும் மனிதன்  இன்னொரு சந்தர்ப்பத்தில் சோம்பிப் படுத்துக் கிடக்கவோ, அனாவசியமான ஒரு செயலில் ஈடுபட்டிருக்கவோ கூடும். ஒரு சமயத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் மனிதன் இன்னொரு தருணத்தில் குடித்துப் படுத்துக்கிடக்கவோ அல்லது நல்லதொரு இசையை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கவோ கூடும். எப்போதும் சோம்பலுடனும் அலட்சியத்துடனும் இருப்பவன் திடீரென்று உணர்ச்சியால் உந்தப்பட்டு ஒருநாள் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கவோ, நல்லதொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கவோ கூடும். அதனால் பொதுவாக மனிதர்கள் மூன்றில் ஏதோ ஒரு குணம் மேலோங்கி இருப்பவர்களாகவே இருந்தாலும் சமயங்களில் மற்ற இரண்டு குணங்களைக்கூடத் தங்களிடம் காட்டக்கூடும்.

மாறுவதே மனித இயல்பு என்பதை அறியாமல் பலரும் மனிதன் மாறி விட்டான் என்று அடிக்கடிப் புலம்புவது வினோதமல்லவா?

பாதை நீளும்…

என்.கணேசன்

1 comment:

  1. இந்த கருத்தை எத்தனை முறை படித்தாலும்...மனதில் முழுமையாக பதியவில்லை...

    இப்போது தான் புரிகிறது... கிருஷ்ணர் எதற்கு இத்தனை முறை சொன்னார்..என்று..

    ReplyDelete