சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 10, 2018

சத்ரபதி -50


முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானிடமிருந்து பீஜாப்பூர் வந்த தூதன் ஷாஹாஜி விஷயமாகத் தான் வந்திருக்கிறான் என்பதை ஆதில்ஷா சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. காரணம் ஷாஹாஜியை ஷாஜஹான் தன் எல்லை அருகே கூட இதற்கு முன்பு அனுமதித்திருக்கவில்லை. ஷாஹாஜியின் சம்பந்தமே வேண்டாம் என்று முன்பே ஷாஜஹான் தீர்மானித்திருந்ததால் வேறெதாவது முக்கியமான விஷயம் குறித்து தான் இப்போது தூதன் வந்திருக்க வேண்டும் என்று எண்ணிய ஆதில்ஷாவுக்கு ஷாஜஹான் அனுப்பியிருந்த செய்தி அதிர்ச்சியையே அளித்தது.

சுருக்கமாக அன்பு நண்பர் ஆதில்ஷாவின் நலம் விசாரித்து விட்டு ஷாஜஹான் எழுதியிருந்தார்:

“…. ….. நடந்தவை அனைத்தையும் அறிந்தோம். ஷாஹாஜி எமக்கு மிக நீண்ட கால நண்பராவார். யாம் எம் இளமையில் எதிரிகளுடன் போரிட்ட சமயங்களில் எம்மோடு கை கோர்த்துப் போராடியவர் அவர். பின் சில மனக்கசப்புகளுக்கு எம்மை அவர் ஆட்படுத்திய போதும் அவருடைய முந்தைய சேவைகளை  மனதில் வைத்து இப்போது அவரை மன்னித்து எம் படைத்தலைவர்களில் ஒருவராக இணைத்துக் கொள்வதாக இதன் மூலம் அறிவிக்கிறோம். ஷாஹாஜியின் புதல்வன் சிவாஜி தான் கைப்பற்றிய கொண்டானா மற்றும் கண்டர்பி கோட்டைகளைத் திரும்ப உங்களிடம் ஒப்படைத்த செய்தியும் கிடைக்கப் பெற்றோம். அதைக் கருத்தில் கொண்டு, இதுவரை ஷாஹாஜி தங்களுக்கும் ஆற்றியுள்ள அளப்பரிய சேவையையும் மனதில் கொண்டு தாங்களும் எம் படைத்தலைவர் ஷாஹாஜியை மன்னித்து விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்….. “

ஆதில்ஷாவின் அதிர்ச்சி குறைய நிறைய நேரம் தேவைப்பட்டது. பின் மெல்லக் கேட்டார். “திடீரென்று முகலாயச் சக்கரவர்த்திக்கு ஷாஹாஜி மேல் கரிசனம் வரக் காரணம் என்ன?”  

“சிவாஜி அவரைத் தொடர்பு கொண்டு வேண்டிக் கொண்டிருப்பான் மன்னா?” என்று அரசவையில் ஒருவர் சொன்னார்.

ஷாஜஹான் சிவாஜிக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவார் என்று ஆதில்ஷா எதிர்பார்த்திருக்கவில்லை. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது! இல்லா விட்டால் இதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை…. ஷாஜஹானின் வினோதமான மடலை யோசிக்க யோசிக்க அபத்தமாகத் தெரிந்தது….

”சிவாஜி பத்திற்கும் மேற்பட்ட கோட்டைகளைப் பிடித்து வைத்திருக்கிறான். அதில் இரண்டை மட்டும் திருப்பித் தந்திருக்கிறான். கல்யாண் நிதியைக் கூட அவன் தரவில்லை. அப்படி இருக்கையில் என்னையும் மன்னிக்கச் சொல்கிறாரே. இது என்ன கணக்கு?” ஆதில்ஷா திகைப்புடன் கேட்டார்.

“இழந்தவர் நீங்கள் தானே அரசே. அடுத்தவர் நஷ்டத்திற்கு யாரும் சரியாக கணக்கு வைத்துக் கொள்வதில்லை. முகலாயச் சக்கரவர்த்தி இதற்கு விதிவிலக்கல்ல.”

“என் கணக்கு சரியாகாத வரை நான் ஏன் ஷாஹாஜியை விடுவிக்க வேண்டும்?” ஆதில்ஷா கோபத்துடன் கேட்டார்.

ஷாஹாஜி மீது அபிமானம் கொண்டவர்கள் மெல்லப் பேச ஆரம்பித்தார்கள். “மன்னா. முகலாயச் சக்கரவர்த்தியின் இப்போதைய அறிவிப்பின்படி ஷாஹாஜி அவருடைய படைத்தலைவர். அவர் படைத்தலைவரை அவர் விடுவிக்கச் சொல்கிறார். அதை நீங்கள் மறுத்தால் அவரைக் கண்டிப்பாகச் சினமூட்டும்….”

“அவருடைய படைத்தலைவரை நீங்கள் கொன்றதைக் குற்றமாக எடுத்துக் கொண்டு பெரும்படையோடு கூட அவர் கிளம்பி வரலாம்….”

“இது என்ன நியாயம்?” ஆதில்ஷா திகைப்புடன் கேட்டார்.

“அவர் சொல்வது நியாயமில்லை என்று நீங்கள் யாரிடம் முறையிட முடியும் அரசே?”

வலிமையற்றவனின் சினம் அவனை மட்டுமே துன்புறுத்த முடிந்தது என்பதை உணர்ந்த ஆதில்ஷா பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தார். கடைசியில் அவருடைய மூத்த ஆலோசகர் ஒருவர் சொன்னார். “மன்னா. இப்போதைக்கு ஷாஹாஜியை அந்தச் சமாதிச் சிறையிலிருந்து விடுவியுங்கள். ஆனால் அவரை பீஜாப்பூரிலேயே வைத்திருங்கள். ஷாஜஹானின் ஆணையை நீங்கள் மதித்தது போலவும் இருக்கும். அதே நேரம் ஷாஹாஜியைக் கண்காணிப்பில் வைத்துக் கொண்டது போலவும் இருக்கும். சிவாஜி கண்டிப்பாக நீண்ட காலம் சும்மா இருக்க மாட்டான்.  சீக்கிரமே ஏதாவது வம்பு செய்வான். அவன் இயல்பு அப்படி. அப்படி அவன் ஏதாவது செய்தால் அதை வைத்துத் தண்டிக்கும் வழியைப் பாருங்கள். புதுக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ள சக்கரவர்த்தியும் சொல்ல முடியாது.”   

ஆதில்ஷாவுக்கு அந்த ஆலோசனையே சரியென்று பட்டது.


ன்னைச் சுற்றியுள்ள சுவர்கள் இடிக்கப்பட்ட போது ஏக காலத்தில் ஆசுவாசத்தையும், துக்கத்தையும் உணர்ந்தார் ஷாஹாஜி. ஏதோ நடந்திருக்கிறது, அதனால் உயிர் பிழைத்து விட்டோம் என்ற ஆசுவாசத்துடன் இந்த உயிர் பிழைத்தலுக்காக மகன் எதையெல்லாம் இழக்க வேண்டி வந்ததோ என்ற துக்கமும் சேர்ந்தே மனதில் எழுந்தது. கண்டிப்பாக பீஜாப்பூர் வந்து சிவாஜி சரணடைந்திருக்க மாட்டான் என்பதை அவர் அறிவார். அவன் அந்த அளவு முட்டாள் அல்ல. ஆனால் பெற்ற கோட்டைகள் அனைத்தையும் கண்டிப்பாகத் திருப்பித் தந்திருப்பான். அதை எல்லாம் பெறாமல் ஆதில்ஷா இதிலிருந்து ஷாஹாஜி வெளிவர அனுமதித்திருக்க மாட்டார்…. பாவம் சிவாஜி என்று அந்தத் தந்தை மனம் நினைத்தது.

அரசவைக்குக் கொண்டு வரப்பட்ட போது தான் அவருக்கு நடந்திருப்பது என்ன என்பது தெரிந்தது. ஆதில்ஷா அவரிடம் விஷமமாகச் சொன்னார். “முகலாயச் சக்கரவர்த்தியையே நண்பராகப் பெற்றிருக்கும் ஷாஹாஜியை விடுவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்….”

ஷாஹாஜி விரக்தியுடன் சொன்னார். “அரசர்களின் நட்பு எப்படிப்பட்டது என்பதை வாழ்நாள் முழுவதும் அனுபவித்து உணர்ந்த என்னைப்  பரிகாசம் செய்யாதீர்கள் மன்னா”

பொதுவாகவே அவர் சொன்னாலும் அந்த வார்த்தைகள் ஆதில்ஷாவையும் சுட்டன. தன் முன் மெலிந்து களையிழந்து விரக்தியுடன் நின்று கொண்டிருந்த ஷாஹாஜியின் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையையும், வேதனையையும் கவனித்த ஆதில்ஷா ஒரு கணம் யோசித்தார். இந்த மனிதர் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக நடந்து கொண்டதில்லையே. சென்ற முறை என்னுடன் சேர்ந்து போரிட்டவரை, முகலாயர்களிடம் தோற்றதும் நானும் கைவிட்டேனே. இவரைத் தோற்கடிக்க  நானும் ஒரு படையை அனுப்பியவன் தானே. இப்போதும் எல்லாப் பிரச்னைகளையும் இவர் மகன் அல்லவா ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் அவனை எதுவும் செய்ய முடியாமல் மறுபடி இவரையே அல்லவா நான் தண்டித்திருக்கிறேன்….. நண்பராகச் சொல்லிக் கொண்டே நானும் உண்மையான நண்பனாக இவருக்கு இருந்ததில்லையே….. ஆனால் நானும் என்ன செய்வது? இவர் மகன் வேகத்தை நிறுத்த எனக்கும் வேறு வழி தெரியவில்லையே…..!

ஆதில்ஷா ஷாஹாஜியைக் கேட்டார். “முகலாயச் சக்கரவர்த்தி அறிவித்தது போல நீங்கள் அவர் படையில் சேர்ந்துக் கொள்ளப் போகிறீர்களா ஷாஹாஜி”

ஷாஹாஜி உறுதியாகச் சொன்னார். “சிவாஜி என்ன சொல்லி சக்கரவர்த்தி ஷாஜஹான் அப்படி அறிவித்தாரோ எனக்குத் தெரியாது அரசே, என்னைப் பொருத்த வரை நான் எப்போதும் அங்கு இனி போய்ச் சேர்வதாய் இல்லை….”

ஆதில்ஷா சிறிது நேரம் அமைதியாக அவரைப் பார்த்தார். பின் பேச ஆரம்பித்த போது அவர் குரலில் விஷமம் போய் மென்மையும் மரியாதையும் இருந்தது.

 “ஷாஹாஜி. அப்படியானால் நீங்கள் இன்றிலிருந்து பீஜாப்பூரில் பூரண சுதந்திரத்துடன் இருக்கலாம். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த நகரை விட்டு நீங்கள் வெளியேறக்கூடாது. உங்கள் மகனின் பழைய கணக்குகளை நான் உங்களுக்கு எதிராக வைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால் இனி அவன் என் தேசத்தின் சிறு கல்லை எடுத்துப் போனாலும் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். அவனைத் தண்டிக்க அவன் எனக்குக் கிடைக்காத பட்சத்தில் அவன் தந்தையான உங்களையே நான் தண்டிக்க வேண்டியிருக்கும். முகலாயச் சக்கரவர்த்தி என்னிடம் நடந்து முடிந்தவற்றைப் பொறுக்கச் சொல்லியிருப்பதை ஏற்றுக் கொண்ட நான் இனி நடப்பதையும் பொறுக்க முடியாது என்பதை உறுதியாகவே கூறுகிறேன்….”


ஷாஹாஜி சுதந்திர மனிதராய்த் தன் பழைய மாளிகைக்கே திரும்பி வந்தார். எல்லாம் கனவு போல இருந்தது. சில மணி நேரங்களுக்கு முன் மரணத்தின் விளிம்பில் இருந்த அவர் இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் பயப்பட்டது போல அவர் மகன் சிவாஜி முழுவதுமாகப் பணிந்து விடவில்லை. அவரையும் காப்பாற்றி, கைப்பற்றிய பெரும்பாலான கோட்டைகளையும் நிதியையும் தக்க வைத்துக் கொண்டு அவன் மிகவும் சாமர்த்தியமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறான். மனதில் அவனை மெச்சிக் கொண்ட அதே சமயத்தில் இனி அவன் ஷாஜஹானை எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்ற பயமும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. சிவாஜி அவருக்கு என்னவெல்லாம் வாக்குறுதிகள் தந்திருக்கிறான்? அதை நிறைவேற்று என்று அவர் அடுத்ததாக ஆணையிடுகையில் என்ன செய்யப் போகிறான்?....

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. என்.கணேசன் சார், உங்கள் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே நீங்கள் எல்லார் பக்கத்து நியாயங்களையும், உணர்வுகளையும் நடுநிலைமையுடன் அழகாகச் சொல்வது தான். சூப்பர்.

    ReplyDelete
  2. Eagerly waiting to know how Shivaji tackles Shahjahan

    ReplyDelete
  3. ஷாஹாஜின் உணர்வுகளும்...ஆதில்ஷா பக்கத்து நியாயங்களும்.... நம் அனுபவத்தோடு ஒத்துப் போகும் படி அமைத்தது சூப்பர் சார்..

    ReplyDelete
  4. வலிமையற்றவனின் சினம்...
    அடுத்தவர் நஷ்டதிற்க்கு யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை... போன்ற கருத்துக்கள் அருமை

    ReplyDelete