என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 15, 2026

சதுரங்கம் 40

 


சாவித்திரி சொன்ன அந்த முக்கியத் தகவல் உபயோகமானதாக இருந்தாலும் நடப்பு சூழலில் அவள் சொல்வதற்குப் பொருத்தமான ஆட்கள் ஆளும் கட்சியிலேயே நிறைய பேர் இருந்தார்கள். அவர்களிடம் நூறு கோடிகளில் இருந்து பல்லாயிரம் கோடிகள் வரை பணம் இருந்தது. பலரும் மிகவும் புத்திசாலித்தனமாக தங்கள் சம்பாத்தியத்தை சட்டரீதியாகவே தொழில்களில் முதலீட்டாக மாற்றி விட்டிருந்தார்கள். பணம் அளவுக்கு மீறி இருப்பதால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களில் பலரும் குழப்பத்தில் இருந்தார்கள். அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துகள், தங்கக் கட்டிகள் என எல்லாமே அவர்களிடம் கணக்கில்லாமல் இருந்தன. அவர்களில் பலருக்குக் கள்ளத் தொடர்புகளும் இருந்தன. ஆக, கொலையாளி என்று சந்தேகப்படும் தகுதியும் வாய்ப்பும் பலருக்கு இருப்பதால் அவர்களில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது சிரமம் தான் …

 

கீதா சொன்னாள். “விமலுக்குக் கண்டிப்பாய் அந்தக் கொலையாளியைத் தெரிஞ்சிருக்கணும். இல்லையா அர்ஜுன்?”

 

“ஆமா. அவனுக்குத் தெரிஞ்சிருக்கும்னு கொலையாளிக்கும் தெரிஞ்சிருக்கும். அதனால தான் விமல் தன் உயிரைக் காப்பாற்றிக்கறதுக்காக தப்பிச்சுப் போயிருக்கான்.  விமலைக் கண்டுபிடிச்சு அவன் கிட்ட பேசினால் கொலையாளி யாருன்னு நாம கண்டுபிடிச்சுடலாம். ஆனால் அவன் இருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கறது எப்படிங்கறதை தான் நாம யோசிக்கணும் கீதா”

 

“நான் சந்திச்ச எல்லா ஆள்களையும் போலீஸும் சந்திச்சுப் பேசியிருக்குன்னு சொன்னாங்க. என் கிட்ட சொன்ன தகவல்களை அவங்க போலீஸ் கிட்டயும் சொல்லியிருப்பாங்க. விமலைக் கண்டுபிடிக்க போலீஸுக்கு நம்மளை விட வாய்ப்புகள் அதிகம்…”

 

“அதனால தான் விமல் அவனோட மொபைல்ல யாரையும் தொடர்பு கொள்ளலை. அவன் கடைசியாய் பேசினது நர்மதா கிட்ட தான். அவன் கடைசியாய் பேச முயற்சி செஞ்சதும் அவள் கிட்ட தான். அவள் போன் எடுத்துப் பேசலைன்னவுடனேயே அவன் விஷயத்தை யூகிச்சிருப்பான். உடனே தலைமறைவாயிருப்பான்.”

 

அர்ஜுன் சொன்னது போல் தான் நடந்திருக்க வேண்டும்… கீதா சொன்னாள். “கோடி ரூபாய் வாட்ச்சும், கருப்பு பென்ஸ் காரும் யார் கிட்ட இருக்குன்னு சேர்த்துப் பார்த்தால்?”

 

“ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி கார்ன்னா நாம சுலபமாய் கண்டுபிடிச்சடலாம் கீதா. ஆனால் பென்ஸ் கார் எல்லாம் இப்ப எல்லார் கிட்டயும் இருக்கு. அது மட்டுமில்லாம, அரசியல்வாதிகள் அவங்க கிட்ட இருக்கறதை எல்லாம் அவங்க பேர்லயே வெச்சிருக்கறதில்லை. அதெல்லாம் யார் யார் பேர்லயோ இருக்கும். ஆனா இவங்க தான் அதைப் பயன்படுத்திகிட்டிருப்பாங்க. ஆயிரம் கோடிகள்ல சொத்துக்கள் இருந்தாலும் இவங்க கணக்கு காண்பிக்கறதே சில கோடிகள்ல தானே. அதனால இந்த ரெண்டையும் சேர்த்தும் கண்டுபிடிக்க முடியாது.”

 

கீதா சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். ”அந்தக் கருப்பு பென்ஸ் கார்  ரெஜிஸ்டிரேஷன் நம்பரை வைத்துக் கண்டுபிடிக்கலாமே அர்ஜுன்? அது நர்மதா வீட்டு சிசிடிவி கேமிரால பதிவாயிருக்கும். அதை போலீஸ் வெளியிட மாட்டாங்கன்னே வெச்சிகிட்டாலும், உன் கிட்ட பேசின பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு சிசிடிவி கேமிரால எதாவது ஒரு நாளாவது பதிவாகி இருக்கலாமே?”

 

“கண்டிப்பாய் அந்தக் கொலையாளி சரியான ரெஜிஸ்டிரேஷன் நம்பரை அந்தக் கார்ல வெச்சிருக்க மாட்டான் கீதா. ஏதாவது போலி நம்பர் தான் இருக்கும்.”

 

“சரி… நர்மதா இறந்த ராத்திரி யாராவது வந்து போனது அவங்க வீட்டு கேமிரால பதிவாகியிருக்காதா?”

 

“அதையும் நான் கேட்டேன். போலீஸ்காரங்க அவர் வீட்டு கேமிரா பதிவையும் பார்த்திருக்காங்க. எதுவும் தெரியலையாம். நர்மதா வீட்டு பெரிய கேட் இடது பக்கமாய் தான் இருக்கு. அவர் வீடு வலது பக்கத்து வீடு.  கொலையாளி கவனமா வலது பக்கமாய் போகலை போலத் தெரியுது. இடது பக்கத்து வீட்டுல சிசிடிவி கேமிரா இல்லை. நம்ம போலீஸ்காரங்க நர்மதா வீட்டு கேமிரா ரிப்பேராயிருக்குன்னு இப்ப சொல்றாங்க. அது பச்சைப் பொய்ன்னு தெரியுது. ஆனால் அது பொய்யின்னு நிரூபிக்க வழியில்லை...”

 

விமல் வெளிப்பட்டு உண்மையைச் சொன்னால் ஒழிய கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாது என்ற முடிவுக்கே இருவரும் வந்தார்கள். ஆனால் விமல் வெளிப்பட்டு உண்மையைச் சொல்லும் வரை அவனை விட்டு வைப்பார்களா?

 

நித்யா சத்தமில்லாமல் வந்து ஏதோ ஒரு சீட்டை அர்ஜுனிடம் நீட்டினாள். பார்க்க டாக்டர் தரும் மருந்துச்சீட்டு போல் அவனுக்குத் தெரிந்தது.

 

அர்ஜுன் கேட்டான். “என்னடி இது?”

 

“பரண்ல இருக்கிற அம்மாவோட டிரங்குப் பெட்டில வேறெதாவது கிடைக்குதான்னு தேடிப் பார்த்தேன். இது கிடைச்சுது.”

 

அர்ஜுன் அந்தச் சீட்டை வாங்கிப் பார்த்தான். டாக்டர் சாரதா நம்பீசன் என்ற மனநல மருத்துவர் பெயரும், விலாசமும் மேலே இருந்தன. நோயாளியின் பெயர் பானுமதி வயது 22 என்று இருந்தது. மூன்று மருந்துகள் அந்தச் சீட்டில் எழுதப்பட்டிருந்தன. ஒரு மாத காலத்திற்கு எடுத்துக் கொள்ளும்படியான அளவில் மாத்திரைகளுக்கு அவர் எழுதிக் கொடுத்திருந்தார்.

 

வயது 22 என்றால் அவன் பிறந்த சமயமாக இருக்க வேண்டும். அண்ணனும் தங்கையும் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். மருந்துச் சீட்டு பழுப்பேறி இருந்தது. அழுத்திப் பிடித்தால் சீட்டு கிழிந்து விடும் போல் தோன்றியது.

 

அர்ஜுன் இணையத்தில் டாக்டர் சாரதா நம்பீசனைத் தேடினான். அந்தப் பெயரில் மூன்று மருத்துவர்கள் இருந்தார்கள். மூவரில் இருவர் மனநல மருத்துவர்கள் அல்ல. ஒரே ஒருவர் தான் மனநல மருத்துவர். அவரும் பத்து வருடங்களுக்கு முன் இறந்திருந்தார். இணையத்தில் இருந்த விலாசமும், மருந்துச் சீட்டில் இருந்த விலாசமும் ஒன்று தான். 

 

அதில் எழுதப்பட்டிருந்த மாத்திரைகள் எதற்காக என்பதையும் அர்ஜுன் இணையத்தில் தேடினான்.  டிப்ரஷன் என்ற மனச்சோர்வு நோய்க்கான மருந்துகள் என்று தெரிந்தது. அவனோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நித்யா வருத்தத்துடன் சொன்னாள். “அப்படின்னா நீ பிறந்த சமயத்திலேயே அம்மாக்கு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருந்திருக்கு அண்ணா.”

 

அர்ஜுன் மெல்லத் தலையசைத்தான். அதனால் தான் அம்மா அவனிடம் அப்படி இருந்திருக்கிறாள். பெற்றோரின் தற்கொலையால் ஏற்பட்ட பாதிப்பின் தொடர்ச்சியா, இல்லை வேறெதாவது காரணமா என்பது தெரியவில்லை. சொல்லப் போனால், இப்போதும் அவள் முழுவதுமாக குணமடைந்து விடவில்லை. இந்த உளவியல் பிரச்சினை அவளுக்கு இருப்பது தெரியாமல் அவன் சில நாட்கள் முன்பு வரை அவளை வெறுத்திருக்கிறான். அதை நினைக்கையிலேயே அவன் மனம் உறுத்தியது.

 

நித்யா மெல்லக் கேட்டாள். “அம்மாவோட பிரச்சினைகளுக்கு என்ன காரணம்னு நாம எப்படின்னா தெரிஞ்சுக்கறது?”

 

அர்ஜுன் யோசனையோடு சொன்னான். “அப்பா கிட்ட கேட்கலாம். ஆனால் அவர் சொல்ல மாட்டார். பழசைப் பற்றிப் பேசிப் பிரயோஜனம் இல்லைன்னு சொல்வார்.”

 

“நீ பிறக்கறப்ப கூட்டுக் குடும்பமாய் தானே இருந்துச்சு. அப்படின்னா பாட்டிக்கும் சித்தப்பாவுக்கும் இது பற்றித் தெரிஞ்சுருக்குமே அண்ணா.”

 

“இந்த விஷயத்துல நாம நேரடியாய் அவங்களக் கேட்க முடியாது நித்யா. அப்படியே நாம கேட்டாலும் அவங்க உண்மையைச் சொல்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாரும் சேர்ந்து எதையோ நம்ம கிட்ட மறைக்கற மாதிரி தான் தெரியுது.”

 

“ஆமா. பாட்டியும் அம்மாவும் ஒரே கிராமத்துக்காரங்கங்கற சின்ன விஷயத்தைக் கூட இதுவரைக்கும் நமக்கு யாருமே சொன்னதில்லை. நீ அத்திவாக்கம் போய் விசாரிச்சிருக்காட்டி அது இப்ப கூட நமக்குத் தெரிஞ்சிருக்காது.”

 

அர்ஜுன் யோசனையுடன் சொன்னான். “அந்தச் சின்ன விஷயம் மூலமாய் நமக்கு எதாவது பெரிய விஷயம் தெரிய வந்துடும்னு பயப்படறாங்களோ என்னவோ?”

 

யோசிக்க யோசிக்க அந்த சந்தேகம் அவன் மனதில் உறுதியானது. அன்று கீதாவைச் சந்தித்த போது அந்த மருந்துச்சீட்டு பற்றி கீதாவிடம் அர்ஜுன் சொன்னான். அப்போது அவள் சில பெண்களுக்கு முதல் பிரசவத்தின் போது அப்படி டிப்ரஷன் என்ற மனசோர்வு நோய் வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னாள். “நல்ல வேளை உங்கம்மா குணமடைஞ்சுட்டாங்க. சிலர் குணமடையாம இருக்கறதுமுண்டுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.”

 

மருந்து சாப்பிட வேண்டியிருக்காத நிலைமையில் அம்மா இருக்கிறாள் என்றாலும் ஒரு காலத்தில் ரசித்த பழைய காதல் பாடல்களை மீண்டும் ரசிக்கும் அளவு அம்மா முற்றிலுமாக மீண்டு வந்துவிடவில்லையே!


(தொடரும்)

என்.கணேசன்



Monday, October 12, 2026

ரட்சகன் 13

 


யுவராஜை அவர்கள் மரப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து கட்டவிழ்த்து விட்டார்கள். ஒருவன் கட்டவிழ்க்க, இரண்டு பேர் துப்பாக்கி பிடித்தபடி சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். அவன் என்னேரமும் அவர்கள் மீது பாயலாம் என்று அவர்கள் பயப்பட்டது போல் இருந்தது. ஆனால் உண்மையில் அவனுக்கு எழுந்து நிற்கவும் உடலில் பலம் இருக்கவில்லை. அவனுடைய கைகால்கள் மரத்துப் போயிருந்தன. பேச வாயைத் திறந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. தொண்டை வறண்டு போயிருந்ததோடு வலிக்கவும் செய்தது. அவன் தண்ணீர் வேண்டும் என்று பலவீனமாக சைகை செய்தான். கட்டவிழ்த்தவன் கண்ணால் கட்டளையிட, துப்பாக்கி பிடித்திருந்த இருவரில் ஒருவன் போய் ஒரு பாட்டிலில் தண்ணீரும், ஒரு பிஸ்கட் பேக்கட்டும் கொண்டு வந்தான்.

 

கட்டவிழ்த்தவன் உருது கலந்த ஹிந்தியில் யுவராஜிடம் சொன்னான். “முதலில் சிறிது சிறிதாக தண்ணீர் குடி. பிறகு இந்த பிஸ்கட்களைச் சாப்பிடு. அரை மணி நேரம் கழித்து வருகிறேன். பிறகு பேசுவோம்.”

 

அவன் வெளியேற மற்ற இருவரும் அவன் பின்னாலேயே போய் விட்டார்கள். அவனிருக்கும் அறையை வெளியே இருந்து அவர்கள் பூட்டிக் கொண்டனர். தாகம் மிக அதிகமாக இருந்தாலும் அந்த ஆள் சொன்னது போல் யுவராஜ் சிறிது சிறிதாகத் தான் தண்ணீரைக் குடித்தான். தொண்டை அதிகமாக வலித்தாலும், தண்ணீர் உள்ளே போன பின் உடலின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தது. அவன் மெல்ல தன் கை கால்களை அசைத்துப் பார்த்தான். ஆரம்பத்தில் அதுவும் மிகக் கஷ்டமாக இருந்தாலும், அவன் தொடர்ந்து செய்தான். பின் ரத்த ஓட்டம் ஓரளவு சீரடைந்ததால் சிறிது புத்துணர்ச்சி பெற்றான். பிஸ்கெட்களையும் அவன் சாப்பிட்டான்.

 

பின் மெல்ல எழுந்து நடந்தபடி தானிருக்கும் இடத்தை யுவராஜ் ஆராய்ந்தான். அது மிகச்சிறிய அறை. அதனுள் சிறிய கழிவறையும் இருந்தது. ஜன்னல்கள் இல்லை. எங்கே இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. யார் அவனைக் கடத்தியிருக்கிறார்கள், ஏன் கடத்தியிருக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசித்துப் பார்த்த போது இது அவனால் பிடிபட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று தோன்றியது.

 

அவனுடைய தொழிலின் ஒரு பகுதியாக இதை ஏற்றுக் கொண்டாலும், மனைவியையும், மகனையும் நினைத்த போது தான் அவன் மனம் கனத்தது.  எந்த மாதிரியான வாழ்க்கையை அவர்களுக்கு அவன் தந்திருக்கிறான்...

 

சிறிது நேரத்தில் அதே மூவர் அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்தார்கள். இருவர் இப்போதும் துப்பாக்கியை அவன் மீது குறி வைத்தபடி நின்றார்கள். யுவராஜிடம் முன்பு பேசியவன் அவனைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான். “உனக்கு என்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கலாம். ஆனால் நான் எந்தப் பதிலும் சொல்வதற்கில்லை. அதனால் கேள்விகளை உன்னிடமே வைத்துக் கொள். இப்போது நாம் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறோம். உன்னை கராச்சி துறைமுகத்தில் இறக்கி விடுவதற்காக மட்டுமே நான் பணம் வாங்கியிருக்கிறேன். மற்றபடி எதிலும் எனக்கு சம்பந்தமில்லை. இன்னும் இரண்டு நாட்களில் கராச்சியில் உன்னை இறக்கி விட்டு விடுவேன். அது வரையில் நீ பிரச்சினை எதுவும் செய்யாமல் இருந்தால் உன்னைக் கட்டிப் போடும் அவசியம் எனக்கு இருக்காது. நேரா நேரத்திற்கு சாப்பிடவும் ஏதாவது தருவேன். நீ முட்டாள்த்தனமாக எதாவது பிரச்சினை செய்தால் நான் உன்னை மறுபடியும் கட்டி இந்த மரப்பெட்டிக்குள்ளேயே வைத்து பூட்டி விடுவேன். ஏனென்றால் எனக்கு சமாளிக்க ஏற்கெனவே ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. உன்னுடையதையும் சேர்த்து சமாளிக்க எனக்கு தெம்பும் இல்லை, மனமும் இல்லை. கப்பலிலிருந்து நடந்தபடி கராச்சியில் இறங்க வேண்டுமா, இல்லை பெட்டியில் உன்னை அங்கே இறக்க வேண்டுமா என்று யோசித்து ஒழுங்காக இரு. புரிகிறதா?”

 

புரிகிறது என்று யுவராஜ் தலையசைக்க, அவன் தன் ஆட்களுடன் போய் விட்டான். அறையும் பூட்டப்பட்டது.

 

அரண்மனையையும் மிஞ்சிய பிரம்மாண்டமான தன்னுடைய தாய்வீட்டுக்கு நிர்ப்பயா மகனுடன் வந்து சேர்ந்தாள்.  ராஜேஷ்வர் மகளை வரவேற்க கார் வரை வந்தார். காரிலிருந்து இறங்கிய மகளைப் பாசத்துடன் தழுவி தலை உச்சியில் முத்தமிட்ட அவர் பேரனைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்.

 

நிர்ப்பயா மகனுக்கு தாத்தாவை அறிமுகப்படுத்தினாள். “நீலேஷ் இது தான் என் அப்பா. உன்னோட தாத்தா.”

 

நீலேஷ் தாத்தாவை அண்ணாந்து பார்த்த போது ராஜேஷ்வர் கண்கலங்கினார். அவருடைய பேரன் மிக அழகாக இருந்தான். பேரன்புடன் பேரனை வாரி எடுத்துக் கொண்டார். இப்படி இவனைக் கையில் எடுத்து கொண்டாட நான் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டு விட்டேனே என்ற பச்சாதாபம் அவருக்குள் பலமாக எழுந்தது. 

 

நிர்மலா வாசலிலேயே நின்றிருந்தாள். வாசல் வரை வந்து மகளைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை என்றாலும், கார் வரை வந்து மகளை வரவேற்க அவளுடைய கௌரவம் தடுத்தது. தாயைப் பார்த்து நிர்ப்பயா புன்னகைத்தாள். நிர்மலாவின் கண்கள் ஈரமாகி, அவளுக்குள் இருந்து ஒரு விம்மல் வெடித்தது.

 

ராஜேஷ்வரின் தோளில் இருந்த நீலேஷிடம் நிர்மலாவைக் காட்டி நிர்ப்பயா சொன்னாள். “அது தான் என் அம்மா. உன்னோட பாட்டி.”

 

நீலேஷ் பாட்டியை வேடிக்கை பார்த்தான். நிர்மலாவால் அதற்குப் பிறகு வாசலிலேயே நிற்க முடியவில்லை. ஓடி வந்து மகளை ஒரு கையால் அணைத்துக் கொண்டு, இன்னொரு கையால் பேரனின் கன்னத்தை பாசத்துடன் தடவினாள்.  கணவரிடமிருந்து அவள் பேரனை வாங்கிக் கொண்டாள்.

 

வீட்டுக்குள் போன பின் ராஜேஷ்வர் மகளிடம் கேட்டார். “யாராவது உனக்கு போன் செஞ்சாங்களாம்மா?”

 

அவர் கடத்தல்காரர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு எதாவது வந்ததா என்று கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நிர்ப்பயா வாடிய முகத்துடன் இல்லையெனத் தலையசைத்தாள்.

 

ராஜேஷ்வர் பிரச்சினை பெரிதாவது உணர்ந்தார். கடத்தல்காரர்கள் தொடர்பு கொள்ளத் தாமதமாக தாமதமாக அவர்களுடைய கோரிக்கை பெரிதாக இருக்கப் போகிறது என்று அர்த்தம்.

 

அப்சல்கான் யுவராஜ் காணவில்லை என்ற செய்தி வந்த நாளிலிருந்தே மிக மகிழ்ச்சியாக இருந்தான். அவன் சொன்ன தகவலை அவனுடைய ஆட்களுக்கு வக்கீல் காளிதாஸ் சொல்வாரா என்ற சந்தேகம் அவன் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் வழக்கை ஏற்று நடத்த பெரிய தொகையைக் கட்சிக்காரர்களிடம் வாங்கினாலும் கூட அவர்களுக்காக வழக்கை விட்டு ஒரு சின்ன பிரச்சினையை சந்திக்கவும் விரும்பாத நபர் காளிதாஸ்.

 

அவன் சொன்ன தகவலைத் தெரிவித்தால் சின்ன பிரச்சினை வரலாம் என்று பயந்து அதைத் தெரிவிக்காமல் இருக்காததற்கு காரணம், அப்சல்கான் அதற்குக் கோபித்துக் கொண்டு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடலாம் என்பதாகத் தான் இருக்கும்.  ஒருவிதத்தில் பயத்தைப் போல் சிறந்த ஆயுதம் வேறு எதுவுமில்லை. அன்பினால் ஆகாத எத்தனையோ காரியங்கள் பயத்தினால் ஆகியிருப்பதை அப்சல்கான் தன் வாழ்க்கையில் பலமுறை பார்த்து இருக்கிறான்.

 

நல்ல வேளையாக அவன் சொன்ன ஆலோசனையை அகமது அன்சாரியும், பலனளிக்காது என்ற சந்தேகம் கொண்டு அலட்சியப்படுத்தவில்லை.  தினமும் யுவராஜ் கடத்தல் செய்திகள் ஒன்று விடாமல் வாசித்து வரும் அவனுக்கு இந்தக் கடத்தல் அவனுடைய சகா முகமதலியால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது என்பதும் புரிந்து மகிழ்ச்சியானது. கடத்தலில் அவன் முத்திரை தெளிவாகத் தெரிகிறது. முடிவாக இன்று அவன் படித்த “நிர்ப்பயா தந்தை வீட்டுக்குப் போய் விட்டாள்” என்ற செய்தி அவன் அறிவுகூர்மை மிகுந்த அனுமானத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இனி எல்லாம் சரியாக நடந்து விடும். அவன் விடுதலையாகப் போகிறான். விடுதலையான பின் அவன் முழுமூச்சுடன் செயல்படப் போகிறான். அதன் விளைவாக பழைய கௌரவத்தைக் கண்டிப்பாக அவனுடைய இயக்கம் திரும்பப் பெறப் போகிறது. இன்னும் சிறிதே நாட்கள் அவன் காத்திருந்தால் போதும். அப்சல்கான் திருப்தியுடன் புன்னகைத்தான்.

 

சில நாட்களாகவே மலர்ந்த முகத்துடன் இருக்கும் அப்சல்கான் அந்த திகார் சிறைக் காவலாளியை ஆச்சரியத்துடன் பார்த்தான். ’இப்போதெல்லாம் இவன் மகிழ்ச்சியாக இருக்கிறானே. ஏன்?’


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, October 8, 2026

சதுரங்கம் 39

 


சாவித்திரி சொன்னாள். ”ஆமாம்மா. அந்த விலைல எல்லாம் வாட்ச் இருக்காம். இதை நம்ப முடியலையில்ல? எனக்கும் தான் நம்ப முடியல. தங்கத்துல செஞ்சாலே நாலஞ்சு பவுனுக்கு மேல இருக்காதுங்களேம்மா. அந்தக் கணக்கு எடுத்துகிட்டா கூட மூனு லச்சம் வருமா? அதனால நர்மதாம்மா கோடி ரூபாய்க்கு மேலன்னு சொன்னப்ப நான் நம்பல. இந்த வேலைக்காரி படிப்பறிவில்லாதவ, நாம என்ன சொன்னாலும் நம்பிடுவான்னு அவங்க கதை விடறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன். அவங்களும் நான் நம்பலைன்னு புரிஞ்சுகிட்டாங்க. ஆனா ஒன்னும் சொல்லாம சிரிச்சுகிட்டு அந்த வாட்ச்சை வாங்கி வெச்சுகிட்டாங்க.”

 

“இல்லைங்க. அந்த மாதிரி கோடிக்கணக்குல விலை இருக்கற வாட்ச்களும் இருக்கு.” என்று கீதா சொன்னதும் சாவித்திரி அவளைத் திகைப்புடன் பார்த்தாள். “அப்படின்னா, உள்ளே வைரங்களும் இருக்குமோ?”

 

கீதா சாவித்திரியின் திகைப்பைப் பார்த்து புன்னகைத்தபடி சொன்னாள். “அந்த மாதிரி வாட்ச்களும் இருக்கு தான். ஆனா அப்படி தங்கம் வைரம் அல்லாமலேயே கூட கோடிக்கணக்குல விலை இருக்கற வாட்ச்கள் இருக்கு. அதையெல்லாம் தயாரிக்கிறதுக்கு சில வெளிநாட்டுக் கம்பெனிகள் இருக்கு.... நீங்க அந்தக் கடிகாரத்தை எப்போ எப்படி பார்த்தீங்க?”

 

“ஒரு நாள் நான் நர்மதாம்மா ரூமை பெருக்கிகிட்டு இருக்கறப்ப பெட்டுக்கு கீழே ஒரு வாட்ச் விழுந்து கிடந்துச்சு. அது அவங்க கட்டற வாட்ச் அல்ல. அதை எடுத்து நர்மதாம்மா கிட்ட காமிச்சேன். அதை வாங்கிட்டு அவங்க “பாரு கோடிக்கு மேல மதிப்பு இருக்கற வாட்ச்சை விட்டுட்டு போனது கூடத் தெரியாம இருக்கார் மனுஷன். போன் செஞ்சு கூட கேட்கலை. பணம் எக்கச்சக்கமாய் இருந்தால், அலட்சியம் தானாய் வந்துடுது”ன்னு சொன்னாங்க.”

 

”இது எப்ப நடந்துச்சு?”

 

“நாலு மாசம் இருக்கும்.”

 

“அப்போ அது யாரோடதுன்னு உங்க கிட்ட சொன்னாங்களா?”

 

“இல்லைம்மா.”

 

“நீங்க அந்த ஆளை எப்போதாவது பார்த்திருக்கீங்களா? அந்த ஆளைப் பற்றி நர்மதாம்மா உங்க கிட்ட எப்போதாவது சொல்லியிருக்காங்களா?”

 

இரண்டு கேள்விகளுக்கும் சாவித்திரி ’இல்லை’ என்று தலையசைத்தாள்.

 

“இந்த வீட்டுல வந்த ஆள்கள் யாரையெல்லாம் நீங்க பார்த்திருக்கீங்க?”

 

“விமல் சாரைப் பாத்திருக்கேன். அவர் எப்போதாவது வருவார்.”

 

“அவர் ஆள் எப்படி?”

 

“நல்ல ஆளில்லைம்மா?”

 

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

 

“பொம்பளை கிட்ட கைநீட்டி காசு வாங்கிச் செலவழிக்கற ஆம்பளைகளை நல்ல ஆள்ன்னு எப்படிம்மா சொல்றது.? ஆம்பளை சம்பாதிச்சு பொம்பளைக்கு குடுக்கறது தானம்மா ஆம்பளைக்கு கௌரவம். இந்த ஆளு நர்மதாம்மா கிட்ட காசை வாங்கிட்டு போகறதுக்காகவே வருவார். நர்மதாம்மா அவருக்குப் பணம் தர்றதை நானே கண்ணாரப் பார்த்திருக்கேன்.”

 

“பெரிய தொகையாய் வாங்கிட்டு போவாரோ?”

 

“கரெக்டா எவ்வளவு தர்றாங்கன்னு தெரியாது. ஆனா ஐநூறு ரூவாய் நோட்டுக் கட்டாய் தர்றதை நான் பார்த்திருக்கேன்.”  

 

“அப்படி அவர் வர்றப்ப அவரும் நர்மதாம்மாவும் சண்டை போட்டு நீங்க பார்த்திருக்கீங்களா?”

 

“இல்லைம்மா அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு நான் பார்த்தது கிடையாது. அப்படி காசை வாங்கிட்டு போறவங்க சண்டை போட மாட்டாங்கம்மா. சண்டை போட்டா காசு கிடைக்காதுன்னு அவங்களுக்குத் தெரியும்.”

 

“வேற யாரு இந்த வீட்டுக்கு வந்து பார்த்திருக்கீங்க?”

 

“நர்மதாம்மா தங்கச்சி ஒரு தடவை வந்திருக்காங்க. அவங்க நல்ல சுபாவம். நல்லா யதார்த்தமாய் பழகுவாங்க. நர்மதாம்மா இறந்த பிறகு கூட என் கிட்ட போன்ல பேசினாங்க. ரொம்ப வருத்தப்பட்டாங்க.”

 

“அவங்க அளவுக்கு யதார்த்தமாய் நர்மதாம்மா பழக மாட்டாங்களோ?”

 

“செத்தவங்கள பத்தி தப்பா பேசக்கூடாது. சில சமயம் நர்மதாம்மா அன்பா பழகுவாங்க. சில சமயம் எரிஞ்சு விழுவாங்க. எந்த சமயத்துல எப்படி இருப்பாங்கன்னு நம்மளால சொல்லவே முடியாது. ஆனாலும் செத்துப் போனது வருத்தமாய் தான் இருக்கு. என்ன கஷ்டம் வந்தாலும் தற்கொலை செய்துக்கலாமா? முதலாவது இவங்களுக்கெல்லாம் கஷ்டம் என்னன்னு தெரியுமா? எனக்கெல்லாம் வந்த கஷ்டத்துக்கு இன்னேரம் நான் பல தடவை தற்கொலை செஞ்சிருக்கணும் தெரியுமா? அந்த மாதிரி ஒரு கஷ்டத்தை இவங்க பார்த்திருப்பாங்களா?”

 

சாவித்திரி ’பல தடவை தற்கொலை செஞ்சிருக்கணும்’ என்று சொன்னது கீதாவைப் புன்னகைக்க வைத்தது. ”என்ன கஷ்டமெல்லாம் பட்டிருக்கிறாய் நீ?” என்ற சிறிய கேள்வி கேட்டு விட்டால் பேச்சு முழுமையாகத் திசைமாறி விடும் என்பதைப் புரிந்து கொண்டு அவளுக்கு நன்றி சொல்லி விட்டு கீதா கிளம்பினாள்.

 

“நீங்க என்னை ஃபோட்டோவே எடுத்துக்கலையே?” சாவித்திரி கேட்க கீதா அப்போது தான் நினைவு வந்தவள் போல, “நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க. இல்லைன்னா நான் அதுக்குன்னு இன்னொரு தடவை வந்திருக்கணும்.” என்று சொல்லி தன் அலைபேசியில் அவளை இரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கீதா கிளம்பினாள்.   

 

அடுத்ததாய் அவள் விமலின் அண்ணாவையும், தங்கையையும் சந்தித்தாள். அவர்களுடைய பெற்றோர் இறந்து விட்டதால் இப்போது விமலுக்கு இருக்கும் இரத்த பந்தங்கள் அவர்கள் இருவரும் தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் விமல் இருக்குமிடம் தெரிந்திருக்கவில்லை. மேலும் அவன் அவர்களுடன் நல்ல உறவில் இருக்கவில்லை என்று தெரிந்தது.

 

விமலின் அண்ணன் வெளிப்படையாகவே சொன்னான். “ஒரு படம் ஹிட் ஆனவுடனேயே அவன் ரஜினிகாந்த், விஜய், அஜித் லெவலுக்கு போயிட்ட மாதிரி பந்தா பண்ண ஆரம்பிச்சுட்டான். நாங்க எல்லாம் எதுக்கும் லாயக்கு இல்லைன்னு சொல்வான். அதனால நான் அவன் கிட்ட பேசறதையே நிறுத்திட்டேன். அவனைப் பார்த்தே நாலு வருஷம் இருக்கும்... இல்லை.. அவன் என் கிட்ட போன்ல கூடப் பேசறது இல்லை.... கொலை எல்லாம் பண்ற அளவுக்குத் தைரியம் பத்தாது.... பயந்த சுபாவம் தான் அவன்...”

 

விமலின் தங்கை சொன்னாள். “எங்களை எல்லாம் மனுசங்களாவே மதிக்க மாட்டான் அவன். அதனால எங்களுக்குள்ளே பேச்சு வார்த்தையே கிடையாது.  அவனுக்கு நண்பர்களா? சினிமாவுலயும், சீரியல்லயும் நடிக்கற சின்ன நடிகர்கள் ரெண்டு மூனு பேர் இருக்காங்க....”

 

கீதா விமலின் சினிமா, சீரியல் நண்பர்களையும் சென்று பார்த்தாள். அவன் அவர்களுடனும் தொடர்பில் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். நர்மதா மரணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நண்பன் தந்த விருந்தில் தான் அவனை அவர்கள் கடைசியாகச் சந்தித்திருக்கிறார்கள். நர்மதாவின் மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நண்பனுடன் விமல் போனில் பேசியிருக்கிறான். நர்மதாவின் மரணத்திற்குப் பின் அவன் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் பலமுறை அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் “ஸ்விட்ச்டு ஆஃப்” அறிவிப்பு தான் வருவதாகச் சொன்னார்கள். அவள் மரணத்திற்கு அவனை போலீஸ் பொறுப்பாக்கி விடலாம் என்று பயந்து அவன் எங்காவது சென்றிருக்கலாம் என்று அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். அவர்களும் அவன் கொலை செய்யும் அளவுக்கு மோசமானவன் அல்ல என்று தெரிவித்தார்கள்.

 

கீதா அர்ஜுனைச் சந்தித்து சாவித்திரியிடமும், மற்றவர்களிடமும் பெற்ற தகவல்களைச் சொன்னாள். அர்ஜுன் மிக முக்கியத் தகவலாய் அந்த ‘கோடி ரூபாய்’ கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மற்ற எல்லாத் தகவல்களும் அவனும் ஏற்கெனவே திரட்டியவையும், அனுமானித்தவையும் தான்.

 

அர்ஜுன் சொன்னான். “நம்ம சந்தேகம் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் மேல இருக்கு. அவர்கள்ல கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள வாட்ச் கட்டும் அளவு வசதி இருக்கற ஆள்கள் நிறையவே இருக்காங்க. ஒரு காலத்துலன்னா பணம் இருந்தாக்கூட அரசியல்வாதிங்க அந்த மாதிரி விலையுயர்ந்த வாட்ச்களோ, கார்களோ, பங்களாக்களோ வெச்சிருக்க மாட்டாங்க. பார்க்கறவங்க தப்பாய் நினைச்சுக்குவாங்கங்கற பயம் எல்லாருக்கும் இருந்துச்சு. இந்தக் காலத்துல அந்தப் பயமெல்லாம் அரசியல்வாதிகளுக்குப் போயிடுச்சு.  கோடிக்கணக்குல விலை இருக்கற கார்கள், பங்களாக்கள், கட்டிடங்கள், வாட்ச்கள்னு பல பேர் கிட்ட இருக்கு.”

 

கீதா சொன்னாள். “முதலமைச்சர் கைல கூட ஒன்றரை கோடி ரூபாய் வாட்ச் ஒன்னு இருந்ததை நான் பார்த்திருக்கேன். ஆனால் அவர் தினமும் அதைக் கட்டிக்கறதில்லை. அவர் மகன் கைல எப்பவுமே இருக்கு. நிதியமைச்சர் கைலயும், சாராய அமைச்சர் கைலயும் கூட எப்பவுமே இருக்கு. அந்த வாட்ச்களும் ஐம்பது லட்சத்திலிருந்து ரெண்டு கோடி வரைக்கும் இருக்கற வாட்ச்கள் தான். பல அமைச்சர்களோட மகன்கள் கைலயும் அந்த மாதிரி வாட்ச்கள் இருக்கு. தினமும் அந்த மாதிரி வாட்ச்கள் கட்டறவங்க ஆறேழு பேர் இருப்பாங்கன்னா, தினமும் கட்டிக்கறவங்க பத்து பேராவது இருப்பாங்க. எதிர்க்கட்சியிலயும் நாலஞ்சு பேர் கிட்டயாவது அந்த மாதிரி வாட்ச்கள் இருக்கு.”

 

அர்ஜுன் சொன்னான். “அவங்கள்ல யாரோ ஒருத்தர் தான் கொலையாளியாய் இருக்கணும், கீதா”


(தொடரும்)

என்.கணேசன்