என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 16, 2023

சாணக்கியன் 48

 

ம்பி குமாரன் தன் கண்களை நம்ப முடியாமல் திகைத்தான். திடீரென்று யவன காந்தாரப் படைகள் புருஷோத்தமன் முன்னிலையிலிருந்து பின் வாங்க அவன் படைத் தலைவர்களில் மூத்தவரான மேருநாதன் ஆயுதங்கள் எதுவுமில்லாமல் குதிரை மீதேறி புருஷோத்தமனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். பொதுவாக பேச்சு வார்த்தை நடத்த உத்தேசிக்கும் போது தான்  இவ்வாறு நடப்பது வழக்கம். தோற்றுக் கொண்டிருக்கும் புருஷோத்தமனிடம் பேச்சு நடத்த என்ன இருக்கிறது? மன்னன் அவன் இருக்கையில் மேருநாதனுக்கு ஆணை பிறப்பித்தது யார்? ஆம்பி குமாரன் தனக்குள் எழுந்த கடுங்கோபத்தைப் கட்டுப்படுத்த முடியாமல் திணறினான்.

 

மேருநாதன் அவன் தந்தை காலத்திலிருந்தே படைத்தலைவராக இருப்பவர். அவன் தந்தையின் பெருமதிப்பைப் பெற்றவர். தந்தையின் ஆட்களில் பலரைக் கழற்றி விட்டிருந்தாலும் மேருநாதன் பிரச்சினை இல்லாத நபர் என்பதாலும் சிறந்த போர் வீரர் என்பதாலும் தான் அவன் அவரைத் தக்க வைத்திருந்தான். அவர் புருஷோத்தமனிடம் நட்பு கொண்டவர் என்ற தகவல் இப்போது தான் ஆம்பி குமாரனின் நினைவுக்கு வருகிறது....

 

ஆம்பி குமாரன் கோபத்துடன் சசிகுப்தனை நெருங்கிக் கேட்டான். “என்ன நடக்கிறது இங்கே? மேருநாதன் எதற்கு புருஷோத்தமனிடம் பேசப் போகிறார்? அவருக்கு அனுமதி கொடுத்தது யார்?”

 

சசிகுப்தன் அமைதியாகச் சொன்னான். “சக்கரவர்த்தி”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். அவனுக்கு என்ன நினைப்பது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பலவீனமாகக் கேட்டான். “ஏன்?”


“புருஷோத்தமன் இறப்பதை விட இருப்பது இலாபகரமானது என்று சக்கரவர்த்தி நினைக்கிறார்”

 

ஆம்பி குமாரனால் இதை ஜீரணிக்க முடியவில்லை. அவன் மனத்தாங்கலுடன் சொன்னான். “புருஷோத்தமன் நம் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்த பிறகு வேண்டுமானால் இந்த அபிப்பிராயத்துக்கு சக்கரவர்த்தி வந்திருக்கலாம். அதற்கு முன்பே சரிசமமானவர்களிடம் பேசுவது போல் புருஷோத்தமனிடம் நாம் பேச ஆளனுப்புவதற்கு அவசியமே இல்லையே...”

 

சசிகுப்தன் சொன்னான். “சக்கரவர்த்தி நம்மிடம் ஆலோசனை கேட்டால் நாம் நம் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கலாம். அவரே முடிவெடுத்த பிறகு நாம் என்ன சொல்ல முடியும்?”

 

மேருநாதன் வருவதையும், அவர் வருவதற்கு வழி விட்டு யவன காந்தாரப் படைகள் பின்வாங்கியதையும் கவனித்த புருஷோத்தமன் தன் படையினருக்கும் விலகி நிற்க சைகை செய்தார். வருவது மேருநாதனாக இல்லாமல் வேறு யாராக இருந்தாலும்  நெருங்க அவர் அனுமதித்திருக்க மாட்டார். வாய் பேசுவதற்குப் பதிலாக அவர் வாள் பேசியிருக்கும். ஆனால் மேருநாதன் அவர் நண்பர். நல்ல மனிதர்...  செயலற்று ஒரு கணம் அமைதியாக இருக்கையில் தான் புருஷோத்தமன், தான் அதிகமாகக் களைத்துப் போயிருந்ததை உணர்ந்தார். வலது தோள்பட்டையில் வலி மிக அதிகமாக இருந்தது. தாகமும் அவரை வாட்டியது...

 

புருஷோத்தமனை மேருநாதன் நெருங்குவதைக் கவனித்த இந்திரதத் தானும் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து மன்னரை நெருங்கினார். மேருநாதன் குதிரை மீதிருந்து இறங்கி தலைவணங்கி நிற்க புருஷோத்தமனும் சற்று சிரமப்பட்டு யானை மீதிருந்து இறங்கி கைகூப்பினார்.

 

“கேகய மன்னருக்கு மங்களமும், கீர்த்தியும் உண்டாகட்டும் என்று மேருநாதன் வாழ்த்துகிறேன்” என்று  கைகளைக் கூப்பியபடியே மேருநாதன் சொல்ல புருஷோத்தமன் வறண்ட குரலில் சொன்னார். “மேருநாதா வீரமரணம் வாய்க்கட்டும் என்று வாழ்த்துவது இப்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாக இருக்கும்”

 

மேருநாதன் பணிவும் அன்பும் கலந்த குரலில் சொன்னார். “மரணத்தினால் சாதிக்க முடிவது ஏதாவது இருந்தால் அதை வரவேற்பது சரியாக இருக்கும் மன்னரே. ஆனால் அது சாதிக்க முடிவது ஏதுமில்லை என்கிற போது அதை விரும்புவதில் அர்த்தமில்லை.”

 

புருஷோத்தமன் சொன்னார். “நான் உயிரோடு இருக்க என் இரண்டு மகன்கள் இறந்திருக்கிறார்கள். நான் இறந்த பின் எனக்கு ஈமச்சடங்குகள் செய்ய வேண்டியவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய வேண்டிய நிலையில் இந்த வயதானவனிருக்கிறேன். நீங்கள் முதலில் கூறிய மங்களம் என்பக்கம் இல்லை. அடுத்ததாய்ச் சொன்ன கீர்த்தி வீரமரணத்தின் மூலமாகவே எனக்கு வந்து சேர வேண்டும்... சரி வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்”

 

மேருநாதன் சொன்னார். “போரின் போக்கு தங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் கேகய மன்னரே. இதை மேலும் சில காலம் உங்களால் நீட்டிக்க முடியும் என்றாலும் முடிவை மாற்றக்கூடிய நிலையை நீங்கள் எப்போதோ கடந்து விட்டீர்கள். சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தங்கள் வீரத்தை மெச்சுகிறார். நீங்கள் சரணடைந்து அவர் தலைமையை ஏற்றுக் கொண்டால் மேற்கொண்டு இழப்புகளை நீங்கள் தடுக்கலாம்...”

 

புருஷோத்தமன் முகம் கடுமையாகியது. “இந்த வார்த்தையை உங்களைத் தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும்  என் வாளுக்கிரையாகியிருப்பார்கள் நண்பரே. வெற்றிக்கு அடுத்ததாய் எந்த வீரனும் விரும்புவது வீரமரணத்தையே. சரணாகதி அடைந்து மானமிழந்து வாழ்வது உங்கள் மன்னன் ஆம்பி குமாரனுக்குப் பிடித்தமானதாய் இருக்கலாம். இந்த புருஷோத்தமன் என்றும் அந்த வழியை நாட மாட்டான்….”

 

மேருநாதன் கைகளைக் கூப்பியபடி பணிவாகச் சொன்னார். “என்னை மன்னிக்க வேண்டும் கேகய மன்னரே. சில உண்மைகள் கசப்பானதாய் இருக்கலாம். ஆனால் அவற்றை மறுப்பது அறிவுடைமை ஆகாது. போரைத் தொடர்ந்து தாங்களும் இறக்கலாம். தங்கள் படைவீரர்கள் பலரும் இறக்கலாம். ஆனால் முடிவில் இந்தப் போரின் மூலம் உங்கள் கேகய நாடும், மக்களும் பெறும் நன்மை தான் என்ன? இரண்டு மகன்களை இழந்தாலும் இன்னொரு மகன் பிஞ்சு வயதில் இருக்கிறான். அவன் எதிர்காலம் என்ன? தங்களுக்கு மகளொருத்தி இருக்கிறாள். திருமண பிராயத்தில் இருக்கும் அவள் கதி என்ன? வென்றவர்கள் தோற்றவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல. சரணடைந்து அலெக்ஸாண்டர் தலைமையை ஏற்றுக் கொள்வதால் அர்த்தமில்லாத உயிர்ப்பலிகளைத் தடுப்பதோடு தங்கள்  மகளுக்கும், மகனுக்கும், தங்கள் மக்களுக்கும் தேவையான நன்மைகளைச் செய்ய ஒரு வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்…  தயவு செய்து யோசியுங்கள்

 

புருஷோத்தமன் ஒரு கணம் கண்களை மூடியிருந்து விட்டுத் தளர்ச்சியுடன் தன் வலது தோளைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். “இந்த ரணத்தை விட தங்கள் ஆலோசனை எனக்கு அதிக வேதனையைத் தருகிறது மேருநாதா.”


மேருநாதன் சொன்னார். “மேலான நன்மைகளுக்காக நாம் சில வேதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது கேகய மன்னரே.  நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய காலஞ்சென்ற காந்தார மன்னர் இறந்த பின் அவரது மகனை மன்னராக ஏற்றுக் கொள்வது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் மறுத்து நான் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை இருக்கும் போது ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பணியில் இருப்பதன் மூலமாக என் காந்தாரத்திற்கு ஏதாவது சிறிய வகையிலாவது என்னால் கண்டிப்பாக நன்மை ஏற்படுத்த முடியும் என்று தோன்றியதால் தான் தங்கி விட்டேன் கேகய மன்னரே. மறுத்து ஒதுங்கியிருப்பது கௌரவமாக இருந்திருக்கலாம். ஆனால் என் கௌரவத்தால் என் மக்களும், மண்ணும் பெறப்போகும் நன்மை என்ன என்ற ஒரே ஒரு கேள்வி தான் ஒரு முடிவை எடுக்க எனக்கு உதவியது. நீங்களும் அப்படியே உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பழைய நட்பின் காரணமாக நான் வேண்டிக் கொள்கிறேன் கேகய மன்னரே. தங்கள் வீரம் அலெக்ஸாண்டரை மிகவும் கவர்ந்து விட்டிருப்பதால் தங்களை அவமானப்படுத்தும் சிறுபுத்தி அவரிடம் இருக்காது என்று நான் நம்புகிறேன். அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு வாய்ப்பைத் தரும் விதத்தில் என்னைத் தங்களிடம் அனுப்பியிருக்க மாட்டார்….”

 

புருஷோத்தமன் தளர்ச்சியுடன் கண்களை மூடிச் சிறிது நேரம் யோசித்தார். சரணடைவது அவருக்குப் பிடிக்கவில்லை. சரணடைந்து வாழ்வது வெறுப்பாகத் தான் இருந்தது. ஆனால் சகோதரர்களை இழந்திருக்கும் அவர் மகளுக்கும், இளம் மகனுக்கும் இப்போது அவர் மட்டும் தான் இருக்கிறார். அவரும் இறந்து விட்டால் அவர்கள் கதி என்னவாக இருக்கும்? அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் மக்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்ய முடியும். தோல்வி நிச்சயம் என்றறிந்த பின்னரும் போரைத் தொடர்ந்து இன்னும் எத்தனையோ உயிர்களைப் பலி கொடுப்பது  சரி தானா?


புருஷோத்தமன் திரும்பிப் பார்த்து இந்திரதத்தைக் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய் இந்திரதத்?”

 

இந்திரதத் சொன்னார். “உடைவதை விட வளைவது நல்லது மன்னரே”

 

(தொடரும்)

என்.கணேசன்  

Monday, March 13, 2023

யாரோ ஒருவன்? 129



டுத்த காட்சி மணாலி போலீஸ் ஸ்டேஷனில் கவலை தோய்ந்த முகத்தோடு கல்யாணும், சரத்தும் உள்ளே நுழைவதைக் காட்டியது. காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரனிடம் கல்யாண் அரைகுறை ஹிந்தியில் தங்கள் நண்பன் காணாமல் போனதைத் தெரிவித்தான்அந்த போலீஸ்காரன் மதன்லாலைக் கைகாட்டி அவரிடம் போய்ச் சொல் என்றான்.

மதன்லால் அவன் சொல்வதை அலட்சியமாகக் கேட்டுக் கொண்டான். பின் சலிப்புடன் சொன்னான். ”இன்று இங்கே வெடிகுண்டு விபத்து ஒன்றும் நடந்திருக்கிறது. உன் நண்பனைக் கண்டுபிடிப்பதெல்லாம் உடனடியாக எங்களால் முடிகிற வேலை அல்லஅதனால் நீங்களே நன்றாகத் தேடிப்பாருங்கள். எதற்கும் உன் நண்பனின் போட்டோ இருந்தால் அதையும் சேர்த்து வைத்து புகார் கொடுத்து விட்டுப் போ.”

சொல்லி விட்டு சற்று தள்ளி எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரனைக் கைகாட்டி விட்டு மதன்லால் யாரிடமோ போனில் பேச ஆரம்பித்தான். கல்யாணும் சரத்தும் அந்தப் போலீஸ்காரனை நோக்கி நகர்கிறார்கள்.

அடுத்த காட்சியில் ஒரு போலீஸ்காரன் பாதி எரிந்த டிரைவிங் லைசென்ஸைக் கொண்டு வந்து மதன்லாலிடம் கொடுத்தான். “சிறிது நேரத்திற்கு முன் இது அந்த விபத்துப் பகுதியில் ஒரு ஓரத்தில் கிடைத்தது சார்...” மதன்லால் அதை வாங்கி இரண்டு பக்கமும் கூர்ந்து பார்த்தான்

அடுத்த காட்சியில் சரத் கல்யாணிடம் கேட்டான். “அந்தக் கருகின பிணம் மாதவன்னு அவங்க எப்படி நம்புவாங்க. செத்தவனோட நிஜ அடையாளம் தெரிஞ்சுட்டா அப்புறம் என்னாகும்?”

கல்யாண் தந்திரமாகச் சொன்னான். “அப்படி தெரிஞ்சுட்டா மாதவனை இவங்க நமக்குக் கண்டுபிடிச்சுக் குடுக்கணும். அது அவங்க வேலை. நீயேன் கவலைப்படறே

சரத் யோசனையுடன் களையிழந்த முகத்துடன் அமர்ந்திருக்க கல்யாண் சொன்னான். “என்ன செண்டிமெண்ட்டா. அந்த முட்டாள் இருந்திருந்தா அந்தப் பாம்பு கொண்டு வந்த ஆளைக் கண்டுபிடிச்சு அந்த ஆள் கிட்டயே நாகரத்தினத்தை ஒப்படைக்கற வேலையும் செஞ்சிருப்பான். அவனும் அனுபவிச்சிருக்க மாட்டான். நம்மளயும் அனுபவிக்க விட்டிருக்கமாட்டான்.”

சரத் சொன்னான். “அதுக்கில்லைடா. எதுவும் நமக்கு பிரச்சன ஆயிடாதே

கல்யாண் உறுதியாய் சொன்னான். “நாமளா இனிமே முட்டாள்தனமா காட்டிக் கொடுக்காத வரைக்கும் பிரச்சினை ஆகாதுடா

ஒரு போலீஸ்காரன் ஓட்டலுக்கு வந்துசார் உங்களை வரச்சொன்னார்.” என்று சொல்வது தெரிகிறது.

கல்யாண் முகமும், சரத் முகமும் வெளிர்கிறது. இவ்வளவு சீக்கிரமாக வந்து அழைப்பார்கள் என்று இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை...

அடுத்த காட்சியில் மதன்லால் முன்னால் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருக்க டாக்சி டிரைவர் க்யான் சந்த் காயங்களுக்குக் கட்டு போட்டபடி இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.  

கல்யாண் தங்கள் நண்பனின் அங்க அடையாளங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு மதன்லால் க்யான் சந்தைப் பார்த்து கேட்கிறான். “உன் காரில் ஏறின ஆள் இப்படி இருந்தானா?”

க்யான் சந்த் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “ஆமாம். அப்படித் தான் இருந்தான்...”

எங்கே உன் காரில் ஏறினான்?”

இவர்கள் ஓட்டலுக்குப் பக்கத்தில் இருந்து தான்.”

எப்போது ஏறினான்?’

காலைல தான்....”

மதன்லால் கல்யாண் பக்கம் திரும்பினான். “உங்கள் நண்பன் எப்போதிருந்து காணவில்லை?”

காலையிலிருந்து தான்....”

மதன்லால் யோசித்து விட்டுச் சொன்னான். “எதற்கும் நாளை காலை வரை பார்ப்போம். உங்கள் நண்பன் திரும்பி வந்து சேரா விட்டால் இந்த வெடிகுண்டு விபத்தில் இறந்தது அவனாகத் தானிருக்கும். உடம்பு முழுவதும் கருகி இருப்பதால் உடம்பை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க வழியில்லை

நாகராஜ் சொன்னான். “உண்மைல அந்த வெடிகுண்டு விபத்துல இறந்தது மகேந்திரன்கிற ஒரு ரா அதிகாரி. அவர் அஜீம் அகமதுங்கற ஒரு தீவிரவாதி மணாலில இருக்கறத கண்டுபிடிச்சு அவனைப் பிடிக்க மணாலி வந்திருந்தார். அவனைக் கைது பண்ண எல்லா ஏற்பாடும் செய்திருந்தார். அவர் அங்கே தங்கியிருக்கறப்ப க்யான் சந்த் என்கிற டாக்சி டிரைவர் டாக்சில தான் எல்லா இடங்களுக்கும் போய்ட்டு வந்துட்டு இருந்தார். அஜீம் அகமது, அந்த டாக்சி டிரைவரையும், போலீஸ் அதிகாரியையும் கைல போட்டுகிட்டு அந்த அதிகாரியை வெடிகுண்டு வெச்சு கொல்லத் திட்டம் போட்டான். அஜீம் அகமதை அவர் கைது பண்றதா இருந்த நாள் காலைல சரியா பத்தேகால் மணிக்கு வெடிக்கிற மாதிரி ஒரு வெடிகுண்டை செட் பண்ணி அவன் டாக்ஸில அதிகாலைலயே வெச்சுட்டாங்க. அது தெரியாம அந்த அதிகாரி அவன் டாக்ஸில பயணம் செஞ்சார். வெடிகுண்டு வெடிக்கறதுக்கு முன்னாடி க்யான் சந்த் இறங்கி பக்கத்து கடைல ஒரு பொருள் வாங்கிட்டு வர்றதாய் போய்ட்டான். சந்தேகம் வரக்கூடாதுன்னு வெடிகுண்டு வெடிக்கறப்ப லேசான காயப்படற தூரத்துல க்யான்சந்த் வந்து காயப்பட்டான். அந்த அதிகாரி பிணமா கருகிட்டார்.... அஜீம் அகமது அந்த அதிகாரியோட கருகின பிணம் கூட அவங்க குடும்பத்துக்குக் கிடைக்க கூடாதுன்னு சொல்லியிருந்தான். அதனால மதன்லால் அவரோட பொருள்கள எல்லாம் விசாரணைக்குக் கிடைக்காத மாதிரி அப்புறப்படுத்திட்டான். அவங்க அதை அடையாளம் தெரியாத அனாதைப் பிணமா மாத்தப் பார்த்திருந்தாங்க.... ஆனா அந்தச் சிரமம் கூட இல்லாதபடி கல்யாணும் சரத்தும் மாதவனைக் காணோம்னவுடன யாருக்கும் பிரச்சினை இல்லாதபடி அவங்க அதை மாதவன் பிணமா மாத்திட்டாங்க... ”

அடுத்த காட்சியில் கல்யாணும் சரத்தும் அவசர அவசரமாக மாதவனின் பொருட்களை அவன் சூட்கேஸிலும் இன்னொரு பையிலும் திணிப்பது தெரிந்தது. கல்யாண் முகத்தில் நிம்மதி தெரிகிறது. சரத் முகத்திலும் தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொள்கிறார்கள். எல்லாம் முடிந்து அறையைக் காலி செய்யும் முன் ஒரு முறை அறையைப் பார்க்கிறார்கள். ஒரு மூலையில் மாதவன் தன் தாயிற்குக் குங்குமச்சிமிழும், ரஞ்சனிக்கு வளையலும் வாங்கிய சிறிய பொட்டலம் விழுந்து கிடப்பது தெரிகிறது. இருவரும் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கிறார்கள். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அதை எடுக்காமலேயே கிளம்புகிறார்கள்.

அடுத்த காட்சியில் ரஞ்சனி அழுதழுது சிவந்த கண்களுடன் சோகமாகத் தெரிகிறாள். அவளருகே சோகமான முகத்துடன் சரத் அமர்ந்திருக்கிறான்.

சரத் சொல்கிறான். “ரஞ்சனி. அவன் சாவோட நம்மளோட ஒரு பகுதியும் செத்துடுச்சுன்னு தான் நாங்களும் நினைக்கிறோம். ஆனா நாமளும் செத்துட முடியாதில்லையா. மனசை தேத்திக்கோ. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்

அவன் நினைவுகளை மட்டுமில்ல எனக்கு ஒரு குழந்தையையும் குடுத்துட்டு போயிருக்கிறான் சரத்என்று ரஞ்சனி அழுது கொண்டே தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதைச் சொல்ல சரத் அதிர்ச்சி அடைகிறான்.

சரத் மெல்லச் சொல்கிறான். “அதைக் கலைக்கறதொன்னும் இந்தக் காலத்துல கஷ்டமில்லை...”

ரஞ்சனி தீர்மானமாகச் சொல்கிறாள். “அவன் குழந்தையை நான் கருக்கலைப்பு செய்ய மாட்டேன் சரத். எல்லாரும் என்னைக் காரித்துப்பினாலும், கரிச்சுக் கொட்டினாலும் கூடப் பரவாயில்லை....”

ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு  சரத் சொல்கிறான். “யாரும் உன்னை எதுவும் சொல்ல வேண்டியதில்லை ரஞ்சனி. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்இனிமே அது என் குழந்தை

திகைத்து, நெகிழ்ந்து, கண்ணீர் வழிய ரஞ்சனி சரத்தைக் கைகூப்பி வணங்கி குமுறி அழுகிறாள்.

அழாதே ரஞ்சனி.” என்று சொல்லி சரத் அவளை அணைத்துக் கொள்கிறான்.

காட்சிகள் முடிவடைய அங்கே கனத்த அமைதி குடிகொண்டது. எல்லோரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு நம்ப முடியாத உண்மைகள் நிறைய இப்போது தான் தெரிந்திருக்கின்றனஅசைவற்ற நிலையில் சிலையாக அமர்ந்திருக்கும் மூவரைத் தவிர மற்ற நான்கு பேருக்கும் நடந்திருப்பதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

அதிகம் பாதிக்கப்பட்டவளும், உடைந்து போனவளுமாக ரஞ்சனி இருந்தாள். நேரிலேயே சம்பவங்களைப் பார்த்த பிறகு அவளுக்கு இனி சந்தேகப்பட எதுவுமில்லை. இனி அழ அவளிடம் கண்ணீர் பாக்கியில்லை. எல்லாம் தகர்ந்து போய் வெறுமையையும், துக்கத்தையும் சுமந்தவளாக அவள் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அடுத்த பாதிக்கப்பட்டவனும், அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவனுமாக தீபக் இருந்தான். அவன் மாதவனின் மகன். அவன் தந்தையை அவன் இதுவரை அப்பாவென்று அழைத்துக் கொண்டிருந்தவனும், அவனுடைய காதலியின் தந்தையுமாகச் சேர்ந்து கொன்றிருக்கிறார்கள். அவனுடைய தந்தை அவனுடைய கனவில் வந்து தனது மரணம் இயற்கையல்ல என்று சொல்லியிருக்கிறார். அதள பாதாளத்திலிருந்து வந்தது போல் பலவீனமாகக் குரல் ஒலித்திருக்கக் காரணம் அதள பாதாளத்தில் அவர் விழுந்து போயிருந்தது தான்....

தர்ஷினிக்குத் தன் தந்தையையும், தாத்தாவையும் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. உயிர் நண்பனின் உயிரை எடுத்து விட்டு ஒவ்வொரு கட்டத்திலும் எந்த உறுத்தலும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிற ஒரு நீச்சனுக்கு மகளாய் பிறந்திருப்பதற்கு அவள் வெட்கப்பட்டாள். மேகலாவும் அதே உணர்வுகளோடு தான் இருந்தாள். இப்படிப்பட்ட ஒரு துரோகிக்கு மனைவியாக இருப்பதற்கு அவள் கூசினாள்.

நாகராஜ் எழுந்து நின்றான். அவன் சக்தியால் கட்டுப்போட்டிருந்தவர்களையும் விடுவித்து விட்டு தீபக், தர்ஷினி இருவரிடமும் சொன்னான். “கசப்பான உண்மைகளை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டி வந்ததில் எனக்கும் வருத்தம் தான். ஆனால் இனிப்பான பொய்களுடன் கடைசி வரை வாழ்ந்து ஏமாறுவது அதையும் விடக் கொடுமை...”


கல்யாண் பேச முடிந்தவுடன் ஆக்ரோஷமாய் எழுந்தான். “உன் திறமைக்கு சபாஷ். ஆனா சில உண்மைகளோட பல பொய்களை ஜோடிச்சு உன்னால படமாகவே எடுத்துக் காண்பிக்க முடிஞ்சதுல உன் சக்தியோட அளவு தெரியுதே ஒழிய சத்தியம் தெரியல நாகராஜ். என் நண்பனை நான் மலை மேல இருந்து தள்ளி விட்டதாய் நீ கதை வசனம் டைரக்ஷனோட ஓட விட்ட படம் முழுசும் பொய். என் நண்பனோட ஆத்மா உன்னை மன்னிக்காது

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, March 9, 2023

சாணக்கியன் 47

 

கேகய இளவரசன் தலைமையில் வலது புறப்படை தயாராவதற்கு முன்பே அலெக்ஸாண்டரின் குதிரைப் படை மின்னல் வேகத்தில் நெருங்கியது. அவர்களில் ஒரு பகுதியினர் தங்களை எதிர் கொண்ட கேகயப்படையைத் தாக்க ஆரம்பிக்க இன்னொரு பகுதியினர் வேகமாக கரையோரம் உள்ள யானைப் படையை நோக்கி ஊடுருவ ஆரம்பித்தனர். அப்படி ஊடுருவ ஆரம்பித்த படையினரிலும் பெரும்பாலோர் கேகயப் படையினரைக் கடுமையாகத் தாக்கி ஈட்டி ஏந்தியபடி வந்த தங்கள் குதிரை வீரர்கள் முன்னேற வழிவகுத்துக் கொடுத்தார்கள். என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று கேகயப்படை உணர்ந்து எச்சரிக்கையடைவதற்கு முன்பாகவே ஈட்டிகளோடு வந்த வீரர்கள் தங்கள் ஈட்டிகளைக் குறிபார்த்து யானைகள் மீது வீச ஆரம்பித்தார்கள். மளமளவென்று வீசப்பட்ட ஈட்டிகள் யானைகள் உடல்களைத் துளைக்க யானைகள் அரண்டு மிரண்டு ஓலமிட்டு அங்குமிங்கும் ஓட கேகயப் படையின் முன்னணியில் பெரும் பதற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அந்த நேரமாகப் பார்த்து எதிர்க்கரையில் இருந்த காந்தார யவனப்படைகள் விதஸ்தா நதியைக் கடக்க ஆரம்பித்தன.

 

இந்திரதத் தங்கள் பக்கம் முன்புறமும் வலது புறத்திலும் இருக்கும் குழப்பங்களைக் கவனித்த அதே நேரத்தில், எதிர்பக்கம் இருந்து ஒரேயடியாக நூற்றுக்கணக்கான படகுகள் கிளம்புவதையும் பார்த்தார். சில படகுகளில் மரப்பாலங்கள் இழுத்து வரப்படுவதையும்,  மற்ற பெரிய படகுகளில் குதிரைப்படை வீரர்களும், காலாட்படை வீரர்களும் கிளம்புவதையும் பார்த்தார். அவர்களுடைய ஆரம்பத் திட்டம் எதிரிகள் படை அவர்கள் கரையை நெருங்கக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதாக இருந்தது. ஆயுதங்களையும், கற்களையும் வீசித் தாக்கி எதிரிகளைக் காயப்படுத்தி எதிரிகள் நெருங்குவதையே பிரம்மப் பிரயத்தனமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தது இப்போது நடக்க வழியேயில்லை. அவர்களுடைய யானைகளே மிரண்டும், மதம் கொண்டும் ஓட ஆரம்பித்ததால் அவர்கள் படைவீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கடும் சிரமத்தில் இருந்ததால் எதிரிப்படையினரை வர விடாமல் தடுக்க முன்புறம் யாருமிருக்க வழியில்லை. விஷ்ணுகுப்தர் அலெக்ஸாண்டரைப் பற்றிச் சொன்னது மிகவும் சரியாகத் தானிருக்கிறது. அருமையான திட்டம் தான் வகுத்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறான்...

 

புருஷோத்தமன் விரைந்து வந்து இணையும் வரை இந்திரதத்தும், சேனாதிபதியும் தங்களால் முடிந்த வரை நிலைமையைச் சீராக்க முயன்றார்கள். ஆனால் யானைகளைச் சமாளிப்பது சாதாரணமான விஷயமாக இல்லை. எதிரிகளைப் பயமுறுத்தவும் சமாளிக்கவும், தங்களது யானைப்படை ஒன்றே போதும் என்று நினைத்திருந்த அவர்கள் தங்கள் பலமே பலவீனமாவதை வேதனையோடு பார்க்க வேண்டியிருந்தது. புருஷோத்தமன் களத்துக்கு வந்து ஓரளவு நிலைமையை ஒழுங்குபடுத்துவதற்குள் காந்தாரப் படையும், யவனப்படையும் நதியைக் கடந்து வந்து விட்டார்கள்.     

 

லெக்ஸாண்டர் தன் கணக்கின் படியே போரின் போக்கு இருப்பதை எண்ணித் திருப்தியடைந்தான். கேகயப்படை உக்கிரமாகப் போரிட்டும் எந்தப் பக்கத்திலும் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. முதல் முக்கிய பலியாக கேகய பட்டத்து இளவரசனே ஆக நேர்ந்தது. கேகய பட்டத்து இளவரசன் அலெக்ஸாண்டரைத் தாக்கவோ, வெல்லவோ முடியாவிட்டாலும் வாளெறிந்து அலெக்ஸாண்டரின் குதிரையைக் கொன்று விட்டு இறந்தான்.

 

அலெக்ஸாண்டர் தன் குதிரையை மிகவும் நேசித்து வந்திருந்ததால் குதிரையின் இழப்பு அவனை மிகவும் வேதனையடையவும், கோபமடையவும் வைத்தது. அவனைப் போலவே கேகய பட்டத்து இளவரசனின் தம்பியான இன்னொரு இளவரசனும் தன் சகோதரன் இறப்பில் கோபமடைந்து போரிட முன்னேறி வந்தான். அவனும் மிக வீரமாகப் போராடினாலும் அவனாலும் அலெக்ஸாண்டரைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவனும் ஒரு கட்டத்தில் மரணத்தைத் தழுவினான்.  கேகய இளவரசர்களைத் தொடர்ந்து அவர்கள் தலைமையில் வந்த படையினரும் அலெக்ஸாண்டரின் திறமை வாய்ந்த படையின் பராக்கிரமத்தால் பலியானார்கள்.

 

மகன்கள் இறந்தவுடன் அதன் துக்கத்திலேயே புருஷோத்தமன் தளர்வடைவார் என்று அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை. பர்வதேஸ்வரன் என்ற பெயரை வெறுமனே அவர் பெறவில்லை என்பதை அலெக்ஸாண்டர் நேரிலேயே கண்டான். மனிதர் தன் வயதுக்கு மீறிய சக்தியைத் தக்க வைத்துக் கொண்டே யானை மீதமர்ந்தபடி போராடினார்.  அவரைப் பார்த்தே அவர் படையும் தங்கள் மனவலிமையைத் திரும்பவும் பெற்றது போல் அலெக்ஸாண்டருக்குத் தோன்றியது.  கடுமையான சேதத்துக்குப் பின்னரும் அவர்கள் தீரத்துடன் போராடினார்கள்.

 

ஆம்பி குமாரன் தன்னுடைய போர்க் குணத்தின் உச்சத்தில் இருந்தான். பழைய கணக்கு ஒன்றைப் பராக்கிரமத்தோடு தீர்ப்பது வார்த்தைகளால் விளக்க முடியாத திருப்தியை அவனுக்குத் தந்தது. ஆனால் அவன் நெருங்க ஆரம்பித்ததைப் பார்த்த புருஷோத்தமனின் ஆத்திரம் அதிகரித்தது.

 

அவர் சில நாட்களுக்கு முன் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்தார். ஆம்பி குமாரன் தன் தந்தை மரணமடையாமல் வாழ்நாளை நீட்டிக் கொண்டே போனதைச் சகிக்க முடியாமல் அவன் தந்தையைக் கொன்று விட்டான் என்ற தகவல் அவருக்குக் கிடைத்திருந்தது. முந்தைய காந்தார அரசர் அவருடைய நண்பர். மிக நல்ல மனிதர். இவனைப் போன்ற நீச்சனைப் பெற்றதைத் தவிர அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த நீச்சன் தனியே வந்து போரிட்டு வெல்லும் தைரியம் இல்லாமல் அலெக்ஸாண்டர் என்ற அன்னியனோடு கைகோர்த்துக் கொண்டு வந்து போராடுகிறான். இவன் ஆரம்பித்து வைத்த செயலால் என் மகன்களையும் இழந்து விட்டேன்…. இந்த எண்ணங்கள் எழ புருஷோத்தமன் பெரும் ஆத்திரத்தோடு போர் புரிய ஆரம்பித்தார்.

 

போரின் போது ஒரு வீரன் எறிந்த வாள் புருஷோத்தமனின் வலது தோளைப் பதம் பார்த்து கீழே விழுந்தது.  வலது தோளில் பெருங்காயம் அடைந்த போதும் சிறிதும் தளராமல் புருஷோத்தமன் போரைத் தொடர்ந்தார்.

 

இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அலெக்ஸாண்டர் சசிகுப்தனிடம் சொன்னான். “கிழவன் அடங்குவது போலத் தெரியவில்லையே.”

 

சசிகுப்தன்  சொன்னான். “ஆம்பி குமாரன் மேல் இருக்கும் ஆத்திரம் அவருக்குக் கூடுதல் பலத்தை அளிப்பது போல் தெரிகிறது. மனிதர் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆம்பி குமாரன் உட்படப் பலரைக் கொன்று விட்டு இறப்பது என்று முடிவெடுத்திருக்கிறது போல் நடந்து கொள்கிறார்.”

 

அலெக்ஸாண்டருக்கு புருஷோத்தமன் மேல் ஒரு தனிமதிப்பு ஏற்பட்டது. அவன் மனிதர்களின் மேலான நல்ல தன்மைகளை மதிக்கத் தெரிந்தவன். முக்கியமாக பல சோதனைகளுக்கும், பின்னடைவுகளுக்கும் நடுவிலும் கூட ஆக்ரோஷமாகப் போரிடும் அவர் வீரத்தை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை….

 

ஆம்பி குமாரனுக்கு உதவ செல்யூகஸும் சேர்ந்து கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் சசிகுப்தனிடம் சொன்னான். “இந்த மனிதன் இறப்பதை விட உயிரோடு இருப்பது நமக்கு அனுகூலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்…”

 

சசிகுப்தன் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான். அவனும் ஆம்பி குமாரனை விட அனைத்து விதங்களிலும் புருஷோத்தமன் தேவலை என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அலெக்ஸாண்டர் அவர்கள் இருவர் பற்றியும் வைத்து இருக்கிற அபிப்பிராயங்களை முழுமையாக அறியாமல் அவன் எதையும் வாய் விட்டுச் சொல்ல விரும்பவில்லை.

 

அலெக்ஸாண்டர் சொன்னான். “புருஷோத்தமனிடம் யாராவது போய்ப் பேசினால் நல்லது என்று நினைக்கிறேன். புருஷோத்தமனுக்குச் சிறிது அறிவு இருந்தாலும் அவரால் கண்டிப்பாக நம்மை இனி வெற்றி காண முடியாது என்பது புரிந்திருக்கும். அதனால் இனியும் அதிக உயிர்ப்பலி தராமல் சரணடைவது தான் புத்திசாலித்தனம் என்பதை யாராவது அவருக்குப் புரிய வைத்தால் நல்லது.”

 

சசிகுப்தன் சொன்னான். “சக்கரவர்த்தி. அந்தக் கிழவருக்கு இருக்கும் ஆத்திரத்தில் நம் ஆட்கள் யார் போயும் அவருடன் பேச முடியாது. நம்மை அவருடையை எதிரிகளாக அவர் நினைப்பதால் நாம் நெருங்கினாலே அவர் தாக்க ஆரம்பித்து விடுவார். மரணத்திற்கும் துணிந்து விட்ட மனிதனை மேலும் அச்சுறுத்தவும் வழியில்லை. அதனால் அவர் நண்பர் என்று நினைக்கும் நபர் யாராவது அவரிடம் போய்ப் பேசினால் அந்த நபர் சொல்வதை அவர் காது கொடுத்தாவது கேட்கும் வாய்ப்பிருக்கிறது….”

 

அலெக்ஸாண்டர் கேட்டான். “அவர் நண்பன் என்று நினைக்கும் ஆட்கள் நம்முடன் யாராவது இருக்கிறார்களா?” சசிகுப்தன் அவனறிந்த மனிதர்களைப் பற்றி எப்போதுமே கூடுதல் தகவல்கள் வைத்திருப்பவன். ஒரு காலத்தில் அவன் புருஷோத்தமனிடம் நன்றாகப் பழகியவன் என்றும் அலெக்ஸாண்டர் கேள்விப்பட்டிருந்ததால் யாரோ ஒருவரை மனதில் வைத்தே தான் சசிகுப்தன் இப்படிச் சொல்கிறான் என்று அவனுக்குத் தோன்றியது.

 

அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது போலவே சசிகுப்தன் சொன்னான். “ஒருவர் இருக்கிறார்…”

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, March 6, 2023

யாரோ ஒருவன்? 128


மேகலா, ரஞ்சனி, தீபக், தர்ஷினி நால்வரும் மனம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருக்கையில் அசைவற்ற நிலையில் இருந்த மூவர் நொந்த மனதுடன் இனி என்ன வரப்போகிறதோ என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வேலாயுதம் தன் மனதில் தீபக்கை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார். “.... சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கற கதையாய் இந்த நாயி அவன்கிட்ட போய் பெரிய புடுங்கி மாதிரி பேசினதால வந்த வினை இது. இல்லாட்டி ரஞ்சனியை எப்படியாவது சமாளிச்சு அனுப்பிச்சிருக்கலாம். வேலியில போற ஓணானை எடுத்து மடியில விட்டுகிட்ட மாதிரி பக்கத்து வீட்டுக்காரனை வரவழைச்சு படமாவே எல்லாத்தையும் இந்த கிறுக்கு நாய் ஓட வைக்க விட்டுட்டானே... ஐயோ... ஐயோ...”

அடுத்த காட்சி விரிந்தது. மணாலி கடைத்தெருவில் மூன்று நண்பர்களும் ஒவ்வொரு கடையில் நின்று பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். மாதவன் கையில் ஒரு அழகான சந்தனக் குங்குமச்சிமிழும், சில வித்தியாசமான கண்ணாடி வளையல்களும் இருக்கின்றன. சிறிது நேரத்தில் ஒன்று சேர்கிறார்கள்.

மாதவனிடம் சரத் கேட்கிறான். “யாருக்குடா?”

மாதவன் புன்னகையுடன் “குங்குமச் சிமிழ் அம்மாக்கு. வளையல் ரஞ்சனிக்கு.” என்று சொல்லிக் கொண்டே பையில் பத்திரமாய் உள்ளே வைக்கிறான். ”ரெண்டு பேருக்குமே என் செலக்‌ஷன் ரொம்ப பிடிக்கும். வேணும்னா பாரேன்...”

அடுத்த  காட்சி...

மாதவன், கல்யாண், சரத் மூவரும் ஒரு மலை ஏறிக் கொண்டிருக்கிறார்கள். கல்யாண் மாதவனிடம் சிரித்துக் கொண்டே என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறான். சில அடிகள் பின்னால் சரத் வந்து கொண்டிருக்கிறான். மாதவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது.

கல்யாண் கேட்டான். “என்ன விஷயம்டா?”

மாதவன் வருத்தத்துடன் சொன்னான். “எனக்கு அந்த நாகரத்தினக்கல் கிடைச்சுதுன்னு சந்தோஷப்படறேன். ஆனா அந்த ஆள் எவ்வளவு துக்கத்துல இருப்பான்னு நினைக்கிறப்ப கஷ்டமாயிருக்கு. அடுத்தவன் நஷ்டத்துல நமக்கு லாபம் வேணுமா, அது நியாயமான்னு நேத்திலிருந்தே மனசாட்சி கேட்குது... ரிசர்வேஷன்ல வந்ததால ரயில்வே டிபார்ட்மெண்ட் மூலமா அவன் அட்ரஸை வாங்கிடலாமில்ல”

“பைத்தியமாடா நீ. அந்தப் பாம்பை நீயா அந்த சூட்கேஸ்ல இருந்து உன் பைல போட்டுகிட்டே. அதுவா உன் பைக்கு வந்திருக்கறதுக்கு நீ என்னடா பண்ணுவே”

”இல்லை. நான் திறந்து பார்த்த சூட்கேஸ சரியா இடைவெளி இல்லாம மூடியிருந்தா அது அவன் சூட்கேஸ்லயே இருந்திருக்குமில்லையா” மாதவனுக்கு இன்னும் அது உறுத்தலாக இருந்தது.

மலை உச்சியை அவர்கள் அடைகிறார்கள். மலை உச்சியின் அழகில் மெய்மறந்து மாதவன் நிற்க,  கல்யாண் உச்சியிலிருந்து ஆழத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாதவன் சொன்னான். “ரஞ்சனி மட்டும் நம்ம கூட வந்திருந்தா இங்கே அழகா ஒரு கவிதை எழுதியிருப்பா”

கல்யாண் சொன்னான். “ஆமா. இந்த மலையுச்சி ரொம்ப அழகாயிருக்கில்ல.. வேணும்னா இங்கே இருந்தே நீ ரஞ்சனி கிட்ட பேசு..”

“இங்கெல்லாம் டவர் கிடைக்காதுடா” என்று மாதவன் சொல்ல ”எதுக்கும் குடுடா பார்ப்போம்” என்று கல்யாண் சொன்னான்.

தன் மொபைல் போனை எடுத்து கல்யாணிடம் கொடுத்த மாதவன் சொன்னான். “நாம நாலு பேரும் மொபைல் போனை வாங்கினதுக்கு வீட்டுல எவ்வளவு திட்டினாங்கல்ல. வந்து மூனே வருஷத்துல வாங்கறதுக்கு நாம என்ன பணக்காரங்களான்னு கேட்டாங்க..... நாம தான் பிடிவாதமா வாங்கினோம். பணம் வந்தா இந்த ஓட்டை போனைக் குடுத்துட்டு நல்ல மாடலா ஒன்னு வாங்கணும்”

கல்யாண் மாதவன் மொபைலை வாங்கிப் பார்த்துட்டு “ஆமாடா.  நீ சொன்ன மாதிரி சிக்னல் இல்லை” என்று சொல்லி விட்டு உச்சியிலிருந்து எதையோ பார்த்த மாதிரி அதிசயித்தான். “மாதவா இங்கே பார்த்தியா?”

மாதவன் அவனருகில் வந்து உச்சியில் இருந்து அவன் காண்பித்த இடத்தில் மெல்ல எட்டிப் பார்க்கிறான். திடீரென்று கல்யாண் மாதவனைப் பலமாகத் தள்ளி விட மாதவன் நிலை தடுமாறி அந்த மலைப்பள்ளத்தாக்கில் விழுகிறான். சில அடிகள் தள்ளி இருந்த சரத் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி பெருந்துக்கத்துடன்மாதவாஎன்று கூக்குரலிட்டு விம்மி அழ ஆரம்பிக்க படபடக்கும் இதயத்துடன் மேகலா அவள் தோளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். தீபக்கும், தர்ஷினியும் தங்கள் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்தார்கள். ஒருவர் கையை ஒருவர் இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் அதிர்ச்சி குறையாமல் தங்களையுமறியாமல் காட்சியில் மறுபடி லயித்தனர்.



மலையுச்சியில் ஒரு நிமிடம் கண்களை மூடி நின்ற கல்யாண் நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டே எட்டிப் பார்க்கிறான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மாதவனைக் காணவில்லை. மாதவனின் மொபைல் போனைத் தூக்கி தொலைதூரத்திற்கு எறிந்து விட்டு கல்யாண் சரத்தை திரும்பிப் பார்க்கிறான். சரத் உடல் நடுங்க ஆரம்பித்தது.

கல்யாண் சரத் அருகே போய் அமைதியாய் சொன்னான். “எல்லாம் முடிஞ்சுடுச்சு. இனி நாம எப்படி இதைக் கையாள்றோம்கிறது முக்கியம். நீ அமைதியாயிரு. ரிலேக்ஸ்... உனக்கும் ரஞ்சனிக்கும் இடையில இனி யாரும் தடையாயில்லை.... சந்தோஷப்படு... ரிலேக்ஸ்.... எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நான் பேசிக்கறேன்.... நீ அமைதியாயிரு....”

அடுத்த காட்சி. ஓட்டலுக்குள் கல்யாணும், சரத்தும் நுழைகிறார்கள். ரிசப்ஷனில் கல்யாண் கேட்டான். “மாதவன் வந்தானா?”

ரிசப்ஷன் ஆள் கேள்விக்குறியுடன் பார்க்க கல்யாண் கேட்டான். “எங்க நண்பன்..”

ரிசப்ஷன் ஆள் “இல்லை” என்று தலையசைத்தான். கல்யாணும், சரத்தும் தங்கள் அறைக்குள் நுழைகிறார்கள். முதல் வேளையாக மாதவன் தன் சூட்கேஸில் பத்திரமாக ஒரு காகிதத்தில் சுற்றி வைத்திருந்த நாகரத்தினத்தை எடுத்து தன் சூட்கேஸில் பாதுகாப்பாக வைத்து விட்டு கல்யாண் சொன்னான். “இனி இந்த பாம்பு நமக்கு பிரச்சினை தான். இதுக்கும் குட்பை சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அந்த அட்டைப் பெட்டியைத் தள்ளி விட பாம்பு தரையில் விழுந்தது.

“வா போகலாம்” என்று சரத்திடம் சொல்லி விட்டு வேகமாக வெளியே வந்த கல்யாண் “பாம்பு.... பாம்பு.... எங்க அறையில் பாம்பு”

சிறிது நேரத்தில் ஆட்கள் கம்புகளோடு அந்த அறைக்குள் புகுந்து அந்தப் பாம்பை அடித்துக் கொன்றார்கள். கடைசியில் ஒருவன் கம்பின் நுனியில் செத்த பாம்பை எடுத்துக் கொண்டு வந்து அனைவரிடமும் ”எத்தனை நீளமான பாம்பு” என்று காட்டி விட்டு வெளியே கொண்டு போனான். சரத் பிரேதக்களையுடன் நிற்க கல்யாண் அவனை அமைதிப்படுத்தினான். “இனி நிம்மதியா தூங்கலாம்.”

சரத் அறைக்குள் போன பிறகு கவலையுடன் கேட்டான். “மாதவன் எங்கேன்னு யாராவது கேட்டா?”

கல்யாண் அமைதியாகச் சொன்னான். ”ராத்திரி வரைக்கும் பார்த்துட்டு நாமளே மாதவனைக் காணோம்னு போலீஸுக்கு புகார் கொடுப்போம்.”

சரத் சந்தேகத்துடன் கேட்டான். “நம்ம மேல சந்தேகம் வராதா?”

கல்யாண் சொன்னான். “பாரு மாதவன் நம்ம நெருங்கிய நண்பன். நமக்குள்ள எந்த சண்டையுமில்லை. போலீசுக்குத் தெரியற மாதிரி அவனைக் கொன்னு நமக்கு கிடைக்கப் போகிற லாபமும் ஒன்னுமில்லை. நாம மூனு பேரும் சந்தோஷமா ஒன்னா இருக்கோம், சண்டையெல்லாம் எதுவும் போட்டுக்கலைன்னு இந்த ஓட்டல்காரனுக கூட சாட்சி சொல்வாங்க. அப்பறம் எப்படி சந்தேகம் வரும்”

சொல்லிக் கொண்டே அவன் டிவி ரிமோட்டை எடுத்து ‘ஆன்’ செய்ய டிவியில் மணாலியில் ஒரு டாக்ஸியில் நடந்த வெடிகுண்டு விபத்தைப் பற்றி செய்தி வந்து கொண்டிருந்தது. வெடிகுண்டு விபத்தில் ஒரு பிணம் முழுவதுமாகக் கருகி  இருப்பதால் யாருடையது என்று தெரியவில்லை என்றும் டாக்சி டிரைவர் அதிர்ச்சியில் எதையும் சொல்லும்  நிலையில் இல்லை என்றும் செய்தி வாசிப்பாளர் சொன்னார்.

அதைக் கேட்டு விட்டு கல்யாண் வேகமாக எழுந்தான். மாதவன் சூட்கேஸில் இருந்து அவனுடைய டிரைவிங் லைசென்ஸை எடுத்தான்.

“சரத் இதைப் பிடிடா” என்று சொல்ல சரத் அதைப் பிடித்துக் கொள்ள சிகரெட் லைட்டரால் அந்த டிரைவிங் லைசென்ஸை பாதி எரிய வைத்து அவன் புகைப்படம் இருக்கிற பகுதி தெளிவாகத் தெரிகிற மாதிரி  இருக்கையில் அணைத்தான். 

அடுத்த காட்சியில் அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்தார்கள். பாதி கருகிய டாக்சி உடைந்த கண்ணாடிகள் என்று களேபரமாகக் காட்சியளித்த இடத்தைச் சுற்றியும் கயிறு கட்டியிருந்தார்கள். இப்போதும் பலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை அவன் கண்கள் அலசின. கூட்டத்தோடு நின்று கொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாதி எரிந்திருந்த லைசென்ஸை கல்யாண் நழுவ விட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, March 2, 2023

சாணக்கியன் 46

 

கேகய ஒற்றன் உடனே தங்கள் படைக்கு இந்தத் திட்டத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவர்கள் இருக்கும் போது நதியைக் கடக்க வழியில்லை என்பதால் பொறுமையாகத் தன் மறைவிடத்திலேயே அமைதியாகக் காத்திருந்தான்.  தீவித்திடலின் இரு பக்கங்களிலும் இரு கரைகளுக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து கொண்ட பின் அந்தப் பணியாளர்கள் மீண்டும் நதியில் இறங்கி நீந்தி இக்கரைக்கு வந்தார்கள். வந்தவர்கள் மிகவும் தாழ்ந்த குரலில் அலெக்ஸாண்டரிடம் ஏதோ பேசினார்கள். பின் அவர்கள் தங்கள் குதிரைகளில் ஏறிக் கிளம்பி விட அலெக்ஸாண்டர் மட்டும் அந்தக் கரையில் சிறிது நேரம் தனியாக நின்று நதியோட்டத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.  கேகய ஒற்றன் பொறுமை இழந்து அவன் செல்வதற்காகக் காத்திருந்தான்.

 

மெல்ல மழை தூற ஆரம்பித்தது. ஆகாயத்தை நிமிர்ந்து ஒரு முறை பார்த்து விட்டு அலெக்ஸாண்டர் மெல்ல குதிரையேறினான். அவன் பார்வையில் இருந்து மறையும் வரை காத்திருந்த கேகய ஒற்றன் பின் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தான். யாராவது கவனிக்கிறார்களா என்று ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு கேகய ஒற்றன் நதியில் குதித்து மறு கரை நோக்கி நீந்த ஆரம்பித்தான். மழை வேகமாக விழ ஆரம்பித்தது.

 

திடீரென்று மழையின் ஓசையோடு சேர்ந்து ஒரு குதிரை வேகமாக  வரும் குளம்படி ஓசையும் கேட்க ஆரம்பிக்கவே திகைத்த கேகய ஒற்றன் ‘இப்போது வருவது யார்?’ என்று திரும்பிப் பார்த்தான். அலெக்ஸாண்டர் தான் குதிரையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான்.

 

கேகய ஒற்றன் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு நதிநீரில் அமுங்கி உட்புறமாக நீந்துவது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்துவதற்கு முன்பே அலெக்ஸாண்டரின் கூரிய குறுவாள் அவன் பின்னங்கழுத்தைப் பதம் பார்த்தது. ஒரு வினோதமான ஒலியெழுப்பிய கேகய ஒற்றன் வேகமாக நீந்தி மறுகரையை எட்டி விட எண்ணினான். ஆனால் அதுவே அவன் கடைசி எண்ணமாக இருந்தது. பின் அவன் நினைவை இழக்க ஆரம்பித்தான். நதி ஓட்டத்தில் ஒற்றனின் உடல் அடித்துச் செல்லப்படுவதை, குதிரையின் மீதமர்ந்தபடியே பார்த்துக் கொண்டு இருந்த அலெக்ஸாண்டர் பின் திருப்தியுடன்  குதிரையைத் திருப்பினான்.

 

கட்டுமரப் பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே தாங்கள் கண்காணிக்கப்படுவதை உள்ளுணர்வால் உணர்ந்திருந்த அலெக்ஸாண்டர் நதிக்கரைக்கு வரும் போதும் அந்த உணர்வை இழக்கவில்லை. தான் உணர்ந்ததை வெளிப்படுத்திக் கொள்ளாத அலெக்ஸாண்டர் முதலில் வந்த வேலையை முடித்துக் கொண்டு, பணியாளர்களை அனுப்பி விட்டு அவர்களும் அறியாதபடி ஒற்றன் கதையை முடிக்க அப்போதே முடிவு செய்திருந்தான். ஒற்றன் கேகய நாட்டுக்காரனாக இருந்தால் அவர்கள் நடவடிக்கைகளை வைத்து உண்மையை யூகித்துக் கொள்வான் என்றும் அவர்கள் நகர்ந்தவுடன் அவன் செய்யும் முதல் வேலை மறு கரையை அடைந்து அவன் நாட்டவரை எச்சரிப்பதாகத் தானிருக்கும் என்றும் அலெக்ஸாண்டர் அனுமானித்திருந்தான்.  அவன் அனுமானத்தை மெய்ப்பிப்பது போலவே கேகய ஒற்றனும் நடந்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டான்…

 

ந்திரதத்துக்கு தாங்கள் அறியாமல் ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது என்ற உணர்வு தொடர்ந்து மனதில் நெருடிக் கொண்டேயிருந்தது. ஆனால் நடப்பது என்னவாக இருக்கும் என்பதை அவரால் எத்தனை முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. எதிர்க்கரையில் இருக்கும் படைகளை அவர் மிகவும் கூர்ந்து பார்த்தார். முதல் நாள் அணிவகுத்து நின்ற அளவிலேயே எதுவும் மாறாமல் அப்படியே தான் படைகள் நிற்கின்றன. ஆம்பி குமாரன், அலெக்ஸாண்டர், சசிகுப்தன், யவனப்படைத் தளபதிகள், காந்தாரப் படைத்தளபதிகள் அனைவரும் அவரவர் நிற்கும் இடங்களிலேயே தான் நிற்கிறார்கள். ஆரம்ப நாளில் இருந்து அடிக்கடி முகாம் போய் சில நாழிகைகள் கழித்து வரும் பழக்கமும் தினமும் தொடர்கிறது.

 

முகாம்களுக்குத் திரும்பிப் போய் இளைப்பாறுவார்களோ, இல்லை கலந்தாலோசனை செய்வார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் திரும்பி வரும் போதும் எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று  இந்திரதத் கூர்ந்து கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போன அத்தனை பேரும் திரும்பித் தான் வருகிறார்கள். தங்கள் படைகளின் முன்னிலையில் முன்பு நின்ற இடத்திலே தான் நிற்கிறார்கள். எதுவும் செய்யத் தீர்மானித்ததாய்த் தெரியவில்லை.

 

அவர்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள்? இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே நிற்பார்கள்? கேகயப்படை பொறுமை இழந்து நதிக்கரையைக் கடந்து அவர்களுடன் போருக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா, இல்லை நதியில் வெள்ள ஓட்டம் குறைந்த பின் கடந்து போரிடலாம் என்று காத்திருக்கிறார்களா என்பது புரியவில்லை.

 

இது அவர்களிடம் இருக்கும் குழப்பமா, இல்லை தங்கள் அறிவுக்கெட்டாத சூழ்ச்சி எதாவது இதிலிருக்கிறதா என்பது இந்திரதத்துக்குப் புரியவில்லை. நண்பர் விஷ்ணுகுப்தர் சொல்லி இருந்ததைப் பார்த்தால் அலெக்ஸாண்டரிடம் குழப்பம் எதுவும் இருக்க வழியில்லை. அப்படியானால் நமக்குத் தான் எதுவோ புரியவில்லை என்று அவருக்குத் தோன்றியது. அவர் தன் மனதில் எழுந்த யோசனைகளை புருஷோத்தமனிடமும், சேனாதிபதியிடமும் வெளிப்படையாகவே சொன்னார்.

 

புருஷோத்தமன் வாய் விட்டுச் சிரித்தார். “இந்திரதத், உன் நண்பன் விஷ்ணுகுப்தன் உன்னிடம் அளவுக்கு அதிகமாக அலெக்ஸாண்டரை உயர்த்திச் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. அதனால் தான் நீ தேவையில்லாமல் குழப்பத்தில் இருக்கிறாய். நம் எதிரிகள் நம் முன்னால் தான் நிற்கிறார்கள். அவர்கள் அணிவகுத்து வந்த முதல் நாளிலிருந்து அவர்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் சிறிது நகர்ந்தாலும் நம் பார்வைக்கு அது தப்பி விடாது. அப்படி இருக்கையில் நீ ஏன் பயப்படுகிறாய் என்று தெரியவில்லை”  

 

’எதையும் தேவையில்லாமல் உயர்த்திச் சொல்வதோ, தாழ்த்திச் சொல்வதோ என் நண்பனிடம் என்றுமே கிடையாது.’ என்று இந்திரதத் மனதில் நினைத்துக் கொண்டாலும் அதை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. விஷ்ணுகுப்தர் இங்கே இருந்திருந்தால் அவரிடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யூகித்துச் சொல்லச் சொல்லியிருக்கலாம். அவர் அறிவிற்கு எதாவது புலப்பட்டிருக்கும்.

 

கேகய பட்டத்து இளவரசன் தன் குதிரையை முன்னோக்கிச் செலுத்தி அவர்கள் அருகில் வந்தான். வலது பின்புறத்தில் உள்ள படைப்பிரிவிற்குத் தலைமை ஏற்றிருக்கும் அவனுக்கு நின்று நின்று சலித்து விட்டது. “நம் எதிரிகள் வேடிக்கை பார்ப்பதை எப்போது நிறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லையே அமைச்சரே”

 

கேகய சேனாதிபதி வெடிச்சிரிப்பு சிரித்தான். “அதைப் பற்றித் தான் நாங்களும் பேசிக் கொண்டிருக்கிறோம்… ஆம்பி குமாரனிடம் சேர்ந்த நேரம் அலெக்ஸாண்டருக்கும் புத்தி பேதலித்து விட்டது போலிருக்கிறது…”

 

கேகய பட்டத்து இளவரசன் சொன்னான். “ஆனால் தினமும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது தனித்துப் போய் ஆலோசனை நடத்துகிறார்களே. இன்னுமா அவர்கள் ஒரு தீர்மானத்தை எட்டவில்லை”

 

புருஷோத்தமன் சொன்னார். “வேடிக்கை பார்ப்பது என்பது தான் அவர்களுடைய தீர்மானமோ என்னவோ. வழக்கமாக அவர்கள் இந்த நேரத்தில் தான் ஆலோசிக்கப் போவார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் போய் விடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வருகிறேன்…”

 

சொல்லி விட்டு புருஷோத்தமன் தன்னுடைய கூடாரத்தை நோக்கிப் போக இந்திரதத் எதிர்க்கரையைக் கூர்ந்து பார்த்தார். புருஷோத்தமன் சொன்னது போல ஆம்பி குமாரனும், அலெக்ஸாண்டரும் ஆலோசனைக்கோ இளைப்பாறவோ இன்னும் போகவில்லை. ஏதோ ஒன்றுக்காக அவர்கள் தயார்நிலையில் காத்துக் கொண்டிருப்பதாக இந்திரதத்துக்குத் தோன்றியது. அந்த ஏதோ ஒன்று என்னவென்று விளங்காததே அவருக்குச் சித்திரவதையாக இருந்தது.

 

அவர் இளவரசனிடமும், சேனாதிபதியிடமும் சொன்னார். ”அவர்கள் எப்போதும் போல் அல்லாமல் எதற்கோ தயாராய் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அதற்குத் தகுந்தாற் போல அவர்கள் இன்றைக்கு முகாம்களுக்குப் போகவில்லை. படைவீரர்களிடமும் தயாராக இருக்கும் துடிப்பு தெரிகிறது…”

 

சேனாதிபதியும் கூர்ந்து பார்த்து விட்டு மெல்லச் சொன்னான். “உண்மை தான்..…”


திடீரென்று வலது பக்க விளிம்புப் படை வீரர்கள் சிலர் கத்தினார்கள். “எதிரிகள் …. எதிரிகள்…..”

 

அதிர்ச்சியுடன் இந்திரதத்தும் சேனாதிபதியும், இளவரசனும் வலதுபக்கம் திரும்பிப் பார்த்த போது தூரத்தில் அலெக்ஸாண்டரும் அவனது படையும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தது போல எதிர்க்கரையில் வேக வேகமாக கரையைக் கடக்க ஆயத்தங்களைச் செய்வது தெரிந்தது.

 

எதிர்க்கரையில் அலெக்ஸாண்டர் ஒருவன் மட்டும் பின்னுக்குச் செல்ல மற்ற படைத்தலைவர்கள் முன்னேறுவது தெரிந்தது. எதிர்க்கரையில் இருப்பவன் அலெக்ஸாண்டர் அல்ல. வலது பக்கமாக தாக்க வந்து கொண்டிருப்பவன் தான் அலெக்ஸாண்டர் என்ற உண்மை மெல்லப் புலனாக, இந்திரதத் கத்தினார். “இளவரசே. நீங்கள் வலதுபக்கமிருந்து வரும் எதிரிகளைத் தாக்க உங்கள் படையுடன் செல்லுங்கள்….”

 

கேகய பட்டத்து  இளவரசன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து விரைந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்