ராக்ஷசர் நடந்த சம்பவங்களால் ஆரம்பத்தில் பெருந்துக்கத்தில் மூழ்கினார் என்றாலும் துக்கத்திலேயே தங்கியிருந்து எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து அடுத்து ஆக வேண்டிய விஷயங்களை யோசிக்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் நடந்ததை எல்லாம் ஜீரணிப்பது அவருக்குக் கஷ்டமாகத் தானிருந்தது. இளவரசர்களும், சேனாதிபதியும் போர்க்களத்தில் இறக்காமல் மாளிகைக்குள்ளே மரணமடைந்திருந்த விதமும், நள்ளிரவிலேயே எதிரிப்படைகள் உள்ளே நுழைந்த விதமும் குறித்து விரிவாக அவர் அறிய நேர்ந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் சரியாகவே ஊகிக்க முடிந்தது. ஜீவசித்தியின் விசுவாசத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் அவர் எதிரிகளிடம் சிக்காமல் தப்பிக்க முடிந்ததும், தற்போது அவருடைய நண்பர் சந்தன் தாஸின் வீட்டில் மறைந்திருக்க முடிந்ததும் மட்டுமே சமீப காலத்தில் நடந்த ஆறுதல் அளிக்கும் விஷயங்கள்.
தற்போது அவர் பாதுகாப்பாக இருந்தாலும்
கூட அவர் தொடர்ந்து கேள்விப்படும் விஷயங்கள் அவருக்கு ஆத்திரமூட்டுபவையாக இருக்கின்றன. அரசர் தனநந்தன்
உயிரோடு மகதத்திலிருந்து செல்லும் அனுமதிக்காக மகளை எதிரி சந்திரகுப்தனுக்குத் திருமணம்
செய்து தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது அவருக்கு ஜீரணிக்க முடியாததாய் இருந்தது. தனநந்தனும்
சரி, துர்தராவும் சரி நிர்ப்பந்திக்கப்படாமல் அதற்குச் சம்மதித்திருக்க
வழியே இல்லை என்று அவர் உறுதியாக நம்பினார். இனியும்
ஏதாவது செய்யாமல் இருந்தால் பின் எப்போதுமே எதுவும் செய்து பலனில்லை என்று புரிந்ததால்
அதிரடியாக என்ன செய்ய முடியும் என்று யோசித்து சில முடிவுகளை எட்டியிருந்தார்...
அவர் ஒளிந்திருந்த அறையின் கதவு இரு
முறை தட்டப்பட்டு ஒரு கணம் தாமதித்து பின் மூன்று முறை தட்டப்பட்டது. காவலர்களின்
தலைவனான ஜீவசித்தி ஏதோ தகவலுடன் வந்திருக்கிறான். அவர் வேகமாக
எழுந்து கதவைத் திறந்தார்.
ஜீவசித்தி உள்ளே நுழைந்து வேகமாக கதவைத்
தாளிட்டான்.
“என்ன செய்தி
ஜீவசித்தி”
“அரசர் வனப்பிரஸ்தம் சென்று விட்டார் பிரபு” என்று ஜீவசித்தி தாழ்ந்த குரலில் சொன்னான்.
ராக்ஷசர் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டார். “அப்படியானால்
இளவரசியின் திருமணம் முடிந்து விட்டதா?”
“இல்லை பிரபு. இன்னும் பதினைந்து நாட்களுக்கு விவாக முகூர்த்தம்
இல்லாததால் திருமணம் அதன் பின்னரே நடக்கும் போல் தெரிகிறது. திருமணம்
முடியும் வரை இங்கிருக்க அரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல் தெரிகிறது. பட்டத்தரசி மட்டும் திருமணம் முடியும் வரை இங்கிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அரசரும், இரண்டாவது
அரசியாரும் வனப்பிரஸ்தம் போய் விட்டார்கள்.”
வேதனையுடன் கண்களை மூடி ஒரு கணம் யோசித்து விட்டு ராக்ஷசர் கேட்டார். “வனத்தில் நாம் மன்னரைச் சந்தித்துப் பேசுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?”
“மன்னருடன் அனுப்பப்பட்டுள்ள வீரர்களில் இருவரும், பணியாட்களில்
இருவரும் சாணக்கியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்கள் பிரபு. அவர்கள்
மூலம் உடனடியாக எல்லாவற்றையும் சாணக்கியர் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது”
பெருமூச்சு விட்டபடி ராக்ஷசர் கேட்டார். “வேறென்ன
செய்தி?”
“தங்களைச் சந்தித்துப் பேச ஹிமவாதகூட அரசர் பர்வதராஜன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்”
ராக்ஷசர் சந்தேகத்துடன் ஜீவசித்தியைப் பார்த்தார். ”நம் எதிரியுடன் கூட்டு
சேர்ந்து படையெடுத்து வந்த பர்வதராஜனுடைய இந்தத் திடீர் விருப்பத்துக்கு என்ன காரணம்?”
ஜீவசித்தி சொன்னான்.
“அவருக்கும் சாணக்கியருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்திருப்பதாகத்
தெரிகிறது பிரபு. பர்வதராஜனைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக
சாணக்கியர் முடிவுகள் எடுப்பதை பர்வதராஜன் விரும்பவில்லை என்று தெரிகிறது. இளவரசிக்கும், சந்திரகுப்தனுக்கும் இடையே நடக்கவிருக்கும்
திருமணமும் அவரை அதிருப்தியடைய வைத்துள்ளது என்றும் தெரிகிறது. அவர் தன் மகன் மலைகேதுவுக்கு இளவரசியை மணமுடிக்கும் உத்தேசத்தில் முன்பு இருந்திருக்கிறார்
போலத் தெரிகிறது. நமக்கு அவர்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வசதியாக
நம் நம்பிக்கைக்குரிய ஒருவனைப் பணியாளாக பர்வதராஜன் தங்கியிருக்கும் மாளிகையில் சேர்த்திருக்கிறேன்.
அவன் தங்கள் வீட்டில் பணிபுரிந்தவன் என்று சொல்லி, தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று அவர்களை நம்பவும் வைத்திருக்கிறான்.
அவன் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ள தற்போது பர்வதராஜன் முயற்சி செய்கிறார்…”
ராக்ஷசர் சொன்னார். ”பர்வதராஜன் நம்பத் தகுந்த ஆள் அல்லவே.
சாணக்கியருடன் சேர்ந்து நம்மை வென்றவர் இப்போது அவரை எதிர்க்கிறார் என்றால்,
நம்முடன் சேர்ந்த பின் நம்மை எதிர்க்கவும் துணிய மாட்டார் என்று என்ன
நிச்சயம்?”
ஜீவசித்தி தலையசைத்தான். “தாங்கள் சொல்வது சரியே. ஆனால் எதிரிக்கு எதிரியாகிறவர்களை நாம் பயன்படுத்துவது இலாபகரமானது என்று தாங்கள்
எண்ணி அவரைத் தொடர்பு கொண்டு அவர் மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ள நினைக்கலாம் என்று
எனக்குத் தோன்றியதால் தங்களுக்குத் தெரிவிக்க வந்தேன் பிரபு.”
ராக்ஷசருக்கு ஜீவசித்தி நினைத்ததிலும் தவறில்லை என்று தோன்றியது. இப்போது எதிரணியில் எழுந்துள்ள இந்த விரிசலைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்
கொண்டால் அவர் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த திட்டத்தை நிறைவேற்றுவதும், அதன் பின் எழும் பிரச்னைகளைத் சமாளிப்பதும் எளிதாக இருக்கும். பர்வதராஜனால் பெரிதாகப் பயன் இல்லை என்று தெரிந்தாலும் நஷ்டமில்லை.
அலட்சியப்படுத்தி அனுப்பி விட்டு, பின் வேறெதாவது
முயற்சி செய்து பார்க்கலாம்….
ராக்ஷசர் மெல்லக் கேட்டார். “ஒருவேளை நானிருக்கும் இடத்தை
அறிய வேண்டி சாணக்கியர் செய்யும் சூழ்ச்சியாக இது இருந்தால்…?”
“அந்தப் பயம் எனக்குமிருக்கிறது பிரபு. நமக்குப் பாதுகாப்பான
வேறொரு மறைவிடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்வோம். ஏதாவது சதி வலையாக
அவர்கள் உத்தேசம் இருந்தால் அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்கும் வசதிகளை முன்கூட்டியே
செய்து கொண்ட பிறகு சந்திப்பை உறுதிப்படுத்துவோம்.”
ராக்ஷசர் சம்மதித்தார்.
பர்வதராஜனும் மலைகேதுவும் உறங்காமல் விழித்திருந்தார்கள். சுசித்தார்த்தக்
பர்வதராஜன் ஒருவனாகத் தான் வரவேண்டும் என்றும் மலைகேதுவுக்குக் கூட உடன் வரும் அனுமதியில்லை
என்றும் தெரிவித்து இருந்தான். பர்வதராஜன்
அதற்குச் சம்மதித்து நள்ளிரவு கழியட்டும் என்று காத்திருந்தான். மலைகேதுவுக்கும் உறக்கம்
வரவில்லை. அதனால் அவனும் விழித்திருந்தான். அவனுக்கு இதில் ஏதாவது சதியிருக்கலாம் என்று உள்ளுணர்வு ஆரம்பத்திலிருந்தே
எச்சரித்துக் கொண்டே இருந்தது. அதை அவன் தந்தையிடம் கவலையுடன்
தெரிவித்தான்.
“சதி யாருடையதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய் மகனே?” என்று பர்வதராஜன் கேட்டான். மலைகேதுவுக்கு அதில் தெளிவு இல்லாததால் சொல்லத் தெரியவில்லை.
பர்வதராஜன் சொன்னான்.
“நமக்கு எதிராக சதி செய்ய முடிந்தவர்கள் இருவர். ஒருவர் சாணக்கியர், இன்னொருவர் ராக்ஷசர். சாணக்கியர் இதில் சதி செய்து பெறப்போவது எதுவுமில்லை.
அவருக்கு ராக்ஷசர் இருக்குமிடம் தெரிந்தால் உடனே
கைது செய்து சிறைப்படுத்தி விடுவார். அப்படியே என்னைச் சோதிக்க
நினைத்து சாணக்கியர் இந்த நாடகத்தை அரங்கேற்றினாலும், அல்லது
இதில் என்னை அவர் கண்டுபிடித்தாலும் நான் ராக்ஷசரைப் பிடித்துக்
கொடுக்கும் உத்தேசத்தில் தான் இப்படி நடித்தேன் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன்.
ராக்ஷசருக்கு முக்கிய எதிரிகள் சாணக்கியரும்,
சந்திரகுப்தனும் தான். நான் ஒரு பொருட்டே அல்ல.
என்னைத் தீர்த்துக் கட்டினால் கூட அதை வைத்து அவர் சாதிக்கப் போவது எதுவுமில்லை. அதனால் சதி செய்வதானாலும் அந்த இருவருக்கெதிராகத்
தான் சதி செய்வாரேயொழிய என்னை வீழ்த்த சதி செய்யும் முயற்சியில் ஈடுபட மாட்டார்.
அதனால் எந்த வகையிலும் பயப்பட ஏதுமில்லை மகனே. இதில் நாம் இழப்பதும் ஏதுமில்லை.”
மலைகேது தந்தையின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தான்.
நள்ளிரவு கழிந்ததும் சுசித்தார்த்தக் பர்வதராஜனை அழைத்துச் சென்றான். அவன் பர்வதராஜனை
காவல் வீரர்கள் இருக்காத குறுகிய தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு போனான். இருவரும்
போர்வையை உடலில் சுற்றிக் கொண்டு, முகத்தையும் பாதி மறைத்துக் கொண்டு போனார்கள். ஊரே உறங்கிக்
கொண்டிருந்ததால் அவர்கள் யார் கண்ணிலும் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு பெரிய
வீட்டை அடைந்ததும் அந்த வீட்டைச் சுற்றிச் சென்று பின் வாசற்கதவு வழியே சுசித்தார்த்தக் பர்வதராஜனை அழைத்துக்
கொண்டு போனான். உள்ளே ஒரு சிறிய அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு இருக்கை காலியாக இருந்தது. அது மட்டும்
தெளிவாகத் தெரிந்தது. மற்ற இடங்களில் இருள் மண்டிக் கிடந்தது. சுசித்தார்த்தக்
பர்வதராஜனை அந்த இருக்கையில் அமர வைத்து விட்டு “நான் வெளியே
காத்திருக்கிறேன் அரசே” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
(தொடரும்)
என்.கணேசன்
No comments:
Post a Comment