என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 10, 2025

சாணக்கியன் 156

 

ன்றிரவு சேனாதிபதி பத்ரசால் சுதானுவைச் சந்தித்தான்.  “என்ன விஷயம் இளவரசே?”

 

பத்ரசாலின் கேள்விக்கு உடனடியாகப் பதில் எதுவும் சொல்லாமல் சுதானு முதலில் தனதறைக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு வந்த பின் தாழ்ந்த குரலில் சொன்னான். “சேனாதிபதி மகான் நமக்குச் சொன்ன காலம் நெருங்கி விட்டது. இந்தச் சமயத்தை நாம் நழுவ விட்டால் பின் எப்போதும் நமக்குச் சாதகமான சமயம் வரப் போவதில்லை

 

பத்ரசால் முதலில் விழித்தான். பின்பு தான் அவனுக்கு சுதானு மகான் சொன்னதாகச் சொன்ன நாள் வளர்பிறை ஏகாதசி என்பது நினைவுக்கு வந்தது. சேனாதிபதி சந்தேகத்துடன் சொன்னான். “ஆனால் அந்த நாளோடு எதிரிகள் முற்றுகையிடுவதையும் சேர்த்து தான் மகான் சொன்னதாகச் சொன்னீர்கள். ஆனால் அந்த மடலில் திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு நாள் மாற்றப்பட்டதாக உள்ளது. இரண்டும் ஒத்துப் போகவில்லையே.”

 

சுதானு உறுதியாகச் சொன்னான். “மனிதர்கள் போடும் திட்டங்கள் அப்படியே நடந்து விடுவதில்லை சேனாதிபதி. இறைவன் போட்டிருக்கும் கணக்கே வேறாக இருக்கும். அதன்படியே தான் நடக்கப் போகிறது. இறைவனின் சித்தத்தை மகான்கள் அறிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் என்பதால் நான் மகான் சொன்னதையே நம்புகிறேன். வளர்பிறை ஏகாதசி நாள் தான் நாம் செயல்பட வேண்டிய நாள்.”

 

பத்ரசால் மெல்லக் கேட்டான். “எப்படிச் செயல்படுவது என்பதை நீங்கள் முடிவெடுத்து விட்டீர்களா இளவரசே?”

 

சுதானு சொன்னான்.  ”மூன்று திட்டங்களை யோசித்து வைத்திருக்கிறேன். ஒன்று சரிப்பட்டு வராவிட்டால் இன்னொன்று, அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் அடுத்தது. திட்டம் எதுவாக இருந்தாலும் செயல்படுத்தப் போவது அன்று தான்

 

பத்ரசால் மனதில் ஒரு நெருடலை உணர்ந்தான். சிறு தவறு நடந்து விட்டாலும் விளைவுகள் சிறிதாக இருந்துவிடப் போவதில்லை. எல்லாம் ஆபத்திலேயே முடியக்கூடியவை. சுதானுவின் தவறுகள் சுதானுவுக்கு மட்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல. கூட்டு சேரும் சேனாதிபதிக்குமே ஆபத்தை விளைவிக்கக் கூடியவை....    

 

அவன் முகபாவனையிலிருந்து அவன் எச்சரிக்கையுணர்வை உணர்ந்த சுதானு சொன்னான். ”முடிவு நமக்குச் சாதகமாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பது மகான் வாக்கிலிருந்து உறுதியாகி விட்டது. பின் நாம் தயங்கவோ, பயப்படவோ என்ன இருக்கிறது சேனாதிபதி?”

 

பத்ரசாலுக்கு அவன் கேட்டதும் சரியாகத் தோன்றியது. சுதானுவை அந்த மகான் முதல் முதலாகச் சந்தித்துப் பேசிய போது போர்ச் சூழல் எதுவும் உருவாகியிருக்கவில்லை. ஆனாலும் கூட அவர் முற்றுகை பற்றி அன்றே சொல்லியிருக்கிறார். நாள் ஏகாதசியா, திரையோதசியா, பௌர்ணமியா என்பது இப்போது தெளிவில்லாமல் இருந்தாலும் முற்றுகைக்கான சூழல் உருவாகி விட்டிருப்பதென்னவோ நிஜம். இதே போல் அவர் சொன்ன மற்றவையும் நடக்கும் என எண்ணி பத்ரசால் அமைதியடைந்தான்.

 

சுதானுவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் தாரிணி மெல்ல கணவனிடம் மகனுக்கு முடிசூடும் பேச்செடுத்தாள். எடுத்த எடுப்பில் அதைச் சொல்லப் போனால் தனநந்தன் கோபமடைவான் என்று தனநந்தனின் ஆரோக்கியம் குறித்து கவலை தெரிவித்தபடி பேச்சை ஆரம்பித்தாள்.

 

இராஜ்ஜிய பாரம் வெளிப்பார்வைக்கு பொறாமைக்குரியது என்றாலும் சுமப்பவர்களுக்குத் தான் அது முள்கிரீடம் என்று தெரியும். நீங்கள் வர வர அதிகமாக அமைதியிழப்பதைப் பார்க்கையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இனியாவது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். வனப்பிரஸ்தம் போகும் காலம் நமக்கு நெருங்கி விட்டது என்றே நான் நினைக்கிறேன்.”

 

தனநந்தன் சொன்னான். “ராஜ்ஜியத்தில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் குறையட்டும் நானும் அதைத் தான் சிறிது காலமாக நினைக்க ஆரம்பித்திருக்கிறேன்.”

 

அலைகள் ஓய்வதெப்போது?”

 

தனநந்தன் ஒன்றும் சொல்லவில்லை. மெல்ல அவள் சொன்னாள். “மூன்று மாதங்களுக்கு முன் சுதானுவுடன் மகாவிஷ்ணு கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த ஒரு மகான் சுதானுவுக்கு முடிசூடும் யோகம் இருப்பதாகச் சொன்னார்

 

தனநந்தன் ஏளனமாகச் சிரித்தான். “அரசனின் மகனுக்கு முடிசூடும் யோகம் இருப்பதாகச் சொல்ல ஒரு மகான் வேண்டுமா? என்ன பைத்தியக்காரத்தனம்?”

 

அவர் அது சமீபத்திலேயே இருப்பதாகச் சொன்னார். அந்த சமயத்தில் தான் உங்களுக்கும் ராஜ்ஜியப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு தேவை என்பதும் எனக்கும் தோன்றியது

 

தனநந்தன் சொன்னான். “அப்படியே ராஜ்ஜிய பாரத்தை பிள்ளை தலையில் இறக்கி வைப்பதாக இருந்தாலும் மூத்தவன் சுகேஷ் இருக்கையில் இளையவனுக்கு இப்போதே எப்படி அந்தப் பொறுப்பைத் தரமுடியும்?”

 

தாரிணி சொன்னாள். “மரபு என்று பார்த்தால் நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் தகுதி என்று பார்த்தால் சுதானு மேலானவன் அல்லவா?”

 

தனநந்தன் எரிச்சலுடன் சொன்னான். “போர் புரிய படைகளும், படைத்தலைவர்களும் இருக்கிறார்கள். நிர்வாகம் செய்ய ராக்ஷசரும், மற்ற அமைச்சர்கள், அதிகாரிகளும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தகுதி பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது? இப்போது நானே அரசனாக எதில் சிரமப்படுகிறேன்? அதனால் பைத்தியக்காரத்தனமான இந்தப் பேச்சை விடு. காலப்போக்கில் சுதானுவுக்கும் ஒரு பகுதியைத் தந்து முடிசூடுவோம். பொறு.”

 

அதற்கு மேல் பேசினால் கோபத்தில் தனநந்தன் கத்த ஆரம்பித்து விடுவான் என்று புரிந்து கொண்ட தாரிணி மௌனமானாள். பக்கத்து அறையிலிருந்து இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு இருந்த சுதானு கோபத்தைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டான். தனநந்தன் சொல்லும் காலப்போக்கில் சுதானு கிழவனான பின் தான் முடிசூட முடியும். நேர்வழி உதவாது என்று சுதானுவுக்குப் புரிந்து விட்டது.

 

ர்வதராஜனுக்கும் மலைகேதுவுக்கும் தொடர்ந்து சில காலம் சந்திரகுப்தனுடனும், சாணக்கியருடனும் இருந்தும் கூட அவர்களைச் சில சமயங்களில் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. திடீர் திடீரென்று புதிராக அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களது அந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணத்தை இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதில்லை என்பது அவர்களுக்குக் கூடுதல் வியப்பு. ஆனாலும் அவர்கள் பேசிக் கொண்டு தெரிந்து கொள்வதில்லை. சில சமயங்களில் முன்பே பேசிக் கொண்டிருந்திருக்கலாம் என்றாலும் பல சமயங்களில் ஒருவர் செயலை வைத்து மற்றவர் உள்ளர்த்தத்தை யூகித்துக் கொள்ளுமளவு அவர்களுக்குள் புரிதல் இருந்தது இவர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே போல் தான் பேசிக் கொள்வதிலும் சுருக்கமாக ஏதாவது ஓரிரு வார்த்தைகளைச் சொல்லி மற்றவர் முழுவதுமாகப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பதும் அதிகம்.

 

ஒரு நாள் சாணக்கியர்எதிரிக்குத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய் சந்திரகுப்தாஎன்று சொல்உடனே சந்திரகுப்தன் எழுந்து வெளியே சென்று படைத்தலைவர்களிடம் ஏதோ கட்டளையிட்டு விட்டு உள்ளே வந்து அவனுடைய தனிக்காவலனிடம் ஏதோ உத்தரவு பிறப்பித்து விட்டு வருகிறான்.

 

பர்வதராஜனுக்குத் தலைகால் புரியவில்லை. “எதிரிக்கு என்ன தகவல் அனுப்புகிறீர்கள்? யார் மூலம்? புதிய திட்டம் ஏதாவது இருக்கிறதா ஆச்சாரியரே?” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டான்.

 

சாணக்கியர் விளக்கமாகவே சொன்னார். “நாம் முகாமிட்டிருக்கும் இடத்திற்கு சிறிது தூரத்தில் எதிரியின் ஒற்றர்கள் இருவர் மிக ரகசியமாய் பதுங்கி அடிக்கடி வந்து நம்மைக் கவனித்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்....”

 

பர்வதராஜன் சொன்னான். “உடனே அவர்களைப் பிடித்துக் கொன்று விட வேண்டியது தானே.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “அவர்களைக் கொன்று விட்டால் அவர்களுக்குப் பதிலாக வேறிருவர் வருவார்கள். ராக்ஷசர் நம்மை வேவு பார்க்க ஏராளமான ஒற்றர்களை அனுப்பி வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் மரங்களின் பின்னாலும், பாறைகளிலும் பின்னாலும், வணிகர்கள், யாத்திரீகர்கள் வேடத்திலும் அவர்களை நம்மால் பார்க்க முடிகிறது

 

அப்படியாக என்ன செய்யப் போகிறீர்கள்?”

 

அவர்கள் காணும்படியாக சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறதுஎன்று சந்திரகுப்தன் சொன்னான். பர்வதராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்தில் இரண்டு ஆட்கள் வந்தார்கள். ஒருவன் இளைஞன். அவன்  திடகாத்திரமாக இருந்தான். இன்னொருவர் நடுத்தர வயதைத் தாண்டியவர். ஒல்லியாக இருந்தார். குடுமி வைத்திருந்தார்.

 

சந்திரகுப்தன் தன்னுடைய ஆபரணங்களையும், உடைகளையும் அந்த இளைஞனுக்குத் தர, அந்த முதியவருக்கு சாணக்கியர் தன் உடைகளைத் தந்தார். இருவரும் மறைவிடம் போய் சிறிது நேரத்தில் அவற்றை அணிந்து வந்தார்கள்.  திடீரென்று பார்க்கையில் இளைஞன் சந்திரகுப்தனாகவே தெரிந்தான். முதியவர் சாணக்கியராகவே தெரிந்தார்.  அருகில் வந்து உற்றுப் பார்த்தால் ஒழிய வித்தியாசம் எதுவும் தெரியாது. அவர்கள் இருவரும் வெளியேறி விட்டார்கள்.

 

சந்திரகுப்தனும் சாணக்கியரும் உள்ளே சென்று உடைகள் மாற்றிக் கொண்டு உருமாறி வந்தார்கள்.  சந்திரகுப்தன் ஒரு சாதாரண வீரனாகவும், சாணக்கியர் வைத்தியராகவும் தெரிந்தார்கள்.

 

பர்வதராஜன் கேட்டான். “இது என்ன கோலம்?”

 

சாணக்கியர் சொன்னார். “இப்போது நம் படைகள் பெரிய படை ஒன்றும், சிறிய படை ஒன்றுமாக இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விட்டன பர்வதராஜனே. அவர்களைப் பொருத்த வரை பெரிய படை சந்திரகுப்தன் தலைமையில் சிராவஸ்தியை நோக்கிச் செல்லப் போகிறது. சிறிய படை உன் தலைமையில் பாடலிபுத்திரத்தை நோக்கிச் செல்லப் போகிறது.”

 

உற்சாக முழக்கம் வெளியே கேட்டது. பர்வதராஜன் திகைத்தவனாக வெளியே சென்று பார்த்தான். போலி சந்திரகுப்தன் படையினரைப் பார்த்து கையாட்டிய படியே ரதத்தில் ஏறினான்அவனைத் தொடர்ந்து போலி சாணக்கியரும் அதில் ஏறினார். பெரிய படை கிளம்பி விட்டது.

 

(தொடரும்)

என்.கணேசன்  




என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, April 9, 2025

முந்தைய சிந்தனைகள் 123

 சிறிது சிந்திக்கலாமே!

(என்னுடைய நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்!)












Monday, April 7, 2025

யோகி 97

 


ஷ்ரவன் ஹைத்ராபாத் வந்து விட்டான். வீட்டுக்கு வந்தவுடனேயே ஸ்ரேயாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லலாமா என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அம்மா அதிகம் உணர்ச்சிவசப்படுபவள். மகன், மருமகளைப் பற்றி அதிகமாகக் கனவு காண ஆரம்பித்து விடுவாள். கற்பனைக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விடுவாள். நிஜங்கள் எப்படி இருக்கப் போகின்றனவோ யாருக்குத் தெரியும். கோட்டைகள் கட்டி கடைசியில் அவை இடியும் போது கஷ்டப்படுவதை விட, கோட்டைகள் இல்லாத வெற்றிடமே மேல்.  அதனால் யோகாலயம் போய் திரும்பி வந்த பின் வீட்டில் சொல்வது என்று அவன் முடிவெடுத்தான்.

 

ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவனால் ஸ்ரேயாவிடம் தினமும் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் தனதறையில் இருந்து கொண்டு தான் பேசினான். மிகத் தாழ்ந்த குரலில் தான் பேசினான். அவனுடைய வேலையில் இரகசியம் காப்பதற்கு அது மிக அவசியம் என்பதால், சில சமயங்களில் அவன் பேசும் போது அவனுக்கு நான்கடி தள்ளி இருப்பவனுக்குக் கூட அவன் என்ன பேசுகிறான் என்று கேட்காது.  அதனால் அவன் அம்மாவிற்கு அவனறைக்கு வரும் போது கூட அவன் யாரிடம், என்ன பேசுகிறான் என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.  ஆனாலும் அம்மா முதல் தடவை அவன் அறைக்கு வரும் போதே  கேட்டு விட்டாள். “யாருடா அந்தப் பொண்ணு?”

 

எந்தப் பொண்ணு?”

 

நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிகிட்டிருந்தியே அந்தப் பொண்ணு

 

நான் பேசிகிட்டிருந்தது பொண்ணு கிட்டன்னு யாரு சொன்னா?”

 

நான் சொல்றேன்.”

 

எதை வெச்சி அப்படி சொல்றே?”

 

எல்லாம் உன் முகத்தை வெச்சு தான். பெத்தவளுக்குத் தெரியாதாடா, பிள்ளையைப் பற்றி. உன் முகத்துல இத்தனை பிரகாசத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையேடா?”

 

ஷ்ரவன் சிரித்து விட்டான். வார்த்தைகள் கேட்கக்கூடாது என்று கவனமாய் இருந்தாலும் முகபாவனையில் கோட்டை விட்டு விட்டோமே என்று நினைத்தான். ஆபத்தான இடங்களில் எப்போதும் காட்டும் எச்சரிக்கையை இங்கு காட்டத் தவறிவிடக் காரணம் வீடு ஆபத்தான இடமல்ல என்பதால் தான்.

 

பொண்ணு யாரு? என்ன பேரு? என்ன செய்யறா? ஃபோட்டோ இருக்கா?” அம்மாவிடமிருந்து கேள்விகள் சரமாரியாக வந்தன.

 

பாரும்மா நீ நினக்கற மாதிரியெல்லாம் இல்லை. இன்னும் எதுவும் தீர்மானமாகலை.”

 

காதலிக்கறதோட உங்கள் பங்கு முடிஞ்சுடுச்சு. மற்றது எல்லாம் தீர்மானமாகணும்னா வீட்டுப் பெரியவங்க போய் பேசணும் 

 

காதலே தீர்மானமாகலைன்னு சொல்றேன்.”

 

டேய் உன்னோட புத்திசாலித்தனத்தை எல்லாம் உன் தொழில்ல வெச்சுக்கோ. என் கிட்ட வேண்டாம். உனக்கே இவ்வளவு விவரம் இருக்குன்னா, அதுல பாதியாவது உன்னைப் பெற்றவளுக்கு இருக்காதாடா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. யாரந்தப் பொண்ணு?”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது. ”பொண்ணு பேரு ஸ்ரேயாஎன்று ஆரம்பித்து அவன் அவளைப் பற்றிய விவரங்களை அம்மாவிடம் சொன்னான்.  பின் உறுதியான குரலில் சொன்னான். “ஆனால் நான் இப்ப ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்காக ஒரு ஆபத்தான இடத்துக்குப் போகப் போகிறேன். பாதுகாப்பாய் திரும்பி வராமல் அவங்க பெற்றோர் கிட்ட பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.”

 

சரி. அந்தப் பொண்ணோட செல்போன்  நம்பர் கொடு.”

 

இவ்வளவு நேரம் நான் தமிழ்ல தானே பேசினேன். புரியலையா?”

 

புரிஞ்சுதுடா. அதனால தான் அவளோட அப்பா அம்மா செல்போன் நம்பர் கேட்காமல் ஸ்ரேயாவோட செல்போன் நம்பர் கேட்கறேன்.”

 

என்ன பேசப் போறேம்மா?”

 

இதெல்லாம் முன்கூட்டியே திட்டம் போட்டு வெச்சுப் பேசற விஷயமில்லடா. பேசப் பேச தானா விஷயம் கிடைக்கும்.”

 

பேசப் பேச தானா பிரச்சனையும் ஆகும்

 

பேச்சு பிரச்சனையாகறது அன்பில்லாமல் போகறப்ப தாண்டா. அன்பிருந்தால் பிரச்சனையும் கூட, பேச்சுல சரியாயிடும்

 

ஷ்ரவன் கைகளைக் கூப்பி நின்று சொன்னான். “அம்மா தாயே ஆளை விடுங்க. நான் நாளைக்கு போன் நம்பர் தர்றேன்.”

 

ஏன் நாளைக்கு நல்ல நாளோ?”

 

அம்மாவைப் பற்றி ஸ்ரேயாவிடம் சொல்லி, அவளுடைய செல்போன் எண்ணை அம்மாவுக்குத் தரப் போவதாகவும் சொல்லி ஸ்ரேயாவைத் தயார்ப்படுத்தா விட்டால் அம்மாவை ஸ்ரேயாவால் சமாளிக்க முடியாது என்று ஷ்ரவன் நினைத்ததை வாய் விட்டுச் சொல்லவில்லை.

 

சுருக்கமாகஆமாம்என்று அவன் சொன்னான். அம்மா காலண்டரைப் பார்த்தாள். நாளை முகூர்த்த நாள் தான். மகனை லேசான சிரிப்புடன் பொய்யாக முறைத்து விட்டு அம்மா தன் சமையல் வேலையைப் பார்க்கப் போனாள்.

 

மறுநாள் ஷ்ரவன் யோகாலயத்திற்குப் போன் செய்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் துறவியாக விரும்புவதாகவும், பத்து நாட்களுக்கு முன்பு, இரண்டாம் நிலை தியான வகுப்புக்காக யோகாலயம் வந்திருந்த போது அதுபற்றித் தெரிவித்ததாகவும் சொன்னான். போனில் பேசியவர் அவனைக் காத்திருக்கச் சொன்னார்.

 

சிறிது நேரம் கழித்து கண்ணனின் குரல் கேட்டது. அவரிடமும் அதையே அவன் சொன்ன போது அவர்ஞாபகம் இருக்குஎன்றார். துறவறம் மேற்கொள்ள சில குறிப்பிட்ட நாட்கள் தான் யோகாலயத்தில் பயன்படுத்துவதாகச் சொன்ன அவர், வரும் ஏகாதசி அன்று காலையே யோகாலயம் வந்து விடும்படி சொன்னார்.

 

ஷ்ரவன் காலண்டரைப் பார்த்தான். இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. அவருக்கு நன்றி தெரிவித்தான். 

 

அன்றிரவு ஸ்ரேயா ஷ்ரவனிடம் பேசிய போது அவன் தாய் தொடர்பு கொண்டதைச் சொன்னாள். “உங்கம்மா ரொம்ப ஸ்வீட். ’நான் ஷ்ரவனோட அம்மா. உன்கிட்ட ரெண்டே நிமிஷம் பேசணும். உனக்கு பேச வசதிப்படும் நேரத்தைத் தெரிவிக்கவும்னு எனக்கு காலையில மெசேஜ் அனுப்பிச்சாங்க. நான் சாயங்காலம் சுமார் ஏழு மணிக்குப் பேசலாம்னு பதில் அனுப்பினேன். சரியாய் ஏழு மணிக்கு போன் பண்ணினாங்க. ’ஷ்ரவன் உன்னைப் பத்தி சொன்னான். கேள்விப்பட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம். ஷ்ரவனோட அப்பாவுக்கும் தான். இப்ப எல்லாம் உனக்கு அவன் கிட்ட பேசவே நேரம் போகாதுங்கறதால நான் அதிக நேரம் பேசலை. அவன் வேலை விஷயமாய் போன பிறகு, நீ எப்ப ஃப்ரீயாய் இருக்கியோ அப்ப என்னைக் கூப்பிடு. அப்ப நாம சாவகாசமாய் பேசலாம். சரியா? ரெண்டு நிமிஷம் தாண்டலையே நான். பைனு சொல்லி வெச்சுட்டாங்க. நீங்க தான் அவங்கள பத்தி அநியாயமாய் வளவளன்னு பேசுவாங்க அப்படி, இப்படின்னு சொல்லி பயமுறுத்தினீங்க. பாவம் அவங்க, ரொம்ப ஸ்வீட். நான் தான் திரும்பவும் அவங்களைக் கூப்பிட்டு அஞ்சு நிமிஷம் பேசினேன்.”

 

ஷ்ரவனுக்கு அவள் சொன்னது ஆச்சரியமாகவும், இனிமையாகவும் இருந்தது.  அம்மா சிறிது நேரத்தில் வந்து மருமகள் தன்னைத் திரும்ப அழைத்துப் பேசியதை உயர்வாய் சொன்னாள். தங்கமான பெண் என்றாள்.  அன்றெல்லாம் சந்தோஷமாய் இருந்தாள். அப்பாவிடம் தாழ்ந்த குரலில் சந்தோஷமாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பாவும் மிகவும் சந்தோஷமாய் இருந்தார். அவர்கள் வாழ்க்கையே அவனைச் சுற்றி தான் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான், அவள் நல்ல பெண் என்பது அவர்களை ஆனந்தமடைய வைத்திருப்பது தெரிந்தது.

 

ஆனால் அப்பா அவனிடம் வந்து பேசிய போது மட்டும் பொய்க் கோபத்தோடு தெலுங்கில் சொன்னார். “பிறந்து வளர்ந்ததெல்லாம் ஹைதராபாத்ல. தெலுங்குப் பொண்ணுக கூட தான் படிச்சிருக்கே. அதிகம் பழகியிருக்கே. ஆனாலும், நான் அத்தனை தூரம் சொன்ன பிறகும் நீ அம்மா சொன்ன மாதிரி தமிழ்ப் பொண்ணாய் பார்த்து காதலிச்சுட்டு வந்திருக்கிறதை என்னால் ஜீரணிக்கவே முடியலை

 

அம்மா குரல் சமையலறையிலிருந்து தமிழில் வந்தது. ”இஞ்சி சாறு எடுத்துத் தர்றேன். குடியுங்க. எல்லாம் சரியாயிடும்.”

 

ஷ்ரவன் புன்னகைத்து விட்டு அப்பாவிடம் தெலுங்கிலேயே சொன்னான். “நான் உங்க பிள்ளைப்பா. உங்க மாதிரியே நான் தமிழ்ப் பொண்ணாய் தேர்ந்தெடுத்திருக்கேன். அம்மா மாதிரி தெலுங்கு நபராய் என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கல. திருப்திப்படறத விட்டுட்டு திட்டறீங்களே

 

அப்பாவும் சிரித்து விட்டார். அம்மாவும் சமையலறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. சந்தோஷமான குடும்பத்தை விட பூமியில் சொர்க்கம் வேறு ஒன்று இருக்க முடியாது. ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் வாழ்க்கையில் வந்தாலும், அவற்றை எல்லோரும் ஒன்று சேர்ந்து நின்று சந்திக்கையில் வாழ்க்கை மிகவும் இலகுவாகி விடுகிறது.

 

வார்த்தைகள் இல்லாத சந்தோஷம் அந்த வீட்டில் நிறைந்திருந்தது. புயலுக்கு முன்பான அமைதியோ அது என்ற சந்தேகம் ஷ்ரவன் மனதில் வந்து போனது.

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசன் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 3, 2025

சாணக்கியன் 155

 

ந்த மடலில் முத்திரை இல்லை. அனுப்பியவர் பெயர் இல்லை. யாருக்கு அனுப்பப்பட்டது என்பதும் இல்லை. மடலில் யாருடைய பெயரும் இல்லை. பயன்படுத்தப்பட்ட  எல்லாச் சொற்களும் பொதுவானவை.  இக்கடிதம் தவறி யாராவது கையில் கிடைத்து அவர்கள் படித்தாலும் தலைகால் புரியாது. இந்த சாமர்த்தியத்தைப் பார்க்கையில் விஷ்ணுகுப்தரின் பாணியே தெரிந்தது. ஆனால் ராக்ஷசர் உடனடியாக எந்த முடிவையும் எட்ட விரும்பவில்லை. அனுப்பியது விஷ்ணுகுப்தர் என்றால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார். ஒற்றனை விசாரித்த போது நேபாள மன்னன் அங்கிருந்து மேற்கில் இரண்டு யோஜனை தூரத்திலும், குலு மன்னன் கிழக்கில் ஒரு யோஜனை தூரத்திலும் படைகளுடன் முகாமிட்டு இருப்பதாகச் சொன்னான். இருவரில் யாருக்காகவும் இருக்கலாம்.

 

ஒற்றனை அனுப்பி விட்டு ராக்ஷசர் ஆழ்ந்து யோசித்தார். இந்த மடலில் எதிரி என்று குறிப்பிடுவது மகதத்தைத் தான் என்பது தெளிவாகத் தெரிந்ததால் மற்றதை எல்லாம் யூகிப்பது சிரமமாக இருக்கவில்லை. ’தென்கிழக்கு தேச மன்னனுடனான நம் ரகசியப் பேச்சு சுமுகமாக முடிந்ததுஎன்ற செய்தி தான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மகதத்தின் தென்கிழக்கு தேசம் கலிங்கம் தான். கலிங்க மன்னன் கூடுதல் தலைவலியாவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக அவன் படையெடுத்து வரும் சாத்தியம் இல்லை. மகதம் அவனுக்குத் தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்ட முடியும். ஆனால் மகதம் மற்ற திசைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது கலிங்கத்தின் படையெடுப்பும் சேர்ந்து கொள்வது பிரச்சினையே.

 

யோசிக்க யோசிக்க விஷ்ணுகுப்தரின் திட்டம் மிகவும் தந்திரமானதாகத் தான் அவருக்குத் தோன்றியது. மகதத்தின் விரிந்த பரப்பு ஒருவிதத்தில் மிகவும் சாதகமானதாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் பலவீனமே. பல பக்கங்களில் தாக்குதல் வருமானால் படைகளைப் பிரித்து நீண்ட தூரங்களுக்கு அனுப்பும் சூழல் உருவாகும். எத்தனை பெரிய படைபலம் இருந்தாலும் பிரித்துப் பிரித்துப் பல பக்கங்களுக்கு அனுப்புகையில் வலிமை குறைந்து போவது இயல்பே. அதை எதிர்பார்த்து தான் ஆச்சாரியர் கலிங்க அரசனையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இது ராக்‌ஷசர் சிறிதும் எதிர்பார்த்திராத புதிய சிக்கல்.

 

அவர்கள் திட்டப்படி அவரவருக்குச் சொல்லியிருக்கும் பகுதிகளைத் தாக்குதல் செய்வதென்று சொல்வதில் அந்தப் பகுதிகளின் விவரங்கள் இல்லை. ஆனால் நாள் எது என்று தீர்மானமாகத் தெரிகிறது.  திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு மாற்றியிருக்கிறார்கள். தலைநகரைத் தாக்க வருவது போல் நாடகம் நடிக்கவிருப்பதும் நல்ல வியூகமே…

 

ராக்‌ஷசர் அன்றே அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டினார். மறைமுகமாகக் குறிப்பிட்ட விஷயங்களை விளக்கவும் செய்தார். தனநந்தன் அவர் விளக்க விளக்க கோபத்தில் உடல்நடுங்கினான். சாணக்கின் மகனின் திட்டங்கள் அவனுக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தின. தனக்கு எதிராக கலிங்க மன்னனையும் இப்போரில் இழுத்து விட்டது அவனைப் பெரிதும் பாதித்தது.   

 

ராக்‌ஷசர் அவனை அமைதிப்படுத்துவது போலச் சொன்னார். “அவர்கள் ஒரு திட்டம் தீட்டினால் நாம் பதிலுக்கு ஒரு தீட்டம் தீட்டுவோம் அரசே. அவர்களுக்குப் பதிலடி தருவது நம் தலையாய கடமையாகிறது. அதனால் நாம் அமைதியிழக்க வேண்டியதில்லை…”

 

தனநந்தன் சிறிது அமைதியடைந்தான். ராக்‌ஷசர் பத்ரசாலையும் சுதானுவையும் கூர்ந்து பார்த்தார். சுதானு ஏதோ மனக்கணக்கு போட்டபடி யோசிப்பது தெரிந்தது. பத்ரசால் சொன்னான். “இப்போதைக்கு நாம் வடக்கிலும் மேற்கிலும் அனுப்பியுள்ள படைகள் எதிரிகள் அனுப்பியிருக்கிற படைகளைச் சமாளிக்க போதுமானது. ஆனால் சந்திரகுப்தனும் படையுடன் வந்து சேர்ந்து கொள்வான் என்ற நிலை இருந்தால் நாம் கூடுதலாகப் படை அனுப்புவது நல்லது என்று தோன்றுகிறது.”  

 

ராக்‌ஷசர் அவன் பதிலில் திருப்தியடைந்தார். அவன் கணக்கிடுவது சரியாகவே இருக்கிறது. அவன் எதிரியுடன் கைகோர்த்திருந்தால் சிறிதாவது குட்டையைக் குழப்பிவிடப் பார்த்திருப்பான். அவன் முகத்திலும், பேச்சிலும் ஏதாவது அவனைக் காட்டிக் கொடுத்திருக்கும். ஆக இவன் திருடனாக இருந்தாலும் தெரிந்து எதிரியுடன் கைகோர்த்த திருடனாக இருக்க வாய்ப்பு குறைவு. எதிரி என்று தெரியாமலேயே திருடிக் கொடுத்திருப்பான். சுதானுவை அவர் பார்த்தார். அவன் இப்போதும் ஏதோ மனக்கணக்கிலேயே இருப்பது தெரிந்தது.

 

ராக்‌ஷசர் சொன்னார். ’’இந்த மடலே ஒரு கபட நாடகமாக இருப்பதற்கும் வழியிருக்கிறது என்ற சந்தேகமும் எனக்கு வராமல் இல்லை. நம்மைத் திசை திருப்ப விஷ்ணுகுப்தர் செய்த சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம்.”

 

சுகேஷ் கேட்டான். “அப்படியானால் நாம் என்ன செய்வது? இப்போது தெரிந்த தகவலின் அடிப்படையில் நம் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாமா இல்லை பழைய திட்டங்களிலேயே தங்குவோமா?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “முழுவதுமாக இந்த மடலை அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. நம்பி விடவும் முடியாது என்கிற நிலைமையில் தான் நாமிருக்கிறோம். நம் படை வலிமை இங்கும் நன்றாகவே இருப்பதால் நாம் தெற்கிலும் படைகளை அனுப்பி தென் எல்லையைப் பலப்படுத்தி விட முடியும்”

 

பத்ரசால் சொன்னான். “தெற்கில் படைகளை அனுப்பினாலும் தலைநகரையும் காத்துக் கொள்ள முடியும். ஆனால் சந்திரகுப்தன் வருகிறான் என்று மறுபடி வடக்கு திசைக்குக் கூடுதல் படைகள் அனுப்பினால் இங்கு சற்று பலம் குறைந்து விடும் என்றே தோன்றுகிறது.”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார். “உண்மை சேனாதிபதி. ஆக சந்திரகுப்தன் வடக்கில் தாக்க வரப் போவது உண்மை தானா இல்லை இந்த மடல் ஒரு சதியாக இருந்து அவன் இங்கேயே தாக்க வரப் போகிறானா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி தான் இருக்கிறது.”

 

சுதானு யோசனையுடன் கேட்டான். “என்ன வழி?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “எங்கே படைகள் வருகின்றன, போகின்றன என்று நாம் கவனிப்பதை விட சந்திரகுப்தன் எங்கே போகிறான், எங்கே வருகிறான் என்று கவனிப்பது நாம் முடிவெடுக்க சரியாக இருக்கும். அவனிருக்கும் இடத்தில் தான் விஷ்ணுகுப்தரும் இருப்பார் என்கிறார்கள். அவர்கள் இருவரும் எங்கே வருகிறார்கள் என்பதை நம் ஒற்றர்கள் சரியாக கவனித்து வந்து சொன்னால் அதற்கேற்ற மாதிரி நாம் படைகளை நகர்த்துவது சரியாக இருக்கும்”

 

தனநந்தன் கேட்டான். “அது தெரிந்து நாம் துரிதமாக அதற்கேற்றாற் போல் படைகளை நகர்த்த காலம் போதுமா?”

 

“நாம் காலத்தை வீணாக்காமலும் சுறுசுறுப்பாகவும் இயங்கினால் காலம் எதற்கும் போதுமானது தான் அரசே”

 

“அப்படியானால் அந்த இருவரையும் கண்காணிக்க வேண்டுமளவு ஒற்றர்களை அனுப்பி வையுங்கள். சாணக்கின் மகனை உயிரோடோ பிணமாகவோ கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு நான் நூறு பொற்காசுகள் தருகிறேன் என்று அறிவியுங்கள்.”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார்.  சுதானு கேட்டான். “அந்த வீரன் நம் வீரர்களிடம் மடலைப் பறி கொடுத்ததை நம் எதிரிகளிடம் போய் சொல்லி விடமாட்டானா? அப்படிச் சொன்னால் அவர்கள் உஷாராகி மறுபடி திட்டத்தை மாற்றி விட மாட்டார்களா?”

 

ராக்‌ஷசர் இந்தப் புத்திசாலித்தனமான கேள்வியை அவன் கேட்டதில் சிறிது ஆச்சரியப்பட்டார். கோபக்காரன் என்றாலும் அறிவும் இருக்கிறது. அவர் சொன்னார். “அந்த வீரன் போய் சொன்னாலும் அவர்களுக்கு மறுபடி திட்டத்தை மாற்றி மறுபடியும் எல்லோருக்கும் தெரிவிக்கப் போதுமான அளவு காலமில்லை. இப்படி ஒரு கடிதம் மற்ற மன்னர்களுக்கும் இன்னேரம் போய்ச் சேர்ந்திருக்கும். அவர்கள் மாற்றப்பட்ட காலப்படியே செயல்படுவார்கள். அதனால் கடிதம் போய்ச் சேர்ந்திருக்கக்கூடிய நபர் தான் கடிதம் கிடைக்காமல் பழைய திட்டப்படி திரையோதசியில் இயங்குவான்.  அது அவர்களுக்கு அந்தப் பகுதியில் நடக்கும் போருக்குப் பின்னடைவையும், சிக்கலையும் ஏற்படுத்தலாம்.”

 

தனநந்தன் கேட்டான். “கலிங்கத்து மன்னன் நமக்கு எதிரான நடவடிக்கைகள் எதிலாவது ஈடுபட்டிருப்பது பற்றி நம் ஒற்றர்கள் எதையும் ஏன் தெரிவிக்கவில்லை.”

 

ராக்‌ஷசர் சொன்னார். “நம் ஒற்றர்கள் வடக்கில் அதிகமாக இருக்குமளவு தெற்கில் இல்லை. அதனால் இருக்கலாம். இந்தக் கடிதத்திலும் கலிங்கத்து மன்னனுடன் மிகசமீபத்தில் தான் சுமுகமாக பேச்சு வார்த்தை முடிந்த தொனி தென்படுகிறது. அது முடிந்தவுடனேயே ஆச்சாரியர் இந்த மடலை மற்றவர்களுக்கு எழுதியிருப்பார் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் தான் கலிங்கத்து மன்னன் நமக்கு எதிராக இயங்க ஆரம்பிக்கலாம். அதற்கு பிறகு தான் ஒற்றர்கள் அறிய நேரிடும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”

 

முடிவுகளை இனி கிடைக்கும் தகவல்களை வைத்து வேகமாக எடுக்கலாம் என்ற தீர்மானத்துடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

 

அங்கிருந்து கிளம்பும் போது சுதானு பத்ரசாலிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “நாம் இன்றிரவே சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது சேனாதிபதி”

 

ராக்‌ஷசர் தனிமையில் யோசனையில் ஆழ்ந்திருந்தார். உயர்ரகக் குதிரைகள் குறைந்து போனதும், ஆயுதங்கள் குறைந்து புதிய ஆயுதங்கள் தரமாக உருவாக்கத் தேவையான கால அவகாசம் கிடைக்காததும் இப்போது அவர்கள் பக்கமிருக்கும் பலவீனம் என்பதை அவர் அறிவார். இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தச் சிறிய குறைபாடுகள் போர்களின் போக்கைத் தீர்மானிக்க முடிந்தவை. அளவில் மிகப்பெரிய படைகள் என்ற அவர்களுடைய வலிமையை தாழ்ந்த ரகக் குதிரைகளும், கச்சிதமாக அமையாத ஆயுதங்களும் நிறையவே குறைத்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அவர்கள் யாருமே பேசவில்லை....

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.