சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 7, 2025

யோகி 97

 


ஷ்ரவன் ஹைத்ராபாத் வந்து விட்டான். வீட்டுக்கு வந்தவுடனேயே ஸ்ரேயாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லலாமா என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அம்மா அதிகம் உணர்ச்சிவசப்படுபவள். மகன், மருமகளைப் பற்றி அதிகமாகக் கனவு காண ஆரம்பித்து விடுவாள். கற்பனைக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விடுவாள். நிஜங்கள் எப்படி இருக்கப் போகின்றனவோ யாருக்குத் தெரியும். கோட்டைகள் கட்டி கடைசியில் அவை இடியும் போது கஷ்டப்படுவதை விட, கோட்டைகள் இல்லாத வெற்றிடமே மேல்.  அதனால் யோகாலயம் போய் திரும்பி வந்த பின் வீட்டில் சொல்வது என்று அவன் முடிவெடுத்தான்.

 

ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவனால் ஸ்ரேயாவிடம் தினமும் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் தனதறையில் இருந்து கொண்டு தான் பேசினான். மிகத் தாழ்ந்த குரலில் தான் பேசினான். அவனுடைய வேலையில் இரகசியம் காப்பதற்கு அது மிக அவசியம் என்பதால், சில சமயங்களில் அவன் பேசும் போது அவனுக்கு நான்கடி தள்ளி இருப்பவனுக்குக் கூட அவன் என்ன பேசுகிறான் என்று கேட்காது.  அதனால் அவன் அம்மாவிற்கு அவனறைக்கு வரும் போது கூட அவன் யாரிடம், என்ன பேசுகிறான் என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.  ஆனாலும் அம்மா முதல் தடவை அவன் அறைக்கு வரும் போதே  கேட்டு விட்டாள். “யாருடா அந்தப் பொண்ணு?”

 

எந்தப் பொண்ணு?”

 

நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிகிட்டிருந்தியே அந்தப் பொண்ணு

 

நான் பேசிகிட்டிருந்தது பொண்ணு கிட்டன்னு யாரு சொன்னா?”

 

நான் சொல்றேன்.”

 

எதை வெச்சி அப்படி சொல்றே?”

 

எல்லாம் உன் முகத்தை வெச்சு தான். பெத்தவளுக்குத் தெரியாதாடா, பிள்ளையைப் பற்றி. உன் முகத்துல இத்தனை பிரகாசத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையேடா?”

 

ஷ்ரவன் சிரித்து விட்டான். வார்த்தைகள் கேட்கக்கூடாது என்று கவனமாய் இருந்தாலும் முகபாவனையில் கோட்டை விட்டு விட்டோமே என்று நினைத்தான். ஆபத்தான இடங்களில் எப்போதும் காட்டும் எச்சரிக்கையை இங்கு காட்டத் தவறிவிடக் காரணம் வீடு ஆபத்தான இடமல்ல என்பதால் தான்.

 

பொண்ணு யாரு? என்ன பேரு? என்ன செய்யறா? ஃபோட்டோ இருக்கா?” அம்மாவிடமிருந்து கேள்விகள் சரமாரியாக வந்தன.

 

பாரும்மா நீ நினக்கற மாதிரியெல்லாம் இல்லை. இன்னும் எதுவும் தீர்மானமாகலை.”

 

காதலிக்கறதோட உங்கள் பங்கு முடிஞ்சுடுச்சு. மற்றது எல்லாம் தீர்மானமாகணும்னா வீட்டுப் பெரியவங்க போய் பேசணும் 

 

காதலே தீர்மானமாகலைன்னு சொல்றேன்.”

 

டேய் உன்னோட புத்திசாலித்தனத்தை எல்லாம் உன் தொழில்ல வெச்சுக்கோ. என் கிட்ட வேண்டாம். உனக்கே இவ்வளவு விவரம் இருக்குன்னா, அதுல பாதியாவது உன்னைப் பெற்றவளுக்கு இருக்காதாடா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. யாரந்தப் பொண்ணு?”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது. ”பொண்ணு பேரு ஸ்ரேயாஎன்று ஆரம்பித்து அவன் அவளைப் பற்றிய விவரங்களை அம்மாவிடம் சொன்னான்.  பின் உறுதியான குரலில் சொன்னான். “ஆனால் நான் இப்ப ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்காக ஒரு ஆபத்தான இடத்துக்குப் போகப் போகிறேன். பாதுகாப்பாய் திரும்பி வராமல் அவங்க பெற்றோர் கிட்ட பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.”

 

சரி. அந்தப் பொண்ணோட செல்போன்  நம்பர் கொடு.”

 

இவ்வளவு நேரம் நான் தமிழ்ல தானே பேசினேன். புரியலையா?”

 

புரிஞ்சுதுடா. அதனால தான் அவளோட அப்பா அம்மா செல்போன் நம்பர் கேட்காமல் ஸ்ரேயாவோட செல்போன் நம்பர் கேட்கறேன்.”

 

என்ன பேசப் போறேம்மா?”

 

இதெல்லாம் முன்கூட்டியே திட்டம் போட்டு வெச்சுப் பேசற விஷயமில்லடா. பேசப் பேச தானா விஷயம் கிடைக்கும்.”

 

பேசப் பேச தானா பிரச்சனையும் ஆகும்

 

பேச்சு பிரச்சனையாகறது அன்பில்லாமல் போகறப்ப தாண்டா. அன்பிருந்தால் பிரச்சனையும் கூட, பேச்சுல சரியாயிடும்

 

ஷ்ரவன் கைகளைக் கூப்பி நின்று சொன்னான். “அம்மா தாயே ஆளை விடுங்க. நான் நாளைக்கு போன் நம்பர் தர்றேன்.”

 

ஏன் நாளைக்கு நல்ல நாளோ?”

 

அம்மாவைப் பற்றி ஸ்ரேயாவிடம் சொல்லி, அவளுடைய செல்போன் எண்ணை அம்மாவுக்குத் தரப் போவதாகவும் சொல்லி ஸ்ரேயாவைத் தயார்ப்படுத்தா விட்டால் அம்மாவை ஸ்ரேயாவால் சமாளிக்க முடியாது என்று ஷ்ரவன் நினைத்ததை வாய் விட்டுச் சொல்லவில்லை.

 

சுருக்கமாகஆமாம்என்று அவன் சொன்னான். அம்மா காலண்டரைப் பார்த்தாள். நாளை முகூர்த்த நாள் தான். மகனை லேசான சிரிப்புடன் பொய்யாக முறைத்து விட்டு அம்மா தன் சமையல் வேலையைப் பார்க்கப் போனாள்.

 

மறுநாள் ஷ்ரவன் யோகாலயத்திற்குப் போன் செய்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் துறவியாக விரும்புவதாகவும், பத்து நாட்களுக்கு முன்பு, இரண்டாம் நிலை தியான வகுப்புக்காக யோகாலயம் வந்திருந்த போது அதுபற்றித் தெரிவித்ததாகவும் சொன்னான். போனில் பேசியவர் அவனைக் காத்திருக்கச் சொன்னார்.

 

சிறிது நேரம் கழித்து கண்ணனின் குரல் கேட்டது. அவரிடமும் அதையே அவன் சொன்ன போது அவர்ஞாபகம் இருக்குஎன்றார். துறவறம் மேற்கொள்ள சில குறிப்பிட்ட நாட்கள் தான் யோகாலயத்தில் பயன்படுத்துவதாகச் சொன்ன அவர், வரும் ஏகாதசி அன்று காலையே யோகாலயம் வந்து விடும்படி சொன்னார்.

 

ஷ்ரவன் காலண்டரைப் பார்த்தான். இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. அவருக்கு நன்றி தெரிவித்தான். 

 

அன்றிரவு ஸ்ரேயா ஷ்ரவனிடம் பேசிய போது அவன் தாய் தொடர்பு கொண்டதைச் சொன்னாள். “உங்கம்மா ரொம்ப ஸ்வீட். ’நான் ஷ்ரவனோட அம்மா. உன்கிட்ட ரெண்டே நிமிஷம் பேசணும். உனக்கு பேச வசதிப்படும் நேரத்தைத் தெரிவிக்கவும்னு எனக்கு காலையில மெசேஜ் அனுப்பிச்சாங்க. நான் சாயங்காலம் சுமார் ஏழு மணிக்குப் பேசலாம்னு பதில் அனுப்பினேன். சரியாய் ஏழு மணிக்கு போன் பண்ணினாங்க. ’ஷ்ரவன் உன்னைப் பத்தி சொன்னான். கேள்விப்பட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம். ஷ்ரவனோட அப்பாவுக்கும் தான். இப்ப எல்லாம் உனக்கு அவன் கிட்ட பேசவே நேரம் போகாதுங்கறதால நான் அதிக நேரம் பேசலை. அவன் வேலை விஷயமாய் போன பிறகு, நீ எப்ப ஃப்ரீயாய் இருக்கியோ அப்ப என்னைக் கூப்பிடு. அப்ப நாம சாவகாசமாய் பேசலாம். சரியா? ரெண்டு நிமிஷம் தாண்டலையே நான். பைனு சொல்லி வெச்சுட்டாங்க. நீங்க தான் அவங்கள பத்தி அநியாயமாய் வளவளன்னு பேசுவாங்க அப்படி, இப்படின்னு சொல்லி பயமுறுத்தினீங்க. பாவம் அவங்க, ரொம்ப ஸ்வீட். நான் தான் திரும்பவும் அவங்களைக் கூப்பிட்டு அஞ்சு நிமிஷம் பேசினேன்.”

 

ஷ்ரவனுக்கு அவள் சொன்னது ஆச்சரியமாகவும், இனிமையாகவும் இருந்தது.  அம்மா சிறிது நேரத்தில் வந்து மருமகள் தன்னைத் திரும்ப அழைத்துப் பேசியதை உயர்வாய் சொன்னாள். தங்கமான பெண் என்றாள்.  அன்றெல்லாம் சந்தோஷமாய் இருந்தாள். அப்பாவிடம் தாழ்ந்த குரலில் சந்தோஷமாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பாவும் மிகவும் சந்தோஷமாய் இருந்தார். அவர்கள் வாழ்க்கையே அவனைச் சுற்றி தான் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான், அவள் நல்ல பெண் என்பது அவர்களை ஆனந்தமடைய வைத்திருப்பது தெரிந்தது.

 

ஆனால் அப்பா அவனிடம் வந்து பேசிய போது மட்டும் பொய்க் கோபத்தோடு தெலுங்கில் சொன்னார். “பிறந்து வளர்ந்ததெல்லாம் ஹைதராபாத்ல. தெலுங்குப் பொண்ணுக கூட தான் படிச்சிருக்கே. அதிகம் பழகியிருக்கே. ஆனாலும், நான் அத்தனை தூரம் சொன்ன பிறகும் நீ அம்மா சொன்ன மாதிரி தமிழ்ப் பொண்ணாய் பார்த்து காதலிச்சுட்டு வந்திருக்கிறதை என்னால் ஜீரணிக்கவே முடியலை

 

அம்மா குரல் சமையலறையிலிருந்து தமிழில் வந்தது. ”இஞ்சி சாறு எடுத்துத் தர்றேன். குடியுங்க. எல்லாம் சரியாயிடும்.”

 

ஷ்ரவன் புன்னகைத்து விட்டு அப்பாவிடம் தெலுங்கிலேயே சொன்னான். “நான் உங்க பிள்ளைப்பா. உங்க மாதிரியே நான் தமிழ்ப் பொண்ணாய் தேர்ந்தெடுத்திருக்கேன். அம்மா மாதிரி தெலுங்கு நபராய் என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கல. திருப்திப்படறத விட்டுட்டு திட்டறீங்களே

 

அப்பாவும் சிரித்து விட்டார். அம்மாவும் சமையலறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. சந்தோஷமான குடும்பத்தை விட பூமியில் சொர்க்கம் வேறு ஒன்று இருக்க முடியாது. ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் வாழ்க்கையில் வந்தாலும், அவற்றை எல்லோரும் ஒன்று சேர்ந்து நின்று சந்திக்கையில் வாழ்க்கை மிகவும் இலகுவாகி விடுகிறது.

 

வார்த்தைகள் இல்லாத சந்தோஷம் அந்த வீட்டில் நிறைந்திருந்தது. புயலுக்கு முன்பான அமைதியோ அது என்ற சந்தேகம் ஷ்ரவன் மனதில் வந்து போனது.

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசன் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

3 comments:

  1. Sir, how many chapters are there in this novel?

    I am your very big fan Sir.

    ReplyDelete
  2. தொடரட்டும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete