என் நூல்களிலிருந்து சில சிந்தனைத் துளிகள்...
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, July 10, 2024
Monday, July 8, 2024
யோகி 57
கடைக்கார இளைஞன் தன் லாப்டாப்பை எடுத்து, இணையத்தில் மயான காளியைத் தேடி அவருக்கு அந்தப் படங்களைக் காட்டினான். சுகுமாரனுக்கு மயான காளியின் சில படங்களைப் பார்க்கவே திகிலாக இருந்தது. கரிய தேகம், வெளியே தொங்கப் போட்ட சிவந்த நாக்கு, அக்னிப் பார்வை, நான்கு கைகள், மண்டை ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு அசுரனை மிதித்துக் கொண்டு நிற்கும் தோற்றம்.... இருப்பதிலேயே அதிபயங்கரமாகத் தெரிந்த ஒரு படத்தை சுகுமாரன் தேர்ந்தெடுத்தார். ஆவிக்கும் பயம் வர வேண்டுமே! சாயங்காலத்துக்குள் ஃப்ரேம் போட்டு அந்தப் படம் கிடைக்க வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த அவன் சொன்ன விலை அதிகம் என்று தோன்றினாலும் அவர் பேரம் பேசவில்லை. இன்று இரவு இந்தப் படத்தைப் பார்த்து ஆவி வராமல் இருந்தால் சரி!
கடைக்கார இளைஞன் சொன்னான். “சார் எப்படியும்
ஒரு மணி நேரம் ஆகும்.”
சுகுமாரன் கடிகாரத்தைப் பார்த்தார். மதியம்
மணி மூன்றாகிறது. வாங்கிக் கொண்டு இருட்டுவதற்குள் வீட்டுக்குப் போய்விடலாம். இப்போது பசிக்கிறது. ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வரும்
போது சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே சம்மதம்
தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.
பரசுராமனின் இன்றைய பூஜையில் இரண்டு
மயான காளி சிலைகள் இருந்தன. இரண்டுக்கு முன்பும் இரண்டு மண்டலங்கள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சுகுமாரனுக்கு,
இன்னொன்று பாண்டியனுக்கு. அந்த மண்டலங்களைச்
சுற்றி சில சின்னச் சின்னங்களும், யந்திரங்களும் சென்ற முறையை விடக் கூடுதலாய் வரையபட்டிருந்தன. இரண்டு மண்டலங்களுக்கும் நடுவில் குங்கும
நீரில் தோய்க்கப்பட்ட சிறிய கத்திகள் வைக்கப்பட்டு இருந்தன. இரண்டிலும் முக்கோணச் சின்னங்களில்
சுகுமாரன் வீட்டு மண் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. அதே போல்
வேறிரண்டு முக்கோணச் சின்னங்களில் சுகுமாரனின் கைக்குட்டையும், பாண்டியனின் டவலும் வைக்கப்பட்டு இருந்தன.
இரண்டிலும் இன்று சைத்ராவின் வேறு புகைப்படங்கள் காளி சிலைகள்
முன் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன.
இரண்டிலும் சைத்ரா வெள்ளைப்புடவையில் இருந்தாள். அவற்றில் அவள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். இரண்டு மண்டலங்களையும் இணைத்து கீழே ஒரு சிறிய மண்டலம் வரையப்பட்டு இருந்தது. அதில் ஒரு சிறிய பொம்மை காவித்துணியில் சுற்றி வைக்கப்பட்டு
இருந்தது.
சரியான முகூர்த்தத்தில் பரசுராமனின்
பூஜை ஆரம்பமானது.
மயான காளி படத்துடன், இருட்டுவதற்கு
முன், சுகுமாரன் வீடு வந்து சேர்ந்து விட்டார். இணையத்தில்
இருந்த ஏராளமான தகவல்களில் ஒரு முக்கியத் தகவல் இருக்கவில்லை. மயான காளி
படம் இருக்கும் கட்டிடத்திற்கே ஆவி வராதா, இல்லை அது
வைக்கப்பட்டு இருக்கும் அறைக்குத் தான் வராதா என்ற குறிப்பை யாரும் சொல்லவில்லை. அதனால் அந்தப் புகைப்படத்தை
தோட்டத்தில் வைப்பதா, இல்லை வீட்டுக்குள்ளே வைப்பதா என்று யோசித்தார். கடைசியில்
வீட்டில், தனதறையில் வைத்துக் கொள்வதே நல்லது என்று தோன்றியது.
இருட்ட ஆரம்பித்த போது அவர் மனம் மெல்லப்
பதற்றமடைய ஆரம்பித்தது. ஆவி இப்போதே வந்து விடுமா, இல்லை நேற்று
போல பத்துமணி வாக்கில் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இருட்டிய
பிறகும் டாமி குரைக்க ஆரம்பிக்கவில்லை. அது சற்று ஆறுதலாக
இருந்தது. ஆவி அதன் நேரம் ஆகாததால் வரவில்லையா, இல்லை மயான
காளியின் படம் இருப்பதால் இன்னும் வரவில்லையா என்பதும் தெரியவில்லை.
சுமார் ஒன்பது மணியான போது அவர் கைபேசி
இசைத்தது. அழைத்தது பாண்டியன் தான். சுகுமாரன்
ஒரு கணம் பயந்தார். ‘இன்றைக்குக் காலையில் தைரியமாய் பேசிய பாண்டியன், இப்போது
எதாவது காரணம் சொல்லி வரவில்லை என்று சொல்லி விடுவாரோ? அதற்காகத்
தான் கூப்பிடுகிறாரோ?’
பயந்தபடியே கைபேசியை எடுத்துப் பேசினார். “ஹலோ”
“பாண்டியன்
பேசறேன். ஆவி இன்னும் வந்துடலையே?”
குரலில் அதே எகத்தாளம். ’எதிர்பார்த்த
ஆள் முன்னதாக வந்து விடவில்லையே என்பது போல் ஆவியையும் கேட்கிறான் பாவி. இந்த எகத்தாளத்தைப்
போக்குவதற்காகவே அந்த ஆவி ஒருமுறை வந்து அந்த ஆளையும் பயமுறுத்திவிட்டுப் போய் விட்டால்
தேவலை’ என்று சுகுமாரனுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த
கணமே அவர் தன்னையே திட்டிக் கொண்டார். ‘சே! ஏன் இந்த
மாதிரி நினைக்கிறேன். எந்தக் காரணத்திற்காகவும் அந்த ஆவி எப்பவுமே வர வேண்டாம்.’
“இதுவரைக்கும்
இல்லை.” என்றார் சுகுமாரன்.
“நல்லது. உங்க கூர்க்கா
கிட்ட நேத்து மாதிரி இன்னைக்கும் தூங்கிட வேண்டாம்னு சொல்லி வைங்க. எவன் வந்தும்
எதையும் வீசிட்டுப் போகாம பார்த்துக்கச் சொல்லுங்க. நான் கிளம்பிட்டேன். பத்து மணிக்குள்ளே
வந்துடுவேன்.”
பாண்டியன் வருவது சுகுமாரனுக்கு தைரியத்தைத்
தந்தது. இன்னமும் பாண்டியன் நேற்றைய காவித்துணி எரிப்பை ஆவியின் செயல்
என்று நம்பவில்லை என்பது புரிந்தது. ‘அந்த ஆளைப் பொருத்தவரை
தெளிவாய் தான் இருக்கான்!’
சுகுமாரன் கூர்க்காவை அழைத்துச் சொன்னார். “ராத்திரி
தூங்கிடக்கூடாது. நேத்து மாதிரி எவனாவது எதையாவது உனக்குத் தெரியாம வீசிட்டு
போயிடக்கூடாது. புரிஞ்சுதா?”
‘நேற்று
தூங்கவில்லை’ என்று மறுக்க எண்ணிய கூர்க்கா தேவையில்லாமல் வீண் விவாதம்
வேண்டாம் என்று முடிவு செய்து தலையாட்டினான்.
“இன்னைக்கு
ராத்திரியும் அப்படி ஏதாவது வந்து விழுந்தால் நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்.” என்று கடுமையான
குரலில் சொல்லி அவனை அனுப்பி விட்டார்.
அவனை அனுப்பி சிறிது நேரத்தில் அவருக்கு
காதில் ரீங்காரம் மெல்லக் கேட்க ஆரம்பித்தது. பின் வயிற்றில்
எரிச்சலும் மெள்ள ஆரம்பமானது. சுகுமாரனுக்கு வியர்த்தது. இன்றைக்குமா? ஆனால் நல்ல வேளையாக டாமி குரைக்கவில்லை. அதனால் ஆவி இன்னும்
வந்து சேரவில்லை. அது வந்து சேரும் முன்னே யோகாலயத்து மேனேஜர்
வந்து சேர்ந்து விட்டால் தேவலை என்று மனம் யோசித்தது.
அதே நேரத்தில்,
காரை ஓட்டி வந்து கொண்டிருந்த பாண்டியனுக்கும் காதில் ரீங்காரம் கேட்க
ஆரம்பித்தது. இது அந்த டாக்டர் சொன்ன ரீங்காரமாக இருக்க வழியில்லை
என்று அவர் நம்ப முயற்சித்தார். ஆனால் வயிற்றிலும் எரிச்சலை உணர
ஆரம்பிக்கவே, அவரும் திகைத்தார். ‘என்ன
இது?’
சுகுமாரனின் தோட்டத்தில் நாய் ஆக்ரோஷமாய்
குரைக்க ஆரம்பித்தது. சுகுமாரன் அதிர்ந்து போனார். மெல்ல எழுந்து சென்று அறை
ஜன்னல் வழியாக, தோட்டத்தைப் பார்த்தார். தோட்டத்தில் நேற்று கண்ட இடத்திலேயே இன்றும் சைத்ராவின் ஆவி தெரிந்தது.
ஆனால் இன்று ஆவி வெள்ளைச் சேலையில் தெரிந்தது. நேற்று புன்னகைத்த ஆவி, இன்று வாய் விட்டுச் சத்தமில்லாமல்
சிரிப்பது போலிருந்தது. ஆவிக்கு சந்தோஷம் அதிகமாகி விட்டதா,
இல்லை அவர் படும் பாட்டைப் பார்த்துச் சிரிக்கிறதா என்று தெரியவில்லை…
பாண்டியன் சுகுமாரன் வசிக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில்
வந்த போதே அவருக்கு டாமி ஆக்ரோஷமாய் குரைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இன்றும் ஆவி அங்கு வந்து
விட்டதா? காதில் ரீங்காரம், வயிற்றில் எரிச்சலையும்
மீறி, பாண்டியனுக்கு அந்த ஆவியை நேரில் பார்க்கும் ஆர்வம் கூடியது.
இன்று இந்த ஆவி சமாச்சாரத்தின்
முழுப்பின்னணியையும் தெரிந்து கொள்ளாமல் விடக்கூடாது என்று தீர்மானித்தபடி வேகமாக சுகுமாரன்
வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
பாண்டியன் சுகுமாரன் வீட்டைச் சென்றடைந்த
போது கூர்க்கா ஆர்வத்துடன் உள்ளே தோட்டத்தில் என்ன நடக்கிறதென்று பார்த்துக் கொண்டிருந்தான். நேற்று
போல் இன்றும் டாமி குரைக்க ஆரம்பித்து விட்டதால் இன்றும் ஏதாவது ஆவி அல்லது பேய்ப்
பிரச்சினை ஆரம்பமாகி விட்டதா என்று அவன் தெரிந்து
கொள்ள விரும்பினான். டாமி நேற்று எங்கு பார்த்துக் குரைத்துக்
கொண்டிருந்ததோ அதே இடத்தைப் பார்த்து தான் இன்றும் குரைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அவன் பார்வைக்கு அங்கு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை….
பாண்டியன் கூர்க்கா உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைப்
பார்த்து எரிச்சல் அடைந்தார்.
கார்க் கதவைப் படாரென்று அவர் சாத்திய பிறகு தான் கூர்க்காவின் பார்வை
திரும்பியது. ‘சரியான நேரத்தில் மந்திரவாதி வந்து விட்டாரே’
என்று அவன் நினைக்கையில் அவர் அவனருகில் வந்து கேட்டார். “ஏன் உள்ளே பார்க்கிறே? உள்ளே எதாவது பிரச்சனையா?”
Thursday, July 4, 2024
சாணக்கியன் 116
சந்திரகுப்தனின் சமீபத்திய வெற்றி தனநந்தனையும் விட அதிகமாக ராக்ஷசரை அதிருப்தியடைய வைத்தது. அவர் அந்த வெற்றியில் சந்திரகுப்தனைப் பார்க்கவில்லை. ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைத் தான் பார்த்தார். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும் ஒரு பூதத்தைப் பற்றி சிறுவயதில் கேட்டிருந்த கதை ஒன்று அவருக்கு நினைவுக்கு வந்தது. பூதம் அவர்களை விழுங்கி விடுமா? என்ன தான் வளர்ந்தாலும் அவர்களை விழுங்கி விடுமளவு பூதம் வலிமை பெறுவது சாத்தியமில்லை என்று அறிவு சொன்னாலும் எச்சரிக்கையுணர்வை புறக்கணித்து அவரால் இருக்க முடியவில்லை. தனநந்தனும் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்று அவர் சொன்ன போது அவன் முகமும் களையிழந்தது. அதன் பின் அவன் ஒரு மாதிரியாகவே இருந்தான். மறுநாள் கங்கைக்கு சென்று குளித்து விட்டு வந்த பின் அவன் இயல்பு நிலைக்கு அவன் வந்து விட்டான். ஆனால் அவரால் அப்படி இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத விதங்களில் வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கும் விஷ்ணுகுப்தர் இங்கே சபதமிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை மறக்க முடியவில்லை.
புதியவர்கள்
வருகை குறித்தும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையும் கண்காணிப்பும்
அவசியம் என்று அவர் இப்போதும் ஒற்றர்களிடமும், காவலர்களிடமும் அடிக்கடி சொல்லி வருகிறார்.
ஒற்றர்கள் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையிலும், பயப்படும் வகையிலும் ஒன்றும் இல்லை
என்று தான் சொல்லி வருகிறார்கள். மகத எல்லைகளில் இருந்து வரும் தகவலும் அப்படியே இருக்கிறது.
அது சரியாகவே இருக்கவும் கூடும். விஷ்ணுகுப்தரின்
கவனம் இப்போதைக்கு இங்கில்லாமல் மற்ற இடங்களில் இருக்கக்கூடும். கேகயத்திற்கு அடுத்தபடியாக
யாரைத் தங்கள் பக்கம் இழுப்பது என்ற நினைப்பில் இருக்கக்கூடும். ஆனால் அந்த மனிதர்
தங்களை முழுமையாக வலுப்படுத்திக் கொண்ட பிறகு கண்டிப்பாக இங்கே வருவார் என்பது நிச்சயம்.
வெறுமனே வார்த்தைகளை வீசக்கூடியவர் அல்ல அவர்.
இந்த
யோசனை தான் அவர் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அவர் சில சமயங்களில்
நேரடியாகவே முக்கிய இடங்களுக்குச் சென்று சோதனைகள் மேற்கொண்டார். பயணியர் தங்கும் விடுதிகளிலும்,
முக்கியத் தெருக்களிலும், பாடலிபுத்திர வாயிலிலும் பொதுவாகக் கண்காணிப்பதும், சந்தேகப்படுபவர்களை
அழைத்து விசாரிப்பதும் அவர் திடீர் திடீரென்று செய்யும் வேலைகளாக இருந்தன. அந்தச் சமயங்களிலும்
அவரால் சந்தேகப்படும்படியான எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் முக்கியமான
எதையோ கண்டுபிடிக்காமல் நழுவ விடுவதாய் அவருக்குத் தோன்றும் நெருடலை அவரால் அலட்சியப்படுத்த
முடியவில்லை.
இன்றும்
அவர் திடீரென்று கண்காணிக்கும் உத்தேசத்துடன் நகர வாயிலருகே சென்றடைந்த போது விஜயன்
வணிக வேடத்தில் பொருள்களை நிரப்பிய பயண வண்டியில் உள்ளே வந்து கொண்டிருந்தான். சாரங்கராவ்
தான் அவனை வரவழைத்திருந்தான். விஜயனையும் அந்த வண்டியையும் பார்த்த ராக்ஷசர் சந்தேகமடைந்து
நிறுத்தினார். அவர் அப்படி நிறுத்தியதைப் பார்த்த பின் நகரக் காவல் அதிகாரியும்
விரைவாக அங்கே வந்தான்.
வணிகனின் வேடத்தில் இருந்த விஜயன் பணிவின் மறுவுருவமாக வண்டியில் இருந்து இறங்கி ராக்ஷசரை வணங்கி நின்றான்.
ராக்ஷசர்
அவனிடம் கேட்டார். “உன் பெயர் என்ன? எங்கேயிருந்து வருகிறாய்?”
“பிரபு
என் பெயர் விஜயன். நான் மதுராவிலிருந்து வருகிறேன்.” என்று விஜயன் பணிவுடன் சொல்லி
விட்டுத் தன் அடையாளச் சீட்டை அவரிடம் நீட்டினான்.
அவர்
வாங்கிப் பார்த்து விட்டு “உன் வண்டியில் என்ன பொருள்கள் இருக்கின்றன?” என்று கேட்டார்.
விஜயன்
சொன்னான். “எல்லாப் பொருள்களும் இருக்கின்றன பிரபு. தானியங்கள், கைவினைப்பொருள்கள்,
புலித்தோல், மான்தோல் போன்ற பொருள்கள்….”
ராக்ஷசருக்கு
அவனிடம் எதோ கள்ள லட்சணம் இருப்பது போல் பட்டதால் அவன் சொல்லும் பொருள்கள் தானிருக்கிறதா
என்று சந்தேகம் வந்தது. “பொருள்களைக் காட்டு பார்ப்போம்” என்று ராக்ஷசர் சொன்னார்.
பொதுவாக இது போன்ற
நகரவாயில் சோதனைகள் வணிகர்களை எரிச்சலூட்டுவது வழக்கம். அந்தப் பொருள்களை இறக்கிக்
காட்டி விட்டு மறுபடியும் வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு போவதை அவர்களுக்குச் சிரமத்தை
ஏற்படுத்தும் வேலையாக உணர்வார்கள். ஆனால் விஜயன் உற்சாகமாக வண்டியிலிருந்து பொருள்களை
எடுத்துக் கீழே வைக்க ஆரம்பித்தான். அவனுடைய பணியாளன் ஒருவன் வண்டியில் அமர்ந்து நடப்பதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க விஜயன் அவனைக் கடிந்து கொண்டான். “பொருள்களைக் காட்டச்
சொல்லிய பின்னரும் உன்னைப் போல் சிலை போல் உட்கார்ந்திருந்தால் வியாபாரம் எப்படி ஆகும்
மூடனே. நாம் இங்கே வந்திருப்பது வாணிபம் செய்யவா, இல்லை வேடிக்கை பார்க்கவா?”
விஜயன் கடிந்து
கொண்டவுடன் அந்தப் பணியாளன் வேகமாக வண்டியிலிருந்து இறங்கி தானும் பொருள்களை இறக்கிக்
கீழே வைத்துத் திறந்து காட்ட ஆரம்பித்தான்.
நகரக் காவல் அதிகாரிக்கு விஜயன் ராக்ஷசரை வாடிக்கையாளர் போல் நினைத்துப் பேசிய பேச்சு வேடிக்கையாக இருந்தது. “மூடனே. மகத நாட்டு பிரதம அமைச்சர் உனக்கு வாடிக்கையாளர் போல் தெரிகிறாரா?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு மிரட்டும் தொனியில் கேட்டான்.
விஜயன் இவர் மகத நாட்டு பிரதமஅமைச்சரா என்று அதிசயிக்கும் முகபாவனை காட்டி விட்டுச் சொன்னான். “எங்கள் பொருள்களை அரசர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் விரும்பி வாங்குவார்கள். சில நாட்களுக்கு முன் காசி நகரத்தில் கூட ஒரு அமைச்சர் என் பொருள்கள் வாங்கியதுடன் அடுத்த முறை வரும் போதும் கட்டாயம் வந்து பொருள்களைக் காட்டச் சொன்னார். காரணம் என்னிடம் எல்லாம் குறைந்த விலை தான் பிரபு.” சொன்னதுடன் சலிக்காமல் எல்லாப் பெட்டிகளையும் திறந்து காட்டவும் செய்தான்.
அவன் சொன்னது போலவே
தானியங்களும் கைவினைப் பொருள்களும் இருப்பதைப் பார்த்த ராக்ஷசர் “சரி சரி போதும் பெட்டிகளை
எடுத்து வைத்துக் கொள்” என்று சொன்னார்.
விஜயன் இன்னும்
திறக்காமல் வைத்திருந்த இரண்டு பெட்டிகளையும் திறந்து காட்டும் வேலையில் ஈடுபட்டான்.
“அமைச்சர் பிரபு. இவற்றைப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். சிறப்பான முறையில்
பதன் செய்யப்பட்ட புலித்தோலும் மான் தோலும்.... பார்த்த பின் வாங்காமல் போகத் தங்களுக்கு
மனம் வராது”
அவன் அசராமல் ராக்ஷசரிடம்
புலித் தோலையும், மான் தோலையும் காட்டி விற்க முயன்றது நகரக் காவல் அதிகாரிக்கு வேடிக்கையாக
இருந்தது. அவன் அளவுக்கு நகைச்சுவை உணர்வு
இல்லாத ராக்ஷசர் விஜயனைக் கடுமையாகப் பார்த்து விட்டு நகர்ந்தார்.
விஜயன் நகர்ந்து
செல்லும் ராக்ஷசரை ஏமாற்றத்துடன் பார்த்து விட்டு நகரக் காவல் அதிகாரியிடம் சொன்னான்.
“ஐயா நீங்களாவது ஏதாவது வாங்குங்கள்”
நகரக் காவல் அதிகாரி
சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு விஜயனை மிரட்டினான். “வழியை அடைத்துக் கொண்டிருக்கும்
உன் பொருள்களை வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு சீக்கிரம் இடத்தைக் காலி செய். வணிகம்
செய்யும் இடமா இது?”
விஜயன் தன் பணியாளனைக்
கடிந்து கொண்டான். “ஏன் இப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய். அதிகாரி
சொன்னது உன் காதில் விழவில்லையா? எல்லாவற்றையும் மூடி சீக்கிரம் தூக்கி வை.”
பணியாளன் சுறுசுறுப்பாக
இயங்க நகரக் காவல் அதிகாரி புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான். விஜயன் திருப்தியடைந்தான்.
இந்த இடத்தில் இன்று ராக்ஷசரிடமும், நகரக் காவல் அதிகாரியிடமும் இந்தப் பொருள்களைக்
காட்டி அவன் வணிகன் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தது நல்லதாயிற்று என்று
எண்ணிக் கொண்டான்.
சற்று தொலைவில்
நின்று கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாரங்கராவும் திருப்தியடைந்தான்.
இது போன்ற சூழ்நிலைகளை அனாயாசமாகச் சமாளிக்க விஜயனுக்கு ஈடு இணை யாருமில்லை. சாணக்கியரே
கூட விஜயன் கல்விக்கூடத்தை விட வெளியிடங்களில் நன்றாக சோபிக்கிறான் என்று சொல்வதுண்டு,
அங்கெல்லாம் அவன் அறிவு கூர்மையடைந்து விடுகிறது என்று சிலாகிப்பதுண்டு.
இன்றிரவு அவர்கள்
முக்கிய வேலை ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார்கள். அதனால் தான் அவன் விஜயனை வரவழைத்திருக்கிறான்.
ராக்ஷசரின் வருகை விஜயனின் வருகையின் போதில்லாமல் போகும் போது இருந்திருந்தால் சிக்கலாக
இருந்திருக்கும். எல்லாம் நன்மைக்கே என்று இப்போதைக்குத் தோன்றினாலும் இனி எத்தனை சிக்கல்கள்
இதில் வரக்கூடும் என்பதை அவனாலும் கூற முடியாது. ஆனால் சிக்கல்களும் சிரமங்களும் இல்லாமல்
மகத்தான சாதனைகளை யாரும் சாதித்து விட முடியாதல்லவா?
(தொடரும்)
என்.கணேசன்
Monday, July 1, 2024
யோகி 56
பரசுராமன் சிரித்துக் கொண்டே சொன்னார். “சுகுமாரனுக்கு
முப்பது சதவீதப் பிரயோகமே பைத்தியம் பிடிக்க வெச்சுடும். பாண்டியனுக்கு
ஐம்பது சதவீதப் பிரயோகத்தைப் பயன்படுத்தினால் பைத்தியம் பிடிச்சுடும். ஐம்பது
சதவீதத்திற்கு மேலான பிரயோகங்கள் உக்கிரப் பிரயோகங்கள். அதெல்லாம்
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி தவறான கர்மாவை எனக்கு உருவாக்கிடும்...”
“தப்பு செய்யறவங்களோட
கர்மாவோட பலன்களை அவங்க அனுபவிக்கற கணக்குல அது சேர்ந்துடாதா?”
“எந்த அளவுல
அவங்க கர்மா பூஜ்ஜியம் ஆகுதுன்னும், எந்த அளவுக்கு மேல
அது அதிகமாகி இதை ஏற்படுத்தறவனோட தவறான கர்மா கணக்குல சேர ஆரம்பிக்குதுன்னும் கடவுளைத்
தவிர யாராலும் துல்லியமாய்ச் சொல்ல முடியாது ஷ்ரவன். அந்த நியாயக்
கணக்கு கடவுள் ஒருத்தருக்குத் தான் தெரியும். அதனால தான் பல மதங்கள்ல நியாயத் தீர்ப்பு வழங்க முடிஞ்சவராய்
கடவுளைத் தான் சொல்றாங்க.”
இதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றதா
என்று ஷ்ரவன் வியந்தான். பரசுராமன் மேலும் விளக்கினார். “உதாரணத்துக்கு
நாம பண்ற உக்கிரப் பிரயோகங்களால சுகுமாரனுக்கோ, பாண்டியனுக்கோ
பைத்தியம் பிடிச்சுடுதுன்னு வெச்சுக்குவோம். பைத்தியம்
பிடிச்ச அவங்க செய்கைகளால மத்தவங்க பல விதமாய் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு. பாதிக்கப்படற
ஆட்கள்ல நிறைய நல்லவங்களும் இருக்கலாம். அவங்க பாதிப்பெல்லாம்
என் கர்மாலயும் வந்து சேரும்.... அதனால தான் இவங்க ரெண்டு பேரும் நிம்மதியாய் இருந்துட முடியாத
அளவுக்கு மட்டும் தான் சக்திப் பிரயோகங்கள் செய்யப் போகிறேன். ஆரம்பத்துல
சில நேரங்கள்ல மட்டும் தான் அவங்களுக்கு அந்தச் சக்திப் பிரயோகங்கள் தெரியவரும். போகப் போக
அது தெரியவரும் பொழுதுகள் அதிகமாகும். அதுல இருந்து மீள்றதுக்காய்
கண்டிப்பாய் ஏதாவது செய்யாமல் இருக்க மாட்டாங்க. தப்பு பண்ணின
ஆட்கள் எல்லாம் கண்டிப்பாய் ஒன்னு சேர்ந்து யோசிப்பாங்க. கண்டிப்பாய்
செயல்படுவாங்க. இப்படி அவங்க சமநிலை இல்லாமல் செயல்படறப்ப நிச்சயமாய் தவறுகள்
செய்வாங்க. அது உங்களுக்கு சாதகமாய் இருக்கும்...”
ஷ்ரவனுக்கு அவருடைய நிலைப்பாடு இப்போது
தெளிவாகத் தெரிந்தது. ஒரு சந்தேகம் மெல்ல மனதில் எழ அவன் அதையும் அவரிடம் கேட்டான். “சுகுமாரனுக்கு
நீங்கள் பாதிப்பை ஏற்படுத்தின விதம் எனக்கு இப்ப புரியுது. ஆனால் அவர்
வீட்டு நாய் எப்படி....?”
“அந்த வீட்டு
மண் நமக்குக் கிடைச்சதால அந்தத் தோட்டத்துல ஒரு அமானுஷ்ய சக்தி அலையை நம்மால அனுப்ப
முடிஞ்சுது. எந்த அமானுஷ்ய சக்தியையும் விலங்குகளால மனிதர்களை விட சூட்சுமமாய்
அறிய முடியும்.”
ஷ்ரவன் பிரமிப்புடன் தலையசைத்தான். ’எத்தனை
பிரம்மாண்டமான விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. என்னவெல்லாம்
இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளவே வாழ்க்கை போதாதே! இப்படி
இருப்பதையே தெரிந்து கொள்ளாமல் சில்லறை விஷயங்களிலேயே எப்படி மனிதன் தங்கி வாழ்ந்து
விட்டுப் போய் விடுகிறான்!’
பாண்டியன் போன பின்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப சுகுமாரனுக்கு
நிறைய நேரம் தேவைப்பட்டது. திடீரென்று எங்காவது சைத்ராவின் ஆவி தெரிய ஆரம்பித்து விட்டால்
என்ன செய்வது என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. சுமார்
ஒரு மணி நேரம் பீதியடையும்படி எதுவும் நடக்காத பின் தான் தைரியம் வந்தவராய் தன் வேலைகளைச்
செய்ய ஆரம்பித்தார். ஆனாலும் கூட அவரால், டாமி போல், நிம்மதியாய்
உறங்கிவிட முடியவில்லை. உறங்கிக் கொண்டிருக்கையில் ஆவி கழுத்தை நெறித்து விட்டால்
என்ன செய்வது என்ற பயம் வந்து பாடாய் படுத்தியது. அப்படி ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை அவர் பார்த்திருக்கிறார். பாவிகள்
ஏன் இப்படி திரைப்படங்களை எடுத்து மனிதர்களைப் பீதியடையச் செய்ய வேண்டும்? என்றைக்கோ
பார்த்தது எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறதே!
சிறிது நேரத்தில் அவரால் எந்த வேலையிலும்
கவனம் செலுத்த முடியவில்லை. கண்கள் தானாகச் சொருக ஆரம்பித்தன. உறங்காமல்
தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் யோசித்தவர், கூண்டிலிருந்து
டாமியை அறைக்கு அழைத்துக் கொண்டு வந்து “இங்கேயே இருடா” என்று சொன்னார். டாமி குரைத்து
சரியென்றது.
’இரவு வரை
ஆவி வராது. அப்படியே ஆவி இடையில் வந்தாலும் கண்டிப்பாக உடனடியாக டாமி
குரைத்து அவரை எழுப்பி விடுவான்.’ சுகுமாரன் கண்களை மூடியவர் உறங்கிப் போனார். அவர் கண்விழித்த
போது மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. அவருடைய கைபேசி 25
மிஸ்டு கால்கள் என்று காண்பித்தது. அதில் மூன்று
மட்டும் முக்கியமான அழைப்புகள். அந்த மூவரை மட்டும் அழைத்துச் சுருக்கமாகப் பேசி விட்டு இருட்டுவதற்காக
அவர் காத்திருந்தார்.
’பாண்டியனை
இருட்டியவுடனேயே வரச் சொல்லியிருக்கலாம். அவர் வருவதாகச்
சொல்லியிருந்த பத்து மணிக்கு முன் அந்தப் பெண்ணின் ஆவி வந்து விட்டால்...?’
என்ற எண்ணம் திடீரென்று அவர் மனதில் எழுந்தது.
உடனடியாக பாண்டியனை அழைத்து, சீக்கிரம்
வரச் சொல்ல அவர் மனம் துடித்தது. கைபேசியை எடுத்து அழைக்க முற்பட்ட போதோ பாண்டியன் எகத்தாளமாய்ப்
பேசுவார் என்ற யதார்த்தம் மனதில் உறைத்தது. ‘ஏன் ஆவி
சீக்கிரமாய் வர்றேன்னு சொல்லியிருக்கான்னு எகத்தாளமாய்க் கேட்பார். இந்தச்
சனியன் பிடித்த ஆவி மற்றவர்கள் முன் எப்படியெல்லாம் என்னைத் தலைகுனிய வைத்து விட்டது!’
இருட்டுவதற்கு முன் ஏதாவது தற்காப்பு
நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியுமா என்று சுகுமாரன் யோசிக்க ஆரம்பித்தார். கூகுளில்
ஆவியைத் துரத்துவது எப்படி, ஆவி வராமல் தடுத்துக் கொள்வது எப்படி என்று தேட ஆரம்பித்தார்.
கூகுளில் கிடைத்த தகவல்கள் எதுவும்
சுகுமாரனுக்கு நம்பிக்கை தரவில்லை. வெளிநாட்டினர் பலரும்
ஆவி நெருங்காமல் தடுப்பவைகளாக சிலுவையையும், பைபிளையும்
சொல்லி இருந்தார்கள். உள்நாட்டுக்காரர்கள் பலரும் தாயத்து, திருநீறு
பற்றிச் சொல்லியிருந்தார்கள். சிலர் மந்திரித்த எலுமிச்சம்பழத்தையும், சிலர் விளக்குமாறையும்
கூடச் சொல்லியிருந்தார்கள். எல்லோரும் தெளிவாக ஒரே கருத்தை ஏன் சொல்ல மாட்டேன்கிறார்கள். பேய்கள்
பற்றிய அனுபவங்கள் மக்களுக்குப் போதாதோ?
ஒருவர் அறிவுபூர்வமாய் அலசுவது போல்
நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். முடிவில் அவர் மயான காளி படத்தை வீட்டில் வைத்திருந்தால்
ஆவி பேய்கள் வராது என்று சொல்லியிருந்தார். ஆவிகளையும், பேய்களையும்
ஆட்சி செய்பவள் அவளே என்பதால், மயான காளி பூஜிக்கப்படும் இடத்தில் அவை வர அஞ்சும் என்றும்
முடிவில் ஆணித்தரமாய்ச் சொல்லியிருந்தார். அந்தக்
கட்டுரைக்குக் கீழ் பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர் சொன்னபடி
செய்து ஆவி, பேய்களின் தொந்தரவிலிருந்து விடுபட்டதாய் பலரும் நன்றியுடன்
சொல்லியிருந்ததைப் படிக்கையில் சுகுமாரனுக்கு அது சரியாக இருக்கலாம் என்று தோன்றியது.
சுகுமாரன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி நான்கரை. உடனே மயான
காளி படம் வாங்க அவர் கிளம்பினார். இருட்டுவதற்குள்
வீட்டுக்கு மயான காளி வந்து விட்டால் அதன் பின் ஆவி வரத் தயங்கலாம்...
மயான காளியின் படம் கிடைப்பது சுகுமாரனுக்கு எளிதாக இருக்கவில்லை. அவர் சாமிப்படங்கள்
விற்கும் பல கடைகளில் ஏறியிறங்கி சலித்தார். எல்லாக்
கடைகளிலும் கிட்டத்தட்ட மற்றெல்லா தெய்வப் படங்களும் இருந்தன. ஒரு கடைக்காரர்
கல்கத்தா காளியின் படம், மயான காளியின் படத்துக்கு இணையானது என்று சொல்லி அந்தப் படத்தை
விற்பனை செய்யப் பார்த்தார். ஆனால் சுகுமாரன் அது உண்மை தானா என்று சோதித்துப் பார்க்க
விரும்பவில்லை. ’நீ உன் இஷ்டத்துக்குச் சொல்லுவே. அந்த ஆவி
அப்படி நினைச்சு என் வீட்டுக்குள்ளே வராம இருக்கணுமே’
கடைசியாக ஒரு கடையில் இருந்த இளைஞன்
அவரிடம் சொன்னான். “சார், யாரும் அந்த மாதிரி படங்களை வீட்டுக்கு வாங்கிட்டு போறதில்லை. அதெல்லாம்
மந்திரவாதிகள் தான் அதிகமாய் பயன்படுத்தறாங்க. வேணும்னா
ஒன்னு செய்வோம். நெட்ல மயான காளி படங்களை காட்டறேன். அதுல உங்களுக்குப்
பிடிச்ச ஒரு படத்தை நீங்க தேர்ந்தெடுங்க. அதை கலர் ப்ரிண்ட்
எடுத்து ஃப்ரேம் போட்டுக் குடுத்துடறேன். என்ன சொல்றீங்க?”
சுகுமாரனுக்கு அது நல்ல ஆலோசனையாகத்
தோன்றியது. சரியென்றார்.
(தொடரும்)
என்.கணேசன்
















