என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 2, 2019

இருவேறு உலகம் – 134


க்ரிஷுக்கு விஸ்வேஸ்வரய்யா போன் செய்தார். “க்ரிஷ். உங்களை சந்தித்த போது நான் ஒரு உண்மையைச் சொல்லவில்லை. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கணும். எனக்கு ஒரு இல்லுமினாட்டி உறுப்பினரைத் தெரியும். அவர் அனுமதி இல்லாமல் உங்களிடம் அதைத் தெரிவிப்பது சரியல்ல என்பதால் நான் சொல்லவில்லை. அவரிடம் நீங்கள் சொன்னதை எல்லாம் சொன்னேன். நீங்கள் சொல்வது போல விஸ்வம் சில மாதங்களுக்கு முன் இல்லுமினாட்டியில் சேர்ந்தது உண்மை என்கிறார். அமானுஷ்ய சக்திகளும் காட்டியதால் பிரபலமாகி விட்டாதாகவும் சொல்கிறார். சீக்கிரமே விஸ்வம் தலைமைப் பொறுப்பு வரை போகும் வாய்ப்பு கூட இருக்கிறது என்கிறார். அவர் நீங்கள் விரும்பினால் விஸ்வத்துக்கு எதிரான உங்கள் கருத்துகளை இல்லுமினாட்டியிடமே நேரடியாகச் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறேன் என்கிறார். என்ன சொல்கிறீர்கள்?”

க்ரிஷ் சிறிது நேரம் பேச்சிழந்தான்.

அவர் மெல்ல சொன்னார். ”இது நீங்கள் என்னிடம் சொன்ன பிரபஞ்ச சக்தி உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாகக்கூட இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியதால் சொன்னேன். விருப்பமில்லா விட்டாலும், தயக்கம் இருந்தாலும் சொல்லுங்கள் நான் தெரிவித்து விடுகிறேன்…..”

“நான் எங்கே வரவேண்டும்……” க்ரிஷ் கேட்டான்

“ஜெர்மனியில் ம்யூனிக்குக்கு வரவேண்டும். ஆனால் தனியாகத் தான் வரவேண்டும் என்கிறார்.”

க்ரிஷ் யோசனையோடு சொன்னான். “வீட்டில் என்னைத் தனியாகப் போக அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. உங்களிடம் நான் அன்றே சொன்னபடி என் உயிருக்கு ஆபத்து இதற்கு முன் வந்திருக்கிறது…….”

“உங்கள் உயிருக்கு இல்லுமினாட்டி உத்தரவாதம் கொடுக்கிறது. அவர்கள் சொன்ன பேச்சை இது வரை மீறியதாக சரித்திரம் இல்லை. விஸ்வம் கூட உங்களுக்கு எதிராக எந்த முயற்சியும் எடுக்க மாட்டார். அப்படி ஏதாவது எடுத்தால் இல்லுமினாட்டி அவருக்கு எதிராகி விடும்….. அதனால் அந்த அளவுக்கு அவரும் போக மாட்டார்……”

க்ரிஷ் தயங்கினான். விஸ்வேஸ்வரய்யா சொன்னார். “நீங்கள் யோசிப்பது புரிகிறது….”

க்ரிஷ் சொன்னான். “எனக்கு சாக பயமில்லை. ஆனால் ஒருத்தி என்னை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். என் குடும்பமும் என்னை அதிகமாகவே நேசிக்கிறது. அவர்களை வேதனைப்படுத்த விரும்பவில்லை அவ்வளவு தான்…..”

“அது ரகசியமான இயக்கம் என்பதால் உங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு தான் கூட்டிக் கொண்டு போவார்கள் என்றும் அப்படியே தான் நீங்கள் பேச வேண்டியிருக்கும் என்றும் வெளிப்படையாகவே அந்த உறுப்பினர் சொன்னார். நீங்களாக அவர்களைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுக்காத வரையில் உங்களைப் பத்திரமாக வீடுதிரும்ப வைப்பது இல்லுமினாட்டியின் பொறுப்பு என்கிறார். இல்லுமினாட்டியைத் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை, வேண்டுமானால் பிரபஞ்ச சக்தி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கட்டும் என்கிற மாதிரி நீங்கள் சொன்னதால் தான் சொல்கிறேன்….. இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள். உங்கள் முடிவு என்னவானாலும் அவரிடம் அப்படியே சொல்லி விடுகிறேன்….”

“எப்போது வர வேண்டும்?” க்ரிஷ் கேட்டான்.


தனியாகப் போக வேண்டும் என்றவுடனேயே உதய் எதிர்ப்பு தெரிவித்தான். ”முட்டாளாடா நீ….”

“பாரு வாழ்க்கைல சில ரிஸ்க் எடுத்து தான் ஆகணும். சாகணும்னு விதி இருந்தா எப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலைல இருந்தாலும் செத்து தான் ஆகணும்…. வேணும்னா அம்மா கிட்ட மஞ்சள் துணில நூத்தியொரு ரூபா முடிஞ்சு வெக்கச் சொல்றேன்…..” என்று சொல்லி க்ரிஷ் சிரித்தான்.

தம்பி பிடிவாதமாக நின்றதால் உதய் அரை மனதோடு சம்மதித்தான். தம்பியைக் கட்டிக் கொண்டு சொன்னான். “ஏதாவது ஆபத்து வர்ற மாதிரி இருந்தா அங்கிருந்தே போன் பண்ணுடா. தூதரகம் மூலமா பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யறேன்…..”

க்ரிஷ் ஹரிணிக்குத் தனதறையில் முத்தம் கொடுத்து விட்டுப் போவதைச் சொன்னான். அவள் கண்களில் கலவரம் தெரிந்தது. “போயே ஆகணுமாடா”

“போகலைன்னா, நாளைக்கு ஏடாகூடமா ஏதாவது ஆனா எனக்கு என்னையே மன்னிக்க முடியாது ஹரிணி….” என்று க்ரிஷ் சொல்ல தயக்கத்துடன் கால் மனதோடு அவள் சம்மதித்தாள். அவன் திரும்பி வரும் வரை அவள் பிரார்த்தித்துக் கொண்டு இருப்பாள்….

முழு மனதாக உற்சாகமாக அவன் போகச் சம்மதித்தவள் பத்மாவதி தான். அவளிடமும், கமலக்கண்ணனிடமும் ஜெர்மனியில் ஒர் பல்கலைக்கழகத்தில் பேசக்கூப்பிட்டிருப்பதாக க்ரிஷ் சொன்னான். கிளம்பும் போது அவள் காலில் விழுந்து க்ரிஷ் வணங்கினான். “இது முக்கியமான மீட்டிங்ம்மா. நான் நல்லா பண்ணனும்னு ஆசிர்வாதம் பண்ணு”

பத்மாவதி உடனே போய் ஒரு டப்பாவில் வைத்திருந்த திருநீறை எடுத்து மகன் நெற்றியில் இட்டுச் சொன்னாள். “நல்லா பண்ணுவேடா. பகவான் உன் கூடவே இருப்பார்…”

உதய் மனதில் படர ஆரம்பித்திருந்த பயத்தில் இருந்து விடுபட வேண்டி தாயை வம்புக்கிழுத்தான். “அம்மா திருநீறு அழிஞ்சு போன பிறகும் பகவான் கூடவே இருப்பாரா”

“நம்பிக்கை இருக்கற வரைக்கும் கூடவே இருப்பார் தடியா”

“ஏம்மா பகவானைத் தடியான்னு கூப்டறே. கோவிச்சுக்க மாட்டாரா?” என்று அவன் கேட்க அவனை எதால் அடிப்பது என்று பத்மாவதி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

க்ரிஷ் தந்தையையும் காலில் விழுந்து வணங்க கமலக்கண்ணன் மனதார ஆசிர்வதித்தாலும் மனம் ஏனோ பதைத்தது. அவன் இப்படிக் கும்பிட்டு விட்டு எங்கேயும் போனதில்லை. தனியாக வேறு போகிறான்….. தனியாக உதயிடம் கேட்டார். “ஏண்டா ஒன்னும் பிரச்னை இல்லையே?”

கவலையை அவர் மனதிலும் பரப்பி எதுவும் ஆகப்போவதில்லை என்று நினைத்த உதய் முகத்தில் தைரியத்தைக் காட்டி “இல்லைப்பா” என்றான். ஆனால் கூடவே அம்மா அடிக்கடி வேண்டும் மூன்று கோயில்களுக்கு அவன் மனதில் வேண்டிக் கொண்டு ரகசியமாக மூன்று நூற்றியொரு ரூபாய்கள் எடுத்து வைத்தான்….


க்ரிஷ் கிளம்பும் முன் மானசீகமாக மாஸ்டரையும் கடவுளையும் வணங்கிவிட்டுக் கிளம்பினான். ”இனி என்ன நடக்க வேண்டும் என்று பிரபஞ்சம் தீர்மானிக்கிறதோ அதன்படி நடக்கட்டும். நான் செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்ற மனநிலையில் கிளம்பியவனுக்கு நடந்து கொண்டிருப்பவைகளை நிஜம் என்று நம்ப முழுவதுமாக இன்னமும் முடியவில்லை. இல்லுமினாட்டி இருப்பது நிஜம். அதில் விஸ்வம் இணைந்திருப்பது நிஜம். அவன் அதிலும் தலைமை வரை போகும் வாய்ப்பு இருப்பது நிஜம்…. தனி மனிதனாக பலசக்திகளை அடைந்து விட்டிருக்கும் விஸ்வத்துக்கு அது போன்ற அமைப்பின் சாதாரணத் தொடர்பே ஆபத்து. இந்த நிலை இருக்கையில் தலைமை வரை போகும் வாய்ப்பு வந்தால் என்ன ஆகும்?

இங்கே ஒரு விஷயம் இயல்பாய் அவனுக்குத் தோன்றவில்லை. இல்லுமினாட்டி போன்ற உலகளாவிய அமைப்பில் உறுப்பினராவதே சுலபம் அல்ல. அப்படி இருக்கையில் சேர்ந்த சில மாதங்களிலேயே அமானுஷ்ய சக்திகள் சேர்த்திருப்பதாலேயே தலைமை வரை போகலாம் என்பது நம்பக்கூடியதாய் இல்லை. இதில் கூட ஏதாவது இருக்கலாம்…. அல்லது அந்த அனுமானம் பொய்யாகவும் இருக்கலாம்…. ஆனால் உண்மை என்றால் உலகை அழிக்கக்கூடிய அத்தனையும் விஸ்வத்தின் கையில் கிடைத்தது போலத் தான். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது நடந்தே தீரும்….. ஆனாலும் வேற்றுக்கிரகவாசி அழிவுக்கு விஸ்வம் தான் காரணம் என்று சொல்லவில்லை. இந்த சமூகத்தின் மனப்போக்கையே காரணம் என்றான். அதைத் தனக்கு விஸ்வம் சாதகமாக்கிக் கொண்டு செயல்படுவான் என்பது போல் சொன்னான். விஸ்வத்தை நீக்கினாலும் இணையான வேறொருவன் வந்தாலும் அழிவு நிச்சயம் தான். அதனால் பிரச்னை விஸ்வம் தான் என்று நினைப்பதும், அவன் போனால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைப்பதும் கூடச் சரியல்ல. சமூக மாற்றத்திற்கு தனி மனித மாற்றம் முக்கியம். தனி மனித மாற்றத்துக்குச் சமூகச் சூழல் முக்கியம். ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துள்ள நிலையில் எல்லாவற்றையும் காப்பாற்றக்கூடிய மாற்றத்திற்கு இந்தப் பயணத்தில் சிறு விதையாவது விதைக்க முடியுமா என்று யோசித்தான். எல்லாம் கஷ்டமானது தனிமனிதனுக்குச் சாத்தியமானதல்ல என்று மனம் சொன்னது. பிரபஞ்ச சக்தியின் உத்தேசம் அந்த மாற்றம் என்றால் எதுவும் முடியாததல்ல, எல்லா மாற்றங்களும் ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அந்தப்புள்ளியாக நான் கண்டிப்பாக இருந்து விட முடியும் என்று உள்ளிருந்து ஒரு குரல் சொன்னது. க்ரிஷ் ற்சாகமானான்.

”எல்லாம் நீ….. நான் கருவி மட்டுமே…. என் பங்கில் குறை வைக்க மாட்டேன். கருவிக்கு விளைவில் பங்கில்லை. விளைவு இயக்குபவனையே சேர்ந்தது……..” என்ற நினைவோடு கண்களை மூடியவனுக்கு ஆபத்துக்கு அனைத்து வாய்ப்புகளும் நிறைந்த அந்தச் சூழலிலும் உறக்கம் உடனே வந்தது.


விஸ்வம் உறங்கவில்லை.  இயல்பாகவே உறக்கம் குறைவான அவனுக்கு இப்போதைய சூழல் பல விதங்களிலும் சாதகமாக இருந்த போதிலும் நெருடலாகவே இருந்தது. க்ரிஷ் உடனே கிளம்பி வருவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. உதய் எந்த தைரியத்தில் தம்பியை அனுப்பினான்? எதை நம்பி இப்படி இந்த முட்டாள் தனியாக வருகிறான்? இல்லுமினாட்டி கூட்டத்துக்கு வரும் முன்பே அவனை முடித்து விடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் இல்லுமினாட்டி க்ரிஷ் முட்டாள்தனமாக எதாவது செய்யாத வரை அவன் திரும்பிப் போகும் வரை பாதுகாப்பாக இருக்கும் என்று நவீன்சந்திர ஷா சொன்னது நினைவுக்கு வந்தது. அதை விட முக்கியமாய் ஏலியன் அவன் பாதுகாப்புக்குத் தனி ப்ரோகிராம் ஒன்றைப் போட்டு விட்டுப் போயிருக்கலாம் என்ற சந்தேகம் இன்னும் அவனை விட்டு விலகவில்லை. சில சக்திப் பிரயோகங்கள் அனுப்பியவர்கள் மீதே திரும்பி வரும்படியான சூட்சும வித்தைகளை சிறந்த யோகிகள் அறிவார்கள். ஏலியன் அவர்களை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவன். அதைப் போட்டு க்ரிஷைப் பாதுகாத்து விட்டே போயிருக்கவும் வாய்ப்பு உண்டு. ’எப்போதாவது விஸ்வம் அவனைத் தாக்க முயல்வான். அப்போது அவனே அதில் திரும்பத் தாக்கப்பட்டு சாவான் என்று கூட நினைத்திருக்கலாம். அதனால் தான் என் பக்கமே வராமல் போயிருக்கிறான்’.

கடைசியில் விஸ்வம் க்ரிஷைக் கொல்லும் நினைவுகளை அடியோடு மனதில் இருந்து அழித்தான். க்ரிஷ் வரட்டும். இல்லுமினாட்டிக்குப் பிடிக்காத, புரியாத நீதி, நேர்மை, நியாயம், அன்பு, கடவுள், கருணை என்று எல்லாம் பேசி அவர்கள் பொறுமையைச் சோதிக்கட்டும். அவர்கள் அவனைப் புறக்கணிப்பது தான் அவனுக்குச் சரியான தண்டனை, மூக்குடைப்பு.

இந்த எண்ணம் ஓடிய போது பிரமிடு-நெற்றிக்கண் ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது. விஸ்வம் அதைப் பார்த்துப் புன்னகைத்தான். என் அதிர்ஷ்டச் சின்னம் இருக்கும் வரையில் நானே பிரம்மன்! நானே விதி எழுதுபவன்! நானே இல்லுமினாட்டி! மூட நம்பிக்கைகளை ஆதரிக்காத இல்லுமினாட்டி அந்தப் பழஞ்சுவடியையும் அது சொல்லியிருப்பதையும் மூடநம்பிக்கையாக நினைக்கவில்லை. அதை மிக உறுதியாக நம்புகிறார்கள். இல்லுமினாட்டியில் இணைவதே சுலபமல்ல என்ற நிலைமையிருக்கையில் சிகாகோ கோவிலின் பழஞ்சுவடிக் கதையைச் சொல்லி இல்லுமினாட்டிக்குள் நுழைந்தேன். அதில் தலைமைப் பதவி ஒவ்வொரு இல்லுமினாட்டியின் பெருங்கனவாக இருக்கும். இந்தப் பிரமிடுச் சின்னம் கொண்டு வந்து அதில் அடையாளம் சொல்லப்பட்ட நபர் நானே என்று காட்டி இதை வைத்தே சீக்கிரம் தலைவனுமாவேன். அதிர்ஷ்டவசமாக இந்தச் சின்னம் அவ்வப்போது மின்னவும் செய்கிறது. விதியே வேகமாக எனக்கு இப்படி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கையில் எனக்கு கவலைப்பட என்ன இருக்கிறது?.....

பிறகு அவனும் நிம்மதியாக உறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்   

Wednesday, May 1, 2019

ஆழ்மனசக்தி அடையும் வழிகள் இரண்டாம் பதிப்பு வெளியீடு!





அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.

உங்களுடைய பேராதரவின் காரணமாக ஆழ்மனசக்தி அடையும் வழிகள் நூல் தற்போது இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஜனவரியில் சென்னை புத்தகத் திருவிழாவிலேயே விற்றுத் தீர்ந்த இந்த நூலின் இரண்டாம் பதிப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது.

 நூலின் அத்தியாயத் தலைப்புகள்
1        ஆழ்மனம்-ஒரு ஆழமான பார்வை
2        ஆழ்மனம் இயக்கும் செல்கள்- விஞ்ஞானப் பார்வை
3         தவறான நம்பிக்கை தடுமாறும் வாழ்க்கை!
4         நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கும் ஆழ்மனம்!
5          ஒருவரை இளமையாக்கும் ஆழ்மனம்!
6         மயக்க மருந்தில்லா அறுவை சிகிச்சைகள்!
7         மரணத்தை வென்று மருத்துவர்களைக் குழப்பியவர்கள்!
8        மருத்துவம் அறியாத ஆழ்மன மகத்துவம்!
9        குணமாகும் தருணங்களில் உணர்ந்தது என்ன?
1     விஞ்ஞானம் அளக்க முடிந்த ஆழ்மன சக்திகள்!
1         ஆழ்மனசக்தியும் மரபணுத் தகவல் கட்டமைப்பும் (DNA)
1         எதை நீங்கள் ஈர்க்கிறீர்கள்?
1        எண்ணங்களில் உள்ளது சூட்சுமம்!
1   எண்ண வைரஸ்களை நீக்குங்கள்!
1      ஆக்கபூர்வ எண்ணங்களை வலிமையாக்குங்கள்!
1       ஆழ்மன செயல்திட்டங்களைத் திருத்துங்கள்!
1       ஆழ்மனதை வசப்படுத்த சில வழிகள்!
1        ஓய்வான மனநிலையின் மகத்துவம்!
1        காட்சிப்படுத்தும் கலைப்பயிற்சிகள்!
2         மூளையை முழுத்திறனோடு வைத்திருக்க வழிகள்!
.           ஆழ்மனசக்தியில் தியானத்தில் பங்கு!
2        உங்களை மாற்றிக் கொள்வதெப்படி?
2        உண்மையான உள்ளுணர்வைப் பெறுவதெப்படி?
2        தொலைதொடர்பு சக்தி பெறுவதெப்படி?
2        கனவுகள் மூலம் ஆழ்மனச் செய்திகள்!
2        சக்தி அலைகளைப் படிக்கும் யுக்தி!
2        தொலைநோக்கு சக்தி பெற முடியுமா?
2         உடலை விட்டு வெளியே பயணிக்க முடியுமா?
2        போதை வழி வரும் சக்திகள்
3        மேலும் சில சக்தியாளர்கள்!
3       பன்முக ஆளுமை என்னும் அதிசயம்!
3       மேலும் சில ஆராய்ச்சியாளர்கள்!
3      வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்!
3      முடிவல்ல ஆரம்பம்!

இந்த நூலை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, April 29, 2019

சத்ரபதி 70

காவல் வீரன் சொன்னான். “அவர் நம் ஒவ்வொரு படைப்பிரிவிலும் போய் சிவாஜி தந்த சிறு சிறு பரிசுகளை அளித்துக் கொண்டிருக்கிறார் பிரபு”

அப்சல்கான் கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் கேட்டான். “சிவாஜிக்கு இந்தக் கோமாளியை விட்டால் வேறு ஆளே தூதுவனாக அனுப்பக் கிடைக்கவில்லையா?”

கிருஷ்ணாஜி பாஸ்கர் புன்னகைத்தார். “இந்த ஆள் எல்லோரிடமும் வளைந்து குழைந்து பேசி காரியம் சாதித்து விட்டு வருவார் என்று சிவாஜி நினைக்கிறான் போல் தெரிகிறது. எப்பாடுபட்டாவது உங்களுடனான போரைத் தவிர்க்க நினைக்கிற சிவாஜிக்கு பணிவாய் பேசி விட்டு வரக்கூடிய இந்த ஆள் சரியான ஆள் என்று தோன்றியிருக்கிறது போல் இருக்கிறது…”

அப்சல்கான் அந்த முட்டாள்தனத்தை எண்ணிச் சிரித்தான்.

அப்சல்கானால் கோமாளி என்றழைக்கப்பட்ட பண்டாஜி கோபிநாத் ஒவ்வொரு படைப்பிரிவிலும் உள்ளே நுழைந்து பரிசுகள் தரும் சாக்கில் படைப்பிரிவின் அளவு, பலம், பலவீனம், அந்தப் பிரிவுத் தலைவர்களின் பிரத்தியேக குணாதிசயங்கள் பற்றி எல்லாம் அறிய முயன்று கொண்டிருந்தார். அப்சல்கானின் காவல் வீரன் தேடி வந்து “தலைவர் உங்களை அழைக்கிறார்” என்று சொல்லும் வரை வேண்டிய அளவு தகவல்கள் சேகரித்திருந்த பண்டாஜி கோபிநாத் வயதிற்கு மிஞ்சிய வேகத்தோடு அப்சல்கானைச் சந்திக்க விரைந்தார்.

அப்சல்கானைச் சந்தித்தவுடன் மறுபடி காலில் தடால் என்று விழுந்து வணங்கிய பண்டாஜி கோபிநாத்தை ஒற்றைக் கையால் எழுப்பி நிறுத்திய அப்சல்கான் அவரிடம் சிவாஜிக்குத் தன் செய்தியைச் சொல்லி அனுப்பினான்.

“…..  பேச்சு வார்த்தை நடத்த பிரதாப்கட்டுக்கு வருவதில் எனக்கு மட்டும் அல்லாமல் என் பெரும்படைக்கும் சிக்கலும் சிரமங்களும் அதிகம் என்றாலும் அழைத்திருப்பது என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்ட நீ என்பதால், உனக்கு இங்கு வருவதில் தயக்கமும் அச்சமும் இருப்பதால், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நான் அங்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நாங்கள் அந்தப் பகுதிக்கு வர வழியில் தகுந்த ஏற்பாடுகளை நீ செய்வாய் என்று நம்புகிறேன். முறையான ஏற்பாடுகளையும், சௌகரியங்களையும் செய்து முடித்த பிறகு  நீ செய்தி அனுப்பினால் பின் உனக்கு அறிவித்து விட்டு நான் இங்கிருந்து கிளம்புகிறேன். நீயும் பிரதாப்கட் கோட்டையிலிருந்து இறங்கி வா. இருவரும் ஏற்றுக் கொள்ளும்படியானதொரு இடத்தில், அதற்கேற்ற ஒரு சூழலில் சந்தித்துப் பேசுவோம். அது குறித்து நம் இரு பக்க அதிகாரிகளும் கூடிப் பேசி முன்பே ஒரு முடிவை எட்டுவோம்.

இப்படி உன் நலம் விரும்பி
அப்சல்கான்”        


அப்சல்கானின் செய்தி கிடைத்தவுடன் சிவாஜி தன் ஆலோசகர்களுடனும், படைத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினான். அப்சல்கானின் படை பிரதாப்கட் வரை வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து தரும் யோசனையை சிவாஜியின் சில படைத்தலைவர்கள் ஏற்கவில்லை. ஒருவர் சொன்னார். ”மன்னா. மலைக்காடுகளுக்கு நடுவே இருக்கும் இந்த இடத்தின் மிகப்பெரிய பலமே எதிரிகள் இங்கே ஊடுருவுவதில் இருக்கும் கடுஞ்சிரமங்கள் தான். அப்படி இருக்கையில் அவர்களுக்கு இங்கே வரவும் நாம் ஏற்பாடு செய்து தந்தோமானால் அது முட்டாள்தனம் அல்லவா?”

சிவாஜி அமைதியாய்ச் சொன்னான். “இதே எண்ணம் அப்சல்கான் மனதிலும் ஏற்பட வேண்டும் என்பது தான் என் உத்தேசம். இந்த முட்டாள் தனம் தான் அவனை இங்கே வரை இழுத்து வரும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொன்னது போல் இதில் ஆபத்து இல்லாமல் இல்லை. ஆனால் அப்சல்கானைச் சந்திக்க இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. வேறெதாவது வழி இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்”

அந்தப் படைத்தலைவருக்கும் வேறு வழி தெரியவில்லை. மற்றவர்களுக்கும் தெரியவில்லை. சிவாஜி தொடர்ந்து சொன்னான். “அவனை அப்புறப்படுத்தினால் ஒழிய நாம் வெளியே போக முடியாது. அவனுக்குப் பயந்து வெளியே போகாமல் இங்கேயே நாம் எத்தனை காலம் அடைந்து கிடக்க முடியும்? யோசியுங்கள்” 

அவர்கள் அனைவரும் அவன் சொன்னதில் இருந்த யதார்த்த நிலையை உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் அப்சல்கானின் சொந்த பலமும், படைப் பலமும் அவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை சிவாஜியால் உணர முடிந்தது. சிவாஜி மெல்லச் சொன்னான். “மகாபாரதம் படித்திருக்கிறோம். அதில் அபிமன்யுவுக்கு சக்கரவியூகத்தின் உள்ளே போக முடிந்தது. ஆனால் உள்ளே நுழைய முடிந்த அவனுக்கு வெளியே போக முடியவில்லை. அந்தச் சிரமத்தில் அவன் உயிரையும் இழக்க வேண்டி வந்தது. நாமும் உள்ளே நுழைந்த அப்சல்கான் பின் தப்பித்துப் போய் விடாதபடி வியூகம் அமைப்போம். இப்போது இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை. பவானி தேவியின் துணையும், அந்த மலைக்காடுகளின் துணையும் இருக்கும் வரையில் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.”

அவன் அளவுக்கு அவர்களில் சிலருக்கு இப்போதும் தைரியம் வரவில்லை. சிவாஜி மெல்லத் தன் சக்கர வியூகத்தை அவர்களிடம் விவரித்தான். அவன் திட்டம் மிகவும் புத்திசாலித்தனமாகவே இருந்தது. எல்லா விஷயங்களையும் யோசித்து எந்த முக்கிய அம்சத்தையும் விட்டு விடாமல் குழப்பமில்லாமல் மிகத் தெளிவாக அவன் திட்டமிடும் விதம் அவர்களைப் பிரமிக்க வைத்தது. இவன் ஆளப்பிறந்தவன் என்பதைப் புரிய வைத்தது. ஆனால் அவன் சொன்னச் சக்கர வியூகம் அப்சல்கான் மரணத்திற்குப் பின் தான் வேலை செய்ய முடியும். அப்சல்கான் மரணம் அவ்வளவு சுலபமாகச் சம்பவிக்க முடிந்தது அல்ல…. ஆனாலும் முடிவில் அவர்கள் தைரியம் அடைந்தார்கள். அவர்கள் இதற்கு முன் முடியவே முடியாது என்ற நிலைமைகளில் அவன் சாதித்து முடித்ததைப் பார்த்தவர்கள்….. இப்போதும் அவன் ஏதாவது அற்புதம் நிகழ்த்த முடியலாம்….. வாய்ப்பு இருக்கிறது….


அப்சல்கான் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொண்டு சிவாஜி அனுப்பிய மடல் மூன்று நாட்களில் அப்சல்கானை வந்தடைந்தது.

“…. தங்களது பேரன்பும் பெருந்தன்மையும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. தாங்கள் என் தந்தையின் நண்பர் என்பதையும், என் நலம் விரும்பி என்பதையும் என் அழைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபித்து விட்டீர்கள். இதற்கு தங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

     தாங்களும், தங்கள் படையும் எந்த விதமான தடங்கல்களுமின்றி இங்கே வர அனைத்து வசதிகளும் நாங்கள் செய்து தர வேண்டியது எங்களது கடமை மட்டுமல்ல தர்மமும் கூட. இந்த  மலைக்காட்டுப் பகுதிகளின் வழித்தடங்களை விரிவுபடுத்தியும் சீர்ப்படுத்தியும் தங்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்தப் பணிகளைச் செய்து முடிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் மட்டும் தாருங்கள் என்று தங்களிடம் பணிவுடன் நான் வேண்டிக் கொள்கிறேன். அதை முடித்து விட்டு உடனடியாகத் தெரிவிக்கிறேன். அதற்குப் பிறகு தாங்கள் கிளம்பினால் போதும்.

    இப்படிக்கு,
    தங்களைக் காணவும், தங்களுடன் பழகவும் பேராவலுடன் காத்திருக்கும் சிவாஜி.”

சிவாஜியின் மடலைப் படித்து விட்டு கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் அப்சல்கான் கேட்டான். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கிருஷ்ணாஜி?”

கிருஷ்ணாஜி பாஸ்கர் கவனமாகச் சொன்னார். “எல்லாம் நமக்குச் சாதகமாகவே தோன்றுகிறது பிரபு. ஆனாலும் சிவாஜி சொன்னது போலவே செய்கிறான் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே நாம் செல்வோம். அது நமக்குப் பாதுகாப்பும் கூட….”

அப்சல்கானுக்கு அங்கு செல்வதில் உள்ள சிரமங்கள் தான் பிரச்னையாகத் தெரிந்ததேயொழிய மற்றபடி அவன் சிவாஜியிடம் எந்த ஆபத்தையும் உணரவில்லை. இருந்தாலும் அஜாக்கிரதை எப்போதுமே நல்லதல்ல என்பதால் கிருஷ்ணாஜி பாஸ்கர் சொல்வதைப் போல் எல்லா விஷயங்களிலும் அலட்சியத்தைத் தவிர்க்க நினைத்தான். தங்கள் பயண வழியில் மலைக்காட்டுப் பகுதிகளின் ஆரம்பத்தை அடைந்தவுடன் அடுத்த கட்டம் செல்வதற்கு முன் அங்கே செய்திருக்கும் ஏற்பாடுகள் சரியாகவும், ஆபத்தில்லாமலும் இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே செல்ல ஆரம்பிப்பது என்று முடிவு செய்தான்.


சிவாஜியின் ஆட்கள் பிரதாப்கட் கோட்டை அமைந்திருக்கும் மலைக்காட்டுப் பகுதிகளில் அங்கங்கே இருக்கும் கிராம மக்களுடன்  இணைந்து, அப்சல்கானின் படை வரத் தேவையான வேலைகளை இரவு பகலாகச் செய்ய ஆரம்பித்தார்கள். வழியில் தடங்கல்களாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. பாதைகள் அகலப்படுத்தப்பட்டன. வருபவர்கள் தங்கி இளைப்பாற அங்கங்கே வசதியான முகாம்கள் அமைக்கப்பட்டன. எந்தவொரு இடத்திலும் எந்த விதமான அசௌகரியமும் ஏற்படாத அளவு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று சிவாஜி கட்டளையிட்டிருந்தான். அப்படியே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு சிவாஜி அப்சல்கானுக்குத் தகவல் அனுப்பினான்.


அப்சல்கான் தன் ஆட்களை உடனே அனுப்பி சிவாஜி ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் செய்திருக்கிறானா என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுத் தன் பெரும்படையுடன் கிளம்பினான். 

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, April 25, 2019

இருவேறு உலகம் – 133


எர்னெஸ்டோவின் குழப்பம் அந்தப் பழஞ்சுவடியைப் படித்த பின்னும் தீரவில்லை. அவர் கடந்த 35 வருடங்களாக இல்லுமினாட்டியின் தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் இல்லுமினாட்டி கண்ட வளர்ச்சி சாதாரணமானதல்ல. அவர் மிகச் சுறுசுறுப்பான செயல்வீரர் என்று சொல்ல முடியாது. ஆனால் குறைந்த நேரத்தில் மிக முக்கியமான செயல்கள் எதையும் தவறவிடாமல் முழுமனதோடு ஈடுபட்டு தவறில்லாத முடிவுகள் எடுத்து படிப்படியாக இல்லுமினாட்டியின் சக்தியையும், அதிகாரத்தையும் உச்சத்துக்குக் கொண்டு வந்தவர் அவர். இப்போது பதவி விலகப் போகும் நேரத்தில் இந்த இயக்கத்தை எந்த வகையிலும் சிறப்பு குறையாமல் இன்னும் மேலே உயர்த்திப் போகும் தகுந்த மனிதனிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்டார்.

விஸ்வம் இல்லுமினாட்டிக்கு அறிமுகமான போது எல்லோரிடத்திலும் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்தினான். அவன் அடைந்திருந்த சக்திகள் அவன் தெரிவித்ததை விட அதிகமாய் இருந்தன. இல்லுமினாட்டி இது வரை இப்படிப்பட்ட மனிதனைப் பார்த்ததில்லை. அமானுஷ்ய சக்திகளை வசப்படுத்திக் கொண்டவர்களாகச் சொல்லும் எத்தனையோ பேர் அதை வெளிக்காட்ட ஏமாற்று வழிகள் எத்தனையோ உபயோகிப்பதை அவர் பார்த்துச் சலித்திருக்கிறார். அவன் அலட்டிக் கொள்ளாமல் கூர்மையான அறிவுபடைத்த இல்லுமினாட்டி மனிதர்களிடம் தன் சக்திகளை நிரூபித்து இருக்கிறான். அவர் இம்மாதம் பதவி விலக இருப்பதாக மூன்று மாதங்கள் முன்பே அறிவித்திருந்ததால் அவன் சேர்ந்தவுடனேயே பலரும் அவன் அந்தப் பதவிக்குப் பொருத்தமாய் இருப்பான் என்று நினைக்கவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள். இவ்வளவு விரைவாக ஆரம்பத்திலேயே தலைமைப்பதவி தரும் அளவுக்கு ஒருவரை நினைக்க ஆரம்பித்தது இல்லுமினாட்டியின் சரித்திரத்திலேயே முதல் முறை. அதற்கு அவனுடைய சக்திகள், ஆளுமை மட்டுமல்லாமல் ஆரகிள் சொல்லி குறித்துக் கொண்ட பழஞ்சுவடிகள் அவனையே அடையாளம் காட்டுவதாக அவர்கள் நினைத்ததும், அவன் தற்போது இமயத்தில் இருந்து கொண்டு வந்திருப்பதாகச் சொல்லும் பிரமிடுக்குள் கண் சின்னமும் தான். அது ஒளிர்வதாக சில உறுப்பினர்கள் நேரில் பார்த்துச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு இல்லுமினாட்டிக்குத் தேவையான உறுதியான மனமும், பேரறிவும் அவனுக்கு இருக்கிறது. சொல்லப்போனால் விஸ்வம் அவர் எதிர்பார்த்த எல்லாவற்றிலும் எதிர்பார்ப்புக்கு பலபடிகள் மேலேயே இருந்தான்.

அவன் தலைமைப் போட்டிக்கு நின்றால் எதிர்த்து நிற்கப் பலரும் தயங்கும் நிலைமை இப்போது உருவாக்கி இருக்கிறது. அவன் ஆளுமை, அவன் அடைந்திருக்கும் சக்திகள், அவன் வந்த நேரம், அவன் சொன்ன செய்திகள், அவன் கொண்டு வந்திருக்கும் சின்னம் எல்லாமே பூரண கச்சிதமாக இருக்கிறது. இந்த வேகமான முன்னேற்றம், இந்தக் கச்சிதத் தன்மை எல்லாம் அவரைக் கொஞ்சம் பயமுறுத்தவும் செய்தது. இல்லுமினாட்டியின் அழிவுக்காலம் இது என்று கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள். இவன் சரியான நேரத்தில் அந்த அழிவில் இருந்து காப்பாற்ற வந்தவனா, இல்லை சரியான நேரத்தில் அழிக்கவே வந்தவனா? அழிக்க வந்தவன் இவனல்ல என்றால் அழிக்கப் போகிற சக்தி எது? அல்லது யார்? அந்தக் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

மீண்டும் ஒரு முறை விஸ்வேஸ்வரய்யா-க்ரிஷ் உரையாடலின் ஒரு பகுதியைக் கண்களை மூடிக் கொண்டு கேட்டார்.

“ஒருவேளை இல்லுமினாட்டி என்கிற சக்தி வாய்ந்த அமைப்பு இருந்து அதில் விஸ்வம் சேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”

“வெடிமருந்தோடு தீக்கதிர் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது தான் ஆகும். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது போல அழிவு நிச்சயம். உலகமே சீக்கிரம் சுடுகாடாகும்….”  

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள். உங்கள் ஏலியன் நண்பன் உங்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டுப் போயிருக்கிற பொறுப்பு உங்களுக்கில்லையா?”

“யாருமே முடிந்ததைத் தான் செய்ய முடியும். எனக்கு விஸ்வம் எங்கே என்று தெரியாது. இல்லுமினாட்டி இருக்கா இல்லையா என்றும் தெரியாது. இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் வழி தெரியாது. பிரபஞ்ச சக்திக்கு இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை இருந்திருந்தால் அது இதில் இடைப்பட ஏதாவது வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். எதுவுமே இல்லாத போது நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?”

இந்தக் கடைசி வாக்கியம் அவரை ஏனோ தொந்திரவு செய்தது. உடனே தலைமை செயற்குழு உறுப்பினர்களையும், வேறு சில முக்கிய உறுப்பினர்களையும் உடனடியாகத் தன் வீட்டுக்கு வரச் சொன்னார்.

அன்று இரவு ஏழு மணிக்கு வழுக்கைத் தலையர் உட்பட அவர் அழைத்திருந்த பன்னிரண்டு பேர் அவர் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் எர்னெஸ்டோ தன் மனப்போராட்டத்தைச் சொன்னார். அவர்களில் மூன்று பேருக்கு அவர் எண்ண ஓட்டம் சரி என்று தோன்றியது. மூன்று பேருக்குக் குழப்பமாக இருந்தது. மீதி ஆறு பேர் விஸ்வத்துக்கு ஆதரவாக நினைத்தனர். அந்த அறுவரில் ஒருவர் சொன்னார். “எனக்கென்னவோ விஸ்வம் முழுப் பொருத்தமாகவே தோன்றுகிறான்”

எர்னெஸ்டோ சொன்னார். “அது தான் என்னைப் பயமுறுத்துகிறது”

சிறிது நேரம் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அனைவருக்கும் எர்னெஸ்டோ மீது பெருமதிப்பு இருந்தது. சிக்கலான நேரங்களில் கூட அவர் சரியான முடிவெடுத்தவர். அவர் எடுக்கும் முடிவு பல நேரங்களில் எல்லோராலும் ஏற்கப்படாததாக இருந்தாலும்கூட  சரியானதாகவே பிற்பாடு நிரூபணம் ஆகியிருக்கிறது….

வழுக்கைத் தலையர் மெல்லக் கேட்டார். “நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?”

”விஸ்வத்தைப் போலவே க்ரிஷும் இமயமலைக்குத் தெற்கிலிருந்து வந்தவனாக இருக்கிறான். அதனால் ஏலியன் என்ற ’உயர்சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட’வனாக இருக்கிற க்ரிஷ் என்ன சொல்கிறான் என்பதையும், நம் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் கையிலிருந்து ’எல்லாம் பார்க்கும் விழி’ வாங்கி வந்திருக்கிற விஸ்வம் என்ன சொல்கிறான் என்பதையும் திறந்த மனதோடு கேட்கலாம். கடைசியில் எது சரி என்று நமக்குத் தோன்றுகிறதோ முடிவெடுப்போம்…”

ஒரு உறுப்பினர் தயக்கத்தோடு சொன்னார். “இது வரை நாம் இல்லுமினாட்டி அல்லாத ஒருவனை நம் சபைக்கு வரவழைத்துப் பேசவிட்டுக் கேட்டதில்லை…. க்ரிஷ் நாம் அழைத்தாலும் வருவான் என்பதும் நிச்சயமில்லை…..”

எர்னெஸ்டோ சொன்னார். “அவசியம் வரும் போது அபூர்வமானதையும் சிலசமயம் செய்ய வேண்டியிருக்கிறது. நாம் அழைத்து அவன் வராவிட்டால் அது அவன் விருப்பம். ஆனால் அழிவு வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட காலத்தில், ஏலியனால் தேர்ந்தெடுக்கப்பட்டு எச்சரிக்கும் ஒருவனுடைய கருத்தைக் கேட்க முயற்சி செய்யாமல் போனோமே என்ற உறுத்தல் நமக்கு பிற்காலத்தில் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்……”


எர்னெஸ்டோவின் முடிவு நவீன்சந்திர ஷா மூலமாக விஸ்வத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. விஸ்வம் முதலில் உணர்ந்தது ஆத்திரம் தான். எர்னெஸ்டோ அந்தப் பழஞ்சுவடியில் படித்ததை இரண்டாகப் பிரித்து இருவருக்குமாய் பிரித்துக் கொடுத்த விதம் அவனை மனம் கொதிக்க வைத்தது. ’தேர்ந்தெடுக்கப்பட்டவன் க்ரிஷாம்….. அடையாளம் காட்டப்பட்டவன் விஸ்வமாம்…… ஏன் இந்தக் கிழவன் இப்படித் தேவை இல்லாமல் பிரச்னை செய்கிறான்…..’ என்று மனதிற்குள் வெடித்தாலும் வெளிக்காட்டாமல் நவீன்சந்திர ஷாவிடம் கேட்டான். “க்ரிஷ் வருவதாக ஒத்துக் கொண்டானா?”

“அது தெரியவில்லை. விஸ்வேஸ்வரய்யாவிடம் பேசச் சொல்லி இருக்கிறார்கள். க்ரிஷ் என்ன சொல்கிறான் என்று இனிமே தான் தெரியும்”

விஸ்வம் சொன்னான். “அவன் வந்தாலும் நேர்மை, நீதி, நியாயம் என்று தத்துவம் தான் பேசுவான். அறிவாளி ஆனாலும் செண்டிமெண்ட் டைப்…”

நவீன்சந்திர ஷா சொன்னான். ”அப்படிப் பேசினால் இல்லுமினாட்டியில் எடுபடாது. இங்கே அறிவும், உறுதியும், சக்தியும் தான் முக்கியம். மென்மையான ஆட்களையும், அந்த மாதிரியான பேச்சையும் பலவீனமாகவே தான் எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். அதனால் உனக்கு வெற்றி நிச்சயம். நீ இல்லுமினாட்டி தலைமைப்பதவிக்கு உன்னை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போட்டியில் ஈடுபட்டுப் பேச வேண்டிய பேச்சை இந்த முறையே பேசிவிடு. உன்னை எதிர்த்துப் பேச அவனை அழைப்பார்கள். பின் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். இதில் நீ ஜெயித்து விட்டால் இல்லுமினாட்டி தலைமைப் போட்டியில் நீ நின்றால் உனக்கு எதிராகக் கண்டிப்பாக யாரும் நிற்கக்கூட மாட்டார்கள். காரணம் நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன், பிரமிடு-கண் சின்னத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன். உன்னை எதிர்த்து போட்டி போட யாரும் முன் வரமாட்டார்கள். போட்டியில்லாமல் நீ ஜெயித்து விடுவாய். ஒரு விதத்தில் எர்னெஸ்டோ க்ரிஷை வரவழைப்பது கூட உனக்கு அனுகூலம் தான்”

விஸ்வத்துக்கு அவன் சொல்வது சரியே என்று தோன்றியது. ஆனால் க்ரிஷுக்கு இல்லுமினாட்டி சபையில் பேச அனுமதி கொடுப்பதே தேவை இல்லாத அதிகப்படியான மரியாதை என்றும் தோன்றியது. அவன் தன் பலத்த சந்தேகத்தைக் கேட்டான். “இல்லுமினாட்டி ஒரு ரகசிய இயக்கம். இதில் எப்படி வெளியாளைக் கூப்பிட்டு பேச வைக்க முடியும்? அவன் மூலம் ரகசிய விஷயங்கள் வெளிப்பட்டு விடாதா?”

“அவன் வந்தாலும் யாரையும், எதையும் தெரிந்து கொண்டு விடாதபடி ஏற்பாடுகள் செய்து விட்டுத் தான் பேச விடுவார்கள். அவன் ஏதாவது விதத்தில் முரண்டு பிடித்தாலோ, ரகசியம் எதையாவது தெரிந்து கொண்டாலோ உயிரோடு திரும்பிப் போக முடியாது”

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, April 24, 2019

அடுத்தவர் நினைப்பும், நம் முன்னேற்றமும்!

அடுத்தவர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் நாம் சில சமயங்களில்  செய்ய வேண்டிய சிலவற்றைச் செய்யாமல் இருந்து விடுகிறோம். அதே போல் பிடிக்காத சிலவற்றையும் செய்து தொலைக்கிறோம். இப்படி அடுத்தவர் அபிப்பிராயங்களை அனுசரித்து நடத்துகிற வாழ்க்கை சரியா? தவறா? அப்படி நடப்பதில் நாம் பெறுவதும் இழப்பதும் என்ன? சரி செய்து கொள்வது எப்படி? இந்தக் காணொளியில் காணுங்களேன்...



என்.கணேசன்

Monday, April 22, 2019

சத்ரபதி 69

அப்சல்கான் பண்டாஜி கோபிநாத்தை உள்ளே அனுப்பச் சொல்லித் தன் வீரன் ஒருவனுக்குக் கட்டளையிட்டான். பண்டாஜி கோபிநாத் உள்ளே வந்தவுடன் அப்சல்கான் சிறிதும் எதிர்பாராதவிதமாகத் தடால் என்று காலில் விழுந்து வணங்கினார். தன்னையுமறியாமல் இடை வாளில் கை வைத்த அப்சல்கானுக்கு அவர் வணங்குகிறார் என்பது பின்பு தான் புரிந்தது.

பின் மிகுந்த பணிவுடன் எழுந்து “பிரபு, மகாபிரபு! தங்களைச் சந்தித்த இன்னாள் எனக்குப் பொன்னாள். தந்தைக்கு நிகரான உங்களுக்கு என் அரசர் சிவாஜி அவருடைய சிரம் தாழ்ந்த வணக்கங்களை என் மூலம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு அவரை ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே!” என்று தழுதழுத்த குரலோடு சொல்லி பாதி வளைந்த நிலையிலேயே பண்டாஜி கோபிநாத் நின்றார்.

தொடர்ந்து பேச அனுமதி கேட்டு தான் மனிதர் அப்படி நிற்கிறார் என்பது புரிய அப்சல்கானுக்குச் சிறிது நேரம் பிடித்தது. பேசு என்று சைகை செய்தான் அப்சல்கான்.

“உண்மையில் வணக்கத்திற்குரிய பீஜாப்பூர் சுல்தானிடம் பொது மன்னிப்பையும், வாழ ஒரு சிறு பகுதியையும் மட்டுமே எதிர்பார்த்திருந்த என் அரசருக்கு, இருப்பது எதையும் இழக்கத் தேவையில்லை என்றும், மன்னிப்பு மட்டுமல்லாமல் மரியாதைக்குரிய பதவியும் சுல்தான் அவர்களிடமிருந்து பெற்றுத் தருகிறேன் என்றும் தெரிவித்ததற்கு என் அரசர் சிவாஜி ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார். தந்தைக்குச் சமமான நீங்கள் அந்தப் பெருந்தன்மையையே காட்டியிருக்கிறீர்கள் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.  தாங்கள் அழைத்தபடி இங்கே பேச்சு வார்த்தைக்கு வருவதற்கு என் அரசர் சிவாஜி விரும்பினாலும் அவரை அனுப்பி வைக்க அங்கு அனைவரும் பயப்படுகிறார்கள். தங்கள் உத்தரவாதமே இறைவனின் உத்தரவாதம் என்று மன்னர் சிவாஜி எண்ணிய போதும் அங்குள்ளவர்களை நம்ப வைப்பதில் அவர் சிரமத்தை உணர்கிறார். இத்தனை பெருந்தன்மையைக் காட்டிய தாங்கள், சொந்த மகனைப் போல் எம் மன்னரைக் கருதும் தாங்கள், அங்கு வந்தால் உரிய அரச மரியாதையுடன் தங்களை வரவேற்று விருந்தளித்து கௌரவித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஆசைப்படுவதாகக் கூறிப் பணிவான வணக்கங்களுடன் மன்னர் சிவாஜி பேச்சுவார்த்தைக்கு அங்கே வரச் சொல்லி தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்”


அப்சல்கான் பண்டாஜி கோபிநாத் மூலமாக சிவாஜி அழைத்த அழைப்பில் உடனடியாக ஆர்வத்தைக் காட்டவில்லை. சகாயாத்ரி மலை அவனுக்குச் சாதகமான இடமல்ல என்பதை அவன் அறிவான். சிவாஜியும், அவன் தந்தை ஷாஹாஜியும் அந்தச் சூழலில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். முகலாயப் படை கூட சகாயாத்ரி மலைத்தொடரில் ஷாஹாஜி பதுங்கி இருந்த போது அவரை நெருங்க முடியவில்லை என்பது அவனுக்கு இப்போதும் நன்றாக நினைவிருந்தது. அந்த இடத்திற்கு பெரும் படையோடு போவதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அடர்ந்த மலைக்காடுகளில் அபாயங்களும் இருக்கின்றன….

பண்டாஜி கோபிநாத்தை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் ”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அப்சல்கான் கேட்டான்.

“பிரபு. சிவாஜி தங்களைச் சந்திக்கப் பயப்படுகிறான் என்றே நான் நினைக்கிறேன். அவன் இங்கு வர விருப்பம் கொண்டிருப்பதாகவும், அவனுடைய ஆட்கள் அனுப்பத் தயங்குவதாகவும் அவன் தூதர் சொன்னது சிவாஜியின் பயத்தை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் உள்ள தயக்கமாகவே நான் நினைக்கிறேன். இத்தனை நாள் அவனைப்பற்றிய சாகசங்களை நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவன் உங்களைப் போன்ற ஒரு மாவீரரையும், இது போன்ற ஒரு பெரும்படையையும் இது வரை சந்தித்திருக்கவில்லை. ஏமாற்றியும், தந்திரமாகவும், இது வரை  சில்லறை யுத்தங்களையும், சிறு மனிதர்களையுமே அவன் வென்றிருக்கிறான். முதல் முறையாக உங்களைப் போன்ற மாவீரர் இத்தனை பெரிய படையுடன் போரிட வருகிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவன் கதிகலங்கிப் போயிருக்கிறான். அதனால் தான் இங்கே வரப் பயப்படுகிறான். பேச்சு வார்த்தைக்கு அங்கே உங்களை அழைப்பதின் நோக்கமும் அது தான். ஒரு வேளை இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் அவனுக்குப் பழக்கமான சகாயாத்திரி மலைத்தொடர் சூழலில் அவன் எப்படியும் தப்பித்து உயிர்பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறான். இங்கே வந்தால் அப்படி அவன் தப்பித்து உயிர் பிழைக்க வழியில்லை. அவனைப் பொறுத்த வரை புத்திசாலித்தனமாகவே முடிவு எடுத்திருக்கிறான் என்றே எண்ணுகிறேன்….”

அப்சல்கான் கேட்டான். “பேச்சு வார்த்தைக்கு அவனை இங்கே வரவழைக்க வழி தான் என்ன?”

“அதற்கு வழியிருப்பதாகத் தோன்றவில்லை பிரபு. அவன் நீங்கள் என்ன உத்தரவாதம் கொடுத்தாலும் இங்கே வரத் துணிவான் என்று தோன்றவில்லை”

“பின் அவனைப் பிடிக்க வழி தான் என்ன?”

“நீங்களே படையோடு அங்கே செல்ல வேண்டும். அவனோடு அங்கே போர் புரிய வேண்டும். அது தான் அடுத்த வழி. போருக்குப் போவதற்கு அந்த மலைக்காட்டுப் பகுதி வசதியானதல்ல. மாவல் பிரதேச வீரர்கள் அதற்குப் பழக்கப்பட்டிருக்கலாம். மற்றவர்களுக்கு அதில் பயணம் செல்வது மிகவும் கஷ்டம். அந்த வழியாகப் போவதே கஷ்டம் என்னும் போது போய் போர் புரிவது கஷ்டத்திலும் கஷ்டம்….”

அப்சல்கான் யோசனையுடன் கேட்டான். “போருக்குப் போவது கஷ்டம் என்றால் இத்தனை பெரிய படையோடு பேச்சு வார்த்தைக்குப் போவதும் கஷ்டம் தானே. படையை இங்கேயே விட்டு விட்டு ஒரு குழுவாக மட்டும் அங்கே போவது முட்டாள்தனமாயிற்றே”

கிருஷ்ணாஜி பாஸ்கர் சொன்னார். “உண்மை. பேச்சு வார்த்தைக்குக் குழுவாகப் போவது பேராபத்து தான். ஆனால் பேச்சு வார்த்தைக்கு படையோடு நீங்கள் போகலாம். அதற்கு வசதிகள் செய்து கொடுக்கும்படி சிவாஜியிடம் கேட்டுக் கொள்ளலாம். சில இடங்களில் காட்டு வழிகள் குறுகலானவை. அந்த வழிகளை அகலப்படுத்திக் கொடுக்கச் சொல்லலாம். பயணத்திற்கு வசதி செய்து தரச் சொல்வது போல் உணவுக்கும் நீருக்கும் கூட சரியான வசதிகள் செய்து தரச் சொல்லலாம்….”

அப்சல்கானுக்கு அது நல்ல யோசனையாகத் தெரிந்தது. “ஆனால் அதற்கு சிவாஜி ஒத்துக் கொள்வானா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

கிருஷ்ணாஜி பாஸ்கர் சொன்னார். “விருந்தினரை அழைத்தால் அவர்கள் வரவும், வந்து தங்கவும் வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்து தருவது அழைத்தவர்களின் தர்மம் தானே. இங்கே வர மறுக்கும் சிவாஜி அங்கே நீங்கள் செல்ல வேண்டிய வசதிகள் செய்து தரவும் மறுப்பது நியாயம் அல்ல என்பதையும், அப்படி மறுத்தால் நீங்கள் அங்கே செல்ல ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அறிவான். அதனால் கேட்டுப் பாருங்கள். அதற்கு சிவாஜி ஒத்துக் கொண்டால் நீங்கள் அங்கு போகலாம். அவன் மறுத்தால் இந்தப் பேச்சு வார்த்தை விஷயத்தையே விட்டு விட்டு வேறு என்ன என்று நீங்கள் யோசிக்கலாம்….”

அப்சல்கான் யோசித்தான். அவர் சொல்வது சரியாகவே தோன்றியது. ஆனால் இன்னொரு சந்தேகம் அவனுக்கு எழுந்தது. “நம் படை அங்கு வர இத்தனை வசதிகள் செய்து தருவது பேச்சு வார்த்தை வெற்றி பெறா விட்டால் சிவாஜிக்கு ஆபத்தல்லவா? அவன் அதை யோசிக்க மாட்டானா?”

கிருஷ்ணாஜி பாஸ்கர் சொன்னார். “நாம் பேச்சு வார்த்தைக்குத் தான் போகிறோம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் வந்தால் தான் அவன் அதைப் பற்றி எல்லாம் யோசிப்பான். அதில் அவனுக்குச் சந்தேகம் வராவிட்டால் யோசிக்க மாட்டான் என்று நினைக்கிறேன்…. நீங்கள் கேட்டுப் பார்ப்பதில் நஷ்டமில்லையே. நான் அவனிடம் பேசியதில் அவன் சண்டையை விரும்பவில்லை என்பது நிச்சயம். அது அவன் மகன் பிறந்த பிறகு ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்…. அவன் பிறந்த போதிருந்த சூழ்நிலை அவன் மகன் பிறந்த பின் தொடர வேண்டாம் என்று தோன்றியிருக்கலாம்”

கிட்டத்தட்ட இதே சிந்தனை அவனுக்கிருப்பதைத் தான் மாவல் வீரனும் அன்று தெரிவித்திருந்தான். ஆனால் யோசித்துப் பார்த்த அப்சல்கானுக்கு அவர்கள் படை அங்கு போக எல்லா வசதிகளையும் செய்து தர ஒருவன் முட்டாளாக இருந்தால் ஒழிய ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றே தோன்றியது. கிருஷ்ணாஜி சொல்வது போல் அவன் ஏமாந்து போயிருந்தால், போரைத் தவிர்க்க என்ன விலை கொடுக்கவும் தயாராக இருந்தால் ஒத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவர் சொல்வது போல கேட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

அப்சல்கான் காவல் வீரனிடம் வெளியே காத்திருக்கும் சிவாஜியின் தூதுவனை உள்ளே அனுப்பச் சொன்னான். காவல் வீரன் தயக்கத்துடன் சொன்னான். “அவர் வெளியே காத்து நிற்கவில்லை பிரபு”

அப்சல்கான் திகைப்புடன் கேட்டான். “ஏன்? அவன் போய் விட்டானா?”


(தொடரும்)
என்.கணேசன்

Thursday, April 18, 2019

இருவேறு உலகம் – 132


1939 ஆம் ஆண்டு சிகாகோவில் இருந்த பல அடுக்கு இல்லுமினாட்டி கோயில் இடிக்கப்பட்டு அதன் அஸ்திவாரத்தில் ரகசியமாய் வைக்கப்பட்டு இருந்த பழங்காலச்சுவடியைப் படித்து விட்டு உடனடியாக வாஷிங்டனில் இல்லுமினாட்டி ரகசியக் காப்பறையில் ஒரு லாக்கருக்குள் பத்திரமாய் பூட்டி வைத்தபின் அதைத் திரும்ப எடுத்து யாரும் படிக்கவில்லை. அதற்கான அவசியமும் வரவில்லை. அந்தப் பழங்காலச்சுவடியில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்துச் சொன்னதன் சாராம்சம் தோராயமாக அனைவருக்கும் நினைவு இருந்தது. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை என்ன இருக்கிறது என்று இப்போதைய இல்லுமினாட்டி உறுப்பினர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை. அந்தப் பழங்காலச்சுவடி எழுதி வைக்கப்பட்ட காரணமும் பெரும்பாலான இல்லுமினாட்டி உறுப்பினர்களே கூட அறியாத ரகசிய வரலாறாகவே இருந்தது. வாஷிங்டனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எர்னெஸ்டோவும் வேறு இரண்டு மூத்த உறுப்பினர்களும் மட்டுமே அதை அறிவார்கள்.

மூடநம்பிக்கைகளையும், அராஜக அடக்குமுறைகளையும் எதிர்த்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பேரறிஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் இல்லுமினாட்டி. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அரசர்களும், மதகுருமார்களும் எதிர்த்த இயக்கமாக இருந்த இல்லுமினாட்டி ஒரு காலக்கட்டத்தில் ரகசியமாக மட்டுமே இயங்க முடிந்த இயக்கமாய் மாறியது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கழித்து கெடுபிடிகளும் அதிகமாகி, தகுதி வாய்ந்த உறுப்பினர்களும் குறைய ஆரம்பித்த போது அப்போதிருந்த அறிஞர்கள் ஆரகிள் என்று சொல்லப்படும்  தெய்வீகசக்தி வாய்ந்த, எதிர்காலத்தை முன்கூட்டியே கண்டு சொல்லக்கூடிய ஒரு  பெண்மணியிடம் குறி கேட்ட போது அவள் “எத்தனை அடக்குமுறை இருந்தாலும் இப்போதைக்கு இதற்கு அழிவில்லை. இது ரகசியமாய் சக்தி பெற்றுக் கொண்டே வளர்ந்து வந்து உலகத்தையே மறைமுகமாய் ஆளும். இதற்கும் உலகிற்குமே அழிவை ஏற்படுத்தக்கூடிய சூழல், ஒன்றே கால் நூற்றாண்டு கழித்து உருவாகும். அப்போது காப்பாற்றி வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஒருவன் வருவான்” என்கிற வகையில் சொல்லி அவனைப் பற்றிய குறிப்புகளையும் சொல்ல அதை அப்போதைய இல்லுமினாட்டியின் தலைவர் ஒரு சுவடியில் எழுதி வைத்துக் கொண்டார். எதிர்காலத் தலையெழுத்தை நிர்ணயிக்கும் குறிப்புகள் என்பதால் அந்தக் காலத்தில் சிகாகோவில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலின் அடித்தளத்தில் ரகசியமாக அதை வைத்து விட்டுப் பின் கோயிலை எழுப்பினார்கள். 1892 கட்டப்பட்ட அந்தக் கோயில் 1939 ஆம் ஆண்டு இடிக்கப்படும் சூழல் உருவாகும் என்று அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அப்படி இடிக்கப்பட்ட போது உடனே அதை வாஷிங்டனுக்கு மாற்றினார்கள்.

இரண்டு உலகப்போர்களுக்கு மத்தியில் இல்லுமினாட்டி மறுபடியும் ஒரு மந்த நிலையைக் கண்ட போது இல்லுமினாட்டியைச் சேர்ந்த அகஸ்டின் என்ற அறிஞர் இந்தியாவுக்குப் பயணமாகி யோகக் கலையைக் கற்றுக் கொண்டு வந்தார். அவரும் ஆரகிள் சொன்னபடியே ஒரு சூழல் உருவாவதை ஞானக்கண்ணில் கண்டு உலக நலனுக்காகவும், இல்லுமினாட்டியின் எதிர்கால மேன்மைக்காகவும் இமயமலையில் தவ வாழ்க்கை வாழப் போவதாகச் சொல்லி விட்டுப் போனார். பின் அவர் திரும்பி வரவில்லை. அவர் அங்கேயே எப்போதோ இறந்திருக்க வேண்டும் என்று இல்லுமினாட்டி இயக்கம் நினைத்தது. இப்போது விஸ்வம் கொண்டு வந்த செய்தியும், சின்னமும் அந்த வெள்ளைக்காரத் தவசி அகஸ்டின் ஆகவே இருக்க வேண்டும், அவர்  இப்போது தான் இறந்திருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அவர் கொடுத்து அந்தச் சின்னத்தோடு விஸ்வம் வந்ததால் அவனே அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று இல்லுமினாட்டி உறுப்பினர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பே அவன் அந்த இல்லுமினாட்டிக் கோயிலுக்கு அஸ்திவாரப் பகுதியில் வைத்திருந்த குறிப்பு பற்றிக் கனவில் வந்ததாகத் தெரிவித்திருந்ததும், அவன் பல அமானுஷ்ய சக்திகள் பெற்றிருந்ததும் அவனையே ரட்சகனாக அடையாளம் காண்பித்தது.

விஸ்வம் ரட்சகன் என்றால் அழிக்கப் போகும் எதிரி யார் என்ற கேள்வியை எர்னெஸ்டோவால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அறிவுக் கூர்மைக்குப் பெயர் போனவர் அவர். இல்லுமினாட்டி இயக்கத்துக்கும், உலகுக்கும் அழிவு நேர முடிந்த காலம் இது என்று தோராயமாக முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததால் விஸ்வம் என்ற ரட்சகன் வரும் முன்னாலேயே அவர் எதிரியைத் தேட ஆரம்பித்திருந்தார். அப்போது தான் ஒரு ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்ற ஆதாரபூர்வமான தகவல் அவருக்கு இஸ்ரோ மூலமாகக் கிடைத்தது. அந்த ஏலியன் எதிரியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதோ என்று எர்னெஸ்டோ சந்தேகப்பட்டார். காரணம் உலகில் பெரும்பாலான நாடுகள் இல்லுமினாட்டியின் மறைமுகக் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதனால் ஆபத்து அவர்களை மீறி ஏற்பட்டு விட முடியாது. வெளியே இருந்து வரலாம் என்பதால் தான் அவர் ஏலியன் குறித்த தகவல்களில் தனிக்கவனம் செலுத்தினார். ஆனால் ஏலியன் வரவைக் கண்டுபிடித்த இஸ்ரோ, வந்த ஏலியன் போய் விட்டதையும் தெரிவித்த போது குழப்பமே மிஞ்சியது. யோசித்த போது ஏலியன் தொடர்பு கொண்ட ஒரே மனிதனான க்ரிஷே எதிரியாகவும், அழிவுக்குக் காரணமாகவும் இருக்க முடியுமோ என்ற சந்தேகம் வந்தது. அதனால் தான் க்ரிஷைச் சந்தித்துப் பேச விஸ்வேஸ்வரய்யாவை அவர் அனுப்பினார்.

க்ரிஷின் நேர்மையை அவர்கள் முன்பே அறிந்திருந்தனர்.  க்ரிஷ் பேசியதைக் கேட்ட போது அதில் சிறு பொய்யோ, புரட்டோ இருப்பதாகவும் அவருக்குத் தெரியவில்லை. ஏலியன் பேசிய விஷயங்கள் அழிக்க நினைக்கும் எதிரி பேசக்கூடிய விஷயங்கள் அல்ல. அதனால் எதிரி அவனோ, ஏலியனோ இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒருவிதத்தில் பார்த்தால் க்ரிஷ் சக்தி வாய்ந்த ஏலியனால் உலகைக் காப்பாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.  அவன் விஸ்வமும் இல்லுமினாட்டியும் சேர்ந்தால் தீக்கதிரும், வெடி மருந்தும் சேர்ந்தது போல் என்கிறான். இது விஸ்வத்தையே எதிரியாகக் காட்டுகிறது. ஆனால் விஸ்வம் அகஸ்டின் கையில் இருந்து இல்லுமினாட்டியின் சின்னம் வாங்கி வந்தவன். அப்படிப்பட்டவன் எதிரியாக முடியுமா என்ன? குழப்பம் தொடர்ந்து நீளவே தான் எர்னெஸ்டோ ஒரு முறை அந்தப் பழங்காலச் சுவடியைத் தானே படித்துப் பார்க்க முடிவு செய்தார்.


நவீன்சந்திர ஷா தெரிவித்தவுடன் காலத்தை வீணாக்காமல் விஸ்வம் ரகசியமாக மாறுவேடத்தில் வாஷிங்டனுக்குப் புறப்பட்டான். எந்த விதத்திலும் எந்த இல்லுமினாட்டி கண்ணிலும் அவன் தட்டுப்பட விரும்பவில்லை. எர்னெஸ்டோவும் உபதலைவரான அந்த வழுக்கைத் தலையரும் இல்லுமினாட்டியின் ரகசியக் காப்பறைக் கட்டிட வாசலில் காரில் வந்திறங்கிய போது அவன் முன்பே வந்துக் காத்திருந்தான்.

அவருடைய மெய்க்காப்பாளர் வந்து கார்க் கதவைத் திறக்க எர்னெஸ்டோ ராஜகம்பீரத்துடன் இறங்கினார். பின்னாலேயே வழுக்கைத் தலையரும் இறங்கினார். முன்னால் இரு மெய்க்காப்பாளர்களும் பின்னால் இரு மெய்க் காப்பாளர்களும் தொடர அவர்கள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். மெயின் கேட்டில் இருந்து நூற்றைம்பது அடிகள் தள்ளி தான் வாசல் இருந்தது. வாசல் படிகளுக்குக் கீழே வரவேற்க இருவர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வை தலைவர்கள் மேல் இருக்கும் போது காற்றின் வேகத்தில் பக்கவாட்டில் இருந்து பறந்து விஸ்வம் உள்ளே போய் விட்டான். வரவேற்க நின்றிருந்த இருவரில் ஒருவருக்கு எதோ அசைவு தெரிந்தது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார். யாரும் இல்லை. மனப்பிரமை என விட்டு விட்டார்.

இருவரும் உள்ளே நுழைந்தவுடன் கூடவே இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். வெளியே இரு மெய்க்காப்பாளர்கள் நின்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். உள்ளே ஒரு பெரிய இரும்பு லாக்கர் இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஒளிவெள்ளம் பாய்ந்திருந்தது. மற்ற இடங்களில் லேசான இருட்டும், அதற்கும் மேலான இருட்டும் இருந்தன. அதிகமான இருட்டில் விஸ்வம் மறைந்து நின்றிருந்தான். அந்த லாக்கரின் கதவில் ரகசிய சங்கேத எண்ணை அழுத்தினார் எர்னெஸ்டோ. கதவு திறந்தது உள்ளே பல பாகங்கள் இருந்தன. அவற்றில் கீழே கடைசி பாகத்தில் ஒரு ரகசிய சங்கேத எண்ணை எர்னெஸ்டோ அழுத்தினார். அது மட்டும் திறந்து கொண்டது. அதிலிருந்து ஒரு பழங்காலச் சுவடியை வெளியே எடுத்தார்.

இருட்டில் இருந்த விஸ்வம் தன் சக்தியை எல்லாம் வழுக்கைத் தலையர் மீது செலுத்தினான். அவன் எர்னெஸ்டோவிடம் இந்தப் பிரயோகத்தை விடுக்க விரும்பவில்லை. வழுக்கைத்தலையர் ஏதோ ஒரு சக்தி தனக்குள் புகுவது போல் உணர்ந்தார். எர்னெஸ்டோ படிக்க ஆரம்பித்த அந்தச் சுவடியை எட்டிப் பார்த்த அவருடன் சேர்ந்து அந்த சக்தியும் செய்தியைப் படித்தது…

“உயர் சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தேஜஸுடன் இமயமலைக்குத் தெற்கில் இருந்து வருவான். எல்லாம் பார்க்கும் விழி அவனை அடையாளம் காட்டி உணர்த்தும். எது சரியென்றும் எது வழியென்றும் உணர்த்தி அவன் வழி காட்டுவான். உய்யும் வழி அது ஒன்றே. அன்றேல் அழிவது உறுதி”

எர்னெஸ்டோ அந்த வாக்கியங்கள் மனப்பாடம் ஆகும் வரை படித்தார். பக்கத்தில் சிலை போல நின்றிருந்த வழுக்கைத் தலையரிடம் வித்தியாசத்தைக் கண்டு என்ன என்று கேட்டார். உடனே வழுக்கைத் தலையர் மீது வைத்த தன் சக்திப் பிரயோகத்தை விஸ்வம் விடுவித்துக் கொண்டான். உபதலைவர் பழைய நிலைக்குத் திரும்பி நிம்மதியடைந்து அசட்டுச் சிரிப்பு சிரித்து ஒன்றும் இல்லை என்றார்.

அந்தச் சுவடியை அப்படியே லாக்கருக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே அவர்கள் இருவரும் போனார்கள். மெய்க்காப்பாளர்களும், அவர்களை வழியனுப்ப வெளியே இருந்த இருவரும் போன போது காற்றின் வேகத்தில் ரகசியமாய் விஸ்வமும் வெளியே வந்தான். பழஞ்சுவடியில் படித்த தகவலில் தனக்கு எதிராய் எதுவும் இல்லை என்பதில் அவனுக்குப் பரம திருப்தி. எல்லாம் அவனுக்குச் சாதகமாகவே இருக்கிறது…..

(தொடரும்)
என்.கணேசன்