என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, April 17, 2019

இரு மனிதர்களின் ஆன்மிகப் பயணத்தின் ஆரம்பம்!


ஒரு மனிதனின் ஆன்மிகப் பயணத்தில் உண்மையான இலக்கு மெய்ஞானமாகவே இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்த பின் அவன் அடைய வேண்டிய அதற்கடுத்த நிலை என்று ஏதும் இல்லை. அதற்குப் பின்னர் அவன் அறிய வேண்டிய ஞானமும் வேறிருக்க முடியாது. மெய்ஞானம் அனைத்தையும் அவனுக்களித்து அவன் வாழ்க்கையைப் பரிபூரணமாக நிறைத்து விடுகிறது. அந்தப் பரிபூரண மெய்ஞானத்தை நோக்கிச் செல்லும் ஆன்மிகப் பயணத்தில் மனிதன் பெறும் ஆத்மசக்திகள் ஏராளம். அவை தூர இருந்து பார்ப்பவர்களுக்கு அற்புதங்களாகவும், மகாசக்திகளாகவும் தெரியலாம். ஆனால் ஆன்மிகப்பாதையில் சிறிது தூரமாவது உண்மையாகவே பயணித்தவர்களுக்கு அவை இயல்பான விளைவுகளாகவே தெரியும்.

அப்படி ஆன்மிகப்பயணத்தில் ஆத்மசக்திகளை உணர்ந்தவர்கள் பண்டைய காலம் தொட்டே நம் பாரதத்தில் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். சித்தர்களும், யோகிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணிய பூமியில் ஆத்மசக்திகளின் உச்சங்களுக்கு பஞ்சமிருக்கவில்லை. (அது போன்ற சித்தர்கள், யோகிகள் குறித்து தினத்தந்தியில் முன்பு வெளிவந்த மகாசக்தி மனிதர்கள் தொடரிலும், நூலிலும் நான் எழுதியிருந்ததைப் பல வாசகர்கள் படித்திருக்கலாம்.) நம் பாரதம் உலகின் பல்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்த ஆன்மிகத்தேடல் உடையவர்களையும் இங்கே வர ஈர்த்து இருக்கிறது. அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலெனா பெட்ரோவ்னா ப்ளாவட்ஸ்கீ (Helena Petrovna Blavatsky ) அவர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஓல்காட் (Colonel Henry Steel Olcott) அவர்களும். இவர்கள் இருவரும் தான் தியோசொபிகல் சொசைட்டி என்றழைக்கப்படும் ஆன்மிக அமைப்பை நிறுவியவர்கள்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் குணாதிசயங்களிலும், இருந்த நிலைகளிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் 1831 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். பருமனான தோற்றமுடையவர். சிறு வயதிலிருந்தே ஆன்மிக, அமானுஷ்ய விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனிமையில் பல நாடுகளுக்குப் பயணித்தவர். ஆங்கில,  ரஷிய, ஜார்ஜிய, அரபு,  இத்தாலிய,  பிரெஞ்சு, சமஸ்கிருத மொழிகளை அறிந்திருந்தவர். கர்னல் ஓல்காட் அமெரிக்காவில் 1832 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டவர். பத்திரிக்கையில் பணி புரிந்தவர். அமெரிக்க உள்நாட்டுப் போர் சமயத்தில் இராணுவத்தில் பணி புரிந்தவர். பின் இன்சூரன்ஸ், நிதி மோசடி வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் புலனாய்வில் பங்கு கொண்டவர். இப்படி ஆன்மிக ஆர்வத்தைத் தவிர மற்ற எல்லா விதங்களிலும் வித்தியாசப்பட்ட இவர்கள் இருவரும் தற்செயலாக அமெரிக்காவில், நியூயார்க் நகரில் 1874 ஆம் ஆண்டு சந்தித்தார்கள். சந்தித்துப் பேசுகையில் சமீப காலங்களின் கலாச்சாரச் சீர்குலைவுகளையும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பணமே பிரதானமாகி வரும் அவல நிலைமையையும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்த விதம் கர்னல் ஓல்காட்டை மிகவும் பாதித்தது. எல்லா சீர்குலைவுகளுக்கும் தீர்வாக இந்தியா, திபெத் போன்ற கிழக்கத்திய நாடுகளின் ஆன்மிகம் இருக்கிறது என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறியது கர்னல் ஓல்காட்டின் மனதில் நம் இந்தியா குறித்த பேரார்வத்தை உருவாக்கியது.

ஆன்மிகத்தில் ஆர்வம் இருந்த போதிலும் கிழக்கத்திய ஆன்மிகத்தில் அதிகப் பரிச்சயம் இருந்திராத கர்னல் ஓல்காட் தொடர்ந்த சந்திப்புகளில் அந்த ஆன்மிக ஞானத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். அந்த அம்மையாருடனான நட்பு கர்னல் ஓல்காட்டை முற்றிலும் புதிய மனிதராக மாற்றி விட்டது. அவர் சைவத்திற்கு மாறினார், மது குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார். அவர் வாழ்க்கை ஒழுங்குமுறைக்கு மாறியது. ஆனால் அவரை மாற்றிய ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தன் புகைப்பழக்கத்தைக் கடைசி வரை விட முடியாதவராக இருந்தார், பல பழக்க வழக்கங்களில் ஒழுங்கு முறை அனுசரிக்கத் தவறினார் என்பது தான் வேடிக்கை. இருந்த போதிலும் ஆன்மிக ஆழத்திலும், சில அசாதாரண சக்திகளைப் பெற்றிருந்ததிலும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டை பெரும் வியப்பிலாழ்த்தினார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பண்டைய ஆன்மிக ஞானம் கலப்படமில்லாமல், இடைச்செருகல்கள் இல்லாமல் தூய்மையாக இருந்தது எனவும் அதை மீட்டெடுத்து உலகிற்கு வழங்குவது தான் பெரிய சேவை என்று சொன்னதில் கர்னல் ஓல்காட்டுக்கு முழுமையான உடன்பாடு இருந்தது. இது தன் கருத்து அல்ல என்றும் இமயமலையில் நிறைய யோகிகள், மகாஞானிகள் உடலோடும், உடல் இல்லாமல் அருவ நிலையிலும் உலாவி வருகிறார்கள் என்றும் அத்தகைய ஞானிகளில் ஒருவருடைய உபதேசம் தான் இக்கருத்து என்றும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்த போது கர்னல் ஓல்காட் அடைந்த பிரமிப்பு சாதாரணமானதல்ல.

அதை விரிவாக அப்போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விளக்க முனையவில்லை. ஆனால் அப்படிப்பட்ட எத்தனையோ உயர்ந்த ஆத்மாக்கள் இருக்கின்றன, அவை நினைத்த போது உருவமெடுத்து வரவும் முடியும், மற்ற நேரங்களில் அருவமாகவே இருக்கவும் முடியும் என்பது நம்பக் கஷ்டமானாலும் பேருண்மை என்று மட்டும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். இந்த உபதேசத்தைச் சொன்ன ஞானி அவரை அமெரிக்காவில் நியூயார்க் நகருக்குச் செல்லும்படியும் அங்கு அதற்கான வழி கிடைக்கும் என்றும் கூடச் சொன்னதாக ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்ன போது கர்னல் ஓல்காட் தன்னுடைய இதயத்தில் ஆழமான ஆன்மிக வேட்கையை உணர்ந்தார். அது தனக்கும் தரப்பட்ட செய்தியாக அவர் நினைத்ததால் அந்த புராதன தூய்மையான ஞானத்தை உலகில் பரப்ப இருவரும் சேர்ந்து ஏதாவது செய்யலாம் என்ற கருத்தை கர்னல் ஓல்காட் சொன்னார். அதன் விளைவாக 1875 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தியோசபிகல் சொசைட்டி என்ற அமைப்பு உருவானது.

தியோசபிகல் சொசைட்டியை நிறுவிய நோக்கம் இந்த மூன்றாக இருந்தது- 

1.     ஜாதி, மதம், இனம், நிறம் முதலான பேதங்களைக் கடந்த உலகளாவிய மானுட சகோதரத்துவத்தை நிறுவுதல்

  2. மதங்கள், தத்துவங்கள், விஞ்ஞானம் மூன்றையும் ஆழமாக அறிந்து கொள்ள ஊக்குவித்தல்

 3. விளக்க முடியாத இயற்கை விதிகளையும், மனிதனிடம் உள்ள மகாசக்திகளையும் ஆராய்ந்து அறிதல்

மிக உயர்ந்த நோக்கத்துடன் தியோசபிகல் சொசைட்டியை உருவாக்கிய பின் பல ஆன்மிக நூல்களைப் படித்தல், கட்டுரைகளை எழுதுதல் போன்ற பணிகளை இருவரும் தொடர்ந்து செய்தார்கள். ஆரம்பத்தில் தன்னிடமிருந்த அபூர்வ சக்திகள் எதையும் கர்னல் ஓல்காட்டிடம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் ஒரு நாள் அதற்கான வாய்ப்பு உருவாகியது. கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் ஆன்மிக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு இத்தாலியக் கலைஞர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைப் பார்க்க வந்தார். வந்தவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் பேசுகையில் பேச்சோடு பேச்சாக ஒரு மகாசக்தியாளர் பெயரைச் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டதும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடல் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தது. “என்னது? நான் தயார்” என்று அவர் சொன்னார். கர்னல் ஓல்காட்டுக்கு ஒன்றும் புரியவில்லை.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னதை அந்த இத்தாலியக் கலைஞரும் பொருட்படுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார். ஆனால் பேச்சு மேஜிக், மகாசக்திகள், சக்தியாளர்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அந்த இத்தாலியக் கலைஞரும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் மிகவும் ஆர்வமாகப் பேசிக் கொண்டார்கள்.

திடீரென்று இத்தாலியக் கலைஞர் எழுந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த அறை ஜன்னல் கதவைத் திறந்து சிறிது நேரம் கைகளை ஆட்டி எதையோ அழைப்பது போல சைகைகள் செய்தார். ஒரு தூய வெள்ளை நிறப் பட்டாம்பூச்சி உள்ளே பறந்து வந்து அறையைச் சுற்றி விட்டுக் கூரைச் சுவரில் அமர்ந்தது.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “இது என்ன பெரிய விஷயம். நானும் செய்வேன்” என்று சொல்லி அந்த இத்தாலியக் கலைஞர் செய்தது போலவே ஜன்னல் அருகே சென்று கைகளால் சைகை செய்தார். இன்னொரு தூய வெள்ளை நிற பட்டாம்பூச்சி இறக்கைகளைப் படபடத்துக் கொண்டு அறைக்குள் வந்தது. அதுவும் அப்படியே அறையைச் சுற்றி வந்து கூரைச் சுவரில் முதல் பட்டாம்பூச்சி அருகே அமர்ந்தது. அதோடு நிற்காமல் முதல் பட்டாம்பூச்சியை துரத்திக் கொண்டு செல்ல அறைக்குள்ளே இரண்டும் பறந்தன. கர்னல் ஓல்காட் ஆச்சரியத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இரண்டு பட்டாம்பூச்சிகளும் மறைந்தன. பிறகு தான் கர்னல் ஓல்காட்டுக்குத் தெரிந்தது- இரண்டு பட்டாம்பூச்சிகளும் இயற்கையானவை அல்ல, அவர்கள் இருவராலும் உருவாக்கப்பட்டவை என்று!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி - 9.4.2019

Monday, April 15, 2019

சத்ரபதி 68

அவர்களது ஆர்வத்தைக் கவனித்த கிருஷ்ணாஜி பாஸ்கர் திருப்தியுடன் தொடர்ந்தார்.

“இருபுறமும் பேரழிவை ஏற்படுத்தும் போரை மாவீரர் அப்சல்கானும் விரும்பவில்லை. போரில் அவர் பக்கம் வெற்றி நிச்சயம் என்று அறிந்தே இருந்தாலும் தன் நண்பரின் மகனான உங்கள் அழிவைக் காணவும் அவர் மனம் விரும்பவில்லை. ஏற்கெனவே ஒரு மகனைக் காலனுக்குப் பலி கொடுத்து அந்தத் துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தங்கள் தந்தைக்கு மேலும் ஒரு துக்கத்தை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை.  தங்கள் தந்தை எந்தப் பக்கம் இருக்கிறாரோ அதே பக்கம் தாங்களும் இருப்பது தர்மமும் புத்திசாலித்தனமும் என்று நினைவுபடுத்தி போரையும், உங்கள் அழிவையும் தவிர்க்க அமைதி வழிக்குத் திரும்பச் சொல்கிறார்.”

”வாய் பகுதியில் தங்கியிருக்கும் மாவீரர் அப்சல்கானுடன் பேச்சு வார்த்தைக்கு அமைதிக்கரம் நீங்கள் நீட்டி வருவீர்களானால் தாங்கள் பிடித்த கோட்டைகளை தங்கள் வசமே வைத்துக் கொள்ள பீஜாப்பூர் சுல்தானிடம் தானே சிபாரிசு செய்து சகல மரியாதைகளுடன் பீஜாப்பூர் அரசவையில் தங்களுக்கு உயரிய பதவி ஒன்றையும் பெற்றுத் தர முயல்வதாய் மாவீரர் அப்சல்கான் உறுதியளிக்கிறார். இனி எந்த பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் பகுதியையும் கைப்பற்ற மாட்டேன் என்கிற ஒரு வாக்கை மட்டும் தாங்கள் பீஜாப்பூர் சுல்தானுக்குத் தந்தால் போதும் என்கிறார்.”

“அரசே! வாழ்வில் அதிர்ஷ்டம் அடிக்கடி வருவதில்லை. அமைதிப் பூங்கொத்தோடு அது எப்போதுமே வருவதில்லை என்பது யதார்த்தம். அப்படி இருக்கையில் அதி அபூர்வமாக அமைதியோடு வந்திருக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருபக்கமும் அழிவைத் தவிர்க்க இந்தப் பேச்சு வார்த்தைக்கு உடனடியாக வரும்படி மாவீரர் அப்சல்கான் சார்பாக நான் தங்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

சிவாஜி கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் “மாலை நேரமாகி விட்டது. தாங்கள் தங்கி இளைப்பாறி விட்டு நாளை செல்லுங்கள் தூதுவரே. நான் என் பதிலை என் தூதுவர் மூலம் மாவீரர் அப்சல்கானுக்கு அனுப்புகிறேன். அவரும் நாளை உங்களுடனேயே அங்கு வருவார்” என்று சொன்னான்.

கிருஷ்ணாஜி பாஸ்கர் சிவாஜியை வணங்கி விட்டுச் சென்றார். அவர் சென்ற பின் தன் படைத்தலைவர்களிடமும், நண்பர்களிடமும் சிவாஜி கேட்டான். “என்ன நினைக்கிறீர்கள்?”

“பேச்செல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. நீ திட்டமிட்டபடியே நீ சமாதானத்தை விரும்புகிறாய் என்று நம்பி அவன் ஆள் அனுப்பி இருக்கிறான். பேச்சு வார்த்தை விஷயத்தில் அவனது உண்மை நோக்கம் என்ன என்று தெரியவில்லையே” என்றான் சிவாஜியின் நண்பன் தானாஜி மலுசரே.

“அதையும் தான் கண்டுபிடிப்போம்” என்று சிவாஜி யோசனையுடன் சொன்னான்.


கிருஷ்ணாஜி பாஸ்கர் குளித்து விட்டு சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்த போது அவர் சிறிதும் எதிர்பாராத விதமாக சிவாஜி உள்ளே வந்தான். ”மன்னியுங்கள் பெரியவரே. ஒருவன் இறை வழிபாட்டில் இருக்கும் போது இடையூறாக வருவது முறையல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் யாரும் அறியாமல் தங்களைத் தனியாகச் சந்திக்க வேண்டியிருந்ததால் தான் இந்த வேளையில் இங்கே வர வேண்டியதாகி விட்டது”

“சற்றே அமர்ந்திருங்கள் அரசே. நான் சந்தியாவந்தனத்தை முடித்து விட்டு இதோ வந்து விடுகிறேன்….”

“நீங்கள் இறை தொடர்பில் இருக்கும் போதே நான் சொல்ல வேண்டியதொன்று இருக்கிறது. அதனால் அவசரமாகச் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொள்ள வேண்டியதில்லை. நான் கூறுவதை நீங்கள் செவிமடுத்துக் கேட்க வேண்டும்… “ என்று சிவாஜி சொல்ல கிருஷ்ணாஜி பாஸ்கருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் வேறு வழியில்லாமல் “சரி சொல்லுங்கள் அரசே” என்றார்.

“பெரியவரே! தினமும் இரு வேளைகளில் சிரத்தையாக சந்தியாவந்தனம் செய்து இறைவனைத் தொழுகிறீர்கள். நீங்கள் தொழுது வணங்கும் இறைவனுடைய கோயில்களில் சிலைகளை இடித்து அட்டகாசம் செய்யும் ஒருவனிடம் சேவகம் செய்கிறீர்கள்….”

கிருஷ்ணாஜி பாஸ்கரின் தலை தானாகத் தாழ்ந்தது. அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. சிவாஜி தொடர்ந்தான். ”இது முரண்பாடு தான் என்றாலும் நான் அதில் குறை காணவில்லை. ஏனென்றால் அவரவருக்கு எங்கே வேலையை இறைவன் விதித்திருக்கிறானோ அங்கே தான் அவரவர் சேவகம் செய்ய முடியும். தொழும் இடங்களில் பக்தன் நுழையும் போது தான் தெய்வம் இருக்கும். பக்தியில்லாதவன் நுழைகையில் அது வெறும் கட்டிடமாகத் தான் இருக்கும். அதனால் நம்பிக்கையற்றவன் இடிப்பதும் கோயிலை அல்ல வெறும் கட்டிடத்தையே. அதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இன்னொரு பக்தன் நாளை தொழ அங்கு செல்லும் போது கோயில் இருப்பதில்லை என்பதில் தான் எனக்கு வருத்தம்….”

கிருஷ்ணாஜி பாஸ்கர் அவன் வார்த்தைகளில் ஆழ்ந்த பொருளை உணர்ந்தார். ஆனால் ஒன்றும் சொல்லாமல் தலை தாழ்த்தியே இருந்தார்.

“என் மண்ணில் என் மக்கள் தாங்களாக இருக்கவும், தங்கள் நம்பிக்கைக்கேற்ப தொழவும் கூட வழியின்றி இருப்பதும், பயந்து வாழ்வதும் என்னால் சகிக்க முடியாமல் இருப்பதனாலேயே தான் நான் சுயராஜ்ஜியம் என்ற வேள்வியில் இறங்கியிருக்கிறேன் பெரியவரே. நான் அரசர்களிடம் நடந்து கொள்வதில் நேர்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் மக்களிடம் நான் ஒரு கணப்பொழுதும் நேர்மை இல்லாமல் இருந்ததில்லை. என் ஆசிரியர் அவருக்காக எதையும் என்னிடம் கேட்டதில்லை. ஆனால் சாதாரணக் குடிமகனை சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்படி இறக்கும் முன் கேட்டுக் கொண்டார். நீங்களும் நானும் வணங்கும் இறைவன் முன்னிலையில் சொல்கிறேன். நான் இது வரை அதில் என்றும் பிழைத்ததில்லை.”

சிவாஜி ஆத்மார்த்தமாகச் சொன்னான். அவன் சொல்லும் வார்த்தைகளில் சத்தியமே நிறைந்திருப்பதை கிருஷ்ணாஜி பாஸ்கரும் உணர்ந்திருந்தார்.  சிவாஜி மெல்ல விஷயத்திற்கு வந்தான். “என் சுயராஜ்ஜிய வேள்வியில் நான் வெகு தூரம் வந்து விட்டேன். ஆனால் அதை விடப் பலமடங்கு தூரம் நான் இனியும் போக வேண்டியிருக்கிறது. அந்த யாத்திரையின் நடுவே நீங்கள் வந்து அப்சல்கானிடம் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறீர்கள். இறைவணக்கத்தில் இருக்கிறீர்கள். அந்த இறைவன் முன்னிலையில் சொல்லுங்கள். அப்சல்கானின் உத்தேசம் தான் என்ன?”

கிருஷ்ணாஜி பாஸ்கர் திரிசங்கு நிலையை உணர்ந்தார். அவர் தொழில் தர்மப்படி அவர் அப்சல்கானின் உத்தேசத்தைச் சொல்லக்கூடாது. இவன் இறைவனை வைத்துக் கேட்கிறான். இறைவன் முன்னாலும் பொய் சொல்லக் கூடாது. என்ன தான் சொல்வது என்று தெரியாமல் விழித்த அவர் கடைசியில் கண்களை மூடிக் கொண்டு சொன்னார். “புலி பசுவின் வேடம் தரித்தாலும் உண்மையில் தன் குணம் மாறுவதில்லை அரசே”

அதற்கு மேல் சொல்ல அவர் விருப்பப்படவில்லை. சிவாஜியும் அந்தப் பதிலில் தான் அறிய வேண்டியதைத் தெளிவாகவே அறிந்ததால் அதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவரை மண்டியிட்டு வணங்கியபடி சொன்னான். “நன்றி பெரியவரே. நம் சத்தியம் நம்மைக் காக்கட்டும்”

அன்றிரவு சிவாஜியும், அவன் ஆலோசனைக் குழுவும் உறங்கவில்லை. இனி எப்படி இதைக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்தார்கள். கடைசியில் சிவாஜி அவன் ஆலோசனைக் குழுவில் இருந்த மூத்தவரும், வெகுளியான தோற்றமும், விவகாரமான புத்திசாலி மனிதருமான பண்டாஜி கோபிநாத்தை அப்சல்கானிடம் அனுப்பி வைக்கத் தீர்மானித்தான். அப்சல்கானிடம் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்த சிவாஜி அப்சல்கான் தரப்பு நிலவரங்களைக் கூர்மையாகக் கவனித்து வந்து தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னான்.

மறுநாள் அவன் கிருஷ்ணாஜி பாஸ்கருடன் பண்டாஜி கோபிநாத்தை அனுப்பி வைத்தான். அவர்கள் கிளம்புவதற்கு முன் மிக மரியாதையுடன் தலைவணங்கி பரிசுகள் பல வழங்கி கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் சொன்னான். “பெரியதொரு சேவையைத் தாங்கள் செய்திருக்கிறீர்கள்.  இந்தப் பேச்சு வார்த்தையால் இருபக்கப் படைகளும் போரின் அழிவில் இருந்து காக்கப்பட்டால் நானும் என் மக்களும் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்”

கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் வணங்கி விட்டுக் கிளம்பினார். 


அப்சல்கான் சிவாஜியின் தூதுவரைச் சந்திக்கும் முன் கிருஷ்ணாஜி பாஸ்கரை வரவழைத்து சிவாஜியுடனான சந்திப்பைப் பற்றிக் கேட்டார். கிருஷ்ணாஜி பாஸ்கர் கவனமாகச் சொன்னார். “பிரபு. சிவாஜி என்னை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று நான் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டான். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நான் சொன்ன போது நம்ப முடியாதவன் போல் கேட்டான். இதெல்லாம் சாத்தியம் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது போல் தெரிந்தது. கிளம்புகையிலும் எனக்குப் பரிசுகள் எல்லாம் தந்து போர் மூளாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னான். அதிலிருந்து அவனும் பேச்சு வார்த்தைக்கு இணக்கமாக இருப்பதாகவே தெரிகிறது….. ஆனால் அவன் தூதுவரிடம் என்ன சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பது தெரியவில்லை”



(தொடரும்)

என்.கணேசன்