என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 11, 2019

இருவேறு உலகம் – 131



மாணிக்கம் அரசியலில் இருந்து விலகியதும், கமலக்கண்ணன் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தெரிய வந்த போது விஸ்வம் ஆச்சரியப்பட்டு விடவில்லை. மாணிக்கத்தின் மகனின் மரணச் செய்தியைக் கேட்ட போதே இப்படி தான் வந்து முடியும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். அவனை ஆச்சரியப்படுத்தியதுடன் சந்தோஷமும் படுத்திய இன்னொரு தகவல் மாஸ்டர் அனைத்தையும் விட்டு விட்டு இமயம் போய்ச் சேர்ந்தது. அணுகுண்டைப் போல ஆபத்தானவர், கவனமாய்க் கையாள வேண்டும் என்று அவன் எப்போதுமே நினைக்கும் மாஸ்டர் போய்த் தொலைந்தது நிம்மதியாக இருந்தது. ஆனால் மிகவும் சந்தேகப்பட வைத்தது கூடவே வந்த இன்னொரு தகவல் தான். க்ரிஷை ஒரு மனிதர் சந்தித்து விட்டுப் போனதாக படத்துடன் அவனுக்கு வந்த அந்தத் தகவலில், அந்த மனிதர்  யார் என்பது தெரிந்ததும் சந்தேகத்துடன் லேசான அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டது. இல்லுமினாட்டியைத் தான் தேடிப் போக வேண்டி இருந்த போது இல்லுமினாட்டி க்ரிஷைத் தேடிப் போனது சற்று சகிக்க முடியாததாகத் தான் இருந்தது.  எல்லாமே அவனுக்கு அனுகூலமாக நடந்து வந்து கொண்டிருக்கையில் அவன் பின்னாலேயே க்ரிஷையும் ஏதோ ஒரு வகையில் இழுத்து வருவது விதியா, இல்லை அந்த ஏலியன் ஏதோ ப்ரோகிராமாய் போட்டு விட்டுப் போன சதியா என்பது விஸ்வத்துக்கு விளங்கவில்லை.

ஒரு விஷயத்தில் இறங்கிய பின் அதை ஆழமாய் அலசி அதில் அவன் அறியாதது இல்லை என்ற அளவு புரிந்து கொள்ளாமல் விஸ்வம் இருந்தது கிடையாது. அந்த வகையில் இல்லுமினாட்டியையும், அதன் செயல்முறைகளையும் அவன் துல்லியமாக அறிந்திருந்தான். ஒவ்வொரு இல்லுமினாட்டி உறுப்பினருக்கும் முதல் எஜமானன், கடவுள் எல்லாமே இல்லுமினாட்டி இயக்கம் தான். குடும்பம் உட்பட மற்றதெல்லாமே இரண்டாம் பட்சமே. எந்த முக்கியமான புதிய தகவல் ஒரு இல்லுமினாட்டிக்குக் கிடைத்தாலும் அவன் அதை உடனடியாக இல்லுமினாட்டி உறுப்பினர்களின் பொதுத் தகவல் மையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது ரகசியமானதாக இருக்கும் பட்சத்தில் தலைமை செயற்குழு ஐவர்க்கு மட்டும் முதலில் தனியாக அனுப்பப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகே அது அவர்களுடைய பொதுத் தகவல் மையத்தில் பகிரப்படும். சில விசேஷ சமயங்களில் தலைவர் அல்லது உபதலைவர் ஒரு இல்லுமினாட்டியிடம் விசேஷத் தகவல் பெற்றுத் தரும்படி ஆணை பிறப்பிக்கலாம். அந்த சமயங்களில் கேட்டவருக்கு மட்டும் அந்தத் தகவலைப் பெற்ற இல்லுமினாட்டி நேரடியாகவோ மிக நம்பகமான தனி மனிதர் மூலமாகவோ அனுப்பி வைப்பார்.

விஸ்வேஸ்வரய்யா க்ரிஷைச் சந்தித்துப் பெற்ற தகவலை பொதுத் தகவல் மையத்தில் பகிரவில்லை. விஸ்வம் தலைமைச் செயற்குழு உறுப்பினரில் ஒருவரான ஃப்ராங்பர்ட் நகரத்தில் வசிக்கும் கலைப்பொருள் சேகரிப்பாளரைப் போனில் தொடர்பு கொண்டான். பொதுவான விஷயங்கள் பேசினான். அந்த மனிதர் இல்லுமினாட்டியின் சின்னம் அவனுக்கு இமயமலைத் தவசி மூலம் கிடைத்ததற்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவன் சீக்கிரமே இல்லுமினாட்டியின் மிகச் சிறந்த ஆளுமையாக ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார். அவர் விஸ்வேஸ்வரய்யா பெற்று வந்த தகவலைத் தெரிவிக்கவில்லை. தெரிந்து மறைக்கும் ஆள் அவர் அல்ல. ஒருவேளை அப்படி ஒரு தகவல் கிடைத்து அது விஸ்வத்துக்கு எதிரானதாக இருந்திருந்தால் விஸ்வம் இல்லுமினாட்டியின் மிகச்சிறந்த ஆளுமையாக ஆகும் காலம் தொலைவில் இல்லை என்ற வார்த்தையைச் சொல்லியிருக்க மாட்டார். அப்படியானால் தலைவரோ உபதலைவரோ சொல்லித் தான் விஸ்வேஸ்வரய்யா போயிருக்க வேண்டும். உபதலைவர் ஐக்கிய நாடுகளின் ஏதோ கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அது நான்கு நாட்கள் நடக்கும் நிகழ்வு. அதற்கு இடையே அவர் விஸ்வேஸ்வரய்யாவை இதற்கு அனுப்பி இருக்க வழியில்லை. அப்படியானால் கடைசியில் தலைவரான எர்னெஸ்டோ சொல்லித்தான் க்ரிஷைச் சந்திக்கும் வேலை நடந்திருக்கிறது…… இந்த முடிவை எட்டிய போது க்ரிஷ் பெற்ற முக்கியத்துவம் அவனுக்குக் கசந்தது.


க்ரிஷின் மனம் இந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்திருந்தது. இந்த இரண்டு நாட்களில் அவன் பெரிதாக எதையும் படிக்கவில்லை. தியானமோ, மற்ற பயிற்சிகளோ செய்யவில்லை. ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. இது வரை படித்தது, கேட்டது, உணர்ந்தது, இப்போதைய நிலவரம் எல்லாவற்றையும் ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்திலிருந்தே இது தனியொரு மனிதனால் மாற்றவோ, கட்டுப்படுத்தவோ முடிந்த விஷயமல்ல என்பதை அவன் உணர்ந்திருந்தான்.  ஆனாலும் வேற்றுக்கிரகவாசி இந்தப் பொறுப்பை அவன் தலையில் திணித்திருக்கிறான். அவன் முட்டாள் அல்ல. அறிவிலும், சக்தியிலும் மனிதர்களால் கற்பனை செய்யக்கூட முடியாத உயரத்தில் இருப்பவன். அப்படிப்பட்டவன் தேர்ந்தெடுத்திருப்பதே ஏதோ ஒரு தகுதியின் அடிப்படையில் தான்…..

சுமக்க முடியாத சுமையை மனிதன் மீது இறைவன் சுமத்துவது இல்லை என்று எங்கோ படித்தது அவன் மனதில் பசுமையாகப் பதிந்திருந்தது. சுமக்க முடியுமா என்று பார்க்கிறேன், அதற்கான சக்தியை இறைவன் எனக்குக் கொடுப்பான் என்று நினைத்தபடி ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் தான் மனிதன் வரவழைத்துக் கொள்ள வேண்டியது என்று தோன்றியது. அந்த மனோபாவத்தில் தான் அவன் சிலநாட்களாக இருந்து வருகிறான். எதிரியான விஸ்வம் மகாசக்திகள் வாய்ந்தவனாக இருக்கலாம். க்ரிஷ் எட்ட முடியாத உயரத்தில் இருக்கலாம். ஆனால் அவன் இறைவனை விடச் சக்தி வாய்ந்தவன் அல்ல. இறைவனை விட உயரத்திலும் இல்லை. இந்த எண்ணம் இரண்டு நாட்களாக க்ரிஷிடம் மேலோங்கி வந்தது. அதற்கு முன்னிருந்த கவலை, தன்னம்பிக்கைக் குறைவு எல்லாம் தானாகக் குறைந்து காணாமல் போயிற்று.

எல்லாமே அவன் பார்த்துக் கொள்வான், அவனைச் சரணடைந்தால் போதும் என்கிற சரணாகதித் தத்துவம் இரண்டு நாட்கள் முன் வரையில் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாய் இருந்தது. எல்லாமே அவன் தான் என்றால், நாம் என்ன களிமண்ணா, நாம் இருந்து என்ன பயன் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றும். சுயமுயற்சிக்கு மதிப்பில்லாமல் போவது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றும். சரணாகதித் தத்துவம் சோம்பேறிகளின் புகலிடம் என்று கூட நினைத்ததுண்டு.

ஆனால் இப்போது இன்னொரு கோணத்தில் இருந்து அவனால் பார்க்க முடிந்தது. அண்டசராசரங்களை இத்தனை கச்சிதமாய் இயக்கும் இறைவன் என்று பலரும் அழைக்கும் பிரபஞ்ச சக்தி ஆக்கல், காத்தல், அழித்தல் வழிகளில் அனைத்தையும் செய்கிறது. அது நினைக்கும் போது ஆக்கும், அது நினைக்கும் போது காக்கும், அது நினைக்கும் போது அழிக்கும்… அது நினைப்பது தான்தோன்றித்தனமான வகையில் அல்ல. பரிணாம வளர்ச்சியின் நிலைகளையும் தேவைகளையும் கணக்கில் கொண்டு தான் செய்கிறது. அதனால் மனிதன் எல்லாமே நீ தான் என்று சொல்வது எந்த விதத்திலும் தவறல்ல. அது தீர்மானிக்காத ஒன்று நடக்கப் போவதில்லை.

ஆனால் அது தீர்மானித்த பிறகு நடத்த வேண்டியதை, தான் படைத்த படைப்புகள் மூலமாகத் தான் நடத்திக் கொள்கிறது. இங்கு தான் அதன் படைப்பான மனிதனுடைய பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவன் அந்த மகாசக்தி உத்தேசித்ததை அதன் கருவியாக இருந்து நிறைவேற்றுகிறான். அப்படி நிறைவேற்றுகையில் அவன் முடியுமா என்று சந்தேகிக்கத் தேவையில்லை. முடியாமல் போகுமா என்று பயப்படத் தேவையில்லை. எப்படி முடிப்பேன் என்று மலைக்கத் தேவையில்லை. அவனுக்குத் தேவையானதை செய்து முடிக்க வேண்டிய எதையும் வழங்க இருக்கவே இருக்கிறது நிக்கோலா டெஸ்லா சொன்ன எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி மையம். அந்தப் பிரபஞ்ச சக்தி மையம் கற்பக விருட்சம். அங்கு எதுவும், எப்போதும் இல்லாமை, போதாமை என்பதில்லை.

அதனால் எதையும் நிச்சயிக்கும் விஷயத்தில் எல்லாமே அந்த பிரபஞ்ச சக்தியின் தீர்மானம் என்று சரணாகதி அடைவதும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ‘உன் உதவியுடன் எல்லாமே நான்’ என்று உற்சாகத்துடன் இயங்குவதும் தான் மனிதன் செய்ய வேண்டியது. பிரபஞ்ச சக்தியின் தீர்மானம் எது என்று எப்படித் தெரிந்து கொள்வது? அந்தராத்மாவில் அவன் தொடர்ந்து உணரும் உணர்வுகளில் இருந்து…. பிரபஞ்ச சக்தி அனுப்பி வரும் செய்திகளை கவனிப்பதிலிருந்து…. இதில் வெற்றி தோல்விகள் தனிமனிதனுக்கு இல்லை. அவை இறைவனின் சித்தம் . அவனுடைய உண்மையான வெற்றி எதையும் முழுமையாகச் சிறப்பாகச் செய்வது. அவனுடைய உண்மையான தோல்வி அரைகுறையாய் செய்வது, ஆத்மார்த்தமாய் எதையும் செய்யத் தவறுவது……

இந்த உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது இறைவன் சித்தமானால் அதை அது நடத்தி வைக்கும். அதில் அவனுடைய பங்கு ஏதாவது தெரிய வந்தால் அதை அவன் சிறிதும் தயங்காமல் நூறு சதவீதம் ஆத்மார்த்தமாய் செய்து முடிப்பான். உலகம் அழிந்து, புதிதாய் உருவாகித் தான்  மேல் வர வேண்டுமென்றால் க்ரிஷ் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. தெய்வ சித்தப்படி நடக்கட்டும். கடைசியாக இந்த சிந்தனை ஓட்டத்தில் அவன் மன அமைதி அடைந்தான். பல நாட்கள் கழித்து அன்றிரவு அவன் நிம்மதியாக உறங்கினான்.


நவீன்சந்திர ஷா விஸ்வத்துக்குப் போன் செய்தான்.  ”எர்னெஸ்டோவும், உபதலைவரும் இல்லுமினாட்டி ரகசியக் காப்பறையில் இருக்கும் அந்தப் பழங்காலச் சுவடியை எடுத்துப் படிக்க வாஷிங்டன் வருகிறார்கள். அதற்காக உபதலைவர் ஐக்கியநாட்டுக் கூட்டத்தொடரைப் பாதியில் விட்டு விட்டு வருகிறார்.”

(தொடரும்)
என்.கணேசன்

Monday, April 8, 2019

சத்ரபதி 67

அப்சல்கான் கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மாவல் வீரர்கள் சிவாஜியின் குடும்பம் எந்த நேரத்திலும் சகாயாத்ரி மலைக்கு இடம் பெயர்ந்து விட முடியும் என்பதையும் அங்கே சென்று அவர்களைப் பிடிக்க வழியில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். அதை நம்பித்தான் சிவாஜி தைரியமாகக் குழந்தையையும், குடும்பத்தையும் விட்டுப் போயிருக்கிறான் என்பதைத் தெரிவித்தார்கள்.

அப்சல்கான் மறுபடி சிவாஜியைப் பிடிக்கும் முடிவுக்கே வந்தான். அதில் உள்ள சிரமங்கள் பற்றி அவன் கவலைப்படவில்லை. ”சிரமங்கள் இல்லாத போர் என்று ஒன்று இருக்கிறதா வீரர்களே. அங்கு போய்ப் போரிட்டாலும் சிவாஜியால் நம்மை வெல்ல முடியுமா?”

“அங்கும் சிவாஜியால் நம்மை வெல்ல முடியாது தான் பிரபு. ஆனால் அவன் கோட்டைக்குள் அடைந்து கொண்டால் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது தாக்குப் பிடிக்க முடியும். அந்த அளவு கோட்டையை அவன் வலிமையாக வைத்திருக்கிறான்…..”

அப்சல்கான் கேட்டான். “இரண்டு மாதங்கள் கழித்து….”

“அவன் அங்கிருந்து தப்பித்துப் போய் விட வாய்ப்பிருக்கிறது. பிரபோ! அவனுக்கு மலைகளும், காடுகளும் அரண்மனையை விட இனிமையானவை”

அப்சல்கான் உற்சாகம் வடிந்து போனது. சிவாஜியின் கோட்டைகளைப் பிடிப்பதல்ல அவனுக்கு முக்கியம். சிவாஜியையே பிடிப்பது தான் முக்கியம். ஓடிப்போக முடிந்தவனை அந்தக் காடுகளுக்கும் மலைகளுக்கும் உள்ளே துரத்திப் பிடிப்பது தான் எப்படி?

தந்திரமாகத் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்சல்கான் யோசிக்க ஆரம்பித்தான்.


ஔரங்கசீப் தன் மூத்த சகோதரன் தாரா ஷுக்கோவுக்கு மரண தண்டனை வழங்கி, சிரத்சேதம் செய்ய உத்தரவிட்டு, அந்தத் தலையைப் பட்டுத்துணியில்  கட்டிச் சிறையிலிருக்கும் தந்தைக்கு அனுப்பி வைத்த செய்தி கிடைத்த போது சிவாஜி உள்ளம் வெந்தான். ஷாஜஹான் வெட்டுண்ட மூத்த மகன் தலையைப் பார்த்ததும் மூர்ச்சையானவர் இன்னும் பிரக்ஞை திரும்பாமல் படுத்த படுக்கையாக இருக்கிறாராம். சிவாஜிக்குக் கலிகாலம் வந்து விட்டதன் அடையாளமாக என்னெல்லாம் நடக்கும் என்று ஒரு நாள் தாதாஜி கொண்டதேவ் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் சொன்னதில் எல்லாம் கூட இந்தக் குரூரங்கள் இல்லை….

சமகால அரசியலில் எப்படிப்பட்டவர்களுடன் எல்லாம் தொடர்பில் இருக்க வேண்டி இருக்கிறது என்று விரக்தியுடன் நினைத்துக் கொண்ட சிவாஜி தன் இப்போதைய தலைவலியான அப்சல்கானை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தான். அப்சல்கான் பூனாவுக்குச் செல்வதாக இருந்த யோசனையைக் கைவிட்டதாகவும், இப்போது வாய் என்ற பகுதியில் தங்கி இருப்பதாகவும் செய்தி கிடைத்திருந்தது.

பிரதாப்கட் கோட்டை வலிமையும், பாதுகாப்பு நிறைந்ததுமான கோட்டை என்றாலும் மிக நீண்ட காலம் அந்த மலைக்காடுகளின் நடுவில் இருக்கும் கோட்டையில் இருப்பதில் நிறைய அசௌகரியங்கள் இருந்தன. சிவாஜி அங்கேயே இருக்கட்டும், மற்ற கோட்டைகளைக் கைப்பற்றி மீட்போம் என்று அப்சல்கான் தீர்மானித்தால் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் வீண் ஆகும். மீண்டும் ஷாஹாஜியைக் கைது செய்யவும் பீஜாப்பூர் சுல்தான் எண்ணினாலும் விபரீதமே. இந்த முறை காப்பாற்ற முகலாயர்களும் வரும் வாய்ப்பில்லை. முன்பு காப்பாற்றிய ஷாஜஹானே இப்போது சிறையில் இருக்கிறார். ஔரங்கசீப் சிவாஜி மேல் கோபம் கொண்டிருப்பதால் கண்டிப்பாக உதவ வர மாட்டான்., தாரா ஷுக்கோ சிரத் சேதத்தைக் கேட்டதிலிருந்து அவன் மனம் ஏனோ அமைதி இழந்து தவிக்கிறது….. அப்சல்கான் தானாக ஏதாவது பாதக முடிவை எடுப்பதற்கு முன் அவன் எந்த முடிவெடுக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்தால் என்ன என்று தோன்றியது. சிவாஜி மெல்லப் புன்னகைத்தான்.

அப்சல்கானின் மாவல் படையில் இருக்கும் ஒரு வீரன் அவனைச் சந்திக்க விரும்புவதாகவும், அவனிடம் ஏதோ முக்கியத் தகவல் இருப்பதாகவும், பாதுகாவலன் வந்து சொல்ல அப்சல்கான் நெற்றி சுருக்கியவனாய் “வரச் சொல்” என்றான்.

மாவல் வீரன் தரையில் நெற்றி படும்படி மூன்று முறை வணங்கிப் பணிவுடன் நிற்க “என்ன தகவல் சொல்ல வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

மாவல் வீரன் கைகள் இரண்டையும் கட்டியபடி மரியாதையுடன் சற்றுக் குனிந்தபடியே சொன்னான். “என் உறவினன் ஒருவன் சிவாஜியின் படையில் இருக்கிறான். இப்போது அவன் பிரதாப்கட்டில் இருக்கிறான்…. அவன் நம் படையில் சேர விருப்பம் கொண்டு அங்கிருந்து தப்பித்து வந்திருக்கிறான்”

‘இதைச் சொல்லத் தானா என்னைத் தொந்தரவு செய்கிறாய்’ என்று பார்வையால் சுட்டெரித்த அப்சல்கான் சொன்னான். “இது போன்ற ஆட்கள் ஒற்றர்களாய்க் கூட இருக்கலாம். அவர்களை நம் படையில் அனுமதிக்க முடியாது. மறுத்து அவனைத் திருப்பி அனுப்பி விடு”

“நீங்கள் சொல்வதற்கு முன்பே நான் மறுத்து அவனைத் திருப்பி அனுப்பி விட்டேன். ஆனால் அவன் போகும் முன் சிவாஜி பற்றிச் சொன்ன தகவல் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தகவலாய் என் மனதிற்குப் பட்டது. அது தான்…..”

அப்சல்கான் சற்று சுவாரசியமடைந்து ”என்ன தகவல் அது. சொல்” என்றான்.

“சிவாஜியின் படைத் தளபதிகள் பலரும் உங்களோடு போர் புரிந்தால் தோல்வி நிச்சயம் என்பதால் போரைத் தவிர்க்கச் சொல்கிறார்களாம். அதனால் தான் சிவாஜி ராஜ்கட்டிலிருந்து பிரதாப்கட் கோட்டைக்குப் போயிருக்கிறானாம். ஆனால் இப்போது பிரதாப்கட் கோட்டையில் எத்தனை காலம் பதுங்கி இருக்க முடியும் என்று அவர்கள் கேட்கிறார்களாம். நீங்கள் அங்கும் கண்டிப்பாய் போய்ப் போர் புரிவீர்கள் என்று அவர்கள் நம்பி பயப்படுகிறார்களாம். அது சிவாஜியின் நம்பிக்கையையும் தைரியத்தையும் தளர வைத்திருக்கிறதாம். அவனுக்குச் சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை, மனைவி, குடும்பம் என்று அமைதியாக வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டு இருக்கிறானாம். பிடித்த கோட்டைகள் எல்லாம் கூட பீஜாப்பூர் சுல்தானுக்குத் திரும்பக் கொடுத்து விட்டு ஏதாவது  சிறு இடம் அவனுக்கென்று கிடைத்தால் கூடப் போய் நிம்மதியாக வாழலாம் என்று சொல்கிறானாம். அதை எல்லாம் கேட்டுத் தான் இனி இந்தப் படையில் இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்து என் உறவினன் இங்கு வந்ததாகச் சொன்னான்…..”

அப்சல்கானின் காதுகளில் விழுந்த அந்தத் தகவல் அவனுக்குத் தேனாக இனித்தது. தன் படைத்தலைவர்களே பயப்படும் போது, தோல்வி நிச்சயம் என்று உணரும் போது சிவாஜி அல்ல எப்படிப்பட்டவனும் தானும் தைரியம் இழந்து விடுவது இயல்பு தான் என்று தோன்றியது. முதல் குழந்தை பிறந்திருக்கிறது. அதைக் கொஞ்சி விளையாட வேண்டிய காலத்தில் அங்கிருந்து ஓடி ஒரு மலைப்பிரதேசத்தில் குடும்பத்தை விட்டுத் தனிமையில் இருப்பது சிவாஜியை மேலும் பலவீனப்படுத்தி இருக்கலாம்.

சிவாஜியின் மனம் பலவீனப்பட்டிருக்கும் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்சல்கான் தீர்மானித்தான். தகவல் சொன்ன மாவல் வீரனுக்குத் தன் கைப்பிடி நிறையப் பொற்காசுகள் பரிசளித்து அனுப்பிய அப்சல்கான் வேகமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். பின் தன்னிடம் திவானாக இருந்த பண்டிதரும், சிறந்த பேச்சாளருமான கிருஷ்ணாஜி பாஸ்கரை அவசரமாக வரவழைத்தான்.

சிவாஜியிடம் ஒரு வீரன் வந்து “அரசே! பீஜாப்பூர் படைத்தலைவர் அப்சல்கானிடமிருந்து ஒரு தூதர் வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்” என்று சொன்ன போது அவன் தன் படைத்தலைவர்களுடனும், நண்பர்களுடனும் ஆலோசனையில் இருந்தான்.

சிவாஜி “வரச் சொல்” என்றான்.

கிருஷ்ணாஜி பாஸ்கர் குடுமியும், நெற்றியில் நாமமுமாகப் பக்திப் பழமாக வந்தார். சிவாஜியை வணங்கி விட்டுச் சொன்னார். “அரசே! இறைவன் அருளால் உங்கள் குலம் தழைக்கட்டும். உங்கள் வாழ்வில் அமைதி பெருகட்டும். தங்கள் தந்தையின் நெருங்கிய நண்பரும், அவருடன் பல போர்களில் ஒருசேர நின்று போர் புரிந்தவருமான  மாவீரர் அப்சல்கான் அவர்களிடமிருந்து தங்களுக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்….”

அவரை இருக்கையில் மரியாதையுடன் அமர வைத்து சிவாஜி சொன்னான். “சொல்லுங்கள் தூதரே”  

“அரசே! யுத்தத்தின் முடிவில் யார் வென்றாலும் இருபக்கங்களிலும் ஏற்படும் பல நஷ்டங்கள் ஈடு செய்ய முடிந்ததல்ல. பெற்றிருக்கும் எண்ணற்ற செல்வமும், கோட்டைகளும் மரணத்தின் பின் ஒருவனுடன் கூட வர முடிந்ததல்ல. வீரம் ஒருவருக்குப் பெருமை தான் என்றாலும் மரணம் நேருமானால் மனைவி, மக்கள், பெற்றோர் அனைவரையும் சோகப் பெருங்கடலில் அமுக்கி விடும். இதையெல்லாம் தாதாஜி கொண்டதேவின் மாணவனுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. அமைதியின் தூதுவனாக வந்திருக்கும் என் செய்தியைத் தயவுசெய்து செவி சாய்த்துக் கேளுங்கள்….”

அப்சல்கான் சொல்லியனுப்பிய செய்தி என்ன என்பதை அறிய சிவாஜியும் அவன் ஆட்களும் ஆர்வமாக இருந்தார்கள்.



(தொடரும்)

என்.கணேசன்

Sunday, April 7, 2019

தினத்தந்தியில் என் புதிய ஆன்மிகத் தொடர்!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தினத்தந்தியில் வரும் 9.4.2019 அன்று ஆரம்பமாகும் என் புதிய ஆன்மிகத் தொடர் ”ஆன்மிகப் பயணத்தில் ஆத்ம சக்திகள்” பின் செவ்வாய் தோறும் தொடர இருக்கிறது. ஆன்மிகப் பெரியோர் நிகழ்த்திய அற்புதங்களையும், காட்டிய மெய்ஞான வழிகளையும் சுவாரசியமாகச் சொல்லும் இந்தத் தொடரை தினத்தந்தியில் படிக்கும் வாய்ப்பிருக்கும் ஆன்மிக வாசகர்கள் தவறாமல் படிக்கவும்.

அங்கு படிக்க முடியாத வாசகர்கள் சிறு இடைவெளிக்குப் பின் இந்தத் தொடர் இந்த வலைப்பூவிலும் மறுபதிப்பு ஆகும் போது படித்துக் கொள்ளலாம்.

அன்புடன்
என்.கணேசன்

Thursday, April 4, 2019

இருவேறு உலகம் – 130



மாணிக்கம் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாகக் கூறி ராஜினாமா செய்ததுடன் ஆட்சிக்குத் தலைமை  ஏற்கத் தன் நண்பர் கமலக்கண்ணனையே அழைப்பதாகவும் அறிக்கை விட்டதால் கமலக்கண்ணன் வீட்டின் முன் கட்சித் தொண்டர்களும், பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்களும் குவிந்திருந்தனர். விஸ்வேஸ்வரய்யா க்ரிஷைச் சந்திக்க உள்ளே செல்வதற்குள் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த பரபரப்புகளால் பாதிக்கப்படாமல்,  பெருமை காட்டாமல் மரியாதையாக வரவேற்ற க்ரிஷால் விஸ்வேஸ்வரய்யா மிகவும் கவரப்பட்டார்.

பரஸ்பர வணக்கங்களுக்குப் பின் விஸ்வேஸ்வரய்யா இஸ்ரோவால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து பேச ஆரம்பித்தார். நாசா மற்றும் இஸ்ரோ ஏலியன்களால் ஏற்படும் அலைவரிசை மாற்றங்களையும், அமானுஷ்ய நிகழ்வுகளையும் கண்காணிக்க ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றன என்றும் இந்த வருடத்தில் அமேசான் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் சில ஆச்சரியகரமான மாற்றங்களைப் பதிவு செய்ததில் க்ரிஷ் பங்கையும் பார்க்க நேர்ந்தது என்றும் அது பற்றி நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவன் நடந்ததை எல்லாம் அப்படியே சொல்வான் என்று அவர் நம்பவில்லை. இது வரை அவன் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசியதாகவும் அவருக்குத் தகவல் இல்லை. ஏதாவது சொல்லி மழுப்பக் கூடும் என்று எதிர்பார்த்தார்.

க்ரிஷ் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் யோசித்தான். நிக்கோலா டெஸ்லாவின் எழுத்துக்களை அவன் உத்வேகத்தோடு படித்துக் கொண்டு இருந்த போது தொடர்பு கொண்டவர் இந்த மனிதர். பிரபஞ்ச சக்தி அனுப்பியே வந்தவராகவே அவரைப் பார்ப்பது புத்திசாலித்தனமாகப் பட்டது.  அதனால் அவரிடம் நடந்ததை அப்படியே தெரிவிப்பது நல்லது என்று தோன்றியது. பல கோடிகள் செலவழித்து அவன் நாடு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றில் அவன் சம்பந்தப்பட்டு விட்ட பிறகு தன் பங்கில் அறிந்ததை அவரிடம் தெரிவிப்பது தர்மம் கூட என்று நினைத்தான். அவன் சொல்வதை நம்புவதும் நம்பாததும் அவர் விருப்பம்….

அவன் நிக்கோலா டெஸ்லாவைப் படித்துக் கொண்டிருந்த போது அவன் கம்ப்யூட்டரில் மின்னிய வாசகத்திலிருந்து ஆரம்பித்து நடந்தது அனைத்தையும் அமைதியாகச் சொன்னான். விஸ்வேஸ்ரய்யா பிரமிப்புடன் முழுவதையும் கேட்டார். வேற்றுக்கிரகவாசிக்கும் க்ரிஷுக்கும் இடையே உருவான நட்பு,  பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றுடன் விஸ்வம், மாஸ்டர்  சம்பந்தப்பட்ட காட்சிகளும், அது பற்றி வேற்றுக்கிரகவாசி சொன்னதும் கூடத் தெரியவந்த போது விஸ்வேஸ்வரய்யா கூடுதல் கவனத்துடன் கேட்டார்.

விஸ்வத்தின் சக்திகளால் கவரப்பட்டவர்களில் அவரும் ஒருவர். மனிதன் எந்த அளவுக்கு அமானுஷ்ய சக்திகளை வசப்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மனிதன் இல்லுமினாட்டிக்கு ஒரு சிறப்பான வரவே என்று நினைத்துக் கொண்டிருப்பவர் அவர்….

க்ரிஷ் வேற்றுக்கிரகவாசி விடைபெற்ற கணத்தோடு முடித்துக் கொண்டான். அவர்கள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவை தான். வேற்றுக்கிரகவாசி தொடர்பு கொண்டதிலிருந்து விடைபெற்றது வரை அவன் சொல்லி முடித்த பிறகு விஸ்வேஸ்வரய்யா ஒரு நிமிடம் அமைதி காத்தார். அவருக்கு அவன் சொன்னவை எதுவும் பொய்யல்ல என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வருவதற்கு முன் அவன் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் பல முறை பார்த்து மனதில் பதித்து விட்டு வந்திருக்கின்றார். அவன் சொன்ன விஷயங்கள் அவன் முக பாவனை உட்பட கணக்குப் போடுகையில் எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகிறது.
விஸ்வேஸ்வரய்யா தன் துறை சார்ந்த கேள்வியையே முதல் கேள்வியாகக் கேட்டார். “ஏலியன் எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுக்கத் தயாராக இருந்த போது நீங்கள் ஏன் உருவமில்லாமலேயே உணர்ந்தால் போதும் என்று ஒத்துக் கொண்டீர்கள்?”

க்ரிஷ் சொன்னான். “நாம் எல்லோரும் உருவங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தோன்றியது. உருவம் இல்லாததை உணர்வதே இல்லை. பொய்யான ஒரு உருவத்தைப் பார்ப்பதை விட உருவமில்லாமலே உணர்வது நல்லது என்று தோன்றியது”

அவன் பதில் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு அறிவுஜீவியால் மட்டுமே அப்படி முடிவெடுக்க முடியும்.

விஸ்வேஸ்வரய்யா அவனிடம் கேட்டார். “நீங்கள் அந்த ஏலியன் சொன்னபடி உலகம் அழிந்து விடும் என்று நினைக்கிறீர்களா?”

“அப்படி ஆகி விடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன். ஆனால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம் ஏதாவது செய்யா விட்டால் அவன் சொன்னது போல ஆகிவிடும் என்று பயப்படுகிறேன்…”

“இந்த உலகத்தைக் காப்பாற்றும் ஒட்டு மொத்த பொறுப்பை ஒருவனுக்குத் தருவது என்பது சற்று மிகையான விஷயம் அல்லவா?”

“உண்மை தான். ஆனால் பொறுப்புள்ள ஒவ்வொருவனும் அப்படி நினைத்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகக் கூட என்னிடம் அவன் அப்படிச் சொல்லியிருக்கலாம்”

அந்தப் பதிலை அவர் ரசித்தார். நான் சிறந்தவன், என் தகுதி பார்த்து அவன் சொன்னான் என்று க்ரிஷ் சொல்லவில்லை என்பதை அவரால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

”அந்த எதிரி யாரென்று தெரிந்ததா? அந்த எதிரியை நீங்கள் சந்திக்க முடிந்ததா?” மெல்ல விஸ்வேஸ்வரய்யா கேட்டார்.

அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவர் மெல்லச் சொன்னார். “இது எங்கள் ஆராய்ச்சி சம்பந்தப்படாத விஷயம் தான். நான் தனி ஆர்வத்தில் கேட்கிறேன். தயக்கம் இருந்தால் பதில் சொல்லத் தேவையில்லை”

க்ரிஷுக்கு அவரிடம் பதில் சொல்லத் தோன்றியது. சுருக்கமாக நடந்த மிக முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சொன்னான். கடைசியில் எதிரியாக விஸ்வத்தைக் கண்டுபிடித்ததையும், அவன் தீவிரவாத இயக்கங்களையும், இல்லுமினாட்டியையும் பயன்படுத்தி அதிகார ஏணியில் மேலேறப் போவதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லி முடித்தான். விஸ்வம் மற்றும் மாஸ்டர் இருவருடைய இமயமலைப் பயணங்களை அவன் சொல்லவில்லை. இஸ்ரோவும் நாசாவும் அவர்களுடைய முழுக்கவனத்தை இனி இமயமலையின் அந்தக் குகைக்குச் செலுத்தி மாஸ்டரின் வருங்கால தவத்தைக் கலைத்து விட வேண்டாம் என்று அவன் நினைத்தான்.

விஸ்வேஸ்வரய்யா முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டிக் கேட்டார். “நீங்கள் இல்லுமினாட்டி என்று ஒன்று இருப்பதை நம்புகிறீர்களா என்ன?”
.
உறுதியாகத் தெரியாத விஷயங்களைச் சொல்ல விருப்பப்படாத க்ரிஷ். “தெரியவில்லை. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்…” என்றான்.

விஸ்வேஸ்வரய்யா விடாமல் கேட்டார். “ஒருவேளை இல்லுமினாட்டி என்கிற சக்தி வாய்ந்த அமைப்பு இருந்து அதில் விஸ்வம் சேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”

“வெடிமருந்தோடு தீக்கதிர் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது தான் ஆகும். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது போல அழிவு நிச்சயம். உலகமே சீக்கிரம் சுடுகாடாகும்….” க்ரிஷ் அமைதியாகச் சொன்னான்.

அவன் அதைச் சர்வசாதாரணமாகச் சொன்னது விஸ்வேஸ்வரய்யாவுக்கு என்னவோ போல் இருந்தது. “என்ன இப்படிச் சொல்கிறீர்கள். உங்கள் ஏலியன் நண்பன் உங்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டுப் போயிருக்கிற பொறுப்பு உங்களுக்கில்லையா?”

க்ரிஷ் வருத்தம் கலந்த குரலில் சொன்னான். “யாருமே முடிந்ததைத் தான் செய்ய முடியும். எனக்கு விஸ்வம் எங்கே என்று தெரியாது. இல்லுமினாட்டி இருக்கா இல்லையா என்றும் தெரியாது. இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் வழி தெரியாது. பிரபஞ்ச சக்திக்கு இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை இருந்திருந்தால் அது இதில் இடைப்பட ஏதாவது வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். எதுவுமே இல்லாத போது நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?”

சிறிது நேரம் மௌனம் சாதித்த விஸ்வேஸ்வரய்யா கண்ணில் க்ரிஷ் மேசையில் இருந்த நிக்கோலா டெஸ்லா புத்தகம் பட்டது. அவர் அவனிடம் நிக்கோலா டெஸ்லாவின் கருத்துக்கள் பற்றிக் கேட்டார். அவன் சுவாரசியத்துடன் நிக்கோலா டெஸ்லா பற்றி தான் உணர்ந்தவைகளைப் பேச ஆரம்பித்தான். கேட்க அவருக்கும் மிக சுவாரசியமாக இருந்தது. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விஸ்வேஸ்வரய்யா நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்.

அன்று இரவு ம்யூனிக்கில் எர்னெஸ்டோவுக்கு ஒரு போன் கால் வந்தது.  விஸ்வம் கையில் இல்லுமினாட்டி சின்னம் இருப்பதையும், இமயமலையில் உள்ள இல்லுமினாட்டி தவசி அவனுக்கு அதைத் தந்து விட்டு இறந்ததையும் விவரமாக ஒருவன் தெரிவித்தான். சுவாரசியத்துடன் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து ஒருவன் ஒரு உறையைக் கொடுத்து விட்டுப் போனான். அதிலிருந்த பென் ட்ரைவில் விஸ்வேஸ்வரய்யாவுக்கும் க்ரிஷுக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு இருந்தது. அதை  கண்களை மூடிக் கொண்டு எர்னெஸ்டோ கேட்டார்.

அன்றிரவு அவருக்கு உறங்க முடியவில்லை.

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, April 3, 2019

நதியின் வெற்றி ரகசியம்!

வெற்றியின் ரகசியத்தை நதியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து வாழ்க்கையை முடிப்பது எப்படி என்ற ரகசியத்தை நதியைத் தவிர வேறு எதுவும் இவ்வளவு வலிமையாகவும், எளிமையாகவும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்து விட முடியாது. எப்படி என்பதை இந்தக் காணொளியில் காணுங்களேன்!


என்.கணேசன்




Monday, April 1, 2019

சத்ரபதி 66


அப்சல்கான் பீஜாப்பூரிலிருந்து பெரும்படையுடன் புறப்பட்டான். அலி ஆதில்ஷாவும், ராஜமாதாவும் அவனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். பீஜாப்பூர் மக்கள் அப்படி ஒரு பெரும்படை திரண்டு அங்கிருந்து கிளம்புவதைப் பார்த்து நீண்ட காலம் ஆகியிருந்தது. மக்களும் பிரமிப்புடன் இருமருங்கிலிருந்தும் வேடிக்கை பார்க்க கம்பீரமாகக் கிளம்பினான் அப்சல்கான். படையுடன் வடக்கே பயணித்து வந்தவன் வழியில் துல்ஜாப்பூரில் தொலைவில் ஒரு கோயிலைக் கண்டான். அப்பகுதியை நன்கறிந்த தன் படைவீரனிடம் கேட்டான். “அது என்ன கோயில்?”
                        
“பிரபு அது பவானிதேவி கோயில். சிவாஜி வணங்கும் தெய்வம் அது. அவன் பவானி தேவியை வணங்காமல் எந்தப் போருக்கும் கிளம்ப மாட்டான்….”

“அப்படியானால் பக்தனுக்கு முன்னால் பவானியைப் பார்த்து விட்டுப் போகலாம்” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டு கோயிலை நோக்கிச் சென்ற அப்சல்கான் ஆரம்பத்திலேயே சிவாஜியைப் பயமுறுத்தும்படியாகத் தன் வலிமை குறித்தும், உறுதியைக் குறித்தும் ஒரு அதிரடி அபிப்பிராயத்தை ஏற்படுத்த நினைத்தான்.

அப்சல்கான் கோயிலை நோக்கி வருவதைக் கண்டு எச்சரிக்கை அடைந்த கோயில் அர்ச்சகர் பவானி சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு பின்புறமாக ரகசிய வழியில் ஓடி விட்டார். அப்சல்கான் கோயிலுக்கு வந்த போது மூல விக்கிரகம் கோயிலில் இல்லை.

அப்சல்கான் வெடிச்சிரிப்பு சிரித்தான்.  “அப்சல்கானைப் பார்க்கப் பயந்து பவானி கூட ஓடிவிட்டாள். பாவம் சிவாஜியின் கடவுளுக்கே இந்த கதி!” என்றவன் கோயிலில் இருந்த மற்ற சிலைகளை உடைத்து துவம்சம் செய்தான். 

தொடர்ந்து போகும் வழியில் பண்டரிபுரத்தை அடைந்தான். அங்குள்ள விட்டலன் கோயில் அந்தக் காலத்திலேயே பிரசித்தம். அவன் பண்டரிபுரம் நெருங்குவதைப் பார்த்த போதே எச்சரிக்கை அடைந்த அர்ச்சகர்கள் மூல விக்கிரகத்தை எடுத்து பீமா நதியின் ஆழமான பகுதியில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள்.

அப்சல்கான் அங்கும் கடவுளைக் காணாமல் ஆத்திரமடைந்தான். ஆத்திரத்தில் அந்தக் கோயிலிலும் சில சிலைகளை உடைத்தெறிந்து விட்டுப் பயணத்தை பூனாவை நோக்கித் தொடர்ந்தான்.


ஒற்றர்கள் மூலமாகத் தகவல் கிடைக்கும் முன் பவானி மூலமாகவே சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. நள்ளிரவில் துல்ஜாப்பூர் பவானி கோயில் இடிந்து கிடப்பதைப் போல் சிவாஜி கனவு கண்டான். கனவிலும் சிவாஜி அதைக் கண்டு பதறிப் போனான். பவானி தேவி கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. பார்க்கையில் பவானி அந்தக் கோயில் இடிபாடுகளுக்கு வெளியே நின்று கொண்டு சிரிக்கிறாள். பின் சொல்கிறாள்.

”இடங்களின் அழிவு இறைவனுக்கில்லை மகனே. பதறாதே. நான் உன்னுடன் தான் இருக்கிறேன்”

சிவாஜி விழித்துக் கொண்டான். அவசரமாகத் தாயின் அறைக்குச் சென்று நித்திரையிலிருந்த தாயை எழுப்பித் தன் கனவைச் சொன்னான். ஜீஜாபாய் கோயில் இடிபாட்டை அபசகுனமாகக் கண்டு கவலைப்பட்டாள். ஆனால் பவானியின் சிரிப்பிலும் வார்த்தைகளிலும் சிவாஜி தைரியம் கொண்டான். மகனுடைய தைரியத்தைத் தாயால் வரவழைத்துக் கொள்ள முடியவில்லை.

அதிகாலையில் ஒற்றன் ஒருவன் வந்து அப்சல்கானின் அட்டூழியங்களைச் சொன்னான். கனவு கண்டதற்கேற்றபடியே நடந்திருப்பதை எண்ணி திகைத்த சிவாஜி தன் படைத்தலைவர்கள், நண்பர்கள், ஆலோசகர்களை உடனடியாக வரவழைத்துப் பேசினான். தன் கனவைச் சொன்னான். பவானியின் வாசகங்களையும், சிரிப்பையும் சொன்னான். ஒற்றன் சொன்ன செய்தியைப் பெரும் மனக்கொதிப்புடன் சொன்னான். பவானியின் துணை தனக்கிருப்பதாகவும் கண்டிப்பாக அப்சல்கானை வெல்லத் தங்களால் முடியும் என்றும் அறிவித்தான்.

ஆனால் அவன் உறுதியும் உற்சாகமும் அவர்களை ஒட்டிக் கொள்ளவில்லை. ஒரு படைத்தலைவன் வெளிப்படையாகவே சொன்னான். “அரசே. தங்கள் உற்சாகத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிர்மறையாகச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். யதார்த்த நிலை என்னவென்றால் நேரடியாகத் திறந்தவெளியில் போரிட்டால் கண்டிப்பாக நாம் அவர்களை வெல்ல முடியாது….”

சிவாஜி மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் அதை ஆமோதிப்பதாகவே அவர்கள் முகபாவனை சொல்லியது. சிவாஜி என்றுமே வெளிப்படையான, அறிவுபூர்வமான அபிப்பிராயங்களுக்கு மதிப்பு தருபவன்.  பவானி துணை இருப்பாள் என்பதற்காக அறிவை விலக்கி வைத்து தீர்மானிப்பதும் ஆபத்து என்பதை அவன் அறிவான். யோசித்துப் பார்த்தால் அவர்கள் நினைப்பதும் சரி என்றே தோன்றியது.

சிவாஜி சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். ”படைபலத்தை நமக்குப் பெருக்க வழியில்லை. இருக்கும் படைகளை வைத்துக் கொண்டு நீங்கள் சொன்னது போல திறந்தவெளியில் ஒரு இடத்தில் நாம் அவர்களுடன் போரிட்டால் தோற்கும் சூழல் இருக்கிறதென்றால் நாம் இடத்தை மாற்றுவோம். அவர்களுக்குப் பழக்கப்படாத, அவர்களுக்கு அனுகூலக்குறைவான இடத்தில் அவர்களைச் சந்திப்போம்…..”

“எந்த இடத்தைச் சொல்கிறீர்கள் அரசே”

“ஜாவ்லிக்கு அருகில் இருக்கும் பிரதாப்கட் கோட்டைக்கு நாம் உடனே போவோம்”

ஜாவ்லியின் அடர்ந்த மலைக்காட்டுப் பிரதேசத்தின் நடுவில் உள்ள பிரதாப்கட் கோட்டை உண்மையிலேயே ஒரு பாதுகாப்பான கோட்டை தான். அங்கும் அவர்கள் அறிவுக்கு வெற்றி உத்தரவாதமில்லாத ஒன்று. ஆனால் அங்கிருந்தால் நிறைய காலம் தாக்குப் பிடிக்கலாம்….. எத்தனையோ முடியாத காரியங்களை சிவாஜி இதுவரை தன் சாகசத்தாலும், சாதுரியத்தாலும் முடித்துக் காட்டியிருக்கிறான். இதிலும் ஒரு அற்புதம் நடக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

சிவாஜி அன்னை பவானி சிலை முன் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்து பவானியின் வீரவாளை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன் ஜீஜாபாயின் முன்னிலையில் தன் படைத்தலைவர்களை நிறுத்தி விட்டுச் சொன்னான். “என் மண்ணில் நான் வணங்கும் தெய்வத்தின் கோயிலைச் சிதிலமாக்கியவன் என்னுடன் போர் புரியக் கிளம்பியிருக்கிறான். அவனுடன் நடத்தும் போரில் நான் என் தெய்வத்தின் துணையால் வெல்லவும் செய்யலாம். இல்லை என் நம்பிக்கை கற்பனையாக இருந்தால் இறந்தும் போகலாம். அப்படி ஒரு வேளை நான் இறந்து போனாலும் தயவு செய்து என் சுயராஜ்ஜியக் கனவையும் என்னோடு சேர்த்து புதைத்து விடாதீர்கள். என் தாயாரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு உங்களையும், நம் கனவையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”

மகன் சொன்னதைக் கேட்டு ஜீஜாபாய் கண்கள் ஈரமாயின. அப்சல்கானைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். அசுர பலம் கொண்டவன், நெடும்படையுடன் கிளம்பி இருக்கிறான் என்ற செய்தி அவளுக்கும் கவலை அளித்தது. மூத்த மகனை அவனுடைய சூழ்ச்சிக்கு அவள் பறிகொடுத்திருக்கிறாள். இப்போது இளைய மகனைப் பலத்தால் அழிக்க அந்த அரக்கன் கிளம்பி இருக்கிறான். எந்த வகையிலும் இரு அணிகளும் சமமில்லாதவை. அவன் உடல் பலத்திற்கும், படை பலத்திற்கும் சிவாஜியும், சிவாஜியின் படையும் எந்த விதத்திலும் ஈடானதல்ல.

இதை எல்லாம் எண்ணுகையில் ஜீஜாபாய் மனம் பலவிதமான உணர்ச்சிப் போராட்டங்களால் நிரம்பியது. இளைய மகனால் எதுவும் முடியும் என்று ஒரு பக்க மனம் நம்பியது. ஆனால் இன்னொரு பக்க மனம் இதில் அவன் இறந்தால் அவளுக்கு இனி எந்தக் குழந்தையும் மிச்சமில்லை என்று எச்சரித்தது. சாம்பாஜியின் மறைவுக்குப் பின் அவளால் பழைய தைரியத்தில் இருக்க முடியவில்லை. வணங்கி எழுந்த மகனை ஆசிர்வதித்து அவன் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவள் சொன்னாள். “வென்று வா மகனே! உனக்காக உன் தாய், உன் மனைவிகள், உன் பிள்ளைகள், உன் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே….”

அவள் சொல்லாத பயத்தை அவனாகவே உணர்ந்து சிவாஜி சொன்னான். “உங்கள் மகன் தனிமனிதனாய் செல்லவில்லை. அவனுடன் அன்னை பவானியின் அருளும் செல்கிறது என்பதை நினைவு வைத்து நிம்மதியாய் இருங்கள் தாயே. உங்கள் மகன் பழைய கணக்கை முடித்துக் கொண்டு வெற்றியுடன் திரும்புவான். கவலைப்படாதீர்கள்”

ஜீஜாபாய் புன்னகைக்க முயன்றாள். பழைய கணக்கு தீர்ந்தால் பெருமகிழ்ச்சியே. ஆனால் அது தீர்வதற்குப் பதிலாக புதிய கணக்கு உருவாகிவிடக் கூடாது என்று அவள் ஆசைப்பட்டாள். ஆண்டவனை வணங்கினாலும் அவன் அளவு அவளால் தைரியமாய் அந்த நம்பிக்கையிலேயே இருந்து விட முடியவில்லை….. கடைசியில் கஷ்டப்பட்டு புன்னகையைக் காட்டினாள். தாயின் கையைப் பிடித்து அதில் முத்தமிட்டு விட்டு மகனைக் கையில் எடுத்துக் கொஞ்சி அவனுக்கும் முத்தமிட்டு விட்டு மனைவியரையும், மகள்களையும் பார்த்துத் தலையசைத்து விட்டு சிவாஜி தன் படையுடன் கிளம்பினான்.

சாய்பாயும், சொர்யாபாயும் கண்கலங்கி நிற்பதை ஜீஜாபாய் கவனித்தாள். மாவீரர்களின் மனைவிகள் இந்த நிச்சயமற்ற எதிர்காலக் கவலைகளில் இருந்தும், பயத்திலிருந்தும் தப்ப முடியாது… ஷிவ்நேரிக் கோட்டையில் தன் கணவனையும், குழந்தை சாம்பாஜியையும் அனுப்பி விட்டு பெருந்துக்கத்துடன் நின்ற பழைய நினைவு மனதில் வந்து நின்றது. அவளுடைய கடந்த கால நிலைமை அவளது மருமகள்களுக்கு வர வேண்டாம் என்று அவள் மனம் பிரார்த்தித்தது.


சிவாஜி ராஜ்கட் மாளிகையிலிருந்து ஜாவ்லியின் பிரதாப்கட் கோட்டைக்கு இடம் மாறிவிட்ட செய்தி அப்சல்கானை வந்தடைந்தது. ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அப்சல்கானிடம், அவனுடன் இருக்கும் மாவல் வீரர்கள் பிரதாப்கட் கோட்டை அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் இருக்கிறது என்றும் அவர்கள் படை அங்கு போய்ச் சண்டை இடுவதில் நிறையச் சிரமங்கள் இருக்கின்றன என்பதையும் விளக்கினார்கள்.


அப்சல்கானின் குறுக்கு புத்தி “சிவாஜியின் குழந்தையும் குடும்பமும் இப்போதும் ராஜ்கட் மாளிகையில் தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க வைத்தது

(தொடரும்)
என்.கணேசன்