என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Sunday, April 7, 2019

தினத்தந்தியில் என் புதிய ஆன்மிகத் தொடர்!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தினத்தந்தியில் வரும் 9.4.2019 அன்று ஆரம்பமாகும் என் புதிய ஆன்மிகத் தொடர் ”ஆன்மிகப் பயணத்தில் ஆத்ம சக்திகள்” பின் செவ்வாய் தோறும் தொடர இருக்கிறது. ஆன்மிகப் பெரியோர் நிகழ்த்திய அற்புதங்களையும், காட்டிய மெய்ஞான வழிகளையும் சுவாரசியமாகச் சொல்லும் இந்தத் தொடரை தினத்தந்தியில் படிக்கும் வாய்ப்பிருக்கும் ஆன்மிக வாசகர்கள் தவறாமல் படிக்கவும்.

அங்கு படிக்க முடியாத வாசகர்கள் சிறு இடைவெளிக்குப் பின் இந்தத் தொடர் இந்த வலைப்பூவிலும் மறுபதிப்பு ஆகும் போது படித்துக் கொள்ளலாம்.

அன்புடன்
என்.கணேசன்

Thursday, April 4, 2019

இருவேறு உலகம் – 130



மாணிக்கம் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாகக் கூறி ராஜினாமா செய்ததுடன் ஆட்சிக்குத் தலைமை  ஏற்கத் தன் நண்பர் கமலக்கண்ணனையே அழைப்பதாகவும் அறிக்கை விட்டதால் கமலக்கண்ணன் வீட்டின் முன் கட்சித் தொண்டர்களும், பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்களும் குவிந்திருந்தனர். விஸ்வேஸ்வரய்யா க்ரிஷைச் சந்திக்க உள்ளே செல்வதற்குள் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த பரபரப்புகளால் பாதிக்கப்படாமல்,  பெருமை காட்டாமல் மரியாதையாக வரவேற்ற க்ரிஷால் விஸ்வேஸ்வரய்யா மிகவும் கவரப்பட்டார்.

பரஸ்பர வணக்கங்களுக்குப் பின் விஸ்வேஸ்வரய்யா இஸ்ரோவால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து பேச ஆரம்பித்தார். நாசா மற்றும் இஸ்ரோ ஏலியன்களால் ஏற்படும் அலைவரிசை மாற்றங்களையும், அமானுஷ்ய நிகழ்வுகளையும் கண்காணிக்க ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றன என்றும் இந்த வருடத்தில் அமேசான் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் சில ஆச்சரியகரமான மாற்றங்களைப் பதிவு செய்ததில் க்ரிஷ் பங்கையும் பார்க்க நேர்ந்தது என்றும் அது பற்றி நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவன் நடந்ததை எல்லாம் அப்படியே சொல்வான் என்று அவர் நம்பவில்லை. இது வரை அவன் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசியதாகவும் அவருக்குத் தகவல் இல்லை. ஏதாவது சொல்லி மழுப்பக் கூடும் என்று எதிர்பார்த்தார்.

க்ரிஷ் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் யோசித்தான். நிக்கோலா டெஸ்லாவின் எழுத்துக்களை அவன் உத்வேகத்தோடு படித்துக் கொண்டு இருந்த போது தொடர்பு கொண்டவர் இந்த மனிதர். பிரபஞ்ச சக்தி அனுப்பியே வந்தவராகவே அவரைப் பார்ப்பது புத்திசாலித்தனமாகப் பட்டது.  அதனால் அவரிடம் நடந்ததை அப்படியே தெரிவிப்பது நல்லது என்று தோன்றியது. பல கோடிகள் செலவழித்து அவன் நாடு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றில் அவன் சம்பந்தப்பட்டு விட்ட பிறகு தன் பங்கில் அறிந்ததை அவரிடம் தெரிவிப்பது தர்மம் கூட என்று நினைத்தான். அவன் சொல்வதை நம்புவதும் நம்பாததும் அவர் விருப்பம்….

அவன் நிக்கோலா டெஸ்லாவைப் படித்துக் கொண்டிருந்த போது அவன் கம்ப்யூட்டரில் மின்னிய வாசகத்திலிருந்து ஆரம்பித்து நடந்தது அனைத்தையும் அமைதியாகச் சொன்னான். விஸ்வேஸ்ரய்யா பிரமிப்புடன் முழுவதையும் கேட்டார். வேற்றுக்கிரகவாசிக்கும் க்ரிஷுக்கும் இடையே உருவான நட்பு,  பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றுடன் விஸ்வம், மாஸ்டர்  சம்பந்தப்பட்ட காட்சிகளும், அது பற்றி வேற்றுக்கிரகவாசி சொன்னதும் கூடத் தெரியவந்த போது விஸ்வேஸ்வரய்யா கூடுதல் கவனத்துடன் கேட்டார்.

விஸ்வத்தின் சக்திகளால் கவரப்பட்டவர்களில் அவரும் ஒருவர். மனிதன் எந்த அளவுக்கு அமானுஷ்ய சக்திகளை வசப்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மனிதன் இல்லுமினாட்டிக்கு ஒரு சிறப்பான வரவே என்று நினைத்துக் கொண்டிருப்பவர் அவர்….

க்ரிஷ் வேற்றுக்கிரகவாசி விடைபெற்ற கணத்தோடு முடித்துக் கொண்டான். அவர்கள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவை தான். வேற்றுக்கிரகவாசி தொடர்பு கொண்டதிலிருந்து விடைபெற்றது வரை அவன் சொல்லி முடித்த பிறகு விஸ்வேஸ்வரய்யா ஒரு நிமிடம் அமைதி காத்தார். அவருக்கு அவன் சொன்னவை எதுவும் பொய்யல்ல என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வருவதற்கு முன் அவன் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் பல முறை பார்த்து மனதில் பதித்து விட்டு வந்திருக்கின்றார். அவன் சொன்ன விஷயங்கள் அவன் முக பாவனை உட்பட கணக்குப் போடுகையில் எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகிறது.
விஸ்வேஸ்வரய்யா தன் துறை சார்ந்த கேள்வியையே முதல் கேள்வியாகக் கேட்டார். “ஏலியன் எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுக்கத் தயாராக இருந்த போது நீங்கள் ஏன் உருவமில்லாமலேயே உணர்ந்தால் போதும் என்று ஒத்துக் கொண்டீர்கள்?”

க்ரிஷ் சொன்னான். “நாம் எல்லோரும் உருவங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தோன்றியது. உருவம் இல்லாததை உணர்வதே இல்லை. பொய்யான ஒரு உருவத்தைப் பார்ப்பதை விட உருவமில்லாமலே உணர்வது நல்லது என்று தோன்றியது”

அவன் பதில் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு அறிவுஜீவியால் மட்டுமே அப்படி முடிவெடுக்க முடியும்.

விஸ்வேஸ்வரய்யா அவனிடம் கேட்டார். “நீங்கள் அந்த ஏலியன் சொன்னபடி உலகம் அழிந்து விடும் என்று நினைக்கிறீர்களா?”

“அப்படி ஆகி விடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன். ஆனால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம் ஏதாவது செய்யா விட்டால் அவன் சொன்னது போல ஆகிவிடும் என்று பயப்படுகிறேன்…”

“இந்த உலகத்தைக் காப்பாற்றும் ஒட்டு மொத்த பொறுப்பை ஒருவனுக்குத் தருவது என்பது சற்று மிகையான விஷயம் அல்லவா?”

“உண்மை தான். ஆனால் பொறுப்புள்ள ஒவ்வொருவனும் அப்படி நினைத்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகக் கூட என்னிடம் அவன் அப்படிச் சொல்லியிருக்கலாம்”

அந்தப் பதிலை அவர் ரசித்தார். நான் சிறந்தவன், என் தகுதி பார்த்து அவன் சொன்னான் என்று க்ரிஷ் சொல்லவில்லை என்பதை அவரால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

”அந்த எதிரி யாரென்று தெரிந்ததா? அந்த எதிரியை நீங்கள் சந்திக்க முடிந்ததா?” மெல்ல விஸ்வேஸ்வரய்யா கேட்டார்.

அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவர் மெல்லச் சொன்னார். “இது எங்கள் ஆராய்ச்சி சம்பந்தப்படாத விஷயம் தான். நான் தனி ஆர்வத்தில் கேட்கிறேன். தயக்கம் இருந்தால் பதில் சொல்லத் தேவையில்லை”

க்ரிஷுக்கு அவரிடம் பதில் சொல்லத் தோன்றியது. சுருக்கமாக நடந்த மிக முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சொன்னான். கடைசியில் எதிரியாக விஸ்வத்தைக் கண்டுபிடித்ததையும், அவன் தீவிரவாத இயக்கங்களையும், இல்லுமினாட்டியையும் பயன்படுத்தி அதிகார ஏணியில் மேலேறப் போவதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லி முடித்தான். விஸ்வம் மற்றும் மாஸ்டர் இருவருடைய இமயமலைப் பயணங்களை அவன் சொல்லவில்லை. இஸ்ரோவும் நாசாவும் அவர்களுடைய முழுக்கவனத்தை இனி இமயமலையின் அந்தக் குகைக்குச் செலுத்தி மாஸ்டரின் வருங்கால தவத்தைக் கலைத்து விட வேண்டாம் என்று அவன் நினைத்தான்.

விஸ்வேஸ்வரய்யா முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டிக் கேட்டார். “நீங்கள் இல்லுமினாட்டி என்று ஒன்று இருப்பதை நம்புகிறீர்களா என்ன?”
.
உறுதியாகத் தெரியாத விஷயங்களைச் சொல்ல விருப்பப்படாத க்ரிஷ். “தெரியவில்லை. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்…” என்றான்.

விஸ்வேஸ்வரய்யா விடாமல் கேட்டார். “ஒருவேளை இல்லுமினாட்டி என்கிற சக்தி வாய்ந்த அமைப்பு இருந்து அதில் விஸ்வம் சேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”

“வெடிமருந்தோடு தீக்கதிர் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது தான் ஆகும். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது போல அழிவு நிச்சயம். உலகமே சீக்கிரம் சுடுகாடாகும்….” க்ரிஷ் அமைதியாகச் சொன்னான்.

அவன் அதைச் சர்வசாதாரணமாகச் சொன்னது விஸ்வேஸ்வரய்யாவுக்கு என்னவோ போல் இருந்தது. “என்ன இப்படிச் சொல்கிறீர்கள். உங்கள் ஏலியன் நண்பன் உங்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டுப் போயிருக்கிற பொறுப்பு உங்களுக்கில்லையா?”

க்ரிஷ் வருத்தம் கலந்த குரலில் சொன்னான். “யாருமே முடிந்ததைத் தான் செய்ய முடியும். எனக்கு விஸ்வம் எங்கே என்று தெரியாது. இல்லுமினாட்டி இருக்கா இல்லையா என்றும் தெரியாது. இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் வழி தெரியாது. பிரபஞ்ச சக்திக்கு இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை இருந்திருந்தால் அது இதில் இடைப்பட ஏதாவது வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். எதுவுமே இல்லாத போது நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?”

சிறிது நேரம் மௌனம் சாதித்த விஸ்வேஸ்வரய்யா கண்ணில் க்ரிஷ் மேசையில் இருந்த நிக்கோலா டெஸ்லா புத்தகம் பட்டது. அவர் அவனிடம் நிக்கோலா டெஸ்லாவின் கருத்துக்கள் பற்றிக் கேட்டார். அவன் சுவாரசியத்துடன் நிக்கோலா டெஸ்லா பற்றி தான் உணர்ந்தவைகளைப் பேச ஆரம்பித்தான். கேட்க அவருக்கும் மிக சுவாரசியமாக இருந்தது. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விஸ்வேஸ்வரய்யா நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்.

அன்று இரவு ம்யூனிக்கில் எர்னெஸ்டோவுக்கு ஒரு போன் கால் வந்தது.  விஸ்வம் கையில் இல்லுமினாட்டி சின்னம் இருப்பதையும், இமயமலையில் உள்ள இல்லுமினாட்டி தவசி அவனுக்கு அதைத் தந்து விட்டு இறந்ததையும் விவரமாக ஒருவன் தெரிவித்தான். சுவாரசியத்துடன் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து ஒருவன் ஒரு உறையைக் கொடுத்து விட்டுப் போனான். அதிலிருந்த பென் ட்ரைவில் விஸ்வேஸ்வரய்யாவுக்கும் க்ரிஷுக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு இருந்தது. அதை  கண்களை மூடிக் கொண்டு எர்னெஸ்டோ கேட்டார்.

அன்றிரவு அவருக்கு உறங்க முடியவில்லை.

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, April 3, 2019

நதியின் வெற்றி ரகசியம்!

வெற்றியின் ரகசியத்தை நதியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து வாழ்க்கையை முடிப்பது எப்படி என்ற ரகசியத்தை நதியைத் தவிர வேறு எதுவும் இவ்வளவு வலிமையாகவும், எளிமையாகவும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்து விட முடியாது. எப்படி என்பதை இந்தக் காணொளியில் காணுங்களேன்!


என்.கணேசன்




Monday, April 1, 2019

சத்ரபதி 66


அப்சல்கான் பீஜாப்பூரிலிருந்து பெரும்படையுடன் புறப்பட்டான். அலி ஆதில்ஷாவும், ராஜமாதாவும் அவனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். பீஜாப்பூர் மக்கள் அப்படி ஒரு பெரும்படை திரண்டு அங்கிருந்து கிளம்புவதைப் பார்த்து நீண்ட காலம் ஆகியிருந்தது. மக்களும் பிரமிப்புடன் இருமருங்கிலிருந்தும் வேடிக்கை பார்க்க கம்பீரமாகக் கிளம்பினான் அப்சல்கான். படையுடன் வடக்கே பயணித்து வந்தவன் வழியில் துல்ஜாப்பூரில் தொலைவில் ஒரு கோயிலைக் கண்டான். அப்பகுதியை நன்கறிந்த தன் படைவீரனிடம் கேட்டான். “அது என்ன கோயில்?”
                        
“பிரபு அது பவானிதேவி கோயில். சிவாஜி வணங்கும் தெய்வம் அது. அவன் பவானி தேவியை வணங்காமல் எந்தப் போருக்கும் கிளம்ப மாட்டான்….”

“அப்படியானால் பக்தனுக்கு முன்னால் பவானியைப் பார்த்து விட்டுப் போகலாம்” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டு கோயிலை நோக்கிச் சென்ற அப்சல்கான் ஆரம்பத்திலேயே சிவாஜியைப் பயமுறுத்தும்படியாகத் தன் வலிமை குறித்தும், உறுதியைக் குறித்தும் ஒரு அதிரடி அபிப்பிராயத்தை ஏற்படுத்த நினைத்தான்.

அப்சல்கான் கோயிலை நோக்கி வருவதைக் கண்டு எச்சரிக்கை அடைந்த கோயில் அர்ச்சகர் பவானி சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு பின்புறமாக ரகசிய வழியில் ஓடி விட்டார். அப்சல்கான் கோயிலுக்கு வந்த போது மூல விக்கிரகம் கோயிலில் இல்லை.

அப்சல்கான் வெடிச்சிரிப்பு சிரித்தான்.  “அப்சல்கானைப் பார்க்கப் பயந்து பவானி கூட ஓடிவிட்டாள். பாவம் சிவாஜியின் கடவுளுக்கே இந்த கதி!” என்றவன் கோயிலில் இருந்த மற்ற சிலைகளை உடைத்து துவம்சம் செய்தான். 

தொடர்ந்து போகும் வழியில் பண்டரிபுரத்தை அடைந்தான். அங்குள்ள விட்டலன் கோயில் அந்தக் காலத்திலேயே பிரசித்தம். அவன் பண்டரிபுரம் நெருங்குவதைப் பார்த்த போதே எச்சரிக்கை அடைந்த அர்ச்சகர்கள் மூல விக்கிரகத்தை எடுத்து பீமா நதியின் ஆழமான பகுதியில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள்.

அப்சல்கான் அங்கும் கடவுளைக் காணாமல் ஆத்திரமடைந்தான். ஆத்திரத்தில் அந்தக் கோயிலிலும் சில சிலைகளை உடைத்தெறிந்து விட்டுப் பயணத்தை பூனாவை நோக்கித் தொடர்ந்தான்.


ஒற்றர்கள் மூலமாகத் தகவல் கிடைக்கும் முன் பவானி மூலமாகவே சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. நள்ளிரவில் துல்ஜாப்பூர் பவானி கோயில் இடிந்து கிடப்பதைப் போல் சிவாஜி கனவு கண்டான். கனவிலும் சிவாஜி அதைக் கண்டு பதறிப் போனான். பவானி தேவி கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. பார்க்கையில் பவானி அந்தக் கோயில் இடிபாடுகளுக்கு வெளியே நின்று கொண்டு சிரிக்கிறாள். பின் சொல்கிறாள்.

”இடங்களின் அழிவு இறைவனுக்கில்லை மகனே. பதறாதே. நான் உன்னுடன் தான் இருக்கிறேன்”

சிவாஜி விழித்துக் கொண்டான். அவசரமாகத் தாயின் அறைக்குச் சென்று நித்திரையிலிருந்த தாயை எழுப்பித் தன் கனவைச் சொன்னான். ஜீஜாபாய் கோயில் இடிபாட்டை அபசகுனமாகக் கண்டு கவலைப்பட்டாள். ஆனால் பவானியின் சிரிப்பிலும் வார்த்தைகளிலும் சிவாஜி தைரியம் கொண்டான். மகனுடைய தைரியத்தைத் தாயால் வரவழைத்துக் கொள்ள முடியவில்லை.

அதிகாலையில் ஒற்றன் ஒருவன் வந்து அப்சல்கானின் அட்டூழியங்களைச் சொன்னான். கனவு கண்டதற்கேற்றபடியே நடந்திருப்பதை எண்ணி திகைத்த சிவாஜி தன் படைத்தலைவர்கள், நண்பர்கள், ஆலோசகர்களை உடனடியாக வரவழைத்துப் பேசினான். தன் கனவைச் சொன்னான். பவானியின் வாசகங்களையும், சிரிப்பையும் சொன்னான். ஒற்றன் சொன்ன செய்தியைப் பெரும் மனக்கொதிப்புடன் சொன்னான். பவானியின் துணை தனக்கிருப்பதாகவும் கண்டிப்பாக அப்சல்கானை வெல்லத் தங்களால் முடியும் என்றும் அறிவித்தான்.

ஆனால் அவன் உறுதியும் உற்சாகமும் அவர்களை ஒட்டிக் கொள்ளவில்லை. ஒரு படைத்தலைவன் வெளிப்படையாகவே சொன்னான். “அரசே. தங்கள் உற்சாகத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிர்மறையாகச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். யதார்த்த நிலை என்னவென்றால் நேரடியாகத் திறந்தவெளியில் போரிட்டால் கண்டிப்பாக நாம் அவர்களை வெல்ல முடியாது….”

சிவாஜி மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் அதை ஆமோதிப்பதாகவே அவர்கள் முகபாவனை சொல்லியது. சிவாஜி என்றுமே வெளிப்படையான, அறிவுபூர்வமான அபிப்பிராயங்களுக்கு மதிப்பு தருபவன்.  பவானி துணை இருப்பாள் என்பதற்காக அறிவை விலக்கி வைத்து தீர்மானிப்பதும் ஆபத்து என்பதை அவன் அறிவான். யோசித்துப் பார்த்தால் அவர்கள் நினைப்பதும் சரி என்றே தோன்றியது.

சிவாஜி சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். ”படைபலத்தை நமக்குப் பெருக்க வழியில்லை. இருக்கும் படைகளை வைத்துக் கொண்டு நீங்கள் சொன்னது போல திறந்தவெளியில் ஒரு இடத்தில் நாம் அவர்களுடன் போரிட்டால் தோற்கும் சூழல் இருக்கிறதென்றால் நாம் இடத்தை மாற்றுவோம். அவர்களுக்குப் பழக்கப்படாத, அவர்களுக்கு அனுகூலக்குறைவான இடத்தில் அவர்களைச் சந்திப்போம்…..”

“எந்த இடத்தைச் சொல்கிறீர்கள் அரசே”

“ஜாவ்லிக்கு அருகில் இருக்கும் பிரதாப்கட் கோட்டைக்கு நாம் உடனே போவோம்”

ஜாவ்லியின் அடர்ந்த மலைக்காட்டுப் பிரதேசத்தின் நடுவில் உள்ள பிரதாப்கட் கோட்டை உண்மையிலேயே ஒரு பாதுகாப்பான கோட்டை தான். அங்கும் அவர்கள் அறிவுக்கு வெற்றி உத்தரவாதமில்லாத ஒன்று. ஆனால் அங்கிருந்தால் நிறைய காலம் தாக்குப் பிடிக்கலாம்….. எத்தனையோ முடியாத காரியங்களை சிவாஜி இதுவரை தன் சாகசத்தாலும், சாதுரியத்தாலும் முடித்துக் காட்டியிருக்கிறான். இதிலும் ஒரு அற்புதம் நடக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

சிவாஜி அன்னை பவானி சிலை முன் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்து பவானியின் வீரவாளை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன் ஜீஜாபாயின் முன்னிலையில் தன் படைத்தலைவர்களை நிறுத்தி விட்டுச் சொன்னான். “என் மண்ணில் நான் வணங்கும் தெய்வத்தின் கோயிலைச் சிதிலமாக்கியவன் என்னுடன் போர் புரியக் கிளம்பியிருக்கிறான். அவனுடன் நடத்தும் போரில் நான் என் தெய்வத்தின் துணையால் வெல்லவும் செய்யலாம். இல்லை என் நம்பிக்கை கற்பனையாக இருந்தால் இறந்தும் போகலாம். அப்படி ஒரு வேளை நான் இறந்து போனாலும் தயவு செய்து என் சுயராஜ்ஜியக் கனவையும் என்னோடு சேர்த்து புதைத்து விடாதீர்கள். என் தாயாரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு உங்களையும், நம் கனவையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”

மகன் சொன்னதைக் கேட்டு ஜீஜாபாய் கண்கள் ஈரமாயின. அப்சல்கானைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். அசுர பலம் கொண்டவன், நெடும்படையுடன் கிளம்பி இருக்கிறான் என்ற செய்தி அவளுக்கும் கவலை அளித்தது. மூத்த மகனை அவனுடைய சூழ்ச்சிக்கு அவள் பறிகொடுத்திருக்கிறாள். இப்போது இளைய மகனைப் பலத்தால் அழிக்க அந்த அரக்கன் கிளம்பி இருக்கிறான். எந்த வகையிலும் இரு அணிகளும் சமமில்லாதவை. அவன் உடல் பலத்திற்கும், படை பலத்திற்கும் சிவாஜியும், சிவாஜியின் படையும் எந்த விதத்திலும் ஈடானதல்ல.

இதை எல்லாம் எண்ணுகையில் ஜீஜாபாய் மனம் பலவிதமான உணர்ச்சிப் போராட்டங்களால் நிரம்பியது. இளைய மகனால் எதுவும் முடியும் என்று ஒரு பக்க மனம் நம்பியது. ஆனால் இன்னொரு பக்க மனம் இதில் அவன் இறந்தால் அவளுக்கு இனி எந்தக் குழந்தையும் மிச்சமில்லை என்று எச்சரித்தது. சாம்பாஜியின் மறைவுக்குப் பின் அவளால் பழைய தைரியத்தில் இருக்க முடியவில்லை. வணங்கி எழுந்த மகனை ஆசிர்வதித்து அவன் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவள் சொன்னாள். “வென்று வா மகனே! உனக்காக உன் தாய், உன் மனைவிகள், உன் பிள்ளைகள், உன் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே….”

அவள் சொல்லாத பயத்தை அவனாகவே உணர்ந்து சிவாஜி சொன்னான். “உங்கள் மகன் தனிமனிதனாய் செல்லவில்லை. அவனுடன் அன்னை பவானியின் அருளும் செல்கிறது என்பதை நினைவு வைத்து நிம்மதியாய் இருங்கள் தாயே. உங்கள் மகன் பழைய கணக்கை முடித்துக் கொண்டு வெற்றியுடன் திரும்புவான். கவலைப்படாதீர்கள்”

ஜீஜாபாய் புன்னகைக்க முயன்றாள். பழைய கணக்கு தீர்ந்தால் பெருமகிழ்ச்சியே. ஆனால் அது தீர்வதற்குப் பதிலாக புதிய கணக்கு உருவாகிவிடக் கூடாது என்று அவள் ஆசைப்பட்டாள். ஆண்டவனை வணங்கினாலும் அவன் அளவு அவளால் தைரியமாய் அந்த நம்பிக்கையிலேயே இருந்து விட முடியவில்லை….. கடைசியில் கஷ்டப்பட்டு புன்னகையைக் காட்டினாள். தாயின் கையைப் பிடித்து அதில் முத்தமிட்டு விட்டு மகனைக் கையில் எடுத்துக் கொஞ்சி அவனுக்கும் முத்தமிட்டு விட்டு மனைவியரையும், மகள்களையும் பார்த்துத் தலையசைத்து விட்டு சிவாஜி தன் படையுடன் கிளம்பினான்.

சாய்பாயும், சொர்யாபாயும் கண்கலங்கி நிற்பதை ஜீஜாபாய் கவனித்தாள். மாவீரர்களின் மனைவிகள் இந்த நிச்சயமற்ற எதிர்காலக் கவலைகளில் இருந்தும், பயத்திலிருந்தும் தப்ப முடியாது… ஷிவ்நேரிக் கோட்டையில் தன் கணவனையும், குழந்தை சாம்பாஜியையும் அனுப்பி விட்டு பெருந்துக்கத்துடன் நின்ற பழைய நினைவு மனதில் வந்து நின்றது. அவளுடைய கடந்த கால நிலைமை அவளது மருமகள்களுக்கு வர வேண்டாம் என்று அவள் மனம் பிரார்த்தித்தது.


சிவாஜி ராஜ்கட் மாளிகையிலிருந்து ஜாவ்லியின் பிரதாப்கட் கோட்டைக்கு இடம் மாறிவிட்ட செய்தி அப்சல்கானை வந்தடைந்தது. ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அப்சல்கானிடம், அவனுடன் இருக்கும் மாவல் வீரர்கள் பிரதாப்கட் கோட்டை அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் இருக்கிறது என்றும் அவர்கள் படை அங்கு போய்ச் சண்டை இடுவதில் நிறையச் சிரமங்கள் இருக்கின்றன என்பதையும் விளக்கினார்கள்.


அப்சல்கானின் குறுக்கு புத்தி “சிவாஜியின் குழந்தையும் குடும்பமும் இப்போதும் ராஜ்கட் மாளிகையில் தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க வைத்தது

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, March 28, 2019

இருவேறு உலகம் – 129


மாஸ்டர் பத்மாவதி பக்தியுடன் பரிமாறியதை ரசித்து சாப்பிட்டார். சாப்பிடும் போது மணீஷ் மரணம் உட்பட பல விஷயங்களை அவர்கள் பேசினார்கள். பேச்சோடு பேச்சாக இனி இமயமலைக்கே நிரந்தரமாய் சென்று விடும் தன் முடிவையும் மாஸ்டர் தெரிவித்தார். க்ரிஷிடம்
முகம் வெளிக்காட்டாத வாட்டத்தை உதய் உணர்ந்தான். மற்றவர்களும் வருத்தப்பட்டார்கள். கமலக்கண்ணன் க்ரிஷ், ஹரிணி இருவரையும் காட்டிக் கேட்டார். “இவங்க கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க இல்லையா?”

“என் ஆசிர்வாதம் வரும்” என்று சுருக்கமாய் மாஸ்டர் சொன்னார்.

சாப்பிட்ட பிறகு தனியாக ஹரிணி மாஸ்டரிடம் பேசினாள். மாஸ்டர் ஒரேயடியாக க்ரிஷை விட்டுப் போவது அவளுக்குக் கவலையைத் தந்தது. இப்போது க்ரிஷ் மனதையும் நேரத்தையும் முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிற பிரச்னையை க்ரிஷ் தனியே சந்திக்க முடியுமா என்று கவலையோடு அவள் கேட்டாள். அவனால் முடியும் என்று அவர் உறுதியாகச் சொன்னார்.

“மாஸ்டர் திரும்பத் திரும்ப கேட்கறேன்னு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. சில நேரங்கள்ல க்ரிஷோட தியானம், தனிமையில் யோசனை எல்லாம் என்னைப் பயமுறுத்துது. நான் அவனோட ஈடுபாடுல, கடமைகள்ல குறுகிட விரும்பல. ஆனா அதே சமயத்துல அவனை அதுல ஒரேயடியா இழந்துடவும் விரும்பலை….. மணிக்கணக்குல, நாள்கணக்குலன்னு இப்ப எல்லாம் அவன் மூழ்கிப் போயிடறப்ப ரொம்ப பயமா இருக்கு மாஸ்டர்….. எனக்குன்னு அவன் வாழ்க்கைல ஒரு இடம் இருக்குமில்லையா…. அவனை நான் இழந்துட மாட்டேனில்ல?” கேட்கும் போது அவள் கண்களில் ஈரம் தெரிந்தது. எத்தனை தான் புரிதலுடன் அவனுக்குத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருந்தாலும் சில நேரங்களில் அவள் மனம் இப்படிப் பயமுறுத்தத் தான் செய்தது.

மாஸ்டர் அன்போடு சொன்னார். “என்கிட்ட அபூர்வ சக்திகளைப் படிக்க வர்றப்ப கூட அதுக்குக் காதல் தடையா இருக்குமான்னு க்ரிஷ் கேட்டான் ஹரிணி. ஒருவேளை நான் தடையாயிருக்கும்னு சொல்லியிருந்தா அவன் அந்த சக்திகளே வேண்டாம்னு விலகற மனநிலையில் இருந்தான். அந்த அளவுக்கு உன்னை உயிருக்குயிரா அவன் நேசிக்கிறான். அவன் மனசுல உன் இடத்தை வேற யாரும், வேற எதுவும் எடுத்துக்க முடியாது பயப்படாதே. இப்ப அவன் நேரத்தை அதிமுக்கியமான விஷயங்கள் எடுத்துகிட்டிருக்குங்கறது உண்மை தான். அது அவன் உதற முடியாத கடமைங்கறத ஞாபகம் வச்சுக்கோ. உதாரணத்துக்கு உன் அம்மாவுக்கோ, அவன் அம்மாவுக்கோ உடம்பு முடியாம சீரியஸா இருக்குன்னு வச்சுக்கோ. எல்லாத்தையும் விட அதிகமா ஆஸ்பத்திரில நீ நேரம் செலவழிச்சா அவன் அதை நீ அவனுக்குக் காட்டற அலட்சியமா நினைக்க மாட்டான். அதே மாதிரி அவன் ஆஸ்பத்திரில அதிக நேரம் செலவழிச்சா அது உன்னை அலட்சியப் படுத்தற மாதிரின்னு நீ நினைக்க மாட்டாய். இல்லையா. இது அது மாதிரி தான்னு நெனச்சுக்கோ. அதை விடக் கோடி மடங்கு முக்கியமான ஒரு கடமைல அவன் தனியா போராடிகிட்டு இருக்கான். அது முடிஞ்சவுடனே அவன் உன் க்ரிஷா கண்டிப்பா திரும்புவான்.”

மாஸ்டர் வார்த்தைகளில் அவள் மனம் தைரியப்பட்டது. கண்கலங்க அவள் தலையசைத்தாள். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு மாஸ்டர் எல்லோரிடமும் விடைபெற்றார். பத்மாவதி கடைசியாக அவரிடம் ஒருமுறை மனமுருக வேண்டினாள். “உதய்க்கு ஒரு நல்ல பொண்ணு மனைவியா வரணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க சுவாமி” புன்னகையுடன் உதய்க்கு அப்படியே ஆசி வழங்கி விட்டு  க்ரிஷிடம் விடைபெறும் போது மட்டும் அவருக்கும் கண்கலங்கியது. அவனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான்….. அவர் போய் விட்டார்.


மாணிக்கம் தன் மகனின் அறையில் அமர்ந்திருந்தார். அவர் கையில் மகன் கடைசியாக எழுதிய “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” கடிதம் இருந்தது. ஒரு அன்பு மகன் தந்தையிடம் ஒரேயடியாக விடைபெற்றுக் கொள்ளும் விதமா இது என்று அவர் மனம் கதறியது. அவன் அறை நிறைய அடுக்கி வைத்திருந்த மெடல்களும், கேடயங்களும் பார்க்கும் போது மனம் ரணமானது. எப்படி வெற்றி பெற்றுக் கொண்டு முன்னேறி வந்தவன் ஒரு பெண் தனக்கில்லை என்றானவுடன் பின்னடைந்ததை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படிப் பின்னடைய ஆரம்பித்தவனை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மேலும் அழுத்திக் கொன்று விட்டன….. அவருக்கு எல்லாமாய் அவன் ஒருவன் தான் இருந்தான். அவனும் இப்போது போய் விட்டான். இப்போது மிஞ்சி இருப்பதெல்லாம் வெறுமையே…

சங்கரமணி தன் இரண்டாம் மகளின் குழந்தைகளை மணீஷுக்கு மாற்றாக இருக்க வைக்க முயன்று தோற்றுப் போனார். மாணிக்கம் அவர்களிடம் முகம் பார்த்தும் பேசவில்லை. இரண்டு நாள் இருந்து பார்த்து விட்டு அவர்கள் போய் விட்டார்கள். எதற்கும் அசையாத, அமைதியிழக்காத மன உறுதி படைத்தவனாக மருமகனை எப்போதும் நினைத்துப் பெருமைப்படும் சங்கரமணி மருமகன் நடைப்பிணமான விதத்தை கவலையோடு கவனித்தார். இப்போது மணீஷின் அறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் மாணிக்கத்தை எப்படி பழைய மாணிக்கமாக மாற்றுவது என்று கவலையோடு யோசித்தபடி உள்ளே நுழைந்தார்.

“மாணிக்கம் சீஃப் செக்ரட்டரி போன் செஞ்சார். கையெழுத்து போட வேண்டிய முக்கியமான ஃபைல்கள் நிறைய இருக்காம்…..”

“ம்”

“பாரு, மணீஷ் எனக்கும் பேரன் தான். அவன் போனது எனக்கும் பாதி உசுரு போன மாதிரி தான். பழுத்த கிழம் நான் குத்துக்கல்லா இன்னும் இருக்கேன். வாழ வேண்டிய வயசுல அவன் போனது எனக்கும் தாங்க முடியல தான். ஆனா எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் எமன் கிட்ட டீல் போடற வசதி யாருக்கும் இல்லையே”

மாணிக்கம் மௌனமாகவே அமர்ந்திருந்தார். சங்கரமணி சொன்னார். “இப்பவே கமலக்கண்ணன் கை ஓங்கியிருக்கு. நீ இதுல இருந்து மீள மாட்டேன்னு நம்ம எம் எல் ஏக்களே பேச ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப நாம சுதாரிக்கலைன்னா கமலக்கண்ணன், உதய் கை ஓங்கிடும்.”

“பரவாயில்ல. நானே ராஜினாமா செய்யணும்னு தான் முடிவு செய்திருக்கேன்”     

மாணிக்கத்தின் வார்த்தைகள் அவரைக் கத்தியாக வெட்டின. “என்னடா, பிள்ளை செத்ததுல உனக்கு புத்தி பேதலிச்சுப் போச்சா? நாம எந்த நிலைமைல இருக்கோம் தெரியுமா உனக்கு?”

“யாருக்காக எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேனோ அவனே போயிட்டான். இனி இதுக்கு மேல ஆகறதுக்கு என்ன இருக்கு மாமா?”

“என்னடா சொல்றே?” சங்கரமணி குரல் நடுங்கக் கேட்டார்.   

“போதும் மாமா…. எல்லாமே போதும்”  மிக உறுதியாகச் சொன்னார் மாணிக்கம்.


வாஷிங்டனில் நவீன்சந்திர ஷா விஸ்வத்தை அவன் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து சந்தித்தான். அறையின் மேசையில் விஸ்வம் வைத்திருந்த முக்கோணத்திற்குள் நெற்றிக்கண் சில நிமிடங்களிலேயே அவன் பார்வையில் விழுந்தது. “இது எங்கே வாங்கினாய்?”

“வாங்கினதல்ல. கிடைச்சது” என்று சாதாரணமாக விஸ்வம் சொன்னான்.

அதைக் கையில் எடுத்துப் பார்த்தபடியே நவீன்சந்திர ஷா கேட்டான். “எங்கே கிடைச்சது?”

“இமயமலையில….” என்று அதொன்றும் பெரிய விஷயமல்ல என்பது போல் விஸ்வம் சொன்னான்.

“எப்படிக் கிடைச்சது? விவரமாய் சொல்லேன்”

“இந்த ஒருவாரமாய் எனக்கு இமயமலைல ஒரு குகைக்குள்ளே இந்தச் சின்னம் மின்னுகிற மாதிரி கனவு தினமும் வருது. அந்த மலைப்பகுதியோ ரொம்ப தத்ரூபமாய் மனசுல பதிஞ்சுது. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இமயமலைக்கு அடிக்கடிப் போறவர். அவர் கிட்ட மனசுல பதிஞ்ச வர்ணனைகளைச் சொல்லி அப்படி ஒரு இடம் இருக்கான்னு கேட்டேன். அவர் இருக்குன்னு ஆச்சரியத்தோட சொன்னார். உடனே கிளம்பிட்டேன்…” என்று ஆரம்பித்த விஸ்வம் மற்ற விவரங்களை உண்மையாகவே சொன்னான். அந்தத் தவசி அவன் கம்பளியைப் பிடித்துக் கொண்டதையும், அவன் சக்தியை உருவுவது போல உணர்ந்ததையும் மட்டும் சொல்லாமல் தவிர்த்தவன் கடைசியில் அந்தத் தவசியே சிவன் நெற்றியில் இருந்து அந்தச் சின்னத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு உயிர் விட்டார் என்று முடித்தான்.

நவீன்சந்திர ஷா திகைப்புடன் எல்லாவற்றையும் கேட்டு விட்டுச் சொன்னான். “நூறு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு இல்லுமினாட்டி ஜெர்மனில இருந்து இமயமலைக்குத் தவம் செய்யப் போனதா பலரும் சொல்லி இருக்காங்க. அவர் திரும்பி வராததால் அவர் அங்கேயே சமாதி அடைஞ்சிருக்கலாம்னு பேசிகிட்டாங்க. இப்ப நீ சொல்றதைப் பார்த்தா அவர் அந்த இல்லுமினாட்டியாகத் தான்  இருக்கணும்…..”


விஸ்வத்துக்கு இந்தத் தகவல் கூடுதல் அதிர்ஷ்டத் தகவலாகத் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் வெகுளியாய் சொன்னான். “அந்தச் சிலையில் இருக்கும் வரை இது சிவனின் நெற்றிக் கண் மாதிரி தான் இருந்துச்சு. நீ சொன்னதுக்கப்பறம் தான் இது இல்லுமினாட்டியின் சின்னமும் தானேன்னு புரியுது. இது என் கைல கிடைச்சதுக்கு என்ன அர்த்தம்னு தான் தெரியல.”


நவீன்சந்திர ஷா உடனே பரபரப்புடனும் உற்சாகத்துடனும் சொன்னான். “நீ தான் இல்லுமினாட்டியின் தேர்ந்தெடுக்கவன். அது தான் ஆரம்பத்துலயும் உன் கனவுல தெரிவிச்சிருக்கு. இப்பவும் இந்தச் சின்னம் உன் கனவுல வந்து அந்த இல்லுமினாட்டி தவசி மூலமாவே உன் கைல கிடைச்சிருக்கு…. விஸ்வம் உனக்காகத் தான் இல்லுமினாட்டி காத்திருக்கு”


தான் கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகளை நவீன்சந்திர ஷா வாயாலேயே சொல்ல வைத்த திருப்தியுடன் விஸ்வம் முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டினான். இனி இந்தத் தகவல் எல்லா இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும் போய்ச் சேரும்படி இவன் பார்த்துக் கொள்வான்…..

மறுபடி அந்தச் சின்னம் ஒளிர்ந்து மங்கிய போது நவீன்சந்திர ஷா கண்கள் விரிந்தன. விஸ்வம் தன்னையும் மீறிப் புன்னகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்