தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, September 10, 2010
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்
இராமாயணத்தில் கும்பகர்ணன் நிலை மிக தர்மசங்கடமானது. அவனுடைய பாசத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் எதிரெதிர் அணியில் இருக்கின்றனர். அண்ணன் மீது அவனுக்கிருந்த அன்பை இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். அவன் தம்பி மேல் வைத்திருந்த பாசமும் சற்றும் குறைந்ததல்ல.
ஒரு வீட்டில் கடைக்குட்டி மீது அனைவருக்கும் பாசம் அதிகம் இருப்பது சகஜம். அதுவும் அந்தத் தம்பி மிக நல்லவனாகவும், குணவானாகவும் இருந்தால் அந்தத் தம்பி மீது இருக்கும் பாசம் மேலும் அதிகப்படும். அதனால் தம்பி மீது கும்பகர்ணனுக்கு அளவு கடந்த பாசம் இருந்ததில் வியப்பில்லை. ஆறு மாதம் உறக்கத்திலும் ஆறு மாதம் விழிப்பிலும் இருக்கும் கும்பகர்ணன் உறங்கப் போகும் போது விபீடணன் இலங்கையில் இருந்தான். ஆனால் கும்பகர்ணன் விழிக்கையிலோ விபீடணன் எதிரணிக்குப் போய் விட்டிருந்தான்.
அவன் மறுபடி விபீடணனைச் சந்தித்தது போர்க்களத்தில் தான். அந்த போர்க்களத்தில் அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அண்ணனைப் பார்த்தவுடன் விபீடணன் விரைந்து வருகிறான். அந்தக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.
விபீடணன் எதிரணியிலிருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பகர்ணன் அவன் இராமனை விட்டு இந்த அணிக்குச் சேரவே வருகிறான் என்று தவறாக நினைத்து விடுகிறான். இந்த அணிக்குத் தோல்வி நிச்சயம் என்பதை முன்பே அறிந்தவன் அவன். அதை அவன் இராவணனிடம் சூசகமாகத் தெரிவித்துக் கூட இருந்தான். அதனால், விபீஷணன் இங்கு வந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்ததால், அவன் மனம் வருந்தியது.
தன்னை வந்து வணங்கிய தம்பியிடம் கும்பகர்ணன் சொல்கிறான். “ (நம் குடும்பத்தில்) நீ ஒருவனாவது தப்பிப் பிழைத்தாய் என்று நான் எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தேன். நான் நினைத்தது தவறு என்னும்படி புத்தி கெட்டவர் போல் நீ அங்கிருந்து தனியாகப் பிரிந்து வந்தது ஏன்”. சொல்லும் போது துக்கமிகுதியால் அவன் கண்களில் மழையாக நீர் வடிகிறது.
முந்தி வந்து இறைஞ்சினானை
மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய்
என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித்
தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியே? என்றான்
மழையின் நீர் வழங்கும் கண்ணான்.
விபீடணன் வந்தது வேறு காரணத்திற்காக. தன் அண்ணன் கும்பகர்ணன் மிக நல்லவன் என்பதால் அவனை தன்னைப் போலவே தர்மம் இருக்கும் இடமாகிய இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் மன்றாடுகிறான். கும்பகர்ணன் அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச் சொல்கிறான்.
“நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப்பக்கம் போக மாட்டேன் எனவே என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இராமனிடம் போய் சேர்ந்து கொள்” என்கின்றான்.
நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;
தார்க்கோல மேனி மைந்த! என துயர் தவிர்த்து ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.
மேலும் சொல்கிறான். ”முட்டாள்தனமாக அண்ணன் (இராவணனை இங்கு இறைவன் என்கிறான்) ஒரு தீமையைச் செய்தால், முடிந்தால் அவனை அப்போதே திருத்தப் பார்க்கலாம். அது முடியாமல் போனால் அவனை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. போரில் ஈடுபட்டு அவனுக்கு முன்னால் இறப்பதே அவன் உப்பைத் தின்று வளர்ந்தவனுக்குப் பொருத்தமானது)
கருத்திலா இறைவன் தீமை
கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றே
திருத்தலாம்; தீராது ஆயின்
பொருத்துறு பொருள் உண்டாமோ!
பொருதொழிற்(கு) உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்(கு) உரியது அம்மா
எதிரில் இருந்த இராமனின் சேனையைப் பார்த்தபடி கும்பகர்ணன் மேலும் சொல்கிறான். “அந்தப்பக்கம் கடவுளான வில்லேந்திய இராமன் நிற்கின்றான். அவன் தம்பி இலக்குவன் நிற்கின்றான். மற்றும் பலரும் நிற்கின்றார்கள். எங்களைக் கொல்லப் போகிற விதியும் அவர்கள் பக்கமே நிற்கின்றது. தோல்வியே எங்கள் பக்கம் நிற்கின்றது”
ஏற்றிய வில்லோன், யார்க்கும்
இறையவன், இராமன் நின்றான்;
மாற்றரும் தம்பி நின்றான்;
மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்றது;
தோற்றல் எம்பக்கல் ஐய!
வெவ்வலி தொலைய வந்தாய்
அதைக்கேட்டு மீளாத சோகத்தில் ஆழ்கிறான் விபீடணன். அண்ணன் மேல் உள்ள பாசத்தில் அவன் துக்கப்படுவதைப் பார்த்து கும்பகர்ணன் எல்லா தத்துவங்களையும் அறிந்த விபீடணனைத் தேற்றுகிறான். “நடக்க இருப்பது நடந்தே தீரும். அழியும் காலம் வந்தால் அழிவதும் நிச்சயம். என்ன தான் செய்தாலும் இறப்பது உறுதியே. இதை உன்னை விட அறிந்தவர்கள் யாரிருக்கிறார்கள்? என்னை நினைத்து வருந்தாமல் போ”. கடைசியில் என்றும் உள்ளாய் என்று தம்பியிடம் ‘நாங்கள் இறந்தாலும் நீ இருப்பாய்” என்ற நிம்மதியில் சொல்லும் அழகையும் பாசத்தையும் பாருங்கள்.
ஆகுவது ஆகும் காலத்து
அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று
போற்றினும் போதல் திண்ணம்;
சே(கு) அறத் தெளிந்தோர் நின்னில்
யார் உளர்? வருத்தம் செய்யா(து)
ஏகுதி; எம்மை நோக்கி
இரங்கலை; என்றும் உள்ளாய்!
செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தீர்மானித்த கும்பகர்ணன் அதே போல் விபீடணன் செய்யத் தவறியது தவறு என்பது போல் நினைக்கவில்லை. “தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்கு தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை” என்று தம்பியிடம் சொல்கிறான்.
தலைவன் நீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதே; ஆல்
புலைஉறு மரணம் எய்தல் எனக்கிது புகழதே ஆல்.
இனி என்ன சொன்னாலும் அண்ணன் கும்பகர்ணன் மனம் மாறப் போவதில்லை என்பதை உணர்ந்து களத்தில் விபீடணன் கும்பகர்ணனை வணங்கிப் பிரியும் காட்சி கல்லையும் கரைக்கும். கம்பன் சொல்கிறான். “அண்ணனை வணங்கிய விபீடணன் கண்கள், முகம், மனம், பேசும் சக்தி எல்லாம் வாடி உயிரோடு இருக்கையிலேயே சவம் போல் ஆனான். இனி மேலும் பேசிப் பிணங்கி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்தவனாய் குணங்களால் உயர்ந்தவனான விபீடணன் எழுந்து திரும்பிப் போனான். அப்போது இரு சேனையின் கரங்களும் அந்தக் காட்சியில் மனமுருகி கூப்பின”
வணங்கினான் வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை செய்து இன்னும்
பிணங்கினால் ஆவதில்லை பெயர்வது என்று எழுந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனைக் கடலெல்லாம் கரங்கள் கூப்ப.
தொடர்ந்து நடந்த போரில் வீழ்ந்த போதும் இராமனிடத்தில் தம்பிக்காக வேண்டுவது கல்லையும் கரைக்கும். இராமனிடம் சொல்கிறான். “நீதியால் வந்த பெரும் தர்ம நெறி தவிர என் தம்பி எங்கள் அரக்கர் குலத்திற்கான எந்த சிறு நெறியும் அறியாதவன். அவன் எல்லாம் நீயே என்று உன்னிடம் வந்திருக்கிறான். அவனுக்கு உன்னிடம் நான் அடைக்கலம் வேண்டுகிறேன்”
நீதியால் வந்த(து) ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்(கு) அடைக்கலம் யான் வேண்டினேன்
மேலும் இராமனிடம் மனமுருகக் கும்பகர்ணன் கேட்கிறான். “என் அண்ணன் இராவணன் விபீடணனைத் தம்பி என நினைத்து மன்னிக்க மாட்டான். அந்தப் பெருந்தன்மை அவனுக்கு இல்லை. இவன் அகப்பட்டால் அவன் இவனைக் கண்டிப்பாகக் கொன்று விடுவான். தயவு காட்ட மாட்டான். எனவே உன்னையும், உன் தம்பி இலக்குவனையும், அனுமனையும் என் தம்பி என்றும் பிரியாதவனாய் இருக்கும்படி எனக்கு வரம் கொடு”
தம்பியென நினைந்(து) இரங்கி
தவிரான் அத்தக(வு) இல்லான்;
தம்பி இவன் தனைக் காணின்
கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத் தான் உன்னைத் தான்
அனுமனைத் தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியான் ஆக
அருளுதி! யான் வேண்டினேன்.
யுத்த காண்டத்தில் இக்காட்சிகள் கம்பன் வர்ணனையால் உயிர் வடிவம் பெற்று நம்மைக் கண்கலங்க வைக்கக் கூடியவை. நன்றாக யோசித்துப் பார்த்தால் கும்பகர்ணன் என்ற அந்த மிக உயர்ந்த மனிதன் இரு வேறு அணிகளில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் ஒரு இணையற்ற சகோதரனாய் வாழ்ந்து மடிந்தான் என்பதே கால காலத்திற்கும் அவன் பெருமையை பறைசாற்றும் என்பதில் சந்தேகம் உண்டோ?
- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்
Labels:
இலக்கியம்
Subscribe to:
Post Comments (Atom)
கம்ப ராமாயணத்தை அனுபவித்து எழுதியுள்ளீர்கள். கம்பனை அனுபவித்த பின் இப்போது வரும் கவிதை என்பவைகளைப் படிக்கக் கூட என்னால் முடியவில்லை.
ReplyDeleteWhy Kumpakarnan sleeps 6 months?
ReplyDeleteகும்பகர்ணன் பெருந்தவம் இருந்து பெரியதாக ஒரு வரம் கேட்க முயல, அந்த வரம் வாங்கி விட்டால் அவனை வெல்வது யாருக்கும் அரிது என்பதால் அவன் வரம் கேட்கையில் தேவர்களின் வேண்டுகோளிற்கிணங்க சரஸ்வதி அவன் நாக்கை பிறழ வைக்கிறாள். ஒரு எழுத்துப் பிழையாக நாக்கு உச்சரிக்க கேட்ட வரத்திற்குப் பதிலாக தூக்கம் கேட்பதாக ஆகி விடுகிறது. பிரம்மனும் அப்படியே வரமளிக்கிறான். கும்பகர்ணன் தவறை உணர்ந்து வருந்தி வேண்ட முழுத் தூக்கம் என்பது போய் ஆறு மாத தூக்கம் என்று பிரம்மன் மாற்றித் தந்ததாக கதை சொல்லப்படுகிறது.
ReplyDeleteஅற்புதமாக கும்பகர்ணன் விபீடணன் சம்வாத நிகழ்ச்சியை, காட்சியை வர்ணித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteகும்பகர்ணன் வழி நடப்பது ராஜ த்ர்மம், ஸ்வ தர்மம். ஒரு கோணத்தில் பார்த்தால், விபீடணனின்
நோக்கை விட உயர்ந்தது என நினைக்கத்தோன்றுகிறது.
ஜ்யேஷ்ட ப்ராதாஹ பித்ரு ஸமானஹ. என்கிறது ச்ருதி.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதும் தெரிந்ததே.
அண்ணனும் தந்தையும் அறவழிச்செல்லவில்லையெனின், தம்பிமார்கள் எவ்வழிச்செல்வர் ?
கும்பகர்ணனின் தர்மசங்கடம் நன்றாகவே தெரிகிறது.
சுப்பு ரத்தினம்.
பாராட்டுக்கள்
ReplyDeleteகம்பனின் புலமையை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteலாஸ் ஏஞ்சல்ஸ் ராம்