என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Friday, July 10, 2026

சதுரங்கம் 26

 


விமல் தன் கதை, வசனம் மற்றும் நடிப்புத் திறமையை ராஜா சிங்கிடம் காட்டத் தீர்மானித்து, சொன்னான். “ஜீ. நான் ராஜேஷோட ஃப்ரண்ட்

 

ராஜா சிங் அவனுடைய சிறப்பு வாடிக்கையாளர்களை மிக நன்றாக அறிவான். சட்டத்திற்கு புறம்பாக போலி சிம் வாங்க வருபவர்கள் நேரடியாகஎனக்கு போலி சிம் கார்டுவேண்டும் என்று ஒருபோதும் சொல்லி விடுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்லி விட்டுத் தான் சிம் வாங்குகிறார்கள். ராஜா சிங் தவறாக நினைத்துக் கொண்டு, இல்லை என்று கறாராக மறுத்து விட்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையாக ஒரு கதையை அவனுக்குச் சொல்கிறார்கள். எவன் சொல்வதும் உண்மையல்ல என்பது அவனுக்குத் தெரியும். நாணயஸ்தனுக்கு போலி சிம் தேவையில்லை. அதனால்யார் ராஜேஷ்?” என்ற கேள்வியைக் கேட்டு அவன் விமலை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை. மேலே சொல் என்பது போல் அவன் விமலைப் பார்த்தான்.

 

விமல் சொன்னான். “ஆறு மாசத்துக்கு முன்னாடி என் ஃப்ரண்டு ராஜேஷ்க்கு நீங்க ஒரு புதிய சிம் கொடுத்து  உதவுனீங்க. எனக்கும் இப்போது ஒரு சிம் தேவைப்படுது. கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்ட முடியலை. அதனால நான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன். பழைய போன் நம்பரையே நான் உபயோகப்படுத்திகிட்டு இருந்தால் அவங்க என்னைக் கண்டுபிடிச்சுடுவாங்க. அதான் பிரச்சனை. ராஜேஷ் தான் உங்களை பத்தி என் கிட்ட சொன்னான். எனக்கு சிம் மட்டுமில்லாம புது மொபைலும் வேணும்...”

 

ராஜா சிங்குக்கு அவன் பேசிய ஹிந்தி, தமிழ்நாட்டுக்காரர்கள் பேசும் ஹிந்தி போல் தெரிந்தது. அவன் சொன்னது போல் கடன் வாங்கியவர்களிடமிருந்து அவன் தப்பித்து வருபவனாக இருக்கலாம்.  இல்லா விட்டால் சிட்டுக் கம்பெனி நடத்தி அனைவருக்கும் பட்டை நாமம் சாத்தி விட்டு தப்பி  ஓடி வந்தவனாகவும் இருக்கலாம்.  இல்லா விட்டால்  வேலை செய்யும் இடத்தில் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவானவனாகவும் இருக்கலாம். அவனைப் பார்த்தால், அவன் நடிப்பை மீறி திருட்டுத்தனம் தெரிகிறது. இது போன்ற ஆள்களுக்கு சிம் ஏற்பாடு பண்ணித் தருவதில் அவனுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் ராஜா சிங் பயப்படுவது தீவிரவாதிகளுக்கு சிம் ஏற்பாடு பண்ணித் தருவதைத் தான். இப்போதெல்லாம் போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளுக்கு போலி பெயர் விலாசத்தில் சிம் தருவதை லேசாக விடுவதில்லை. எப்படியானாலும் கண்டுபிடித்து, வந்து விடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பது பெரும்பாடாகி விடுகிறது. அதனால் தீவிரவாதி என்றால் ராஜா சிங் இப்போதெல்லாம் பின்வாங்கி விடுகிறான். ஆனால் ஏதோ ஒரு ராஜேஷின் பெயரைச் சொல்லி கொண்டு வரும் இந்த ஆள் திருடனாக இருக்கலாமே ஒழிய, கண்டிப்பாக தீவிரவாதி இல்லை. தீவிரவாதிகளின் சாமுத்திரிகா லட்சணங்களும், அவர்களுடைய நடிப்புகளும் வேறு வகை. அதனால் வெறும் மோசடிக்காரனான இவனுக்கு விற்பனை செய்வது பிரச்சினையாக மாற வழியில்லை...

 

ராஜா சிங் தாழ்ந்த குரலில் சொன்னான். “இப்போதெல்லாம் போலீஸ் கெடுபிடி அதிகம். அதனால் சரியான ரிக்கார்டுகள் இல்லாமல் சிம் விற்பனை செய்வதில்லை. மன்னியுங்கள்.”

 

விமல் சொன்னான். “நான் உங்களை நம்பித் தான் வந்திருக்கிறேன். அதனால் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்.”

 

ராஜா சிங் யோசிப்பது போல் நடித்தான். விமல் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். முடிவில் ராஜா சிங் சொன்னான். “சிம்முக்கு மட்டும் ஆறாயிரம் ரூபாய் ஆகும்.”

 

விமல் தயங்குவது போல் சிறிது நடித்தான். கோடிக்கணக்கில் வரவு வரவிருக்கையில் ஆயிரங்களில் செலவு செய்வது அவனுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் உடனடியாகச் சம்மதித்தால் அந்த ஆளுக்குச் சந்தேகம் ஏற்படவும் கூடும்... பிறகு தயக்கத்துடன் தலையசைத்தான்.

 

ராஜா சிங் சொன்னான். “மூவாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு இதே நேரம் வந்தால் நான் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.”

 

ரொம்ப நன்றிஎன்று சொன்ன விமல் மூவாயிரம் ரூபாய் தந்து விட்டுக் கிளம்பினான். அவன் கிளம்பிச் சென்றவுடனேயே ராஜா சிங் தன் அலைபேசி எடுத்து ஒருவனுக்கு போன் செய்தான். “இப்போ நம்ம கடையில இருந்து பைஜாமா குர்த்தா போட்டுகிட்டு போறான் பாரு.. அவனைக் கவனி.”

 

வந்தவன் தீவிரவாதி அல்ல என்று உறுதியாக நம்பினாலும், ராஜா சிங் தன் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கைவிடவில்லை. என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் சோதித்துப் பார்ப்பது நல்லதென்று நினைத்தான். சில சமயங்களில் தீவிரவாதிகள் மிகப் பெரிய நடிகர்களாகவும் இருப்பதுண்டு. அல்லது போலீஸ்காரர்களே இப்படி ஆளை அனுப்பி விட்டு அவனுக்கு வலைவிரிப்பதுமுண்டு....

 

அவன் கடைக்கு நாலாவது கடையிலிருந்து வெளிப்பட்ட ஒரு இளைஞன் விமலைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். நர்மதா கொலை செய்யப்பட்ட பின் விமல் தற்காப்பு எச்சரிக்கை காரணமாக யாராவது தன்னைப் பின் தொடர்கிறார்களா என்று கவனி.க்க ஆரம்பித்திருந்தான் என்பதால் உடனடியாக அந்த இளைஞன் பின் தொடர்வதைக் கவனித்தான். ராஜா சிங்கின் கடைக்குச் சென்று சேரும் வரை அவனை யாரும் பின் தொடரவில்லை. அது விமலுக்கு உறுதியாகத் தெரியும். இப்போது தான் அந்த இளைஞன் பின் தொடர ஆரம்பிப்பதால் இது ராஜா சிங்கின் ஆளாகத் தான் இருக்க வேண்டும் என்று அவன் யூகித்தான். பின் தொடர்பவன் போலீஸாகவோ எதிரியின் ஆளாகவோ இருந்தால் தான் பிரச்சினை….

 

விமல் கரோல் பாகிலேயே ஒரு நடுத்தர ஓட்டலில் முன்பே ஆன்லைனில் ஏற்பாடு செய்திருந்தான். அந்த ஓட்டலை அடைந்த அவன் பிறகு வேறெங்கும் செல்லவில்லை. தவறியும் அவனுக்குத் தெரிந்த யார் கண்ணிலாவது அவன் பட்டுவிட்டால் அது பெரிய பிரச்சினையாகி விடும்.

 

விமலைப் பின் தொடர்ந்தவன் ராஜா சிங்கிடம் போய்ச் சொன்னான். “அந்த ஆள் சோனா ஓட்டலில் தங்கியிருக்கிறான். முதலிலேயே ரூம் புக் செய்திருக்கான் போல இருக்கு. இங்கேயிருந்து நேரா ஓட்டலுக்குத் தான் போனான். வேற யாரும் அவனைப் பின் தொடரலை.   அவனும் யாரையும் சந்திக்கலை.”

 

அவன் போகிற வழியில் யார் கிட்டயாவது போன்ல பேசினானா?”

 

இல்லை.”

 

ராஜா சிங் திருப்தியடைந்தான். ஆள் பிரச்சினை இல்லாதவன் தான். அந்த ஆள் அவனுடைய சந்தேகத்தைக் கிளப்பியிருந்தால், நாளை அவன் வரும் போது சிம்முக்குப் பதிலாக அவன் தந்த முன்பணத்தை ராஜா சிங் திருப்பித் தந்திருப்பான். முயற்சி செய்ததாகவும், முடியவில்லை என்றும் சொல்லி இருப்பான்

 

நித்யா அர்ஜுனின் அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்து அவனிடம்சத்தம் போடாதேஎன்று சைகை செய்தாள்.

 

அவன் புன்னகையுடன் மெல்லக் கேட்டான். “என்ன வாலு?”

 

நித்யா ஒரு பழைய எண்பது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்து அவனிடம் நீட்டி, பின் மெல்லிய குரலில் சொன்னாள்.  பரணை சுத்தம் செய்யப் போனப்போ, அம்மாவோட பழைய ட்ரங்குப் பெட்டியைத் திறந்து பாத்தேன். உள்ளே இது கிடைச்சுது…”

 

அர்ஜுன் ஆர்வத்துடன் அந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான். முதல் பக்கத்தில்பானுமதிஎன்று அழகான கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டு இருந்தது. அதற்கடுத்த பக்கத்திலிருந்து அதே கையெழுத்தில் நிறைய திரைப் பாடல்கள் எழுதப்பட்டு இருந்தன.

 

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்…”

 

அடுத்த பக்கத்தில் இன்னொரு பாடல்...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு

 

அடுத்த பக்கத்தில்  -

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா…”

 

அடுத்தடுத்த பக்கங்களிலும் அந்த அழகான குண்டு கையெழுத்தில் திரைப் பாடல்களே இருந்தன. எல்லாமே காதல் பாடல்கள்


(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment