அதன் பின் வாசுதேவனைப் பற்றிச் சொல்ல
பானுமதிக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை.
அர்ஜுனுக்கு அவளிடம் கேட்க வேறு கேள்விகள் மட்டுமே இருந்தன. அதைக் கேட்க
வழியில்லை என்பதால் பேட்டியை முடித்துக் கொண்டான். அவள் ஏதோ
பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துப் போகிறவள் போல் சமையலறைக்கு விரைந்தாள்.
பெருமூச்சு விட்டபடி அர்ஜுனும் எழுந்தான். அலைபேசியைப்
பார்த்த போது கீதா அவனுக்கு ஒரு யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தாள். ஆளும்
கட்சியின் தீவிர ஆதரவு ஊடகத்தின் வீடியோ அது.
ஒரு உளவியல்
நிபுணர் தற்கொலை பற்றி பேசியிருந்த அந்த வீடியோவில் தற்கொலை திடீரென்று ஒருசில நிமிடங்களில்
முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் விடலாம் என்பதை ஆதாரங்களுடன் சொல்லியிருந்தார். அவன் யூகம்
சரி தான். ஆளும் கட்சிப் பிரமுகர் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். கொலை அல்ல
தற்கொலையே என்றாலும், தற்கொலைக்கு நர்மதா தூண்டப்பட்டிருக்க வேண்டும் என்ற அவன்
சந்தேகம் ஊர்ஜிதமாகிறது.
அர்ஜுன் சித்தப்பா வீட்டுக்குக் கிளம்பினான். அது தான்
தாத்தா வாழ்ந்த வீடு. அவன் பிறந்ததும் அந்த வீட்டில் தான்…. இன்று தாத்தாவின்
அறைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். ஏதாவது பழைய நினைவுகள்
வருகின்றனவா என்று பரிசோதிக்க வேண்டும்…
விமலுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக நகர்ந்தது. ஆசிரமத்தில்
அவனுக்கு மது அருந்த வழியில்லை. மது அருந்தாமல் அவன் கடந்த சில வருடங்களாக உறங்குவதில்லை. அதனால்
அவனுக்கு நடுநிசி கழிந்து தான் உறக்கமே வருகிறது. அப்படி
நேரங்கழித்து உறங்குவதால் காலையில் சீக்கிரம் விழித்தெழ முடிவதில்லை. நிலைமை
இப்படி இருக்கையில் காலையில் ஆறு மணிக்குள் எழுந்து விட வேண்டும் என்ற ஆசிரமத்தின்
கண்டிப்பான உத்தரவு அவனுக்கு உபத்திரவமாக இருந்தது. இங்கு பாதுகாப்பாக
இருப்பது சரி தான். ஆனால் சப்பென்ற சைவ உணவு சாப்பிட்டு, தியானம்
என்ற பெயரில் நகராமல் உட்கார்ந்து, பஜனை பாடி, ஆன்மிகம்
பற்றி சொற்பொழிவுகள் கேட்டுக் கொண்டு, மது அருந்த முடியாமல், உறக்கம்
வராமல், அதிகாலை எழும் இந்த தொடர் அவஸ்தைகள் தேவையா, இப்படியும்
உயிர் பிழைக்க வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் நேற்றிரவிலிருந்து அவனுக்குள்ளே எழுந்த
வண்ணம் இருக்கின்றன.
அவன் இப்படி ஒளிந்தும் பதுங்கியும் வாழ்ந்து கொண்டிருக்கையில், நர்மதாவைக் கொலை செய்தவன் அதிகாரமாகவும், அமோகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அரசனைப் போல சில வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருந்த விமலோ இன்று அகதியைப் போல் வாழ வேண்டிய நிர்க்கதியில் இருக்கிறான். நினைக்க நினைக்க விமலுக்கு ரத்தம் கொதித்தது. ஏதாவது செய்ய வேண்டும். கொலைகாரனை அடையாளம் காட்ட முடிந்த வலுவான ஆதாரம் அவனிடம் இருக்கிறது. நர்மதா கேட்ட தொகைக்கு நூறு மடங்கு கேட்டாலும் கொலைகாரன் தன் பதவியையும், அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள, கொடுத்து தானாக வேண்டும்…
தன் சூட்கேஸில் ஒளித்து வைத்திருக்கும் அந்த ‘பென் ட்ரைவ்’வை விமல் எடுத்துப் பார்த்தான். இதன் மதிப்பு இன்று பல
கோடி. எத்தனை கோடிகள் என்று விமல் தான் நிர்ணயிக்க வேண்டும்.
அவன் சொல்வது தான் விலை. அந்தப் பணம் வந்து விட்டால்
மீதியுள்ள வாழ்க்கையை பழையபடி அரசனைப் போல் அல்ல, ஒரு சக்கரவர்த்தி
போலவே அவன் வாழ முடியும். திரைப்படங்களிலும், திரைத் தொடர்களிலும் சில்லறை வேடங்களுக்காக முன்பு போல் அலைய வேண்டியதில்லை.
இப்போது போல அகதி வாழ்க்கையும் வாழ வேண்டியதில்லை.
அதில் ஒரே ஒரு பிரச்சினை. கேட்கும் பணத்தை கொடுக்க வரும் சாக்கில் அவனைக் கண்டுபிடித்து, கொன்று
விடவும் கொலைகாரனால் முடியும். நர்மதாவைக் கொன்றவன் கண்டிப்பாக அவனை உயிரோடு விட்டு வைக்க மாட்டான். விமல் தனி மனிதன்.
கொலைகாரன் தனி மனிதன் அல்ல. அதிகாரத்தில் இருக்கும்
அவனுக்கு ஆயிரம் கைகள்., ஆயிரம் ஆயுதங்கள்…
ஆனாலும் விமல் எதாவது செய்து தானாக வேண்டும். இப்படி ஆசிரமத்தில் அவஸ்தைப்படுவதை
விட, ஏதாவது செய்யும் முயற்சியில் செத்தாலும் அது உயர்வு தான்.
ஆனாலும் செய்வதைப் பொறுமையாகவும், தவறில்லாமலும்
செய்ய வேண்டும். ஏனென்றால் சிறிய தவறு செய்தாலும் அது அவனுக்கு
எமனாக மாறி விடலாம். என்ன செய்வது, எப்படிச்
செய்வது விமல் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான்.
அர்ஜுன் தாத்தாவின் வீட்டின் முன் நின்று சில நிமிடங்கள் பார்த்தான். பெரிய வீடு
அது. பல நிலபுலன்கள் வைத்திருந்த வாசுதேவன் அந்த வீட்டைத் தவிர
மற்ற எல்லாச் சொத்துக்களையும் விற்று விட்டிருந்தார். அவன் பிறந்து
நான்கு வருடங்கள் வளர்ந்த அந்த வீட்டைப் பார்க்கையில் குழந்தைப் பருவ நினைவுகள் எதாவது
வருகின்றனவா என்று ஆழமாக யோசித்தான். அவன் பள்ளி செல்ல
ஆரம்பித்த காலத்திலிருந்து அடிக்கடி அங்கே வந்து போய்க் கொண்டிருந்த நினைவுகள் தான்
ஆரம்ப நினைவுகளாக நினைவுக்கு வந்தன.
வெளி கேட் அருகே துப்பாக்கியுடன் இரண்டு
போலீஸ்காரர்களும், ஒரு காவலாளியும் நின்றிருந்தார்கள். காவலாளி
அர்ஜுனைப் பார்த்தவுடன் பயபக்தியுடன் சல்யூட் அடித்தான். புன்னகையுடன்
அவனை நலம் விசாரித்து விட்டு,
வணக்கம் தெரிவித்த போலீஸ்காரர்களுக்கு, பதில் வணக்கம்
தெரிவித்து விட்டு, அர்ஜுன்
உள்ளே நுழைந்தான்.
ராஜாராம் அர்ஜுன் அந்த வீட்டின் முன் வந்து நின்ற கணத்திலிருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக உடனடியாக வீட்டிற்குள் நுழையும் அவன் இன்று ஏன் வித்தியாசமாக வெளியேயிருந்து வீட்டைப் பார்க்கிறான்? அவர் கருப்பு ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்ப்பதை அவன் பார்க்க வழியில்லை. அவன் அந்தக் கண்ணாடியைப் பார்த்தால் அவனுடைய பிரதிபிம்பம் தான் அவனுக்குத் தெரியும்.
காவலாளியிடம் பேசி விட்டு அவன் உள்ளே நுழைவதைப் பார்த்த பிறகு
அவரும் ஹாலுக்கு வந்தார். சோபாவில் அமர்ந்திருந்த யசோதா லலிதா சஹஸ்ரநாமத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.
மகன் வந்ததைப் பார்த்தவுடன் நிமிர்ந்து பார்த்தாள். ராஜாராம் “அர்ஜுன் வர்றான்” என்றார்.
லலிதா சஹஸ்ரநாமப் புத்தகத்தை யசோதா மடித்து வைத்தாள். உள்ளே வந்த அர்ஜுன் “ஹாய் பாட்டி” என்று முதலில் அவளுடைய கால்களைத் தொட்டு
வணங்கினான். அவன் தலையைத் தொட்டு ஆசிர்வதித்த யசோதா அவனைப் பார்த்துப்
புன்னகைத்தாள்.
“ஹாய் சித்தப்பா” என்று ராஜாராமின் கால்களையும் தொட்டு
அர்ஜுன் வணங்கினான். ஆசிகளை முணுமுணுத்த ராஜாராம் புன்னகையுடன்
அர்ஜுனிடம் சொன்னார். “வாடா. எத்தனை நாளாச்சு.
என் மேல இருக்கற கோபமெல்லாம் தீர்ந்துதாடா?”
கடந்த தேர்தலில் ஞானமூர்த்தியின் மக்கள் நல்வாழ்வுக்
கழகம் கட்சியை ஆதரிக்காமல்
தற்போதைய ஆளும் கட்சியான தமிழர் சமூக வளர்ச்சிக் கழகத்தை அவர் ஆதரித்ததால்
அவன் கோபப்பட்டு இங்கு வருவதில்லை என்பதை அவர் புன்னகையுடன் சுட்டிக்காட்டினார். பொதுவாக
இப்படி நேரடியாகச் சுட்டிக் காட்டும் போது எதிர்தரப்பில் அப்படியெல்லாம் இல்லை என்று
மறுக்கும் பாணியில் தடுமாற்றத்தோடு தான் பதில் வரும். ஆனால் அர்ஜுன்
அதற்கு விதிவிலக்காக இருந்தான்.
“கோபமெல்லாம்
முடியலை சித்தப்பா. எனக்கு இப்ப உங்க பேட்டி வேணும். அதுக்காகத்
தான் வந்தேன்.”
ராஜாராமின் புன்னகை மேலும் விரிந்தது. சாதாரணமானவன்
இல்லை இவன். உண்மையை நேரடியாகச் சொல்வதில் அவனுக்கு எந்தத் தயக்கமும்
இல்லை. அவர் வீட்டுக்கு ஒரு வேலை ஆக வேண்டுமென்று வந்து, அவருக்கு
எதிரான கருத்தை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அவனால் சொல்ல முடிவதற்கு அவர் மனதிற்குள் ’சபாஷ்’ போட்டு
விட்டு தாயைப் பார்த்தார். அவளும் லேசாகப் புன்னகைத்தாள்.
“சித்தி
எங்கே?” என்று அர்ஜுன் கேட்க, உள்ளேயிருந்து
மைதிலி வந்தாள். அவளையும் அவன் காலைத் தொட்டு வணங்க, அவள் மனதார “நல்லா இருடா” என்று வாழ்த்தி
விட்டுச் சொன்னாள். “என்னடா இங்கே வர உனக்கு இப்ப தான் வழி தெரிஞ்சுதா? வர்றப்ப
நித்யாவையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே?”
அவளுடைய முதல் கேள்விக்குப் பதில் சொல்லும்
சிரமத்தை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. “நித்யாக்கு காலேஜ்
இருக்கு சித்தி” என்றான்.
ராஜாராம் கேட்டார். “உள்ளே வர்றதுக்கு
முன்னாடி வெளியே கொஞ்சம் நேரம் நின்னு வீட்டையே பார்த்தாயே என்னடா காரணம்?”
“நான் பிறந்து
வளர்ந்த வீடு இது. குழந்தையாய் இருந்தப்ப நடந்தது எதாவது எனக்கு ஞாபகம் வருதான்னு
யோசிச்சுப் பார்த்தேன் சித்தப்பா” என்று அவன் சொன்னதைக் கேட்டு யசோதா, ராஜாராம்
இருவர் முகங்களும் ஏக காலத்தில் களையிழந்தன.
(தொடரும்)
என்.கணேசன்


Many thanks
ReplyDelete