என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 21, 2026

சதுரங்கம் 19


பானுமதிக்குப் படபடப்பு அதிகமாகியது. ஆனால் இது வரை அவள் தன் எண்ணங்களை மகனிடம் வெளிக்காட்டியதில்லை. அந்த அளவுக்கு அதிக நேரம் அவள் அவனிடம் பேசிக்கொண்டு நின்றதுமில்லை. இப்போது நழுவிச் செல்ல வழியில்லை

 

அர்ஜுனுக்கு அவளுடைய வெறுமைக்கும், அலட்சிய பாவனைக்கும் பின்னால் பதற்றமும் பயமும் இருப்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்தது, அவன் சொன்னான். “அம்மா நீ இப்படி யார் கிட்டயும் பேசாமல், பழகாமல், தனிக்கூட்டுக்குள்ளே இருந்து எனக்கு ஒரு பேட்டி கொடுக்கறதுக்கே பயப்படறது உனக்கே வினோதமா இல்லையா? நீ என்னையும் அப்படியே வளர்த்துட்டேன்னு இந்த வாலு கூடக் கிண்டல் பண்றா. நான் மாற ஆரம்பிச்சுட்டேன். நீயும் மாறணும்.”

 

பானுமதி சொன்னாள். “அப்படியெல்லாம் ஒரேயடியாய் மாறிட முடியாது. இனி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுறேன். இப்ப ஆளை விடு

 

மாற ஆசைப்படறவன் உடனடியா மாறணும். அதுக்கு அப்பவே எதாவது சின்னதாகவாவது செய்யணும். அதை நாளைக்குன்னு ஒதுக்கி வைக்கிறவன் என்னைக்குமே மாறப் போறதில்லை.”

 

ஆஹா தத்துவம் தத்துவம்என்று முணுமுணுத்த நித்யாவை அர்ஜுன் குனிந்து லேசாகக் கொட்டினாலும் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்த நேர்பார்வையை அவன் திருப்பவில்லை.  

 

பானுமதி அவனை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்து அடுப்பைக் கவனித்துக் கொண்டே சொன்னாள். “சரி தாத்தாவைப் பற்றி மட்டும் தான் கேட்கணும். வேறெந்த கேள்வியையும் கேட்கக்கூடாது.”

 

அந்த ஒரு கணத்தில் அர்ஜுனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அவளிடம் வேறு கேள்விகள் யாராவது கேட்டு விடுவார்கள் என்று பயந்து தான் அவள் யாருடனும் பழகுவதில்லையோ? நெருங்கிப் பழகினால் அவளிடம் அவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி யாராவது ஏதாவது கேட்டுவிடக்கூடும் என்று தான் அவள் பயப்படுகிறாளோ? நித்யா ஒரு முறை அப்படிக் கேட்டு அவள் கண்கலங்கி தன் அறைக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டதும் நினைவுக்கு வந்தது. ’அம்மா நீ அப்படி என்ன கனத்தைச் சுமக்கிறாய்?’

 

அர்ஜுன் அமைதியாகச் சொன்னான். “சரி

 

பானுமதி சற்று நிம்மதி அடைந்தது போலிருந்தது.  சரிஎன்று அவளும் சொன்னாள்.

 

எப்போ பேட்டி எடுக்கலாம்? நாளைக்கு காலைல பத்து மணிக்கு?”

 

சரிஎன்றாள் பானுமதி. தலையசைத்து விட்டு அர்ஜுன் நகர்ந்தான்.

 

பானுமதி நிம்மதிப் பெருமூச்சு விட்டதைப் பார்த்த நித்யா சொன்னாள். “எதோ விசாரணை அதிகாரி வந்துட்டு போன மாதிரி பெருமூச்சு விடறே நீ.”

 

பானுமதி மகளிடம் எரிந்து விழுந்தாள். “பேச்சுல இருக்கற வேகம் வேலைல இல்லை. தேங்காய் துருவக் கொடுத்து எத்தனை நேரம் ஆச்சு. இன்னும் ஒரு மூடி கூட துருவி முடியலை

 

காலையில் ஞானமூர்த்தி கட்சி வேலையாக வெளியூருக்குச் சீக்கிரமே சென்று விட்டார். நித்யாவும் கல்லூரிக்குப் போய் விட்டாள். பொதுவாக இப்படி அர்ஜுனும், பானுமதியும் தனியாக இருக்கிற சமயங்களில் எல்லாம் அதிக பட்சமாய் ஓரிரண்டு வாக்கியங்களுக்கு மேல் இருவரும் இது வரையில் பேசிக் கொண்டதில்லை. முதல் முறையாக இன்று பேட்டி எடுப்பதற்காக அவன் அவளுடன் கூடுதலாகப் பேசப் போகிறான்.

 

ஞானமூர்த்தியும் நித்யாவும் போனதிலிருந்தே பானுமதி வெளித்தோற்றத்தில் அமைதியாகத் தெரிந்தாலும் அவள் உள்ளூர ஒருவித பதற்றத்தில் இருப்பதை அர்ஜுன் கவனித்தான். பத்து மணிக்கு ஹாலுக்கு அவன் வந்த போது, கஷ்டமான பரிட்சை ஒன்றின் கேள்வித்தாளுக்காகப் பயத்துடன் காத்துக் கொண்டிருக்கும் மாணவனைப் போல் அவள் காணப்பட்டாள். எத்தனை முறை அவள் அவனை வெறுப்பதாக நினைத்திருக்கிறான், எத்தனை முறை அவள் அவனை லட்சியம் செய்வதில்லை என்று ஆத்திரம் அடைந்திருக்கிறான். அவளுக்கு அவன் மீது அக்கறை இல்லை என்று நினைத்திருக்கிறான்…. அப்படி அவன் நினைப்பதற்கு முகாந்திரமும் இருந்திருக்கிறது. நித்யாவையும், ஞானமூர்த்தியையும் அவள் பார்த்த அன்பான பார்வை அவன் மீது அதே வகையில் விழுந்ததாய் அவனுக்கு நினைவில்லை. ஆனால் அவள் ஏதோ ஒரு வகையில் ஆழ்மனதில் காயப்பட்டவள் என்ற வகையில் அவளைப் புரிந்து கொண்ட பின், இப்போது அவளை அந்த நிலைமையில் பார்க்கும் போது அவன் மனம் உருகுகிறது.

 

அவன் முதல் கேள்வியைக் கேட்டான். “தாத்தா மாமனாராய் உன் கிட்ட எப்படி நடந்துப்பார்ம்மா?”

 

பானுமதி சிறிது யோசித்தாள். பின் கண்கள் ஈரமாக, சொன்னாள். “ஒரு அப்பா மகள் கிட்ட எப்படி நடந்துப்பாரோ அப்படித் தான் என் கிட்ட நடந்துகிட்டார். ஒரு நாள் கூட அவர் என் கிட்ட கோபப்பட்டதில்லை. என்னைத் திட்டியதில்லை.”

 

ஞானமூர்த்தி அவளைத் திருமணம் செய்து கொள்வதில் வாசுதேவன் ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டியிருந்த போதும், திருமணத்திற்குப் பிறகு அவளை மனதார மருமகளாக ஏற்றுக் கொண்டார் என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது.

 

அவன் கேட்டான். “அவர் உங்களுக்கு ஏற்கெனவே உறவா?”

 

இல்லைஎன்று உடனடியாகச் சொன்ன பானுமதியின் பார்வை தாழ்ந்தது. தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் முகத்தில் வாட்டம் தெரிந்தது. என்ன நினைக்கிறாள் என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை.

 

அதிகமாய் எதைப் பற்றி அவர் உங்க கிட்ட பேசுவார்?”

 

பானுமதி முகத்தில் இருந்த வாட்டம் கூடியது போல் இருந்தது. அவள் குரல் கரகரத்தது. “அவர் அதிகமாய் என் கிட்ட பேசினது உன்னைப் பற்றி தான். வேறென்ன என் கிட்ட அவர் பேச முடியும்? பேசினாலும் எனக்கு என்ன புரியும்?”      

 

சிறந்த தமிழறிஞரான வாசுதேவன் கம்ப இராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று பலரும் பிரமிப்போடு சொல்வதை அர்ஜுன் கேட்டிருக்கிறான். அரசியல் தலைவரான அவர் அவளிடம் அரசியலோ, இலக்கியமோ பேசினால் அவளுக்குப் புரியாது என்கிறாளா, இல்லை அவள் சொன்னதற்கு வேறு எதாவது உள்ளர்த்தம் உள்ளதா என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

என்னைப் பற்றி என்ன பேசுவார்?”

 

பானுமதி முகத்தில் திடீரென்று வெறுமை பரவியது. அவன் மட்டுமே இருக்கையில் அவள் காட்டும் அதே வெறுமை பாவனை… ”நீ செஞ்ச குறும்பு, நீ பேசின பேச்சு, நீ என்ன சாப்பிட்டாய்ங்கற கேள்வி இப்படி தான்….”

 

ஏன் அவன் சம்பந்தப்படுவதில் மட்டும் அவளை வெறுமை தொற்றிக் கொள்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.  ஆரம்பத்திலிருந்தே இப்படியே தான் நடக்கிறது. அவன் பிறந்த காலத்தைப் பற்றிப் பேசும் போதே அவளிடம் தோன்ற ஆரம்பித்து விட்ட எதிர்வினை இது என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் தான் அந்தக் காலத்தைப் பற்றி அவள் நினைவுபடுத்திக் கொள்ளும் போதும் அதே உணர்வு அவளிடம் வெளிப்படுகிறது.

 

திடீரென்று அவளிடம் அதற்கெல்லாம் காரணம் கேட்க வேண்டும், கேட்டு எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அந்தக் கேள்விகள் அவளைக் காயப்படுத்தும் என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது. அதை அவன் விரும்பவில்லை. மேலும், அவன் தாத்தாவைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்பேன் என்று வாக்களித்திருக்கிறான்

 

என்னை தாத்தா ரொம்ப நேசிச்சாராம்மா?”

 

ஆமா. அவர் இறந்த வருஷத்துல அதிகமா அவர் உன்னை மடிலயே வெச்சிருப்பாரு. நீயும் அவர் கூடவே தான் இருப்பாய். தூங்கறப்ப மட்டும் தான் நீ எங்க கிட்ட வருவாய்.”

 

அப்படி அவனோடு நெருக்கமாக இருந்த தாத்தாவின் நினைவு ஏன் சிறிதும் இப்போது இல்லை என்று அர்ஜுன் யோசித்தான். பதில் தெரியவில்லை.

 

பானுமதி தொடர்ந்து சொன்னாள். “… கடைசியா ஆஸ்பத்திரிக்குப் போறப்ப கூட உன்னை விட்டுட்டு போக அவருக்கு மனசிருக்கலை. உடம்புக்கு ரொம்ப முடியாத நிலைமைல கூட அஞ்சு நிமிஷம் உன்னை மடில வெச்சிகிட்டு இருந்துட்டு தான் அவர் கிளம்பினார்….”

 

அப்புறம்?”

 

அப்புறமா அவர் உயிரோட திரும்பி வரவேயில்லை…” சொல்லச் சொல்ல பானுமதியின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

 

அர்ஜுன் கேட்டான். “நான் அவரைச் சீக்கிரமா மறந்துட்டேனாம்மா?”

 

இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மாசம்தாத்தா எங்கே, தாத்தா வேணும்னு நீ தினமும் கேட்டுகிட்டு தான் இருந்தாய். தினமும் தாத்தா அறைக்குப் போய் அவரை நீ தேடுவாய். நாங்களும் என்னென்னவோ சொல்லி உன்னைச் சமாதானப்படுத்த கஷ்டப்பட்டோம் அப்புறமா தான் நீ அவரை மறக்க ஆரம்பிச்சே.”


(தொடரும்)

என்.கணேசன்

 


1 comment: