யோகாலயத்தின் வெளி கேட் காவலாளி வரிசையாக வந்த இரண்டு போலீஸ்
ஜீப்களைப் பார்த்ததும் எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளே அனுப்பி விட்டான். ஆனால் இரண்டாவது
கேட் காவலாளி இரண்டு ஜீப்களில் வந்த போலீஸ்காரர்களைப் பார்த்து அசரவில்லை. அவன் கண்ணனுக்குப்
போன் செய்து இரண்டு போலீஸ் ஜீப்கள் வந்திருக்கின்றன என்று தெரிவித்தான். பாண்டியன்
மதிய உணவை முடித்து விட்டு அப்போது தான் களைப்பாற உறங்கியிருந்தார் என்பதால் கண்ணன் அவரை
எழுப்பவில்லை. தானே இரண்டாவது கேட் அருகே போனார்.
அவர் பார்வை முதலில் போலீஸ் ஜீப்களின் எண்களைப் பார்த்தது. முன்னால் இருந்த
ஜீப் தமிழ்நாடு ரெஜிஸ்டிரேஷன் எண். பின்னால் இருந்தது
தெலுங்கானா ரெஜிஸ்டிரேஷன் எண். முன்னால் இருந்த ஜீப்பில் அசிஸ்டெண்ட் கமிஷனர்
இருந்தார். அவரை
கண்ணன் நன்றாக அறிவார். ஆனால் யோகாலயத்துக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர்
பெரிய ஆள் அல்ல. அவருடன் வேறிரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருந்தார்கள்.
அவர்கள் தெரிந்தவர்கள் அல்ல.
கண்ணன் அமைதியாக அசிஸ்டெண்ட் கமிஷனரிடம் கேட்டார். “என்ன விஷயம் சார்?”
அசிஸ்டெண்ட் கமிஷனர் பின்னால் இருக்கும் ஜீப்பைக் கைகாட்டி சொன்னார். “அவர்கள் ஹைத்ராபாதிலிருந்து
வந்திருக்கிறார்கள். அங்கே நடந்த ஒரு கொலையைச் செய்த குற்றவாளி
இங்கே துறவியாக ஒளிந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் அவர்களுக்கு வந்திருக்கிறது.
அதனால் அவனைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போக அவர்கள் வந்திருக்கிறார்கள்.”
“குற்றவாளியின் பெயர் என்ன சார்?”
“அவனுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஷ்ரவன்,
சரவணன், BM”
“BM ஆ?” கண்ணன்
குரலில் ஆச்சரியம் காட்டினார்.
“Black
Magician என்பதற்கு சுருக்கமாம்”
கண்ணன் யோசித்தார். இது அவராக
முடிவெடுக்கும் விஷயமல்ல.இனி பாண்டியனை எழுப்பித் தானாக வேண்டும். “தயவு செய்து
கொஞ்சம் பொறுங்கள் சார்” என்று சொல்லி விட்டு பாண்டியனை எழுப்ப விரைந்தார்.
பாண்டியன் கண்ணன் எழுப்பிச் சொன்னதைக்
கேட்டு திகைத்தார். நேற்று தான் ஷ்ரவன் ‘ஹைத்ராபாத்
கேஸ்’ பற்றிச் சொன்னான். இன்று அவனைக்
கைது செய்ய போலீஸ் வந்து நிற்கிறது. அவருடைய கைதியை
போலீஸ் கைது செய்து கொண்டு போவதில் அவருக்குச் சம்மதமில்லை. அவனைப்
பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவருடைய
எதிரியாக அவன் இருக்கலாம் என்ற சந்தேகம் கூட இருக்கிறது. அப்படி
அவன் அவர்களுடைய எதிரி என்பது உண்மையானால் அவனைச் சித்திரவதை செய்யவும், கொல்லவும்
அவருக்குத் தான் முதல் உரிமை உண்டு. அவருக்குத் தொந்தரவு
கொடுத்து விட்டு ஒருவன் அவரிடமிருந்து அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்ளாமல் போவதில்
அவருக்குச் சம்மதமில்லை. ஆனால் போலீஸ்காரர்கள் வருவது முன்கூட்டியே
தெரிந்திருந்தால் ரிக்கார்டுகளை அதற்குத் தகுந்த மாதிரி மாற்றியிருக்கலாம்.
இப்போது எதற்கும் நேரமில்லை. வேண்டுமானால்
சிறிது நேரம் கேட்டுப் பார்க்கலாம். நாளை வரச் சொல்லலாம்.
அதற்குள் அவர்களுடைய முறைப்படி அவனை விசாரித்து உண்மை என்ன என்று தெரிந்து
கொள்ளலாம்.
பாண்டியன் போலீஸாரை உள்ளே அனுப்பச் சொன்னார். அசிஸ்டெண்ட் கமிஷனரும்,
ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரிகள் இருவரும் மட்டும் உள்ளே வந்தார்கள்.
பாண்டியன் மிகுந்த மரியாதையுடன் அவர்களை வரவேற்றார். பிரம்மானந்தா தற்போது அங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று
தோன்றியது. அவருடைய பேச்சுக்கு பிரத்தியேக மரியாதை இருந்திருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது
வெளியே போயிருக்கிறார்…
அசிஸ்டெண்ட் கமிஷனர் பாண்டியனிடம் ’ஹைத்ராபாத் கேஸ்’
பற்றிச் சொன்னார்.
ஷ்ரவனும், அவனுடைய நண்பன் ஒருவனும்
சேர்ந்து அமெரிக்க இளைஞன் ஒருவனுக்கு பில்லி சூனியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவனோடு
பழகி கடைசியில் அவனைக் கொன்று விட்டார்கள் என்றார். இதுவரை காணாமல்
போனதாக நினைத்து வந்த அந்த அமெரிக்க இளைஞனின் பிணம் நேற்று இரவு தான் போலீஸுக்குக்
கிடைத்தது என்றும், ஷ்ரவனின் நண்பன் தந்த வாக்குமூலத்தின் படி
ஹைத்ராபாத் போலீஸார் ஷ்ரவனைக் கைது செய்ய இங்கே வந்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
“நாளை வர முடியுமா சார். யோகிஜி இங்கே இல்லை. அவர் அனுமதி இல்லாமல்…”
அசிஸ்டெண்ட் கமிஷனர் பொறுமையிழந்து சொன்னார். “கொலைகாரன் என்று தெரிந்த
பின் யோகிஜி அந்தக் கொலைகாரனை கண்டிப்பாக இங்கே துறவியாக வைத்துக் கொள்ள மாட்டார்.
இது நம் மாநில வழக்காக இருந்தால் நாங்கள் எதாவது சலுகை காட்டலாம்.
ஆனால் தெலுங்கானா போலீஸை அப்படியெல்லாம்
நாம் காக்க வைக்க முடியாது.”
பாண்டியன் யோசனையுடன் கண்ணனைக் கேட்டார். “ஷ்ரவனானந்தா என்ற பெயரில்
இங்கிருந்த துறவி இங்கேயே இருக்கிறாரா, இல்லை இவர்கள் வரலாம்
என்று தெரிந்து தப்பித்து விட்டாரா?”
ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரி உடனே சொன்னார். “அவன் தப்பித்துப் போகவில்லை.
ஏனென்றால் எங்கள் ஆட்கள் சில நாட்களாகவே அவனுக்காக உங்கள் யோகாலயாவைக்
கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் அவனை அழைக்கிறீர்களா
இல்லை நாங்களே உள்ளே போய் தேடட்டுமா?”
’அப்படியானால் இதுவரை அவர்களை வேவு பார்த்துக் கொண்டு இருந்தது தெலுங்கானா போலீஸாரா?
அந்த பைத்தியக்கார ஷ்ரவனுக்காகத் தான் அவர்கள் வேவு பார்த்தார்களா?
சை…. இது தெரியாமல் எத்தனை அமைதியிழந்தோம்.’
ஷ்ரவனை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அவர்களைத் தேட
அனுமதிப்பது ஆபத்தானது என்பது பாண்டியனுக்குப் புரிந்தது. ஷ்ரவனைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக அவர்கள் பிரச்சினைக்குரிய வேறு விஷயங்களை இங்கே
கண்டுபிடிக்கலாம். அது தேவையில்லாத பெரிய சிக்கலை உருவாக்கி விடும்.
இன்னொரு ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரி
சொன்னார். ”கொல்லப்பட்டது அமெரிக்கர் என்பதால் அமெரிக்க தூதரகம் எங்களை
மணிக்கொரு முறை விசாரித்துக் கொண்டு
இருக்கிறது. எந்த நேரத்திலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரலாம்…”
அதற்கு மேல் பாண்டியன் யோசிக்கவில்லை. கண்ணனிடம் சொன்னார். “அழைத்து வாருங்கள்.”
பாதாள அறையின் மேல் கதவு திறக்கப்படும்
சத்தம் ஷ்ரவனுக்குக் கேட்டது.
கண்ணனும் அவரைத் தொடர்ந்து இரண்டு குண்டர்களும் வந்தார்கள்.
ஷ்ரவன் மலர்ந்த முகத்துடன் கண்ணனைக் கைகூப்பி வணங்கினான். ”வணக்கம் சுவாமிஜி”
கண்ணன் சொன்னார்.
“உன்னைத் தேடி ஹைத்ராபாத் போலீஸ் வந்திருக்கிறது.”
ஷ்ரவன் முகத்தில் பீதியைக் காட்டினான். “சுவாமிஜி நான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னபடி
அதில் நான் நிரபராதி. வேண்டுமென்றே என்னை அதில் சிக்க வைத்திருக்கிறார்கள்…”
கண்ணன் சலிப்புடன் சொன்னார். “அதை அங்கே
சொல்லிக்கோ. இப்ப இங்கே இருந்து கிளம்பு...”
ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக்
கொண்டான். அவன் கண்களை கருப்புத் துணியால் இறுக்கிக் கட்டிக்கொண்டு
மேலே அழைத்து வந்தார்கள். பாண்டியனின் மாடியிலிருந்து இறங்கும் போது அந்தக் கருப்புத்
துணியைக் கழற்றி விட்டார்கள்.
கண்ணன் அவனுடைய காதுகளில் சொன்னார். “இங்கே நடந்த, நடக்கிற
எதைப் பத்தியாவது நீ வெளியே பேசிகிட்டுத் திரிஞ்சால் கொன்னுடுவோம். ஜாக்கிரதை”
ஷ்ரவன் அவரைத் திகிலுடன் பார்த்து விட்டுச்
சொன்னான். “என் சொந்தக் கதையே சோகக் கதையாய் இருக்கிறது சுவாமிஜி. நான் அடுத்தவர்கள்
கதையை ஏன் பேசப் போகிறேன்.”
’இவன் பேசினாலும்
யார் நம்பப்போகிறார்கள்?’ என்று ஏளனமாக கண்ணன் நினைத்துக் கொண்டார். இரண்டு
தடியர்களும் மாடிப்படியோடு நின்று விட கண்ணன் மட்டும் ஷ்ரவனை அழைத்துக் கொண்டு போய்
விட்டார்.
ஷ்ரவனைப் பார்த்ததும் ஹைத்ராபாத் போலீஸார்
எழுந்தார்கள். ஷ்ரவனின் கைகளில் விலங்கை மாட்டினார்கள். பின் பாண்டியனிடம்
நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். ஷ்ரவனை பாண்டியன்
பார்த்தார். நேற்று அவர் அவனை சிறைப்பிடித்த போது அவன் காட்டிய அமைதி
அவனிடம் இப்போது காணாமல் போயிருந்தது. அவனுடைய முகமே களையிழந்து விட்டிருந்தது.
பாண்டியனின் இருப்பிடத்தை விட்டு வெளியே போகும் போது, ஷ்ரவன் அவன் முகத்தை யாரும்
பார்த்து விடக்கூடாது என்று தலையை நன்றாகக் கவிழ்த்துக் கொண்டே வெளியேறினான்.
ஜீப்பில் அமர்ந்த பின்னும் அவன் தலையை நிமிர்த்தவில்லை. அவனது இருபக்கமும் அமர்ந்து கொண்ட ஹைத்ராபாத் போலீஸ்காரர்கள் அவனை இறுக்கமாகப்
பிடித்துக் கொள்ள, இரண்டு ஜீப்களும் கிளம்பின.
அந்த இரண்டு ஜீப்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறிய அதே நேரத்தில்
பிரம்மானந்தாவின் கார் உள்ளே நுழைந்தது. போலீஸ் ஜீப்கள் யோகாலயத்திற்கு வந்து போவதைப் பார்த்து துணுக்குற்ற அவர் உள்ளே
காரிலிருந்து இறங்கியவுடன், அங்கே நின்றிருந்த பாண்டியனைக் கேட்டார்.
”என்ன ஆச்சு?”
“அந்த ஷ்ரவனைப் பிடிச்சுட்டு போறாங்க. அவன் நம்மளை விடப்
பெரிய பிரச்சனைக்காரனா இருந்திருக்கான், யோகிஜி”
(தொடரும்)
என்.கணேசன்


This episode shows that shravan had already a prepared plan as to what is to be done in case he's caught. Wonderdul preparation and now we've to see what he does with the info he collected.Thanks
ReplyDeleteSuperb Shravan. Eagerly waiting for his next move
ReplyDeleteNext week climax.... Last episode...
ReplyDeleteIm eagerly waiting...
Yogi has 164 episodes
ReplyDeleteஷர்வன் யோகாலயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டான்... ஆனால்,அங்கு இருந்த தீயவர்களை தண்டிப்பது எப்படி??
ReplyDelete