என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, September 18, 2025

சாணக்கியன் 179

 

ர்வதராஜன் சந்திரகுப்தனைக் கொல்லச் சொன்னதற்கு ராக்ஷசர் உடனடியாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. பர்வதராஜன் தன் இலாபத்திற்காகத் தான்  இதைச் சொல்கிறான் என்று தெரிந்திருந்த ராக்ஷசர் தன் திட்டமும் அதுவாகத் தானிருந்தது என்பதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவன் சொல்லித் தான் அவர் யோசிப்பதாகக் காட்டிக் கொண்டு சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “ஹிமவாதகூட அரசரே. சந்திரகுப்தன் இறந்தால் அதிக இலாபமடையப் போவது நீங்கள் தான். வென்றதைப் பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும். எங்களுக்கு என்ன இலாபம்

 

பர்வதராஜன் சொன்னான். “முதல் இலாபம் எதிரியைத் தண்டித்த மனநிறைவு ராக்ஷசரே. நீங்கள் இளவரசி துர்தராவை என் மகன் மலைகேதுவுக்குத் திருமணம் செய்து தரச் சம்மதித்தால் நான் வென்றதில் பாதியைத் திருப்பித் தரத் தயாராக இருக்கிறேன். அது உங்களுக்கு அடுத்த பெரிய இலாபமாக இருக்கும். நான் என்றுமே பேராசைக்காரனல்ல ராக்ஷசரே. சாணக்கியர் முழுவதுமாக அனைத்தையும் தானே அடைய ஆசைப்படுவது போல நான் ஆசைப்படவில்லை. அவருக்கு நான் தர ஒப்புக்கொண்டிருக்கும் பாதியை உங்களுக்குத் திருப்பித் தருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.”

 

பர்வதராஜனின் சாமர்த்தியத்தை ராக்ஷசர் உள்ளூர ரசித்தார். தனநந்தரின் மருமகனாக மலைகேது ஆனால், அடுத்த பட்டத்து வாரிசாகவும் ஆகி விடுவான். இப்போது பாதியும், தனநந்தனுக்குப் பின் பாதியும் கிடைத்தால் முழுவதுமே அவனுடையதாகி விடும். இப்போது சந்திரகுப்தனுடன் பிரித்துக் கொண்டால் பாதி மட்டுமே கிடைக்கும். அதுவும் சாணக்கியர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.  

 

ராக்ஷசர் தன் மனக்கணக்கை உரக்கச் சொல்லவில்லை. பர்வதராஜனுக்கு உடனடியாக நம்பிக்கையூட்ட விரும்பாதவராகச் சொன்னார். “சாணக்கியரின் நேரடி மேற்பார்வையில் இருக்கும்  சந்திரகுப்தனைக் கொல்வது யாருக்கும் சுலபமல்ல ஹிமவாதகூட அரசரே

 

பர்வதராஜன் சொன்னான். “மொத்தமாக இழந்ததில் பாதியைத் திரும்பப் பெறுவதும் எளிதாக நடக்க முடிந்த காரியமல்லை ராக்ஷசரே. ஆனால் தங்களைப் போன்ற கூர்மதி படைத்த மனிதருக்கு எதுவும் முடியாத காரியமல்ல என்பதையும் நான் அறிவேன். இந்த விஷயத்தில் மறைமுகமாக உங்களுக்கு எந்த உதவி செய்ய முடிந்தாலும் அதைச் செய்ய நான் தயார். என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் சொன்னால் போதும்...”

 

ராக்ஷசர் சொன்னார். “தேவைப்பட்டால் சொல்லியனுப்புகிறேன் அரசே.”  

 

பர்வதராஜன் ஏமாற்றமடைந்தான். உதவி என்ன என்று சொன்னால் அவர் திட்டம் என்ன என்று தெரிந்து விடும் என அவன் எதிர்பார்த்தான். ராக்ஷசரும் சாணக்கியரைப் போலத் தன் திட்டத்தை வெளிப்படையாகச் சொல்லும் பழக்கம் இல்லாதவர் போலிருக்கிறது... பர்வதராஜன் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. “தங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடிக்கிறீர்களோ அந்த அளவு நல்லது என்று நான் நினைக்கிறேன்.” என்று சொன்னான்.

 

காரியம் கச்சிதமாக முடிய வேண்டும் என்று விரும்புபவர்கள் அவசரப்படக்கூடாது. அவசரப்படும் போது தவறுகளுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது” 

 

உண்மை. ஆனால் காலம் தாழ்ந்து செய்து முடிக்கப்படும் செயல்களால் நம் நோக்கம் நிறைவேறுவதில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது.”

 

ராக்ஷசர் தலையசைத்தார். “அதிக பட்சம் ஒரு வாரம் தான். அதற்குள் முடிக்கப் பார்க்கிறேன்

 

நல்லது. காரியம் முடிந்த பின் சந்திப்போம்.” என்று சொல்லி பர்வதராஜன் கைகூப்பினான்.

 

ராக்ஷசரும் கைகூப்பி விட்டு எழுந்தார். அங்கிருந்து நகர்ந்தவர் அடுத்த கணம் இருளில் மறைந்தார். பர்வதராஜனும் எழுந்து வெளியே வந்தான். சுசித்தார்த்தக் அவரைப் பார்த்தவுடன் பரபரப்புடன் கேட்டான். “சொன்னபடி பிரதம அமைச்சர் வந்தாரா அரசே?”

 

வந்தார். பேசினோம். ஒன்று சேர்ந்திருக்கிறோம். என்ன ஆகிறதென்று பார்ப்போம்என்று சொல்லி பர்வதராஜன் கூடுதல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

 

ராக்ஷசர் கும்மிருட்டில் சுவரோரமாக நின்றபடி கேட்டார்.  “பர்வதராஜன் சென்று விட்டாரா?”

 

சென்று விட்டார் பிரபு.” என்று இருட்டிலிருந்தே ஜீவசித்தியின் குரல் கேட்டது.

 

நல்லது. இனி விளக்கேற்றி விடலாம்என்றார் ராக்ஷசர்.

 

சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஜீவசித்தியிடம் ராக்ஷசர் சொன்னார். “எங்களுக்குத் தனிமை தேவை ஜீவசித்தி. சிறிது நேரம் கழித்து விட்டு வா

 

ஜீவசித்திஉத்தரவு பிரபுஎன்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்ற பிறகு ராக்ஷசர் சொன்னார். “இனி நீ வரலாம் விஷாகா

 

பக்கத்து அறையிலிருந்து தேவகன்னிகை போல் பேரழகாக இருந்த இரு இளம்பெண் வந்தாள். ”எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகு இவளுடையதுஎன்று தனநந்தன் முன்பொரு முறை அவரிடம் சிலாகித்துச் சொல்லி இருந்தான். அது நூறு சதவீத உண்மை என்று ராக்ஷசர் நினைத்தார். அவளிடம் இருக்கும் ஆபத்தை மிகச் சிலரே அறிவார்கள். அவளை அறிந்தவர்கள் அவளை நெருங்க ஆசைப்பட்டதில்லை. காரணம் அவள் ஒரு விஷ கன்னிகை. பூப்படைவதற்கு சற்று முந்தைய காலத்திலிருந்தே சிறிது சிறிதாய் விஷம் உட்கொண்டு தற்போது உடலெல்லாம் விஷமாக இருக்கும் அபூர்வ அழகி அவள். அவளுடைய ஒரு முத்தம் போதும் ஒருவனைப் பரலோகம் அனுப்புவதற்கு. நடனத்திலும் வீணை வாசிப்பிலும் ஈடிணையில்லாத விஷாகா தனநந்தனின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமானவள். தனநந்தன் மனமுவந்து மிகத் தாராளமாக பரிசுகள் வழங்கும் மிகச்சிலரில் அவளும் ஒருத்தி.  அதனாலேயே அவள் அவனிடம் இப்போதும் விசுவாசமாக இருக்கிறாள்.

 

ராக்ஷசர் அவளிடம் கேட்டார். “ஹிமவாதகூட அரசன் சொன்னதைக் கேட்டாய் அல்லவா?”

 

விஷாகா சொன்னாள். “கேட்டேன் பிரபு. இளவரசி கட்டாயத் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.” அவள் குரலில் கோபம் தொனித்தது.  

 

நீ மனம் வைத்தால் இளவரசியைக் காப்பாற்றி விடலாம் விஷாகாஎன்று ராக்ஷசர் மெல்லச் சொன்னார்.

 

விஷாகா சொன்னாள். “சாணக்கியருக்கு என்னைப் பற்றித் தெரியாத வரை நான் முயற்சி செய்ய முடியும். ஆனால் இப்போது நான் எதிரிகளை நெருங்கவும் முடியாத நிலைமை இருக்கிறதே பிரபு. என்ன செய்வது? ஆடல் பாடல்கள் அரண்மனையில் தற்போது நடைபெறுவதே இல்லை. சாணக்கியர், சந்திரகுப்தன் இருவருக்கும் அவற்றில் ஆர்வமில்லை போல் தெரிகிறது.”

 

அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் பர்வதராஜனின் உதவியை நாடலாம்.”

 

விஷாகா தலையசைத்தாள். “அப்படியானால் நான் முயற்சி செய்கிறேன். ஆனால் சந்திரகுப்தனின் மரணத்திற்குப் பிறகு நான் ஒரு கணமும் இங்கிருக்க முடியாது. என் வேலை முடிந்தபின் உடனடியாக நான் தப்பித்துச் செல்வதற்கு ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடியுமா?”

 

அதை நான் கண்டிப்பாகச் செய்கிறேன் விஷாகா. நீ இதில் வெற்றி பெற்றால் ஒருநாள் அரசர் தனநந்தர் இங்கே திரும்பவும் வரலாம். இளவரசி விருப்பமில்லாத இந்தத் திருமணத்திலிருந்து தப்பிக்கலாம். பழைய பொற்காலத்தைச் சிறிதாவது மீட்கலாம். நீ எடுக்கும் இந்த முயற்சி ஆபத்தானது என்பதை நான் மறுக்க மாட்டேன் விஷாகா. ஆனால் மகத வரலாற்றில் உன் சேவை பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்...”

 

விஷாகா சொன்னாள். “இறப்பிற்குப் பின் கிடைக்கும் புகழில் எனக்கு ஆர்வம் இல்லை பிரபு. நான் இந்த ஆபத்தான வேலையில் ஈடுபட சம்மதித்தது எதிர்கால இலாபத்திற்காகவும் அல்ல. நானும் ஒரு பெண். நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும் பாக்கியத்தை என்றோ இழந்து விட்ட ஒரு விஷகன்னிகை.  ஆனால் நான் இன்னொரு பெண்ணின் திருமண வாழ்க்கை பாழாவதையாவது தடுக்க விரும்புகிறேன். அதைச் சாதித்துக் கிடைக்கும் ஆத்ம திருப்தி எனக்குப் போதும். மீதியுள்ள காலத்தில் என் வாழ்க்கை குறித்த விரக்தி என்னை ஆட்கொள்ளும் போது, நான் என் வாழ்வில் அர்த்தமில்லை என்று உணரும் தருணங்களில், இளவரசி துர்தராவின் வாழ்க்கை பாழாவதைத் தடுத்திருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தியுடன் என் வாழ்க்கையின் கசப்பைக் குறைத்துக் கொள்வேன். அது போதும் எனக்கு

 

ராக்ஷசர் அவள் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார். கஷ்ட காலங்களில் தான் சுயநலமான மனிதர்களை நாம் அறிந்து கொள்கிறோம் என்பது பாதி தான் உண்மை. மிக நல்ல மனிதர்களையும் அப்போது தான் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது

 

(தொடரும்)

என்.கணேசன்




No comments:

Post a Comment