முக்தானந்தாவும், சித்தானந்தாவும்
மாலை ஆறு மணிக்கு, அறைக்குத் திரும்பி வந்தார்கள். 6.15 முதல்
7.15 மணி வரை சத்சங்கம். ஒரு ஹாலுக்குச் சென்று அங்கே ஒரு மூத்த துறவியின் உரையைக்
கேட்டார்கள். அங்கும் முக்தானந்தா அவர்களுடன் அமராமல் ஒரு மூலையில் போய்
அமர்ந்து கொண்டார். அந்த மூத்த துறவி பேசியது நன்றாக இருந்தாலும் தேவையே இல்லாமல்
அவர் பிரம்மானந்தரின் பெயரை அங்கங்கே சேர்த்துப் பேசினார். அங்கிருந்து
வந்த பின் எட்டு மணி வரை தியான நேரம்.
முக்தானந்தாவும், சித்தானந்தாவும் தியான விரிப்பை விரித்து அதில் அமர்ந்து
தியானம் செய்ய ஆரம்பித்தார்கள். ஷ்ரவனும் அப்படியே தியான விரிப்பு விரித்து அமர்ந்தான். ஆனால் அவர்கள்
சொல்லித் தந்திருந்த தியானம் செய்யாமல் பரசுராமன் உபதேசித்திருந்த மந்திரத்தை ஜபிக்க
ஆரம்பித்தான்.
அவன் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து விட்டுக் கண் திறந்த போதும்
சித்தானந்தா தியானம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் முக்தானந்தா தியானம் செய்யாமல் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது
தெரிந்தது. அவன் அவரைப் பார்ப்பது தெரிந்ததும் மறுபடியும் அவர்
கண்களை மூடிக் கொண்டார்.
ஷ்ரவனுக்கு அந்த மனிதர் புதிராய்த் தெரிந்தார். இரவு உணவுக்கு மணி அடிக்கும்
வரை அவர் கண்களைத் திறக்கவில்லை. மணி அடித்ததும் மூவரும் சாப்பிடும்
ஹாலுக்குப் போனார்கள். போய் விட்டு வந்து சற்று இளைப்பாறி விட்டு
உறங்கினார்கள்.
ஷ்ரவனுக்கு பயணம் செய்த களைப்பும் அன்று இருந்ததால் அவன் சீக்கிரமே
உறங்கி விட்டான். எத்தனை
நேரம் அவன் அப்படி ஆழ்ந்து உறங்கியிருப்பான் என்று அவனுக்குத் தெரியவில்லை. யாரோ பேசும்
சத்தம் கேட்டு அவனுக்கு விழிப்பு வந்தது.
“உண்மையில்
யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?”
– முக்தானந்தாவின் குரல் கேட்டது. அவர் குரல் தாழ்ந்திருந்தது.
ஷ்ரவன் அதிர்ந்தான். ஒரேயடியாக
அவனுக்கு வியர்த்தது. அவன் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. ஆனால் நிதானத்துக்கு
வர அவனுக்கு நிறைய நேரம் ஆகவில்லை.
அவன் விழித்துக் கொண்டதைச் சிறிதும் வெளிக்காட்டாமல் அசையாமல் படுத்திருந்தான். சித்தானந்தா
நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக
அவரை இவர் குரல் எழுப்பி விடவில்லை.
மறுபடியும் முக்தானந்தாவின் குரல் கேட்டது. “உண்மையில்
யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?”
ஷ்ரவன் அசையவில்லை. மிக லேசாகக்
கண்களைத் திறந்து பார்த்தான். அறையில் விளக்கு அணைந்திருந்தாலும் வெளியேயிருந்து வந்த நிலா
வெளிச்சத்தின் தயவால் முக்தானந்தா அவருடைய கட்டிலில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அவருடைய கட்டில் ஜன்னல் ஓரமாகத் தான்
இருந்தது. அவருக்கு நேரெதிர் கட்டில் ஷ்ரவனுடையது. பக்கவாட்டுக்
கட்டில் சித்தானந்தாவுடையது. முக்தானந்தா கால்களைத் தொங்கப் போட்டு, ஷ்ரவனைப்
பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார்.
அவருக்குப் பின்னால் இருந்து நிலவொளி வந்ததால் அவருடைய முகம் அவனுக்குச் சரியாகத்
தெரியவில்லை. ஷ்ரவன் சிலை போல் அசைவில்லாமல் படுத்திருந்தான்.
முக்தானந்தா ஜன்னல் பக்கம் திரும்பினார். கால்களை
மடக்கி கட்டிலில் நேராக வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
ஷ்ரவனுக்கு தற்போது நள்ளிரவா, அதிகாலையா
என்பது தெரியவில்லை. ‘இந்த நேரத்தில் வெளியே வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது? இதுவே தெருவோர
ஜன்னலாக இருந்திருந்தால் போக்குவரத்து வாகனங்களையும், தெருவில்
நடப்பவர்களையுமாவது பார்த்து இவர் பொழுதைப் போக்கலாம். யோகாலயத்திற்குள்
இந்த நேரத்தில் வேடிக்கை பார்க்க கட்டிடங்களைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? கண்ணன் சொன்னது போல் அல்லாமல் இரவு
பத்து மணிக்கு மேலும் இங்கே ஆள் நடமாட்டமும், செயல்களும்
இருக்குமோ?
அவர் மறுபடியும் ஏதாவது பேசுவாரோ அல்லது கேட்பாரோ என்று ஷ்ரவன் காத்திருந்து பார்த்தான். வெளியேயும், உள்ளேயும்
அமைதியே நிலவியது. சிறிது நேரத்தில் ஷரவன் மறுபடியும் உறங்கி விட்டான்.
மறுநாள் காலை ஐந்து மணிக்கு அடித்த
மணியோசை கேட்டு தான் அவன் கண்விழித்தான். அவன் எழுந்த போது
மற்ற இருவருமே விழித்திருந்தனர். முக்தானந்தா எப்போது தூங்கி எப்போது எழுந்தாரோ தெரியவில்லை.
அடுத்து, தியானத்திற்கான
மணியோசை அடித்து மூவரும் தியானம் செய்ய அமர்ந்தனர். ஷ்ரவன்
அந்தச் சமயத்தில் தன் மந்திர ஜபத்தை முடித்து விட்டான். அதிகாலை
நடைப்பயிற்சிக்கு அவன் கிளம்பிய போது சித்தானந்தாவும் அவனோடு வந்தார். அவன் முக்தானந்தாவையும் ”வருகிறீர்களா?” என்று கேட்ட
போது அவர் ”வயதாகி
விட்டதால் கால்கள் ஒத்துழைப்பதில்லை” என்று சொன்னார். ஷ்ரவனும், சித்தானந்தாவும்
கிளம்பினார்கள்.
நடக்கையில், இப்போதும்
யாராவது தன்னைப் பின் தொடர்கிறார்களா என்று ஷ்ரவன் பார்த்தான். யாரும்
பின் தொடரவில்லை. அவர்கள் அவன் மீது சந்தேகம் தெளிந்து விட்டார்களா, இல்லை சித்தானந்தாவே
அவருடன் அவன் பேசுவதை அவர்களிடம் போய்ச் சொல்லுவாரா என்று தெரியவில்லை.
அங்குள்ள மைதானம் பெரியதாக இருந்தது. மைதானத்தைச்
சுற்றிலும் அழகான செடிகள் மரங்கள் இருந்தன. பல துறவிகள்
அங்கே நடந்து கொண்டிருந்தார்கள். நடக்கும் போது ஷ்ரவன் சித்தானந்தாவிடம் சொன்னான். “நேற்றிரவு
திடீரென்று யாரோ பேசும் சத்தம் கேட்டு கண்விழித்தேன். பார்த்தால்
சுவாமி முக்தானந்தா தான் தனியாக எதோ சொல்லிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவர் என்ன
பேசினார் என்பது சரியாகக் காதில் விழவில்லை. நல்ல வேளையாக
நீங்கள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தீர்கள்.”
சித்தானந்தா புன்னகையுடன் சொன்னார். “நானும்
ஆரம்பத்தில் அவர் பேசி அப்படி கண்விழித்துக் கொண்டு தான் இருந்தேன். இப்போது
பழகி விட்டதால் அது தூக்கத்தைப் பாதிப்பதில்லை.”
“அவர் என்ன
பேசுவார்?” ஷ்ரவன் தெரியாதது போல் கேட்டான்.
“எல்லாம்
தத்துவம் தான். சில சமயம் புரியும். சில சமயங்களில்
தலைகால் புரியாது.”
ஷ்ரவன் சற்று நிம்மதி அடைந்தான். அவர் பேசியதன்
அர்த்தம் இப்படியாகவும் இருக்கலாம். ’உண்மையில் யார்
நீ?(உடலா, மனமா, ஆத்மாவா? எந்த நோக்கத்துக்காக
இங்கே (இந்த உலகிற்கு) வந்திருக்கிறாய்?’
ஷ்ரவன் கேட்டான். “அவர் நீண்ட
நேரம் தூங்கவில்லை போலிருக்கிறதே?”
“அவர் எப்போது
தூங்குவார் என்று பல சமயங்களில் எனக்கும் தெரிந்ததில்லை.”
அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்
கொண்டிருந்ததை ஷ்ரவன் சொல்லவில்லை. சித்தானந்தாவுக்கு
அது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதை ஷ்ரவன் தவிர்த்தான்.
சித்தானந்தா சொன்னார். ”பல சமயங்களில்
அவர் பித்தர் போலவே நடந்து கொள்வார். யாரையும் பெரிதாக
மதிக்க மாட்டார். நேற்று உங்களைப் பார்த்து அவர் கைகூப்பியதே எனக்கு ஆச்சரியம்
தான். ஏனென்றால் நான் மூன்று வருஷங்களாய் இங்கே இருக்கிறேன். ஆனால் அவர்
யாரையும் கைகூப்பி நான் பார்த்ததில்லை. நீங்கள் மரணம் விடுவிக்கும்
வரை நாம் செல்வதெல்லாம் சிறைச்சாலை என்று சொன்ன தத்துவம் அவரை நிறைய கவர்ந்து விட்டது
என்று நினைக்கிறேன்.”
ஷ்ரவன் ஏற்கெனவே யோகாலயத்தின் வரைபடத்தை
அலசியிருக்கிறான் என்றாலும் புதிதாக வருபவன் கேட்கும் இயல்பான கேள்வியை அவரிடம் கேட்டான். “யோகிஜி
எங்கே தங்கியிருக்கிறார் சுவாமிஜி?”
சித்தானந்தா விரிவாகவே பதில் சொன்னார். “நாம் தங்கியிருக்கும்
இந்தக் கட்டிடம் தாண்டி சாப்பாட்டு அறை இருக்கிறது அல்லவா? அதையும்
தாண்டி இருக்கும் பெரிய கட்டிடம் பெண் துறவிகள் தங்கியிருக்கும் கட்டிடம். வலதுபுறமிருக்கும்
இந்த மூன்று கட்டிடங்களுக்கு எதிரில், அதாவது இடப்புறம்
இருப்பது முதலில் நூலகம், இரண்டாவது அலுவலக அறை, மூன்றாவது
மேலாளர் பாண்டியன் இருப்பிடம்+அலுவலகம், அதற்கு அடுத்தது
யோகிஜியின் இருப்பிடம். இடது புறம் யோகிஜியின் இருப்பிடம் தாண்டி விருந்தினர் தங்குமிடமும், அதையும்
தாண்டி சில ஹால்களும் இருக்கின்றன. வலது புறம் பெண்
துறவியர்கள் தங்கும் கட்டிடம் தாண்டி, ஒரு சிறிய ஆஸ்பத்திரி, ஒரு சிறிய
மைதானம், அதையும் தாண்டி வெளிநாட்டிலிருந்து வந்து துறவியானவர்கள்
தங்கியிருக்கும் கட்டிடமும் இருக்கின்றது”
அவன் மிகக்கூர்மையாக அந்தச் சூழலை கவனித்துக் கொண்டே நடந்ததால் அவன் அவரிடம் தொடர்ந்து பேசவில்லை. கவனத்தில் பதித்துக் கொள்ள முக்கிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன…