எந்தவொரு ஆபத்தான வேலைக்குச் செல்வதற்கு முன்பும், தப்பித்து
வரவும், தற்காத்துக் கொள்ளவும், சில முன்னெச்சரிக்கை
ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் செல்வது ஷ்ரவனின் வழக்கம். தற்போது
யோகாலயத்துக்குச் செல்வதற்கு முன்பும் அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். மாந்திரீக
விஷயங்களின் சூட்சுமங்களை அவன் நிறைய படித்துத் தெரிந்து கொண்டான். வழக்கமான
துப்பறிதல் வேலை யோகாலயத்தில் சாத்தியப்படா விட்டால் இந்த மாந்திரீக விஷயங்கள் மூலமாகத்
தான் அவன் அவர்களுக்குத் தூண்டிலை வீசியாக வேண்டும்.
அங்கு போன பிறகு அவனிடம் கைபேசி இருக்காது. சமூக ஊடகம்
எதிலும் அவனால் தொடர்பு கொள்ள முடியாது. குமரேசன் அங்கே
தோட்டக்காரனாக இருக்கின்ற போதும், அங்கே ஷ்ரவன் சிறைப்படுத்தப்பட்டால் அவன் குமரேசனைப் பார்க்கும்
வாய்ப்பும் கூட இருக்காது. அதனால், அவன் யாரென்பது கண்டுபிடிக்கப்பட்டால் பின் அவனுக்கு வெளியுலகைப்
பார்க்கும் வாய்ப்பு கூடக் குறைவு தான். சைத்ராவின் தந்தை
வழக்கு தொடர்ந்ததால், சைத்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் வரையாவது உயிரோடு
வைத்திருந்தார்கள். பின் தான் கொன்றார்கள். ஷ்ரவனுக்கு
அப்படித் தாமதமாகச் சாகும் வாய்ப்பும் இருக்காது.
அவன் யோகாலயத்தில் கண்ணனிடம் பேசிக்
கொண்டிருந்த போது அவர் துறவிகளுக்கு எதில் திறமையும், ஈடுபாடும்
இருக்கின்றதோ அந்த வித வேலை தான் அவர்களுக்கு பொதுவாக தரப்படுகிறது என்று சொல்லியிருந்தார். அப்படி
அவனிடம் கேட்கும் போது அவன் கம்ப்யூட்டர், கடிதப்
போக்குவரத்து, தோட்ட வேலை ஆகியவற்றைச் சொல்லலாம் என்று எண்ணியிருக்கிறான். முதலிரண்டு
வேலைகள் கிடைத்தால் இணையத் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். தோட்ட வேலை
தந்தால் குமரேசனுடன் அவன் தொடர்பில் இருக்க முடியும்…
யோகாலயத்தில் வழக்கமான அவர்களுடைய மின்னஞ்சல்கள்
அனுப்பும் வாய்ப்பு கிடைத்தால் மிக நல்லது. ஆசிரம நிகழ்ச்சிகள், வகுப்புகள்
சம்பந்தமாக தினமும் நிறைய மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டியிருக்கும். அவற்றுடன்
சேர்த்து முக்கியமான தகவல்களை அவன் ராகவனுக்கும் அனுப்ப முடியுமா என்று முயற்சி செய்து
பார்க்கலாம். அதற்காகவே அவன் “ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக
மையம்” என்ற பெயரில் ஒரு கற்பனை அமைப்பின் பெயரில் மின்னஞ்சலை
சில நாட்களுக்கு முன்பே யோகாலயத்திற்கு அனுப்பி இருந்தான்.
“தவத்திரு யோகி பிரம்மானந்தா அவர்களுக்கு,
ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்தின் மெய்யன்பர்கள் சார்பில்
அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் நாட்டில் ஆன்மிகத்தைப்
பரப்புவதற்காக திருவண்ணாமலையை அடுத்த போதமங்கலம் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது எங்கள்
அமைப்பு. பல ஆன்மிகப் பெரியவர்கள் இங்கு வந்து அழிவில்லாத நம் சனாதன
தர்மம் குறித்து சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள். தாங்களும்
தயைகூர்ந்து இவ்வருடத்தில் தங்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் இங்கு வந்து யோகாவின்
மேன்மையை இங்குள்ள பக்தர்களுக்கும் தந்தருள வேண்டும் என்றும் தங்கள் நூல்களையும், உரைகளையும்
எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும் என்றும் பாதம் தொழுது நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
.
இப்படிக்கு
கனகசபாபதி
தலைவர், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்
ஆன்மிக மையம்”
இந்த மின்னஞ்சலுக்குப் பதில் வராது
என்பது ஷ்ரவனுக்கு மிக நன்றாகத் தெரியும். யோகாலயத்தில்
இந்த அழைப்பையே அவமதிப்பாகத் தான் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஐ நா சபையிலேயே
சென்று பேசும் உச்ச நிலையில் உள்ள பிரம்மானந்தாவை ஒரு கிராமத்தின் ஆன்மிக மையத்தில்
பேச அழைப்பது கூட அவர்களைப் பொறுத்தவரை அடாவடித்தனம் தான். அதனால் ‘அழைப்பை
ஏற்று வர முடியாமைக்கு வருந்துகிறோம்’ என்ற சம்பிரதாய
பதில் கூட வராது என்பதை அவன் அறிவான். அதேபோல் அந்த மின்னஞ்சலுக்கு
எந்தப் பதிலும் யோகாலயத்திலிருந்து வரவில்லை. ஆனாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம் இப்போது அவர்கள்
தொடர்புகளில் இருக்கும்.
சில நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை ஒரே மின்னஞ்சல் மூலமாக, பல நூறு பேர்களுக்கு அவர்கள் அனுப்புகையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்திற்கும் சேர்த்து அவன் அனுப்புவது அவர்கள் கவனத்திற்குச் செல்ல வாய்ப்புகள் குறைவு. அவர்கள் அனுப்பிய அறிவிப்புச் செய்தியின் முடிவில் அவனும் ஏதாவது ஒருசில வரிகளை ரகசிய சங்கேத பாஷையில் அவன் எழுதிச் சேர்த்து விடமுடியும். பல நூறு மின்னஞ்சல்களுக்கு மத்தியில் ஒரு மின்னஞ்சலில் ஓரிரு வரிகள் கூடுதலாக சேர்த்திருப்பதைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம். ஆனால் ராகவனுக்கு அவன் சேர்த்திருக்கிற சங்கேத வரி நிறைய தகவல்களைத் தெரிவித்து விடும்.
அதே போல் ஸ்ரேயாவுக்கும் தகவல் அனுப்ப மின்னஞ்சலை லீலாவதி என்ற
பெயரில் உருவாக்கி இருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் அந்த மின்னஞ்சலில் யோகாலயத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தான்.
“பூஜ்யஸ்ரீ
யோகி பிரம்மானந்தாஜி அவர்களுக்கு,
தங்கள் பக்தை லீலாவதி பணிவான வணக்கங்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பிறந்த மண்ணில், தாங்கள்
வாழும் காலத்தில் வாழ முடிந்ததையே பேரதிர்ஷ்டமாக நான் காண்கிறேன். ஆனால் எளிதில்
வந்து தங்களைத் தரிசிக்க முடியாத வயதிலும் (வயது
82), தூரத்திலும் (சண்டிகர்) நான் உள்ளேன். எத்தனையோ
முறை தங்கள் தரிசனத்திற்கு ஏங்கிய எனக்கு நேற்று இரவில் வந்து தரிசனம் தந்த தங்கள்
கருணையை நான் எப்படிப் பாராட்டுவது? தங்கள் சக்தியின்
பெருமையை நான் என்னவென்று சொல்வது? இனி இறந்தாலும்
எனக்கு வருத்தமில்லை. நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன். நான் பிறந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி சொல்ல
வார்த்தைகள் இல்லை. நமஸ்கரிக்க மட்டுமே என்னால் முடிகிறது.
இப்படிக்கு
தங்கள் பக்தை
லீலாவதி.
இந்த மின்னஞ்சலுக்கு யோகாலயத்திலிருந்து “ஆசிர்வாதம்” என்ற ஒற்றை
வார்த்தை பதிலாக வந்தது. இப்போது லீலாவதியும் அவர்கள் தொடர்புகளில் ஒன்றாக இருக்கும்.
ஷ்ரவன் ஸ்ரேயாவுக்கு சங்கேத வார்த்தைகளை
அறிமுகப்படுத்தினான். அனுப்பும் கடிதம் சாதாரணமாகத் தோன்றினாலும் அதில் உள்ள செய்தியை
எப்படி வாசித்துப் புரிந்து கொள்வது என்பதை பொறுமையாகச் சொல்லித் தந்தான்.
“க்ஷேமமாக
இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்” என்பதற்கு ”நான் ஆபத்தில்
இருக்கிறேன்” என்று அர்த்தம். இதைத் தொடர்ந்து
நான் எழுதும் வாக்கியங்களில் இரண்டு வார்த்தைகள் விட்டு மூன்றாவது வார்த்தையை மட்டும்
தேர்ந்தெடுத்துப் படிக்கணும். இப்ப உதாரணம் சொல்கிறேன்.” என்று சொல்லி
ஒரு சில வரிகளை அனுப்பினான்.
”க்ஷேமமாக
இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். பிரச்சினைகள் வந்தால்
உடனடியாக கௌசல்யை மைந்தன் ராகவனிடம் பிரார்த்திக்கவும். எங்கள்
யோகாலயத்திற்கு குடும்பத்தினரை நம்பிக்கையுடன் வரச்சொல்லவும்.”
என்ற செய்தியை
”நான் ஆபத்தில்
இருக்கிறேன். பிரச்சினைகள் வந்தால் உடனடியாக கௌசல்யை
மைந்தன் ராகவனிடம் பிரார்த்திக்கவும். எங்கள் யோகாலயத்திற்கு
குடும்பத்தினரை நம்பிக்கையுடன் வரச்சொல்லவும். (உடனடியாக
ராகவனிடம் யோகாலயத்திற்கு வரச்சொல்லவும்)” என்று படிக்க
வேண்டும் எனச் சொன்னான்.
அவளுக்கு இதெல்லாம் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும்
இருந்தது. ஆனால் இதில் அந்த அளவு பேராபத்தும் இருக்கிறது என்று புரிந்த
போது கலக்கமாகவும் இருந்தது. “ஷ்ரவன் ஜாக்கிரதையாய் இருங்க. பாதுகாப்பாய்
திரும்பி வாங்க. நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன். என்னால
நீங்கள் வராட்டி அடுத்ததாய் செய்யச் சொன்னதெல்லாம் சாத்தியமில்லை” என்று கண்கலங்க, நா தழுதழுக்கச்
சொன்னாள்.
அவளுக்குத் தைரியம் சொல்லி விட்டு கைபேசியைக்
கீழே வைக்கையில் ஷ்ரவன் மனம் கனத்திருந்தது. சில நாட்களிலேயே
காதல் இவ்வளவு வேரூன்ற முடியுமா என்று பிரமிப்பாக இருந்தது. ஒரு மாதம்
முன்பு வரை அவள் யாரோ, அவன் யாரோ! இன்றோ பிரிந்திருப்பது
இருவருக்கும் பெரும் வேதனையாக இருக்கிறது.
ஆனால் உணர்ச்சிவசப்பட அவனுக்கு நேரமில்லை. மனதை உணர்ச்சிவசப்பட
அனுமதித்தால் அது அறிவை மழுங்கடித்து விடுகிறது. அதை அவன்
என்றும் அனுமதிக்க முடியாது. மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க
வேண்டுமென்றால் மனம் தன் அபிப்பிராயங்களுடன் குறுக்கிடக்கூடாது. மனதுக்குச் சொல்ல பல விஷயங்கள்
இருப்பதில்லை. அது சிலதையே பல முறை சொல்லி ஒருவனுடைய கவனத்தை
அற்ப விஷயங்களில் திருப்பி விடுகின்றது.
அவன் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் வழிகளில் எது, எவ்வளவு தூரம் அவனுக்குப் பயன்படப் போகிறது என்பது
தெரியாது. பயன்படுவதையும் அவன் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றபடி
மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருக்கும். எதற்கும் தயாராக இருக்கும்
மனநிலையே எல்லா வெற்றிக்கும் அடிப்படைத் தேவை. அதை ஏற்படுத்திக்
கொண்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்த ஷ்ரவன் பரசுராமன் கற்றுத் தந்த மந்திரத்தை
ஜபிக்க ஆரம்பித்தான். நாளை யோகாலயத்துக்கு அவனோடு பயணிக்கப் போவது
அந்த சக்தி தான். அது கண்டிப்பாக அவனைக் காக்கும்…
"சொத்துப் பத்துக்கள் இல்லாதவன் எல்லாம் ஏன்டா துறவியாக வரிங்க??" என்று பிரம்மானந்தா மனதில் நினைத்திருப்பார்.🤣🤣🤣🤣🤣
ReplyDeleteசிறப்பு...
ReplyDelete