சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 31, 2025

யோகி 96

 

டிட்டர் திவாகரன் தான் சந்திரமோகனின் ஆடிட்டர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. சேலத்தில் இருக்கும் சிறிய தொழிலதிபரான சந்திரமோகனுக்கு சென்னையில் இருக்கும் பிரபல ஆடிட்டர் திவாகரன் ஏன் ஆடிட்டராக இருக்கின்றார் என்ற கேள்விக்கு ஷ்ரவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. பதில் எதுவாக இருந்தாலும் அந்தப் பதிலில் யோகாலயம் ஏதோ வகையில் சம்பந்தப்படுகிறது என்று தான் அவனுக்குத் தோன்றியது.

 

சந்திரமோகனின் மனைவி யோகாலயத்தைப் பற்றிக் கேட்டாலும் பயப்படுகிறாள். ஆடிட்டர் திவாகரனைப் பற்றிக் கேட்டாலும் பயப்படுகிறாள். அவள் கணவன் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள பெரிய முயற்சிகள் எடுத்துக் கொள்பவள் போல் தெரியவில்லை. என்ன ஆனார் என்று தெரிந்து விட்டிருந்தால் அதற்கு முயற்சி எடுக்கும் அவசியம் இல்லை. அல்லது, என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தால் அவளுக்கும், அவள் மகளுக்கும் ஆபத்து என்ற நிலைமை வந்திருந்தாலும் அதற்கு முயற்சி எடுக்க அவள் பயந்து கொண்டிருக்கலாம். இரண்டில் எது சரி என்பது தெரியவில்லை.

 

இன்னும் நான்கு நாட்களில் அவன் யோகாலயம் சென்று துறவியாகச் சேர்ந்துவிடும் உத்தேசத்தில் இருக்கிறான். போவதற்கு முன் ஹைதராபாத் சென்று பெற்றோரைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணியிருக்கிறான். அங்கிருந்து தான் யோகாலயம் போகப் போகிறான். அதனால் இந்த முறை போலி டிக்கெட் தயாரிக்கும் வேலை இல்லை. ஹைதராபாதிலிருந்தே அவர்களை அழைத்து, துறவியாவதற்கு அங்கு வருவது பற்றித் தெரிவிக்கலாம். ஒருவேளை அவர்கள் அலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று யோகாலயத்தில் தொழில் நுட்பத்தின் உதவியுடன் எச்சரிக்கையுடன் பார்த்தாலும் அவன் ஹைதராபாதிலிருந்து பேசுவதை அவர்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

 

இப்போதெல்லாம் அவன் இந்த விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்துக்கு இணையாக ஸ்ரேயாவிடம் பேசுவதற்கும் எடுத்துக் கொள்கிறான். அவளுடன் பேசும் போது அவனுக்கு நேரம் போவதே தெரியவில்லை.  யோகாலயத்துக்குப் போன பின், திரும்பி வரும் வரை, அவனால் அவளுடன் பேச முடியாது என்பதால் இருவரும், முடிந்த நேரங்களில் எல்லாம், மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள்.

 

செல்வம் இது வரை வேலை பார்த்த போலீஸ் ஸ்டேஷன்களில் எல்லாம், வருபவர்களில் ஒருசில விதிவிலக்குகள் தவிர மற்றவர்கள் பயபக்தியுடன் தான் நுழைவார்கள். அவர்களிடமிருந்து மரியாதை கலந்த வணக்கம் இருக்கும். ஆனால் அவர் இப்போது இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் பயபக்தியுடன் வருபவர்கள் தான் விதிவிலக்கு. இங்கே வருபவர்கள் எல்லாம் கம்பெனி முதலாளிகள் தங்கள் கம்பெனிக்குள் நுழைவது போல் தான் நுழைகிறார்கள்.

 

புகார் கொடுக்க வருபவர்கள்நான் சொல்கிறேன், எழுதிக் கொள், உடனடியாக நான் சொன்ன விஷயத்தைக் கவனிஎன்று கட்டளையிடுகிற பாவனையில் தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் புகார் தந்த வேலை நடக்கவில்லை என்றால், அடுத்த முறை விசாரிக்க வரும் போதுஉங்களுக்கு எல்லாம் தரும் சம்பளம் தண்டம்என்று முதலாளிகளைப் போலவே அதட்டுகிறார்கள். கத்தி, அரிவாள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் அங்கு வருபவர்களிடம் சகஜமாக இருக்கும்.

 

எவனாவது ஒருவன் அப்படி நடந்து கொள்பவனாக இருந்தால், அவனுக்கு அவர் போலீஸ்காரன் என்றால் யார் என்று, வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதபடி காட்டியிருப்பார். ஆனால் வருபவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட அதே போல் என்றால்  அவர் யாரையென்று சரி செய்வது? முடிவில் அவரே தான் அனுசரித்துப் போக வேண்டியதாயிற்று. சம்பளம் தவிர கூடுதலாய் கிடைக்கும் பணமும் ஒரேயடியாக நின்று போனதல்லாமல் இப்படியும் நடப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலானது.

 

போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சகாக்களோ அவருடைய முந்தைய போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல்கள் வாங்கிக் கொண்டு, தள்ளி நின்று அவரை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். என்னேரமும் அவர் ஏடாகூடமாக நடந்து கொள்ளக்கூடுமென்று அவர்கள் திகிலுடன் எதிர்பார்த்தது போலிருந்தது.

 

நேற்று இரவு அவர் வேலை முடிந்து, வசிக்கும் வாடகை வீட்டுக்குள் களைத்துப் போய் நுழைந்த போது எலுமிச்சை, கரித்துண்டு, குங்குமத் தண்ணீர், ஒரு பொம்மை ஆகியவை அவர் அறைக்குள் விழுந்து கிடந்தன. யாரோ அவற்றை ஜன்னல் வழியாக வீசியிருக்கிறார்கள். அவருக்கு ரத்தம் கொதித்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் யாரும் எதுவும் பார்க்கவில்லை என்றார்கள்.

 

பின் எதற்கடா அக்கம் பக்கத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள்?’ என்று அவர் மனதினுள் குமுறினார்.

 

இன்று போலீஸ் ஸ்டேஷன் வரும் போதே அவர் சோர்வுடன் தான் வந்தார். இதையெல்லாம் யோசித்து நேற்றிரவு தூக்கமில்லை. தபால்கள் வந்ததையும் அவர் பிரிக்க முற்படவில்லை. அப்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அலட்சியமாய் உள்ளே நுழைவதைப் பார்த்தார். ‘அடுத்த முதலாளி வந்துட்டான்.’

 

உள்ளே நுழைந்த அந்த நபர் நேராக வந்து செல்வத்துக்கு எதிரே இருந்த நாற்காலியிலமந்தார்.

 

என் வீட்டுப் பத்திரம் டவுன் பஸ்ஸுல வர்றப்ப எப்படியோ காணாமப் போயிடுச்சு. ரிஜிஸ்டர் ஆபிசுல போய் நகல் பத்திரம் ஒன்னு வேணும்னு கேட்டால் உங்க ஸ்டேஷன்ல இருந்து நான்-ட்ரேசபல் சர்டிபிகேட் கொண்டு வரச் சொல்றா. அது எப்ப கிடைக்கும்?”

 

எப்ப புகார் தந்தீங்க?” செல்வம் வேண்டா வெறுப்பாய் கேட்டார்.

 

காணாமல் போனதே காலைல தான

 

புகாரே கொடுக்காமல் நான்-ட்ரேசபல் எப்ப கிடைக்கும்னு தெனாவட்டாய் கேட்கறானே முட்டாள். இவன் முட்டில நாலு தட்டி உள்ளே வெச்சா என்ன?’

 

கஷ்டப்பட்டு பொறுமையுடன் செல்வம் சொன்னார். “முதல்ல நீங்க புகார் எழுதிக் கொடுங்க.”

 

நாம அதிகம் படிச்சதில்லை. நீங்களே எழுதிக்கொடுத்தால் கையெழுத்து போட்டுக் குடுத்துவேன்.” என்று சொன்ன அந்த ஆளின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி எறிய செல்வத்துக்குத் தோன்றியது. ’நான் என்ன உனக்கு செக்ரட்டரியா?’ அவர் இரத்தம் கொதித்தது. வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை விழுங்கி, ஒரு கணம் கண்களை மூடிப் பின் திறந்த போது அந்த நபர் மெல்ல எழுந்தார்.

 

முட்டாள்தனமாய்ப் பேசி விட்டோம் என்று புரிந்து கொண்டான் போலிருக்கிறதுஎன்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட செல்வம் அந்த நபரின் கண்கள் விரிந்து, முகத்தில் திகில் பரவியதைக் கவனித்தார்.என்ன ஆச்சு இவனுக்கு?’

 

யார் அவுக?” என்று நாக்கு குழற அந்த நபர் கேட்டார். அந்த நபர் செல்வத்தின் பின்பக்கச் சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

 

யாரைக் கேட்கிறான் இவன்?’ என்று நினைத்தபடி செல்வம் அந்த நபரின் பார்வை போன பக்கத்தைப் பார்த்தார். செல்வம் அவருடைய பின்பக்கச் சுவரைப் பார்த்தார். விளக்கு வெளிச்சத்தினால் அவருடைய நிழல் தான் சுவரில் தெரிந்தது.

 

ஆனால் அந்த நபர் மெல்ல எழுந்து பின்னால் நான்கைந்து அடிகள் வைத்தார்.  அடுத்த கணம் அந்த நபர் பீதியுடன் ஓடுவது தெரிந்தது. அதைப் பார்த்து விட்டு, ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர்கள், ஏட்டு எல்லாரும் ஓடி வந்து தள்ளி நின்றார்கள். எல்லோரும் அவரையே கூர்ந்து பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், ஓடிப் போன நபர் எதையாவது வில்லங்கமாய் பார்க்காமல் அப்படி ஓடிப்போயிருக்க மாட்டார் என்று அவர்களுக்குத் தோன்றியது. செல்வத்தின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. பேய் நிஜமாகவே அவரை அறைந்து விட்டுப் போய் விட்டதோ?

 

செல்வத்தின் பொறுமை அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அவர் அறிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி, கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.   அவர்கள் அமைதியாக அங்கிருந்து போய் விட்டார்கள்.

 

இந்த ஆள் காலைல வர்றப்பவே சோர்வாய் தான் வந்தார். கவனிச்சீரா?”

 

கவனிச்சேன். முகமெல்லாம் அப்பவே ஒரு மாதிரியாய் தான் இருந்துச்சு. பழைய ஸ்டேஷன்ல சொன்னதெல்லாம் சரியாத் தான் இருக்குது ஓய். பேயோ, ஆவியோ, அது எப்ப வருது. எப்ப தாக்குதுன்னு தெரியறதில்லை. தாக்கிடுச்சுன்னா ஆளு வாயில இருந்து கெட்ட வார்த்தைகள் சரமாரியாய் வந்துடுது. பார்த்தீரல்ல

 

பயங்கரம். இந்தக் காலத்துல இப்படியும் நடக்கும்னு வேற யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன், ஓய்

 

இந்த ஸ்டேஷன்ல இதுவரைக்கும் பேய் ஒன்னு தான் குறைச்சலாய் இருந்துது. இப்ப அதுவும் வந்து சேர்ந்துடுச்சு. இனி பரிபூரணம் தான்

 

அவன் நம்மையே கவனிக்கிறான், ஓய். போய் வேலையைப் பாரும்.”


(தொடரும்)

என்.கணேசன்

 



1 comment:

  1. எப்படி இருந்த செல்வத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

    ReplyDelete