சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 20, 2025

சாணக்கியன் 153

ராக்ஷசர் சற்று முன் ஒற்றன் சொல்லி விட்டுப் போன தகவலினால் மேலும் அதிக மன அமைதியைத் தொலைத்திருந்தார். சந்திரகுப்தனிடம் பாரசீகக் குதிரைகள் முன்பை விட அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று ஒற்றன் சொல்லியிருந்தான். இங்கு குறைந்திருப்பதும், அங்கு அதிகமாகியிருப்பதும் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்தது. இந்தத் திருட்டில் சேனாதிபதி பத்ரசாலுக்குக் கண்டிப்பாகப் பங்கு இருக்க வேண்டும், அப்படி இருந்திருக்கா விட்டால் அவன் முன்பு அறிந்திருக்கா விட்டாலும் குதிரைகள் அணிவகுப்பின் சமயத்திலாவது அறிந்து அவர் போல பதறியிருப்பான் என்று எண்ணியிருந்தார். அப்போதும் கூட அவன் திருடன் என்ற அளவில் தான் அவர் அபிப்பிராயம் இருந்தது. இப்போதோ எதிரியுடன் அவன் கைகோர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் போரையே தலைமை தாங்கி நடத்தக்கூடியவன் எதிரியுடன் சேர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே அவரை நிலைகுலைய வைத்தது.

 

இது வரை ஆலோசனைக் கூட்டங்களின் போதெல்லாம் அவன் எப்படி நடந்து கொண்டான், என்னவெல்லாம் சொன்னான் என்பதை அவர் யோசித்துப் பார்த்தார். அந்தச் சமயத்தில் அவன் இயல்பாகவே இருந்தான். நடித்தது போல் தெரியவில்லை.  ஆயுதங்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளிலும் அலட்சியமாக அவன் இருக்கவில்லை. எதிரியுடன் கைகோர்த்திருந்தால் அந்த அளவு ஈடுபாடு அவன் காண்பித்திருக்க வழியில்லை. அதை யோசித்துப் பார்க்கையில் அவன் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் பலனடைவது  எதிரி என்று அறிந்திருக்காமல் இருக்கலாம் என்று தோன்றியது. அவன் யாருடன் இந்த விஷயத்தில் சேர்ந்திருந்தானோ அந்த ஆள் உண்மையை அவனிடமிருந்து மறைத்திருக்கலாம் என்றும் தோன்றியது.. இந்த எண்ணம் சிறிது அவரை ஆசுவாசப்படுத்தியது.

 

குதிரைகள் மாற்றப்பட்ட விஷயத்தை அவர் தனநந்தனிடம் சொல்ல முற்படவில்லை. ஏற்கெனவே பித்துப் பிடித்தது போல் இருக்கும் மன்னன் இதைக் கேட்டால் கோபம் அதிகமாகி மீண்டும் கத்த ஆரம்பிக்கும் வாய்ப்பிருக்கிறது. இப்போது ஓரளவாவது தணிந்திருக்கும் கோபத்தை மறுபடி அதிகமாக்குவது ஏற்கெனவே இருக்கும் சிக்கல்களையும் அதிகமாக்கும்.  

 

நேற்று சேனாதிபதியும், சுதானுவும் அதிக நேரம் பேசிக் கொண்டார்கள் என்ற செய்தியையும் அவர் கேள்விப்பட்டிருந்தார். இருவரும் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் அல்ல, ஒருசில வார்த்தைகளுக்கு மேல் முன்பு பேசிக் கொண்டதில்லை என்பதால் இதுவும் அவருக்கு நெருடலாக இருந்தது. இருவருமே பிரச்சினை செய்ய முடிந்தவர்கள்…. இதையெல்லாம் யாருடனும் மனம் விட்டு அவர் பகிர்ந்து கொள்ளவோ, ஆலோசிக்கவோ முடியாத நிலை இருப்பதால் அவர் மனதில் கனத்தையும், களைப்பையும் உணர்ந்தார்.

 

சாணக்கியர் சொன்னார். “மகதப் படைகள் கிளம்பிச் செல்லும் திசைகளை வைத்துப் பார்க்கையில்   மகதத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சம இடைவெளிகளில் மூன்று இடங்களில் படைகள் நிறுத்தப்படும் போலத் தெரிகிறது. அவர்கள் நிலையில் நாம் இருந்திருந்தாலும் அதைத் தான் செய்திருப்போம்.”

 

“இனி நாம் என்ன செய்வது ஆச்சாரியரே. நம் திட்டம் என்ன?” என்று பர்வதராஜன் கேட்டான்.

 

”நாம் இரண்டு இடங்களில் அவர்களது எல்லையை ஊடுருவுவோம். அந்த  இடங்கள் அவர்கள் படையை நிறுத்தாத இடங்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அவர்கள் கண்டிப்பாக இருக்குமிடத்திலிருந்து வேகமாக நகர்ந்து வந்து நம்மைத் தாக்குவார்கள். அங்கு போர் புரிவோம்….”

 

அந்த இரண்டு இடங்களுக்கு எந்தப் படைகளை அனுப்புவது என்று அவர்கள் ஆலோசித்த போது பர்வதராஜன் கூர்ந்து கவனித்தான். அந்த இரண்டு இடங்களுக்கும் சாணக்கியரோ, சந்திரகுப்தனோ அவர்கள் படைகளோ செல்லப் போவதில்லை என்பதை அவன் அறிந்து கொண்டு நேபாள, குலு, காஷ்மீரப்படைகளை அனுப்பலாம் என்று அவன் ஆலோசனை சொன்னான். என்னவானாலும் சரி சாணக்கியர், சந்திரகுப்தன் இருவர் எங்கிருக்கிறார்களோ அங்கே தானும் இருப்பது என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான். அப்படி உடன் இருந்தால் தான் அவர்களைக் கண்காணிக்க முடியும், அவனறியாமல் அவர்கள் எந்த முக்கிய முடிவுகளையும் எடுத்து விட முடியாதபடி இருக்கும் என்று அவன் கணக்கிட்டான்.

 

எந்த அளவில் செல்ல வேண்டும், எத்தனை வேகத்தில் செல்ல வேண்டும், போர் யுக்திகளை எப்ப்டி வகுக்க வேண்டும் என்பதை சந்திரகுப்தன் விரிவாக அவர்களுக்கு விளக்க ஆரம்பித்த போது சின்னச் சின்ன விஷயங்களையும் அவன் தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து வைத்திருந்தது புலனாகியது. குலு, நேபாள, காஷ்மீர மன்னர்கள் அவனை வெளிப்படையாகவே பாராட்டினார்கள்.

 

பர்வதராஜன் பெருமை பொங்கும் குரலில் “ஆச்சார்யரின் சீடன் அதையெல்லாம் யோசிக்காமல் இருந்திருந்தால் தான் அது ஆச்சரியம்” என்று சொல்லி விட்டு “நாம் எங்கே போகப் போகிறோம்?” என்று கேட்டான்.

 

சந்திரகுப்தன் சொன்னான். “நாம் மகதத்தின் வடபகுதியில் எல்லைகளைத் தொடாமல் மெல்லப் போய்க் கொண்டிருப்போம். நம் திட்டம் தயாரான பின் எங்கே தாக்கத் தீர்மானிக்கிறோமோ அங்கே தாக்குவோம்”

 

இப்போதும் அவன் எங்கே என்று சொல்லாமல் இருந்தது பர்வதராஜனுக்கு எரிச்சலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தலையசைத்தான்.   

 

அனைவரும் சென்று விட்டு இருவர் மட்டும் தனியாக இருக்கையில் சந்திரகுப்தன் சொன்னான். “பர்வதராஜன் எவ்வளவு விவரமாக அவர்களைத் தூரங்களுக்கு அனுப்பி விட்டு நம்முடனேயே ஒட்டிக் கொண்டு விட்டான் பார்த்தீர்களா ஆச்சாரியரே”

 

சாணக்கியர் புன்னகைத்தார். ”நமக்கும் அது நல்லது தான். பிரச்சினையான மனிதர்கள் நம் பார்வையிலேயே இருப்பது நல்லது சந்திரகுப்தா. அப்போது தான் நமக்கும் அவர்கள் மீது கட்டுப்பாடு இருக்கும்.”

 

சந்திரகுப்தன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அவனும் நம்மைப் பற்றி அப்படித் தான் நினைப்பான் என்று தோன்றுகிறது ஆச்சாரியரே”

 

சாணக்கியரும் சிரித்தார். “இருக்கலாம்”

 

அவர்கள் திட்டப்படியே நிச்சயித்த நாளில் நிச்சயித்த பாதைகளில் அவர்கள் படைகள் கிளம்பின. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு பெரும்படை வாஹிக் பிரதேசத்திலிருந்து முந்தைய படைகள் போன வழியில் அல்லாது வேறு வழியில் கிளம்பிப் போக ஆரம்பித்தது பர்வதராஜனுக்கோ மற்ற மன்னர்களுக்கோ தெரியவில்லை.

 

முன்பு கிளம்பிய படைகளில் மற்ற படைகள் வேகமாகச் சென்றாலும் சந்திரகுப்தன் படைகளும், பர்வதராஜன் படைகளும் சற்று வேகம் குறைந்தே செல்ல ஆரம்பித்தன. நாட்கள் நகர நகர பொறுமை இழந்த பர்வதராஜன் பல விதங்களில் சாணக்கியரின் திட்டத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்தான்“இப்போது நாம் மட்டும் தானே இருக்கிறோம். நம் ரகசியம் நம்மை விட்டுப் போக வழியில்லை ஆச்சாரியரே. இனி நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். என் மீது நம்பிக்கை இல்லையா?”

 

“நான் சந்திரகுப்தனிடமே கூட இன்னும் தெரிவிக்கவில்லை பர்வதராஜனே. இது நம்பிக்கை சம்பந்தமான விஷயமல்ல. எந்த விதத்திலும் நம் திட்டம் மகதத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வெற்றியைத் தான் நீயும் விரும்புகிறாய், உனக்கும் தோல்விக்கான சிறு சாத்தியக்கூறையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் நம் இருவரின் உத்தேசமும் ஒன்றல்லவா. அதனால் பொறுமையாக இரு.” என்று சாணக்கியர் சொல்ல வேறு வழி தெரியாமல் தலையசைத்தான்.

 

அவன் சென்ற பிறகு சந்திரகுப்தன் தங்கள் திட்டத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகத்தைக் கேட்டான். “சுதானு நம் திட்டப்படி தான் நடந்து கொள்வான் என்று எப்படி நம்புகிறீர்கள் ஆச்சாரியரே? நாம் அவன் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அவனுக்கு வழங்கவில்லையே. உத்தேசமாக அல்லவா சொல்லியிருக்கிறோம். அப்படி இருக்கையில் வளர்பிறை ஏகாதசி அன்று நீங்கள் எதிர்பார்க்கிறபடியே கண்டிப்பாக நடந்து கொள்வானா? பத்ரசாலும் அவனுக்குச் சரியாகத் துணை நிற்பானா?”

 

சாணக்கியர் சொன்னார். “தண்ணீர் எப்போதும் பள்ளத்தை நோக்கியே செல்கிறது சந்திரகுப்தா. எத்தனை காலம் கழிந்தாலும் தண்ணீரின் அந்தப் போக்கு மாறப் போவதில்லை. இங்கே ஊற்றியிருக்கிறோமே அங்கே போய்ச் சேருமா என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சுதானுவைப் போன்றவனின் மனமும் அப்படியே நாம் உத்தேசித்த விஷயத்தை நோக்கியே திட்டமிட்டு நகரும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. பத்ரசாலும் அவனுக்கு உதவ வேண்டிய அவசியத்திலேயே இருக்கிறான். இருவருக்கும் ஏதாவது தயக்கம் இருந்தால் அந்தத் தயக்கத்தைத் தாண்ட வைக்க சின்ஹரன் அங்கிருக்கிறான் என்பதால் நமக்கு விளைவுகள் குறித்த சந்தேகம் வேண்டியதில்லை”

 

சந்திரகுப்தனுக்கு இப்போதும் ஆச்சாரியரை நினைக்கையில் பிரமிப்பு குறைவதில்லை. பல சமயங்களில் அவனுக்கு முயற்சிகள் எந்த அளவு பலன் தரும் என்பதில் சந்தேகம் வருவதுண்டு. ஆனால் அவர் பெரும்பாலான சமயங்களில் இது இப்படித் தான் முடியும் என்று தீர்மானித்து நிச்சலனமாக இருக்க முடிந்தவர். அப்படி உறுதியாகச் சொல்ல முடிந்த அளவு மனித மனதையும், இயல்பையும் அவர் புரிந்து வைத்திருந்தது அவர் திறமைகளில் உச்சத்திறமை என்று அவனுக்குத் தோன்றியது.

 

“அடுத்தது என்ன ஆச்சாரியரே?”

 

“முக்கியமான ஒரு ஓலையை நாம் ரகசியமாக அனுப்ப வேண்டும் சந்திரகுப்தா.”

 

(தொடரும்)

என்.கணேசன்





என்.கணேசனின் நூல்களை வாங்க 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

1 comment:

  1. ராக்சசர் இப்போது இருக்கும் சிக்கலான நிலையில் சாணக்கியரை சமாளிப்பது கடினம் தான்.

    ReplyDelete