சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 17, 2025

யோகி 94

 

ஸ்ரேயாவுக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஷ்ரவன் எதற்குமே உணர்ச்சிவசப்படுபவனாகவோ, நிதானம் இழப்பவனாகவோ தெரியவில்லை. அவன் நேர்மையும், நியாயமும் தவறாதவன் என்பது மட்டுமல்ல, அவனுடைய இதயம் எப்போதும் அவனுடைய அறிவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அதனால் தான் காதலைத் தெரிவிக்கும் போது கூட அதில் உள்ள சிக்கல்களையும், ஆபத்தையும் சேர்த்தே சொல்கிறான். ஒருவேளை அவன் திரும்பி வராவிட்டால் அவனையும் இந்தக் காதலையும் மறந்துட்டு, ஒரு நல்ல பையனாய் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கச் சொல்கிறான். உலகத்தில், காதலைத் தெரிவிக்கும் போதே, வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளும் நிலைமை வரை யோசித்துப் பேச முடிந்தவன் இவன் ஒருவனாகத் தான் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தன்னையுமறியாமல் புன்னகைத்தாள். ‘மிகவும் வித்தியாசமான காதலன்

 

ஷ்ரவன் கேட்டான். “ஏன் சிரிக்கிறாய் ஸ்ரேயா?”

 

ஸ்ரேயா காரணத்தைச் சொன்னாள். அதைக் கேட்டு, அவனும் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “நிறைய காதல் பொய்யான அனுமானங்களோடும், அசாத்திய எதிர்பார்ப்புகளோடும் ஆரம்பிக்குது ஸ்ரேயா. அதனால கல்யாணத்துல முடிஞ்சாலும் அந்த மாதிரியான காதல் உண்மையில் தோற்று தான் போகுது. நம்ம காதல் அப்படியிருக்க வேண்டாம்னு தான், கசந்தாலும் நான் நிஜத்தையே சொன்னேன்.” 

 

அவன் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் சிரித்துக் கொண்டே அவனிடம் சொன்னாள். “அதெல்லாம் சரி,  நீ என்னைக் காதலிக்கிறாயான்னு கூட நீங்க கேட்கலை. நானும் உங்களை காதலிக்கிறேன்னு நீங்களே சொல்லிக்கறீங்க.”

 

ஷ்ரவனும் சிரித்து விட்டான். “சாரி... சந்தேகம் இருக்கற விஷயத்தை தானே கேட்கணும். நூறு சதவீதம் தெரிஞ்ச விஷயத்தைக் கேட்க என்ன இருக்குன்னு கேட்கலை.”

 

அதிபுத்திசாலித்தனத்துடன், ஒரு குழந்தையின் வெகுளித்தனமும் கலந்த கலவையாக அவனிருப்பது போல் அவளுக்குத் தோன்றியதால் அவளுக்கு அவன் சொன்னதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ‘அவனுடைய அபத்தங்களைக் கூட ரசிக்கும் அளவுக்கு அவனைக் காதலிக்கிறாய் முட்டாளேஎன்று அவள் அறிவு அவளைக் கடிந்து கொண்டது.

 

அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஸ்ரேயா சொன்னாள். “உங்க காதலை, யோகாலயத்திலிருந்து உங்க வேலையை வெற்றிகரமாய் முடிச்சுட்டு வந்து சொல்லியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.”

 

ஷ்ரவன் சொன்னான். “நான் அதையும் கூட யோசிச்சேன் ஸ்ரேயா. ஆனால் நான் அப்படி வர்றதுக்குள்ளே உனக்கு வேறெதாவது வரன் அமைஞ்சு, உங்க வீட்டுல நிச்சயம் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு எனக்கு பயமாயிருந்துச்சு. அதனால் தான் உடனே வந்து பேசறேன்.”

 

யோகாலயத்திலிருந்து திரும்பி  வருவதற்குள் அவளை இழந்து விடுவோமோ என்று அவன் பயந்ததாகச் சொன்னது, இதுவரை அவன் காட்டிய அலட்சியத்தில் நொந்திருந்த அவளுடைய மனதுக்கு மிகவும் இதமாய் இருந்தது. 

 

அவள் புன்னகையுடன் கேட்டாள். “நான் காதலிக்கிறது உட்பட எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க. நான் இனி எதாவது சொல்ல பாக்கி இருக்கா?”

 

ஷ்ரவனும் புன்னகைத்தபடி சொன்னான். “நான் சைத்ரா வழக்கை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் காத்திருப்பேன்னு மட்டும் எனக்கு வாக்குக் கொடு ஸ்ரேயா.”

 

ஸ்ரேயா கேட்டாள். “ஆனால் நமக்கு கல்யாணம் ஆன பிறகு கூட நீங்க உங்க வேலையிலிருந்து ராஜினாமா செய்ய மாட்டீங்க. ஆபத்தான வேலைகள் இனியும் வரும். கடைசி வரைக்கும் அது தொடரும் இல்லையா?”

 

ஷ்ரவன் குற்ற உணர்வுடன் ஆமென்று தலையசைத்து விட்டு, அவன் மென்மையாகச் சொன்னான்.   ஸ்ரேயா அதை நான் மறுக்கலை. இராணுவத்துல இருக்கிற வீரனோட நிலைமை தான் என் நிலைமையும். ஆனால் இதையெல்லாம் யாராவது செஞ்சு தானே ஆகணும் ஸ்ரேயா? நாடும், சமூகமும் நல்லபடியாய் இருக்கறதுக்கு இந்த வேலைகள் அத்தியாவசியம் இல்லையா? அதெல்லாம் வேற யாராவது செஞ்சுக்கட்டும், நானும், என் குடும்பமும் பாதுகாப்பாய் இருக்கணும்னு நினைக்கிறது, வடிகட்டின சுயநலம் இல்லையா? அப்புறம்,  எதுல ஆபத்தில்லை ஸ்ரேயா? தினம் ஆபிஸ் போயிட்டு வர்றதுல கூட ஆபத்தில்லையா? நாம விபத்துல சிக்கிக்கிறதுக்கு வாய்ப்பில்லையா. சரி அப்படியே வேலையை ராஜினாமா பண்ணிட்டு வீட்டுலயே இருந்தால் கூட ஏதாவது பெரிய வியாதி வர வாய்ப்பில்லையா? விபத்துலயோ, வைரஸ்லயோ, வியாதிலயோ வர முடிஞ்ச ஆபத்து தான் என் வேலைலயும் இருக்கும். அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.”

 

அவள் பெருமூச்சு விட்டாள். அவன் கேட்டான். “என்ன ஸ்ரேயா?”

 

அவள் சொன்னாள். “கல்யாணமானால் உங்க கிட்டே பேசிகூட ஜெயிக்க முடியாது போலருக்கே.”

 

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை ஸ்ரேயா. கல்யாணத்துக்கு முன்னாடி தான் எங்க பேச்சு எடுபடும். கல்யாணத்துக்குப் பிறகு மனைவி கிட்ட பேசி ஜெயிக்க முடிஞ்ச ஆளை நான் இதுவரைக்கும் எங்கேயும் பார்க்கலை.”

 

அவள் வாய் விட்டுச் சிரித்தாள். அவன் அவளைக் கவர்ந்து விட்டான். அவன் மீது காதலோடு, மதிப்பும், மரியாதையும் கூடியது. நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் தன் தாய், தந்தையரைப் பற்றிச் சொன்னான். அவர்களது காதல் திருமணம் பற்றிச் சொன்னான். அடிக்கடி அன்பாய் அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டைகள் பற்றிச் சொன்னான். அவன் தாய் ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வதைச் சொன்னான்.

 

அவளும் தன் பெற்றோரைப் பற்றிச் சொன்னாள். அவளுடைய அன்பான பாட்டியைப் பற்றியும், சுட்டித் தம்பியைப் பற்றியும் பெருமையாகச் சொன்னாள். இருவரும் நேரம் போவதறியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். பூங்காவிலிருந்து கிளம்பிய போது நெடுங்காலம் பழகிய காதலர்கள் போல் இருவரும் உணர்ந்தார்கள்.

 

ஸ்ரேயா அவனிடம் கேட்டாள். “ஷ்ரவன், நானும் ஏதாவது விதத்துல உங்களோட இந்த வழக்குல உதவட்டுமா? எனக்கும் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.”

 

அவன் அவசரமாய்ச் சொன்னான். “வேண்டாம் ஸ்ரேயா. இதெல்லாம் ஆபத்தான சமாச்சாரங்கள். நீ இதுல வராம இருக்கறது நல்லது.”

 

அவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். “ஷ்ரவன், ஆபத்து எதுல இல்லை. வண்டியில போறப்ப இல்லையா, வீட்டுலயே இருந்தாலும் இல்லையா...?”

 

ஷ்ரவன் சிரித்துக் கொண்டே அவள் கையை அழுத்தியபடி சொன்னான். “சரி ஏதாவது உதவி தேவைப்படறப்ப கண்டிப்பாய் சொல்றேன்.”

 

ட்டல் அறைக்குத் திரும்பி வந்த போது ஷ்ரவன் மனம் நிறைந்திருந்தது. எல்லாம் அவன் எதிர்பார்த்ததை விட இனிமையாகவே போய் விட்டது. ஸ்ரேயா அவனுக்கு எல்லா விதங்களிலும் பொருத்தமானவளாகத் தெரிந்தாள். வேலையில் இருக்கும் புத்திசாலித்தனம் அவனுக்கு இந்த காதல் விவகாரத்தில் போதாது. ‘”நான் உன்னைக் காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிக்கிறாயா?” என்று கேட்கும் சாதாரண அறிவு கூட இல்லாமல், அவளுக்கும் சேர்த்து அவனே தீர்மானமாய் சொல்லி விட்டதை, அவளைத் தவிர வேறெந்தப் பெண்ணும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள். அந்த நல்ல பெண் அதையும் கூடப் பெரிதுபடுத்தாமல், அவனை ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம் தான். அந்தப் பெருந்தன்மைக்கு அவன் நன்றி கூடத் தெரிவிக்கவில்லை.  நான் கற்றுக் கொள்ள வேண்டியது. இன்னும் நிறைய இருக்கிறது!’ 

 

ஷ்ரவன் மனதை அடுத்ததாய் செய்ய வேண்டிய காரியங்களுக்கு நகர்த்தினான்.  குமரேசனைத் தொடர்பு கொண்டு, யோகாலயத்தில் அவன் கவனத்திற்கு வந்திருக்கும் முக்கியத் தகவல் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான்.

 

குமரேசன் சொன்னான். “வாரம் ஒரு தடவையாவது ஒரு ஆள் அங்கே வர்றார். அவர் கார் நம்பரை வெச்சு செக் பண்ணினப்ப அவர் ஆடிட்டர் திவாகரன்னு தெரிஞ்சுது. அவருக்கும் அங்கே ரொம்ப செல்வாக்கு இருக்கு. அவர் அதிகமாய் பாண்டியன் கிட்ட தான் பேசிட்டு போறார். சில சமயங்கள்ல பிரம்மானந்தாவும் அவங்க கூட சேர்ந்து பேசறதுண்டு.”

 

யோகாலயத்தில் செல்வாக்கு உள்ளவர், அடிக்கடி அங்கு போய் பாண்டியனையும், பிரம்மானந்தாவையும் சந்தித்துப் பேசுபவர் என்றால் அந்த நபர் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆராயப்பட வேண்டிய நபர் என்று ஷ்ரவன் முடிவு செய்தான்.


(தொடரும்)

என்.கணேசன்





2 comments:

  1. As I had thought last week, why didn’t he ask Shreya how she felt? Why did he assume she was in love too? I’m glad the author cleared it up this week, revealing that he felt guilty for not asking her. Good going Shravan

    ReplyDelete
  2. எதிர்காலத்தில் ஸ்ரேயா வை சமாதானப்படுத்த இனிமேல் ஷர்வன் பெரிதாக மெனக்கெட தேவை இல்லை...அன்பான ஒரு வார்த்தை போதும்.

    ReplyDelete