சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 15, 2024

யோகி 45

 

ஷ்ரவன் அன்றிரவே குமரேசனை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தான். ஆட்கள் அதிகமில்லாத அந்த ஓட்டலில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினார்கள். குமரேசனிடம் யோகி ரகுராமன் என்பவரைத் தெரியுமா என்று கேட்ட போது அவன் விழித்த விதத்தில் அவனும் அந்தப் பெயரை முதல் முறையாகத் தான் கேள்விப்படுகிறான் என்பது தெரிந்தது.

 

அந்தப் பேர்ல யாராவது தோட்டக்காரன் வர்றதுண்டா?”

 

இல்லை. அந்தப் பெயரிருக்கற தோட்டக்காரன் யாரும் அங்கே வர்றதில்லை…”

 

பரசுராமன் சைத்ராவைச் சந்தித்திருக்கக்கூடிய இடமாக ஒரு தோட்டத்தைச் சொல்லியிருக்கிறார் என்பதை ஷ்ரவன் குமரேசனிடம் தெரிவித்தான்.  குமரேசன் யோகாலயத்தில் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைத் தெரிவித்தான்.  யோகாலயத்தில் பொதுவெளியில் வெளியாட்களுடன் எந்த சந்திப்பும் நிகழ்வதில்லை என்பதை அவன் சுட்டிக் காட்டினான்.

 

ஷ்ரவன் யோகாலயத்தில் தோட்ட வேலைக்கு வரும் ஆட்களை எல்லாம் விவரிக்கச் சொன்னான். குமரேசனின் வர்ணனைகள் எதுவும் ஒரு யோகியை அடையாளம் காட்டுவதாய் இருக்கவில்லை. அங்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள் தான் இரண்டாம் கேட்டைத் தாண்டி உள்ளே செல்லும் வெளியாட்கள் என்பது மட்டுமல்ல, அந்த வகையினரிலும் மேல்மட்டத்து ஆட்களே அப்படிச் செல்ல முடியும் என்பதையும் குமரேசன் மறுபடியும் சொன்னான். அந்த இரண்டாம் கேட்டைத் தாண்டி துறவிகள் வசிக்கும் பகுதிக்கு, கால்நடையாய் யோகாலயத்துக்கு வரும் சாதாரண மனிதன் போய்விட முடியாது என்பது தெரிந்தது. சிவசங்கரன் சொன்ன யோகியோ கால்நடையாகத் தான் தோட்ட வேலைக்குச் சென்றவர். காலப் போக்கில் அவரும் மாறி விலையுயர்ந்த காரில் போயிருக்க வாய்ப்பில்லை.

 

அப்படியிருக்கையில் சைத்ரா அவரை எப்போது எப்படி சந்தித்திருக்க முடியும்? கொலை செய்யப்பட்டு இறந்த பின்னும், கொலையாளியைப் பற்றி எதுவும் சொல்லாமல் அந்த யோகியைப் பற்றி மட்டும் ஏன் அவள் தாத்தாவிடம் சொன்னாள்? குழப்பமாக இருந்தது.

 

ஷ்ரவன் சைத்ராவின் ஆவி தெரிவித்த தகவலை குமரேசனிடம் சொன்னான். குமரேசனுக்கு ஆவி பேசுவதையே நம்ப முடியவில்லை. அவன் பார்த்த பார்வையைப் பார்த்துப் புன்னகைத்த ஷ்ரவன் சைத்ராவின் குரலிலேயே ஆவி பேசியது என்று சொன்ன போது குமரேசன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.

 

சிறிது யோசனைக்குப் பின் குமரேசன் சொன்னான். “தமிழ்நாட்டில மத்த பகுதில இருந்தும், வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மடாதிபதிகள், பிரபலமான ஆன்மீகப் பெரியவர்கள் எல்லாம் கூட வர்றதுண்டு. ஆனால் அப்படிப்பட்டவங்களும் சிஷ்யப்படைகள், சேவகர்கள் கூட தான் வர்றாங்க. அப்படி வர்றவங்க தான் பிரம்மானந்தாவைப் பார்க்க முடியும். அப்படி வர்றவங்க கூட பிரம்மானந்தாவைப் பார்த்துப் பேசிட்டு போயிடுவாங்க. சில சமயங்கள்ல பாண்டியன் அல்லது கல்பனானந்தா கூட இருக்கறதுண்டு. அவ்வளவு தான். மத்த துறவிகள் எல்லாம் அந்த ஆள்களைக் கூடப் பார்த்துப் பேச முடியாது. அதனால சைத்ரா இந்த வழக்கமான முறைப்படி அந்த யோகியைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை.”

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஷ்ரவனுக்கு சைத்ரா கண்டிப்பாக யோகாலயத்தில் எந்த யோகியையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் வலுத்தது. சைத்ரா யோகாலயத்தில் அந்த யோகியைச் சந்திக்கவில்லை என்றால் எங்கே எப்படி அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கும்?

 

ன்ஸ்பெக்டர் செல்வம் யோகாலயத்திலிருந்து தெரிவிக்கப்பட்ட பதிலால் கடும் அதிருப்தியடைந்தார். இந்த நன்றி கெட்ட மனிதர்களுக்கு உதவி ஏமாந்ததை அவரால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. நேற்றிலிருந்தே அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இன்று அதிகரித்து விட்டது. இன்று கைதான இரண்டு பிக்பாக்கெட் திருடர்களை நையப்புடைத்து அவர் தன் ஆத்திரத்தைச் சிறிது தணித்துக் கொண்டார்.  ஆனாலும் பெருமளவு ஆத்திரம் அவர் மனதில் தங்கியிருந்தது.

 

தபால்காரர் தந்து விட்டுப் போன தபால்களைப் பிரிக்கவும் மனதில்லாமல் செல்வம் அமர்ந்திருந்தார். தூத்துக்குடியில் அவர் போகவிருக்கும் போலீஸ் ஸ்டேஷனின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள நேற்றிரவு ஒரு நண்பருக்குப் போன் செய்திருந்தார். அந்த நண்பர் சொன்னதையெல்லாம் கேட்டபோது அவருக்கு வயிற்றைக் கலக்கியது. ஏற்கெனவே அவர் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் மோசம் என்றால் புதிதாய் கேள்விப்படும் இப்போதைய நிலைமை படுமோசமாக இருந்தது. எல்லாம் அறிந்த பின் அவரால் நேற்றிரவு உறங்க முடியவில்லை. சம்பளமல்லாத சம்பாத்தியம் சிறிதுமில்லை, சமாளிக்க முடியாத பிரச்சினைகள் ஏராளம் என்ற இரட்டை நரக வாழ்க்கைக்குப் பயணமாகப் போவதை எண்ணி நொந்தபடி, அன்று வந்த தபால்களை அவர் மேலோட்டமாய் பார்த்தார். அலுவலக ரீதியாய் வந்த கடிதங்களைப் படிக்கப் போவதில்லை என்று அவர் தீர்மானித்து விட்டார். புதிதாய் வருகிறவன் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். ’இனி இங்கு கிடைக்கும் கூடுதல் சம்பாத்தியமெல்லாம் அவனுக்குத் தானே கிடைக்கப் போகிறது. அவனே இந்த வேலையைப் பார்க்கட்டும்என்று தோன்றியது.

 

வந்த தபால்களில் ஒரே ஒரு தபால் அவருடைய பெயருக்கு வந்திருந்தது. அதை மட்டும் எடுத்துப் பிரித்தார். உள்ளே ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்துக் கிழித்து அனுப்பியதாக அது இருந்தது.

 

அன்பில்லாத செல்வம்

தெய்வம் மட்டுமல்ல, ஆவியும் நின்று கொல்லும். இனி தான் என் ஆட்டம் ஆரம்பம்!

சைத்ரா

யோகாலயம்

 

படித்த போது ஒரு கணம் செல்வத்தின் முகத்திலிருந்த ரத்தம் வடிந்து முகம் வெளுத்தது. சாதாரணமாக இதுபோன்ற கடிதங்களை அவர் பொருட்படுத்துபவர் அல்ல. அவர் துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர் தான். ஆனால் சிறிதும் எதிர்பாராத விதமாய் தூத்துக்குடிக்கு மாற்றல் ஆகியிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கும் இந்தக் கடிதம் அவரை அமைதியிழக்க வைத்தது. இந்த இடமாற்ற ஆணையும் கூட ஆவியின் தூண்டுதலாலோ?

 

அவர் உடனே யோகாலயத்துக்குப் போன் செய்தார். ’பார்க்கலாம், இதற்காவது அசைகிறார்களா என்று.’

 

நல்லவேளையாக யோகாலயத்தில் பேசிய துறவி, செல்வம் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, இந்த முறையும்பாண்டியன் சார் பிசிஎன்று சொல்லாமல் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்.

 

சிறிது நேரத்தில் பாண்டியனின் குரல் கேட்டது. “ஹலோ

 

செல்வம் படபடப்புடன் பாண்டியனிடமும் தனக்கு வந்திருக்கும் கடிதத்தைப் பற்றிச் சொன்னார்.  பாண்டியன் அமைதியாகக் கேட்டார். “அந்தக் கடிதம் சைத்ராவோட ஆவி அனுப்பினதுன்னு நினைக்கறீங்களா?”

 

என்ன நினைக்கறதுன்னு தெரியில. நேத்து தூத்துக்குடிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர். இன்னைக்கு இந்த லெட்டர். பேருக்கு கீழே யோகாலயம்னு வேற போட்டிருக்கு. அதான் உங்களுக்கு உடனே போன் செஞ்சேன்...”

 

பாண்டியனுக்கு மனிதர்களின் அடிமுட்டாள்தனத்தைச் சகித்துக் கொள்வது எப்போதுமே முடியாத காரியம். அவர் கேட்டார். “அவ பேருக்குக் கீழே யோகாலயம்னு போடாம, உங்க போலீஸ் ஸ்டேஷன் பேரைப் போட்டிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”

 

செல்வத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பாண்டியன் சொன்னார். “ஆவி நேர்ல வந்து உங்களுக்கு எதாவது சொல்லியிருந்தால் அதை நம்பறதுல அர்த்தம் இருக்கு. ப்ரிண்டவுட் எடுத்து அனுப்பினதை எல்லாம் ஆவி அனுப்பினதாய் நினைக்கறதுல அர்த்தம் இருக்கா?”

 

பாண்டியன் செல்வத்தின் பதிலுக்குக் காத்திருக்காமல் ரிசீவரை வைத்து விட்டார்.  செல்வத்துக்கு பாண்டியன் கேட்டதில் தவறு தெரியவில்லை. யோசித்தபடியே செல்வம் கடித உறையில் இருந்த தபால் முத்திரையை வாசிக்க முயன்றார். அனுப்பப்பட்ட தபால் ஆபிஸ் முத்திரை படிக்க முடிந்ததாய் இருக்கவில்லை. ஆனால் செல்வத்துக்கு கடிதம் யோகாலயத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. முன்பு சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் அனுப்பிய நபர் இப்போது இதை அனுப்பியிருக்கலாம்… ’அதைப் புரிந்து கொள்ளாமல் சின்னப் பையனுக்குப் பாடம் நடத்துவது போல் இந்த ஆள் பேசுகிறார். போனை வைக்காமல் இருந்தாலாவது அந்தச் சந்தேகத்தை அவரிடம் சொல்லியிருக்கலாம்...’ 


(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு வந்த கடிதமும் பரசுராமன் மூலம் வந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்...

    ReplyDelete