இரவு விருந்தின் போது யூடெமஸ் புதிய அவதாரமாகத் தெரிந்தான். முன்பு கடுமையாகப் பேசியவன் என்பதற்கான அறிகுறியே அவனிடம் இல்லை. சிரிக்கச் சிரிக்க அவன் பேசியதைக் கேட்டு திகைத்தது புருஷோத்தமனும், இந்திரதத்தும் மட்டுமல்ல க்ளைக்டஸும் தான். ‘இவன் என்ன பச்சோந்தி போல இப்படி நிறம் மாறிக் கொண்டேயிருக்கிறான். இப்படிச் சிரித்துப் பேசுவது யானை விவகாரத்தை மறக்கடித்து விடும் என்று நினைக்கிறானா என்ன?’ என்று க்ளைக்டஸ் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான். அவனுக்கு நடப்பதெல்லாம் நல்லதுக்கல்ல என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. நாளை இவர்களுக்குள் பேச்சுத் தகராறு வந்தாலும் அதையும் மொழிபெயர்க்கும் கொடுமையான வேலை அவனுக்கு மட்டுமே இருக்கிறது. ’கடந்த நாட்கள் இனிமையானவை. இனி கடக்கவிருக்கும் நாட்கள் கொடுமையாகவே தெரிகிறது...’
புருஷோத்தமன் விருந்தில் எந்தக் குறையும்
வைக்கவில்லை. யூதிடெமஸ் மறுநாளே போகப் போவதாக முன்கூட்டியே சொன்னதால் அவனுக்குத்
திருப்தி தரும் விதமாகவே விருந்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். நடன மங்கையரின்
நாட்டியமும் பாடகர்களின் இன்னிசையும்
இருந்தது. அதை
எல்லாம் ரசித்தபடியே யூடெமஸ் கேட்டான். “சத்ரப் ஆன பிறகு ஆம்பி
குமாரன் வரவில்லையா?”
புருஷோத்தமன் சொன்னார். “இல்லை. ஒரு காலத்தில்
எங்களுக்கு மிகத் தொந்தரவாகவே ஆம்பி குமாரன் இருந்திருந்தாலும், சத்ரப்பான பிறகு அவனால் எங்களுக்கு எந்த இம்சையும் இல்லை.”
க்ளைக்டஸ் மொழிபெயர்த்துச் சொன்னதில் யூடெமஸின் கவனம் இருக்கவில்லை. அவன் பார்வை கேகய இளவரசனான மலயகேதுவின் மீது நிலைத்தது. புருஷோத்தமனின் கடைசி மகனான மலயகேது திடகாத்திரமான இளைஞனாக இருந்தான். அவன் நடனமங்கையரின் நாட்டியத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சற்று முன் யூடெமஸை அவர் அறிமுகப்படுத்திய போதும் சத்ரப் என்ற பதவியின் முக்கியத்துவத்தை அவன் அறிந்தது போலவோ மதித்தது போலவோ தெரியவில்லை. சாதாரணமாகப் பெரியவர்களைப் பார்த்தால் வணங்குவது போல வணங்கி விட்டு அவன் விலகியிருந்தான். என்ன தான் வெளிப்பார்வைக்குச் சிரித்துப் பேசியபடி இருந்தாலும் யூடெமஸ் இது போன்ற மரியாதைக் குறைவுகளை உள்ளுக்குள் சகிக்க முடியாதவனாக இருந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த இந்திரதத் கேட்டார். “என்ன சத்ரப் நீங்கள் ஆழ்ந்த
யோசனையில் இறங்கி விட்டது போல் தெரிகிறது”
உடனே முகமெல்லாம் புன்னகையான யூதிடெமஸ் சொன்னான். “என்ன செய்வது அமைச்சரே?
பெரிய பொறுப்புகள் வரும் போது சேர்ந்தே பல யோசனைகளும் வந்து தொலைந்து
விடுகின்றன. சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் இடத்தை யார் எப்போது
நிரப்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நான் யாரிடம் கணக்கு
தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்பதும் புரியவில்லை. புஷ்கலாவதியில்
ஆக வேண்டிய வேலைகள் நிறைய தலைக்கு மேல் இருக்கின்றன”
இந்திரதத் மனதில் சொல்லிக் கொண்டார். “அத்தனை வேலைகளுக்கிடையே
இங்கே நீ வந்து தொலைய வேண்டிய அவசியம் தான் என்ன யூடெமஸ்?”
அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தால் அன்று அவரால்
உறங்க முடிந்திருக்காது. ஒரு திட்டத்தோடு வந்திருந்த யூடெமஸ் உணவருந்தி முடித்த பிறகு புருஷோத்தமனிடம்
சொன்னான். “நான் தங்களிடம் தனியாக சில விஷயங்களைக் கலந்தாலோசிக்க
வேண்டியிருக்கிறது. அதனால் மற்றவர்களை அனுப்பி விடுங்கள்.
மதுவருந்திக் கொண்டே நாம் பேசுவோம்”
புருஷோத்தமன்
‘மறுபடியுமா?’ என்பது போல சலிப்புடன் பார்த்தார்.
யூடெமஸ் “புரட்சிப்படை வீர்ர்களுக்கு எதிராக
நாம் எதிர்காலத்தில் அமைக்க வேண்டிய வியூகத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது”
என்றான். அவன் சொன்ன பதிலில் அவர் நிம்மதியடைந்தார்.
அவன் படைகள் தேவை குறித்து மறுபடி பேச ஆரம்பித்து விடுவானோ என்று அவர்
பயந்தது அனாவசியம் என்பது புரிந்தது. .
இந்திரதத் புருஷோத்தமனைப் பார்த்தார். “நானிருக்கவா, போகவா?” என்று அவர் பார்வை மன்னரைக் கேட்டது.
புருஷோத்தமன் பதில் சொல்வதற்கு முன் யூடெமஸ் சொன்னான். “நீங்கள் செல்லலாம் அமைச்சரே”
’புரட்சிப்படை வீரர்களுக்கு எதிரான எதிர்கால வியூகம் பற்றிப் பேசுவதானால் இந்தக்
கோமாளியைச் சமாளிப்பதில் எனக்குப் பிரச்னை இல்லை. நீ போகலாம்’
என்று பார்வையாலேயே புருஷோத்தமன் சொல்ல இந்திரதத் மற்றவர்கள் கிளம்பும்
போது தானும் கிளம்பினார்.
முடிவில் புருஷோத்தமனும், யூடெமஸும், க்ளைக்டஸும்
மட்டுமே இருந்தார்கள். அரசியல் இரகசியங்கள் பேசப்படும்போது சாதாரணப்
பணியாளர்கள், காவலர்கள் கூட அருகில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால்
அவர்களும் அகன்றார்கள்.
மதுவருந்திக் கொண்டே யூடெமஸ் புருஷோத்தமனிடம் கேட்டான். “புரட்சிப் படையினரை வாஹிக்
பிரதேசத்திலிருந்து விரட்ட நாம் முயன்றால் முடியாதா கேகய அரசே?”
புருஷோத்தமன் சொன்னார். “நம் மொத்தப் படைகளும் ஓரணியில் திரண்டு சென்றால்
அது ஒன்றும் முடியாத காரியமல்ல”
“மொத்தப் படைகளும் என்றால்?”
“கேகயப்படைகளும், காந்தாரப் படைகளும், உங்களிடமிருக்கும் படைகளும்”
யூடெமஸ் திகைப்புடன் கேட்டான். “அந்த அளவுக்கு புரட்சிப்
படையினர் வலிமையானவர்களா என்ன?”
புருஷோத்தமன் சொன்னார். “அந்த அளவு புரட்சிப்படையினர் வலிமையானவர்கள்
அல்ல. வாஹிக் பிரதேசத்தில் மொத்த மக்களுமே கூட நமக்கு கடுமையான
எதிர்ப்பும், அவர்களுக்கு பலத்த ஆதரவும் தருகிறார்கள்.
அதனால் புரட்சிப்படையினரோடு மக்களையும் சேர்ந்தே சமாளிப்பதற்குப் பெரிய
படையோடு செல்வது அவசியமாக இருக்கும்”
யூடெமஸ் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். புருஷோத்தமன் தன் கோப்பையில்
மதுவை நிரப்பினார். திடீரென்று யூடெமஸ் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த
ஓவியங்களில் ஒரு போர்க்களக் காட்சியைச் சித்தரித்த ஓவியத்தைக் காட்டி அவரிடம் கேட்டான்.
“அது எந்தப் போரைச் சித்தரிக்கிறது அரசே?”
புருஷோத்தமன் அது அவருடைய தந்தை வென்ற ஒரு போரை விளக்குவதாகச்
சொல்லி விட்டு அதில் உள்ள சூட்சுமங்களை விளக்க என்று எழுந்து ஓவியத்தினருகே சென்றார். அவர் செல்கையில் யூடெமஸ்
வேகமாகத் தனது குறுவாள் உறையில் சொருகி வைத்திருந்த ஒரு மிகச் சிறிய குப்பியை எடுத்து
அதில் உள்ளதை புருஷோத்தமனின் மதுக்கோப்பையில் கொட்டினான்.
க்ளைக்டஸ் அதிர்ச்சியில் உறைந்தான். ‘என்ன செய்கிறான் இவன்?’
க்ளைக்டஸ் பார்த்து விட்டதை யூடெமஸ் கவனித்து “கண்டு கொள்ளாதே.”
என்று கள்ளத்தனமாய் சமிக்ஞை செய்தான். க்ளைக்டஸ்
குழப்பத்துடன் யோசிப்பதற்குள் புருஷோத்தமன் அந்த ஓவியத்தைத் தொட்டுக் காட்டியபடி திரும்பியிருந்தார்.
அந்தப் போர்க்காட்சியில் நுட்பமாக விளக்கியிருந்த விஷயங்களை சுவாரசியத்துடன்
விவரிக்க ஆரம்பித்தார். க்ளைக்டஸ் அவர் சொல்வதை அரைகுறையாய் தான்
மொழிபெயர்த்தான். அவன் மனதில் ஏராளமான கேள்விகள். அந்தக் குப்பியில் இருந்தது என்ன? போதை வஸ்துவா?
மயக்க மருந்தா? பேதி மருந்தா? விஷமா? ஏன் இதைக் கலக்கினான்?
அந்த மருந்து கேகய அரசனை என்ன செய்யும்?
யூடெமஸ் எந்தக் கவலையுமில்லாமல் அமர்ந்திருந்தான். புருஷோத்தமன் தன் தந்தை
பங்கு பெற்ற அந்த விசேஷப் போரின் நினைவுகளில் மனம் லயித்தவராகத் திரும்பி வந்து அமர்ந்து
தன் மதுக்கோப்பையை எடுத்து அருந்தினார். அவருக்கு மதுவின் ருசியில்
எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்பதை க்ளைக்டஸால் யூகிக்க முடிந்தது. அவன் மனதில் பெரும் போரே நிகழ்ந்து கொண்டிருந்தது.
யூடெமஸ் திடீரென்று எழுந்தான். “கேகய அரசே. நான் கிளம்புகிறேன். சிறிது உறங்கி விட்டு அதிகாலையில்
கிளம்புகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”
புருஷோத்தமன் அவன் பழையபடி படைகள் எதுவும் கேட்காமல், கிளம்புவதில் பெரும் நிம்மதியை
உணர்ந்தார். அவர் எழுந்து கைகூப்பினார். உபசார வார்த்தைகள் எதாவது சொல்ல வேண்டும் என்று அவர் நினைத்தாலும் பேச விடாமல்
நெஞ்சை எதோ அடைத்தது.
க்ளைக்டஸும் அவரை வணங்கி விட்டு யூடெமஸைப் பின் தொடர்ந்தான். விருந்தினர் மாளிகையை அவர்கள்
எட்டிய பின் அவன் குழப்பத்துடன் யூடெமஸைக் கேட்டான். “நீங்கள்
அந்த மதுவில் என்ன கலந்தீர்கள்?”
யூடெமஸ் க்ளைக்டஸின் காதில் சொன்னான். “விஷம். கிழவன் நாளைய சூர்யோதயத்தைப் பார்க்க உயிரோடிருக்க மாட்டான்”
க்ளைக்டஸ் அதிர்ந்து போனான். “ஏன்?”
யூடெமஸ் வெறுப்புடன் சொன்னான். “நான் சொல்வதை அனுசரிக்காதவன்
ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?”
க்ளைக்டஸ் அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனான். அவன் முகம் போன போக்கைப்
பார்த்த யூடெமஸ் சொன்னான். “கவலைப்படாதே. நாம் அவன் உயிரோடு இருக்கும் போதே அரண்மனையிலிருந்து வெளியேறியதை காவலர்களும்,
பணியாளர்களும் பார்த்திருக்கிறார்கள். வயதான ஆள்
தூக்கத்திலேயே உயிரை விடுவது எங்கும் நடக்காததல்ல.”
(தொடரும்)
என்.கணேசன்
புருஷோத்தமன் அலெக்சாண்டர் படையெடுத்து வரும் போதும் கவனக்குறைவாக இருந்தார்.... தற்போது யூடெமஸ் சூழ்ச்சியை பற்றி முன்பே அறிந்திருந்த போதும் இப்போதும் கவனக்குறைவாகவே இருக்கிறார்...
ReplyDeleteChanakyan 1st part finished ah sir?
ReplyDeletewith 97th chapter first part is finished.
Delete